அழைப்புப் பணியின் அவசியம்


– எஸ்.எச்.எம். இஸ்மாயில் (ஸலபி)

மனிதன் இயல்பிலேயே தவறு செய்யக் கூடியவனாகப் படைக்கப்பட்டுள்ளான். பெரும் பாவங்களிலிருந்து பாதுகாக்கப்பட்டவர்கள் நபிமார்கள் மட்டுமே! எனவே, தவறு செய்யும் இயல்புடைய மனிதனுக்கு நன்மையை ஏவுவதும், தீமை குறித்து எச்சரிக்கை செய்வதும் அவசியமாகும்.

நாலுபேர் எடுத்துச் சொன்னால் தனது நடத்தைகளையும், செயற்பாடுகளையும் மாற்றிக் கொள்ளும், அல்லது அதுகுறித்து நடுநிலையோடு சிந்திக்கும் மனோ நிலையுடனேயே மனிதன் படைக்கப்பட்டுள்ளான். “இதைச் செய்யுங்கள்” அல்லது “அதைச் செய்யாதீர்கள்” என பலரால் அல்லது பலவிடுத்தம் வேண்டப்பட்டால் அதற்கு இணங்கி நடக்க, தீயவன்கூட முற்படலாம். அடிமேல் அடி அடித்தால் அம்மியும் நகரும் என்பது பழமொழியாகும். மனிதனது இந்த மனோ இயல்பைப் பயன்படுத்தி அவனிடம் எழுச்சி பெறும் தீய உணர்வுகளை அழிக்கவும், அடக்கவும் மங்கி மறைந்து செல்லும் நல்லனவற்றை துலக்கி மெருகூட்டவும் அழைப்புப்பணி அவசியமாகின்றது.

மனிதர்களிலேயே சிலர் இருக்கின்றனர். அவர்கள் மற்றவர்கள் மனதில் தீய சிந்தனைகளை விதைப்பதையே வினையாகக் கொண்டவர்கள். அத்தகையவர்கள் உலோபித்தனம் செய்வார்கள்; (மற்ற) மனிதர்களை உலோபித்தனம் செய்யும்படியும் தூண்டுவார்கள். அல்லாஹ் தன் பேரருளிலிருந்து தங்களுக்குக் கொடுத்ததை (பிறருக்குக் கொடுக்காமல்) மறைத்தும் கொள்வார்கள் அத்தகைய காபிர்களுக்கு இழிவுதரும் வேதைனையை நாம் சித்தப்படுத்தியுள்ளோம் (4:37) (பார்க்க 57:24) என்று கூறுகிறான்.

“அல்லாஹ்வின் பாதையைவிட்டும் மக்களைத் தடுக்கின்றான்” (4:167, 9:9, 47: 32)
இம்மறை வசனங்கள் தீமையை ஏவி நன்மையைத் தடுக்கும் சில மனிதர்களும் மக்கள் மத்தியில் இருப்பதை உறுதிப்படுத்துகின்றன.

இவ்வாறே “முனாபிக்”கான ஆண்களும் பெண்களும் நன்மையைத் தடுப்பதிலும், தீமையை ஏவுவதிலும் ஒருவர் மற்றவருக்குத் துணையாக இருப்பதாக” அல்குர்ஆன் கூறுகின்றது. (9:67)
தீமையை ஏவி நன்மையத் தடுக்கும் இச்சூழலில் தஃவாவின் அவசியம் அத்தியவசியமாகின்றது.

மக்கள் நன்மைகளை விட்டும் வெகுவேகமாக வெருண்டோடிக் கொண்டிருக்கின்றனர். தீமைகளில் கிடைக்கும் அற்பசுகம், உலகாதாயம் என்பவற்றால் கவரப்பட்டு விளக்கை நோக்கிச் செல்லும் விட்டில்களாக தீமைகளை நோக்கி மக்கள் சென்று கொண்டிருக்கின்றனர்.

இதேவேளை ஷைய்த்தானின் தோழர்கள் நரகத்தின் வாயில்களில் நின்று கொண்டு அதன்பால் மக்களை அழைக்கும் பிரச்சாரத்தை மூலை முடுக்கெல்லாம் முடுக்கிவிட்டுள்ளனர்.

வட்டி ஹராம் என்பது இஸ்லாமிய பொருளாதாரக் கோட்பாட்டின் அடிப்படையாகும். இந்த வட்டியின் பக்கம் வாருங்கள் என தொலைக்காட்சி, வானொலி போன்ற தொலைத் தொடர்பு சாதனங்கள் அழைப்புவிடுக்கின்றன. பத்திரிகையில் பக்கம் பக்கமாக விளம்பரங்கள், இனிப்பான திட்டங்கள் அன்றாடம் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இவ்வாறு தீமைக்காக தஃவா நடக்கின்றது. இஸ்லாமிய இரத்தங்கள் பலவும் வட்டியால் வார்த்தெடுக்கப்பட்டுள்ளன.

சூதாட்டம் இஸ்லாத்தில் தடைசெய்யப்பட்ட ஷைய்த்தானின் செயல்களில் ஒன்றாகும். அதிஷ்டலாபச் சீட்டு லொத்தர்கள் என்ற பெயரில் நிமிடத்துக்கு நிமிடம் வானொலி தொலைக்காட்சிகளில் இதற்காக தஃவத் நடக்கிறது. பத்திரிகைகளில் பரபரப்பான விளம்பரங்கள், வீதிகள் தோறும் ஒலிபெருக்கி வைத்து இதற்காக தஃவா செய்யப்படுகிறது. இந்த ஷைய்த்தானிய அழைப்பு வீட்டுக் கதவுகளைக்கூட தட்டத் தவறவில்லை. இலங்கையில் அதிகமாக இந்தச் சூதாட்டத்தில் ஈடுபடுபவர்களாக எமது சமூகத்தினர் காணப்படுகின்றனர்.

மது, பாவங்களின் தலைவாயிலாகும். இந்த மது பானத்திற்கான அழைப்பும் பரவலாக நடைபெறுகின்றது. இதற்காக பத்திரிகைகளில் அரைப்பக்க முழுப்பக்க கலர் விளம்பரங்கள் என்ற பெயரில் தஃவா நடைபெறுகின்றது. இவ்வாறே புகைத்தலின் பக்கம் அழைப்பதற்கும் நவீன பிரச்சார யுக்திகள் கையாளப்படுகின்றன.

ஆபாசத்தையும், வன்முறையையும், கவர்ச்சியையும் சதையையும் மட்டுமே மூலதனமாகக் கொண்ட இன்றைய சினிமாக்கள் சமூகத்தை சீரழித்து வருகின்றன. பத்திரிகை, தொலைத் தொடர்பு சாதனங்கள், பாதையோர சுவர்கள் அனைத்திலும் இன்றைய இளம் தலை முறையினரை இந்த இழிவின் பக்கம் இழுத்தெடுப்பதற்கான கவர்ச்சியான ஆபாசமான அழைப்பு(தஃவா) நடந்து கொண்டிருக்கின்றது.

வீண் கேளிக்கைகள், ஆடல் பாடல், இசைக் கச்சேரிகள், ஆண் பெண் கலப்பு நிகழ்ச்சிகள் என்பவற்றின் மூலம் எல்லா வகையான தீமைகளின் பக்கமும் மக்களைக் கவர்ந்திழுக்க கோடிக்கணக்கான ரூபாய்கள் செலவளிக்கப்படுகின்றன, இதற்காக சகல விதத்திலும் தொடர் பூடகங்கள் பயன்படுத்தப் படுகின்றன. இவ்வளவு பரவலாக தீமைக்கு ஆதரவான குரல் பலத்து ஒலிக்கும் போது நன்மையின் பால் அழைக்கும் குரல் மட்டும் பலமிழந்து போய் ஒலித்துக் கொண்டிருக்கிறது. தீமையின் பக்கம் மக்கள் இழுபட்டுச் செல்லும் வேகத்தையும், அதற்காக செய்யப்படும் முயற்சிகளையும் பார்க்கும் போது நன்மையின்பால் அழைத்து தீமைக்கு எதிராகக் குரல் கொடுப்பது எவ்வளவு அவசியமானது என்பதை விளங்கமுடிகின்றது.

தவறைத் தடுக்காதிருக்கலாமா?

மேலே குறிப்பிடப்பட்டது போன்று தீமைகள் புயலாய் வீசும் போது உண்மையான இறைவிசுவாசி தானுண்டு தன்பாடுண்டு என்று இருக்கமுடியுமா? அவனது உடன்பிறப்புக்கள், உற்றார் உறவினர்கள், ஊரார், மற்றார்கள் அனைவரும் அழிவின் பக்கம் விரைந்து சென்று கொண்டிருக்கும் போது இவன் வெறுமனே பள்ளியில் முடங்கிக் கிடக்கலாமா? ஒரு நாளும் இருக்கமுடியாது. இதனைப் பின்வரும் சம்பவங்கள் எமக்கு உணர்த்துகின்றன.

சுலைமான்(அலை) அவர்கள் தன் பட்டாளத்துடன் போகும் போது ஒரு எறும்பு தனது மற்ற எறும்புக் கூட்டங்களைப் பார்த்து “எறும்புகளே! நீஙகள் உங்கள் புதருக்குள் புகுந்து கொள்ளுங்கள்; சுலைமானும் அவருடைய படையினரும் தாம் அறியாமலேயே உங்களைத் திண்ணமாக மிதித்து விட வேண்டாம்” எனக்கூறியது. (பார்க்க 27: 17-18)

இந்த சம்பவம் மூலம் ஓர் எறும்பு தனது மற்றைய எறும்புகள் அழிந்துவிடக் கூடாது என்பதில் காட்டியிருக்கும் அக்கறையை உணரமுடிகின்றது. ஓர் எறும்பே சமூக உணர்வுடன் நடந்திருக்கும் போது எமது சகோதரர்கள் அறியாமையால், ஷிர்க்கிலும் பித்அத்துக்களிலும் ஹராம்களிலும் மூழ்கியிருக்கும் போது மது, போதை, சினிமா, புகைத்தல், வட்டி, சூது என தம்மைத்தாமே அழித்துக் கொள்ளும் காரியங்களில் ஈடுபடும் போது நாம் அவற்றைத் தடுக்காது இருக்கலாமா? அப்படி இருந்தால் இந்த எறும்பைவிட கீழான நிலைக்கல்லவா சென்றுவிடுவோம்.

இதே அத்தியாயம் மற்றுமொரு நிகழ்ச்சியைக் கூறுகின்றது. சுலைமான்(அலை)அவர்கள் தனது படையைப் பார்வையிட்டுக் கொண்டு வருகின்றார்கள். அங்கே “ஹுத்ஹுத்” என்ற பறவையைக் காணவில்லை. இந்தப் பறவை தாமதித்து வந்து அதற்குரிய காரணத்தைக் கூறாவிட்டால் அதை அறுத்துவிடுவேன்; அல்லது கடுமையாகத் தண்டிப்பேன் என்று போபத்தோடு கூறுகிறார்கள். அப்போது அந்தப் பறவை வந்து சுலைமான் நபியிடம் பின்வருமாறு கூறுகின்றது.

