பொறுப்புகளை பயந்த ஸஹாபாக்களில் உத்பத் இப்னு கஸ்வான் ரலியல்லாஹு அன்ஹு!

உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களது ஆட்சிக் காலத்தில் பஸராவிலுள்ள உபு(B)ல்லா எனும் பகுதியை வெற்றிகொள்வதற்காக உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் உத்பத் இப்னு கஸ்வான் ரலியல்லாஹு அன்ஹு அவர்களது தலைமையில் ஒரு படையை பஸரா நோக்கி அனுப்பி வைத்தார்கள். 

அல்லாஹ்வின் பல உதவிகளுக்கு மத்தியில் உபுல்லா நகரை எவ்வித போரின்றி முஸ்லிம்கள் வெற்றிகொண்டனர். (முஸ்லிம்களது படை புழுதியுடன் வந்ததையிட்டு பெரும்படையினர் என நினைத்து பாரஸீக படையினர் விரண்டோடியதால் யுத்தம் நடைபெறவில்லை)

யுத்தமின்றியும் எவ்வித இழப்புமின்றியும் வெற்றிகொள்ளப்பட்ட மேற்குறித்த நகரையடுத்து சூழவுள்ள கிராமங்கள், நகரங்களையும் முஸ்லிம்கள் இலகுவாக வெற்றிகொண்டனர். இதனால் எண்ணிலடங்கா செல்வங்கள், கனீமத்களைப் பெற்று செல்வ செழிப்பாக வாழ ஆரம்பித்தனர்.

வெற்றிகொள்ளப்பட்ட ஊர்களில் தனது படையினர் தொடராக இருப்பதானது அவர்களை அவ்வூர் மக்களது பழக்கவழக்கங்களுக்கு உட்படுத்துவதோடு சொகுசாக வாழவும் பழக்கிவிடும் என்பதைக் கண்ட தளபதி உத்பத் இப்னு கஸ்வான் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கலீபா உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு பஸராவை அழகாக கட்டியெழுப்புவதற்காக அனுமதி கோரி கடிதம் எழுதிய போது அனுமதியும் கிடைத்தது.

உடனே தளபதி உத்பத் இப்னு கஸ்வான் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் பஸராவை கட்டியெழுப்புவதற்காக சிறந்த திட்டமிடல்களை மேற்கொண்டார்கள். முதலாவதாக பள்ளியவாயல் கட்டடப் பணியை ஆரம்பித்து நகரை அழகாக கட்டியெழுப்பினர். பின்னர் காணிகளைப் பெற்று குடியிருப்புகள், வீடுகளை அமைத்துக்கொண்ட போதும்  தளபதி தனக்கொரு வீட்டைக் கூட அமைக்கவில்லை. மாறாக துணியினால் அமைக்கப்பட்ட கூடாரம் ஒன்றிலே வசித்துவந்தார்கள்.

தளபதி உத்பத் இப்னு கஸ்வான் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் ஒரு மனிதன் தன்னை மறக்குமளவு உலக செல்வங்கள் முஸ்லிம்களிடத்தில் நிறைந்துவழிவதைக் கண்டு உலக ஆசை மேலிட்டு மார்க்கம் பாழாகிவிடுமோ என்று பயப்பட ஆரம்பித்துவிட்டார்கள். இதனால் மக்களனைவரையும் கூபாவிலுள்ள பள்ளிவாயலில் ஒன்றுகூட்டி பின்வரும் உரையை நிகழ்த்தினார்கள்: "மக்களே! இவ்வுலகம் முடிவுறும் என்பதை அதுவே அறிவித்துவிட்டது, நீங்கள் அழிவுறாத உலகுக்கு செல்லவுள்ளீர்கள் ஆதலால் சிறந்த அமல்களைக் கொண்டு அவ்வுலகுக்கு செல்லுங்கள். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடன் இஸ்லாத்தை ஏற்றவர்களுள் நான் ஏழாமவராக இருந்த போது எமக்கு மரங்களின் இலைகளைத் தவிர உணவுக்கு வேறொன்றும் இருக்கவில்லை, அவற்றை சாப்பிடுவதால் உதடுகளில் காயங்கள் ஏற்பட்டுவிடும். ஒரு நாள் ஒரு போர்வையை புறக்கினேன், அதனை கிழித்து நானும் ஸஃத் இப்னு அபீ வக்காஸ் -ரலியல்லாஹு அன்ஹு- அவர்களும் பிரித்தெடுத்து ஆளுக்கு அரைவாசியை கீழாடையாக அணிந்துகொண்டோம். ஆனால் இன்று நாம், எம்மில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு பகுதிக்கு அமீராக நியமிக்கப்பட்டுள்ளோம். உறுதியாக நான் என்னிடத்தில் என்னை பெரியவனாகவும் அல்லாஹ்விடத்தில் சிறியவனாகவும் ஆகுவதையிட்டு பாதுகாப்பு தேடுகிறேன்" 

பின்னர் குறித்த தனது படைக்கு ஒருவரை தனக்கு பதில் தளபதியாக நியமித்துவிட்டு அவர்களிடமிருந்து விடைபெற்று மதீனா நோக்கி சென்றுவிட்டார்கள். அங்கு சென்று கலீபா உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களை சந்தித்து தன்னை அமீர் பொறுப்பிலிருத்து நீக்குமாறு கோர, உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் தளபதி, அமீர் பொறுப்பிலிருந்து நீக்க மறுத்ததோடு மீண்டும் கட்டாயப்படுத்தி அமீர் பொறுப்பை ஏற்குமாறு வேண்டிக்கொண்டது மாத்திரமன்றி மீண்டும் பஸராவுக்கு செல்லுமாறு பணிப்புரை விடுத்தார்கள். கலீபாவின் பணிப்புரையை மன விருப்பமின்றி (வெறுப்போடு) உத்பத் இப்னு கஸ்வான் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் ஏற்று தனது ஒட்டகத்தில் ஏறி "எனது இறைவா என்னை பஸராவுக்கு திருப்பி அனுப்பிவிடாதே! எனது இறைவா என்னை பஸராவுக்கு திருப்பி அனுப்பிவிடாதே!" என்று துஆ கேட்ட வண்ணம் பயணத்தை ஆரம்பித்தார்கள். 

அல்லாஹ் உத்பத் இப்னு கஸ்வான் ரலியல்லாஹு அன்ஹு அவர்களது துஆவை ஏற்றுக்கொண்டான். தளபதியவர்கள் மதீனாவை விட்டு நீண்ட தூரம் செல்லவில்லை ஒட்டகம் ஓரிடத்தில் தடுமாறி விழவே இவர்களும் கீழே விழுந்து வபாத்தாகிவிட்டார்கள். இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

நூல்: ஸுவருன் மின் ஹயாதிஸ் ஸஹாபா, பக் 409-412

தொகுப்பு: அஸ்(z)ஹான் ஹனீபா

Previous Post Next Post