அகீதா - இஸ்லாமிய கொள்கை ஓர் சுருக்கமான பார்வை

-உஸ்தாத் SM. இஸ்மாயீல் நத்வி 

இன்று நமது வாலிபச் சகோதரர்கள் சிலர்  பல தடவை கீழ்காணும் கேள்விகளை கேட்ட வண்ணமாக இருக்கிறார்கள் அதற்கு அடியேன் சுருக்கமான எழுதிய சில பதில்கள் இதோ உங்களின் பார்வைக்கு...

(பொறுமையாக வாசித்து பயன்பெற வேண்டும் என்று விரும்பும் சகோதரர்கள் தொடரவும் மாற்றுக்கருத்தினர் தயவுசெய்து கடந்து செல்லவும்)

இஸ்லாமிய கொள்கை ரீதியாக ஹம்பளிகளுக்கும் ,அஷ்அராவினருக்கும் கருத்து மோதல்கள் என்ன ? மாதுருதியனருக்கும் அஷ்அராவினருக்கும் வேறுபாடு உள்ளதா ?

கட்டுரையை முழுவதுமாக வாசித்து தங்கள் கருத்துக்களை பதியுங்கள் அரைகுறையாக வாசித்து இக்களத்தை சர்ச்சைக்குரியதாக மாற்ற வேண்டும்.

இந்த கருத்துக்களை விரும்பாதவர்கள் தயவு செய்து கடந்து சென்று விடவும்.

அடியேன் அகீதா துறையில் மாணவன் என்ற உரிமையில் இந்த கருத்துக்களை பதிவு செய்கிறேன்  அகீதா துறையில் கடந்த சில வருடங்களாக  எமது  மாணவர்களுக்கும் நடத்தியும் வருகிறேன், இன்னும் கூடுதலாக வாசித்தும் வருகிறேன்.

சிலர் கூறுவதைப் போல ஹம்பலிகளின் வாதம் மட்டுமல்ல முழு அஹ்லுஸ் ஸுன்னத்து வல் ஜமாத்தின் ஒருங்கிணைந்த பார்வை அல்லாஹ்வின் திருநாமங்களும் அவனுடைய பண்புகளையும் எவ்வாறு தானும் தனது இறை தூதரும் அறிவித்திருக்கிறார்களோ அதை அவ்வாறே எந்த மாற்றுக் கருத்துக்களும் இல்லாமல், ஒப்புவோமே செய்யாமல், பண்பு நலன்களை இல்லாமல் ஆக்காமல், குர்ஆனிலும் ஹதீஸிலும் வந்திருப்பது போன்று ஈமான் கொள்வது இறை நம்பிக்கையாளர்களின் மீது கடமை.

இது ஒரு சில எழுத்துக்களால் அல்லது சிறிய பதிவால் விளக்கமளிக்க கூடிய விடயம் அன்று, இதற்கு முன்பாகவும் அகீதா விடயத்தில் சிலர் கேட்ட கேள்விகளுக்கு எனது கருத்துக்களை பதிவு செய்திருக்கிறேன் இது எளிதாக கடந்து போய் விடுகிற ஒரு விடயம் அல்ல கவனங்கள் குவிக்கப்பட வேண்டிய ஒரு சப்ஜெக்ட்.

மார்க்க சட்டங்களை விளங்குவதற்கு அல்லாஹ்வின் தூதர் ﷺ அவர்கள் சொன்ன செயல்படுத்திய ஆமோதித்த நபி மொழிகளை வைத்து சட்டம் இயற்றும் பொழுது ஒன்றிற்கும் பல கருத்துக்கள் வருவதற்கு இடம்பாடு இருக்கிறது எனவே அங்கு பல பிக்ஹு கலாச்சாலைகள் மத்ஹபுகள் தேவைப்படுகின்றன.

இதைப்பற்றி வேறு சில சந்தர்ப்பங்களில் விரிவாக விளக்க முயற்சி செய்கிறேன்,

ஆனால் அகீதா (Doctrine & Principles) கொள்கை சித்தாந்தத்தில் எந்தவித பிரிவமோ அல்லது சிந்தனை கலாச்சாலையமோ( மத்ஹபோ  ) கிடையாது, மேலே சொல்லி இருப்பது போல மார்க்க கிளை சட்டங்களை வழங்குவதற்கு மத்ஹபுகளின் அவசியம் தேவைப்படுகின்றன.