நீங்கள் அறியாத ஒரு செய்தியை நான் அறிந்து வந்துள்ளேன். ஸபாவில் இருந்து உறுதியான ஒரு செய்தியை உங்களிடம் கொண்டுவந்துள்ளேன். அவர்களை ஒரு பெண் ஆட்சி செய்கிறாள். அந்த நாட்டில் சகல வளங்களும் காணப்படுகின்றன. மகத்தானதொரு சிம்மாசனமும் அவளுக்குண்டு. அவளும் அவளது சமூகமும் அல்லாஹ்வை வணங்காது சூரியனை வணங்குகின்றனர். ஷெய்த்தான் அவர்களது செயல்களை அவர்களுக்கு அழகாக்கி அவர்களை நேர்வழியைவிட்டு தடுத்துவிட்டான். அவர்கள் அல்லாஹ் ஒருவனை மட்டும் வணங்க வேண்டாமா? என்று கூறியது. (பார்க்க 27: 20-26)
இந்தச் செய்தியைக் கேட்ட பின் அந்தப் பெண்ணுக்கு சுலைமான் நபி தஃவா செய்து, அவள் இஸ்லாத்தில் இணைந்ததை அல்குர்ஆன் தொடந்து கூறுகின்றது.

ஒரு நாட்டு மக்கள் சூரியனை வணங்குவதைக் கண்டு ஒரு பறவை கவலை கொண்டுள்ளது. எமது சகோதரர்களில் பலர் அறியாமல் கப்று வழிபாட்டிலும் ஷிர்க்கான சடங்குளிலும் மூழ்கியுளளனர். இவற்றால் தாம் செய்கின்ற நல்லமல்களை அழித்து கொள்வதுடன், தம்மைத்தாமே நரகிற்குத் தயார்படுத்திக் கொண்டுமிருக்கின்றனர்.

இதனைக் கண்டு எமக்கு சிறிதளவாவது கவலை வரவில்லையென்றால் நாம் இந்தப் பறவையை விடக் கீழானவர்களாகவல்லவா இருப்போம். சாதாரணமாக ஒருவன் தனது அரசியல் தலைவன் அவமதிக்கப்படுவதை தாங்கிக்கொள்வதில்லை. தனது தலைவர் போட்ட கடையடைப்பை யாராவது மீறினால் இவன் சீறுகிறான், தாக்குகிறான் சாதாரண தலைவனையே இப்படி ஒருவன் வெறி கொண்டு மதிக்கும் போது ஷிர்க் செய்வதன் மூலம் அல்லாஹவுக்கு அநீதி இழைக்கப்படுகின்றது. அல்லாஹ்வின் கட்டளைகள் பகிரங்கமாக மீறப்படுகின்றன. அப்போது அவன் சீறாமல் சிணுங்காமல் சின்னதொரு எதிர்ப்பையும் காட்டாது குறைந்தபட்சம் முகச் சுளிப்பையாவது காட்டாது கல்லுப்போல் நிற்கிறானெனில் இவனது இறை விசுவாசத்திற்கு அது ஒரு களங்கமாகிறது.

ஈமானுக்கு சிறப்பு:

அல்லாஹ்வை முஸ்லிம்களாகிய நாம் ஈமான் கொண்டுள்ளோம். நாம் சத்தியப் போதனையில் ஈடுபடும் போதுதான் எமது ஈமான் சிறப்புப்பெறுகின்றது. இந்த தஃவத் எனும் பணியால்தான் நாம் ஏனைய சமூகங்களை விட சிறப்புப் பெற்றிருக்கின்றோம். இதனை,

“மனிதர்களுக்காக தோற்றுவிக்கப்பட்ட (சமுதா யத்தில்) சிறந்த சமுதாயமாக நீங்கள் இருக்கிறீர்கள். ஏனெனில், நீங்கள் நல்லதைச் செய்ய ஏவுகிறீர்கள், தீயதைவிட்டும் விலக்குகிறீர்கள். இன்னும் அல்லாஹ்வின் மீது திடமாக நம்பிக்கை கொள்கிறீர்கள்…” (3: 110)
என்ற மேற்படி வசனத்தை நோக்கும் போது ஏலவே நாம் குறிப்பிட்டதை உணரலாம்.

பற்று:

அடுத்து ஒருவன் ஒரு கொள்கையில் எவ்வளவு தூரம் நம்பிக்கை வைத்தவன் என்பதை அந்தக் கொள்கைக்காக அவன் செய்யும் தியாகம், அது வாழ அவன் எடுக்கும் முயற்சி என்பவற்றின் மூலமே நாம் உணரமுடியும். அல்லாஹ்வை நான் ஈமான் கொண்டுள்ளேன். இஸ்லாத்தை என் வாழ்க்கைத் திட்டமாகவும், இறைதூதரை என் தலைவராகவும், வழிகாட்டியாகவும் ஏற்றுள்ளேன். நான் இந்த அடிப்படையில் வாழ்வேன் மற்றவர்கள் இப்படி வாழ்வதற்காக எந்த முயற்சியையும் நான் எடுக்கமாட்டேன். அதேவேளை நான் ஏற்ற கொள்கைக்கு எதிராக எவராவது செயல்பட்டால் எனக்கு எரிச்சலோ கோபமோ வராது. அதைத்தடுப்பதற்கு முற்படமாட்டேன் என்ற நிலையில் ஒருவர் வாழ்ந்தால் அவர் கொள்கைப் பற்றுடையவர் என்று எவரும் கூற மாட்டர். உண்மையும் அதுதான்.

இவ்வகையில் இஸ்லாத்தை இதயத்தில் ஏற்று அதைப்பிறருக்கும் எடுத்துச் செல்லும் போதுதான் ஒருவன் இஸ்லாம் என்ற கொள்கையில் பற்றுடையவனாக இருக்க முடியும். எனவே, இறைவன் மீது நாம் கொண்டுள்ள நம்பிக்கையின் தராதரத்தை மதிப்பிடும் சாதனமாக இந்த அழைப்புப்பணி அமைந்துள்ளது எனலாம்.

வாழ்க்கையின் வெற்றி:

மனித வாழ்வின் வெற்றியே இதில் தங்கியிருப்பதாக அல்குர்ஆன் கூறுகின்றது.

“நிச்சயமாக மனிதன் நஷ்டத்தில் இருக்கிறான். ஆயினும் எவர்கள் ஈமான் கொண்டு (நல்ல) அமல்கள் செய்து சத்தியத்தைக் கொண்டு ஒருவருக்கொருவர் உபதேசம் செய்து, மேலும் பொறுமையைக் கொண்டும் ஒருவருக் கொருவர் உபதேசிக்கிறார்களோ அவர்களைத் தவிர (அவர்கள் நஷ்டத்திலில்லை)” என்ற சூறா அல் அஸ்ரின் கூற்றை நோக்கும் போது அழைப்புப்பணி என்பது ஒரு இஸ்லாமியனின் இலட்சியத்துடன் இரண்டறக் கலந்ததாக இருக்க வேண்டும் என்பதை விளங்கலாம்.

முஸ்லிம் என்பதன் சிறப்பு:

முஸ்லிம் என நம்மை நாம் அறிமுகம் செய்து கொள்வதில் பெருமிதம் கொள்கின்றோம். இந்த முஸ்லிம் என்ற பெயர் அழகைப் பெறவேண்டுமானால் நாமும் நல்லமல் செய்வதுடன் பிறரையும் அதன்பால் அழைத்துக் கொண்டு நம்மை நாம் ஒரு முஸ்லிமாகப் பிரகடனப்படுத்த வேண்டும். வெறுமனே முஸ்லிம் எனக் கூறிக்கொள்வதில் அழகோ சிறப்போ இல்லை என்பதை பின்வரும் வசனம் உணர்த்துகின்றது.

“அல்லாஹ்வின்பால் (மக்களை) அழைத்து, (தானும்) நற்செயல்செய்து; நிச்சயமாக நான் முஸ்லிம்களில் உள்ளவன் என்று கூறுபவனை விட சொல்லால் மிக அழகானவன் யார்?” (41:33)
இதிலிருந்து நான் முஸ்லிம் எனக்கூறும் நமது வார்த்தை அழகு பெறவேண்டுமென்றால் தஃவாப் பணியில் நாம் ஈடுபடுதல் வேண்டும் என்பதை உணரலாம்.

மார்க்கக் கடமை:

தஃவாப் பணிபுரிவது “பர்ழுஅய்ன்” அனைவரும் அவசியம் செய்தேயாக வேண்டிய கடமையாகும். இப்பணியைச் செய்யாதபோது குற்றவாளியாக நேரிடும் என்ற கருத்தை சில அறிஞர்கள் கூறுகின்றனர். மற்றும் சிலரோ “இல்லை இது “பர்ழுகிபாயா”, சிலர் செய்துவிட்டால் மற்றவர்கள் மீதுள்ள கடமை நீங்கிவிடும். அவர்கள் குற்றவாளிகளாக மாட்டார்கள்” என்பர்.

தஃவாப் பணியைப் பொறுத்த வரையில் சில போது பர்ழுஅய்னாக உள்ளது. சிலபோது பர்ழுகிபாயாவாக மாறலாம். உதாரணமாக, ஒரு சபையில் மார்க்க முரணான செயல் நடை பெறுகிறது. ஒருவர் அதனைத் தடுக்கின்றார் அத்தோடு அந்தத் தவறு கைவிடப்படுகின்றது. இந்த வேளையில் அங்கிருந்த ஒவ்வொருவரும் அந்தத் தவறைக் கண்டிக்க வேண்டியதில்லை. இப்போது ஒருவர் செய்தால் மற்றவர்கள் மீதுள்ள பொறுப்பு நீங்கிவிட்டது எனலாம்.

மேற்குறித்த அதே சந்தர்ப்பத்தில் ஒருவர் கூறியபின்னரும் அத்தவறு நடைபெறுகின்றதென்றால் அங்கிருக்கக்கூடிய மற்றவர்களும் இவருக்குத் துணையாக தமது அதிருப்தியை வெளிக்காட்டக் கடமைப்படுவர். இப்போது தஃவா பர்ழு அய்னாக மாறும் எனக்கூறலாம்.

எது எப்படியிருப்பினும் தஃவத் பணி பர்ழு-கட்டாயமானது என்பதில் கருத்து வேறுபாடில்லை. நபி(ஸல்) அவர்களைப் பின்பற்றும் அனைவரும் இப்பணியைச் செய்ய வேண்டும் என்ற கருத்தை சூறா யூசுப்பின் 108-வது வசனம் கூறுகின்றது.

