அப்துல் காதர் ஜீலானி Vs ஷைகு ஹம்மாத் (சபாஷ் சரியான போட்டி)

 பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்


முன்னுரை

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வை மட்டுமே வணங்கக்கூடிய முஸ்லிம்களுக்கு மத்தியில் உயிருடன் உள்ள மனிதர்களான ஷைகுமார்களையும்  வணங்கலாம் இறந்த மனிதர்களது சமாதியையும் வணங்கலாம் என்று கூறி இறைவனுக்கு இணையாக வைத்து தர்காஹ் வழிபாடுகள் இன்று பட்டிதொட்டி எங்கும் பின்பற்றப்படுகின்றன. இந்த தர்காஹ் வழிபாடுகள் இஸ்லாத்தின் அடிப்படை கோட்பாடுகளை மீறிய செயல் மட்டுமல்லாது நிரந்தர நரகத்திற்கும் உரிய செயலாகும் இதை நாம் கூறவில்லை அல்லாஹ் கூறுகிறான்.

அல்லாஹ் கூறுகிறான்: -“…எவனொருவன் அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பானோ அவனுக்கு அல்லாஹ் சுவனபதியை நிச்சயமாக ஹராமாக்கிவிட்டான், மேலும் அவன் ஒதுங்குமிடம் நரகமேயாகும், அக்கிரமக்காரர்களுக்கு உதவிபுரிபவர் எவருமில்லை.” (அல்குர்ஆன் 5:72)

அல்லாஹ்விடம் பாதுகாவல் தோடாமல் தர்காஹ்வையும் அதில் உள்ள மண்ணோடு மக்கிப் போன மய்யித்துகளிடமும் பாதுகாப்பு தேடும் கப்ருவணங்கிகள் மேற்கண்ட அருள்மறை வசனத்தை ஏற்க மறுக்கின்றனர் மேலும் இணைவைப்பு கட்டுக்கதைகளை அவிழ்த்துவிடுகிறார்கள் இவர்களைப் பற்றி பின்வருமாறு அல்லாஹ் அருள்மைறையில் கூறுகிறான்

 

நிச்சயமாக பொய்யை இட்டுக் கட்டுவதெல்லாம் அல்லாஹ்வின் வசனங்களை நம்பாதவர்கள் தாம்; இன்னும் அவர்கள் தாம் பொய்யர்கள். (அல்குர்அன் 16:105)


மேலே நீங்கள் படித்த இந்த வசனம் 100க்கு 100 உண்மையாகி விட்டது ஏனெனில் இதை கூறுபவன் இறைவன்! எனவே இந்த வசனத்தின் மூலம் சுன்னத்தை பின்பற்றாத தர்காஹ்வாதிகளின் தரம் அவர்கள் அவிழ்த்துவிடும் பொய்கள் நிறைந்த புழுகு மூட்டைகளை அலசுவோம்!

 

தர்காஹ்வாதிகள் தலைவர் பெயரில் அவிழ்த்துவிடும் பொய்கள்!

ஆத்மீக கடல், ஞானதீபம், தவசீலர், மெய்நிலை கண்ட ஞானி, சங்கைக்குரிய குதுபுர் ரப்பானி, சுல்தானுல் அவ்லியா, முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி

இஸ்லாத்தின் அடிப்படை கோட்பாடுகளில் ஒன்று அல்லாஹ்வை நம்புவதாகும். ஏனெனில் அவன்தான் இந்த அண்டங்கள் மற்றும் அகிலங்கள் அனைத்தையும் ஒழுங்காக படைத்து, பரிபாலித்து வருகிறான். இப்படிப்பட்ட இறைவனை எப்படி புகழ்ந்தாலும்  பொறுத்தமாக அமையும் மேலும் இறைவனை புகழ்வது நம்மீது கடமையாகிறது!

ஆனால் இந்த அழகான கடமையை ஒன்றுமே படைக்க திராணியற்ற மனிதனுக்கு கொடுப்பது முட்டாள்தனமில்லையா? இந்த முட்டாள்தனத்தைத்தான் இந்த கப்ரு வணங்கிகள் அவ்லியாக்களின் பெயரால் அரங்கேற்றுகிறார்கள் அதுவும் அப்துல் காதர் ஜீலானி என்ற மனிதரை பற்றி புகழ்ந்து பேசுவதாக இருந்தால் அல்லாஹ்வை விட அதிகமாக புகழ்துவிடுவார்கள்!  வாருங்கள் ஜீலானிக்கு இந்த கர்ருவணங்கிகள் சூட்டியுள்ள புகழ்மாலைகளை குர்ஆன் மற்றும் ஹதீஸ் ஒளியில் சற்று விரிவாக அலசுவோம்!

