ஷஃபான் 15ம் இரவு பற்றிய சரியான நிலைப்பாடு (அறிஞர்களின் மார்க்கத் தீர்ப்புகளிலிருந்து)

 بسم الله الرحمن الرحيم


بسم الله الرحمن الرحيم

ஷஃபான் 15ம் இரவு பற்றிய சரியான நிலைப்பாடு (அறிஞர்களின் மார்க்கத் தீர்ப்புகளிலிருந்து)
_____________________

1. அப்துர்ரஹ்மான் இப்னு ஸைத் இப்னு அஸ்லம் (ரஹிமஹுல்லாஹ்)  (தபஉத் தாபிஈன்களில் ஒருவர்)

எமது ஆசிரியர்களிலும் அறிஞர்களிலும் எவரும் ஷஃபானின் நடு இரவு விடயத்தில் கவனம் செலுத்தியதாக நாம் அறியவில்லை. மக்ஹூல் என்பவர் (ஷஃபான் தொடர்பாக) கூறிய ஹதீஸை வேறு எவரும் கூறவில்லை. ஏனைய இரவுகளை விட இந்த இரவுக்கு சிறப்பு இருப்பதாக அவர்களில் யாரும் கருதவில்லை.

பார்க்க: இப்னு வழ்ழாஹ் அவர்களின் "அல்பிதஃ" (92)

2. அபுல் ஹத்தாப் அல்கல்பீ (ரஹிமஹுல்லாஹ்)

ஷஃபானின் நடு இரவின் சிறப்பு தொடர்பாக எந்தவொரு ஆதாரபூர்வமான ஹதீஸும் இல்லையென ஹதீஸ் விமர்சன அறிஞர்கள் குறிப்பிட்டுள்ளனர். 

பார்க்க: மா ஸஹ்ஹ வஸ்தபான பீ பளாஇலி ஷஹ்ரி ஷஃபான் (43)

3. அபூபக்ர் இப்னுல் அல்அரபீ (ரஹிமஹுல்லாஹ்)

ஷஃபானின் நடு இரவு பற்றியும், அதனுடைய சிறப்பு பற்றியும் அதிலே மனிதர்களின் தவணைகள் மாற்றப்படுவது பற்றியும் எந்தவொரு ஹதீஸும் இல்லை.

பார்க்க: அஹ்காமுல் குர்ஆன் (4/117)

4. இப்னு அபீமுலைகா ரஹிமஹுல்லாஹ்

ஸியாத் அந்நுமைரீ என்பவர் "ஷஃபான் நடு இரவில் வணக்கம் புரிவதின் கூலி லைலதுல் கத்ரில் வணக்கம் புரிவதின் கூலி போன்றாகும்" என்று கூறுவதாக இப்னு அபீமுலைகா ரஹிமஹுல்லாஹ் அவர்களிடம் சொல்லப்பட்டது. அப்போது அவர் "ஸியாத் இவ்வாறு கூறுவதை நான் கேட்கும் போது எனது கையில் தடி இருந்தால் அதனால் அவருக்கு அடித்திருப்பேன்" என்று கூறினார். இப்னு அபீமுலைகா ரஹிமஹுல்லாஹ் அந்த சமயத்தில் நீதிபதியாக இருந்தார். 

பார்க்க: அல்ஹவாதிஸ் வல்பிதஃ (263) 

5. அஷ்ஷெய்ஹ் இப்னு பாஸ் (ரஹிமஹுல்லாஹ்)

ஷஃபானின் நடு இரவு குறித்து எந்தவொரு ஆதாரபூர்வமான ஹதீஸ்களும் இல்லை. அது குறித்து வரக்கூடிய சகல ஹதீஸ்களும் இட்டுக்கட்டப்பட்டதாகவும் பலவீனம் கொண்டதாகவுமே இருக்கின்றன. எனவே, இந்த இரவைக் குறிப்பாக்கி விஷேட ஓதல்கள், தொழுகை, ஒன்றுகூடல்கள் போன்றவற்றுக்கு எந்த தனிச்சிறப்பும் இல்லை. இந்த இரவுக்கு தனிச்சிறப்பு இருப்பதாக சில அறிஞர்கள் கூறியது பலவீனமான கருத்தாகும். இது தொடர்பாக பலவீனமான ஹதீஸ்களே வந்துள்ளன. அவை ஆதாரபூர்வமற்ற செய்திகளாகும். எனவே, ஷஃபானின் நடு இரவை எந்தவொரு வணக்கத்தைக் கொண்டும் விஷேடப்படுத்த முடியாது. இதுவே சரியான கருத்து.

