தொகுப்பு:
கலாநிதி யூ . எல் . அஹ்மத் அஷ்ரப்
இணைப் பேராசிரியர்
நஜ்ரான் பல்கலைக்கழகம்
நஜ்ரான் - சவூதி அரேபியா
இறைவனின் “ஸிபாத்-(பண்புகள்)” பற்றிய அடிப்படைகள் என்ன?
இறைவனின் “ஸிபாத்' சம்பந்தமாக, குர்ஆன், ஹதீஸ் வழிகாட்டிய அடிப்படைகள் மூன்றாகும். இதே அடிப்படைகளில்தான், ஸஹாபாக்கள், தாபியீன்கள் ஆகியோர்களின் இறைநம்பிக்கை அமைந்திருந்தது. அவை பின்வருமாறு:-
1. (அல்-இஸ்பாத்) ஊர்ஜிதப்படுத்தல் (தரிபடுத்தல்)
2. (அத்தன்ஸீஹ்) பரிசுத்தப்படுத்தல்
3. (அத்தப்(க)வீழ்) அல்லாஹ்வின் பக்கம் சாட்டிவிடல்.
1. (அல்-இஸ்பாத்) ஊர்ஜிதப்படுத்தல் (தரிபடுத்தல்):
“இஸ்பாத்” என்றால் குர்ஆன், ஹதீஸ் ஆகியவை மூலமாகக் கூறப்பட்ட இறைபண்புகள் அல்லாஹ்வுக்கு மாத்திரம் உரியன என நம்புதல் ஆகும். அல்லாஹ் பார்க்கின்றான், செவிமடுக்கின்றான், அர்ஷ் மீது உள்ளான், எனக்கூறப்பட்ட பண்புகளை, அவை யதார்த்தமானவை, ஊர்ஜிதமானவை என நம்புவது ஒவ்வொரு முஸ்லிமின் கடமையாகும்.
இஸ்பாத் - என்ற அடிப்படைக்குரிய ஆதாரங்கள்:-
(அ) அல்லாஹ் குர்ஆனில் பின்வருமாறு கூறுகின்றான்:-
அல்லாஹ்வுக்கு அழகிய பெயர்கள் உள்ளன. அவற்றின் மூலமே அவனை அழையுங்கள். அவனது பெயர்களில், திரித்துக்கூறுவோரை, புறக்கணித்துவிடுங்கள். (திரிபுபடுத்தும்) வேலை செய்து வந்தற்காக அவர்கள் தண்டிக்கப்படுவார்கள். (அல் அ.ஃராப் : 180)
இத்திருவசனம், குர்ஆனில் கூறப்பட்ட இறைபண்புகள் தரிபடுத்தப்பட வேண்டும் என்பதையும், அவைகளுக்கு வலிந்துரை வழங்குபவர்கள் தண்டனைக்கு உரியவைகள் என்பதையும் உணர்த்தியுள்ளது.
(ஆ) நபி (ஸல்) அவர்களின் பின்வரும் செயல்முறை:-
நபி (ஸல்) அவர்கள் “நிச்சயமாக அல்லாஹ் செவியுறுபவனாகவும், பார்ப்பவனாகவும் இருக்கின்றான் என்ற திருவசனத்தை ஓதியபோது, அன்னவர்கள் தனது பெருவிரலைக் காது மீதும், சுட்டுவிரலை கண்மீதும் வைக்கக் கண்டேன் என அபூஹுரைரா (ரழி) அவர்கள் கூறினார்கள்.
