வானவர்கள் மீது நம்பிக்கை

வானவர்கள் அல்லாஹ்வினால் படைக்கப்பட்டவர்கள்; அவர்களின் எண்ணிக்கையை அவனைத் தவிர யாரும் அறியமாட்டார்கள் என்பதை ஒருவர் கட்டாயம் நம்பிக்கைகொள்ள வேண்டும். வானவர்கள் என்பவர்கள் கண்களுக்குப் புலப்படாத உலகத்தைச் சேர்ந்தவர்கள். அல்லாஹ் அவர்களைப் படைத்தது அவனையே வணங்கி அவனுக்குக் கீழ்ப்படிவதற்காகத்தான். அவர்களும் அதன்படி அவனுடைய கட்டளைகளைச் செயல்படுத்தி வருகிறார்கள். பிரபஞ்சத்தையும் இதிலுள்ள எல்லாப் படைப்புகளையும் நிர்வகிப்பது, கண்காணிப்பது, பாதுகாப்பது ஆகிய காரியங்களை அல்லாஹ்வின் அனுமதியுடனும் நாட்டப்படியும் செயல்படுத்துகிறார்கள்.

அல்லாஹ் கூறுகிறான்: ஈசாவும், சிறப்பு வாய்ந்த வானவர்களும் அல்லாஹ்வுக்கு அடிமையாக இருப்பதைப் பற்றிக் குறைவாகக் கருதமாட்டார்கள். (அல்குர்ஆன் 4.172)
 
வானவர்கள் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதர்களுக்கும் இடையே தூதுவர்களாகச் செயல்பட்டார்கள். அல்லாஹ் கூறுகிறான்:
நபியே, (அல்லாஹ்வின் கட்டளைப்படி) ரூஹுல் அமீன் என்னும் ஜிப்ரீல் இதனை உம் உள்ளத்தில் இறக்கி வைத்தார்.(மனிதர்களுக்கு) நீர் அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதற்காக, தெளிவான அரபி மொழியில் (இதனை இறக்கி வைத்தான்). (அல்குர்ஆன் 26.193..195)
 
வானவர்களுக்கு அல்லாஹ் சில குறிப்பிட்ட கடமைகளை வழங்கியிருக்கிறான். அக்கடமைகளை அவர்கள் அவன் சொன்னபடி நிறைவேற்றுவார்கள். அல்லாஹ் கூறுகிறான்: அவர்கள் தங்களுக்கு மேலுள்ள தங்கள் இறைவனுக்குப் பயந்து, தங்களுக்கு இடப்பட்ட கட்டளையையே செய்து கொண்டிருக்கின்றார்கள். (அல்குர்ஆன் 16.50)
 
வானவர்கள் அல்லாஹ்வின் கூட்டாளிகள் அல்ல. அல்லது அவனுடைய துணைவர்கள், உதவியாளர்களும் அல்ல. அவனுடைய குழந்தைகளும் அல்ல. எனினும் ஒருவர் அவர்களை நேசிப்பதும் மதிப்பதும் கட்டாயமாகும். அல்லாஹ் கூறுகிறான்:
இவர்கள், ‘அளவற்ற அருளாளனாகிய அல்லாஹ் (வானவர்களைத் தனக்குப் பெண்) சந்ததியாக்கிக் கொண்டான்” என்று கூறுகின்றார்கள். அவனோ மிகப் பரிசுத்தமானவன். (வானவர்கள் அவனுடைய சந்ததிகள் இல்லை.) மாறாக, (அவனுடைய) கண்ணியமிக்க அடியார்கள்.(அவன் முன்னிலையில்) இ(வ்வான)வர்கள் எந்த வார்த்தையும் மீறிப் பேச மாட்டார்கள். அவன் இட்ட கட்டளையை இவர்கள் செய்து கொண்டிருப்பார்கள். (அல்குர்ஆன் 21.26,27)
 
அவர்கள் தங்கள் நேரங்களை அல்லாஹ்வை வணங்குவதற்கும், அவனுக்குக் கீழ்ப்படிவதற்கும், அவனைத் துதிப்பதற்கும் புகழ்வதற்கும் செலவழித்து வருகிறார்கள். அல்லாஹ் கூறுகிறான்: அவர்கள் இரவு பகல் எந்நேரமும் இடைவிடாது அவனைப் போற்றிப் புகழ்ந்துகொண்டே இருக்கின்றார்கள். (அல்குர்ஆன் 21.20)
 
