பலதாரமணத்தை ஏற்றுக் கொள்ளுங்கள்

- எஸ்.எச்.எம் இஸ்மாயில் ஸலபி

முஸ்லிம்களது நடைமுறை வாழ்வில் அருகிப்போன, பெண்களால் மறுக் கப்படுகின்ற இஸ்லாமிய வாழ்க்கை நெறியாகவே பலதார மணம் திழ்கின்றது. மறுக்கப்படுகின்றது என்பதால் வலியுறுத்தி வரைய வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.

இஸ்லாத்தில் பலதார மணம்:

இஸ்லாம் பலதார மணத்தைக் கடமையாக்கவில்லை. பல பெண்களை மணந்து இல்லறம்  நடத்தும் அளவுக்கு பொருள் வளமும் உடல் பலமும் உள்ளவர்கள் விரும்பினால் நான்கு பெண்களுடன் ஒரே நேரத்தில் வாழ்க்கை நடத்தலாம். அதுவும் அப்பெண்கள் மத்தியில் நீதத்துடன் நடந்து கொள்ள வேண்டும் என்ற கடுமையான நிபந்தனையுடனேயே இஸ்லாம் இதை அனுமதிக்கின்றது.

பொருள் வளத்தைப் பொறுத்தவரையில் மணப்பெண்கள் வறுமையை ஏற்றுக் கொள்வார்களெனின் பொருள் வளம் முக்கியம் பெறாது. உதாரணமாக நபி (ஸல்) அவர்களது மனைவியர் நபிகளாருடன் அவர்களது வறுமையுடன் வாழச் சம்மதித்தனர். உலக இன்பங்களைவிட நபி (ஸல்) அவர்களுடன் இல்லறம் நடத்துவதையும்,நபியின் மனைவி என்ற அந்தஸ்தைதையுமே அவர்கள் மேலான பாக்கியமாகக் கருதினர்.

இவ்வாறே உடல் தேவையைப் பொறுத்தவரையிலும் பேசி இணக்கப்பாடு
 கானக்கூடிய அளவுக்கு புரிந்துணர்வும் கட்டுப்பாடும் இருக்கும் பட்சத்தில் இந்நிபந்தனையில் தளர்வு செய்யலாம். உதாரணமாக அண்ணலாரின் மனைவியரில் அன்னை ஸவ்தா அவர்கள் நபி (ஸல்) அவர்கள் தனக்காக ஒதுக்கிய நாளை அன்னை ஆயிஷாவுக்காக விட்டுக் கொடுத்தார்கள். தனக்கு இல்லறத்தில் அவ்வளவு நாட்டம் இல்லாத அதே நேரம் ஒரு ஆணின் துணையை மட்டும் நாடும் பெண்களை மணப்பவர் வேண்டுமானால் உடல்பலத்தில் சற்றுக் குறைந்திருந்தாலும் மணந்து கொள்ளலாம்.
வசதிகளைச் செய்து கொடுக்கும் பொருள்வளமற்றவர்கள் அவர்களது உடல் இச்சையைத் தீர்க்கும் ஆண்மை அற்றோர்  பலதார மணத்தைத் தவிர்க்க வேண்டும்.

பலதாரமணம் பரிகாரம்:

இஸ்லாமிய சட்டங்கள் எதுவும் குறைபாடுடையவை அல்ல .அவை சமூகப் பிரச்சினைகளுக்கான பரிகாரங்களேயாகும் என்பதை நாம் அடிப்படையாக ஏற்றாக வேண்டும். அதிலும் குறிப்பாக ஆண்களின் பிறப்பு விகிதத்தில் உள்ள குறைபாடு, இறப்பு விகிதம் (யுத்தம், விபத்துக்கள்) கூடிச் செல்வது போன்ற சமூகப் பிரச்சினைக்கு சரியான பரிகாரம் பலதார மணமேயாகும். இன்று இதனை அந்நியர்கள்கூட உணர்ந்து வருகின்றனர்.

பாதிப்பா?

பலதாரமணத்தை பெண்களுக்கு இழைக்கப்படும் கொடுமையாகப் பலரும் எண்ணுகின்றனர். உண்மையில் இஸ்லாத்தில் பலதாரமணம் ஆண்களின் இச்சைக்கு வடிகாலாக மட்டும் அனுமதிக்கப்படவில்லை. பெண்களுக்கு வாழ்வழிப்பதற்காகவும் அனுமதிக்கப்பட்டதாகும். உதாரணமாக இலங்கையில் ஒரு இலட்சம் ஆண்களும், ஒருஇலட்சத்தி ஓராயிரம் பெண்களும் இருப்பதாக வைத்துக் கொள்வோம்.