 

அப்துல் காதர் ஜீலானி ஆத்மீக கடலா?

ஆத்மீக கடல் என்பதன் பொருள் என்னவென்றால் கடல் எவ்வாறு பறந்து விரிந்து காணப்படுகிறதோ அதுபோன்ற அறிவு படைத்தவர் என்று பொருள்படுகிறது. அதாவது ஆன்மீகம், ஆத்மீகம் ஆகியவற்றை கரைத்து குடித்து முத்திப்போனவர் என்று அர்த்தமாகிறது. இஸ்லாத்தில் பழுத்தபழம், முத்திப்போன குருமார்கள் என்று யாரையாவது குறிப்பிட இயலுமா? இதைப்பற்றி அல்லாஹ் என்ன கூறுகிறான் இதோ

 

(நபியே!) அல்லாஹ் தன் தூதர்களை ஒன்று கூட்டும் (ஒரு) நாளில் அவர்களிடம் “(நீங்கள் மனிதர்களுக்கு என் தூதைச் சேர்ப்பித்தபோது) என்ன பதில் அளிக்கப்பட்டீர்கள்?” என்று கேட்பான்; அதற்கு அவர்கள்: “அதுபற்றி எங்களுக்கு எந்த அறிதலும் இல்லை; நிச்சயமாக நீதான் மறைவானவற்றை யெல்லாம் அறிந்தவன்” என்று கூறுவார்கள். (அல்குர்ஆன் 5:109)

 

அல்லாஹ் அங்கீகரித்து அனுப்பிய தனது தூதர்களுக்கே மறைவான ஞானம் இல்லாத போது சாதாரண மனிதரான ஜீலானிக்கு ஆத்மீக ஞானம் வந்துவிடுமா? எனவே ஆத்மீக கடல், ஆத்மீக ஞானி என்ற புகழ் பொய் என்பது நிரூபணமாகிவிட்டது!

 

அப்துல் காதர் ஜீலானி ஞானதீபமா?

ஞானம் என்பது அறிவு, தீபம் என்பது வெளிச்சம் எனவே ஞானதீபம் என்பது அறிவுக்கு வெளிச்சம் தரும் ஒளி என்ற பொருள்படுகிறது அதாவது அல்லாஹ் ஞானம் மிக்கவன் என்று குர்ஆனில் கூறுகிறான் இவர்களோ தங்கள் தலைவரை அந்த ஞானத்திற்கான தீபம் என்று புகழ்கிறார்கள்! இவர்கள் மறைவாக என்ன கூறவருகிறார்கள் என்றால்  இந்த ஜீலானி என்ற தீபம் அனைந்துவிட்டால் அல்லாஹ்வுக்கு ஞானம் இல்லை என்ற தத்துவத்தைத்தான்! (இத்தகுல்லாஹ்)! அல்லாஹ்வின் வல்லமையை விட அப்துல் காதர் ஜீலானியை புகழ்ந்தவிட்டதால் ஞானதீபம் என்ற புகழ் முழுக்க முழுக்க பொய் என்று நிரூபணமாகிறது!

 

அப்துல் காதர் ஜீலானி மெய்நிலை கண்ட ஞானியா?

கப்ருவணங்கிகள் அப்துல் காதர் ஜீலானியை மெய்நிலை கண்ட ஞானி என்று புகழ்கிறார்கள்! இவர் மெய்நிலையை கண்டுவிட்டார் என்று அல்லாஹ் கூறி வஹியை இறக்கினானா? நபிகளார் (ஸல்) அவர்களுக்கு மெய்நிலை கண்ட ஞானம் இருந்ததா? இதோ அல்லாஹ் என்ன கூறுகிறான்?

