குடும்ப உறவுகளை பேணி வாழ்வோம்.

-ஆக்கம் ஜெலீல் மதனி. 

குடும்ப உறவுகளை பேணி வாழ்வதன் மூலம் நாடப்படுவது யாதெனில் எமது பெற்றோர் உடன்பிறப்புகள் பிள்ளைகள் மற்றும் நெருங்கிய தூரத்து உறவினர்களுடன் அன்பு , பரிவு விட்டுக்கொடுப்பு, உதவி ஒத்தாசை நல்ல தீய விஷயங்களில் பரஸ்பரம் ஒத்துழைப்பு நல்குதல் ஆகியவற்றை முறையாக பேணி வருவதாகும். 

இன்று மக்கள் இயந்திர  வாழ்க்கைக்குப் பழகிப்போன இக்காலத்தில் குடும்பக் கட்டமைப்பு மிக மோசமாகச் சிதறுண்டு கிடப்பதை அவதானிக்க முடிகிறது. நமது பிள்ளைகளுக்கு கூட நம் உடன் பிறந்த சகோதரன் என்ன முறை யார் என்று தெரியாத ஓர் அந்நியம் எம்மை வியாபித்து இருப்பது கவலையுடன் ஏற்றுக் கொள்ள வேண்டிய ஒரு உண்மையாகும். மகன் தந்தையுடன் பேசுவதில்லை, தாய்க்கும் மகளுக்கும் சண்டை, கணவனுக்கும் மனைவிக்கும் இடையில் கூடகீரியும் பாம்பும் போன்ற வருடக்கணக்கில் காரணமின்றி உறவறுந்து போயுள்ள துர்ப்பாக்கிய நிலை.  சகோதரர்கள் முகம் சுளித்து முதுகாட்டி செல்லும் நிலை மூத்த உறவுகளை பிள்ளைகள்  ஒருத்தருக்கொருவர் பந்தாடி அவனின் வீட்டுக்குப் போ, இவனின் வீட்டுக்குச்செல் என அலைக்கழித்து கடைசியில்   வயோதிபர் மடங்களில் தள்ளிவிட்டு வரும் நிலை . அற்ப விஷயத்துக்காக சகோதரர்கள் நடுவீதியில் வெட்டி குத்தி  இரத்த வெள்ளத்தில் குளிக்கும் நிலை. இவையெல்லாம்  இன்று  சாதாரணமாகிவிட்ட காலத்தில் நாம் வாழ்கின்றோம். ஆகவே அல்லாஹ்வும் அவன் தூதரும் உறவு முறைகளை பேணுவதன் அவசியம் பற்றி எடுத்துரைத்த சில பொன்மொழிகளை நாம் ஆள வாசித்து அடி மனதில் பதிப்பது நமது தவறுகளை நாமே திருத்திக் கொள்ள வழிவகுக்கும். 

அல்லாஹ் கூறுகின்றான்.. 

அந்த இறை விசுவாசிகள் அல்லாஹ் சேர்ந்து வாழுமாறு கட்டளையிட்ட உறவினர்கள் விடயத்தில் அல்லாஹ்வை அஞ்சிக் கொள்வார்கள். அல்லாஹ்வின் கடினமான விசாரணையை பயந்து வாழ்வார்கள் சூரா றஃத் :12.
மற்றோரிடத்தில்..
  நீங்கள் புறப்பட்டு வெளியேறி சென்றால் பூமியில் குழப்பம் விளைவித்து உறவுகளை துண்டித்து விடுவீர்களோ.. அப்படிப்பட்ட அவர்களைத்தான் அல்லாஹ் சாபமிட்டு  அவர்களின் பார்வைகளை குருடாக்கி செவிடர்களாகவும் ஆக்கிவிட்டான். சூரா முஹம்மத் 22 

நபியவர்கள் கூறுகின்றார்கள்.. உறவு முறையானது அல்லாஹ்வின் அர்ஷிலே தொங்கிக்கொண்டு இவ்வாறு கூறுகிறது.. எனது இறைவனே!! என்னை சேர்த்து நடத்தவர்களை நீயும் சேர்த்துக் கொள்வாயாக.. என்னை துண்டித்தவர்களை நீயும் துண்டித்து விடுவாயாக நூல்:முஸ்லிம்.
 