ஒருவன் ஒருத்தியைத்தான் மணக்க வேண்டும் என்றால் மீதி 1000 பெண்களின் வாழ்க்கைக்கு வழி என்ன? அவர்களின் உடல் பசியைத் தீர்க்கும் மார்க்கம் என்ன? சமூகத்தில் குறிப்பிட்ட ஒரு சிலராவது முன்வந்து பலதார மணம் செய்து கொண்டால் அந்த ஆயிரம் பெண்களும் வாழ்க்கையைப் பெறுவர். இப்படி நோக்கும்போது பலதாரமணம் பெண்களுக்குப் பரிகாரமாக வந்ததேயன்றி அது பெண்ணுக்கு இழைக்கப்படும் கொடுமை அன்று என்பதை நாம் விளங்கிக் கொள்ளலாம்.

நடைமுறை:

இன்று இலங்கை போன்ற பல நாடுகளில் முஸ்லிம்களில் குறிப்பிட்ட சிலர் பலதார மணம் புரிகின்றனர். ஆனால் ,அவர்கள் யார் எனின் கொப்பு
விட்டுக் கொப்புத் தாவும் குணம் கொண்டோராகவே உள்ளனர். முதல்தாரத்தை அனுபவித்து விட்டு சில சந்தர்ப்பங்களில் சீதனப் பணத்தைப் பாழாக்கி விட்டு மற்றொன்றை மணந்து முதல்தாரத்தை அம்போ எனத் தவிக்க விடுவோரே இந்த சன்மார்க்கச் சலுகையைப் பயன்படுத்தி வருகின்றனர். பலதாரமணம் என்றதும் பெண்கள் பதறியடித்து ஒப்பாரி வைக்க இதுவும் முக்கியதொரு காரணமாகும்.

இஸ்லாம் கூறும் பலதாரமணம் முதல்தாரத்தைக் கைவிட்டுவிட்டு இரண்டாவதில் இன்பம் காணுவதல்ல. சமூகத்தில் உள்ள நல்லவர்கள், மார்க்க ஈடுபாடுடையவர்கள் முன்வந்து உரிய முறையில் பலதாரமணம் புரிந்து மனைவியரை நல்ல முறையில் வாழ வைத்தால் கொஞ்சம் கொஞ்சமாக இந்த அச்சத்தை நீக்கலாம்.

பலதார மணமும் சமூகமும்:

பலதார மணத்தை அல்லாஹ் ஆகுமாக்கினாலும் சமூகம் இன்னும் அங்கீகரிக்கவில்லை. ஒரு கணவன் தவறான முறையில் சில பெண்களிடம் உறவு வைத்துக் கொண்டால் அவனின் மனைவியின் உறவுக்கார ஆண்கள் பலரும்கூட "ஆம்புளண்டா அப்படித்தான். சேத்தக்கண்டா மிதிப்பான். தண்ணியக்கண்டாக் கழுவுவான்" என்று சமாதானம் செய்வர்.

அதே கணவன் முறைப்படி ஒரு பெண்ணை மணந்துகொண்டால் உறவுக்கார ஆண்கள் கத்தி கம்பு என்று கலவரத்தில் இறங்குவார்கள். இது பலதாரமணம் சரியான சமூக அங்கீகாரத்தைப் பெறவில்லை என்பதையே எடுத்துக் காட்டுகின்றது.பெண்கள் கூட "என் கண் கானாமல் என்ன எழவை வேண்டுமானாலும் செய்துகொள்ளுங்கள். இன்னொரு கல்யாணம் மட்டும் வானமே வானம்" என்றே கூறுகின்றனர். ஹராத்தை சாதாரணமாகவும் ஹலாலை மிகப்பெரும் வெறுப்புக்குறிய செயலாகப் பார்ப்பது ஆபத்தானதாகும்.

பெண்ணும் பலதார மணமும்:

பெரும்பாலான பெண்கள் பலதார மணம் எனும் இறை சட்டத்தை மறுப்பவர்களாகக் காணப்படுகின்றனர். தனது கணவனுக்குத் தானே இரண்டாம் தாரத்தைப் பேசி மணம் முடித்து வைத்து, தனது ஆடை, ஆபரணங்களில் சரி அரைவாசியைக் கொடுத்து பலகுழந்தைகளைப் பெற்று இன்றுவரை ஒன்றாக ஒரே வீட்டில் உடன்பிறந்த சகோதரிகளைவிட மேலாக அன்போடு வாழும் பெண்களும் இந்நாட்டில் உள்ளனர்.

அதே வேளை கணவவின் உடல்தேவையைச் சரிவர நிறைவேற்ற முடியாத நிலையிலும் கணவர் இரண்டாவது மணத்துக்கு அனுமதி கேட்கும் போது அதற்கு இணங்காத அதே நேரம் என்ட கண்படாம, காது கேளாம் எத வேண்டுமானாலும் செங்சிக்குங்க என்று கூறும் பெண்களும் உள்ளனர்."