அஷ்அரி என்ற முறையிலோ மாத்துரிதி என்ற முறைகளோ நாம் அகீதாவை கூறு போட முடியாது.

காரணம் அகீதாவின் அடிப்படைகள் குர்ஆனும் சுன்னாவும் மட்டும்தான்.

தாங்கள் சொல்வதைப் போன்று அஷ்அரியாக்களுக்கும் ,மாத்துரிதியாக்களுக்கும் அவ்வளவு பெரிய வித்தியாசம் இல்லை என்று சொல்வது ஏற்புடையது அன்று.

இன்னும் அதிகமாக வாசியுங்கள் விளக்கங்கள் கிடைக்கும்.

அபுல் ஹசன் அஷ்அரி ரஹிமஹுல்லாஹ்
ஒரு சிறந்த இஸ்லாமிய அறிஞர் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை ஆனால் அவர் கடந்து வந்த முக்கியமான மூன்று பாதைகள் இருக்கிறது.

முதலாவது அபுல் ஹசன் அஷ்அரி உடைய  ஆசானான அபூ அலி அல்ஜுபாயி சென்ற பாதையில் ஒரு முஃதஸிலாவாக பயணித்தார்.

முஃதஸிலாக்கள் அறிவை முற்படுத்தி குர்ஆன் சுன்னாவை பிற்படுத்துவார்கள்
இந்த அடிப்படையில் இந்த கொள்கையை நிறுவிய வாஸில் பின் அதா என்பவர்
இமாம் ஹசனுல் பஸரியின் ரஹிமஹுல்லாஹ் சபையிலிருந்து பிரிந்து வந்த சம்பவம் மிகவும் பிரபலமான ஒன்று

அதனால்தான் இவர்கள் பிரிந்து வந்தவர்கள் முஃதஸலாக்கள் என்று அழைக்கப்படுகிறார்கள்.

இவர் தோற்றுவித்த முதல் அமைப்பு தான் நீதமும் தவ்ஹீதும் (حركة العدل و التوحيد)
இன்றைய அறிவு ஜீவிகள் என்று கருதும் தவ்ஹீத் பெயரில் வலம் வரும் சிலரை நமக்கு நினைவூட்டுகிறது.

ஆக இமாம் அபுல் ஹசன் அவர்கள் இந்த வழிகேடான கொள்கையில் இருந்து வெளிவந்த பின்பு தங்களுடைய ஆசனாக இப்னுல் குல்லாபை (அப்துல்லாஹ் பின் ஸஃஈது பின் குல்லாப்) பின்பற்றத் தொடங்கினார் இவரும் இல்முல் கலாமை  அதிகம் பேசியதால் இவரிடமும் சரியான இஸ்லாமிய கொள்கை காணப்படவில்லை அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாஅத் உலமாக்களுக்கு மாற்று கருத்துக்களை இவர் கூறினார்.

இன்னொரு வேடிக்கையான விடயம் என்னவென்றால் இன்று யார் தன்னை சுன்னத்துல் ஜமாத் என்று சொல்லிக் கொள்கிறார்களோ அவர்களிடம் யார் அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாத் என்று கேட்டால் சரியான பதில் கிடைப்பதும் இல்லை.

காரணம் அரபுமதரஸாக்களில் ஆரம்ப வருடத்தில் இருந்து முறையாக அகீதா போதிக்கப்படுவதில்லை.

எங்கள் காலங்களில் "அகீதா பதுல் ஆமாலி", என்ற புத்தகத்தின் ஊடாக கவிதையாக போதிக்கப்பட்டது , ஆனால் இன்றைய காலத்தில் மதரசாக்கலில் இந்த புத்தகமும் கூட போதிக்கப்படுவதில்லை, இறுதியாக பட்டம் வாங்கும் மாணவர்களுக்கு அகீதா நஸஃபிய்யா என்ற புத்தகமும் சில இடங்களில் அகீதா தஹாவியும் போதிக்கப்படுகிறது ஆனால் கவலைக்குரிய விடயம் படித்து தருபவரும் சரி படிப்பவர்களும் சரி கவனம் இல்லாமல் இந்த துறை வெற்றிடமாகவே விடப்படுகிறது.