 

(நபியே!) நீர் கூறும்: ‘என்னிடத்தில் அல்லாஹ்வின் பொக்கிஷங்கள் இருக்கின்றன’ என்று நான் உங்களிடம் கூறவில்லை. மறைவானவற்றை நான் அறியமாட்டேன்; நிச்சயமாக ‘நான் ஒரு மலக்காக இருக்கின்றேன்’ என்றும் நான் உங்களிடம் சொல்லவில்லை; எனக்கு (வஹீயாக) அறிவிக்கப்பட்டதைத் தவிர (வேறு எதையும்) நான் பின்பற்றவில்லை.’ இன்னும் நீர் கூறும்:  ‘குருடனும் பார்வையுடையவனும் சமமாவாரா? நீங்கள் சிந்திக்க வேண்டாமா?’ (அல்-குர்ஆன் 6:50)

 

இறுதி நபிக்கு இல்லாத இந்த மறைவான ஞானத்தை இந்த அப்துல் காதர் ஜீலானி பெற்றுள்ளார் என்று கப்ருவணங்கிகள் கூறுவது நபியை இழிவுபடுத்தும்விதமாக இல்லையா? எனவே அப்துல் காதர் ஜீலானியை மெய்நிலை கண்ட ஞானி என்று கூறியது பொய் என்பது நிரூபணமாகிவிட்டது!

 

மனிதனாக பிறந்து மனிதனாக மடிந்த ஜீலானியை ஆத்மிக கடல் என்றும், ஞானதீபம் என்றும் மெய்நிலை கண்ட ஞானி என்றும்  வர்ணிக்கிறார்களே இப்படி சாதாரண மனிதனை அல்ல மாறாக அல்லாஹ்வின் தூதர்களுக்கும் அந்த தூதர்களின் முத்திரையான நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை கூட வர்ணிப்பது கூடுமா? நபிகளார் (ஸல்) என்ன கூறினார்கள்? இதோ படியுங்கள்

 

ஷைத்தான் உங்களைக் கெடுத்து விட வேண்டாம். நான் அப்துல்லாஹ்வின் மகன் முஹம்மதாவேன்மேலும் அல்லாஹ்வின் தூதருமாவேன். அல்லாஹ் எனக்கு வழங்கியுள்ள தகுதிக்கு மேல் என்னை நீங்கள் உயர்த்துவதை நான் விரும்ப மாட்டேன்.(அஹ்மத்,பைஹகீ)

 

 

எனவே சாதாரண மனிதர் அப்துல் காதர் ஜீலானிய தவசீலர் என்றும் மெய்நிலை கண்ட ஞானி என்றும் சங்கைக்குரிய குதுபுர் ரப்பானி என்றும் சுல்தானுல் அவ்லியா என்றும் புகழ்ந்து துதி பாடிய தர்காஹ்வாதிகளை ஷைத்தான் வழிகெடுத்துவிட்டான் இதில் உள்ள மிக முக்கியமான வேடிக்கை என்னவென்றால் தங்கள் குறைகளை கேட்கிறார் என்று எந்த ஜீலானியை இவர்கள் நம்புகிறார்களோ அந்த ஜீலானியே இந்த கப்ருவணங்கிகளை ஷைத்தானிடமிருந்து காப்பாற்ற முடியவில்லை! (இறந்த பிறகு எவருக்காவது கேட்கும் ஆற்றல் இருந்தால்தானே காப்பாற்ற இயலும்)

 

கப்ருவணங்கிகள் கூறுவது 100% பொய்தான் ஆதாரங்கள்

 

அப்துல் காதர் ஜீலானி அவர்களுக்கு மெய்நிலை காணும் நிலை மற்றும் மறைவான ஞானம் உள்ளது என்று சப்பைகட்டி கூறும் தர்காஹ்வாதிகள் அதே வாய்களால் அப்துல் காதர் ஜீலானி அவர்கள் சில ஆசிரியர்களின் உதவியால்தான் கல்வி பயின்றார் எனறு கூறுகிறார்கள் இதோ ஜீலானியின் ஆசிரியர்கள்

 

  • அபூ ஸையீதினில் முபாரக் பின் அலி முகர்ரமி, 
  • அபுல் உபா அல பின் ஹகீம், 
  • அபூ காலிப் அஹ்மது, 
  • அபுல் காஸிம் அலி, 
  • அபூ ஸகரிய்யா யஹ்யா தப்ரேஸி

 