பார்க்க: இணையதளம் https://binbaz.org.sa

6. அஷ்ஷெய்ஹ் நாஸிருத்தீன் அல்பானீ (ரஹிமஹுல்லாஹ்)

ஷஃபானின் நடு இரவுக்கு முக்கியத்துவம் வழங்கி அதை விஷேடப்படுத்துவது அவசியமற்றது. அதனுடைய சிறப்பு குறித்து எந்தவொரு ஆதாரபூர்வமான செய்திகளும் இல்லை. பின்வந்தோர் இந்த இரவுக்கு முக்கியத்துவம் செலுத்துவது போன்று நல்வழி சென்ற ஸலபுஸ்ஸாலிஹீன்கள் இந்த இரவுக்கு முக்கியத்துவம் வழங்கியதாக நாம் கேள்விப்பட்டதில்லை.

பார்க்க: ஸில்ஸிலதுல் ஹுதா வந்நூர் (186)

7. அஷ்ஷெய்ஹ் இப்னு உஸைமீன் (ரஹிமஹுல்லாஹ்)

ஷஃபானின் நடு இரவின் சிறப்பு குறித்து வரக்கூடிய சகல செய்திகளும் பலவீனமானவை. அவற்றை ஆதாரமாகக் கொள்ள முடியாது. அவற்றில் சில செய்திகள் இட்டுக்கட்டப்பட்டவை. நபித்தோழர்கள் இந்த இரவை கண்ணியப்படுத்தியதாகவோ, இந்த இரவை அமல்களைக் கொண்டு விஷேடப்படுத்தியதாகவோ அறியப்படவில்லை. ஷஃபானின் நடு இரவு ஏனைய இரவுகளைப் போன்ற ஒரு இரவு என்பதே சரியான கருத்தாகும். 

பார்க்க: லிகாஉல் பாபில் மப்தூஹ் (115)

8. அல்லஜ்னதுத் தாஇமா அறிஞர்களின் தீர்ப்பு

விஷேட துஆக்களைக் கொண்டும் வணக்க வழிபாடுகளைக் கொண்டும் ஷஃபானின் நடு இரவைக் குறிப்பாக்குவது பற்றி ஆதாரபூர்வமான எந்தவொரு செய்தியும் உறுதி செய்யப்படவில்லை. எனவே, அவ்வாறு குறிப்பாக்குவது பித்அத் ஆகும். ஏனெனில் நபியவர்கள் கூறினார்கள் "ஒவ்வொரு நூதன அனுஷ்டானங்களும் பித்அத்தாகும். ஒவ்வொரு பித்அத்களும் வழிகேடாகும்."

பார்க்க: பதாவா அல்லஜ்னதுத் தாஇமா (21264)

9. அஷ்ஷெய்ஹ் முக்பில் அல்வாதிஈ (ரஹிமஹுல்லாஹ்)

பிறந்த நாள் கொண்டாட்டம், ஷஃபானின் நடு இரவைக் கொண்டாடுதல், ரஜப் 27ம் நாளில் இஸ்ரா, மிஃராஜ் இடம்பெற்றது என்ற நம்பிக்கையில் அத்தினத்தைக் கொண்டாடுதல் போன்றவை ஹதீஸ்களில் உறுதி செய்யப்படவில்லை.

பார்க்க: இணையதளம் muqbil.net

10. அஷ்ஷெய்ஹ் ஸாலிஹ் அல்பவ்ஸான் (ஹபிளஹுல்லாஹ்)

