நபித்தோழர்களின் ஈகை குணம்

பேரருளாளன் பேரன்பாளன் அல்லாஹ்வின் பெயரால்.

1562 - حَدَّثَنَا عَبْدُ اللهِ، حَدَّثَنَا الْحَسَنُ بْنُ عِيسَى، أَنْبَأَنَا عَبْدُ اللهِ بْنُ الْمُبَارَكِ، أَنْبَأَنَا مُحَمَّدُ بْنُ مُطَرِّفٍ، أَنْبَأَنَا أَبُو حَازِمٍ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ سَعِيدِ بْنِ يَرْبُوعٍ، عَنْ مَالِكٍ الدَّارِيِّ، أَنَّ عُمَرَ بْنَ الْخَطَّابِ، رَضِيَ اللهُ عَنْهُ أَخَذَ أَرْبَعَمِائَةِ دِينَارٍ فَجَعَلَهَا فِي صُرَّةٍ، فَقَالَ لِلْغُلَامِ: اذْهَبْ بِهَا إِلَى أَبِي عُبَيْدَةَ بْنِ الْجَرَّاحِ ثُمَّ تَلَبَّثْ سَاعَةً فِي الْبَيْتِ حَتَّى تَنْظُرَ مَا يَصْنَعُ فَذَهَبَ الْغُلَامُ إِلَيْهِ، وَقَالَ: يَقُولُ لَكَ أَمِيرُ الْمُؤْمِنِينَ: اجْعَلْ هَذَا فِي بَعْضِ حَاجَتِكَ قَالَ: وَصَلَهُ اللهُ وَرَحِمَهُ ثُمَّ قَالَ: تَعَالَيْ يَا جَارِيَةُ اذْهَبِي بِهَذِهِ السَّبْعَةِ وَبِهَذِهِ الْخَمْسَةِ إِلَى فُلَانٍ وَبِهَذِهِ الْخَمْسَةِ إِلَى فُلَانٍ حَتَّى أَنْفَذَهَا فَرَجَعَ الْغُلَامُ إِلَى عُمَرَ فَأَخْبَرَهُ فَوَجَدَهُ قَدْ أَعَدَّ مِثْلَهَا لِمُعَاذِ بْنِ جَبَلٍ فَقَالَ: اذْهَبْ بِهَا إِلَى مُعَاذِ بْنِ جَبَلٍ وَتَلَبَّثْ فِي الْبَيْتِ حَتَّى تَنْظُرَ مَا يَصْنَعُ فَذَهَبَ بِهَا إِلَى مُعَاذِ بْنِ جَبَلٍ، فَقَالَ: يَقُولُ لَكَ أَمِيرُ الْمُؤْمِنِينَ: اجْعَلْ هَذِهِ فِي بَعْضِ حَاجَتِكَ فَقَالَ: رَحِمَهُ اللَّهُ وَوَصَلَهُ تَعَالَيْ يَا جَارِيَةُ اذْهَبِي إِلَى بَيْتِ فُلَانٍ بِكَذَا فَاطَّلَعَتْ امْرَأَةُ مُعَاذٍ فَقَالَتْ: وَاللهِ نَحْنُ مَسَاكِينُ فَأَعْطِنَا وَلَمْ يَبْقَ فِي الْخِرْقَةِ إِلَّا دِينَارَانِ فَرَمَى بِهِمَا إِلَيْهَا وَرَجَعَ الْغُلَامُ إِلَى عُمَرَ رَضِيَ اللهُ عَنْهُ فَأَخْبَرَهُ فَسُرَّ بِذَلِكَ وَقَالَ: «إِنَّهُمْ أُخْوَةٌ بَعْضُهُمْ مِنْ بَعْضٍ رَضِيَ اللهُ عَنْهُمْயு