தண்டனைக்கு ஆளாக நேரிடும்:

தவறைத் தடுக்கத் தவறும் போது அல்லாஹ்வின் தண்டனைக்குள்ளாக நேரிடும் அந்தத் தண்டனை தீயவர்களை மட்டுமன்றி நல்லவர்களையும் பீடித்துக் கொள்ளும். இதனை,
“உங்களில் அநியாயக்காரர்களுக்கு மட்டுமே ஏற்படாது (அனைவருக்கும் சேர்த்து ஏற்படுகின்ற) தண்டனையை நீங்கள் பயந்து கொள்ளுங்கள். நிச்சயமாக அல்லாஹ் வேதனை செய்வதில் கடினமானவன் என்பதையும் அறிந்து கொள்ளுங்கள்” (8:25) என்ற வசனம் தெளிவாக உணர்த்துகின்றது.

ஒரு தவறு பகிரங்கமாக நடந்து அதனைத் தடுப்பதற்கான ஆற்றல் இருந்தும் தடுக்கப்படவில்லையானால் நல்லவர் கெட்டவர் என்ற பாகுபாடின்றி அனைவரும் அல்லாஹ்வின் தண்டனைக்குள்ளாக நேரிடும் என்பதை பல நபி மொழிகள் உணர்த்துகின்றன.

எப்படிச் செய்வது?

அழைப்புப்பணி புனிதமானதுதான். அதற்கு ஈடுஇணையற்ற நற்கூலியுள்ளது. ஆயினும் அனைவரும் இப்பணியை ஆற்றமுடியுமா? எல்லோருக்கும் மேடையில் ஏறி நின்று பயான் பண்ண முடியுமா? இது சாத்தியம்தானா என்ற சந்தேகம் பலருக்கு ஏற்படுவது இயல்பு.

தஃவத் என்றதும் குத்பா ஓதவேண்டும்; பயான் செய்யவேண்டும் என்று கருதுவதே இதற்குக் காரண மாகும். தஃவாவில் மேற்குறித்தவை அடங்கினாலும் அவை மட்டும்தான் தஃவத் என்பதற்கில்லை.

தான் அறிந்த மார்க்கச் செய்தியை பிறருக்கு எடுத்துக் கூறுவதே தஃவத்தாகும். இதற்காக முழுமையாக மார்க்கத்தை அறிந்து தெளிந்திருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. நாம் சொல்லும் விடயத்தில் மட்டும் தெளிவு இருந்தாலும் போதுமானதாகும். இதை உணராத பலர் அழைப்புப்பணி ஆலிம்களின் கடமை என நினைக்கின்றனர்.

ஆலிம்களைவிட அதிகமாக தனிநபர் தஃவாவை செய்யும் வாய்ப்பை பொதுமக்கள் பெற்றுள்ளனர். பள்ளிக்கூட தோழர்கள், நண்பர்கள், காரியாலத்தில் சேர்ந்து பணியாற்றுகின்ற அனைவரிடமும் உரையாடல் மூலமாக தஃவாவை முன்னெடுத்துச் செல்லலாம். இதனைச் செய்வதற்கு முன்கூட்டியே தலைப்புத் தெரிவு செய்து திட்டமிட்டு உரையாட வேண்டும் என்ற அவசியம் கூட இல்லை.

பேச்சோடு பேச்சாக, சந்தர்ப்பத்திற்கு ஏற்ப நல்ல கருத்துக்களை முன்வைக்க முடியும். அவரிடம் காணப்படும் தவறான கருத்துக்களைக் களைய முடியும் இதற்கு யூசுப்(அலை) அவர்களது வாழ்வில் நடந்த ஒரு நிகழ்ச்சியை உதாரணமாகக் கூறமுடியும்.

நபி யூசுப்(அலை) அவர்கள் சிறையில் நீண்டகாலம் இருந்தார்கள். அவர்களுடன் இன்னும் இருவர் அச்சிறையில் இருந்தனர். அவர்கள் இருவரும் தாம் கண்ட கனவுகளுக்குரிய விளக்கத்தை அறிந்து கொள்வதற்காக யூசுப் நபியிடம் வந்து தாம் கண்ட கனவுகளை எடுத்துக்கூறி விளக்கம் கேட்டனர். யூசுப்(அலை) அவர்கள் விளக்கம் கூறுவதற்கு முன்னரே பல தெய்வங்களை வழிபடுவது சிறந்ததா? அல்லது அனைத்தையும் அடக்கியாளும் அல்லாஹ் சிறந்தவனா? என்று கேட்டார்கள். இதன் மூலம் அவர்களது சிந்தனையில் ஏகத்துவத்தின் சிறப்பைப் பதியச் செய்தார்கள்.

இதனைத் தொடந்து அல்லாஹ்வை விட்டுவிட்டு நீங்கள் வணங்குபவைகள் அனைத்தும் போலியானவை. அல்லாஹ் ஒருவனையே வணங்க வேண்டும் அதுதான் சரியான மார்க்கம். என்ற கருத்துக்களை முன் வைத்தார்கள். (பார்க்க 12: 36-40)

இங்கே சிறைச்சாலையில் தன்னுடன் இருந்த வர்களிடமே யூசுப்(அலை) அவர்கள் பேச்சோடு பேச்சாக தஃவாவை முன்வைத்திருப்பதைக் காணலாம். இத்தகைய வாய்ப்புக்கள் அன்றாடம் அனைவருக்கும் ஏற்படலாம். தருணம் பார்த்திருந்து தக்க நேரத்தில் கருத்துக்களை முன்வைப்பதில் நாம் முனைப்போடு செயல்பட வேண்டும்

அழைப்புப்பணிக்காக தன்னால் முடிந்தவரை ஒத்துழைப்பு நல்குவதுகூட ஏற்றமான இபாதத்தாகவே திகழ்கின்றது. பின்வரும் இரண்டு சம்பவங்களும் இதனைத் தெளிவாக உணர்த்துகின்றன.

ஒரு கிராமத்துக்கு அல்லாஹ் இரண்டு தூதர்களை அனுப்பினான். அவ்விருவரையும் அம்மக்கள் பொய்ப்படுத்தவே, மூன்றாவது ஒரு தூதரையும் அல்லாஹ் அனுப்பினான். இருப்பினும் அம்மக்கள் நேர்வழிபெறவில்லை. மாறாக இந்தப் போதனையை நிறுத்திக் கொள்ளாவிட்டால் கல்லெறிந்தே கொன்றுவிடுவோம் என்று தூதர்களை எச்சரிக்கின்றனர். தாக்கவும் முற்படுகின்றனர்.

அப்போது அந்த ஊரின் எல்லைப்புறத்திலிருந்து ஒருமனிதர் வருகிறார். அவருடைய பெயரை ஹபீ புன்னஜ்ஜார் என அல்குர்ஆன் விளக்கவுரைகள் கூறுகின்றன. அவர் வந்து தனது சமூகத்தவர்களைப் பார்த்து;
“மக்களே! இந்த இறைதூதர்களைப் பின்பற்றுங்கள். இவர்கள் நேர்வழியில் இருக்கின்றனர். அதேவேளை உங்களிடம் மார்க்கத்தைச் சொல்வதற்காக அவர்கள் கூலியும் கேட்கவில்லை” என்றார். அப்போது ஊர்மக்கள் “நீயும் இவர்கள் கூறுவதை நம்பிவிட்டாயா?” என்று வினவுகின்றனர்.
“என்னைப் படைத்தவனை நான் எப்படி வணங்காமல் இருக்கமுடியும். நீங்களும் மறுமையில் அவன் பக்கமே மீட்டப்படுவீர்கள். அல்லாஹ்வைத் தவிர வேறு தெய்வத்தை நான் வழிபடமாட்டேன். அல்லாஹ் எனக்கு ஒரு கஷ்டத்தைத் தர நாடிவிட்டால் இந்த போலி தெய்வங்களால் அதைத் தடுக்கமுடியாது. நிச்சயமாக நான் உங்கள் இரட்சகனை ஈமான் கொண்டுள்ளேன். நான் சொல்வதைக் கேளுங்கள்” என்றார்.
ஆத்திரப்பட்ட மக்கள் அவரைக் கொலை செய்து விட்டனர். அவர் மரணித்ததும் “நீ சுவனத்தில் நுழைந்துவிடு என்று கூறப்பட்டது” இப்பாதகத்தைச் செய்தவர்கள் அழிக்கப்பட்டார்கள். (பார்க்க 36: 13-29)

இங்கே அந்த இறைதூதர்களின் முடிவு என்ன என்பது பற்றிக் கூறப்படவில்லை. தூதர்களின் தஃவாப் பணிக்குத்துணை நின்ற மனிதர் பற்றியே பேசப்படுகின்றது. சத்தியப் போதனைக்கு துணைநின்ற அவர் செய்த தியாகத்திற்கு கூலியாக அல்லாஹ் அவருக்கு சுவனத்தை வழங்குகிறான்.

ஆலிம்கள் அழைப்புப்பணி செய்தால், அதற்கு துணை நிற்பவர்களாக பொது மக்கள் செயல்பட முடியும். நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்வது, அவர் கூறுவதைக் கேட்க மக்களை அழைத்துவருவது, அவருக்குப் பாதுகாப்பளிப்பது, பக்கபலமாக இருப்பது, அவர் விடயத்தில் எல்லைகடந்து செல்பவர்களை அடக்குவது ஆகிய அனைத்துப் பணிகளும் அழைப்புப்பணியின் வட்டத்துக்குள் அடங்கக் கூடியவையே.

மற்றுமொரு நிகழ்ச்சியையும் இங்கே இதற்கான ஆதாரமாகக் கொள்ளமுடியும்.

மூஸா(அலை) பிர்அவ்னிடம் பிரச்சாரத்துக்காக சென்றார்கள். அப்போது பிர்அவ்னின் சபையில் அவனது குடும்பத்தைச் சேர்ந்த மறைமுகமாக ஈமான் கொண்ட ஒரு மனிதரும் இருந்தார். மூஸா(அலை) அவர்களுடன் உரையாடிக் கொண்டிருந்த பிர்அவ்ன், “நான் மூஸாவைக் கொல்லப்போகிறேன்” என்றான்.

இந்த சந்தர்ப்பத்தில் ஈமானை மறைத்துக் கொண்டிருந்த அம்மனிதர் “அல்லாஹ்தான் என் இரட்சகன் எனக் கூறியதற்காகவா ஒரு மனிதனைக் கொல்லப் போகிறீர்கள். அத்தோடு அவர் உங்களது இரட்சகனிடமிருந்து அத்தாட்சிகளை வேறு கொண்டு வந்துள்ளார். அவர் பொய் சொல்லுகிறாரெனின் அவரது பொய் அவரோடே இருக்கட்டும். அவர் உண்மை சொல்லுபவராக இருந்து, அவரைத் தண்டித்து விட்டால் அவர் எச்சரிக்கை செய்வது போன்ற அழிவுகள் நமக்கு ஏற்பட்டால் என்ன செய்வது என்று கூறினார்.

