இமாம் அல்லாமா அஷ்ஷைக் ஸாலிஹ் உதைமீன் ரஹிமஹுல்லாஹ் அவர்களிடம் ஒருவர் வந்து அல்லாஹுத்தஆலா ஒரு மனிதரை படைப்பதற்கு முன்பே தாயின் வயிற்றில் அவருக்கு உயிர் ஊதப்படுவதற்கு முன்பே அவரது நல்ல கெட்ட செயல்கள், ரிஜ்கு, வாழ்வாதாரம், ஆயுள் காலம், அவர் மரணிக்கும் போது சொர்க்கவாதியாகவா அல்லது நரகவாதியாக வா மரணிப்பார் ஆகிய நான்கு விடயங்களையும் அல்லாஹ் முன்கூட்டியே தீர்மானித்து விடுகின்றான் என்ற ஸஹீஹுல் புகாரியில் இடம் பெறும் ஹதீஸை சுட்டிக்காட்டி ஒருவன் பிறப்பதற்கு முன்பே அவன் என்னென்ன செயல்களில் ஈடுபடுவான் என்பது கழாவில் தீர்மானிக்கப்பட்டிருப்பதால் அவன் கஷ்டப்பட்டு நல்ல அமல்கள் செய்ய வேண்டிய- தீயவற்றை விட வேண்டிய தேவை என்ன எல்லாமே விதியில் எழுதப்பட்டது போல நடந்து வரட்டும் என்று இருந்து விட முடியாதா?? என்று வினவினார் அதற்கு இமாமவர்கள் அல்லாஹ் உன் செயல்களை மட்டுமல்ல உன் ரிஸ்க்கையும் முன்கூட்டியே தீர்மானித்து விட்டான் தானே! எனவே நீ உழைக்காமல் பொருள் சேர்க்காமல் உத்தியோகத்துக்கு செல்லாமல் அல்லாஹ் உணவை உன் வீட்டுக்கு கொண்டு வந்து தருவான் என்று வீட்டில் இருக்கலாம் தானே! அவ்வாறு நீ செய்வாயா? இல்லையெனில் இதே பதில்தான் நீ கேட்ட கேள்விக்கும் என்று வாயடைக்க வைத்தார்கள்.
விதி விடயத்தில் குழப்பமடைந்து வழி தவறி சென்றவர்கள் ஏராளம்.
இவ்வாறு தான் உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் ஆட்சிக் காலத்தில் ஒரு திருடன் களவாடிய குற்றத்துக்காக கைது செய்யப்பட்டு அழைத்து வரப்பட்டார். கலீபா உமர் அவர்கள் அவனை தீரவிசாரித்து விட்டு அவனுக்கு வலது கரத்தை துண்டிக்குமாறு தீர்ப்பளித்தார்கள். அதனை மறுதலித்த அவன் கலீபாவே! அல்லாஹ் உலகைப் படைப்பதற்கு 50,000 வருடங்களுக்கு முன்பே தீர்மானித்துவிட்ட, எனது கழாவில் எழுதிவிட்ட ஒரு விடயத்தை நான் அமல்படுத்தியது குற்றமா? நான் அல்லாஹ் அன்று தீர்மானித்ததையே இன்று செய்துள்ளேன். நான் குற்றவாளி அல்ல எனக்கு தண்டனை தருவது அநீதியானது என வாதிட்டான். உடனே உமர் ரலி அவர்கள் நீ திருடுவாய் என்பதை ஐம்பதாயிரம் வருடங்களுக்கு முன் எழுதிய அதே அல்லாஹ் தான் அக்குற்றச் செயலுக்காக உமர் உனது கைகளை வெட்டுவார் என்றும் எழுதி விட்டான். இப்போது அதை நான் நிறைவேற்றாவிடில் கழாகத்ர் பொய்யாகி விடுமே! எனவே நீ திருடியதும் விதியில் எழுதப்பட்டதன்படியே நான் உன் கையை வெட்டியதும் வீதியில் எழுதப்பட்டது அமைவாகவே!! என்று கூறிக்கொண்டு தண்டனையை நிறைவேற்ற உத்தரவிட்டார்கள்.
பொதுவாக சைத்தான் பாமர மக்களை மெல்ல அமல்களில் இருந்து தூரமாக்கி பாவக்காரியங்களுக்குள் சிக்க வைப்பதற்கு பயன்படுத்தும் ஒரு ஆயுதமே கழா கத்ர்- விதி சம்பந்தமான தேவையற்ற சந்தேகங்களை அவனுடைய மனதில் ஊசலாட வைப்பது..
இஸ்லாமிய வரலாற்றில் விதி விடயத்தில் இரண்டு கூட்டத்தினர் ஒவ்வொருவராக வழிகேட்டுக்கு சென்றார்கள். ஒரு கூட்டம் கதரிய்யா எனப்படுவர். இவர்கள் கழா கத்ர், முன்னேற்பாடு, விதி என்று எதுவுமே முன்கூட்டி தீர்மானிக்கப்படுவதில்லை அனைத்துமே அவ்வப்போது நடந்து கொண்டிருக்கின்றது என்று வாதிடுகின்றனர்.
மற்றுமொரு கூட்டம் ஜபரியாக்கள் எனப்படுவர். இவர்கள் மனிதனுக்கு சுய விருப்பத்தெரிவு என்ற ஒன்றே கிடையாது. அனைத்தும் விதிப்படி நடந்தது கொண்டிருக்கின்றது. விதியின் முன் ஒரு மனிதன் ஜனாசாவை குளிப்பாட்டுபவனின் முன் வைக்கப்பட்ட சடலத்தைப் போன்றவன். அவனுக்கு எவ்வித விருப்பத்தெரிவோ, சுய நிர்ணய உரிமையோ கிடையாது. எனவே மனிதன் செய்யும் எந்த செயலுக்கும் அவன் பொறுப்பல்ல அவனை தண்டிக்கவும் முடியாது என்று வாதிடுபவர்கள்
ஆக இவ்விரு கூட்டத்தினருமே ஈமான் நம்பிக்கை சார்ந்த அல்லாஹ்வின் சட்டங்களை மறுதலித்து குறை கண்டதால் வழி தவறியவர்களாக அடையாளப்படுத்தப்படுகின்றார்கள்.