அட கப்ருவணங்கிகளே உங்கள் நாதர் ஜீலானி அவர்கள் தன்னுடைய அடிப்படை அறிவை கற்றுக்கொள்ள மனிதர்களின் உதவியை நாடியுள்ளார் என்று உங்கள் வாய்களாலேயே கூறுகிறீர்கள் அப்படியிருக்க அவருக்கு மெய்ஞானம் எங்கிருந்தய்யா வந்தது! இது உங்களின் பொய் நெ. 1

 

அப்துல் காதர் ஜீலானி அவர்கள் ஆத்மீக கடலாகஇருக்கும் போது அவர் தனது ஆசிரியர்களுக்கு பாடம் நடத்தியிருக்க வேண்டும் மாறாக ஆசிரியர்களிடம் இவர் பாடம் பயின்றது ஏன்? உங்க பாஷையில் கூறுவதாக இருந்தால் ஆத்மீக கடல் ஏனப்பா குட்டையிடம் பாடம் படித்தது?சிந்திக்க மாட்டீர்களா? இது உங்களின் பொய் நெ. 2

 

சாதாரண ஷைகு அப்துல் காதர் ஜீலானிக்கு வழிகாட்டியா?

அப்துல் காதர் ஜீலானி எல்லா விதமான கல்வியையும் கற்ற பின் தனக்கு ஒரு ஆத்மீக வழிக்காட்டி தேவை என்று நினைத்தாராம், இதைப்பற்றி கப்ருவணங்கிகள் கீழ்கண்டவாறு கூறுகிறார்கள்

 

அப்துல் காதர் ஜீலானி கல்வி கற்ற பின் தனக்கு ஒரு ஆத்மீக வழிக்காட்டி தேவை என்பதையும் அதுவே தன்னை அல்லாஹ்விடம் நெருங்கச்செய்யும் வழி என்றும் உணர்ந்தார்கள்.எனவே தனக்கு ஆத்மீக வழிக்காட்ட ஒரு ஞானகுருவை தந்தருளுமாறு அல்லாஹ்விடம் இறைஞ்சினார்கள். அப்பொழுது இறைவன் அவர்களுக்கு ஷைகு ஹம்மாத் என்னும் மார்க்க பெரியாரை தேர்ந்தெடுத்து கொடுத்தான். (மேலப்பாளையம் சுன்னத் ஜமாஅத் மாணவரணி )

 

மேலே உள்ள கருத்தை படித்தவுடன் தர்காஹ்வாதிகள் இட்டுக்கட்டிய பொய்களில் அவர்களே தடுமாறிய விதம் பற்றி பாருங்கள்!

 

  • அப்துல்காதர் ஜீலானியை ஆத்மீக கடல் என்று பொய் கூறினர் அப்படியெனில் அந்த ஆத்மீக கடலுக்கு வழிகாட்டி தேவையா? இது பொய் என்பது புரியவில்லையா?

  • அப்துல் காதர் ஜீலானி அல்லாஹ்வுக்கு மிக நெருக்கமானவர் என்று பொய் கூறினார்கள் இப்போது அந்த ஜீலானியே அல்லாஹ்வை நெருங்க ஒரு ஷைகுவின் வழிகாட்டுதல் தேவை என்று எண்ணிணாராம்? இது பொய்யாக தெரியவில்லையா?

  • அப்துல் காதர் ஜீலானி தனக்கு ஞானகுரு தேவை என்று துவா செய்து அந்த துவாவை இறைவன் அங்கீகரித்து ஹம்மாத் என்ற ஷைகுவை அவருக்கு தேர்ந்தெடுத்து கொடுத்தான் என்று கூறுகிறார்கள் இதுபற்றி அல்லாஹ் விடமிருந்து ஏதாவது வஹி வந்துள்ளதா? இது பொய் இல்லையா?

 

 

அப்துல் காதர் ஜீலானி Vs ஷைகு ஹம்மாத்! 

அப்துல் காதர் ஜீலானி தனது ஷைகுவிடம் பாடம் படிக்கும் போது அந்த ஷைகு முன்வைத்த பல கடுமையான சோதனைகளை கடந்து சகிப்புதன்மை மற்றும் திட நம்பிக்கையின் பயனாக மூன்று ஆண்டுகளில் ‘தஸவ்வுஃப்’ என்னும் ஆத்மா ஞானத்தில் தேர்ச்சி பெற்றாராம் பின்னர் அவரது ஷைகு ஹம்மாத் அவர்கள் ஜீலானியை பார்த்து கூறிய வார்த்தைகள் என்று இந்த கப்ரு வணங்கிகள் கூறுவது இதுதான்!