தொடர்ந்து பிர்அவ்னிடம் பேசி, கொலை செய்யும் முடிவில் மாற்றத்தைக் கொண்டு வருகின்றார்.
(பார்க்க 40: 28-44)

ஒரு அழைப்பாளனுக்கு ஆபத்து ஏற்படும் போது சாதுரியமாகப் பேசி அதிலிருந்து அவரைக் காத்த இந்த மனிதரை அல்லாஹ் எமக்குப் படிப்பினையாக அல்குர்ஆனில் நினைவு கூறுகின்றான். இவ்வாறு செயல்படுவது கூட தஃவாவில் ஒரு அங்கம்தான்.

எனவே, அழைப்புப்பணி அவசியமான பணியாகும். அது மார்க்கக் கடமை மட்டுமல்ல, இம்மையில் தவறுகளின் தீங்குகளிலிருந்து நம்மையும் , மனித சமூகத்தையும் காக்கும் பணியாகவும் காணப்படுகின்றது. ஒவ்வொருவரும் தனது வசதிக்கும் வாய்ப்புக்கும் ஏற்ப இப்பணியில் பங்கேற்க வேண்டும். இப்பணியில் ஈடுபடுபவர்களுக்கு ஒத்துழைப்பு நல்க வேண்டும். இதன் மூலம் இம்மை மறுமையில் பயன் பெறலாம்.

இம்மாபெரும் பணியில் ஈடுபடும் பலரும் தஃவத் தப்லீகின் பெயரால் மார்க்கத்தை மறைக்கின்றனர். அது மட்டுமன்றி மறைப்பதுதான் சரியான தஃவத் அணுகுமுறை என்றுவேறு கூறி வருகின்றனர். இக்கருத்து எவ்வளவு தூரம் இஸ்லாமிய சிந்தனையை விட்டும் மாறுபட்டது என்பதைத்தொடர்ந்து நோக்குவோம்.

அபிப்பிராய பேதத்தின் ஆரம்பம்

இலங்கைத் திரு நாட்டிலும் உலகின் பல பாகங்களிலும் பல்வேறுபட்ட இஸ்லாமிய அமைப்புக்கள் பிரச்சாரப் பணியில் ஈடுபட்டு வருகின்றன. தனித்தனிக் குழுக்களாகப் பிரிந்து அவைகள் பிரச்சாரம் புரிவதற்கு தஃவாவிற்காக ஒவ்வொரு குழுவும் தேர்ந்தெடுத்திருக்கும் அணுகுமுறைகள் தான் முக்கிய காரணியாய்த் திகழ்கின்றன. எதைப்பற்றி மக்களுக்கு போதிக்க வேண்டும்? எதற்கு எந்தளவில் முக்கியத்துவம் அளிக்க வேண்டும்? என்ற வினாவிற்குப் பலரும் பல விதத்தில் பதிலளிக்கின்றனர்.

இன்றைய இஸ்லாமிய “உம்மத்” அதன் அடிப்படைக் கடமையான தொழுகையைப் புறக்கணித்து வழிகேட்டில் சென்று கொண்டிருக்கின்றது. எனவே, தொழுகைக்காக அழைப்பது அவசியமானதாகும். இதனடிப்படையில் தஃவத் என்றாலே தொழுகைக்காக அழைப்பதுதான் என்றாற் போல்; சில சகோதரர்களின் செயல்பாடுகள் அமைந்துள்ளன.

சரியானதொரு இஸ்லாமிய சமூக அமைப்பைத் தோற்றுவிக்காமல் நாம் எவ்வளவுதான் பிரச்சாரம் புரிந்தாலும் ஜாஹிலிய்யத்தான சமூக முறையைப் பின்பற்றி வரும் மக்களுக்கு அது எத்தகைய பிரயோசனத்தையும் அளிக்கப் போவதில்லை. எனவே, இஸ்லாமிய சமூக அமைப்பொன்றைத் தோற்றுவிப்பதற்கான அழைப்பே தற்போது அவசியமானதாகும் எனக் கருதுவோர் சிலர்.

என்னதான் பெரிதாகப் போதனை செய்தாலும் அதிகாரம் இல்லாவிட்டால் அதன் பயனைப் பூரணமாகப் பெறமுடியாது போய்விடும். எனவே, இஸ்லாமிய ஆட்சி ஒன்றை நிறுவுவது அவசியமானது. ஆட்சி அமையப் பெற்றுவிட்டால் ஆயிரம் பயான்காளால் செய்ய முடியாததைக் கூட ஒரு கட்டளை மூலமாகச் செய்து விடலாம். எனவே, ஆட்சியை இலக்காகக் கொண்டதாகவே எமது தஃவா அமைய வேண்டும். அந்த இலக்கை நோக்கி நகரும் போது இடையில் குறுக்கிடும் சில விடயங்களை நாம் அலட்டிக்கொள்ளக் கூடாது. எமது இலக்கு விரிவானது. அதனை அடையக்கூடியதாகவே எமது தஃவா அமைய வேண்டும் எனச் சில சகோதரர்கள் எண்ணுகின்றனர்.
என்னதான் ஒருவன் பெரிய “இபாதத்” செய்தாலும் அவன் “ஷிர்க்” செய்து விட்டால் அவனது வணக்கங்கள் அனைத்தும் அழிந்து விடுகின்றன. அதே போன்று வணக்க வழிபாடுகளில் “பித்அத்” எனும் புதியன புகுந்திருந்தால் அல்லாஹ்வால் அவைகள் ஏற்கப்படமாட்டா. எனவே, ஷிர்க் பித்அத் பற்றி எச்சரிக்கை செய்வதே அவசியமானதாகும் எனக் கருதுகின்றனர் சிலர்.

மேலே நாம் கூறிய அத்தனையும் தஃவாவின் முக்கிய அங்கங்கள் என்பதை எவரும் மறுக்க முடியாது. அதே வேளை யானை பார்த்த குருடர் போல் இதுதான் “தஃவா” வெனக் கூறி “தஃவத்”தின் வட்டத்தைச் சுருக்கிவிடவும் கூடாது.

மார்க்கத்தை மறைக்கலாமா?

இதே வேளை “தஃவா”வில் எதற்கு முன்னுரிமை கொடுக்க வெண்டும் என்பதில் அபிப்பிராயப் பேதப்பட்டிருக்கும் சகோதர அமைப்புக்களுக்கிடையே சில விடயங்களை மக்கள் மன்றத்தில் வைக்க வேண்டுமா இல்லையா என்பதிலும் கருத்து முரண்பாடுகள் நிலவி வருகின்றன.

மார்க்கத்தில் (ஏற்கனவே சொல்லப்பட்ட) சில விடயங்களை மக்கள் மன்றத்தில் வைத்தால் மக்கள் குழப்பமுறுவர். எனவே அந்த சில விடயங்களை நாமும் செய்யாமல் பிறருக்கும் சொல்லாமல், பிறர் அவை பற்றி கேட்டால் கூட அவை பற்றி விபரிக்காமல் விட்டு விட வேண்டும். இதுவும் அல்குர்ஆன் கூறும் “தஃவா” அமைப்பே எனச்சில சகோதரர்கள் கருதுகின்றனர்.

“நேர்வழியையும் தெளிவான அத்தாட்சிகளையும் நாம் அருளி அவற்றை மனிதர்களுக்காக வேதத்தில் தெளிவுபடுத்திக் கூறிய பின்னும், எவர்கள் (அவற்றை) மறைக்கின்றார்களோ அவர்களை நிச்சயமாக அல்லாஹ்வும் சபிக்கிறான். (மற்றும்) சபிப்போரும் அவர்களை சபிக்கின்றனர்”. (2:159)
அல்லாஹ்வே வேதத்தில் தெளிவுபடுத்திய பின்னர் அவற்றில் சிலதை மறைத்துத்தான் “தஃவா” செய்ய வேண்டு மென்பது கண்டனத்துக்குரிய ஒன்று என்பதை மேற்படி வசனம் தெளிவு படுத்துகின்றது. அல்லாஹ் எம்மைவிட எதைச் சொல்ல வேண்டும்? எதைச் சொல்லக் கூடாது என்பதை அறிந்தவனல்லவா? அல்லாஹ்வின் கட்டளை களை மக்களுக்கு எடுத்துச் சொல்பவனே அழைப் பாளனாவான். அதை விட்டு விட்டு அல்லாஹ் கூறியவற்றில் சிலதை மக்களுக்குச் சொல்ல முடியாது என “சென்ஸார்” (தணிக்கை) செய்யும் மேலதிகாரியல்லவே அவன்.

மக்கள் குழப்பமுறுவர் என்பதைக் காரணம் காட்டி சத்தியத்தை மூடி மறைப்பது அர்த்தமற்றதாகும். இதைச் சொன்னால் இவர்கள் ஏற்பார்கள்; இதைச் சொன்னால் இவர்கள் ஏற்க மாட்டார்கள் என நாமாக முடிவு செய்வது இஸ்லாத்தின் பார்வையில் குற்றமாகும். இதனை அப்துல்லாஹ் இப்னு உம்மி மக்தூம்(ரழி) அவர்கள் சம்பந்தப்பட்ட அவர் பரிசுத்தவானாக ஆகிவிடக் கூடும் என்பதை உமக்கு எது அறிவித்தது” எனக் கூறும் அல்குர்ஆனின் எண்பதாவது அத்தியாயம் மிகத் தெளிவாக உணர்த்துகின்றது.

இஸ்லாத்தை எடுத்துச் சொல்லும் கட்டாயமே நமக்கு உண்டு, அதனை ஏற்பதற்குரிய மனோபக்குவத்தை அல்லாஹ் தான் கொடுக்க வேண்டுமேயல்லாமல் நாமாக முயன்று அதைச் செய்து விட முடியாது. இதற்கான பல சான்றுகளை அல்குர்ஆனில் காணலாம். நாம் சொல்லும் சத்தியத்தை ஏற்றுக் கொண்டால் இருவகையான கூலிகள் கிடைக்கும். அது மறுக்கப்பட்டால் நமது கடமை நீங்கிவிடும். சத்தியத்தை மறுப்போர் பற்றி நாம் அலட்டிக் கொள்ளத் தேவையில்லை. உண்மை தெளிவாக இருக்கும் போது அதிலிருந்து தடம் புறழ்வோர் பற்றி இஸ்லாம் பின்வருமாறு கூறுகின்றது.