(அபூதாவூத் : 4728)
2. (அத்தன்ஸீஹ்) பரிசுத்தப்படுத்தல்:
“தன்ஸீஹ்” என்றால், இறைவனின் பண்புகள், சிருஷ்டிகளின் தன்மைகளுக்கு ஒப்பாகமாட்டாது என நம்புதல் ஆகும். உதாரணமாக, அல்லாஹ் செவிமடுக்கிறான், பார்க்கிறான், அர்ஷ் மீது உள்ளான் போன்ற பண்புகளை, அல்லாஹ் சிருஷ்டிகளைப் போன்று செவிமடுக்கிறான், பார்க்கிறான், அரசன் சிம்மாசனத்தில் அமர்ந்திருப்பது போன்று, அல்லாஹ் அர்ஷ் மீது உள்ளான் என நம்பாமல், அவனைப் பரிசுத்தப்படுத்துவது முஸ்லிமின் கடமையாகும்.
“தன்ஸீஹ் என்ற அடிப்படைக்குரிய ஆதாரம்:-
(அ) அல்லாஹ் குர்ஆனில் பின்வருமாறு கூறுகிறான்:-
“அவனைப் போன்று எதுவும் கிடையாது. அவன்
செவியுறுபவன், பார்ப்பவன். (அஷ்ஷுரா :11)
3. (அத்தப்(க)வீழ்) அல்லாஹ்வின் பக்கம் சாட்டிவிடல்:-
“அத்தப்(க)வீழ் என்றால் “அல்லாஹ்வின் பண்புகளுக்குரிய கருத்துக்களை நாங்கள் அறிந்திருந்தாலும், அவற்றின் யதார்த்தங்களை (விதங்களை) அல்லாஹ்தான் அறிவான் என நம்புவதாகும்.
“அத்தப்(க)வீழ்” என்ற அடிப்படைக்கான ஆதாரங்கள்:-
(அ) அல்லாஹ் அல்குர்ஆனில் பின்வருமாறு கூறுகிறான்:
هُوَ الَّذِىْۤ اَنْزَلَ عَلَيْكَ الْكِتٰبَ مِنْهُ اٰيٰتٌ مُّحْكَمٰتٌ هُنَّ اُمُّ الْكِتٰبِ وَاُخَرُ مُتَشٰبِهٰتٌؕ فَاَمَّا الَّذِيْنَ فِىْ قُلُوْبِهِمْ زَيْغٌ فَيَتَّبِعُوْنَ مَا تَشَابَهَ مِنْهُ ابْتِغَآءَ الْفِتْنَةِ وَابْتِغَآءَ تَاْوِيْلِهٖۚؔ وَمَا يَعْلَمُ تَاْوِيْلَهٗۤ اِلَّا اللّٰهُ ؔۘ وَ الرّٰسِخُوْنَ فِى الْعِلْمِ يَقُوْلُوْنَ اٰمَنَّا بِهٖۙ كُلٌّ مِّنْ عِنْدِ رَبِّنَا ۚ وَمَا يَذَّكَّرُ اِلَّاۤ اُولُوا الْاَلْبَابِ
(அல்குர்ஆன்: 3:7)
(முஹம்மதே) அவனே உமக்கு இவ்வேதத்தை அருளினான், அதில் “முஹ்கமாத்” (எனும் தெளிவாக விளங்கக்கூடிய) வசனங்களும் உள்ளன. அவையே இவ்வேதத்தின் அடிப்படைகளாகும். அவ்வாறே “முதஷாபிஹாத்” (எனும் கருத்துத் தெளிவான, ஆனால் அதன் யதார்த்தத்தைப் புரிந்து கொள்ள முடியாத) வேறு சில வசனங்களும் உள்ளன. உள்ளங்களில் வழிகேடு இருப்போர், குழப்பத்தினை நாடி முதஷாபிஹாத்களைத் தேடித்திரிவார்கள். அல்லாஹ்வைத் தவிர அதன் யதார்த்தத்தை (யாராலும்) அறிந்து கொள்ள முடியாது. கல்வியில் உறுதிபெற்றவர்கள் “இதை நம்பினோம், அனைத்தும் எங்கள் இறைவனிடமிருந்து வந்தவை” எனக் கூறுவார்கள். (ஆலுஇம்ரான் :7)