ஹதீஸ்

வானவர்கள் ஒளியிலிருந்து படைக்கப்பட்டவர்கள். நபியவர்கள் கூறினார்கள்: வானவர்கள் ஒளியிலிருந்து படைக்கப்பட்டார்கள். ஜின்கள் நெருப்பு ஜுவாலையிலிருந்து படைக்கப்பட்டார்கள். உங்களுக்கு எப்படி வருணிக்கப்பட்டுள்ளதோ அவ்வாறே (கருப்புக் களிமண்ணிலிருந்து) ஆதம் படைக்கப்பட்டார். (ஸஹீஹ் முஸ்லிம்)
 
வானவர்கள் ஒளியிலிருந்து படைக்கப்பட்டவர்கள் என்றாலும் அவர்களைப் பார்க்க முடியாது. தங்களை உருமாற்றிக்கொள்கிற ஆற்றலை அல்லாஹ் அவர்களுக்கு வழங்கியுள்ளான். அந்த உருவங்களில் அவர்கள் தென்படுவார்கள். மர்யம் (அலை) அவர்களிடம் ஒரு வாலிபரின் தோற்றத்தில் ஜிப்ரீல் வந்து சென்றதை அல்லாஹ் கூறுகிறான்:
தம் மக்களின் முன் திரையிட்டுக் கொண்ட சமயத்தில் (ஜிப்ரீல் என்னும்) நம்முடைய தூதரை அவரிடம் அனுப்பி வைத்தோம். அவர் முழுமையான ஒரு மனிதருடைய தோற்றத்தில் அவர் முன் தோன்றினார்.(அவரைக் கண்டதும்,) ‘நிச்சயமாக நான் உம்மிடமிருந்து என்னைப் பாதுகாக்க ரஹ்மா(ன் ஆகிய அளவற்ற அருளாள)னிடம் பிரார்த்திக்கிறேன். நீர் அல்லாஹ்வுக்கு அஞ்சியவராக இருந்தால் (இங்கிருந்து வெளியேறி விடுவீராக!)” என்றார்.அதற்கவர், ‘பரிசுத்தமான ஒரு மகனை உமக்குக் கொடு(க்கப்படும் என்பதை உமக்கு அறிவி)ப்பதற்காக நான் உம்முடைய இறைவனால் அனுப்பப்பட்ட ஒரு (வானவத்)தூதர்தான்” என்றார். (அல்குர்ஆன் 19.17..19)
 
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்: இரவில் சில வானவர்களும், பகலில் சில வானவர்களும் உங்களிடையே அடுத்தடுத்து (இறங்கி) வருகிறார்கள். அவர்கள் அஸ்ர் தொழுகையிலும் ஃபஜ்ர் தொழுகையிலும் ஒன்றுசேருகின்றார்கள். பிறகு உங்களிடையே இரவு தங்கியிருந்தவர்கள் (வானத்திற்கு) ஏறிச் செல்கின்றார்கள். அவர்களிடம் அல்லாஹ் "என் அடியார்களை எந்த நிலையில் விட்டுவிட்டு வந்தீர்கள்?'' என்று -உங்களைப் பற்றி அவன் நன்கறிந்த நிலையிலேயே கேட்கின்றான். "அவர்கள் தொழுதுகொண்டிருக்கும் நிலையில் அவர்களை விட்டுவிட்டு வந்தோம்; அவர்கள் தொழுதுகொண்டிருக்கும் நிலையிலேயே அவர்களிடம் நாங்கள் சென்றோம்'' என்று வானவர்கள் பதிலளிப்பார்கள். இதை அபூஹுரைரா (ரலி) அறிவிக்கின்றார்கள். (ஸஹீஹுல் புகாரீ 7429)
 
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நிச்சயமாக, அல்லாஹ் (தாயின்) கருவறையில் வானவர் ஒருவரைப் பொறுப்பாளராக நியமிக்கின்றான். அவர், "இறைவா! (இது ஒரு துளி) விந்து. இறைவா! இதுபற்றித் தொங்கும் கரு. இறைவா! இது (மெல்லப்பட்ட சக்கை போன்ற) சதைத் துண்டு'' என்று கூறிக் கொண்டிருப்பார். அதைப் படைத்(து உயிர் தந்)திட அல்லாஹ் நாடும்போது, "இறைவா! இது ஆணா அல்லது பெண்ணா? நற்பாக்கியம் பெற்றதா? துர்பாக்கியம் உடையதா? (இதன்) வாழ்வாதாரம் எவ்வளவு? (இதன்) ஆயுள் எவ்வளவு?'' என்று கேட்பார். (அல்லாஹ்வால் இவையனைத்தும் நிர்ணயிக்கப்பட்டு) அதன் தாயின் வயிற்றில் அது இருக்கும் போது எழுதப்படும். இதை அனஸ் இப்னுமாலிக் (ரலி) அறிவிக்கிறார்கள். (ஸஹீஹுல் புகாரீ 3333)
 