“இதை (அல்லாஹ் கூறுகின்ற உதாரணத்தை) கொண்டு அவன் அநேகரை வழி கெடும்படி செய்கின்றான். அநேகரை நேர்வழி பெறும் படியும் செய்கின்றான். (ஆனால் இவ்வேதத்தை மனமுரண்டாக நிராகரிக்கும்) பாவிகளைத்தவிர (மற்றவர்) இதைக் கொண்டு வழிகெடும்படி அவன் செய்ய மாட்டான்.” (2:26)

“உங்களை இரவும் பகலைப் போன்ற வெள்ளை வெளேர் என்கின்ற தெளிந்த நிலையில் விட்டுச் செல்கின்றேன். தெளிவான இம்மார்க்கத்திலிருந்து எனக்குப் பின்னர் அழிந்து நாசமாகுபவனைத் தவிர வேறு எவனும் வழி கெட மாட்டான்” என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (இப்னு மாஜா)

சத்தியத்தைச் சொல்லும் போது பாவிகளும், அழிந்து நாசமாகக் கூடியோரும், உள்ளங்களுக்கு முத்திரை குத்தப்பட்டோரும் மறுக்கவே செய்வர். இவர்கள் மறுப்பார்களே என்பதற்காக சத்தியத்தை ஏற்கும் மனோபக்குவம் பெற்ற விசுவாசிகளிடம் கூட உண்மை சென்றுவிடா வண்ணம் மூடி மறைப்பதும், முலாம் பூசுவதும் பெரும் அநியாயமும் அறியாமையுமாகும். இவ்வறி யாமையை நீக்குவான் வேண்டி, இவ்வகையான எண்ணத்திற்கு அடிப்படைக்காரணமாய் அமைந்த மாற்றுக் கருத்துடைய நண்பர்கள் தமக்குச் சான்றாக எடுத்து வைக்கும் அல்குர்ஆன் வசனங்களின் உண்மைப் பொருள் யாது என்பது பற்றி விரிவாக ஆராய்வோம்.

பிளவைத் தடுக்க பிரச்சாரத்தைத் தவிர்க்கலாமா?

அல்லாஹ்வின் கட்டளைப்படி மூஸா(அலை) அவர்கள் தூர்சீனா மலைக்குச் செல்கையில் ஹாரூன் (அலை) அவர்களிடம் சமூகத்தின் தலைமைப் பொறுப்பை ஒப்படைத்துவிட்டுச் சென்றார்கள். அவர்கள் சென்றதன் பின்னர் சாமிரி என்பவனின் தவறான செயலால் இஸ்ரவேலர்கள் காளைக் கன்று ஒன்றை வணங்க ஆரம்பிக்கின்றார்கள். காளைக் கன்றின் மூலம் இஸ்ரவேலர்கள் சோதிக்கப்பட்டது பற்றி மூஸா(அலை) அவர்களுக்கு அல்லாஹ் அறிவிக்கிறான். கோபத்தோடு வந்த மூஸா(அலை) அவர்கள் “ஹாரூனே! இவர்கள் வழிகெட்டே போனார்கள் என்று நீர் அறிந்த சமயத்தில் என்னை நீர் பின்பற்றி நடக்க உம்மைத் தடைசெய்தது எது? நீர் என்னுடைய கட்டளைக்கு மாறு செய்ய முற்பட்டீரா?” (20: 92,94)

என்று கண்டித்துக்கூறி அவரின் தாடியையும், தலைமுடியையும் பிடித்து இழுத்தார். இவ்வேளையில், ஹாரூன் (அலை) “என் தாய் மகனே! என் தலையையும் தாடியையும் பிடித்திழுக்காதீர். இஸ்ராயீலின் சந்ததிகளுக்கிடையில் நீர் பிரிவினை உண்டு பண்ணி விட்டீர். நீர் என்னுடைய வார்த்தைகளைக் கவனிக்கவில்லை என்று நீர் என்னைக் கடுகடுப்பீர் என்று நிச்சயமாக நான் பயந்தேன்” (20:94) என்று பதிலளித்தார்கள்.

ஹாரூன்(அலை) அவர்களின் பதிலை அவதானிக்கும் போது சமூகத்தில் பிளவு ஏற்படும் என்றிருந்தால் “ஷிர்க்” எனும் கொடிய குற்றத்தைக்கூட கண்டுகொள்ளாமல் இருக்க முடியும் என்பதை உணரமுடிகின்றதல்லவா? ஒரு நபியே தன் முன்னாலேயே காளைக் கன்று வணங்கப்படுவதை பிரிவினை வந்துவிடக்கூடாது என்பதற்காக தடுக்காமல் இருந்துள்ளார் என்றால் நாம் இது விடயத்தில் எவ்வளவு நிதானப்போக்கைக் கைக்கொள்ள வேண்டும்? நாம் ஹாரூன்(அலை) அவர்களை விட மேலானவர்களா? அல்லது எம் சமூகத்தவர்கள் செய்யும் தவறுகள் இஸ்ரவேலர்களின் குறிப்பிட்ட இத்தவறை விடத்தான் கொடியதா? எனவே, சமூக நலன் கருதி சத்தியத்தை மறைக்க முடியும் என்பதைப் புரிய முடிகின்றது. இது விடயத்தில் நாம் மிகவும் “ஹிக்மத்”தாக நடந்து கொள்ள வேண்டும் என மாற்றுக் கருத்துடைய சகோதரர்கள் விவாதிக்கின்றனர்.

மேற்படி வாதத்தைப் பல காரணங்களால் எம்மால் ஜீரணிக்க முடியாதுள்ளது. சத்தியப் பிரச்சாரம் செய்வோரைக் குழப்பவாதிகள் என சீல் குத்தி குட்டையைக் குழப்பிவருவோரும் “தஃவத்” பணிபுரி வதாகக் கூறிக்கொண்டு நன்மையை மட்டும் ஏவினால் போதும், தீமையைத் தடுக்கத்தேவையில்லை என்போரும் மேற்கூறிய வாதத்தைத் தமக்குரிய பலமான ஆதாரமாகக் கருதுவதால் இதுபற்றி சற்று விரிவாகவே நாம் அலச வேண்டியுள்ளது.

(1) ஹாரூன்(அலை) அவர்கள் பிரிவினை ஏற்பட்டுவிடும் என்ற அச்சத்தால் காளைக் கன்றை மக்கள் வணங்குவதை அறிந்த பின்னரும் கண்டும் காணாதது போல் இருந்துவிடவில்லை. அவர்கள் மக்களை இத்தீங்கிலிருந்து தடுக்கவே செய்தார்கள். இதனை அல்குர்ஆன் தெளிவாகவே கூறுகின்றது.

“இதற்கு முன்னதாகவே ஹாரூன்(அலை) அவர்களை நோக்கி என்னுடைய ஜனங்களே! இச்சிலையை வணங்கி நீங்கள் வழி தப்பி விட்டீர்கள். நிச்சயமாக உங்கள் இறைவன் அருளாளனாகும். என்னைப் பின்பற்றுங்கள். என்னுடைய கட்டளைக்கு வழிப்படுங்கள் என்று கூறினார்.” (20:90)

சிலை வணக்கத்தைத் தடுக்கும் அவர்களது இந்தப் பிரச்சாரம் எந்தளவுக்கு முற்றிப்போனதென்றால் சிலை வணங்கிகள் ஹாரூன்(அலை) அவர்களைக் கொலை செய்யக்கூட முற்பட்டனர். இதன்பிறகும் பிரச்சாரம் செய்வதென்றால் போராட்டத்தைச் சந்தித்தே அதைச் செய்ய வேண்டும் என்ற நிலை வந்தபோதே தம் பிரச்சாரத்தை (மனவிருப்பமில்லாமல்) நிறுத்திக் கொண்டார்கள். இதனைப் பின்வரும் வசனத்தின் மூலம் உணரலாம்.

“.. .. .. என் தாயின் மகனே! இந்த மக்கள் நிச்சயமாக என்னைப் பலவீனப்படுத்தி என்னைக் கொலை செய்துவிடவும் முற்பட்டனர். (ஆதலால் நான் ஒன்றும் செய்ய முடியாமலாகிவிட்டது. ஆகவே, என்னை அவமானப்படுத்தி) என்னுடைய விரோதிகள் சிரிக்குமாறு செய்துவிடாதீர். இந்த அக்கிரமக்கார மக்களுடன் என்னைச் சேர்த்து விடாதீர் என்று கூறினார். (7:150)

எனவே, எதிர்த்தரப்பாரின் ஹாரூன்(அலை) பிரிவினைக்குப் பயந்து தீமையைத் தடுக்காமல் இருந்தார்கள் என்ற வாதம் தவறானதாகும். கொலை விழும் என்றளவுக்கு நிலைமை முற்றிப் போனதன் பின்னர்தான் அவர் தமது பிரச்சாரத்தை நிறுத்திக் கொண்டார் என்றே அருள் மறை கூறுகின்றது.

காளை மாட்டுச் சிலை வணங்கப்படும் போது ஹாரூன் தடுக்காமல் இருந்து விட்டார் என்று எண்ணித்தான் மூஸா(அலை) அவர்கள் ஹாரூன்(அலை) அவர்களுடன் கடுமையாக நடந்து கொள்கின்றார்கள். (இதுவே தவறைக் கண்டும் காணாதது போல் இருக்க முடியாது என்பதை உணர்த்துகின்றது)

இதற்கு பதில் கூறும் போது தான் ஹாரூன்(அலை) தடுத்த விபரத்தைக் கூறி இந்த அக்கிரமக்கார மக்களுடன் என்னையும் சேர்த்து விடாதீர் என்றும் கூறினார். இதன் அர்த்தம் மூஸா(அலை) அவர்கள் ஹாரூனும் காளை மாட்டை வணங்கினார் எனக் கருதுவதால் அவர் அப்படிக் கூறினார் என்பதல்ல. தவறு நடக்கும் போது அதைக் கண்டும் காணாதது போல் இருந்தார் என மூஸா நபி கருதினால் ஹாரூன்(அலை) அவர்களும் அந்த அக்கிரமக் காரர்களில் ஒருவர் என்றாகி விடும். நான் தடுத்தேன். எனவே, நான் அவர்களில் ஒருவன் அல்ல என்றே ஹாரூன்(அலை) கூறுகின்றார். (இதுவும் தவறைத் தடுக்காமல் இருக்க முடியாது என்பதையே உணர்த்துகின்றது) ஹாரூன் பிளவைத் தவிர்க்க தவறைத் தடுக்காது இருந்தார் எனக் கூறும் சகோதரர்கள் குர்ஆனுக்கு மாற்றமாகப் பொய் கூறுவதுடன் ஹாரூன் நபியையும் அந்த அக்கிரமக் காரர்களில் ஒருவராக குற்றம் சாட்டுகின்றனர் என்பதை உணர வேண்டும்.