இத்திருவசனத்தில் "إلاالله" என்ற இடத்தில் நிறுத்தவேண்டும் என்ற பெரும்பாலான காரிகளின் கருத்துப்படி, "تَاْوِيْلَهٗۤ" என்ற அரபுப்பதத்திற்கு “அதன் யதார்த்தம்” என்ற பொருள் ஆகும். ஆனால் “فِى الْعِلْمِ” என்ற இடத்தில் நிறுத்தவேண்டும் என்ற சில காரிகளின் கருத்துப்படி “تَاْوِيْلَهٗۤ” என்ற பதத்திற்கு “அதன் விளக்கம்” என பொருள் வழங்கப்பட வேண்டும். இதன்படி திருவசனத்தின் மொழிபெயர்ப்பு வருமாறு :-
“அதன் விளக்கத்தை அல்லாஹ்வையும், கல்வியில் உறுதிபெற்றவர்களையும் தவிர யாரும் அறியமாட்டார்கள்”
ஆனால், சிலர் "تَاْوِيْلَهٗۤ " என்ற அரபுப்பதத்திற்கு “வலிந்துரை” என்று பொருள் வழங்குகின்றனர். இது பெரும் தவறாகும். அரபிகள் இஸ்லாத்திற்கு முன் வலிந்துரை என்ற கருத்துப்பட تَاْوِيْلَ என்ற சொல்லை உபயோகிக்கவில்லை. குர்ஆனிலோ, ஹதீஸிலோ அவ்வாறு உபயோகிக்கப்படவில்லை. முஃதஸிலாக்கள் என்று அமைக்கப்படும் பகுத்தறிவு வாதிகள் தான் تَاْوِيْلَ என்ற சொல்லை வலிந்துரை என்ற பொருள்பட உபயோகித்தார்கள். பிற்காலத்தில் தோன்றிய புதிய பொருள்கள் மூலம், குர்ஆன், ஹதீஸுக்கு விளக்கம் கொடுக்க முயல்வது அறியாமையாகும்.
மேற்குறித்த இறைவசனம் அல்குர்ஆனில் இருவகை வசனங்கள் இருப்பதாகக் குறிப்பிடுகிறது. அவையாவன :
1. “முஹ்கமாத்” எனும் பொருள் அல்லது கருத்து தெளிவாக விளங்கக்கூடிய வசனங்கள்.
2. “முதஷாபிஹா” எனும் பொருள் அல்லது கருத்து அரபுமொழியில் தெளிவாக இருந்தாலும், அதன் யதார்த்தங்களை மனித அறிவினால் அடைந்துகொள்ள முடியாத வசனங்கள். இவற்றின் விதங்கள் அல்லாஹ்வுக்கு மட்டுமே தெரிந்தவைகளாகும். இவற்றுள் அல்லாஹ்வின் மெய்ப்பொருள், பண்புகள் பற்றி வந்துள்ள வசனங்களும் அடங்கும். அதேபோல், அலிப் - லாம் - மீம், யா-ஸீன் போன்ற சில ஸுராக்களின் ஆரம்பத்தில் இடம்பெற்றிருக்கும் தனித்தனி எழுத்துக்களும் (அல் ஹுரூபுல் முகத்தஆத்) அவற்றுள் அடங்கும்.
மேற்கூறப்பட்ட வசனத்தில் வரும் “நம்பினோம், அனைத்தும் இறைவனிடமிருந்து வந்தவையே” என்பதிலிருந்து “அத்தப்(க)வீழ்” என்பதை விளங்கமுடியும். அல்லாஹ்வின் பண்புகளின் யதார்த்தங்களை ஆராய்ந்து வீணான கேள்விகளை எழுப்புபவர்கள் குழப்பவாதிகள் என்பது மேற்கூறப்பட்ட திருவசனத்தின் தீர்ப்பாகும்.