ஷஃபான் மாதத்தின் நடு இரவு அல்லது அதனுடைய பகல் நேரத்தின் சிறப்பு பற்றிய ஆதாரபூர்வமான ஹதீஸ்கள் இல்லை. எனவே, குறிப்பாக ஷஃபானின் நடு இரவை விஷேடப்படுத்தி இரவுத் தொழுகைகளில் ஈடுபடக்கூடாது. வழமையாக இரவுத் தொழுகை தொழக்கூடியவர் ஏனைய நாட்களைப் போன்று ஷஃபானின் நடு இரவிலும் தொழுது கொள்ளட்டும். அதற்கு மாறாக இவ்விரவை விஷேடப்படுத்தி அதற்கு குறிப்பான இரவுத் தொழுகையில் ஈடுபடுவது பித்அத்தாகும். இத்தினத்தை சிறப்பித்து விஷேட நோன்பு நோற்பதும் பித்அத்தாகும். வழமையாக அய்யாமுல் பீழ் தினங்களில் நோன்பு நோற்பவராக இருந்தால் அவர் ஷஃபானிலும்  அதுபோல் ஏனைய மாதங்களிலும் அந்த நோன்புகளை நோற்கலாம்.

பார்க்க: இணையதளம் alfawzan.af.org.sa

11. அஷ்ஷெய்ஹ் அப்துல் முஹ்ஸின் அல்அப்பாத் (ஹபிளஹுல்லாஹ்)

ஷஃபானின் நடு இரவின் சிறப்பு குறித்து விஷேடப்படுத்தி வரக்கூடிய செய்திகள் ஆதாரபூர்வமற்றவை. இது தொடர்பாக எமது ஆசிரியர் அஷ்ஷெய்ஹ் அப்துல் அஸீஸ் இப்னு பாஸ் (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் "பித்அத்களிலிருந்து எச்சரிக்கையாக இருத்தல்" என்ற நூலில் ஒர் ஆக்கத்தை எழுதியுள்ளார். ஏனைய அவருடைய ஆக்கங்களுடன் இந்த நூலும் அச்சிடப்பட்டுள்ளது.

பார்க்க: இணையதளம் (அஷ்ஷபகதுல் இஸ்லாமிய்யா)

12. அஷ்ஷெய்ஹ் அப்துர்ரஸ்ஸாக் அல்பத்ர் (ஹபிளஹுல்லாஹ்)

ஏனைய நாட்களை விட ஷஃபான் நடு இரவை தொழுகையைக் கொண்டும் இரவுத் தொழுகையைக் கொண்டும் விஷேசமாக குறிப்பாக்குவது, அந்த இரவை விஷேட திக்ர், துஆக்களைக் கொண்டு உயிர்ப்பிப்பது மார்க்கத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட செயல்களாகும். இதை நபியவர்கள் செய்யவில்லை. நபித்தோழர்களும் செய்யவில்லை. அவர்கள் செய்திருந்தால் அது சரியான அறிவிப்பாளர் வரிசையின் மூலம் எமக்கு கிடைத்திருக்கும்.

பார்க்க: அஷ்ஷெய்ஹ் அப்துர்ரஸ்ஸாக் அவர்கள் நிகழ்த்திய குத்பா பிரசங்கம் (27/06/2012) இணையதளம் islamekk.net 

13. அஷ்ஷெய்ஹ் சுலைமான் அர்ருஹைலீ (ஹபிளஹுல்லாஹ்)

ஷஃபானின் 15ம் இரவையோ அல்லது அதனுடைய பகலையோ அமல்களைக் கொண்டு அல்லது வார்த்தைகளைக் கொண்டு விஷேடப்படுத்துவது ஹதீஸ்களில் உறுதி செய்யப்படவில்லை. ஏனைய நாட்களில் எதுவெல்லாம் மார்க்க கடமைகளாக இருக்குமோ அவைகளே இந்த நாளிலும் மார்க்கமாக இருக்கும். விஷேட இரவுத் தொழுகை, நோன்பு, தர்மம், துஆ, உணவளித்தல் ஆகிய செயல்களைக் கொண்டு இத்தினத்தை குறிப்பாக்க முடியாது. "ஷஃபான் 15ம் நாளில் நோன்பு பிடியுங்கள், அதனுடைய இரவில் நின்று வணங்குங்கள்" என்ற செய்தி ஹதீஸ் கலை மேதைகளிடம் பலவீனமானதாகும். அவர்களில் ஒரு சாரார் இது இட்டுக்கட்டப்பட்ட செய்தி என்றும் கூறியுள்ளனர். 

பார்க்க: சுலைமான் ருஹைலீ அவர்களின் சமூக வலைதளம் (sukaruhaily)
___________________

-அஸ்கி அல்கமி (பலகத்துறை-இலங்கை)
Previous Post Next Post