(2) அடுத்து ஹாரூன்(அலை) அவர்கள் தமது பிரச்சாரத்தை இந்த அளவோடு நிறுத்திக் கொண்டதற்குக் கூட நியாயமான வேறொரு காரணம் இருந்தது. ஹாரூன்(அலை) அவர்கள் விடுத்த அழைப்புக்கு அம்மக்கள்,

“மூஸா நம்மிடம் திரும்ப வரும்வரையில் இதன் ஆராதனையை நாங்கள் விடமாட்டோம் என்று கூறிவிட்டார்கள்” (20:91) என்று பதிலளித்தார்கள் என அருள் மறை கூறுகின்றது.

மூஸா(அலை) அவர்கள் வந்து “கூடாது” என்று கூறிவிட்டால் விட்டு விடுவோம் என அவர்கள் கூறுகின்றார்கள். இந்நிலையில் பெரிய போராட்டம் செய்து தவறைத் தடுக்கும் அவசியம் இருப்பதாக அவர்கள் கருதியிருக்க மாட்டார்கள். மூஸா(அலை) அவர்கள் வந்தால் பிரச்சினையை சுமூகமாகவே தீர்த்து விடலாம் என்றே அவர்கள் இம்மக்களின் மேற்படி பதிலைக் கேட்டதும் எண்ணியிருப்பார்கள்.

ஹாரூன்(அலை) அவர்கள் மூஸா(அலை) அவர்களின் வருகை வரையிலும் (தன்னாலான மட்டும் பிரச்சாரம் புரிந்துவிட்டு) சற்று ஓய்ந்திருந்தார்கள். நாம் யார் வருகையை எதிர்பார்த்து எமது பிரச்சாரத்தை முடங்கச் செய்வது? அன்றைய “அத்தகைய” சூழ்நிலையோடு எமது இன்றைய நிலையை ஒப்பிட்டுப் பேச முடியுமா?

(3) அடுத்ததாக ஹாரூன்(அலை) அவர்கள் தெரிவித்த அச்சம்கூட அல்லாஹ்வால் கண்டிக்கப்படுவேன் என்ற எண்ணத்தில் எழுந்ததல்ல. மூஸா(அலை) அவர்களால் கண்டிக்கப்படுவேன் என்ற அச்சமே அவர்களிடம் மேலோங்கிக் காணப்பட்டது. “இஸ்ராயீலின் சந்ததிகளுக் கிடையில் நீர் பிரிவினையை உண்டு பண்ணிவிட்டீர் என்று நீர் என்னைக் கடுகடுப்பீர் “என்று நான் பயந்தேன்.” (20:94) என்ற அவர்களது வார்த்தை இதனை நன்றாக உணர்த்துகின்றது. ஏன் அவர்கள் இவ்விதம் எண்ணினார்கள் என்றால் 12 கோத்திரங்களாகப் பிளவு பட்டிருந்த பனூ இஸ்ரவேலர்களை பெரும் சிரமப்பட்டு ஒன்று சேர்த்து மூஸா(அலை) அவர்கள் சிறிது கால தலைமைத்துவத்தை ஹாரூன்(அலை) அவர்களிடம் ஒப்படைத்து விட்டுச் செல்கிறார்கள். அந்தக் கொஞ்சக் காலத்துக்குள் பிரிவு ஏற்பட்டால் தனது தகுதியற்ற தலைமையால்தான் பிரிவு ஏற்பட்டது என்பது போலாகிவிடுமென்பதே அவர் அச்சம். அவர் சிரமப்பட்டு ஒன்று படுத்திய கூட்டத்தை இவர் உடைத்து விட்டது போல் ஆகிவிடக்கூடாது என்று ஹாரூன்(அலை) அவர்கள் பயந்தார்கள்.

ஹாரூன்(அலை) அவர்கள் பிரிவு ஏற்பட்டால் அல்லாஹ்வின் கண்டனத்தைப் பெற நேரிடும் என்றோ அல்லது இதனால் தான் தண்டிக்கப்படுவேன் என்றோ எண்ணவில்லை. அப்படி எண்ணியிருந்தால் அதனை ஆதாரமாகக் கொள்ளலாம். அதல்லாமல் மூஸா(அலை) அவர்களுக்கு ஹாரூன்(அலை) அவர்கள் அஞ்சியதை நாம் எப்படி ஆதாரமாகக் கொண்டு செயல்படமுடியும்?

(4) அடுத்து ஒரு உண்மையை நாம் நிதானமாக சிந்திக்க வேண்டும். சத்தியத்தை எடுத்துச் சொல்லும்போது அதனை ஒரு கூட்டம் ஏற்று இன்னொரு கூட்டம் எதிர்ப்பதால் ஏற்படும் பிரிவு தவிர்க்க முடியாதது. தண்டனையைப் பெற்றுத் தராதது. (இப்படி நாம் கூறுவது சத்தியத்தை எளிய நடையில் தெளிவுபடுத்தாமல் எடுத்தேன், கவிழ்த்தேன் என்றாற்போல் நடந்து கொள்ளலாம் என்ற கருத்திலல்ல) ஏனெனில் சத்தியவான், அசத்தியவான் என்ற பிரிவு தொன்று தொட்டு உள்ளதுதான். இது மனிதனால் ஏற்பட்ட பிரிவு அல்ல. நேர்வழி, வழிகேடு- நன்மை, தீமை என்ற பிரிவுகளை யார் ஏற்படுத்தினானோ, அவனே நல்லவர், தீயவர் என்ற பிரிவையும் ஏற்படுத்தியுள்ளான். இதற்கு அல்குர்ஆனில் “ஹிஸ்புல்லாஹ்” (அல்லாஹ்வின் கூட்டம்) (5:56, 58:22) “ஹிஸ்புஸ் ஷைத்தான்” (ஷைத்தானின் கூட்டம்) (58:19) என்ற பதங்கள் பிரயோகிக்கப் பட்டிருப்பதைத் தக்க சான்றாகக் கொள்ளலாம்.

எனவே, இந்தப் பிரிவு அல்லாஹ்வாலேயே ஏற்படுத்தப்பட்டது என்பதை நாம் அறியலாம். சத்தியம், எடுத்துச் சொல்லப்படும்போது ஒரு கூட்டம் ஏற்று, மற்றொரு கூட்டம் மறுப்பதால் ஏற்படும் பிரிவு தவிர்க்க முடியாதது இயற்கையானது. அதற்காக பிரச்சாரகன் தண்டிக்கப்பட மாட்டான். அப்படித் தண்டிக்கப்படுவ தென்றால் எல்லா நபிமார்களும் தண்டனைக்குரியவர்கள் என்றாகிவிடும் (அல்லாஹ் இப்படி எண்ணுவதிலிருந்து எம்மைக் காப்பானாக!) ஏனெனில் நபிமார்கள் செய்த பிரச்சாரத்தால் ஏற்பட்ட பிரிவுகள் யுத்தங்களாகக் கூட வெடித்ததுண்டு.

அடுத்ததாக இந்த வாதத்தை எடுத்து வைக்கும் எமது நண்பர்களும் கூட இன்றைய இஸ்லாமிய உம்மத் பல கூறாகப் பிரிந்திருப்பதை ஏற்றுக் கொள்கின்றனர். ஏற்பட்டுள்ள இந்தப் பிரிவுகளுக்குக்கூட மார்க்கம் தெளிவாக எடுத்து வைக்கப்படாமையே அடிப்படைக் காரணமாகும். உண்மையைச் சொன்னால் பிரிவு, பிரச்சினை ஏற்படும் என அஞ்சி ஊமையாய்ப் போனவர்கள் அனைவரும் அணிதிரண்டு உண்மையை உரக்கச் சொல்லியிருந்தால் பல பிரிவுகளைத் தவிர்த்திருக்கலாம். சத்தியத்தை எடுத்துச் சொல்வதே ஒற்றுமைக்கு வழிவகுக்கும். சத்திய அழைப்புத்தான் ஒற்றுமைக்கான அழைப்பாகும் என்பதை அனைவரும் உணர்ந்து சத்தியத்தை மறைப்பதே பிரிவினைக்கு வழி வகுக்கும் என்பதைப் புரிந்து செயல்பட்டால் எத்தனையோ மார்க்கப்பிரச்சினைகளுக்கு இலகுவாகத் தீர்வு கண்டிருக்கலாமல்லவா?

இறுதியாக முக்கியமானதொரு விடயத்தை நமது சகோதரர்களின் மேலான கவனத்திற்கு விட விரும்புகின்றேன்.

(5) அல்லாஹுத்தஆலா அல்குர்ஆனிலே நபிமார்கள் மூலம் நிகழ்ந்த பல தவறுகளை எடுத்துக்கூறுவதைக் காணலாம். ஆதம்(அலை) தடுக்கப்பட்ட கனியைப் புசித்துவிட்டு “தவ்பாச்” செய்ததையும், யூனுஸ்(அலை) அவர்கள் மீனின் வயிற்றில் இருக்கும்போது தான் செய்த தவறுக்காக “தவ்பாச்” செய்ததையும் இதற்குச் சிறந்த உதாரணங்களாகக் கூறலாம்.

மேற்கூறிய சம்பவங்களைப் போன்றே தற்போது விவாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் சம்பவத்தின் பின்னரும் மூஸா(அலை) அவர்கள் தனக்காகவும் ஹாரூன்(அலை) அவர்களுக்காகவும் பாவமன்னிப்புச் செய்தார்கள் என்ற விபரத்தைப் பின்வரும் வசனம் மூலம் அறிய முடிகின்றது.

“என் இறைவனே! என்னையும், என் சகோதரரையும் மன்னிப்பாயாக! உன் ரஹ்மத்தில் (நற்கிருபையில்) பிரவேசிக்கச் செய்வாயாக! ஏனெனில் நீயே கிருபையாளர்களிலெல்லாம் மிக்க கிருபையாளன் என்று (பிரார்த்தித்துக் கூறினார்)” (7:151)

நடந்துவிட்ட ஒரு தவறுக்காக அதைச் செய்தவர்களே “தவ்பாச்” செய்ததன் பின்னர் அதனை ஆதாரமாகக் கொண்டு எடுத்து வைக்கப்படும் வாதங்கள் எவ்வளவுதான் ஆழமானதாக, சமூக நலனுக்கு நல்லதாக எமக்குப் புலப்பட்டாலும் அவைகள் அர்த்தமற்றவைகளே!

நூஹ்(அலை) அவர்கள் தன் மகனுக்காகப் பிரார்த்தித்தார்களே என்று ஒரு முஸ்லிம் தனது காபிரான மகனுக்காக அல்லாஹ்விடம் பிரார்த்திக்க முடியுமா? அல்லது யூனுஸ் நபிபோல் செயல்படத்தான் முடியுமா? ஆதம் (அலை) அவர்கள் அல்லாஹ்வின் கட்டளைளை மீறியதைப்போல் நாமும் மீற முடியுமா? மேற்கூறப்பட்ட சம்பவங்கள் விடயத்தில் எப்போக்கை நாம் கைக் கொள்வோமோ அதே போக்கைத்தான் மன்னிப்புக் கேட்கப்பட்ட ஹாரூன்(அலை) அவர்களின் மேற்படி சம்பவத்திலும் கடைப்பிடிக்க வேண்டும் என்பதை உணரும்போது தாம் தவறாக விளங்கியுள்ள ஹிக்மத்துக்குத் துணையாக மேற்படி சம்பவத்தை இழுத்துக் கொண்டு வருவது தவறானது என்பது உள்ளங்கை நெல்லிக்கனி போல் தெளிவாகின்றது.