ஊதாரணமாக அல்லாஹ் அர்ஷின் மேலே இருக்கிறான் என்ற குர்ஆன் ஹதீஸ்களை நம்பாமல், அவன் அதற்கு மேலே இருக்கிறான் என்றால், அதனுடன் உராசிக்கொண்டிருக்கிறானா? அல்லது பிரிந்திருக்கின்றானா? பிரிந்துள்ளான் என்றால் அவனுக்கும் அதற்குமிடையில் உள்ள தூரத்தின் அளவு யாது? அல்லாஹ் அர்ஷை விட பெரியவனா? சிறியவனா? போன்ற கேள்விகளை எழுப்புபவர்கள் குழப்பவாதிகள் ஆவார்கள்.
(ஆ) நபி (ஸல்) அவர்கள் பின்வருமாறு கூறியுள்ளாரர்கள்:-
நபி (ஸல்) அவர்கள் மேற்குறித்த குர்ஆன் வசனங்களை ஓதிவிட்டு “நீங்கள் முதஷாபிஹாதான வசனங்களைத் துருவித் துருவி ஆராய்பவர்களைக் கண்டால், அவர்கள் தான் அல்லாஹ்வால் குறிப்பிடப்பட்டவர்கள், என்பதை (அறிந்து கொள்ளுங்கள்) எனவே அவர்கள் . விடயத்தில் எச்சரிக்கையாக இருங்கள” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புஹாரி : 4547, முஸ்லிம் : 6717)
வழிகெட்டவர்கள் யார்
இம்மூன்ற அடிப்படைகளின் பார்வையில், பின்வரும் பிரிவினா் வழிகெட்டவர்கள் எனக் கணிக்கப்படுவர்:
(அ) இறைவனின் பண்புகளுக்கு, அரபுமொழியில் நேரடியாக உள்ள அர்த்தங்களை வழங்காமல், வலிந்துரை வழங்குபவர்கள். இவர்கள் முஅவ்விலாஹ் அல்லது முஅத்திலாஹ் என அழைக்கப்படுவர்.
(ஆ) இறைவனின் பண்புகளை சிருஷ்டிகளின் பண்புகளுக்கு சமப்படுத்துபவர்கள். இவர்களை பவப்யி (முஷப்பிஹா) என அழைக்கப்படுவர்.
(இ) இறைவனின் பண்புகளுக்கு எவ்வித அர்த்தங்களும் வழங்காமல், அவற்றை வெறுமனே நாவால் ஓதவேண்டும் எனக் கூறுபவர்கள். இவர்கள் முபவ்விழாஹ் அல்லது முஜஹ்ஹிலஹ் என அழைக்கப்படுவர்.
அல்லாஹ் அர்ஷின் மேலே உள்ளான் என நம்புவது அவனைப்பற்றி சிந்திப்பதாக மாறுமா?
சிலர் அல்லாஹ் அர்ஷின் மேலே இருந்தால் என்ன? கீழே இருந்தால் என்ன? அது எங்களுக்கு அவசியமற்ற விடயம் எனக்க கூறுகின்றனர். இவ்வாதத்திற்கு ஆதாரமாக பின்வரும் ஹதீஸை முன்வைக்கிறார்கள்:-
“எல்லாவற்றிலும் சிந்தியுங்கள், அல்லாஹ்வின் மெய்பொருளில் சிந்திக்காதீர்”
இவ்வாதம் முற்றிலும் தவறானது மட்டுமல்ல “ரித்தத்” எனும் மதமாற்றத்தை ஏற்படுத்தக்கூடியதுமாகும். அதற்குரிய நியாயங்கள் பின்வருமாறு :-
1) அல்லாஹ் அர்ஷின் மேலே உள்ளான் என குர்ஆனில் ஏழு இடங்களில் வலியுறுத்திக் கூறப்பட்டுள்ளது. இதில் ஜந்து ஆயத்துக்கள் ஹிஜ்ரத்துக்கு முன்பு மக்காவில் இறங்கியவையாகும். ஏனைய இரண்டு ஆயத்துக்கள் ஹிஜ்ரத்துக்கு பின்பு மதீனாவில் இறங்கியவையாகும். அவ்விடங்கள் வருமாறு :-
மக்காவில் இறங்கியவை:- அல் - அஃராப் : 54, யூனுஸ் - 3, தாஹா : 5, அல்புர்கான் : 59, அஸ்ஸஜ்தா : 4.