இஸ்லாத்தில் சில சட்டங்கள் கடமைகள் உள்ளன. அவை உரிய தகுதியை அடைந்தவர்கள் மீதுதான் கடமையாகும். தனக்கு அந்தத் தகுதிகள் இல்லை என்றாலும் தான் அந்தச் சட்டத்தை மனப்பூர்வமாக அங்கீகரித்து ஏற்றுக் கொள்ள வேண்டும்.

உதாரணமாக 
இஸ்லாமிய கடமைகளில் ஹஜ்ஜை எடுத்துக் கொண்டால் அது உடல், பொருள் வளம் உள்ளோர் மீதுள்ள கடமையாகும். ஏனையோர் மீது ஹஜ் கடமையில்லை. எனினும் ஹஜ் ஒரு கடமை என்பதை ஏழையும் ஏற்றாக வேண்டும். தனக்கு வசதி வாய்ப்பு வந்தால் ஹஜ் செய்வேன் என்ற நிய்யத் இருக்கவும் வேண்டும்.

இதேபோல ஒவ்வொரு ஆணும் பலதாரமணம் புரிய முடியாது. ஆனால் ஆண்கள் பெண்கள் அனைவரும் பலதாரமணம் பயன்மிக்க இஸ்லாமிய நெறி என்பதை ஏற்றேயாகவேண்டும். சில தகுதிகள் உள்ளோருக்குத்தான் பலதாரமணம் அனுமதிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பெண்ணிடமும் தனது கணவன் பலதார மணம் புரியும் தகுதியும் தேவையும் உடையவர் என்றால் நிச்சயமாக அதற்கு நான் ஒருபோதும் தடையாக இருக்க மாட்டேன் என்று உறுதியான நிய்யத்தாவது இருக்க வேண்டும். அத்துடன் அப்படியான சந்தர்ப்பம் வந்தால் அதற்கேற்ற விதத்தில் நடக்கவும் வேண்டும்.

"அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் ஏதேனும் ஒரு விடயத்தில் முடிவெடுத்து விட்டால் அதில் மாற்றுக் கருத்துக் கூறுவதற்கு விசுவாசியான ஆணுக்கோ பெண்ணுக்கோ உரிமையில்லை. அதில் அல்லாஹ்வுக்கும் அவன் தூதருக்கும் மாறு செய்வோர் பகிரங்க வழிகேட்டில் உள்ளனர். (33:35)
பலதாரமணம் ஆகுமானது என்பது அல்லாஹ்வினதும் அவன் தூதரினதும் முடிவாகும். இதில் மாற்றுக் கருத்துக்கூறும் அதிகாரம் பெண்களுக்கு இல்லை. இதை மறுப்போர் பகிரங்க வழிகேட்டில் உள்ளனர்.

(நபியே!) உனது இரட்சகன் மீது சத்தியமாக அவர்கள் தங்களுக்குள் ஏற்பட்ட சச்சரவில் உம்மை நீதிபதியாக ஆக்கி. நீர் செய்யும் தீர்ப்பைத் தங்கள் மனதில் எத்தகைய அதிருப்தியும் இல்லாமல் முழுமனதுடன் ஏற்றுக் கொள்ளாத வரையில் அவர்கள் விசுவாசிகளாகமாட்டார்கள். (4:65)

மேற்படி வசனம் நபி(ஸல்) அவர்களின் தீர்ப்புக்களை முழுமனதுடன் ஏற்காதவர்கள் முஃமின்களாக முடியாது எனக் கூறுகின்றது.

எனவே, பெண்கள் பலதாரமணத்தை முழுமனதுடன் ஏற்றுக் கொள்ள வேண்டும். அல்லாஹ் ஆகுமாக்கிய ஒன்றை ஹராமாக்குவது அல்லது ஹராம் போல் நோக்குவது பெரும் குற்றமாகும். அந்தக்குற்றத்திலிருந்து பெண்களை மீட்க வேண்டும் என்ற ஒரே வேட்கையினால் மட்டுமே இக் கட்டுரை வரையப்பட்டது.

எனவே, பலதாரமணத்தை ஏற்றுக் கொள்ளுங்கள். எதிர்க்காதீர்கள். தகுதி அற்ற ஒருவர் அதை செய்ய முற்பட்டால் சுட்டிக்காட்டும் உரிமை அனைவருக்கும் உண்டு. பொதுவாகப் பலதாரமணத்தை ஏற்றேயாகவேண்டும். இது ஒரு சமுகத் தேவை.

Previous Post Next Post