அரசியல் நிலைப்பாடு, ஈமானின் அடிப்படையாக மாறிய வரலாறு

நபி ஸல் அவர்கள், உம்மத்தின் ஆத்மீக, அரசியல் தலைவராக இருந்தார்கள் . ஆத்மீகத் தலைமைத்துவம் என்பது, அவர்கள் வஹ்ய் வழங்கப்பட்ட நபி என்ற அடிப்படையில் அவர்களுக்கு கட்டுப்படுவது கடமையாகும் . அரசியல் தலைமைத்துவம் என்பது , சில விடயங்கள் வஹ்யாகவும் , சில விடயங்கள் சுய கருத்தாகவும் இருந்தன . நபி ஸல் அவர்கள் , தனது சிந்தனை அடிப்படையில் ஒன்றைச் செய்யும் போது , பிறரின் கருத்து சிறந்தது என தென்படும்போது, அதை எடுப்பார்கள் . அவர்கள் , சில நேரங்களில்,  போர் +சமாதானம்  விடயங்களில் முடிவு எடுத்தால்  , தனது தோழர்கள் எதிர்த்தாலும் , முன்னெடுத்துச் செல்வார்கள் . இதற்க்கு , ஹுதைபியா ஒப்பந்தம் , தபூக் யுத்தம் ஆகியவைகளை உதாரணமாகக் கொள்ளலாம்.

ஒருநாட்டில்  தலைமையை ஒருவரிடமிருந்து இன்னொருவரிடம் ஒப்படைத்தல், அதன் ஒருமைப்பாட்டிக்கும் , ஸ்திரத்தன்மைக்கும் இன்றியமையாத ஒன்றாகும் . அதனால் , நபியவர்களுக்குப் பின் , தலைமையை எடுப்பவர் யார் என்ற கேள்வி மக்கள் மத்தியில் ஏற்படாமல் இல்லை . இப்னு உமர் ரழி அவர்கள் , " நாங்கள் நபி ஸல் அவர்களின் காலப்பகுதியில் ,யாரையும் 
 அபூபக்ர் , பின்பு உமர் , பின்பு உத்மான் ஆகியோர்களுக்கு நிகராக கருதவில்லை எனக் கூறினார்கள். (புஹாரி : 3697)

ஆனால் நபி ஸல் அவர்கள் , யாரையும் பெயர் குறிப்பிட்டு , தனது கலீபாவாக (அரசியல் வாரிசாக ) கூறவில்லை . அனால் , அவர்களிடமிருந்து,  மறைமுகமான சமிக்ஞைகள் வெளியானகின . உதாரணமாக , நபியவர்கள் , சுகயீனமானபோது , தொழுகை நடாத்துவதற்க்கு , அபூபக்ர் அவர்களுக்கு கட்டளையிட்டார்கள். (புஹாரி : 664 , முஸ்லிம் : 418 )
மக்களுக்கு தொழுகை நடாத்துவது , இஸ்லாமிய தலைமையின் பிரதான கடமையாகும் . மக்கா = மதீனா இடையில் உள்ளா "கும்" என்ற நீர் தேக்கத்தில் , அலி ரழி அவர்களை , தனது அரசியல் வாரிசாக அறிவித்தததாக , ஷீயாக்கள் கூறும் ஹதீஸ் பொய்யாக புனையப்பட்டதாகும் .

நபியவர்கள் மரணித்ததும் அடக்கம் செய்வதற்க்கு முன்பு , அன்சார்கள் , கஸ்ரஜ் கோத்திரத்தைச் சேர்ந்த " பனூ சாயிதஹ்" என்ற குலத்துக்குரிய "கூரையடித்த திண்ணையில்" கூடி , எங்களில் இருந்து ஒரு அமீர் , முஹாஜிரீன்களில் இருந்து ஒரு அமீர் எனக் கூறினார்கள் . உமர் ரழி அவர்கள், ஒரு உறையில் இரண்டு வால்கள் இருக்கமுடியாது எனக் கூறி , அபூபக்ர் அவர்களை , கலீபாவாக பைஅத் செய்தார் . அதைத் தொடர்ந்து மக்களும்  பைஅத் செய்தார்கள் (புஹாரி :  6830 , முசன்னப் அப்திர் ரஸ்ஸாக் : 9758 )
அங்கு கூடியிருந்த சஹாபாக்கள் யாரும் , நபியவர்கள் அலி அவர்களையோ , அபூபக்ர் அவர்களையோ , தனது கலீபாவாக நியமித்ததாக கூறவில்லை. 