ஆக இமாம் அபுல்  ஹசன் அவர்கள் மூன்றாம் நிலையில் வருகிறார்கள் அதுதான் சரியான நிலைபாடும் அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாஅத் கொள்கையிலும் அவர்களை உறுதிப்படுத்தியது ஆனால் அவர்களின் மரண இறுதியில் தங்கள் புத்தகமான அல்இபானாவில் (الإبانة عن أصول الديانة)
இஸ்லாமிய கொள்கையில் இமாமுஸ் ஸுன்னா என்று அழைக்கப்படும் இமாம் அஹமத் பின் ஹம்பல் ரஹிமஹுமுல்லாஹ்வை நான் சார்ந்து இருக்கிறேன் என்று எழுதி இருக்கிறார்கள்
தனது பழைய கருத்துக்களை விட்டு திரும்பி விட்டதாக அதில் கூறுகிறார்கள்.

ஆனால் சமகால சில அறிஞர்கள் இமாம் அபுல் ஹசன் ரஹிமஹுல்லாஹ் இறுதிவரை சரியான கொள்கையில் திரும்பவில்லை என்ற கருத்தையும் பதிவு செய்கிறார்கள்.

இங்குதான் கவனிக்க வேண்டிய முக்கிய விடயம் யார் தங்களை அஷ்அரிஆக்கல் என்று சொல்கிறார்களோ அவர்கள் பெரும்பாலும் இப்னுல் குல்லாபின் கொள்கையில் இருப்பவர்கள்.

அல்லாஹ்வின் பண்புகளுக்கு விளக்கம் அளிப்பவர்கள் மாற்று கருத்துக்களை கூறுபவர்கள் இவர்கள்தான்.

ஷியாக்களும் முஃதஸிசீலாக்களும் தான்
அல்லாஹ்விற்கு உடல் இருக்கிறது என்பதை வாதிட்டவர்கள் இவர்கள்தான் முஜஸ்ஸிமாக்கள், ஹம்பலி உலமாக்கள் மீது இந்த ஷியாக்களால் பலி சுமத்தப்பட்ட பின்பு அனைவரும் ஹம்பலியாக்கள் முஜஸ்ஸிமாக்கள் என்று அழைக்க தொடங்கினர்.

இப்னுல் குல்லாபிடம் ஒரு கொள்கை இருந்தது யார் அல்லாஹ்வின் சிபாத்துகளை (பண்புகளை)மாற்றுக்கருத்துக்கள் சொல்லாமல் (தஃவீல்- تاويل) விளங்குவாரோ அவர் ஷிர்க் வைத்து விட்டார் என்ற வழிகேடான கொள்கை
கொண்டிருந்தார் இவரின் பாதையில் வந்த ஒரு சிலர் இன்னும் திருக்குர்ஆனில் அல்லாஹ்வின் பண்புகள் எங்கெல்லாம் வந்திருக்கிறதோ அதை மாற்றி விளக்கம் அளித்து தங்களை உண்மையான அஷ்அராக்கள் என்று கூறிக் கொள்கின்றனர்.

அஷ்ஷைக் ஸாலிஹ் அல்பௌஸான் ஹஃபிழஹுல்லாஹு அவர்கள் கூறும் பொழுது அஷ்அரியாக்கள் என்று கூறாதீர்கள் காரணம் இமாம் அபுல் ஹசன் அல்அஷ்அரி தான் கொண்டிருந்த வழிகேடான கொள்கையில் இருந்து மீண்டு , தவ்பா செய்து இமாம் அஹ்மத் பின் ஹம்பல் அவர்களின் கொள்கைக்கு திரும்பி விட்டேன் என்று தனது புத்தகமாகிய அல்இபானாவில்- الإبانة عن أصول الديانة
குறிப்பிடுகிறார், அவர் வழிகேடான சிந்தனைகளை பின்பற்றிய பொழுது இப்னுல் குல்லாபின் கொள்கையைச் சார்ந்திருந்தார்கள் அதனால் அல்குல்லாபிய கொள்கைகள் என்று வேண்டுமானால் கூறிக் கொள்ளலாம்.

.