மதீனாவில் இறங்கியவை: அல் - ரஃத் - 2, அல் - ஹதீத் - 4.
அல்லாஹ் தன்னைப்பற்றி குர்ஆனில் ஏழு இடங்களில் வலியுறுத்தி குறிப்பிட்ட விடயத்தை கடமையில்லை என வாதிடுவது அறியாமையாகும்.
2) எனது இரட்சகன் வானத்திலா? பூமியிலா என்று எனக்குத் தெரியாது என்று கூறுபவன் காபிராகிவிட்டான் என இமாம் அபூஹனீபா (ரஹ்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
முஹம்மத் பின் பிர்யாபி, புஹாரி (ரஹ்மதுல்லாஹ் அலைஹி), இப்னு குஸைமா (ரஹ்மதுல்லாஹி அலைஹி) ஆகியோர் அல்லாஹ் அர்ஷின் மேலே இல்லை எனக் கூறுபவன் காபிர் என பத்வா வழங்கியுள்ளார்கள்.
நிராகரித்தவன் காபிராகிவிடுவான் எனக்கூறப்பட்ட விடயத்தை தேவையற்ற விடயம் எனக் கூறுவது தான்தோன்றித்தனமான செயலாகும்.
3) அல்லாஹ்வைப் பற்றி சிந்திக்க வேண்டாம் என்ற ஹதீஸிலேயே, அல்லாஹ் ஏழுவானங்களுக்கு மேல்
உள்ளான் எனக் கூறுப்பட்டுள்ளது.
“எல்லாவற்றைப் பற்றியும் சிந்தியுங்கள், அல்லாஹ்வின் மெய்ப்பொருளைப் பற்றி சிந்திக்கவேண்டாம். ஏனெனில் ஏழாவது வானம் முதல் அவனது “குர்ஸி” எனும் சிம்மாசனம் வரை ஏழாயிரம் ஒளிகள் உள்ளன. அதற்கு மேலே அவன் உள்ளான் என நபி (ஸல்) அவர்கள் கூறியதாக இப்னு அப்பாஸ் (ரழியால்லாஹு அன்ஹுமா) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இதன் மூலம் “அல்லாஹ்வின் மெய்ப்பொருள் பற்றி சிந்திக்கவேண்டாம்” என்பதன் பொருள், அவனைப் படைத்தது யார்? அவன் எப்போது தோன்றினான்? என்பன பற்றி சிந்திக்கக் கூடாது என்பது தெளிவாகிறது. இதை பின்வரும் ஹதீஸ் மேலும் தெளிவுபடுத்துகிறது.
“மனிதர்கள் கேள்வி கேட்டுக்கொண்டே இருப்பார்கள். இறுதியில், அல்லாஹ் சிருஷ்டிகளைப் படைத்தான், அல்லாஹ்வைப் படைத்தது யார்? எனக் கேட்கப்படும். எவரது உள்ளத்தில் இது ஏற்பட்டுவிடுகிறதோ அவர் “நான் அல்லாஹ்வை நம்பிவிட்டேன் எனக் கூறிக்கொள்ளட்டும்” என நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (புஹாரி : 3276, முஸ்லிம் : 341)
“இறைவன் எங்கும் இருக்கிறான்” (Omnipresence) என்ற சிந்தனை பற்றி...
