இமாம் அல்லாமா ஸாலிக் அல் உதைமீன் அவர்களிடம் ஜனாஸாவை நல்லடக்கம் செய்துவிட்டு தல்கீன் ஓதுவது பற்றியும், மக்பராவில் பிரசங்கம் நிகழ்த்துவது தொடர்பாகவும் ஃபத்துவா கேட்கப்பட்ட போது பின்வருமாறு பதிலளித்தார்கள்.
ஜனாஸாவை நல்லடக்கம் செய்த பின் கப்ரிலே கேட்கப்படும் கேள்விகளுக்கு பதில் சொல்லிக் கொடுக்கப்படும் வகையில் அமைந்த தல்கீன் பாராயணம் செய்வது மார்க்கத்தில் நபியவர்கள் காட்டித் தராத நூதன அனுஷ்டானமாகும். இது சம்பந்தமாக வந்திருக்கும் ஹதீஸ் மிக பலவீனமானதாகும் எனவே அதன்படி அமல் செய்ய முடியாது என்பதே அறுதிப் பெரும்பான்மை அறிஞர்களின் கருத்தாகும்.
மையித்தை அடக்கம் செய்துவிட்டு மக்பராவில் பிரசங்கம் நிகழ்த்தும் வழக்கம் சில இடங்களில் காணப்படுகின்றது. இது விடயமாக நான் சொல்வது யாதெனில் நபியவர்கள் அரிதாக ஒரு சில ஜனாஸா நல்லடக்கங்களின் போது கப்ர் தோண்டி முடிக்கப்பட்டு நல்லடக்கம் செய்யப்படும் வரைக்குமான நேரத்துக்குள் மரணத்தை மறுமையை கப்ரை நினைவூட்டும் விதமாக சில உபதேசங்களை செய்துள்ளார்கள். அஹ்மதில் வரக்கூடிய பர்ரா பின் ஆசிப் ரலியல்லாஹு அன்ஹு அறிவிக்கக்கூடிய ஹதீஸ் இதற்கு ஆதாரமாகும்.
எனினும் நபியவர்கள் அனைத்து ஜனாஸாக்களுக்கும் இப்படி உரை நிகழ்த்தினார்களா என்றால் இல்லை என்பதே பதிலாகும்.
எனவே நல்லடக்க நேரத்தில் மக்கள் வேறு விடயங்களை பேசி பராக்காகாமல் இருக்க அந்நேரத்தை சிறு உபதேசம் செய்வதற்கு நபியவர்கள் பயன்படுத்தி இருக்கின்றார்கள் என்பது இதிலிருந்து தெளிவாகின்றது.
ஜனாஸாவை கபுருக்குள் வைத்து மண் போட்டு முடிக்கப்பட்ட பின் மையத்துக்காக பிரார்த்தித்து விட்டு கலைந்து செல்வதே நபியவர்களின் வழிமுறையாகும்.
எனவே சந்தர்ப்பம் தேவைக்கு ஏற்ப சிறிது நேரம் நசீகத் செய்வது பொருத்தமானது என கருதப்படும் பட்சத்தில் ஜனாஸா நல்லடக்கம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நேரத்துக்குள் அதை செய்ய வேண்டும். மண்ணை போட்டு மூடி முடிப்பதற்குள் அதை நிறைவு செய்யப்படவும் வேண்டும்.
நபியவர்கள் ஜனாஸா நல்லடக்கத்தின் பின் கப்ருடைய விசாரணையை இலகுபடுத்துமாறும் அவரது பாவங்களை மன்னிக்குமாறும் அவ்விடத்தில் நின்று பிரார்த்தித்து விட்டுச் செல்லுமாறு பணித்திருக்கின்றார்கள்.
நீங்கள் ஜனாஸாவை நல்லடக்கம் செய்தால் அவருக்காக "தஸ்பீத்" கேள்வி கணக்குக்கு சிறந்த முறையில் பதில் அளிக்க உதவுமாறும் பாவங்களை மன்னிக்குமாறும் அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள் என்று நபியவர்கள் கூறியுள்ளார்கள்.
இன்று சில பகுதிகளில் ஜனாஸா நல்லடக்கத்தின் போது மக்பாராவில் ஒலிபெருக்கி, மேடை ஏற்பாடுகள் எல்லாம் செய்து மிகப் பெரிய அளவில் குத்பா நிகழ்வைப் போன்று அந்த நிகழ்வை ஆக்கிக் கொள்ளும் நடைமுறை உண்மையிலேயே தவிர்க்கப்பட வேண்டியதும் சுன்னாவுக்கு மாற்றமானதுமாகும். இது மக்பராக்களை மஸ்ஜிதுகளாக ஆக்க வேண்டாம் என்று நபியவர்கள் தடுத்த தடைக்குள்ளும் உள்வாங்கப்படும்.
பின்னர் காலப்போக்கில் மக்பராவிலேயே சிற்றுண்டி ஏற்பாடுகள் மற்றும் தஃஸியத், துக்கம் விசாரித்தல்,முஸாபஹா நலன்விசாரித்தல் செய்யும் நடைமுறைகள் அனைத்தும் நடைபெறும் இடமாக மக்பரா மாறிவிடும் மக்பராக்களை கொண்டாட்ட நிகழ்வுகளுக்கான இடமாக ஆக்காதீர்கள் என்ற தடைக்குள்ளும் இது உள்வாங்கப்படும். அல்லாஹ்வை அனைத்தையும் அறிந்தவன்.