 

இந்த அஜமி அப்துல் காதிர் வரும் காலத்தில் மாபெரும் ஞானியாக விளங்குவார். தம் பாதம் சகல வலிமார்களின் தோள் மீது இருப்பதாக சொல்லும்படி அல்லாஹ்வால் உத்தரவிடப்படுவார். இவர் காலத்திலுள்ள எல்லா வலிமார்களும் இவருக்கு தலைப்பணிவார்கள் (கூறியது ஷைகு ஹம்மாத்)(மேலப்பாளையம் சுன்னத் ஜமாஅத் மாணவரணி )

 

அட கப்ருவணங்கிகளே! உங்கள் கட்டுரையின் அடிப்படையில் அப்துல் காதர் ஜீலானி அவர்கள் அஜமி ஆகிவிட்டாரே! இதோ சற்று ஷைகு ஹம்மாத் அவர்கள் கூற்றிலிருந்து நாம் உணர்ந்த தெளிவை சற்று விளக்கமாக படியுங்கள்!

 

  • இந்த அஜமி அப்துல் காதிர்

 

அப்துல் காதர் ஜீலானியை அவரது ஷைகுவான ஹம்மாத் அவர்கள் அஜமி என்று கூறிவிட்டார் இதன் மூலம் அப்துல்காதர் ஜீலானிக்கு பிறப்பின் அடிப்படையில் எந்த ஞானமும் இல்லை என்பது தர்காஹ்வாதிகளின் மூலமாகவே தெளிவாகிவிட்டது. எனவே ஜீலானியை விட அவரது ஷைகு ஹம்மாத் அவர்கள் அறிவு படைத்தவர் என்பதை இந்த பொய்யர்கள் தங்கள் வாய்களாலேளே கூறிய பின்னரும் அதை உணர மறுக்கிறார்கள்.

 

  • வரும் காலத்தில் மாபெரும் ஞானியாக விளங்குவார்

 

ஜீலானி வருங்காலத்தில் மாபெரும் ஞானியாக விளங்குவார் என்று அவரது ஷைகு ஹம்மாத் கூறியதன் மூலம் ஜீலானியை விட அவரது குரு ஹம்மாத் அவர்கள் கப்ருவணங்கிகளின் கருத்துப்படி ஆத்மீக ஞானமிக்கவராக ஆகிவிட்டார்! அப்படியானால் ஜீலானி ஞானம் குறைந்தவர்தான் என்பது பொய்யர்களாலேயே உறுதிபடுத்தப்பட்டுவிட்டது.

 

  • தம் பாதம் சகல வலிமார்களின் தோள் மீது இருப்பதாக சொல்லும்படி அல்லாஹ்வால் உத்தரவிடப்படுவார்

 

தம் பாதம் சகல வலிமார்களின் தோள் மீது இருப்பதாக சொல்லும்படி அல்லாஹ்வால் உத்தரவிடப்படுவார் என்று ஷைகு ஹம்மாத் முன்னறிவிப்பு செய்தார் என்பதை படிக்கும் போது ஷைகு ஹம்மாத் அவர்கள் அப்துல் காதர் ஜீலானியைவிட ஆற்றல் மிக்கவராகிறார் அப்படியானல் அப்துல்காதர் ஜீலானிக்கு ஆற்றல் குறைவுதான்! இந்த கப்ருவணங்கிகளின் கருத்துப்படி ஷைகு ஹம்மாத் அல்லாஹ்வின் மீது இட்டுக்கட்டியவராகிறார் அதாவது அல்லாஹ் உத்தரவிடுவான் என்று இவர் பொய்யை இட்டுக்கட்டியிருக்கிறார் என்பதும் ஊர்ஜிதமாகிறது!

 

  • இவர் காலத்திலுள்ள எல்லா வலிமார்களும் இவருக்கு தலைப்பணிவார்கள்

 

அப்துல் காதர் ஜீலானியை அவர் காலத்து எல்லா வலிமார்களும் தலைப் பணிவார்கள் என்று ஷைகு ஹம்மாத் கூறியதாக கப்ருவணங்கிகள் கூறுவதன் மூலம் ஜீலானியின் ஆத்மகுரு ஷைகு ஹம்மாத் கீழ்கண்ட ஹதீஸை படிக்கவில்லை என்ற உண்மையும் வெளியாகிறது!