 அல்லாஹ் தனது படைப்பினங்கள் அனைத்தையும் படைத்து முடிந்தவுடன் உறவுமுறை என்னும் பந்தமானது "எனது ரப்பே ! என்னை துண்டித்து வாழ்பவர்களுக்கு நீ என்ன செய்யப் போகிறாய்" என வினவ அல்லாஹ் உன்னை துண்டித்தவர்களை நானும் துண்டித்து விடப் போகிறேன் உன்னை சேர்ந்து நடந்தவர்களை நானும் சேர்த்துக் கொள்ளப் போகிறேன் என்பதை கண்டு நீ திருப்திப்பட மாட்டாயா? அதை நான் உனக்கு வழங்குகின்றேன் என்று அல்லாஹ் எடுத்துரைத்தான். புகாரி : முஸ்லிம்.
  மற்றொரு நபிமொழியில்..
ஒரு மனிதன்  புரியும் குற்றங்களுக்காக அல்லாஹ் அவனை உடனடியாகத் தண்டிப்பான் அல்லது தாமதித்தும் தண்டனை வழங்குவான். ஆனாலும் உலகிலே உடனடி தண்டனையையும் மறுமையில் கடும் வேதனையும் சித்தப்படுத்தி வைத்திருக்கும் பாவங்களில்  உறவு முறைகளை துண்டிப்பதையும்  மானக்கேடான  விபச்சாரத்தையும் விட கடுமையானது வேறு எதுவும் இல்லை . ஆதாரம்: ஸஹீஹ் திர்மிதி. 

  அல்லாஹ் கூறுவதாக  நபியவர்கள் கூறினார்கள்.. நான்தான் ரஹ்மான்..எனும்  அளவற்ற அருளாளன். ரஹ்ம் எனும் உறவு முறையை எனது ரஹ்மான் என்ற பெயரில் இருந்தே உருவாக்கியுள்ளேன். எனவே யார் உறவினர்களை நேசித்து  வாழ்கிறார்களோ அவர்களை நானும் நேசிப்பேன். உறவு முறைகளை துண்டித்து நடப்போரை நானும் சிதறடித்து விடுவேன்.
ஆதாரம்: ஸஹீஹ் அபுதாவுத் 

 மற்றொரு சந்தர்ப்பத்தில் நபியவர்கள் பின்வருமாறு கூறினார்கள்..
யார் அல்லாஹ்வையும் மறுமை நாளையும் விசுவாசம் கொண்டிருக்கிறாரோ அவர் பேசினால் நல்லதையே பேசட்டும் அல்லது வாய் மூடி இருக்கட்டும் அல்லாஹ்வையும் மறுமையும் விசுவாசித்த மனிதர் தனது விருந்தினரை உபசரிக்கட்டும்.. அல்லாஹ்வையும் மறுமையையும் விசுவாசித்த மனிதர் தனது குடும்ப உறவினர்களை சேர்ந்து நடந்து கொள்ளட்டும். ஆதாரம்: புகாரி. 

நபியவர்கள் கூறினார்கள்.. சலாம் முகமன் கூறுவதை அதிகப்படுத்துங்கள்.. பசித்தோருக்கு உணவளியுங்கள்... உறவினர்களை சேர்ந்து வாழுங்கள்... நள்ளிரவில் மனிதர்கள் தூங்கும் வேளையில் நள்ளிரவில் நீங்கள் துயிலெழுந்து இறைவனை வணங்குங்கள்.. (இவற்றின் பொருட்டால் )பாதுகாப்பாக சுவனம் நுழைவீர்கள் .
ஸஹீஹ்: இப்னுமாஜா 

நபியவர்கள் கூறினார்கள்.. உம்மில் யாராவது ஒருவர் தனது ஜீவனோபாயம் விசாலயமாக்கப்பட்டு ஆயுள் நீடிக்கப்படுவதை விரும்புவராயின் அவர் தன் உறவினர்களை சேர்ந்து நடந்து கொள்ளட்டும். புகாரி முஸ்லிம். 

மக்கா ஹரத்தின் முன்னாள் பிரதம முப்தி இமாம் இப்னு பாஸ் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறுகின்றார்கள்.. உறவினர்கள் எனப்படுவோர் தாய் மற்றும் தந்தைவழி உறவினர்களை, கூடப்பிறந்த சகோதரன் தாய் வழி தந்தை வழி சகோதரர்கள், மற்றும் தனது பிள்ளைகள் பேரப்பிள்ளைகள்  திருமண பந்தத்தால் ஏற்பட்ட உறவு முறை, பால்குடி உறவு முறை, ஆகிய அனைவரும்  அர்ஹாம் இன பந்துக்கள் என்ற பட்டியலில்  உள்ளடக்கப்படுவார்கள். எனவே இவர்கள் அனைவரின் விஷயத்திலும் இதமாக நடந்து கொள்வதோடு  அவர்களை முறை வண்ணம் சந்தித்து வருதல், சுகநலம் விசாரித்தல், குடும்பத்தின் சுக துக்கங்களில் பங்கெடுத்தல்,  முடியுமான உதவி ஒத்தாசைகைளச் செய்தல், அனைத்தும் மிகச்சிறந்த நல்லறங்கள் ஆகும் . பதாவா நூறுன் அலத் தர்ப். 

