- இமாம் அந்-நவவி, இமாம் இப்னு தைமிய்யா, அல்லாமாஹ் இப்னு உஸைமீன், அல்லாமாஹ் அப்துல் முஹ்ஸின் அல்-அப்பாத்
முஆவியா (ரழியல்லாஹு அன்ஹு) அறிவிக்கின்றார்கள்:
«مَنْ يُرِدْ اللَّهُ بِهِ خَيْرًا يُفَقِّهْهُ فِي الدِّينِ»
"யாருக்கு அல்லாஹ் நலவை நாடுகின்றானோ, அவருக்கு மார்க்கத்தில் விளக்கத்தைக் கொடுக்கின்றான்” என்று நபி ﷺ கூறினார்கள்.
(புகாரி:71, முஸ்லிம்:1037)
இமாம் அந்-நவவி அவர்கள் கூறுகின்றார்கள்:
கல்வி மற்றும் மார்க்கத்தில் விளக்கம் பெறுதலின் சிறப்பு, அதற்கு ஆர்வமூட்டுவது ஆகியவை இதிலே (இந்த ஹதீஸிலே) உள்ளன. இதற்குக் காரணம், அது (மார்க்கக் கல்வியானது) இறையச்சத்தின் பக்கம் இட்டுச் செல்வதாக இருப்பதாலாகும்.
ஸஹீஹ் முஸ்லிமின் விரிவுரை, 7/128
ஷைய்குல் இஸ்லாம் இப்னு தைமிய்யா அவர்கள் கூறுகின்றார்கள்:
எந்த ஒருவருக்கெல்லாம் அல்லாஹ் நலவை நாடுகிறானோ, அவரை கண்டிப்பாக மார்க்கத்தில் (அவன்) விளக்கம் பெறச் செய்கிறான். மேலும் எவருக்கு மார்க்கத்தில் விளக்கத்தைக் கொடுக்கவில்லையோ, அவருக்கு அல்லாஹ் நலவை நாடவில்லை.
தீன் என்பது, எதைக் கொண்டு தன்னுடைய தூதரை ﷺ அல்லாஹ் அனுப்பினானோ, எதனை உண்மைப்படுத்துவதும், அமல் செய்வதும் கட்டாயமாகுமோ அதுவாகும். முஹம்மது ﷺ அவர்கள் அறிவித்தவை யாவற்றிலும் முழுமையாக அவரை உண்மைப்படுத்துவதும், அவர் ﷺ ஏவியவை யாவற்றிலும் முழுமையாக அவருக்குக் கீழ்ப்படிவதும் ஒவ்வொருவரின் மீதும் கடமையாகும்.
மஜ்மூ'உல் ஃபதாவா, 28/80
அல்லாமாஹ் இப்னு உஸைமீன் அவர்களின் விளக்கம்:
பின்னர் (இமாம் அந்நவவி அவர்கள்) ஹதீஸ்களை குறிப்பிடுகின்றார்கள். மேலும் முஆவியா இப்னு அபீ சுஃப்யான் அவர்களின் ஹதீஸைக் கொண்டு அதனை (ஹதீஸ்களை) ஆரம்பம் செய்கின்றார்கள். "யாருக்கு அல்லாஹ் நலவை நாடுகின்றானோ, அவருக்கு மார்க்கத்தில் விளக்கத்தைக் கொடுக்கின்றான்” என்று நபி ﷺ கூறினார்கள்.
அல்லாஹ் நன்மை மற்றும் தீமையிலிருந்து, தான் நாடியதை தன்னுடைய படைப்பினங்களுக்கு நாடுகின்றான். என்றாலும் அவனது நாட்டம் யாவும் நன்மையே ஆகும். (அவனது நாட்டத்தில் எந்த ஒரு தீங்கும் இருக்காது.) ஆனால் அவன் நாடிய விடயங்களில் நன்மையும் இருக்கும், தீமையும் இருக்கும்.
அவனுடைய விதித்தல் (என்ற அவனது செயல்) யாவும் நன்மையாகவே இருக்கும். ஆனால் அவன் விதியாக்கிய விடயங்களில் நன்மையும் இருக்கும், தீமையும் இருக்கும். மக்கள் பாத்திரங்கள் (போல் ஆவர்). அவர்களில், சிலரின் உள்ளத்தில் அல்லாஹ் நன்மை இருப்பதை அறிந்துள்ளான், எனவே அவருக்கு ஈடேற்றம் அளிக்கின்றான். மேலும் அவர்களில் சிலரின் உள்ளத்தில் அல்லாஹ் தீமை இருப்பதை அறிந்துள்ளான், எனவே அவரை கைவிட்டு விடுகின்றான். அல்லாஹ் (அதிலிருந்து நம்மை) பாதுகாப்பானாக.