நளினத்தின் பெயரில் நன்மையை மறைக்கலாமா?

அல்லாஹுத் தஆலா பிரச்சாரத்திற்காக நபிமார் களான மூஸா(அலை), ஹாரூன்(அலை) ஆகியோரைப் பிர்அவ்னிடம் அனுப்பும்போது “நீங்கள் அவனுக்கு நளினமாகவே உபதேசம் செய்யுங்கள். அதனால் அவன் நல்லுணர்ச்சி பெறலாம். அல்லது நடுக்கமடையலாம்” (20:44) எனக் கூறி அனுப்புகின்றான். பிர்அவ்னிடமே நளினமாகப் பேசவேண்டுமென்றால் எமது சமூகத்துடன் நாம் பிரச்சாரத்தில் எவ்வளவு நளினமாக நடக்க வேண்டும் என்பதைச் சிந்திப்பவர்கள் உணரமுடியும். மக்கள் காலம் காலமாக நம்பி நடைமுறைப் படுத்தி வரும் சடங்கு சம்பிரதாயங்களையும், ஷிர்க்கு, பித்அத்துக்களையும் கூடாதவை என பகிரங்கமாகப் பிரச்சாரம் செய்வது நளினமான பிரச்சாரமாகாது. அதில் சற்று விட்டுக் கொடுத்து நடக்க வேண்டும் எனக் கூறி அதன் மூலம் மார்க்கத்தின் சில பகுதிகளை மறைக்கும் பிரச்சார அணுகுமுறையை சகோதர அழைப்பாளர்கள் நியாயப்படுத்த முற்படுகின்றனர்.

பிரச்சாரத்தில் நளினம் தேவை என்பதை எவரும் மறுக்க முடியாது. ஆனால், நளினம் என்பதற்கு சத்தியத்தில் சில பகுதிகளைச் சொல்லாமல் மறைத்தல் என்றோ அல்லது “தியரி” போட்டு ஐந்து, பத்து ஆண்டுகளுக்குப் பின் சொல்லவென “ஸ்டோக்” (stock) பண்ணல் என்றோ பொருள் கொள்ளமுடியாது, ஏனெனில் நளினமாகப் பேசுங்கள் எனக் கட்டளையிட்ட அதே அல்லாஹ் நளினமாக எதைச் சொல்லவேண்டும் என்பதையும் அதனைத் தொடர்ந்து கற்றுக் கொடுக்கிறான்.

“எனவே, அவனிடம் நீங்களிருவரும் வந்து” நிச்சயமாக நாங்கள் உன்னுடைய ரப்பின் ரஸூல்கள் இருவர் (ஆவோம்) ஆகையால் இஸ்ராயீலின் மக்களை எங்களுடன் அனுப்பிவைப்பாயாக! அவர்களை நீ வேதனை செய்ய வேண்டாம். உன்னுடைய ரப்பிடமிருந்து ஓர் அத்தாட்சியை உன்னிடம் திட்டமாக நாங்கள் கொண்டு வந்துள்ளோம். ஸலாம் (சாந்தி) ஆகிறது நேர்வழியைப் பின்பற்றியவர் மீது உண்டாவதாக”! (என்று இருவரும் கூறுங்கள்) “நிச்சயமாக: எங்களுக்கு (அல்லாஹ் -விதியாக்கும்) வேதனையாகிறது (நாங்கள் கொண்டுவந்ததைப்) பொய்யாக்கி, புறக்கணித்துச் செல்பவனின் மீது உண்டாகும்.” என்று திடமாக வஹீ அறிவிக்கப்பட்டுள்ளது” (என்றும் கூறுங்கள்) (20:47,48)

இங்கு நளினம் என்ற போர்வையில் சத்தியம் மறைக்கப் பட்டுள்ளதா? என்பதைச் சற்று அவதானித்துப் பாருங்கள். உண்மைகள் உள்ளபடி எடுத்துக் கூறப்பட்டுள்ளதல்லவா? நளினமாகப் பேசுங்கள் எனக் கூறியவனே, நளினமாகப் பேசுங்கள் என்பதற்கு விளக்கம் கூறிய பின் நாம் அதற்கு மாற்று விளக்கமளிக்க முனையலாமா?

நபி மூஸா(அலை) பிர்அவ்ன் ஆகியோருக்கிடையே நடந்த உரையாடலை அல்குர்ஆனில் பல இடங்களிலும் விபரமாகக் காணலாம். ஆனால், எந்த இடத்திலும் மூஸா(அலை) அவர்கள் சத்தியத்தை மறைக்கும் போக்கில் பேசியதாகக் காண முடியவில்லை. இருப்பினும் எதிராளி ஏன் இக்கேள்வியைக் கேட்கிறான்! அவன் மன ஓட்டம் என்ன என்பதை நாடிபிடித்தறிந்து அதற்கேற்றாற்போல் பதிலளிக்கும் சாதுரியத்தை மூஸா(அலை) அவர்களின் உரையாடலில் நாம் காணலாம்.

“(முன்னர் நபிமார்களைப் பொய்ப்பித்துப் புறக்கணித்த) முந்திய தலைமுறையினர்களின் நிலை என்ன? (20:51) என்று பிர்அவ்ன் வினவுகிறான். இந்த வினா உண்மையை உணர வேண்டும் என்பதற்காக எழுப்பப்பட்டதல்ல. மூஸா(அலை) அவர்கள் மூதாதையர் சம்பந்தமாக விபரீதமாக எதையாவது கூறினால். “மக்கள் மூதாதையர்கள் மீது வைத்துள்ள மதிப்பு, பக்தி என்பவற்றைத் தூண்டிவிட்டு மூஸா(அலை) அவர்களின் பிரச்சாரத்தை முளையிலேயே கிள்ளிவிட வேண்டும் எனும் எண்ணத்திலேயே இக்கேள்வி கேட்கப்பட்டது. இதனை உணர்ந்த மூஸா(அலை) அவர்கள் பின்வருமாறு பதில் கூறுகிறார்கள்.

“அதுபற்றிய அறிவு என்னுடைய ரப்பிடத்திலுள்ள பதிவுப் புத்தகத்திலிருக்கின்றது என்னுடைய ரப்பு தவறிழைக்கமாட்டான். “(எதையும்) விட்டுவிடவும் மாட்டான்” என்று அவர் கூறினார்.” (20:52)
இப்பதில் பொய்யற்றதாகவும், எதிராளி விரித்த வலையில் விழவைக்காத சாதுரியம் மிக்கதாகவும் அமைந்திருப்பதை அவதானிக்கலாம்! இது போன்றே மூஸா(அலை) அவர்களின் உரையாடற் சாதுரியத்துக்கு இன்னுமோர் உதாரணத்தையும் கூறலாம்.

பொதுவாக எல்லா அசத்தியவாதிகளும் பேச்சால் சமாளிக்கமுடியாத போது “கெடுபிடி” நடவடிக்கைகளில் இறங்கிவிடுவர். அவ்வாறே பிர்அவ்னும் பேச்சில் ஜெயிக்க முடியாது என உணர்ந்தபோது,

“என்னைத் தவிர (வேறு) நாயனை நீர் ஆக்கிக் கொண்டால், திண்ணமாக நான் உம்மைச் சிறையிடப்பட்டோரில் உள்ளவராக்கிவிடுவேன்” என்று அவன் கூறினான். (26:29)
இந்நேரத்தில் மூஸா(அலை) அவர்கள் மிகத் தந்திரமாகப் பேச்சைத் திசை திருப்புகிறார்கள். எந்த சர்வதிகாரியாக இருந்தாலும் பலர் முன்னிலையில் தான் அநியாயக்காரன், நியாயத்துக்குக் கட்டுப்படாதவன் என்பதை வெளிப்படையாகக் காட்டிக் கொள்ள முற்படமாட்டான். தான் நீதமானவன் போலவே நடந்து கொள்வான். பிர்அவ்னும் இதற்கு விதிவிலக்கானவன் அல்லன் என்பதையுணர்ந்த மூஸா(அலை) அவர்கள்.
“தெளிவான (அத்தாட்சியாக ஒரு) பொருளை உன்னிடம் நான் கொண்டு வந்தாலுமா? (அவ்வாறு செய்வாய்)” என வினவுகிறார்கள். (26:30)
“நீர் உண்மையாளர்களில் உள்ளவராக இருந்தால் அதனைக் கொண்டு வாரும்” என்று பிர்அவ்ன் கூறினான். (26:31)

இங்கே சிறையிலடைப்பேன் எனக்கூறியவனைத் தனது உரையாடலினூடாக ஆதாரத்தைக் கேட்க வைத்தார்கள்.

இவ்வாறு சாதுரியமாகப் பேசும் போக்கையே மூஸா(அலை) அவர்களிடம் காணமுடிந்ததேயன்றி விட்டுக் கொடுத்து, உண்மைகளை மறைத்துப் பேசும் போக்கை மூஸா(அலை) அவர்களிடம் காணமுடியவில்லை. எனவே, நளினமாகப் பேசுதல் என்பதற்கு மறைத்துப் பேசுதல் எனப் பொருள் கொள்ள முடியாது.