ஸஹாபாக்கள், தாபியீன்கள், அல்லாஹ் அர்ஷின் மேலே உள்ளான் என்ற நம்பிக்கையில் தான் வாழ்ந்து வந்தார்கள். ஹிஜ்ரி 128ல் மரணித்த ஜஹ்ம் பின் ஸப்வான் என்பவர் தோன்றி, இறைவன் எங்கும் நிறைந்தவன் என்ற சித்தாந்தத்தை இஸ்லாமிய வரலாற்றில் முதன்முதலாக முன்வைத்தார். இதற்கு மறுப்பாக தாபியீன்கள், அல்லாஹ் அர்ஷின் மேலே உள்ளான் என்றும், அவனது அறிவும் ஆற்றலும் எங்கும் உள்ளன எனக் கூறினர். இதனால் ஆத்திரமடைந்த ஜஹ்ம், முடியுமெனில் “ரஹ்மான் அர்ஷின் மேலேயே உள்ளான்” என்ற ஆயத்தை குர்ஆனிலிருந்து சுரண்டி அகற்றி விடுவேன் என உளறினார். இவரைப் பின்பற்றியவர்கள் “அல் - ஜஹ்மிய்யா” என அழைக்கப்படுவர். இறைவன் எங்கும் இருக்கின்றான் என்ற கொள்கை காலவோட்டத்தில் அத்வைத சித்தாந்தமாக விஸ்வரூபமெடுத்தது. (தயவு செய்து “எல்லாம் அவனே ஆய்வும் விமர்சனமும்” என்ற எனது சிறுநூலைப் பார்க்க).
இறைவன் எங்கும் இருக்கிறான் என்ற கொள்கையின் ஆதரவாளர்கள், தங்கள் கொள்கைக்கு ஆதாரமாக சில குர்ஆன் வசனங்களை முன்வைத்தனர். ஆனால் அவைகள் உண்மையிலேயே அவர்களுக்கு சாதகமானவைகள் அல்ல. குர்ஆனை முறையீனமாக விளங்கியமையும், அதன் வசனங்களுக்கு வழங்கிய திரிபு படுத்திய வியாக்கியானங்களும் அவர்கள் வழிதவறியதற்குரிய காரணிகளாகும் குர்ஆனுக்கு விளக்கமளிக்கும் போது கையாளவேண்டிய அடிப்படைகள் பற்றி, மேற்கூறப்பட்ட நூலின் 6ம் பக்கத்தில் தெளிவுபடுத்தியுள்ளோம். (அல்ஹம்துலில்லாஹ்)
தற்போது ஜஹ்மிய்யாக்களின் ஆதாரங்களையும் அதற்குரிய மறுப்புக்களையும் நோக்குவோம்.
ஆதாரம் -1
“நீங்கள் எந்தப் பக்கம் திரும்பினாலும் அல்லாஹ்வின் முகம் உள்ளது” (பகரா : 115)
அவன் முகம் என்றால், அவனது மெய்ப்பொருள் என விளக்கமளித்து, அவன் எங்கும் நிறைந்தவன் எனக் கூறுகின்றனர். இது தவறான மொழிபெயர்ப்பும், தவறான வியாக்கியானமுமாகும். அதன் சரியான மொழிபெயர்ப்பு பின்வருமாறு :-
“எனவே எந்தப்பக்கம் திரும்பினாலும் அல்லாஹ்வின் திசை உண்டு”.
இத்திருவசனத்தில் கூறப்பட்ட "وَجْهُ" என்ற அரபுப்பதத்திற்கு “திசை” என்றும் பொருள் உண்டு. இவ்விடத்தில் “திசை” என்ற அர்த்தமே பொருத்தமானதாகும். இதனை ஆயத்தின் முற்பகுதியும், “فَاَيْنَمَا” என்ற சொல்லில் காணப்படும் فَ என்பதும் உறுதிப்படுத்துகின்றன. அதன் முற்பகுதியுடன் கூடிய வசனம் பின்வருமாறு :-
وَلِلّٰهِ الْمَشْرِقُ وَالْمَغْرِبُ فَاَيْنَمَا تُوَلُّوْا فَثَمَّ وَجْهُ اللّٰهِؕ اِنَّ اللّٰهَ وَاسِعٌ عَلِيْمٌ
“கிழக்குத் திசையும் மேற்குத் திசையும் அல்லாஹ்வுக்குரியது”. எனவே எந்தப் பக்கம் திரும்பினாலும் அல்லாஹ்வின் திசையே
உள்ளது”.