உமர் இப்னுல் கத்தாப் ரழியல்லாஹு அன்ஹு  நானூறு தீனார்களை எடுத்து அதை ஒரு பையில் வைத்து அடிமையிடம் கொடுத்து அபூ உபைதாவிடம் கொடுக்க கூறினார்கள். பிறகு, அங்கேயே சிறிது நேரம் தங்கி இரு! அவர் என்ன செய்கிறார் என்று பார். அவ்வாறே அடிமை அவரிடம் சென்று, இதை உமது தேவைக்கு பயன்படுத்தி கொள்ளுமாறு அமீருல் முஃமினீன் கூறினார் என்றார். அதற்கு அபூ உபைதா ரழியல்லாஹு அன்ஹு   கூறினார், அல்லாஹ் அவருக்கும் கொடை கொடுப்பானாக! அவருக்கு கருணை புரிவானாக! பிறகு அவர் தனது அடிமை பெண்ணை அழைத்து, இந்த ஏழு தீனார்களை இன்னவரிடம் கொடுத்து வா, இந்த ஐந்தை இன்னவரிடம் கொடுத்து வா என்று அனைத்தையும் கொடுத்து தீர்த்து விட்டார். அடிமை திரும்ப வந்து அமீருல் முஃமினீன் அவர்களிடம் நடந்ததை கூறினார். அதற்குள் அதே அளவு தீனார்களை முஆத் இப்னு ஜபலுக்கு கொடுத்து அனுப்புவதற்காக அவர் தயார் செய்து வைத்திருந்தார். ஆக, அவர் தனது அடிமையிடம் இதை முஆத் இப்னு ஜபல் ரழியல்லாஹு அன்ஹு   அவர்களிடம் எடுத்து சென்று கொடுத்துவிட்டு அவர் என்ன செய்கிறார் என்று தங்கியிருந்து பார்த்துவிட்டு வா என்று கூறினார். அவரும் அதை முஆத் இப்னு ஜபலிடம் எடுத்து சென்று கொடுத்து விட்டு, இதை உமது தேவைகளுக்கு பயன்படுத்தி கொள்ளுமாறு அமீருல் முஃமினீன் கூறுகிறார் என்றார். ஆக, முஆத் ரழியல்லாஹு அன்ஹு   கூறினார்: அல்லாஹ் அமீருல் முஃமினீனுக்கு கருணை புரிவானாக! அவருக்கு கொடை கொடுப்பானாக! பிறகு அடிமைப் பெண்ணை அழைத்து இன்னார் இன்னார் வீட்டுக்கு இவ்வளவு இவ்வளவு எடுத்து சென்று கொடுத்து விடு என்று கூறினார். அப்போது முஆத் உடைய மனைவி எட்டிப்பார்த்து அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நாங்கள் ஏழைகள், ஆகவே, எங்களுக்கு கொடுப்பீராக என்று கூறினார். அந்த சின்ன பையில் இரண்டு தீனார்களை தவிர மீதம் இருக்கவில்லை. அதை தனது மனைவியின் பக்கம் அவர் எறிந்தார். அடிமை, உமர் அவர்களிடம் திரும்ப வந்து தான் பார்த்ததை கூறினார். உமர் அவர்கள் சந்தோஷப்பட்டு கூறினார்கள்: அவர்கள் சகோதரர்கள், அவர்களில் சிலர் சிலரை சேர்ந்தவர்களே! அல்லாஹ் அவர்களை பொருந்தி கொள்வானாக!

இமாம் அஹ்மது இப்னு ஹன்பல் ரஹிமஹுல்லாஹ் அவர்களின் ஸுஹ்து நூலில் இருந்து இமாம் ஹசன் பஸரி ரஹிமஹுல்லாஹ் அவர்களின் கூற்று, எண் : 1562

கருத்து: கண்ணியமிகு ஸஹாபாக்கள் உள்ளத்தால் மிக தூய்மையானவர்களாக இருந்தார்கள். அவர்களின் உள்ளத்திலிருந்து அல்லாஹ் உலக மோகத்தையும் செல்வத்தின் மீதுண்டான நாட்டத்தையும் எடுத்து விட்டிருந்தான். அல்லாஹ்வின் பாதையில் ஏழைகளுக்கு அள்ளிக் கொடுப்பது அவர்களின் சுபாவமாக இருந்தது. தனக்கு இல்லை என்றாலும் அல்லது தனது தேவையை மறந்து பிறருக்கு கொடுக்கிற பழக்கம் அவர்களுக்கு இருந்தது. அவர்களின் ஏழ்மை அவர்களின் கொடையை தடுக்கவில்லை.