அஷ்அரியாக்களுக்கும் ,மாத்துரிதியாக்களுக்கும் வித்தியாசங்கள் இல்லை என்று சொல்வது உகந்ததல்ல , அவர்கள் இருவருக்கும் ஷிபாத்துகளில் ஏழு எட்டு விடயங்களில் மாற்று கருத்துக்கள் இருக்கின்றன.

உதாரணமாக அபூ மன்ஸுர் ரஹிமஹுல்லாஹ் மாதுரிதியாவின் இமாம் அவர்கள் அல்லாஹ்வுடைய சிப
த்தில் (பண்புகளில்)குர்ஆன் அல்லாஹ்வின் பேச்சு என்று கூறுகிறார்கள் அதேபோன்று அஷாஅராக்களும் குர்ஆன் அல்லாஹ்வின் கலாம் என்று ஏற்றுக் கொள்கிறார்கள் ஆனால் அதற்கு எந்த சப்தமோ வடிவமோ இல்லை என்று கூறுகிறார்கள்.

மாதுரிதியாக்கள் இல்லை குர்ஆன் அதற்கு சத்தமும் வடிவமும் இருக்கிறது என்று கூறுகிறார்கள்.

ஆக முஃதஸலாக்கள் கூறும் குர்ஆன் ஒரு படைப்பு என்ற வாதத்தை நமது சங்கையான அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாஅத் இமாம்கள் மறுத்து அதற்காக பல தண்டனைகளையும் அனுபவித்திருக்கிறார்கள் அதற்கு நல்ல உதாரணம் இமாம் அஹ்மத் பின் ஹம்பல் ரஹிமஹுமுல்லாஹ்.

சிலர் இதை மிக லேசாக எடுத்துக் கொள்கிறார்கள் இதில் எந்த பிரச்சினையுமே இல்லை தேவையில்லாமல் இந்த ஹம்பலிகள் இதை பெரிசு படுத்துகிறார்கள் என்று கடந்து விடுகிறார்கள் ஆனால் மிகவும் தவறான ஒரு கருத்து.

குர்ஆன் படைக்கப்பட்ட ஒன்று என்ற வாதம் மிகவும் அபாயகரமான ஒன்று இதை ஏற்றுக் கொண்டால் பின்னால் சொந்த கருத்துக்கள் திணிக்கப்படலாம் ஏனைய வேதங்களைப் போன்று குர்ஆனும் மாற்றம் அடையலாம் எனவே நமது உலமாக்கள் குர்ஆன் என்பது அல்லாஹ்வின் கலாம் படைக்கப்பட்ட ஒன்று அல்ல அருளப்பட்டது என்று தெளிவாக உறுதியாகச் சொல்லி வந்தார்கள்.

ஆனால் இப்னுல் குல்லாபின் இந்த வழிகேடான கொள்கையை சுமந்திருக்கும் இன்றைய அஷாராக்கள்
தலை சுற்றி மூக்கை தொடும் விதத்தில்
குர்ஆன் அல்லாஹ்வின் கலாம் ஆனால் அதற்கு எந்த எழுத்துக்களோ சப்தமோ இல்லை என்று மறுத்து வழிகேடர்களான முஃதஸிலாக்களின் கொள்கையில் வந்து சேர்கின்றனர்.

எனவே தான் அன்றைய காலத்தில் மாத்துருதியாக்கள் இவர்களை எதிர்த்து மறுத்தனர்.

சுருக்கமாக அல்லாஹ்வின் பண்புகள் ஏழோ அல்லது எட்டோ அல்லது 99 மட்டுமோ அல்ல
எதையெல்லாம் அல்லாஹ் தனது பண்பாக குர்ஆனிலும் சுன்னாவிலும் அறிவித்திருக்கிறானோ அல்லது தானே மறைத்து வைத்திருக்கிறானோ அல்லது அந்த பண்புகள் தனக்கு இல்லை என்று மறுத்து இருக்கிறானோ அவைகள் அனைத்தையும் இறை நம்பிக்கையாளர்கள் மாற்றுக் கருத்துக்கள் சொல்லாமல் படைப்புகளுடன் ஒப்பு உவமை செய்யாமல் அவ்வாறே ஏற்றுக் கொள்வதுதான் ஒரு தூய்மையான அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாஅத்
கொள்கையாகும்.