قال الله تبارك وتعالى: ((فَلَمَّا زَاغُوا أَزَاغَ اللَّهُ قُلُوبَهُمْ))
அல்லாஹ் கூறுகின்றான்: (நேரான பாதையிலிருந்து) அவர்கள் விலகவே, அல்லாஹ்வும் அவர்களுடைய உள்ளங்களை (நேரான பாதையிலிருந்து) திருப்பிவிட்டான்.
முதலில் அவர்கள் (நேரான பாதையிலிருந்து) விலகி, தீமையை நாடிய பொழுதிலேயே தவிர, அல்லாஹ் அவர்களுடைய உள்ளங்களை (நேரான பாதையிலிருந்து) திருப்பி விடவில்லை. அவர்கள், (இத்தீய செயலின் காரணமாக) நன்மைக்கு ஈடேற்றம் அளிக்கப்படவில்லை. எனினும் எவருடைய உள்ளத்தில் நன்மை இருப்பதை அல்லாஹ் அறிந்துள்ளானோ, அவருக்கு நிச்சயமாக அல்லாஹ் ஈடேற்றம் அளிக்கின்றான்.
எனவே அல்லாஹ் ஒரு மனிதருடைய உள்ளத்தில் நன்மை இருப்பதை அறிந்திருந்தால், அவருக்கு நலவை நாடி விடுகின்றான். ஒருவருக்கு அவன் நலவை நாடிவிட்டால், அவனுடைய மார்க்கத்தில் அவருக்கு விளக்கத்தைக் கொடுக்கின்றான், மேலும் மக்களிலிருந்து யாருக்கும் வழங்காத ஷரீஅத்தின் ஞானத்தை அவருக்கு வழங்கிவிடுகின்றான்.
இது, ஒரு மனிதன் மார்க்கத்தில் விளக்கம் பெறுவதற்கு கடுமையாக ஆவல் கொள்வது அவசியமாகும் என்பதை காட்டுகின்றது.
ஏனென்றால் அல்லாஹ் ஒன்றை (ஒருவருக்கு) நாடிவிட்டால், அதற்குரிய காரணிகளை (அவருக்கு) எளிதாக்கி விடுகின்றான். மேலும் மார்க்கத்தில் விளக்கம் பெறுவதற்குரிய காரணிகளிலிருந்து உள்ளதாவது: நீ (மார்க்கக் கல்வியைப்) பயில்வதும், மேலும் 'அல்லாஹ் உனக்கு நலவை நாடுகின்றான்' என்ற இந்த மகத்தான அந்தஸ்தை அடைவதற்கு நீ ஆவல் கொள்வதுமாகும்.
எனவே அல்லாஹ்வின் மார்க்கத்தில் விளக்கம் பெறுவதற்கு நீ ஆர்வம் கொள். மார்க்கத்தில் விளக்கம் பெறுவது என்பது வெறுமனே கல்வி (பெறுவது) மட்டுமல்ல, மாறாக கல்வி கற்பது மற்றும் அமல் செய்வது (என இரண்டுமே) ஆகும்.
இதன் காரணமாகவே ஸலஃபுகள், குர்ஆனை (விளங்காமல் வெறுமனையாக) ஓதுபவர்கள் அதிகரித்து, மார்க்க விளக்கம் பெற்று (அதைக் கொண்டு அமல் செய்கின்ற) ஃபுகஹாக்கள் குறைந்துவிடும் (நிலையை) விட்டு எச்சரிக்கை செய்தார்கள்.
அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் அவர்கள் "உங்களில் குர்ஆனை ஓதுபவர்கள் அதிகமாகி, மார்க்க விளக்கம் பெற்றவர்கள் குறைந்துவிடும் (அக்காலத்தில்) நீங்கள் எவ்வாறு இருப்பீர்கள்?!" என்று கேட்டார்கள்.
அல்லாஹ்வுடைய ஷரீஅத்திலிருந்து ஒன்றை ஒரு மனிதர் அறிந்திருக்கின்றார், ஆனால் அவர் அதைக் கொண்டு அமல் செய்யவில்லை என்றால், அவர் ஃபகீஹாக (மார்க்க விளக்கம் பெற்றவராக) கருதப்படமாட்டார். ஃபிக்ஹில் மிகப்பெரிய புத்தகத்தை உள்ளத்தால் மனனம் செய்து அதை விளங்கிய போதிலும், அதைக்கொண்டு அவர் அமல் செய்யவில்லையெனில், அவருக்கு ஃபகீஹ் என்று கூறப்படாது, மாறாக காரிஃ (வாசிக்கக்கூடியவர்) என்றே கூறப்படும்.
