அறிவின்றி மார்க்கத் தீர்ப்பு வழங்குதல் ஆபத்தான விடயமாகும்


         இஸ்லாமியப் பேரறிஞர் அல்லாமா முஹம்மத் பின் ஸாலிஹ் அல்உஸைமீன் (ரஹிமஹுல்லாஹ்) கூறுகின்றார்கள்:-

          “மார்க்கத் தீர்ப்பு வழங்குதல் என்பது மகத்தானதோர் பொறுப்பாகும். பாமர மக்களுக்கு அவர்களின் மார்க்க விவகாரங்களில் ஏற்படுகின்ற சிக்கல்களை விளக்கப்படுத்துவதற்காகவும், நேரான வழிக்கு அவர்களைக் கொண்டுவருவதற்காகவுமே தீர்ப்பு வழங்கக்கூடியவர் இதற்காக முன்வருகின்றார். இதனால்தான் மகத்தான இப்பொறுப்புக்கு தகுதியானவரைத் தவிர வேறு எவரையும் முன்னுக்குக் கொண்டுவரக் கூடாது. எனவே, இது விடயத்தில் முஸ்லிம்கள் அல்லாஹ்வை அஞ்சிக்கொள்ள வேண்டும்; அறிவும் தெளிவான சிந்தனையுமின்றி எதையும் அவர்கள் பேசிவிடக் கூடாது என்பதோடு படைத்தல் மற்றும் விவகாரங்கள் அனைத்தும் அல்லாஹ் ஒருவனுக்கு மட்டுமே உரியது என்றும்,  அவன்தான் ஒன்றைக் கடமையாக்குகிறான்; அவன்தான் ஒன்றைத் தடை செய்கிறான்; ஒன்றை 'ஹலால்' என்று ஆகுமாக்கியதும் அவனேதான் என்றும் அல்லாஹ்வைப் பற்றி அவர்கள் அறிந்திருக்கவும் வேண்டும். (அல்லாஹ்  ஆகுமாக்கி இருக்காதவைகளை)  ஆகுமாக்கக்கூடியவர்களையும், (அவன் தடைசெய்யாதவைகளை) தமது மனோ இச்சைகளின்படி தடைசெய்யக்கூடியவர்களையும் அல்லாஹ் கடுமையாக மறுத்துரைக்கின்றான். *“நீங்கள் அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக்கட்டுவதற்காக 'இது ஆகுமானது; இது தடைசெய்யப்பட்டது' எனப் பொய்யாக உங்கள் நாவுகள் வர்ணிப்பதையெல்லாம் கூறாதீர்கள். நிச்சயமாக எவர்கள் அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக்கட்டுகிறார்களோ அவர்கள் வெற்றி பெறமாட்டார்கள்”.* (அல்குர்ஆன், 16:116,117) என்று அல்லாஹ் கூறுகிறான்.

         ஏதாவது ஒரு விடயத்தில் 'ஆகுமானது' என அல்லாஹ் தீர்ப்பாகக் கூறியிருக்கின்றானா? என்று தெரியாமல்  அதை 'ஆகுமானது' என ஒருவர் கூறுவது மிகப்பெரிய குற்றங்களில் ஒன்றாகும். இவ்வாறே 

அல்லாஹ்வின் தீர்ப்பு எப்படி இருக்கிறது என்று அறியாமல் 'இது தடைசெய்யப்பட்டது' என்று ஒன்றைப் பற்றி  ஒருவர் கூறுவதும்,  அல்லாஹ் கடமையாக்கியுள்ளானா? என்று தெரியாமல் 'இது கடமை' என்று ஒன்றைப் பற்றி ஒருவர் கூறுவதும், அல்லாஹ் கடமையாக்கவில்லை என்பதைத் தெரிந்து கொள்ளாது 'இது கடமை இல்லை' என்று ஒன்றைப் பற்றி ஒருவர் கூறுவதும் மிகப்பெரிய குற்றங்களைச் சேர்ந்ததாகும். இது குற்றம் என்பதாக இருப்பது  மாத்திரமின்றி அல்லாஹ்வுடன் நடந்துகொள்கின்ற மோசமான நடத்தையாகவும் இருந்துகொண்டிருக்கிறது.