இன்று தங்களை அஷ்அராக்கள் , மாத்துருதியாக்கள் என்று சொல்லும் சிலர் தவறான சில கொள்கைகளை அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாஅத் கொள்கை என்று வாதிடுகிறார்கள் கவனம் தேவை.

இது வாசிப்பின்மையையும் கண்மூடித்தனமான பின்பற்றுதலையும் குறிக்கிறது.

அந்த காலத்தில் குழப்பம் ஏற்படுத்திய வழிகேடர்களான முஃதஸிலாக்களை 
எதிர்த்த நபர்கள் தங்களை அடையாளப்படுத்த வேண்டி இருந்ததால்
அஷ்அராக்கள் , மாத்துருதியாக்கள் என்று
சொல்லிக் கொண்டார்கள்.

காரணம் அன்றிருந்த அனைத்துக் கூட்டமும் தங்களை அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாஅத் என்று கூறிவந்தது.

வேறொரு சந்தர்ப்பத்தில் அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாஅத் யார் என்ற தலைப்பில் விரிவாக பேசுகிறேன்.

அஷ்அராக்கள் , மாத்துருதியாக்களும் உண்மையான குர்ஆன் ஹதீஸின் அடிப்படையில் அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாத் கொள்கையில் தங்கள் வாதத்தை முன் வைத்தால் அவர்களும் அஹ்லுஸ் ஸுன்னாவை சார்ந்தவர்களே ஏழு அல்லது எட்டு என்ற எண்ணிக்கையில் அல்லாஹ்வின் பண்புகளை எண்ண ஆரம்பித்தார்கள் என்றால் அப்பொழுது அவர்கள் வழி தவறுகிறார்கள் என்று அர்த்தம்.

நமது முன்னோர்களான சஹாபாக்களும் அவர்களின் பாதையில் பயணித்த தாபியீன்கள் சங்கையான நான்கு மத்ஹபுகளின் இமாம்கள் இஸ்லாமிய கொள்கை விடயத்தில் அல்லாஹ்வின் ஷிபாத்துகளான பண்புகளில் எந்தவிதமான மாற்றுக் கருத்துகளோ பண்புகளை இல்லாமல் ஆக்குவதோ படைப்பினங்களுடன் ஒப்புவுமையோ செய்யாமல் ஏற்றுக் கொண்டார்கள்.

உதாரணமாக இமாம் மாலிக் ரஹிமஹுமுல்லாஹ்

اَلرَّحْمٰنُ عَلَى الْعَرْشِ اسْتَوٰى‏
(அவற்றை படைத்த) ரஹ்மான் (ஆகிய அல்லாஹ்) அர்ஷின் மீது (தன் மகிமைக்குத் தக்கவாறு) உயர்ந்துவிட்டான்.
(அல்குர்ஆன் : 20:5)

என்ற வசனத்திற்கு கீழ் வருமாறு விளக்கம் அளிக்கிறார்கள்.

அர்ஷில் ரஹ்மானின் இஸ்திவா -சமமாகுதல் / உயர்தல் / அமர்தல் என்பது இந்த வசனத்தின் மூலம் அறியபட்டிருக்கின்றது 
ஆனால் எவ்வாறு சமமாகுதல் என்பது  அறியப்படாததாக இருக்கின்றது ,ஆனால் அல்லாஹாவின்  இஸ்திவா என்பதை  நம்புவது (ஈமான் கொள்வது) அவசியம் (வாஜிப்) அது எவ்வாறு என்று கேள்வி கேட்பது அனாச்சாரம் (பித்அத்).
‎شرح لمعة الاعتقاد للمحمود -6/9

நூல் -இப்னு குஸைமா 
பகுதி -ஏகத்துவம் 
பக்கம் -105
இன்னும் 
நூல் -பைஹகீ 
பகுதி -அஸ்மா வா சிபாத்
பக்கம் -401 

இது போன்ற நமது முன்னோர்களின் புத்தகங்களில் இவ்வாறு தான் நாம்
அல்லாஹ்வின் ஷிஃபாத்துகளிலும் பண்புகளிலும் கொள்கையை கொண்டிருக்கிறோம்.

