அல்லாஹ்வின் அழகிய திருநாமங்களை அறிய வேண்டியதன் அவசியம்


وَلِلّٰهِ الْاَسْمَآءُ الْحُسْنٰى فَادْعُوْهُ بِهَا‌ وَذَرُوا الَّذِيْنَ يُلْحِدُوْنَ فِىْۤ اَسْمَآٮِٕهٖ‌ ؕ سَيُجْزَوْنَ مَا كَانُوْا يَعْمَلُوْنَ‏

அல்லாஹ்வுக்கு மிக அழகான பெயர்கள் இருக்கின்றன. ஆகவே, அவற்றைக்கொண்டே நீங்கள் அவனை அழையுங்கள். (அவனிடம் துஆ கேளுங்கள்.) அவனுடைய திருப்பெயர்களில் தவறிழைப்பவர்களை நீங்கள் விட்டுவிடுங்கள்; இவர்கள் தங்கள் செயலுக்குத் தக்க கூலியை விரைவில் அடைவார்கள். (ஸூரத்துல் அஃராஃப்: 180)

قُلِ ادْعُوا اللّٰهَ اَوِ ادْعُوا الرَّحْمٰنَ‌ ؕ اَ يًّا مَّا تَدْعُوْا فَلَهُ الْاَسْمَآءُ الْحُسْنٰى

(நபியே!) நீங்கள் கூறுங்கள்: “நீங்கள் அல்லாஹ் என்றழையுங்கள் அல்லது ரஹ்மான் என்றழையுங்கள்; (இவ்விரண்டில்) எப்பெயர் கொண்டு நீங்கள் அவனை அழைத்த போதிலும் (அழையுங்கள்.) அவனுக்கு அழகான (இன்னும்) பல திருப் பெயர்கள் இருக்கின்றன.” (ஸூரா அல்-இஸ்ரா: 110)

ஒரு முஸ்லிம் அல்லாஹ்வுக்கு இருக்கின்ற பெயர்கள், பண்புகள் என்ன? என்பதைப் பற்றி அறிந்து கொள்வது கடமையாகும். எங்களைப் படைத்த ரப்பின் பெயர்களையும் பண்புகளையும் அறியாமல் இருப்பது என்பது வெட்கித் தலை குனிய வேண்டிய ஒரு விஷயமாகும்.

நாங்கள் இன்று கிரிகட், உதைபந்தாட்டம் மற்றும் ஏனைய விளையாட்டுத் துறை வீரர்கள்; மேலும் சினிமா நடிகர்கள்; மேலும் அரசியல்வாதிகள் போன்ற பலரின் பெயர்கள் மற்றும் அவர்களின் குணங்களை எல்லாம் அறிந்து வைத்திருக்கின்றோம். ஆனால் எங்களைப் படைத்து பரிபாலித்து உணவளிக்கின்ற மகத்தான றப்பான அந்த அல்லாஹுத்தஆலாவின் பெயர்களையோ! பண்புகளையோ! அறியாத அநியாயக் காரர்களாகவும் பொடுபோக்காளர்களாகவும் இருக்கின்றோம்!

இந்த அறிவை கற்றுக் கொள்ளுமாறு மேலான அல்லாஹ் ஸுப்ஹானஹூ வதஆலா எங்களுக்கு ஏவுகின்றான்.

وَاعْلَمُوْٓا اَنَّ اللّٰهَ غَفُوْرٌ حَلِيْمٌ

நீங்கள் உறுதியாக அறிந்து அவனுக்குப் பயந்து கொள்ளுங்கள். (இத்தகைய எண்ணத்தைத் தவிர்த்துக் கொண்டால்) நிச்சயமாக அல்லாஹ் மிக்க மன்னிப்பவன், பொறுமையுடையவன் என்பதை அறிந்து கொள்ளுங்கள். (ஸூரத்துல் பகரா: 235)

மேலும் கூறுகின்றான்;