 சொந்த பந்தங்களை அனுசரித்து அவர்களுடன் உறவு பாராட்டும் வழக்கம் தற்காலத்தில் வழக்கொழிந்து வருவது கவலை தரும் விஷயமாகும். நவீன தொடர்பு சாதனங்களாலும் சமூக வலைத்தளங்களின் ஆக்கிரமிப்பினாலும் இந்நிலை மேலும் மோசமாகியுள்ளது. "நவீன சாதனங்கள் தூரத்தில் இருப்பவர்களுடன் தொடர்பு கொள்வதை இலகுவாகிய அதே சமயம் அருகில் உள்ள உறவுகளுடன்  தொடர்புகளை துண்டித்துள்ளது"  எனலாம். அவ்வாறே பல்வேறு வேலைப் பளுக்களும் பொருளாதார தேவைகளும் உலக போகங்களை அடைவதற்கான அதிக நேரத்தை செலவு செய்வதாலும் உறவினர்களோடு உறவாட அதிகமானோருக்கு நேரம் கிடைப்பதில்லை. அவ்வாறே உ அவ்வப்போது ஏற்படும் சிறிய பிரச்சினைகள் தவறான புரிதல்கள் பெரிது படுத்தப்படுவதாலும் உறவினர்களுக்குள் அதிகம் விரிசல் ஏற்படுகின்றது. எனினும் நபியவர்கள் உறவு முறையை பேணுமாறு வலியுறுத்தியுள்ள ஹதீஸ்களை செவியேற்று நடைமுறைப்படுத்த வேண்டியது ஒவ்வொருவரினதும் கட்டாயக் கடமையாகும் 

இன பந்துக்களை சேர்ந்து நடப்பதன் வழிமுறைகள் 

1- நம்மை வெறுத்து வெட்டி வாழ்வோரோடு நாம் ஒட்டி உறவாடுவது...
நபியவர்கள் கூறுகின்றார்கள் கைமாறை எதிர்பார்த்து உறவு பாராட்டுபவர் உண்மையான உறவினன்  அல்லன்.  மாறாக தன்னை வெறுத்து வெட்டி  நடப்போரிடமும் ஒட்டி உறவாடி வாழ்பவர் தான் இன பந்துக்களை சேர்ந்து நடந்தவராவார். ஆதாரம்: புகாரி 

2- உறவினர்களுக்கு அவ்வப்போது தான தர்மங்கள் செய்வதோடு குடும்ப சுக துக்க நிகழ்வுகளில் அவர்களை அழைத்தல், விருந்தளித்தல், பரஸ்பரம், உணவுப் பொருட்களை- அன்பளிப்புக்களை பரிமாறிக் கொள்ளுதல்.
நபியவர்கள் கூறுகின்றார்கள் ஒரு ஏழைக்கு நீ செய்யும் உதவி தர்மமாகும். அதே உதவியை ஒரு நெருங்கிய உறவினருக்கு செய்தால் தர்மம் செய்த நன்மையுடன் உறவினர்களை சேர்ந்து நடந்த நன்மையும் கிடைத்துவிடும்.
நபியவர்கள் கூறுகின்றார்கள்.. தர்மங்களில் மிகச்சிறந்த தர்மம் உன்னிடம் பகைமை பாராட்டும் உறவினனுக்கு நீ செய்யும் தர்மமாகும் அஹ்மத். 

3- உறவினர்களுக்காக அல்லாஹ்விடம் ரகசியமாக துஆக் கேட்டல். 

பொதுவாக ஒரு முஸ்லிம் இன்னொரு முஸ்லிமுக்காக ரகசியமாக கேட்கும் துவா அல்லாஹ்விடத்தில் தங்கு தடையின்றி ஏற்றுக்கொள்ளப்படும். நபியவர்கள் கூறுகின்றார்கள் ஒரு முஸ்லிம் தனது சகோதரனுக்கு உள்ளத்தால் மனமுவந்து பிரார்த்தித்தால் அப்பிரார்த்தனை நிச்சயம் ஏற்றுக் கொள்ளப்படும். ஏனெனில் அவரது தலைக்கு பக்கத்தில் ஒரு மலக்கு இருந்து கொண்டு இவர் தன் சகோதரனுக்காக பிரார்த்திக்கும் போதெல்லாம் யா அல்லாஹ்! அவரது பிரார்த்தனையை ஏற்றுக் கொண்டு  அவர் தன் சகோதரனுக்காக கேட்டதை அவருக்கும் கொடுத்து விடுவாயாக என்று பிராத்திக்கின்றார். ஆதாரம் :முஸ்லிம் 