 

ஒருவர் மற்றவரின் காலில் விழுவதற்கு நான் அனுமதிப்பதாக இருந்தால் கணவனின் காலில் மனைவி விழுவதற்கு அனுமதித்திருப்பேன் என்றும் நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரழி), நூல்:புகாரி, முஸ்லிம்

 

முடிவுரை

அப்துல் காதர் ஜீலானிதான் உலகிலேயே ஆற்றல் மிக்கவர் என்று இதுநாள் வரை இந்த கப்ருவணங்கிகள் கூறிவந்தனர் ஆனால் அது பொய் என்பதை அவர்களின் வாய்களாலேயே உணரப்பட்டு விட்டது அதாவது அஜமியாக இருந்த அப்துல் காதர் ஜீலானியை அறிவு கொடுத்தது ஒரு ஷைகு ஹம்மாத் எனும் போது அந்த ஹம்மாத் என்ற ஆசிரியர்தான் ஜீலானியைவிட அறிவாற்றல் மிக்கவராக இருந்திருக்க வேண்டும்! ஆனால் கீழ்கண்ட வார்த்தை அதையும் மறுக்கிறது!

  • தம் பாதம் சகல வலிமார்களின் தோள் மீது இருப்பதாக சொல்லும்படி அல்லாஹ்வால் உத்தரவிடப்படுவார் (ஷைகு ஹம்மாத்) (மேலப்பாளையம் சுன்னத் ஜமாஅத் மாணவரணி )

மேற்கண்ட வரிகளின் மூலம் இந்த ஷைகு ஹம்மாத் என்ற நபரையும் இந்த கப்ருவணங்கிகள் பொய்யராக்கி விட்டார்கள். அப்துல் காதர் ஜீலானி அவர்கள் சொல்லாததையெல்லாம் சொல்லியதாக கூறும் இந்த கப்ருவணங்கி தர்காஹ்வாதிகள் அவருடைய ஷைகுவையும் பொய்யராக்கி விட்டார்கள். எனவே திருமறையின் கீழ்கண்ட வசனம் கப்ருவணங்கிகளின் விஷயத்தில் 100 சதவீதம் உண்மையை கூறுகிறது.

 

நிச்சயமாக பொய்யை இட்டுக் கட்டுவதெல்லாம் அல்லாஹ்வின் வசனங்களை நம்பாதவர்கள் தாம்; இன்னும் அவர்கள் தாம் பொய்யர்கள். (அல்குர்அன் 16:105)

 

நம்முடைய வசனங்களைப் பொய்ப்பிப்பவர்கள் (குஃப்ரு என்னும்) இருள்களில் செவிடர்களாகவும், ஊமையர்களாகவும் இருக்கின்றனர்; அல்லாஹ் தான் நாடியவர்களைத் தவறான வழியில் செல்ல விட்டு விடுகிறான்; இன்னும் அவன் நாடியவரை நேர்வழியில் செலுத்துகின்றான். (அல்குர்ஆன் 6:39)

 

குறிப்பு

அப்துல் காதர் ஜீலானி என்ற நபர் மீது நமக்கு எந்த காழ்புணர்ச்சியும் கிடையாது மாறாக அந்த மனிதருடைய பெயரால் நிறைய கட்டுக்கதைகள் புணையப்பட்டதாகவும் அந்த கதைகளுக்கும் அவருக்கும் சம்பந்தம் இல்லை என்றும் பல்வேறு மார்க்க அறிஞர்கள் கூறுவதை சற்று நினைத்து பாருங்கள்!

 

R.P.M. கனி அவர்கள் எழுதிய மாபெரும் தவசீலர் முஹ்யித்தீன் ஆண்டகை” எனும் நூலிலிருந்து மேலப்பாளையம் சுன்னத் ஜமாஅத் மாணவரணியினர் தொகுத்து தங்களது பிளாக்தளத்தில் பிரசுரித்த கட்டுரையை ஆதாரமாக கொண்டு இங்கு அப்துல் காதர் ஜீலானி அவர்கள் மீது புணையப்பட்ட கட்டுக்கதைகளை வெளிச்சம் போட்டு காட்டப்பட்டது!

எழுதியவர் : சிராஜ் அப்துல்லாஹ்

Previous Post Next Post