அவர்கள் ஏழைகளாக இருக்கிறபோதும் அல்லாஹ்வின் பாதையில் செலவழித்தார்கள். அவர்கள் செல்வந்தர்களாக, ஆட்சியாளர்களாக ஆகிவிட்டபோதும் அல்லாஹ்வின் பாதையில் செலவழித்தார்கள். இத்தகைய உயர்ந்த குணத்தின் சிறந்த முன்னோடிகளாக அவர்கள் திகழ்ந்தார்கள். அல்லாஹ்வின் பொருத்தமும் அன்பும் அவர்களுக்கு கிடைக்கட்டுமாக!

விளக்கம்: அல்லாஹ்வின் அருளும் மன்னிப்பும் நபித்தோழர்கள் மீது நிலவட்டும். உண்மையில் அவர்கள் அல்குர்ஆனின் மூலமும் ஸுன்னாவின் மூலமும் உருவாக்கப்பட்டார்கள். அவர்களின் குணங்களை குர்ஆனும் ஸுன்னாவும் செதுக்கி எடுத்தன. அவர்களின் வணக்க வழிபாடுகள், குணாதிசயங்கள், பண்புகள் என அனைத்தும் மறுமைக்காக மட்டுமே இருந்தன. அவர்கள் இந்த உலகத்தை அறவே நாடாதவர்களாக இருந்தார்கள். உலகத்தின் செல்வங்கள் மீது பேராசை அவர்களின் உள்ளங்களில் இருக்கவில்லை.

எப்படி நபி  அவர்களின் காலத்தில் அவர்களின் குணங்கள் இருந்தனவோ அப்படியே அவர்களின் குணங்கள் நபியவர்களின் இறப்பிற்கு பின்னரும் இருந்தன. யார், அவர்களின் குணங்கள் நபி  அவர்களின் இறப்பிற்கு பின்னர் மாறிவிட்டன என்று சொல்வாரோ அவர்தான் குஃப்ரிலும் நிஃபாக்கிலும் தன்னை தள்ளிக்கொள்கிறார்.

அந்த தோழர்கள் அப்படிப்பட்டவர்கள் அல்ல. அத்தகைய பலவீனமான தர்பியாவை அவர்களுக்கு நபி  அவர்கள் செய்யவில்லை. நபி  அவர்கள் உருவாக்கிய அந்த மேன்மைமிக்க சமுதாயம் உலகத்திற்காக தங்கள் ஈமானையோ அமலையோ நற்குணத்தையோ மாற்றிக் கொள்ளும் அளவிற்கு மட்டமானவர்கள் அல்ல.

மேற்கண்ட சம்பவத்திலிருந்து பல படிப்பினைகளை நாம் பெற வேண்டியதிருக்கிறது.

உமர் ரழியல்லாஹு அன்ஹு   அவர்கள் தங்கள் தோழர்களின் மார்க்க நிலைமையை சோதித்துக் கொண்டே இருந்தார்கள். அவர்களிடம் மார்க்க விஷயத்தில் மாற்றம் வருவதை அவர்கள் அறவே விரும்பவில்லை. 

பொதுவாக உமர் ரழியல்லாஹு அன்ஹு   அவர்கள் தங்கள் ஈமானை குறித்து மிகவும் பயந்தவர்களாக இருந்தார்கள். அத்தோடு தங்கள் தோழர்களுடன் சேர்ந்து ஈமானை பற்றி கவலைப்படுகிறவர்களாக இருந்தார்கள்.

உமர் ரழியல்லாஹு அன்ஹு   அவர்கள் தங்கள் தோழர்களை அவ்வப்போது உலக மோகத்தை குறித்தும் உலக இன்பத்தில் மூழ்குவதை குறித்தும் எச்சரித்து வந்தார்கள்.