           பாமர மக்கள் சிலரும் இது விடயத்தில் இன்னொரு குற்றத்தை இழைக்கின்றனர். அதாவது, அறிஞரிடம் மார்க்கத் தீர்ப்பு கேட்டுச் செல்லும் ஒருவரிடம் இந்த பாமரன், “அவரிடம் நீர் மார்க்கத் தீர்ப்புக் கேட்க வேண்டிய எந்தத் தேவையும் இல்லை; இது தெளிவான விடயமாகும்; இது தடைசெய்யப்பட்ட விவகாரம்தான்!” என்று கூறுகிறான். ஆனால், நடைமுறையில் அது ஆகுமானதாக இருக்கும். இதனால், அம்மனிதருக்கு அல்லாஹ் ஆகுமாக்கியிருந்த ஒன்றை இந்தப் பாமரன் அவருக்கு தடைசெய்து விடுகிறான். அல்லது,  அல்லாஹ் கடமையாக்காத ஒன்றை “இது கடமை` என்பதாக அவருக்கு இவன் கூறி அவரைக் கட்டாயப்படுத்துகிறான்; அல்லது, இஸ்லாமிய மார்க்கத்தில் கடமையாக இருக்கின்ற ஒன்றை “இது கடமையான ஒன்று இல்லை” என்பதாக அவருக்குக் கூறி அல்லாஹ் அவருக்குக் கடமையாக்கியிருந்த ஒன்றை அவரை விட்டும் இவன் விழுத்தாட்டி விடுகிறான்; அல்லது, நடைமுறையில் தடைசெய்யப்பட்டதாக உள்ள ஒன்றை “இது ஆகுமாக்கப்பட்டது” என்பதாகக் கூறி விடுகின்றான். இது, அல்லாஹ்வின் சட்டதிட்டத்திற்கு எதிராக இவன் புரிந்த குற்றமாகவும், அறிவின்றி தீர்ப்பு வழங்கிய அடிப்படையில் தனது சகோதர முஸ்லிமுக்கு எதிராகச் செய்த துரோகமாகவும் இருந்துகொண்டிருக்கின்றது”.

( நூல்: 'கிதாபுல் இல்ம்' லில்உஸைமீன், பக்கம் - 116, 117 )


           قال العلاّمة محمد بن صالح العثيمين رحمه الله تعالى:-

          { الإفتاء منصب عظيم، به يتصدى صاحبه لبيان ما يشكل على العامة من أمور دينهم، ويرشدهم إلى الصراط المستقيم. لذلك كان هذا المنصب العظيم لا يتصدر له إلا من كان أهلا له؛ لذلك يجب على العباد أن يتقوا الله تعالى وأن لا يتكلموا إلا عن علم وبصيرة، وأن يعلموا أن الله وحده له الخلق والأمر. فهو الذي يوجب الشيئ، وهو يحرّمه، وهو الذي يندب إليه ويحلّله؛ ولقد أنكر الله على من يحلّلون ويحرّمون بأهوائهم. فقال تعالى: *( ولا تقولوا لما تصف ألسنتكم الكذب هذا حلال وهذا حرام لّتفتروا على الله الكذب إن الذين يفترون على الله الكذب لا يفلحون )* « سورة النحل، الآيتان: ١١٦،١١٧ ».

          وإن من أكبر الجنايات أن يقول الشخص عن شيئ إنه حلال وهو لا يدري ما حكم الله فيه، أو يقول عن الشيئ إنه حرام وهو لا يدري عن حكم الله فيه، أو يقول عن الشيئ إنه واجب وهو لا يدري أن الله أوجبه، ويقول عن الشيئ إنه غير واجب هو لا يدري أن الله لم يوجبه، إن هذه جناية وسوء أدب مع الله عزّ وجلّ.

         وإن بعض العامة يجني جناية أخرى فإذا رأى شخصا يريد أن يستفتي عالما يقول له هذا العامي لا حاجة أن تستفتي، هذا أمر واضح، هذا حرام مع أنه في الواقع حلال فيحرّمه ما أحلّ الله له. أو يقول له: هذا واجب فيلزمه بما لم يلزمه الله به. أو يقول: هذا غير واجب وهو واجب في شريعة الله فيسقط عنه ما أوجب الله عليه. أو يقول: هذا حلال وهو في الواقع حرام؛ وهذه جناية منه على شريعة الله، وخيانة لأخيه المسلم حيث أفتاه بدون علم }.

[ المصدر: 'كتاب العلم' للشيخ العثيمين، ص - ٧٥ ، ٧٦ ]

📚➖➖➖➖➖➖➖➖📚

               *✍தமிழில்✍*

                அஷ்ஷெய்க் *N.P.ஜுனைத்(காஸிமி,மதனி)*

புதிய சாளம்பைக்குளம்,வவுனியா


Previous Post Next Post