وَاعْلَمُوْٓا اَنَّ اللّٰهَ سَمِيْعٌ عَلِيْمٌ‏

நிச்சயமாக அல்லாஹ் செவியேற்கிறவன், நன்கறிகிறவன் என்பதையும் உறுதியாக அறிந்து கொள்ளுங்கள். (ஸூரத்துல் பகரா: 244)

ஒரு முஸ்லிம் அல்லாஹ்வைப் பற்றி ஈமான் (விசுவாசம்) கொண்டிருக்க வேண்டும்; மேலும் அவனுக்கு இருக்கின்ற அழகிய திரு நாமங்களை அறிந்து அவைகளை ஈமான் கொண்டிருக்க வேண்டும். மேலும் அத்-திரு நாமங்களை கொண்டு அவனை அழைக்கக் கூடியவனாக இருக்க வேண்டும்; அதேபோன்று அல்லாஹ்வின் திரு நாமங்கள் விஷயத்தில் தவறிழைப்பத்திலிருந்து தவிர்ந்து கொள்ள வேண்டும். என்று ஷெய்குல் இஸ்லாம் இப்னு தைமிய்யா ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறுகின்றார்கள். (நூல்: இக்திலாஉஸ் ஸிராத் அல் முஸ்தகீம் 2-397)

அல்லாஹுத் தஆலாவைப் பற்றி அறிந்து கொள்ளும் அறிவுதான்; அறிவுகளிலே மேலான அறிவு ஆகும். எனவே இந்த அறிவை பெற்றுக் கொள்வது எம் அனைவரின் மீதும் கட்டாயக் கடமையாகும்.

:عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : ” مَا أَصَابَ أَحَدًا قَطُّ هَمٌّ وَلَا حُزْنٌ فَقَالَ

 اَللّهُمَّ إِنِّيْ عَبْدُكَ ، وَابْنُ عَبْدِكَ ، وَابْنُ أَمَتِكَ ، نَاصِيَتِيْ بِيَدِكَ ، مَاضٍ فِيَّ حُكْمُكَ ، عَدْلٌ فِيَّ قَضَاؤُكَ، أَسْأْلُكَ بِكُلِّ اِسْمٍ هُوَ لَكَ، سَمَّيْتَ بِهِ نَفْسَكَ ، أَوْ أَنْزَلْتَهُ فِيْ كِتَابِكَ، أَوْ عَلَّمْتَهُ أَحَدًا مِنْ خَلْقِكَ ، أَوْ اِسْتَاْثَرْتَ بِهِ فِيْ عِلْمِ الْغَيْبِ عِنْدَكَ ، أَنْ تَجْعَلَ الْقُرْآنَ الْعَظِيْمَ رَبِيْعَ قَلْبِيْ ، وَنُوْرَ صَدْرِيْ ، وَجَلاَءَ حُزْنِيْ ، وَذِهَابَ هَمِّيْ، إلا أذهب اللهُ همَّه وحُزنَه،

فقيل : يا رسولَ اللهِ ألا نتعلَّمُها ؟ فقال بلى ، ينبغي لمن سمعَها أن يتعلَّمَها    

யார் பின்வரும் துஆவைக் கேட்கின்றாரோ! அவரது கவலை அவரின் துன்பம் நீங்கிவிடும் என்று நபி ﷺ அவர்கள் கூறினார்கள்.

(அல்லாஹும்ம இன்னீ அப்துக, வப்னு அப்திக, வப்னு அமதிக, நாஸியத்தீ பி யதிக, மாழின் ஃபிய்ய ஹுக்முக, அதுலுன் ஃபிய்ய கலாவுக, அஸ்அலுக பிகுல்லி இஸ்மின் ஹுவ லக, ஸம்மைத்த பிஹீ நஃப்ஸக, அவ் அன்ஸல்தஹு ஃபீ கிதாபிக, அவ் அல்லம்தஹு அஹதன் மின் ஹல்கிக, அவிஸ்தஃதர்த்த பிஹீ ஃபீ இல்மில் கைபி இன்தக, அன் தஜ்அலல் குர்ஆனல் அளீம ரபீஅ கல்பீ, வ நூர சதுரீ, வஜலாஅ ஹுஸ்னீ, வதிஹாப ஹம்மீ)