فَ என்ற அட்சரம் “எனவே” என்ற பொருளைக் கொடுத்து, அதன் பின்னால் காணப்படும் வாக்கியத்தை முன்னால் உள்ள வாக்கியத்துடன் தொடர்புபடுத்துகிறது.
ஆதாரம் -2
“வானங்களிலும், பூமியிலும் அவனே அல்லாஹ். அவன் உங்களின் இரகசியத்தையும், பரகசியத்தையும் அறிகிறான். (அல் - அன்ஆம் : 3)
இத்திரு வசனத்தின் விளக்கம் “அல்லாஹ் எங்கும் நிறைந்தவன்” என வழங்குகின்றனர். இது தவறானதாகும். உதாரணமாக ஹாரூன் ரஷீத் ஈராக்கிலும், ஷாம் தேசத்திலும் மன்னர் எனக் கூறினால், அவர் உடல் இரு தேசத்திலும் இருக்கின்றது என்பது பொருளல்ல. அவரது ஆட்சி அங்கெல்லாம் பரந்து காணப்படுகின்றது என்பது பொருளாகும். அதேபோன்றுதான், வானங்களிலும், பூமியிலும் அவனே அல்லாஹ் என்றால், அவனது மெய்ப்பொருள் எங்கும் நிறைந்து காணப்படுகிறது என்பது பொருளல்ல. அவனது அதிகாரமும் ஆற்றலும் எங்கும் இருக்கின்றன என்பதே பொருளாகும்.
ஆதாரம் - 3
“நீங்கள் எங்கே இருந்தாலும் , அவன் உங்களுடன் இருக்கிறான்”. (அல் - ஹதீத்: 4)
இத்திருவசனம் அல்லாஹ் எங்கும் நிறைந்தவன் என்பதைக் குறிப்பிடுகிறது என வாதிக்கின்றனர். இது தவறான விளக்கவுரையாகும். இவ்வசனத்தின் முன் பின் கவனத்தில் எடுத்தால், அல்லாஹ் அவனது அறிவால் எங்களுடன் உள்ளான் என்பது புலனாகும். அதன் முன் பின் வசனங்கள் பின்வருமாறு:
“பூமியில் நுழைவதையும், அதிலிருந்து வெளிப்படுவதையும் வானத்திலிருந்து இறங்குவதையும், அதில் ஏறுவதையும் அவன் அறிவான். நீங்கள் எங்கே இருந்தாலும், அவன் உங்களுடன் இருக்கிறான். நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் பார்ப்பவன்”.
இத்திருவசனம் அல்லாஹ் யாவற்றையும் அறிந்தவன் எனக் கூறுவதாக ஆரம்பித்து, எங்களின் நடவடிக்கைகளை அவன் பார்த்துக்கொண்டிருக்கிறான் எனக்கூறி முடிக்கிறது. இதன் மூலம் அல்லாஹ் பார்வையால், அறிவால் எங்களுடன் உள்ளான் என்பது தான் வசனத்தின் பொருள் என்பது தெளிவாகிறது.
இதே விளக்கம் தான் பின்வரும் வசனத்துக்கும்
வழங்கப்படவேண்டும் :-
“வானங்களில் உள்ளவற்றிலும், பூமியில் உள்ளவற்றையும் அல்லாஹ் அறிவான் என்பதை நீர் அறியவில்லையா? மூவரின் இரகசியத்தில் அவன் நான்காமவனாக இல்லாமல் இல்லை. ஐவரில் ஆறாமவனாக இல்லாமல் இல்லை. இதை விட அதிகமாகவோ, குறைவாகவோ இருந்தாலும், அவர்கள் எங்கே இருந்தபோதிலும், அவர்களுடன் இல்லாமல் இருப்பதில்லை. பின்னர் கியாமத் நாளில் அவர்கள் செய்ததை அவர்களுக்கு அறிவிப்பான். நிச்சயமாக அல்லாஹ் எப்பொருளையும் அறிந்தவன்”.