மேலும் நபியவர்கள் கூறியதாக அபூதல்ஹா (ரலி) அறிவிக்கிறார்கள்: நாய் அல்லது உருவப்படம் உள்ள வீட்டில் வானவர்கள் நுழையமாட்டார்கள். (ஸஹீஹுல் புகாரீ 3322)
 
விரிவான செயல்பாடுகள்

வானவர்களில் சிலருடைய பெயர்களையும் அவர்களின் பணிகளையும் அல்லாஹ் நமக்கு அறிவித்துள்ளான். உதாரணமாக ஜிப்ரீல் (அலை) அவர்களின் பணி இறைச்செய்தியை எடுத்துச் சென்று சேர்ப்பதாகும். அல்லாஹ் கூறுகிறான்: நபியே, (அல்லாஹ்வின் கட்டளைப்படி) ரூஹுல் அமீன் (என்னும் ஜிப்ரீல்) இதனை உம் உள்ளத்தில் இறக்கி வைத்தார்.(மனிதர்களுக்கு) நீர் அச்சமூட்டி எச்சரிக்கை செய்ய வேண்டும் என்பதற்காக.(அல்குர்ஆன் 26.193,194)
 
மறுமை நாள் ஏற்படும்போது சூர் ஊதுகின்ற பொறுப்பில் இஸ்ராஃபீல் எனும் வானவர் உள்ளார். மழை பொழிவிப்பதும் விளைவிப்பதும் மீகாயீல் எனும் வானவரின் பொறுப்பு.
 
ஒவ்வொரு மனிதருடனும் இரண்டு வானவர்கள் எப்போதும் உள்ளார்கள். அவர்கள் மனிதருடைய நல்ல, கெட்ட செயல்களைப் பதிவு செய்கிறார்கள். அல்லாஹ் கூறுகிறான்: வலப்புறத்தில் ஒருவரும், இடப்புறத்தில் ஒருவருமாக இருவர் (அவன் செய்யும் செயலைக்) குறிப்பெடுத்துக் கொண்டிருக்கிறார்கள். (அல்குர்ஆன் 50.17)
 
மரணத்தின் நேரத்தில் மக்களின் உயிர்களைப் பறிக்கின்ற பொறுப்பு மரணத்தின் வானவருக்கு (மலக்குல் மவ்த்) வழங்கப்பட்டுள்ளது. அல்லாஹ் கூறுகிறான்: (நபியே!) நீர் கூறும்: ‘உங்கள் மீது (உங்கள் இறைவனால்) சாட்டப்பட்டிருக்கும்மலக்குல் மவ்த் (என்ற மரண வானவர்)தான் உங்களுடைய உயிரைக் கைப்பற்றுகின்றார். பின்னர், உங்கள் இறைவனிடமே நீங்கள் கொண்டு வரப்படுவீர்கள். (அல்குர்ஆன் 32.11)
 
மனிதர்களைப் பாதுகாக்கும் வானவர்களும் உள்ளனர்.
 
(மனிதன் எந்த நிலைமையிலிருந்த போதிலும்) அவனுக்கு முன்னும் பின்னும் தொடர்ந்து வரக்கூடிய (வானவர்கள்) பலர் இருக்கின்றார்கள். அவர்கள் அல்லாஹ்வுடைய கட்டளையைக் கொண்டு அவனைப் பாதுகாக்கின்றார்கள். (அல்குர்ஆன் 13.11)
 
நரகத்தின் அதிகாரி மாலிக் எனும் வானவர். அல்லாஹ் கூறுகிறான்:
(நரகவாசிகள்நரகத்தின் அதிபதியை நோக்கி,) ‘மாலிக்கே! உம் இறைவன் எங்களுடைய செயலை முடித்து விடட்டும். (மரணத்தின் மூலமாயினும் எங்களுக்கு விடுதலை கிடைக்கட்டும்)” என்று சப்தமிடுவார்கள். அதற்கவர், ‘(முடியாது!) நிச்சயமாக நீங்கள் இதே நிலைமையில் (வேதனையை அனுபவித்துக் கொண்டே மரணிக்காது) இருக்க வேண்டியதுதான்” என்று கூறுவார். (அல்குர்ஆன் 43.77)
 
இப்படி வேறு வானவர்களும் உண்டு. ஒவ்வொருவருக்கும் பணிகள் உண்டு. குர்ஆனிலும் நபிமொழிகளிலும் அவற்றில் சில குறிப்பிடப்பட்டுள்ளன. சில குறிப்பிடப்படவில்லை. நம் கடமை அனைத்தின் மீதும் நம்பிக்கைகொள்வதே.
 