(உண்மையில் மார்க்கத்தில்) விளக்கம் பெற்றவர் என்பவர், அறிந்தவற்றை கொண்டு அமல் செய்பவர் ஆவார். எனவே முதலில் அவர் அறிந்து கொள்கின்றார் பின்பு இரண்டாவதாக (அதைக் கொண்டு) அமல் செய்கின்றார். இவர்தான் (மார்க்கத்தில்) விளக்கம் அளிக்கப்பட்டவர் ஆவார். எனினும் ஒருவர் அறிந்து கொண்டவராக இருந்து, (அதன்படி) அமல் செய்யவில்லையெனில் அவர் ஃபகீஹாக கருதப்படமாட்டார். மாறாக அவருக்கு காரீ (வாசிக்கக்கூடியவர்) என்றே சொல்லப்படும், ஃபகீஹ் என்று சொல்லப்படமாட்டாது.
இதன் காரணமாகவே, நபி ஷுஐய்ப் (அலைஹிஸ் ஸலாம்) அவர்களுடைய மக்கள் அவரிடத்தில் கூறினார்கள்:
مَا نَفْقَهُ كَثِيرًا مِّمَّا تَقُولُ
"நீங்கள் கூறுபவற்றில் பெரும்பாலானவற்றை நாம் விளங்கிக்கொள்வதில்லை" [11:91].
ஏனெனில், அல்லாஹ் அவர்களுடைய உள்ளங்களில் தீமை இருப்பதை அறிந்த காரணத்தினால், நன்மையை விட்டும் அவர்கள் தடுக்கப்பட்டு விட்டார்கள்.
எனவே அல்லாஹ் நன்மையை நாடிய மக்களிலிருந்து நீங்கள் ஆகுவதற்காக, கல்வியைத் தேடுவதிலும் அதன்படி அமல் செய்வதிலும் ஆர்வத்தை காட்டுங்கள். அல்லாஹ்வுடைய மார்க்கத்தில் விளக்கம் பெற்று, (அதைக்) கற்று, (பிறருக்கு) கற்றுக் கொடுத்து, மேலும் (அதைக்கொண்டு) பயனடைந்தவர்களிலிருந்து என்னையும், உங்களையும் ஆக்க வேண்டுமென அல்லாஹ்விடத்தில் துஆ செய்கின்றேன்.
ஷர்ஹ் ரியாளுஸ் ஸாலிஹீன்
அல்லாமாஹ் அப்துல் முஹ்ஸின் அல்-அப்பாத் அவர்கள் இந்த ஹதீஸிற்கு அளித்த விளக்கம்:
முஆவியா பின் அபி ஸுஃப்யான் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் அறிவிக்கக்கூடிய புஹாரி மற்றும் முஸ்லிமில் வந்துள்ள ஹதீஸில் சங்கைக்குரிய நபி ﷺ அவர்கள் கூறுகின்றார்கள்: "யாருக்கு அல்லாஹ் நலவை நாடுகின்றானோ, அவருக்கு மார்க்கத்தில் விளக்கத்தைக் கொடுக்கின்றான்".
நபியவர்கள் ﷺ இந்த ஹதீஸிலே, மார்க்கத்தில் விளக்கம் பெறுவது என்பது, நிச்சயமாக அல்லாஹ் ஒரு அடியாருக்கு நலவை நாடியிருப்பதன் அடையாளம் ஆகும் என்பதை தெளிவுபடுத்தியுள்ளார்கள்.
அது ஏனென்றால், அல்லாஹ்வுடைய மார்க்கத்தில் ஒருவர் விளக்கம் பெற்றுவிட்டார் என்றால், அவர் தெளிவான அத்தாட்சியின் மீது உள்ளவராகிவிடுவார். அல்லாஹ்வை, தெளிவான அறிவு, நேர்வழி மற்றும் தெளிவான பாதையின் அடிப்படையில் வணங்குவார். தெளிவான அத்தாட்சி மற்றும் நேர்வழியின் மீது, தன்னுடைய இறைவனின் பக்கம் பயணிப்பவராக ஆகிவிடுவார்.
எனவே அவர் சத்தியத்தை அறிந்தவராக ஆகிவிடுவார். பின்னர் அதனைக்கொண்டு
செயலாற்றவும் செய்வார். மேலும் அவரல்லாது பிறரையும் அதனைக் கொண்டு தெளிவடையச் செய்வார். அதை (சத்தியத்தை) நோக்கி பிறருக்கு வழிகாட்டவும் செய்வார். எனவே இதன் காரணமாக, அவர் தானும் பயன்பெற்று, பிறரையும் பயனடையச் செய்வார். இவருடைய பயன் அவரோடு நின்றுவிடுவதில்லை, மாறாக பிறரையும் சென்றடைகின்றது.
-மக்தபாஹ் அஸ்ஸுன்னாஹ் வ அஸ்ஸலஃபிய்யாஹ், மேலப்பாளையம்.