பொருள்:

யா அல்லாஹ்! நான் உன் அடிமை. உன் அடிமைகளான ஓர் ஆண், ஒரு பெண்ணின் மகனாவேன். எனது குடும்பி உனது கையில் இருக்கிறது. என்னில் உனது கட்டளையே செல்லுபடியாகிறது. என் விஷயத்தில் உன் தீர்ப்பு நீதமானது. உனக்குச் சொந்தமான ஒவ்வொரு திருப்பெயர் கொண்டும் நான் உன்னிடம் கேட்கிறேன். அந்தப் பெயரை நீயே உனக்குச் சூட்டியிருப்பாய். அல்லது உனது வேதத்தில் அதை நீ அருளியிருப்பாய். அல்லது உனது படைப்புகளில் எவருக்கேனும் அதைக் கற்றுக் கொடுத்திருப்பாய். அல்லது மறைவானவை பற்றிய ஞானத்தில் உன்னிடத்தில் அதை வைத்திருப்பாய். (அவை அனைத்தைக் கொண்டும் உன்னிடம் கேட்கிறேன்.) அல்குர்ஆனை என் இதயத்தின் வசந்தமாக்குவாயாக! என் நெஞ்சத்தின் ஒளியாக்குவாயாக! எனது துயரத்தை நீக்கக்கூடியதாகவும் எனது கவலையை மறைக்கக் கூடியதாகவும் ஆக்குவாயாக!

இந்த துஆவை எவர்கள் கேட்கின்றார்களோ! அவர்களது கவலை அவர்களது துன்பம் அவரை விட்டும் நீங்கிவிடும் என்று நபி ﷺ அவர்கள் கூறினார்கள். அப்போது ஸஹாபாக்கள் கேட்டார்கள்; அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் அதை அறிந்து கொள்ள வேண்டுமா? ஆம், எவர்கள் அதைச் செவிமடுக்கின்றார்களோ! அவர்கள் அதை அறிந்து கொள்வது அவசியமாகும். என்று நபி ﷺ அவர்கள் கூறினார்கள். (அஹ்மத் – இது ஒரு ஹஸனான செய்தியாகும்)

அல்லாஹ் ஸுஃப்ஹானஹூ வதஆலாவுக்கு அழகிய திருநாமங்கள் இருக்கின்றன என்பதற்கும்; மேலும் அத்-திருநாமங்களுக்கு வரையறை இல்லை என்பதற்கும்; அல்லாஹ்வைப் பற்றிய அறிவுதான் அடிப்படையான மேலான அறிவு ஆகும் என்பதற்கும் இந்த ஹதீஸ் ஒரு அடிப்படையான ஆதாரமாகும்.

இமாம் அபுல் காஸிம் அல்-அஸ்பஹானி ரஹிமஹுல்லாஹ் அவர்கள்; சில உலமாக்களைத் தொட்டும் ‘அல்-ஹுஜ்ஜாஹ் பீ பயானில் மஹஜ்ஜாஹ்’ என்ற தனது நூலில் கூறுகின்றார்கள்: 

அல்லாஹ் ஸுஃப்ஹானஹூ வதஆலா தன்னைப் பற்றி அறியும் அறிவைத்தான்  முதன் முதலாக தன்னுடைய படைப்பினங்கள் மீது கடமை (பர்ழ்) ஆக்கினான். அல்லாஹ்வைப் பற்றி மனிதன் நல்ல முறையில் அறிந்து கொண்டுவிட்டால்; அவர்கள் அவனை நல்ல முறையில் வணங்குவார்கள். அதனால்தான் அல்லாஹ் கூறுகின்றான் “فَاعْلَمْ اَنَّهٗ لَاۤ اِلٰهَ اِلَّا اللّٰهُ وَاسْتَغْفِرْ لِذَنْۢبِكَ” ((நபியே!) உண்மையாக, அல்லாஹ்வைத் தவிர (வணக்கத்திற்குரிய வேறு) நாயன் இல்லை என்பதை நீர் அறிந்துகொள்வீராக!)