(அல் - முஜாதலா : 7)
இத்திருவசனம் அல்லாஹ் வானம், பூமி ஆகியவற்றில் உள்ளவைகளை அறிவான் என்பதைக் கொண்டு ஆரம்பித்து, அவனுக்கு சகலதும் தெரியும் என்பதனைக் கொண்டு முடித்திருப்பதன் மூலமும் இரகசியத்தை அவன் அறிவான் என்பதை இங்கே வலியுறுத்தியதன் மூலமும் “எங்கே இருந்தாலும் அவர்களுடன் அவன் இல்லாமல் இருப்பதில்லை” என்பது, அவன் அறிவால் அவர்களுடன் இருக்கிறான் என்பதும் தான் பொருள் என்பது புலனாகிறது.
ஆதாரம் : 4
“நாம் பிடரி நரம்பை விட அவனுக்கு சமீபமாக இருக்கின்றோம்”. (காப் : 16)
அல்லாஹ் எங்கும் நிறைந்தவன் என்பதை இந்த வசனம் குறிப்பிடுவதாக வாதிடுகின்றனர். அவ்வாறல்ல, அதன் முன், பின் பகுதிகள், அல்லாஹ் அவனது மலக்குகள் மூலம் மனிதனுக்கு சமீபமாக உள்ளான் என்பதனை தெளிவுபடுத்துகின்றன. அவைகள் பின்வருமாறு :-
“நிச்சயமாக நாம் தான் மனிதனைப் படைத்தோம். அவனது மனம் நினைக்கின்றவைகளை அறிவோம். நாம் பிடரிநரம்பை விட அவனுக்கு சமீபமாக இருக்கின்றோம். ஏனெனில், வலப்புறமும் இடப்புறமும் பாதுகாவலர் இருவர் குறிப்பெடுத்துக் கொண்டிருக்கின்றனர். அவன் எந்தச் சொல்லைப் பேசினாலும் தயார் நிலையில் கண்காணிப்பாளர் அவனிடம் இல்லாமல் இருப்பதில்லை”.
இத்திருவசனங்கள், அல்லாஹ் தனது மெய்ப்பொருளால் மனிதனுக்கு நெருக்கமாக இருப்பதில்லை என்பதையும், அறிவால், மலக்குகளால், மனிதனுக்கு சமீபமாக உள்ளான் என்பதையும் தெளிவுபடுத்துகின்றன.
ஆதாரம் -5
وَهُوَ الَّذِىْ فِى السَّمَآءِ اِلٰـهٌ وَّفِى الْاَرْضِ اِلٰـهٌ ؕ وَهُوَ الْحَكِيْمُ الْعَلِيْمُ
“வானத்திலும் அவன் தான் இறைவன், பூமியிலும் அவன் தான் இறைவன், அவன் ஞானமிக்கவன், அறிந்தவன்”. (அஸ்ஸுக்ருப் : 84)
இவ்வசனத்தில் அல்லாஹ் எங்கும் இருக்கிறான் என்பது தெளிவுபடுத்தப்பட்டுள்ளதாக வாதிடுகின்றனர். இது தவறானதாகும். இங்கே கூறப்பட்ட "இலாஹ்" என்ற சொல்லுக்கு “வணங்கப்படுபவன்” என்பது பொருளாகும். வானத்தில் மலக்குகளாலும், பூமியில் மனிதர்களாலும் வணங்கப்படுகின்றான் என்பது தான் இத்திருவசனம் கற்பிக்கும் பாடமாகும்.