இறைவன் பண்புகளில் குர்ஆனிலும் ஹதீஸிலும் தன்னை பற்றி சொல்லும் பொழுது அதை மாற்றுக்கருத்து கூறி விளக்கப்படுத்தாமல் அவ்வாறே விளங்க வேண்டும் என்ற கொள்கையில் நமது இமாம்களும் இருந்திருக்கிறார்கள் என்பதற்கு உதாரணம்தான் ....

இமாம் அபூ ஹனீஃபா ரஹிமஹுமுல்லாஹ் கூறுகிறார்கள் இறைவனின் கரம் என்று எங்கு வந்திருக்கிறதோ அதை வலிமை என்றும் அருட்கொடை என்றும் சொல்லக்கூடாது அவ்வாறு சொன்னால் அல்லாஹ்வின் ஒரு பண்பை இல்லாமல் ஆக்கியதாக கருதப்படும் இது வழிகேடர்களின் செயலாகும்.

பார்க்க - அல்ஃபிக்ஹுல் அக்பர்- 203 

قال الإمام أبو حنيفة: ولا يقال إن يده قدرته أو نعمته لأنَّ فيه إبطال صفة، وهو قول أهل القدر والاعتزال. 

[الفقه الأكبر ص302]

வேடிக்கையான விடயம் என்னவென்றால் அசத்தியவாதிகளான பரேல்விகள் இது இமாம் அபூஹனீபா ரஹிமஹுல்லாஹ் அவர்கள் சொன்ன கருத்தல்ல இடை சொருகுதல் என்று சத்தியத்தை மறுக்கிறார்கள்.

நம்மிடத்தில் சங்கையான 4 மத்ஹபுகளின் இமாம்கள் இறை பண்புகள் விடயத்தில் எந்த கொள்கையில் இருந்தார்கள் அன்பருக்கு எக்கச்சக்கமான ஆதாரங்கள் இருக்கின்றன அனைத்து இங்கு கூறுவது இயலாது ஒன்று.

இதோ ஹனபி மத்ஹபின்  சிறந்த அறிஞராக இருக்கக் கூடிய உள்ள அலீ காரி ரஹிமஹுல்லாஹ் மிஷ்காத்துல் மஸாபீஹ் நபி மொழி கிரந்தத்திற்கு விளக்க உரையாக மிர்காதுல் மபாஃதீஹில் 8 வது வால்யத்தில் 152 ஆம் பக்கத்தில் பின்வருமாறு கூறுகிறார்கள்...

இமாம் மாலிக் அவர்களின் கூற்றான அல்லாஹ் அர்ஷில் இருக்கிறான் என்பது தெளிவாக ஆகிறது நான் எப்படி இருக்கிறான் என்று தெரியவில்லை என்ற இந்த பிரபலியமான கூற்றுக்கு விளக்கம் சொல்லும் பொழுது நமது மகத்துவமிக்க இமாமாகிய அபூஹனீஃபா ரஹிமஹுல்லாஹ் அவர்களும் இந்த கூற்றையே தெரிவு செய்திருக்கிறார்கள், திருக்குர்ஆனில் இருந்தும் நபிமொழிகளில் இருந்தும் வரக்கூடிய கரம் கண் முகம் போன்ற இறைவனின் பண்புகளை வந்திருப்பது போன்றே விளங்க வேண்டும் எவ்வாறு என்று கேட்கக் கூடாது படைப்பினங்களோடு ஒப்பிடக்கூடாது,

இறைவன் தனது பண்புகளை தானே முன்வந்து திருக்குர்ஆனில் நபி மொழிகளில் கூறி இருப்பதை மாற்றி அமைத்து விளக்கம் கூறாமல் பண்புகளை இல்லாமல் ஆக்காமல் இவ்வாறு அவ்வாறு என்று விளக்கம் சொல்லாமல் உதாரணங்கள் ஒப்புவுவமை சொல்லாமல் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

இதுதான் பிரயோஜனம் அளிக்க கூடிய பாதுகாப்பான ஒரு விடயமாகும்.

