முதல் முறை கஃபாவை பார்க்கும் போது..

கேள்வி : முதல் முறை கஃபாவை பார்க்கும் போது கேட்கப்படும் துஆக்கள் உடனே கபூல் ஆகும் என்று சொல்லப்படுகின்ற ஹதீஸ் ஸஹீஹானதா ? 

பதில் : நான்கு இடங்களில் வானத்தின் கதவுகள் திறக்கப்படுகின்றன, துஆக்களும் அங்கீகரிக்கப்படுகின்றன. 

1- போர்ப் படையணிகள் சந்திக்கும் போது. 
2- மழை பொழியும் போது. 
3- தொழுகைக்காக நிற்கும் போது.
4- முதல் முறை கஃபாவை பார்க்கும் போது. 

அறிவிப்பவர் - அபூ உமாமா (ரழி)

ஆதாரம் - பைஹகி - சுனனுல் குப்ரா (7240) தபராணி - அல் முஃஜமுல் கபீர் - (8/169,171) 

இந்த செய்தியின் அறிவிப்பாளர் வரிசையில் இடம் பெறுகின்ற உபைர் பின் மஃதான் என்பவர் பலவீனமான அறிவிப்பாளர் என்பதில் ஹதீஸ் துறை அறிஞர்களிடம் கருத்தொருமை காணப்படுகிறது என்பதாக இமாம் தஹபி அவர்கள் தீவானுழ் ழுஅபாவிலும் இமாம் ஹைதமி அவர்கள் தமது மஜ்மஉஸ் ஸவாயிதிலும் விளக்கியுள்ளார்கள், எனவே இது பலவீனமானதொரு செய்தியாகும். 

இந்த செய்தி பலவீனமானது என்ற கருத்தையே இமாம் நவவி (ஹுலாஸதுல் அஹ்காம் 3133) ஹாபிழ் இப்னு ஹஜர் அல் அஸ்கலானி (தல்ஹீஸுல் ஹபீர் 4/188) இமாம் இப்னுல் முலக்கின் (அல் பத்ருல் முனீர் 9/70) அல்லாமா அல்பானி (ஸில்ஸிலா ழஈபா 3410) போன்றோரும் தமது நூல்களில் பதிவு செய்துள்ளனர்.

குறித்த இந்த விடயம் தொடர்பாக ஸஹீஹான எந்த ஒரு நபி மொழியும் கிடையாது என்ற வகையில் இந்த விடயத்தை ஆதாரபூர்வமாக நம்மால் நிறுவ முடியாதுள்ளது. 

-முபாரிஸ் இப்னு தாஜுதீன் ரஷாதி
Previous Post Next Post