ஸஹாபாக்கள் அல்லாஹ்வினால் தேர்ந்தெடுக்கப்பட்ட சமுதாயமாக இருந்தார்கள். அவர்களைப் போன்ற ஒரு சமுதாயம் இந்த உலகத்தில் இனி பிறக்க முடியாது. அவர்களின் ஈமான், அமல், குணம் என அனைத்தும் அல்லாஹ்வும் ரஸூலும் விரும்புகிற அந்த உயர்ந்த தரத்தில் இருந்தது.

குர்ஆனின் ஒவ்வொரு வசனங்களும் ஸுன்னாவின் ஒவ்வொரு வாக்கியமும் அவர்களின் வாழ்க்கையில் யதார்த்த உண்மையாக வெளிப்பட்டது. 

உலக செல்வமும் அதன் வளமும் இந்த உலகத்தில் ஒரு சமுதாயத்தை தடம்புரள செய்ய முடியவில்லை என்றால் அது அந்த ஸஹாபாக்கள் சமுதாயம்தான்.

அவர்கள் நபி  அவர்களின் காலத்தில் எப்படி வாழ்ந்தார்களோ அப்படியே வாழ்ந்தார்கள் ஆட்சி அதிகாரம் வந்த பின்னரும்.

அல்லாஹ்வின் பாதையில் போருக்கு செல்வதாக இருக்கட்டும், அமீருக்கு கீழ்ப்படிவதாக இருக்கட்டும், ஈமானை உறுதிப்படுத்துவதாக இருக்கட்டும், அமலை அதிகப்படுத்துவதாக இருக்கட்டும், குணங்களை உயர்த்துவதாக இருக்கட்டும், அந்த தோழர்கள் இஸ்லாமில் முன்னேறிக் கொண்டே இருந்தார்களே தவிர ஒருபோதும் அவர்கள் அதில் பின் வாங்கவுமில்லை, பின் தங்கவுமில்லை.

குர்ஆனை உடையவர்கள், ஸுன்னாவை உடையவர்கள், மறுமைக்காரர்கள், உலக பற்றில்லாதவர்கள் என்று நாம் அடையாளம் காட்டுவதற்கு முழு தகுதியானவர்கள் அந்த ஸஹாபாக்கள். 

இப்படியாக பல சிறப்புகளை ஸஹாபாக்கள் பற்றி நாம் சொல்லிக்கொண்டே போகலாம். 

இவை போக இந்த நிகழ்வில் நாம் சிந்திக்க வேண்டிய இன்னொரு பக்கமும் இருக்கிறது. ஆம், அதுதான் தர்மம்.

அந்த தர்மத்தை குறித்து கொஞ்சம் பார்ப்போம்.

தர்மம், கொடை, தானம், ஈகை, பெருந்தன்மை, வள்ளல்தனம் இப்படியாக இன்னும் பல பெயர்களை உடைய இந்த சிறப்பு பண்பு அல்லாஹ்விற்கும் அவனது தூதருக்கும் மிகப் பிடித்தமான ஒன்றாகும்.

அல்குர்ஆன் போதிக்கிற ஆயிரத்திற்கும் அதிகமான நற்பண்புகளில் மிக ஹைலைட்டான ஒன்று தர்மம் கொடுப்பதாகும்.

முஃமின்களின் அடிப்படை பண்புகளில் ஒன்றாக தர்மத்தை அல்குர்ஆன் கூறுகிறது.

செல்வந்தர்களுக்கு மட்டும் செல்வம் என்றில்லாமல் அது ஏழை எளியோர், நலிந்தோர், அனாதைகள், வழிப்போக்கர், கடனாளிகள், அடிமைகள் என எல்லோருக்கும் அவர்களின் தேவைகள் நிறைவேற்றப்பட வாரி வழங்கப்பட வேண்டிய ஒன்றுதான் செல்வம் என்று குர்ஆன் மிகவும் வலியுறுத்தி கூறுகிறது.