வானவர்களில் சிலரின் பெயர்களும் பொறுப்புகளும்

குர்ஆனிலும் நபிமொழிகளிலும் கூறப்பட்ட வானவர்களின் பெயர்களையும் அவர்களின் பொறுப்புகளையும் குறிப்பாக நம்பிக்கை கொள்வது ஒரு முஸ்லிமின் கடமையாகும்:
ஜிப்ரீல்: இறைச்செய்தியை எடுத்துச் சென்று வழங்கிவிடும் பொறுப்பு
மீகாயீல்: மழை பொழிவிக்கும் பொறுப்பு
இஸ்ராஃபீல்: மறுமையில் எக்காளம் ஊதுகின்ற பொறுப்பு
மலக்குல் மவ்த்: மனிதர்களின் உயிர்களை எடுக்கும் பொறுப்பு
ஹாரூத், மாரூத்: இஸ்ரவேலர்களைச் சோதிப்பதற்காக அல்லாஹ் அனுப்பிய வானவர்கள்
கிராமன் காத்திபீன்: செயல்களை எழுதுகின்ற இரண்டு வானவர்கள்
முஅக்கிபாத் (பாதுகாவலர்கள்): மனிதர்களுக்கு அவர்களின் மரண நேரம் வரும்வரை பாதுகாக்கின்ற வானவர்கள்
ரிள்வான்: சொர்க்கத்தின் பொறுப்பாளர்
மாலிக்: நரகத்தின் பொறுப்பாளர்
முன்கர், நகீர்: மண்ணறையில் விசாரிப்பவர்கள்
அர்ஷைச் சுமப்பவர்கள்
கருவறையில் சிசுவின் எதிர்காலத்தைப் பதிவுசெய்பவர்கள்
வானங்களில் உள்ள பைத்துல் மஅமூரில் தொழுபவர்கள்: எழுபதாயிரம் பேர் எப்போதும் தொழுகின்றனர்
அல்லாஹ்வின் வேதத்தையும் நபிவழியையும் கற்றுக்கொள்கிற இடங்களிலும், அவை நினைவுகூரப்படுகிற சபைகளிலும் இறங்குகின்ற வானவர்கள்
 
வானவர்கள் மீது நம்பிக்கைகொள்வதின் சிறப்புகள்

அல்லாஹ்வின் மகத்தான ஆற்றல், வல்லமை, அனைத்தையும் சூழ்ந்து அறிகின்ற அறிவு ஆகியவற்றைப் புரிந்துகொள்ள முடிகிறது. வானவர்கள் எனும் மகத்தான படைப்பைப் படைத்ததின் மூலம் படைப்பாளனின் மகத்துவம் உறுதி செய்யப்படுகிறது.
 
ஒரு முஸ்லிம் வானவர்கள் தம்முடைய அனைத்து சொற்களையும் செயல்களையும் பதிவு செய்கிறார்கள் என்று அறிந்துகொண்டால், அவை தமக்குச் சாதகமாகவோ அல்லது பாதகமாகவோ இருக்கும் என்பதை அறிந்துகொள்வார். அதன் காரணமாக நன்மைகளைச் செய்வதற்கு ஆர்வமும், தீமைகளைச் செய்யாமல் இருப்பதில் கவனமும் அவரிடம் ஏற்படும். அவர் தனியாகவோ கூட்டாகவோ எங்கிருப்பனும் இதை நினைவில் கொள்வார்.
 
மூடநம்பிக்கைகளை ஏற்றுக்கொள்வதிலிருந்து அவர் பாதுகாக்கப்படுவார்.
 
தன்னைக் காப்பதற்காகவும் தன்னுடைய காரியங்களில் பொறுப்பெடுத்துக்கொள்வதற்காகவும் வானவர்கள் சிலரை அல்லாஹ் நியமித்துள்ளான் என்பதை ஒரு முஸ்லிம் நினைத்துப் பார்க்கும்போது அல்லாஹ்வுடைய கருணையை உணருவார்.
أحدث أقدم