 قال الملاَّ علىُّ القاري بعد ذكره قول الإمام مالك:  "الاستواء معلوم والكيف مجهول…" : اختاره إمامنا الأعظم - أي أبو حنيفة - وكذا كل ما ورد من الآيات والأحاديث المتشابهات من ذكر اليد والعين والوجه ونحوها من الصفات. فمعاني الصفات كلها معلومة وأما كيفيتها فغير معقولة؛ إذْ تَعقُّل الكيف فرع العلم لكيفية الذات وكنهها. فإذا كان ذلك غير معلوم؛ فكيف يعقل لهم كيفية الصفات. والعصمة النَّافعة من هذا الباب أن يصف الله بما وصف به نفسه، ووصفه به رسوله من غير تحريف ولا تعطيل ومن غير تكييف ولا تمثيل، بل يثبت له الأسماء والصفات وينفي عنه مشابهة المخلوقات، فيكون إثباتك منزهاً عن التشبيه، ونفيك منزَّهاً عن التعطيل. فمن نفى حقيقة الاستواء فهو معطل ومن شبَّهه باستواء المخلوقات على المخلوق فهو مشبِّه، ومن قال استواء ليس كمثله شيء فهو الموحِّد المنزه.  [مرقاة المفاتيح شرح مشكاة المصابيح ج٨ ص٢٥١]   
--------
عقيدة الأئمة الأربعة في الأسماء والصفات - المجلد 1 - الصفحة 5 - جامع الكتب الإسلامية
https://ketabonline.com/ar/books/10090/read?
page=5&part=1#p-10090-5-1

எகிப்தின் அல்அஷ்ஹர் இஸ்லாமிய பல்கலைக்கழகத்தில் பல ஆண்டுகள் பேராசிரியராக பணி செய்த 1975 ஆம் ஆண்டு மரணித்த அஷ்ஷைக் முஹம்மது கலீல் ஹர்ராஸ் ஏனைய எகிப்திய உலமாக்களை போன்று இமாம் இப்னு தைமியா ரஹிமஹுல்லாஹ் அவர்களைத் தவறாக விளங்கி வைத்திருந்தார்கள் அஷ்அரிய கொள்கையில் இருந்தார்கள்,

தனது முனைவர் ஆய்வில் (PhD) அஷ்அரியாக்களை விமர்சித்த இப்னு தைமியாவை விமர்சிப்பதற்கும் தலைப்பில் ஆய்வை ஆரம்பித்து பின்பு இப்னு தைமியா ரஹிமஹுல்லாஹ் அவர்களின் கல்வி ஞானத்தை உணர்ந்து அவரின் மீது நேசத்தை அதிகமாகி உண்மையான அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாஅத் கொள்கை எது என்ற பல தலைப்புகளில் புத்தகங்களை எழுத ஆரம்பித்தார்,

இவரின் சேவையை கருத்தில் கொண்டு சவுதி அரசாங்கம் சவுதி பல்கலைக்கழகங்களில் பல வருட காலம் பேராசிரியராக பணியாற்ற வாய்ப்புகள் வழங்கியது ,
இவரின் கரங்களிலிருந்து பல பல தலை சிறந்த உலமாக்கள் பட்டம் பெற்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது 

(الشيخ محمد أمان الجامي.
 د. عبد الفتاح سلامة.
الشيخ علي بن ناصر الفقيهي.)

எகிப்து நாட்டைச் சேர்ந்த வேறோரு அறிஞர் முஹம்மது கஸ்ஸாலி ரஹிமஹுல்லாஹ் அவர்களை உதாரணமாக காணலாம், இவர்கள் தங்களின் புத்தகமான அத்தஃவா அல்இஸ்லாமிய்யாவில்
كتاب : الدعوة الإسلامية في
 القرن الحالي فضيلة الشيخ محمد الغزالي 

அல்அஷ்ஹர் இஸ்லாமிய பல்கலைக்கழகம் இஸ்லாமிய கல்வி களில் கவனம் செலுத்திக் கொண்டிருக்கும் காலத்தில் அரபு உலகில் ஏற்பட்ட பல சீர்கேடுகளில் அக்கறையில்லாமல் இருந்தார்கள் இமாம் முஹம்மத் இப்னு அப்துல் வஹ்ஹாப் அந்நஜ்தி ரஹிமஹுல்லாஹ் மட்டுமே மிகப்பெரிய ஒரு புரட்சியை செய்து வெற்றி பெற்றார்கள் என்று குறிப்பிடுகிறார்கள்.

இணைவைத்தலையும் இஸ்லாமிய பெயரில் அரங்கேற்றப்பட்ட பல  அனாச்சாரங்களையும் தட்டிக் கேட்க உலமாக்களுக்கு இன்று வரை வஹ்ஹாபிகள் இன்று இந்த இமாமின் பெயரை வைத்து தான் குறிப்பிடுகிறார்கள்.