அல்லாஹ்வை; அவனது திருநாமங்கள், பண்புகளை பற்றி அறிந்து கொள்வது கடமை (பர்ழ்) என்பதற்கு இந்த வசனம் ஒரு அடிப்படை ஆதாரமாக இருக்கிறது.

ஆகவேதான் சகோதரர்களே! அல்லாஹ் ஸுஃப்ஹானஹூ வதஆலாவைப் பற்றிய அறிவை; அவனது ஒவ்வொரு திருநாமமும் எதனை உணர்த்துகின்றது?  என்ற அறிவை நாங்கள் பெற்றுக் கொள்ள வேண்டும்.

அல்-ஹுஸ்னா – அழகிய பெயர்கள் என்று கூறுவதற்கான காரணங்கள்:

உலமாக்கள் அல்-ஹுஸ்னா – அழகிய திருநாமங்கள் என்று கூறுவதற்கான ஐந்து காரணங்களை கூறுகின்றார்கள்;

1 – அல்லாஹ்வும் அவனுடைய தூதர் ﷺ அவர்களும்; இவைகள் அல்லாஹ்வின் அழகிய பெயர்கள் என்று பெயர் வைத்துள்ளார்கள். (அல்லாஹ்வும் அவனது தூதரும் பெயர் வைப்பது மிகவும் அழகானதாகும்.)

2 – அல்லாஹ்வின் திருநாமங்கள் அல்-குர்ஆனிலும் அஸ்-ஸுன்னாவிலும் இடம் பெற்றுள்ளது. (அல்-குர்ஆனிலும் அஸ்-ஸுன்னாவிலும் உள்ள வார்த்தைகள் மிகவும் அழகானதாகும்.)

3 – அல்லாஹ் ஸுப்ஹானஹூ தஆலா; இந்தப் பெயர்களைக் கொண்டு அழைக்கப்படுகின்றான். (அவனின் பெயர்கள் அழகாக இருப்பதனால்தான்; அவன் அழைக்கப்படுகின்றான்; எனவேதான் அல்லாஹ் இப்பெயர்களைக் கொண்டு அழைக்கப்படுவதினால் அவைகள் அழகானதாகும்.)

4 – அல்லாஹ்வின் அழகிய பெயர்கள் புகழுக்குரியது. அதில் இகழ்ச்சி என்பது இல்லை. அவைகள் பரிபூரணமானதாகும். அப்பெயருக்கு தக்க விதத்தில் அவன் இருக்கின்றான். (அதனாலே அது அழகானதாகும்.)

5 – அல்லாஹ்வின் அழகிய பெயர்கள்; அது அவனுக்கு என்றே சில பண்புகளைக் கொண்டது. அப்பண்புகள் குறைகள் அற்ற பரிபூரணமானவைகள் ஆகும். (அவைகள் குறைகள் அற்ற பரிபூரணமானது என்பது அழகாகும்.)

அல்லாஹ் அவனுடைய பெயரை அல்-அஸ்மா-உல் ஹுஸ்னா என்றுதான் அறிமுகப்படுத்தி இருக்கிறான்.

இப்புத்தகத்தில் ஷெய்க் அவர்கள் அல்லாஹ்வின் பெயர்களை அதனுடைய ஆதாரங்களுடன் குறிப்பிட்டுள்ளார்கள்.

عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ ‏”‏ إِنَّ لِلَّهِ تِسْعَةً وَتِسْعِينَ اسْمًا مِائَةً إِلاَّ وَاحِدًا مَنْ أَحْصَاهَا دَخَلَ الْجَنَّةَ ‏”‏ ‏.‏ وَزَادَ هَمَّامٌ عَنْ أَبِي هُرَيْرَةَ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم ‏”‏ إِنَّهُ وِتْرٌ يُحِبُّ الْوِتْرَ ‏”‏ ‏.‏‏.‏

அபூஹுரைரா றழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்; அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஅலா ஆலிஹீ வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ்விற்கு தொண்ணூற்று ஒன்பது நூற்றுக்கு ஒன்று குறைவான – பெயர்கள் உண்டு. அவற்றை வரையறுத்தவர் ((நம்பிக்கை கொண்டு) மனனமிட்டவர்) சொர்க்கம் நுழைவார். அல்லாஹ் ஒற்றையானவன். ஒற்றைப்படையையே அவன் விரும்புகிறான்’ (புஹாரி, முஸ்லிம்)

குறிப்பு: அல்லாஹ்வுக்கு தொண்ணூற்று ஒன்பது பெயர்கள் மாத்திரம்தான் இருக்கின்றன என்பது இதன் கருத்து அல்ல. மாறாக அல்லாஹ்வுக்கு அதிகமான பெயர்கள் இருக்கின்றன. தொண்ணூற்று ஒன்பது பெயர்கள் என்பது ஒரு அடிப்படையாகும்.

வரையறுத்தவர் என்பதற்கு உலமாக்கள் பல கருத்துக்களைக் கூறியுள்ளார்கள். அதில் மிகவும் ஏற்றமான கருத்து; இமாம் புகாரி ரஹிமஹுல்லாஹ் மற்றும் சில உலமாக்கள் கூறும் கருத்து; அஹ்ஸாஹா (வரையறுத்தல்); அது தொண்ணூற்று ஒன்பது என்பதை வரையறுத்தல் என்பது கருத்து அல்ல. மாறாக “அல்லாஹ்வின் திருநாமங்களை அறிந்து நல்ல முறையில் யார் மனனமிட்டாரோ!” என்பதுதான் அதன் கருத்தாகும்.

இன்னும் சில உலமாக்கள்; அல்லாஹ்விடத்தில் பிரார்த்தனை செய்யும் போது, “இப்பெயர்களைக் கொண்டு யார் துஆச் செய்கின்றாரோ!” அவருக்கு சொர்க்கம் உண்டு என்று கூறுகின்றார்கள்.

இன்னும் சில உலமாக்கள்; அல்லாஹ்வுக்கு இருக்கும் பெயர்களில் தொண்ணூற்று ஒன்பது பெயர்களை யார் அறிந்து, அவற்றுக்கு உரிய முறையில் கருத்துக்களை கொடுத்து, அவைகளை உண்மைப்படுத்தி, மனனமிடுகின்றாரோ! அவருக்கு சொர்க்கம் உண்டு என்று கூறுகின்றார்கள்.

மேற்கூறப்பட்டவாறு சில கருத்துக்களை உலமாக்கள் பேசியிருக்கின்றார்கள். இக்கருத்துக்கள் அனைத்துக் பொருத்தமானதாகவே இருக்கின்றன.

அல்லாஹ் ஸுப்ஹானஹூ வதஆலாவுக்கு தொண்ணூற்று ஒன்பது பெயர்கள்தான் இருக்கின்றன என்று மட்டிடுவது ஒரு பித்அத்தாகும். ஒரு பிழையான கருத்தாகும்.

இதனைத்தான் இமாம் இப்னுல் கையிம் ரஹிமஹுல்லாஹ் அல்-பதாயி-உல் பவாயித் என்ற நூலில் கூறி இருக்கிறார்கள்.

عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ “‏ إِنَّ لِلَّهِ تَعَالَى تِسْعَةً وَتِسْعِينَ اسْمًا مِائَةً غَيْرَ وَاحِدَةٍ مَنْ أَحْصَاهَا دَخَلَ الْجَنَّةَ هُوَ اللَّهُ الَّذِي لاَ إِلَهَ إِلاَّ هُوَ الرَّحْمَنُ الرَّحِيمُ …

சில ஹதீஸ்களில்; அபூஹுரைரா றழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்; அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஅலா ஆலிஹீ வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ்விற்கு தொண்ணூற்று ஒன்பது நூற்றுக்கு ஒன்று குறைவான – பெயர்கள் உண்டு. ஹுவல்லாஹுல்லதீ, லாயிலாஹ இல்லாஹுவ, அர்-ரஹ்மானுர்-ரஹீம்… என்றுஅல்லாஹ்வின் தொண்ணூற்று ஒன்பது பெயர்களையும் மட்டிட்டு கூறியதாக வந்துள்ளது.

திர்மிதீ, இப்னு மாஜா போன்ற கிரந்தங்களில் இந்த செய்தி இடம் பெற்றுள்ளது. இந்த செய்தியின் தரம் ழயீப் (பலவீனம்) ஆகும்.

இந்த ஹதீஸை அஷ்-ஷெய்க் முக்பில் இப்னு ஹாதி அல்-வாதியீ ரஹிமஹுல்லாஹ் அவர்கள்; அஹாதீஸு முஅல்லா லாஹிருஹஸ் ஸிஹ்ஹா என்ற அவர்களது நூலில் கொண்டுவந்திருக்கின்றார்கள். இதில் அதிகமான பிரச்சினைகள் இருப்பதாகக் கூறி இருக்கின்றார்கள்.

அதேபோன்று அவர்களுக்கு முன்னால் வந்த அதிகமான உலமாக்கள்; இமாம் ஹாகிம் போன்ற உலமாக்கள்; இந்த ஹதீஸில் பிரச்சினை உள்ளது. இதனை ஏற்றுக் கொள்ள முடியாது என்று கூறி இருக்கின்றார்கள்.

பாமர மக்களுக்கு மத்தியில் பிரபல்யமாகி இருக்கும் இந்த ஹதீஸ் ஒரு ழயீபான (பலகீனமான) ஹதீஸ் ஆகும்.

இது அல்லாஹ்வைப் பற்றிய அறிவாகும். எனவே அறிந்தவர்கள், அறியாத பாமர மக்களுக்கு இந்த விஷயத்தைப் பற்றிய அறிவை எத்திவைப்பது கடமையாகும்.

இன்று நாம் கண்கூடாக பார்க்கும் ஒரு நிகழ்வுதான்; இந்த ஹதீஸில் வரும், அல்லாஹ்வின் தொண்ணூற்று ஒன்பது பெயர்களையும் ஒரு வரிசைக் கிரமமாக; அவைகள் தொண்ணூற்று ஒன்பதுதான்; மேலும் இந்த ஹதீஸ் சரியான ஹதீஸ் என்று நினைத்துக் கொண்டு; இந்த ஹதீஸை துணிகள், தகடுகள், பலகைகள் இதுபோன்ற இன்னும் பல பொருட்களில் எழுதி; அவர்களின் வீடுகள், பள்ளிவாசல்கள், வாகனங்கள் போன்றவற்றில் தொங்கவிட்டிருக்கின்றார்கள். மேலும் வியாபாரத்தளங்களில் பரகத்தைத் தேடியும், விற்பனைக்காகவும் வைத்திருக்கின்றார்கள்.  

✽ இந்த செயல் முதலில் ஒரு பித்அத்தான செயல் ஆகும்.

✽ இந்த செயல் ஒரு பலவீனமான ஹதீஸை அடிப்படையாகக் கொண்டு நடைபெறுகிறது.

எனவேதான் இல்மை (அறிவை)த் தேடும் மாணவர்கள் முதலாவதாக அல்லாஹ்வைப் பற்றிய அறிவை அறிந்து கொள்வது கடமையாகும். இதுதான் அடிப்படை அறிவு என்று உலமாக்கள் கூறுகின்றார்கள்.

-அபூ ஜுலைபீப்

Previous Post Next Post