ஒருவர் முஸ்லிமாக இருக்க வேண்டுமென்றால் அவரிடம் வசதியான அளவிற்கு செல்வம் இருப்பின் அவர் கட்டாயம் தனது செல்வத்திலிருந்து 2.5 சதவீதம் ஸகாத் என்ற தர்மத்தை கொடுத்தே ஆகவேண்டும். அதுபோக உபரியான தர்மங்களை அவ்வப்போது தனது செல்வத்திலிருந்து வெளியேற்றி கொடுத்து கொண்டே இருக்க வேண்டும். இதுதான் இஸ்லாம், முஸ்லிம்களுக்கு போதிக்கிற நற்பண்பாகும்.


தர்மத்தை வலியுறுத்துகிற பல நூறு குர்ஆன் வசனங்களும் பல ஆயிரம் நபிமொழிகளும் உள்ளன.

அல்லாஹு தஆலா கூறுகிறான்:

الَّذِينَ يُنفِقُونَ أَمْوَالَهُم بِاللَّيْلِ وَالنَّهَارِ سِرًّا وَعَلَانِيَةً فَلَهُمْ أَجْرُهُمْ عِندَ رَبِّهِمْ وَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ

எவர்கள் தங்கள் செல்வங்களை இரவிலும், பகலிலும் இரகசியமாகவும், வெளிப்படையாகவும் தர்மம் செய்கிறார்களோ அவர்களுக்கு அவர்களின் கூலி அவர்களின் இறைவனிடம் உண்டு; அவர்கள் மீது பயமுமில்லை; அவர்கள் கவலைப்படவும் மாட்டார்கள்.  (அல்குர்ஆன் 2 : 274)

إِنَّ الْمُصَّدِّقِينَ وَالْمُصَّدِّقَاتِ وَأَقْرَضُوا اللَّـهَ قَرْضًا حَسَنًا يُضَاعَفُ لَهُمْ وَلَهُمْ أَجْرٌ كَرِيمٌ

நிச்சயமாக (அல்லாஹ்வின் பாதையில்) தர்மம் செய்த ஆண்கள், தர்மம் செய்த பெண்கள், இன்னும், அல்லாஹ்விற்கு அழகிய கடனாக கடன் கொடுத்தவர்கள் அவர்களுக்கு (நற்கூலிகள்) பன்மடங்காக்கப்படும். இன்னும், அவர்களுக்கு கண்ணியமான வெகுமதி(யாகிய சொர்க்கம்) உண்டு. (அல்குர்ஆன் 57 : 18)

لَنْ تَنَالُوا الْبِرَّ حَتَّىٰ تُنْفِقُوا مِمَّا تُحِبُّونَ وَمَا تُنْفِقُوا مِنْ شَيْءٍ فَإِنَّ اللهَ بِهِ عَلِيمٌ

நீங்கள் விரும்புகின்ற (செல்வத்)திலிருந்து தர்மம் செய்யும் வரை நன்மையை அறவே அடைய மாட்டீர்கள். இன்னும், பொருளில் எதை (நீங்கள்) தர்மம் செய்தாலும் நிச்சயமாக அல்லாஹ் அதை நன்கறிந்தவன் ஆவான்.

 (அல்குர்ஆன் 3 : 92)

وَمَا أَدْرَاكَ مَا الْعَقَبَةُ  فَكُّ رَقَبَةٍ  أَوْ إِطْعَامٌ فِي يَوْمٍ ذِي مَسْغَبَةٍ  يَتِيمًا ذَا مَقْرَبَةٍ  أَوْ مِسْكِينًا ذَا مَتْرَبَةٍ  ثُمَّ كَانَ مِنَ الَّذِينَ آمَنُوا وَتَوَاصَوْا بِالصَّبْرِ وَتَوَاصَوْا بِالْمَرْحَمَةِ  أُولَئِكَ أَصْحَابُ الْمَيْمَنَةِ

