றமழான் இறுதிப் பத்தில் உம்றாவுக்குச் செல்வோரின் கவனத்திற்கு:

கேள்வி :

எனது நாட்டில் நோன்பு நோற்றுவிட்டு  இன்னொரு நாட்டுக்கு செல்கிறேன். உதாரணமாக, உம்றாவுக்காக மக்கா நகருக்கு செல்கிறேன். அந்த நாட்டு மக்கள் எனது நாட்டை விட ஒருநாள் முன்னர் நோன்பை தொடங்கியவர்கள். அவர்கள் பெருநாள் கொண்டாடும் போது நான் எவ்வாறு நடந்துகொள்வது?

பதில் :

ஒருவர் தனது நாட்டில் நோன்பு நோற்றுவிட்டு வேறு நாடு ஒன்றுக்கு செல்லும் போது இரு நிலைகள் காணப்படலாம் :

1. அவரது நாட்டை விட அவர் சென்ற நாட்டில் ஒரு நாள் முன்னதாக நோன்பை தொடங்கியிருக்கலாம்.

2. ஒரு நாள் பிந்தி நோன்பை தொடங்கியிருக்கலாம்.

இவ்விரு நிலைகளின் போதும் அவர் தற்போது இருக்கும் நாட்டு மக்களுடன் இணைந்தே செயற்படுவார். அவர்கள் நோன்பு நோற்றால் இவரும் நோன்பு நோற்பார்; அவர்கள் பெருநாள் கொண்டாடினால் இவரும் பெருநாள் கொண்டாடுவார்.

இந்த முடிவுக்கு இரு ஹதீஸ்கள் அடிப்படைகளாக உள்ளன :

1-  'நோன்பு நோற்பது என்பது மக்கள் நோன்பு நோற்கும் தினத்திலாகும்; பெருநாள் கொண்டாடுதல் என்பதும் மக்கள் பெருநாள் கொண்டாடும் தினத்திலாகும்'. 

2- 'பிறையை கண்டு நோன்பை தொடங்குங்கள்; பிறையை கண்டு பெருநாள் கொண்டாடுங்கள்'

முதலாவது ஹதீஸுக்கேற்ப, ஒருவர் தங்கியிருக்கும் நாட்டு மக்கள் நோன்பு நோற்கும் போது இவர் தனித்து பெருநாள் கொண்டாடுவதோ, அவர்கள் பெருநாள் கொண்டாடும் போது இவர் தனித்து நோன்பு நோற்பதோ கூடாது. 

இரண்டாவது ஹதீஸுக்கேற்ப, ஒருவர் தங்கியுள்ள நாட்டில் பெருநாள் பிறை கண்ட பின்னரும் நோன்பு நோற்க முடியாது. 

இங்கே சில ஐயங்கள் எழும் :

அதாவது
அவரது சொந்த நாட்டை விட அவர் சென்ற நாட்டில் ஒரு நாள்  முன்னதாக நோன்பை தொடங்கியிருந்தால், அந்த நாட்டவர்கள் 29வது நோன்பை பூர்த்திசெய்து மறுநாள் பெருநாள் கொண்டாடும் போது இவர் 28 நோன்புகளே நோற்றிருப்பார்.

இஸ்லாமிய மாத கணிப்பீட்டின் படி, 28 நாட்கள் என்பது இல்லை. ஒரு மாதம் என்பது 29 நாட்களாக இருக்கும்; அல்லது 30 நாட்களாக இருக்கும். 

எனவே இவர் அந்த நாட்டவர் பெருநாள் கொண்டாடும் தினத்தில் அவர்களுடன் இணைந்து பெருநாள் கொண்டாடிவிட்டு பின்னர் ஒரு நாள் நோன்பை கழா செய்வார்.

அந்த நாட்டவர்கள் இரு நாட்கள் முந்தி நோன்பை தொடங்கியிருந்தால் இவர் இரு நாட்கள் நோன்பை பின்னர் கழா செய்வார்.

இதற்கு மாறாக,

இவரது சொந்த நாட்டை விட அவர் சென்ற நாட்டில் ஒரு நாள் பிந்தி நோன்பு நோற்று அந்த நாட்டவர்கள் 30 நாட்கள் நோன்பு நோற்கும் நிலை ஏற்பட்டால், அவரும் அவர்களுடன் இணைந்து நோன்பு நோற்பார். அது அவருக்கு 31 வது நோன்பாக இருக்கும்.

இருப்பினும் அவர் 31வது நோன்பை நோற்று அந்த நாட்டு மக்களுடன் இணைந்து மறுநாளே பெருநாள் கொண்டாடுவார்.

இது எதைப் போன்றதெனில், ஒருவர் தனது தனது நாட்டில் நோன்பு நோற்றுவிட்டு அவரது நாட்டை விட பல மணித்தியாலங்கள் பிந்தி சூரியன் மறையும் நாட்டுக்குச் சென்றால் தனது நாட்டு நேர அளவைப் பார்த்து நோன்பு துறக்காமல் அவர் சென்ற நாட்டு நேர முறைக்கேற்ப சூரியன் மறையும் வரை காத்திருந்து நோன்பு துறப்பதைப் போன்றதாகும். 
சுருங்கக் கூறின்,

ஒருவர் தான் தங்கியிருக்கும் நாட்டு மக்களுடன் இணைந்தே நோன்பு நோற்பார், அல்லது பெருநாள் கொண்டாடுவார்.

அவர் சென்ற நாட்டில் பெருநாள் கொண்டாடும் தினத்தில் இவருக்கு 28 அல்லது  27 நோன்பாக இருந்தால், பெருநாளின் பின் ஒரு நாள் அல்லது இரு நாட்கள் நோன்பை கழா செய்வார்.

அவர் சென்ற நாட்டில் 30 நோன்புகள் நோற்கும் போது இவருக்கு 31வது நோன்பை நோற்க வேண்டியிருந்தால் அவ்வாறு நோற்பது பாதகமில்லை.

அல்லாஹு அஃலம்.

அஷ்ஷெய்க் இப்னு பாஸ் (றஹ்),  அஷ்ஷெய்க் இப்னு உஸைமீன் (றஹ்) ஆகியோரின் பத்வா நூல்களிலிருந்து...

ARM. ரிஸ்வான் (ஷர்க்கி)
Previous Post Next Post