இமாம் நஸிருதீன் அல்பானி(ரஹ்) அவர்களின் முஸ்லிம்களுக்கான உபதேசம்

இமாம் நஸிருதீன் அல்பானி(ரஹ்) அவர்களின் முஸ்லிம்களுக்கான உபதேசம்! (குகைவாசிகள் புத்தகத்திலிருந்து)

குர்ஆன், ஸுன்னாவின் வழியிலும், நல்லோர்களான ஸலஃபின் வழியிலும் தஅவா பணியின் வளர்ச்சியில் இப்பூமிப் பரப்பில் ஈடுபடக்கூடிய அனைத்து முஸ்லிம் சகோதரர்களுக்கும் உரிய ஓர் உபதேசமாகும் இது. அல்லாஹ்வை அஞ்சிவாழ வேண்டும் என்று முதலில் எனக்கும் உங்களுக்கும் உபதேசித்துக் கொள்கின்றேன். பிறகு பயனுள்ள கல்வியை அதிகப்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும் உபதேசிக்கின்றேன். இது பற்றி அல்லாஹ் இப்படிக் கூறுகின்றான்:

واتقوا الله ويعلمكم الله

‘அல்லாஹ்வை நீங்கள் அஞ்சிக்கொள்ளுங்கள்; அல்லாஹ் உங்களுக்கு ஞானத்தைக் கற்பிப்பான்.' (குர்ஆன் 2:282)

தங்களது நற்செயல்கள் யாவும் குர்ஆன் ஸுன்னாவை விட்டும், ஸலஃபின் வழிகளை விட்டும் விலகாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். தமக்குப் பாதகம் இல்லாமல் இது குறித்துத் தெளிவாக அறிந்து வைத்திருக்கவும் வேண்டும். ஏனெனில், அல்லாஹ் எவரது இதயத்தை நிம்மதியாக ஆக்கி வரச் செய்வானோ அவர்களைத் தவிர செல்வமும் பிள்ளைகளும் எந்தப் பயனையும் தராத நாளில் இந்த ஆதாரப்பூர்வமான நற்செயல்கள்தான் அவர்களுக்குச் சாதகமான ஆதாரமாக அமையும்.

ஸலஃபின் வழியை விட்டும் விலகிச் சென்றுவிட்டவர்களுடன் அதிகமாகச் சேர்ந்திருப்பதை எச்சரிக்கிறேன். அல்லாஹ்வின் தூதர் அவர்கள் கூறினார்கள்:

وكونوا عباد الله إخوانا كما أمركم الله

அல்லாஹ் உங்களுக்குக் கட்டளையிட்டிருப்பதைப் போல் நீங்கள் அல்லாஹ்வின் அடியார்களாகவும் சகோதரர்களாகவும் ஆகிவிடுங்கள். (அறிவிப்பு: அபூ பக்ர், முஸ்னதுல் பஸ்ஸார் 75, ஸஹீஹுல் ஜாமிஉ 4072)

எனவே, பாதை மாறிச் செல்பவர்களைத் திரும்ப அழைப்பதும் நம்மீது கடமையாக இருக்கிறது. அப்படி அழைப்பதில் நிறைய பயன்களும் இருக்கின்றன. எனினும், அதில் அல்லாஹ்வின் கூற்றை எப்போதும் நாம் கட்டாயம் கவனிக்கவும் வேண்டும். அது இதுவே:

ادع إلى سبيل ربك بالحكمة والموعظة الحسنة وجادلهم بالتي هي أحسن ‘அழகிய உபதேசத்தின் மூலமும் நுண்ணறிவின் மூலமும் நபியே நீர் அழைப்பீராக. மிகச் சிறந்தவற்றைக் கூறியே விவாதம் செய்வீராக. (குர்ஆன் 16:125)

எவர் நமது கொள்கைகள் விசயத்தில் ஆரம்பத்திலிருந்தே சண்டைக் காரர்களாக இருக்கிறார்களோ அவர்களிடம் அவசியம் ஹிக்மத் எனும் நுண்ணறிவுடன்தான் நாம் நடந்துகொள்ள வேண்டும். அல்லாஹ் நமக்கு அருளாக அளித்துள்ள இந்த மெய்யான தஅவா எனும் அழைப்பையும், அழைப்புப்பணியையும் பாரமாக ஆக்கிவிடக் கூடாது. ஒவ்வோர் ஊரிலும் உள்ள சகோதரர்கள் அனைவரும் இந்த இஸ்லாமிய ஒழுக்கத்தைக் கட்டாயம் கடைப்பிடிப்பீர்கள் என்றும், இதன் பின்னணியில் அல்லாஹ்வின் திருப்தியை அவர்கள் தேடுவதையும் நான் நம்புகிறேன். அல்லாஹ்வின் திருப்தி ஒன்றைத் தவிர அவர்கள் வேறு எந்தக் கூலியையும் நன்றியையும் நாடாமல் இருப்பார்களாக.
Previous Post Next Post