(நபியே!) அகபா என்றால் என்னவென்று உமக்கு அறிவித்தது எது? (அது,) ஓர் அடிமையை விடுதலை செய்தல், அல்லது, கடுமையான பசியுடைய நாளில் உணவளித்தல், (யாருக்கு என்றால்) உறவினரான ஓர் அனாதைக்கு, அல்லது, மிக வறியவரான ஓர் ஏழைக்கு உணவளித்தல் (அகபாவை கடப்பதாகும்). (இத்தகைய புண்ணியத்தை செய்த) பிறகு, (அத்துடன்) அவர் நம்பிக்கையைக் கொண்டவர்களிலும், பொறுமையைக் கொண்டு உபதேசித்துக் கொண்டவர்களிலும், கருணையைக் கொண்டு உபதேசித்துக் கொண்டவர்களிலும் ஆகிவிட வேண்டும். இ(த்தகைய நன்மைகளை செய்த)வர்கள் வலப்பக்கமுடையவர்கள் (-சொர்க்க வாசிகள்) ஆவார்கள். (அல்குர்ஆன் 90 : 12-18)

இப்படியாக பல வசனங்கள் தர்மத்தை சிறப்பித்தும் வலியுறுத்தியும் கூறுகின்றன. இன்னும் பல வசனங்கள் ஸஹாபாக்கள் உடைய தர்ம மனப்பான்மையை விவரித்தும் பேசுகின்றன.

إِنَّ الَّذِينَ آمَنُوا وَهَاجَرُوا وَجَاهَدُوا بِأَمْوَالِهِمْ وَأَنْفُسِهِمْ فِي سَبِيلِ اللهِ وَالَّذِينَ آوَوْا وَنَصَرُوا أُولَٰئِكَ بَعْضُهُمْ أَوْلِيَاءُ بَعْضٍ ۚ وَالَّذِينَ آمَنُوا وَلَمْ يُهَاجِرُوا مَا لَكُمْ مِنْ وَلَايَتِهِمْ مِنْ شَيْءٍ حَتَّىٰ يُهَاجِرُوا ۚ وَإِنِ اسْتَنْصَرُوكُمْ فِي الدِّينِ فَعَلَيْكُمُ النَّصْرُ إِلَّا عَلَىٰ قَوْمٍ بَيْنَكُمْ وَبَيْنَهُمْ مِيثَاقٌ ۗ وَاللهُ بِمَا تَعْمَلُونَ بَصِيرٌ

நிச்சயமாக நம்பிக்கை கொண்டு, (தங்கள் ஊரை விட்டு வெளியேறி) ஹிஜ்ரத் சென்று, அல்லாஹ்வின் பாதையில் தங்கள் பொருள்களாலும் தங்கள் உயிர்களாலும் போர் புரிந்தவர்கள்; இன்னும், (இவர்களை) அரவணைத்து, உதவியவர்கள் இவர்கள், - இவர்களில் சிலர் சிலருக்கு பொறுப்பாளர்கள் ஆவர். இன்னும், எவர்கள் நம்பிக்கை கொண்டு; ஆனால், ஹிஜ்ரத் செல்லவில்லையோ அவர்கள் ஹிஜ்ரத் செல்லும் வரை எந்த ஒரு காரியத்திற்கும் அவர்களுக்காக பொறுப்பேற்பது உங்களுக்கு ஆகுமானதல்ல. இன்னும், மார்க்க விஷயத்தில் அவர்கள் உங்களிடம் உதவி தேடினால் (அவர்களுக்கு) உதவுவது உங்கள் மீது கடமையாகும். (எனினும்,) உங்களுக்கும் அவர்களுக்கும் இடையில் உடன்படிக்கை உள்ள ஒரு சமுதாயத்திற்கு எதிராக தவிர. (உடன்படிக்கை செய்தவர்களுக்கு எதிராக உதவுவது ஆகுமானதல்ல.) அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை உற்று நோக்குபவன் ஆவான்.  (அல்குர்ஆன் 8 : 72)

அல் அன்ஃபாலுடைய இறுதி வசனங்களில் உள்ள இவ்விரண்டும் ஸஹாபாக்களை பற்றியே பேசுகின்றன.

பொதுவாக தர்மத்தை பற்றி வந்துள்ள ஹதீஸ்களும் குறிப்பாக ஸஹாபாக்கள் உடைய ஈகை குணத்தை பற்றி வந்துள்ள 

ஹதீஸ்களும் ஏராளம் உள்ளன.