நபி ஸல் அவர்கள் , யாரையும் தனது அரசியல் வாரிசாக பெயர் குறிப்பிட்டுக் கூறவில்லை . இங்கே ஒரு கேள்வி எழுகின்றது. பெயர்  குறிப்பிடாதது ஏன் ? இதற்க்குரிய விடைகளை பின்வருமாறு நோக்கலாம் :
நபியவர்கள் , தனது அரசியல் வாரிசை பெயர் குறிப்பிட்டு கூறியிருந்தால் , முஸ்லிம்கள், அதுதான் மறுமை நாள் வரைக்கும் நடைமுறைப்படுத்துவார்கள் . அது அரசியல் முன்னேற்றத்தை முடக்கிவிடும் . ஏனெனில் நாட்டின் நிர்வாகம் , பொருளாதாரம் ஆகியவை காலத்துக்கு காலம் பரிணமிக்கிறது . அதனால் , இவ்விரண்டிலும் , குர்ஆன் , ஸஹீகாண ஹதீஸில் கூறப்பட்ட வழிகாட்டல்கள் மிகவும் குறைவானதாகும் . அடிப்படைகளை தெளிவுபடுத்துவதற்கே கூடுதல் முக்கியத்துவம் வழங்கியுள்ளன . நாட்டின் நிர்வாகத்தை பொறுத்தளவில் , குர்ஆன் பின்வருமாறு கூறுகின்றது :
وَأَمْرُهُمْ شُورَى بَيْنَهُمْ "அவர்களின் ஆட்சி , அவர்களின் மத்தியில் (ஷூரா)கலந்தோசிக்கப்படும்" . (அஷ்ஷூரா : 38) ஆனால் எங்கேயும், யார் யாரை கலந்தோசிப்பது, கலந்தோசிக்கப்படுபவர்கள் யார் ? கோத்திரத் தலைவர்களா? புத்திஜீவிகளா? மார்க்க அறிஞ்சர்களா ? பொதுமக்களா?  கலந்தோசிக்கப்படும் வழிமுறைகள் யாது ? தலைமைத்துவத்தை பதவி நீக்கம் செய்யும் வழிமுறைகள் யாது ? போன்ற விடயங்கள் கூறப்படவில்லை . காரணாம் , அவைகள் காலத்துக்கும் இடத்துக்கும் ஏற்றமாறு தீர்மானிக்கப்படும் . 
- நபியவர்கள் தனது அரசியல் வாரிசை தீர்மானிக்கவில்லை . அதை , முஹாஜிரீன்கள் , அன்ஸார்களுக்கு விட்டுச் சென்றார்கள் .
- அபூபக்ர் ரழி அவர்கள் , தனக்கு பின்பு , உமர் ரழி அவர்களை கலீபாவாக  நியமித்தார்கள் .
- உமர் ரழி அவர்கள், தனக்குப்பின் கலீபாவாக வரக்கூடிய தகுதியுள்ள ஆறு சஹாபாக்களை இனங்கண்டு தெரிவு செய்தார்கள். அவர்கள் , உமரின் மரணத்துக்குப் பின் கூடி, உத்மான் ரழி அவர்களை தெரிவுசெய்தார்கள் .
- கிளர்ச்சியாளர்கள் , உத்மான் ரழி அவர்களைக் கொன்று, அலி ரழி அவர்களை கலீபாவாக நியமித்தார்கள் . தலைமைத்தவம் வெற்றிடமாக இருக்கக்கூடாது என்பதற்க்காக , அதிகமானோர் கிளர்ச்சியாளர்களின் " நியமனத்தை" ஜீரணித்துகொண்டார்கள் . ஆனால், முஆவியா ரழி , ஆயிஷா ரழி போன்ற சஹாபாக்கள், கொலையாளிகள் முதலில் இனங்காணப்பட்டு தண்டிக்கப்படவேண்டும் எனக் கூறி , அலி அவர்களை நியமித்ததை ஏற்க மறுத்தனர் . இதனால் " உள்நாட்டு யுத்தங்கள் வெடித்தன .
- ஹசன் ரழி அவர்கள் , தனது அதிகாரத்தை , முஆவியா ரழி அவர்களுக்கு விட்டுக்கொடுத்து, முஸ்லிம்கள் மத்தியில் ஒற்றுமையை ஏற்படுத்தினார்கள் . இங்கே அதிகாரத்தை விட்டுக் கொடுக்கும் முறை அறிமுகப்படுத்தப்படுகின்றது .
- முஆவியா ரழி அவர்கள், தான் உயிருடன் இருக்கும்போதே, தனது மகன் யஸீத் அவர்களுக்கு , தனக்குப்பின் வரும் அமீராக , பைஅத்தைப் பெற்றார்கள் .
ஷீயாக்கள், முஆவியா இஸ்லாத்தில் மன்னராட்சியைக் கொண்டு வந்ததாக குற்றம் சாட்டுகின்றனர் . ஆனால், இஸ்லாம் அனுமதிக்காத கிளர்ச்சி+கொலை மூலம், அலி அவர்கள் கலீபாவாக நியமிக்கப்பட்டதைக் கண்டுகொள்வதில்லை . அலி அவர்களுக்குப் பின் அவரது மகன் நியமிக்கப்பட்டதையும் கண்டுகொள்வதில்லை .
உமைய்யாக்கள் பின் தோன்றிய அப்பாசியர்களும், மன்னர் ஆட்சி நடாத்தினர் .
சுருக்கம் என்னவெனில், இஸ்லாத்தில், காலத்துக்கும், இடத்துக்கும், சூழ்நிலைக்கும் ஏற்ப, ஆட்சிமுறையை அமைத்துக்கொள்ள , எந்தத் தடையும் கிடையாது .
நவீனகாலத்தில்,  மக்களின் நேரடியாக வாக்களிப்பின்  மூலம், ஜனாதிபதி, பிரதமர், பாராளுமன்ற உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர் . இந்த வழிமுறையும் இஸ்லாத்துக்கு முரணானதல்ல . குர்ஆனில் கூறப்பட்ட "ஷூரா" என்பதில் அடங்கும் முறையாகும் .

-கலாநிதி அஹ்மத் அஷ்ரஃப்


Previous Post Next Post