4- உறவினர்களிடம் காணப்படும் மார்க்கத்துக்கு முரணான செயல்பாடுகளை பக்குவமாக சுட்டிக்காட்டி சீர் செய்தல்.
ஒவ்வொரு முஸ்லிமும் அடுத்த முஸ்லிமுக்கு சகோதரன் என்ற வகையில் அவனுக்கு நல்லதே நாடுவது கடமையாகும். எனவே ஒருவர் தன் உறவினர்கள் மார்க்கத்துக்கு முரணான விஷயங்களை ஈடுபடக் கண்டால் பக்குவமாக சுட்டிக்காட்டுவது கடமையாகும். நபியவர்கள் கூறுகின்றார்கள் உங்களில் ஒருவர் ஒரு தீமை நடக்க கண்டால் முடிந்தால் தன் கையால் தடுக்கவும் இல்லையேல் தன் நாவினால் தடுக்கவும் அதற்கு முடியாவிட்டால் மனதினால் அதை தீமை என்றாவது வெறுத்து ஒதுங்கவும். அதுவே ஈமானின் மிகக் குறைந்த படித்தரமாகும்.
உறவினர்கள் தவறான காரியங்களில் ஈடுபடும் போது அதை தடுக்காமல் இருப்பதோ அல்லது அவர்களுடன் சேர்ந்து தானும் அத்தவறைச் செய்வதோ அல்லாஹ்வின் கோபத்தையும் சாபத்தையும் தருவிக்கும்.  பனூஇஸ்ரவேலர்கள் மிக மோசமாக அழிக்கப்பட்டதற்கு இதுவே காரணமாகும். 

 
 
5- உறவினர்களுக்கு  மத்தியில் ஏற்படும் பிரச்சனைகளை முன்னின்று தீர்த்து குடும்பத்துக்குள் ஒற்றுமையையும் சமாதானத்தையும் ஏற்படுத்தல். நபியவர்கள் கூறுகின்றார்கள் நான் உங்களுக்கு உபரியான தொழுகை நோன்பு தானதர்மங்களை விடவும் சிறந்த ஓர் செயலை அறிவித்து தரட்டுமா?.. அதுதான் குடும்ப உறவினர்களுக்கு மத்தியிலே சமாதானத்தை ஏற்படுத்தல் ஏனெனில் குடும்பத்துக்குள் ஏற்படும் சச்சரவுகளால் உறவு முறை விரிசலாகி குடும்ப ஒற்றுமையே சீரழிந்து விடுகின்றது. ஆதாரம் :திர்மிதி. 

மக்கா பிரதம முஃப்தியாகிய இமாம் அப்துல்லாஹ் பின் பாஸ் அவர்களிடம் தற்காலத்தில் உறவினர்களை சேர்ந்து நடப்பது சிரமமானதாக ஆகிவிட்டது.. என்ன செய்வது? என்று வினவப்பட்ட போது இமாமவர்கள் உங்களுக்கு உறவினர்களை நேரில் வீடு சென்று சந்திக்க முடியாவிட்டால் கடிதத் தொடர்பூடாக தொலைபேசியூடாக தொடர்பு கொண்டு இன்ப துன்பங்களை பரிமாறிக்  கொள்வதும் நிச்சயமாக உறவினர்களை சேர்ந்து நடந்ததாக கருதப்படும் பதாவா நூருன் அஸத்தர்ப். 

இமாம் ஸாலிஹ் உதைமீன் குறிப்பிடுகின்றார்கள்..
இன பந்துக்களை சேர்ந்து நடப்பதன் கால எல்லை அளவு முறைமை பற்றியெல்லாம் இஸ்லாத்தில் தனியான வரையறைகள் எதுவும் இல்லை. எனவே அவரவர் வசிக்கும் இடத்தை பொறுத்த வரைக்கும் எப்படி நடந்து கொள்வது உறவுகளை சேர்ந்து கொள்வதாக நல்லவர்களால் கருதப்படுமோ அவ்வாறு நடந்து கொண்டாலே அவர் உறவுகளை சேர்ந்தவராக நடந்தவராக கருதப்படுவார். அது காலத்துக்கும் இடத்திற்கும் மனிதர்களின் பழக்க வழக்கத்திற்குமேற்ப வேறுபடும். ஆகவே மிக அறிந்தவன்.
எனவே நாமும் உறவினர்களை சேர்த்து வாழ்ந்து ஈருலகிலும் வெற்றிபெறுவோமாக ஆமீன்.
Previous Post Next Post