என்னை பொறுத்தவரை நான் ஸஹாபாக்களை எப்படி பார்க்கிறேன் என்றால் அல்லாஹு தஆலா அந்த ஸஹாபாக்களை இஸ்லாமிற்காகவும் மறுமைக்காகவும் மிக விசேஷமாக படைத்திருக்கிறான் போலும். ஆம், அவர்கள் அப்படித்தான் வாழ்ந்து சென்றார்கள். உலக வரலாற்றில் அத்தகைய உன்னதமான ஒரு சமுதாயம் அவர்கள்தான் முதலாமவர்களாகவும் இறுதியானவர்களாகவும் இருப்பார்கள்.


அல்லாஹ்வின் வேதத்தின் ஒவ்வொரு வசனமும் நபி  அவர்களின் ஒவ்வொரு ஹதீஸும் அந்த ஸஹாபாக்களின் உள்ளத்தின் ஆழத்திலே இறங்கியது. அவர்களை இஸ்லாமை ஏற்ற பின்னர், ஷஹாதாவை மொழிந்த பின்னர் தங்களை முழுமையாக அல்லாஹ்விடமும் அவனது தூதரிடமும் ஒப்படைத்து விட்டனர். அல்லாஹ்வும் ரஸூலும் கிழித்த கோட்டை அவர்கள் தாண்டுவது என்ன அதை நெருங்க கூட இல்லை. சத்தியமும் நீதமும் அவர்களின் இதயத்தின் அனைத்து இடங்களையும் ஆக்கிரமித்தன. இறை வணக்க வழிபாடுகளுடன் தர்மமும் ஈகை குணமும் உலக பற்றின்மையும் அவர்களின் அடையாளமாக இருந்தன.

அல்லாஹ்வின் மகிழ்ச்சிக்காகவும், நபி  அவர்களின் மகிழ்ச்சிக்காகவும், மார்க்கத்தின் வளர்ச்சிக்காகவும், ஏழைகளின் தேவைகளை நிறைவேற்றுவதற்காகவும் செலவழிப்பதும், தான தர்மம் செய்வதும் அவர்களுக்கு மிகப் பிரியமான ஒரு அமலாக இருந்தது. தங்களுடைய சொந்த தேவைகளுக்கு செலவு செய்வதை விட அல்லாஹ்வின் பாதையிலும் தர்மத்திலும் செலவு செய்வதுதான் அவர்களுக்கு மிக விருப்பமாக இருந்தது.

சொத்துகளை சேகரித்து உலகத்தில் விட்டு செல்வதை விட அவற்றை தர்மம் செய்து மறுமைக்கு எடுத்து செல்வதில் அவர்கள் முனைப்பாக இருந்தார்கள். மறுமை வாழ்க்கையும் சொர்க்க வாழ்க்கையும் அவர்களின் கண்களுக்கு முன்னே இருந்தனவே தவிர தற்காலிக உலகத்தின் அற்ப தேவைகளோ ஆசைகளோ அல்ல. 

இந்த அமர்வில் பதிவான நிகழ்வை கொஞ்சம் ஆழமாக சிந்தித்து பாருங்கள். உங்களுக்கு பல உண்மைகள் புரியவரும்.

அல்லாஹு தஆலா அந்த தோழர்களை பற்றி கூறும்போது,

 مِنَ الْمُؤْمِنِينَ رِجَالٌ صَدَقُوا مَا عَاهَدُوا اللهَ عَلَيْهِ فَمِنْهُمْ مَنْ قَضَىٰ نَحْبَهُ وَمِنْهُمْ مَنْ يَنْتَظِرُ وَمَا بَدَّلُوا تَبْدِيلًا

அல்லாஹ்விடம் எதை ஒப்பந்தம் செய்தார்களோ அதை உண்மைப்படுத்திய ஆண்களும் நம்பிக்கையாளர்களில் இருக்கிறார்கள். (வீர மரணம் அடைய வேண்டும் என்ற) தனது நேர்ச்சையை நிறைவேற்றியவரும் அவர்களில் உண்டு. (வீர மரணத்தை) எதிர்பார்த்து இருப்பவரும் அவர்களில் உண்டு. அவர்கள் (தங்கள் ஒப்பந்தத்தை) மாற்றிவிடவில்லை.  (அல்குர்ஆன் 33 : 23)

என்று வர்ணிக்கிறான்.