இந்தியாவில் இருக்கும் தாருல் உலூம் நத்வதுல் உலமா இஸ்லாமிய பல்கலைக்கழகமும் உண்மையான அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாஅத் கொள்கையில்தான் பயணித்துக் கொண்டிருக்கிறது, அஷ்அரிய ,மாத்துருதிய கொள்கையில் அல்ல,
 
சமீபமாக வஃபாதான நத்வாவின் முன்னால் தலைவர்அறிஞர் முஹம்மது ராபிஃ அல்ஹஸனி நத்வி  ரஹிமஹுல்லாஹ் நத்வாவின் சிந்தனைகளும் ,கொள்கைகளும் என்று எழுதி இருக்கிறார்கள் 
(ندوة العلماء فكرتها و منهجها )

இமாம் அபுல் ஹசன் நத்வி ரஹிமஹுல்லாஹ் அவர்களின் பிரபலமான அரபு புத்தகமான ரிஸாலதுத் தவ்ஹீதிலும் (رسالة التوحيد)
தாங்களும் தங்களது உலமாக்களும் சரியான இஸ்லாமிய அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாஅத் கொள்கையில் இருப்பதாக சுட்டிக் காட்டி இருக்கிறார்கள், அதில் தங்களை அஷ்அரியாக்களாகவோ,மாதுரிதியாக்களாகவோ அடையாளப் படுத்தவில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்க ஒன்று.

இந்தியாவிற்கு ஹதீஸ்கலையை முறையாக அறிமுகப்படுத்திய இமாம் ஷாஹ் வலியுல்லாஹ் ரஹிமஹுல்லாஹ் தங்களின் கொள்கையை தங்களது பல புத்தகங்களில் குறிப்பிட்டு இருக்கிறார்கள்,

அவர்களும் தங்களை அஷ்அரியாக்களாகவோ,மாதுரிதியாக்களாகவோ அடையாளப் படுத்தவில்லை, காரணம் புனித ஹஜ்ஜுக்கு சென்ற பின்பு அரபு உலாமாக்களிடமிருந்து ஹதீஸ்களை முறையாக படித்து அனுமதி பெற்று மெய்யான அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாஅத் கொள்கையை பற்றி பிடித்தார்கள்.

இது அவர்களின் ஹுஜ்ஜதுல்லாஹ் அல்பாலிகாவில்(حجة الله البالغة) 
பார்கலாம்.

ஆக உலகளாவிய நமது அறிஞர் பெருமக்களும், இந்திய துணை கண்டத்தின் பெரும் அறிஞர்களும் முறையான இஸ்லாமிய கொள்கைகள் இருந்து வந்திருக்கிறார்கள் என்று தெளிவாக வரலாற்று பக்கங்களில் எழுதப்பட்டிருக்கிறது.

பின் வந்தவர்கள் தங்கள் மன இச்சைக்கு ஏற்ப பல குழுக்களாக பல சிந்தனை சித்தாந்த பள்ளிகளாக மாற்றிக் கொண்டனர் என்பதே உண்மை இதற்கு மூல புத்தகமான அரபு மொழியில் பல புத்தகங்களை விருப்புவெறுப்பின்றி வாசிக்க வேண்டும்.

ஏதோ ஒரு சில ஆங்கில ,தமிழ் புத்தகங்களை படித்துவிட்டு தனது புத்திக்கப்பட்ட விஷயங்களை எழுதுவதும் அதை விமர்சிப்பதும் அறியாமை என்று நமக்கு தெளிவு படுத்துகிறது.

இது போன்ற இன்னும் பல இமாம்களின் கருத்துக்களை ஒன்று திரட்டினாலும் அசத்தியவாதிகள் ஏற்றுக் கொள்வதற்கு தயாராக இல்லை.

ஆக நமது கட்டுரை சற்று நீண்டு விட்டது,
இஸ்லாமிய கொள்கையில் இன்னும் அதிகமாக வாசிப்புகளும் ஆய்வுகளும் தேவை என்பது கசப்பான ஒரு உண்மை.

அல்லாஹு அஃலம்.
Previous Post Next Post