ஆம், உண்மையில் அவர்களின் குணங்களோ பண்புகளோ வழிபாடுகளோ மாறவே இல்லை. அவர்கள் நபி  அவர்களின் காலத்தில் சிரமத்தில், நெருக்கடியில், பலவிதமான இன்னல்களில், வகை வகையான துன்பங்களில், வறுமையில் சிக்கி அவதிப்பட்டுக் கொண்டிருந்தார்கள். 

அல்லாஹு தஆலா பிறகு அவர்களுக்கு இவற்றை எல்லாம் போக்கி வசதியை, ஆட்சி அதிகாரத்தை, செல்வ செழிப்பை ஏற்படுத்தி கொடுத்தான். இருந்தாலும் அவர்களோ அந்த செல்வத்தையும் வசதியையும் அல்லாஹ்வின் பாதையிலேயே திருப்பினார்கள். தங்களுடைய தேவைகளுக்கு மிக மிக குறைந்த அளவை வைத்துக் கொண்டு மீதம் அனைத்தையும் அல்லாஹ்வின் பாதையிலும் ஏழைகளின் தேவையிலும் வைத்தார்கள். 

நாமோ ஸகாத்தாக நூறில் இருந்து வெறும் 2.5 இரண்டரை சதவீதத்தை தர்மமாக கொடுக்க யோசிக்கிறோம். அந்த சான்றோர்களின் தான தர்மங்களை நாம் ஆராய்ந்தால் அவர்களோ 2.5 இரண்டரை சதவீதத்தை மட்டும் தமக்காக வைத்துக்கொண்டு மீதம் 97.5 சதவீதத்தை அல்லாஹ்வின் பாதையில் செலவழித்திருப்பார்கள் என்றுதான் எண்ணத் தோன்றுகிறது.

நாம் நன்றாக புரிந்து கொள்ள வேண்டும்!

தர்மம் கொடுப்பது ஈமானின் பண்பும் அடையாளமும் ஆகும்.

ஏழைகளுக்கும் வறியவர்களுக்கும் தேவை உள்ளோருக்கும் கொடுத்துதவுவது அல்லாஹ்விற்கு மிகப் பிரியமான அமலாகும்.

தர்மம் நரகத்தை விட்டு பாதுகாக்கும் கேடயமாகும்.

தேவை உள்ளவர்களின் தேவையில் உதவுவது முஸீபத்துகளை போக்கக்கூடியதும் பரக்கத்துகளை திறக்கக் கூடியதுமாகும்.

தர்மம் நமது பாவங்கள் மன்னிக்கப்படுவதற்கும் இலகுவாக நாம் சொர்க்கம் செல்வதற்கும் உள்ள சிறந்த வழியாகும்.

தர்மம் அதிகம் செய்தவர்களிடம் அல்லாஹ் மிக இலகுவாகவே விசாரணை செய்வான். அவர்களுக்கு தன் மன்னிப்பை மிக விசாலமாக ஆக்கிவிடுவான்.

அது மட்டுமல்ல, தர்மம் கொடுத்து கொண்டே இருப்பது நாம் உலக மோகத்தில் சிக்கி சீரழிந்து விடாமல் நம்மை பாதுகாக்கிறது. கருமித்தனத்தின் கெடுதிகளிலிருந்து நம்மை பாதுகாக்கிறது. 

அல்லாஹு தஆலா நமக்கு இந்த உண்மைகளை புரிவதற்கும் உணர்வதற்கும் நல்லருள் புரிவானாக! நாம் அந்த சான்றோரை நேசித்து, அவர்களின் அடிச்சுவடுகளை பின்பற்றி நடக்க நமக்கு நல்லருள் புரிவானாக! 

அல்லாஹ்வே! எங்கள் உள்ளங்களில் இருந்து கருமித்தனத்தை நீக்கி விடுவாயாக! உன் பாதையில் செலவழிக்கவும் ஏழைகளுக்கு உதவவும் எங்களுக்கு அருள் புரிவாயாக! ஆமீன்.

Previous Post Next Post