நாம் யாரோடு பேசுகிறோம் என்பதைப் புரிந்து அவர்களிடம் எப்படிப்பேசினால் எடுபடும் எனக் கணக்குப் பார்த்து நிதானமாகச் சத்தியத்தை எடுத்துச் சொல்ல வேண்டும். இதற்கு சிறந்த பல உதாரணங்களை நபி(ஸல்) அவர்களின் பிரச்சார வாழ்க்கையில் நாம் காணலாம். இதோ!
“ஒரு இளைஞர் நபி(ஸல்) அவர்களின் அவைக்கு வந்து, “யாரஸூலல்லாஹ் எனக்கு விபச்சாரம் புரிய அனுமதி தாருங்கள்”; என்றார். இதைக் கேட்ட அவையினர் கோபத்தோடு அவரை அங்கிருந்து விரட்டியடிக்க முற்பட்டனர். நபி(ஸல்) அவர்கள் மக்களை அமைதிப்படுத்தி விட்டு, அந்த இளைஞனை அழைத்து தமதருகில் அமரச் செய்தார்கள். உன்தாயுடனோ, மகளுடனோ, சகோதரியுடனோ, சாச்சி, மாமி ஆகியோருடனோ வேறொருவர் தகாத உறவு கொள்வதை நீர் விரும்புவீரா? எனக் கேட்டார்கள். அவர் இல்லையெனப் பதிலளித்தார். (நீர் விபச்சாரம் புரிய அனுமதி கேட்கிறீரே! நீர் தகாத உறவு கொள்ள விரும்பும் பெண்ணும் யாருக்காயினும் தாயவோ சேயாகவோ, சகோதரியாகவோ அல்லவா இருப்பாள்) நீ உனது இத்தகைய உறவினர்களுடன் வேறொருவர் தகாத உறவு கொள்வதை வெறுப்பது போல் பிறரும் தமது உறவினர்களுடன் அந்நியன் விபச்சாரம் செய்வதை வெறுப்பார்களல்லவா? எனத் திருப்பிக் கேட்டுவிட்டு அல்லாஹ்வே இவர் பாவத்தை மன்னித்து, இவர் உள்ளத்தைத் தூய்மைப்படுத்தி, இவரது கற்பையும் பாதுகாப்பாயாக! என்று பிரார்த்தித்தும் அனுப்பினார்கள். அவரும் தனது தவறை உணர்ந்து தான் இதன் பின் இப்படியான தவறில் ஈடுபடுவதில்லை என உறுதியளித்தார்.
அறிவிப்பவர்: அபூ உமாமா.
ஆதாரம் : அஹ்மத், (பாகம்-5, பக்கம்-256,257)

அருவருக்கத்தக்க ஒரு கேள்வி கேட்கப்பட்டும்கூட சினமுறாமல், சீறி விழாமல் அன்பாக, அந்த இளைஞருக்குப் புரியும் விதமாக அண்ணலார் அவர்கள் பேசினார்கள் அல்லவா? இந்த அழகிய வழிமுறைகளைக் கடைப்பிடித்து சத்தியத்தை எடுத்துச் சொல்ல வேண்டும். இம்முறையை வேண்டுமென்றால் “ஹிக்மத்” என்றும், நளினமாகப் பேசுதல் என்றும் கூறலாம். இதைவிட்டு விட்டு சத்தியத்தை மறைக்கும் கோழைத்தனத்திற்கு “ஹிக்மத்” என்றோ, நளினம் என்றோ பெயர் சூட்டல் மடமையாகும்.

இங்கே ஆளைப்பார்த்து, அவரது நிலையைப் பார்த்து சட்டம் மாற்றப்படவில்லை. ஆனால், அவரின் அறிவுத் தரத்திற்கு ஏற்ப விளக்கும் விதம் வித்தியாசப் பட்டுள்ளது. உள்ளதை மாற்றியோ மறைத்தோ கூறக்கூடாது; உரையாடும் நபர் உணரும் விதத்தில் விபரித்துக் கூறலாம். அதுவே நமது கடமையாகும்.

இவ்விடத்தில் மற்றுமொரு இஸ்லாமிய பிரச்சார அணுகுமுறை பற்றியும் சுட்டிக்காட்ட விரும்புகிறோம். நளினமாகப் பேசுதல் போன்றே எதிர் மறைப் பிரச்சார முறை அல்லது சாடல் போக்கும் இஸ்லாமியப் பிரச்சாரத்தில் உள்ளதுதான். சிலருக்குத் தடவித்தடவிக் கூறினால் விளங்கும். சிலருக்கு செவிட்டில் அறைந்தாற் போல் பட்டெனக் கூறினால் தான் சட்டெனப் புரியுமென்றால், அதையும் நாம் புறக்கணித்துவிட முடியாது. இதோ இப்றாஹீம் (அலை) அவர்கள் பிரச்சாரத்தின் போது பாவித்த வார்த்தைகளின் வேகத்தை சற்று அவதானித்துப் பாருங்கள்.

1. “இப்றாஹீமிலும், அவருடன் இருந்தோரிடமும் உங்களுக்குத் திட்டமாக அழகிய முன்மாதிரி இருக்கிறது, தன் சமூகத்தினரிடம் நிச்சயமாக நாங்கள் உங்களை விட்டும், அல்லாஹ்வையன்றி நீங்கள் வணங்குகின்றவற்றை விட்டும் நீங்கியவர்களாக இருக்கிறோம். உங்களை நாங்கள் நிராகரித்து விட்டோம், ஏகனாகிய அல்லாஹ்வின் மீது நீங்கள் ஈமான் கொள்ளும் வரை எங்களுக்கும் உங்களுக்கும் மத்தியில் பகையும் வெறுப்பும் என்றென்றைக்குமாகத் தோன்றி விட்டன” என்று அவர் கூறினார். (அதில் உங்களுக்கு அழகிய முன்மாதிரி இருக்கிறது.) (60:4)

2. உங்களுக்கும் அல்லாஹ்வைத் தவிர்த்து நீங்கள் வணங்குபவற்றுக்கும் உஃப்புன் (நாசந்) தான். எனவே, நீங்கள் (இதனை) அறிந்து கொள்ள வேண்டாமா? (என்றும் கூறினார்) (21:67)

3. “நீங்களும், உங்களுடைய மூதாதையர்களும் திட்டமாக பகிரங்கமான வழிகேட்டில் இருக்கிறீர்கள்” என்று அவர் கூறினார். (21:54)

இவ்வார்த்தை வீச்சின் வேகத்தையும் இவ்வார்த்தைகளின் கனத்தையும், ஒரு கணம் எண்ணிப் பாருங்கள். எவ்வளவு சூடான வார்த்தைகள் இவைகள். இம்முறைப் பிரச்சாரத்திற்கு நபி வழியிலும் கூட நாம் பல முன்மாதிரிகளைக் காணலாம்.

எனவே, நாம் யாரை நோக்கிப் பேசுகின்றோம் என்பதையும் நமக்கும் அவருக்குமிடையேயுள்ள உடன்பாடுகள், ஏற்றத்தாழ்வுகள், உறவுகள் என்பவற்றிற் கேற்ப இவரிடம் உண்மையை எப்படி விளக்கினால் இலகுவில் புரிவார் என்பதை கவனமாக யூகித்து நளினமாக (மிகக் குறைந்த சில வேளைகளில் சூடாக) சத்தியத்தை எடுத்துச் சொல்ல வேண்டும். ஆனால், சத்தியத்தை மறைத்தல் என்பது “தப்லீக்”; எனும் எத்திவைக்கும் பணிக்கு நேர்மாறானது என்பது மட்டும் நிச்சயமானது.

கண்டுகொள்ளக் கூடாதா?

“பிரச்சாரப் பணி புரிவோர் பிரச்சினைகளை உருவாக்கு பவர்களாக மாறிவிடலாகாது. எனவே “தஃவத்” செய்யும் போது கருத்து வேறுபாடுள்ள விடயங்களில் ஒரு “தாயி” தலையிடக் கூடாது. ஏனெனில், கருத்தொருமித்த விடயங்களில் தான் பிரச்சாரம் கடமையாகும். கருத்து வேறுபாட்டிற்குரிய விடயங்களில் தஃவத் என்பது இல்லை. எனவே, சமூகத்திற்கு முரணான விடயங்களை விட்டு விட்டு, சமூகத்திற்கு உடன்பாடான விடயங்களையே நாம் எமது பிரச்சார இலக்காகக் கொள்ள வேண்டும் என சில சகோதர அழைப்பாளர்கள் கருதுகின்றனர்.

மேற் குறிப்பிட்ட சிந்தனை நம்நாட்டில் கணிசமானவர்களிடம் தாக்கத்தை உண்டுபண்ணியுள்ளது. இந்த உஸ்லூபில் (அமைப்பில்) தஃவத் பணி புரிவதே “ஹிக்மத்” தான வழியெனவும் இத்தரப்பினர் கருத்துக் கொண்டுள்ளனர். இச்சிந்தனை சரியானதா என்பதை இஸ்லாமிய கண்ணோட்டத்தில் ஆராய்வோம்.

ஒரு தனி நபருடனோ அல்லது சமூகத்துடனோ நாம் உரையாடும் போது அவர்களுக்கு உடன்பாடான விடயங்களையே நாம் தொனிப் பொருளாக கொள்ள வேண்டும். அதை விட்டு விட்டு ஆரம்பத்திலேயே அவர்களது பாரம்பரிய நம்பிக்கைகள் அல்லது அவர்கள் சரிகண்ட விடயங்கள் போன்றவற்றைத் தாக்கும் வண்ணமோ, விமர்சிக்கும் விதத்திலோ எம் பிரச்சார அணுகுமுறை அமைந்து விடக்கூடாது. அப்படி இருந்தால் அது அவர்களை எமது எதிரிகளாக்குகின்ற அதே நேரம் தஃவத்திற்கான வாய்ப்பையும் இல்லாமலாக்கிவிடும்.

எனவே சமூக முரண்பாடான விடயங்களை ஆரம்பகாலப் பிரச்சாரத்தில் தவிர்த்தல் வேண்டும். அவ்லியாக்கள் மீது மோகமும், பக்தியும் உள்ள இடங்களில் நாம் அவ்லியாக்கள் பற்றிய தப்பான நம்பிக்கைகளை எதிர்த்துப் பேச முடியுமா? தரீக்காக்களின் செல்வாக்கு நிறைந்த இடங்களில், மத்ஹபு தலை விரித்தாடும் ஊர்களில் அவற்றை விமர்சனம் செய்யலாமா? அப்படி விமர்சனம் செய்வது உண்மையான “உஸ்லூபுத் தஃவா” வாக இருக்குமா?

எனவே, பிரச்சார களத்தில் நாம் சந்திப்பவர்கள் கொண்டுள்ள கருத்துக்கு மாற்றமான கருத்துக்களை விட்டு விட்டு இரு தரப்பிற்கும் உடன்பாடான, பிரச்சினைகளே எழ வாய்ப்பில்லாத மறுமை, ஒழுக்கம், தக்வா போன்ற பொது விடயங்களையே மையமாகக் கொள்ள வேண்டும் என்ற சிந்தனை சில தௌஹீத் சிந்தனையாளர்களிடத்திலும் கூட எழுவதுண்டு.

எமக்கு ஏற்படும் கஷ்ட நஷ்டங்களைப் பற்றிய பயத்தை ஒரு புறம் ஓரங்கட்டி விட்டு, நடுநிலையாக சிந்தித்தால் மேற்கூறிய பிரச்சார அணுகுமுறையின் போலித் தன்மை புரிய ஆரம்பிக்கும். ஓர் இடத்தில் தவறு அல்லது தவறான சிந்தனை ஆதிக்கம் பெற்றிருந்தால் அந்த இடத்தில் அந்த தவறை அல்லது தவறான சிந்தனையை கண்டிப்பதற்கே கூடிய முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பதைத் தர்க்க ரீதியாக சிந்திப்பவர்கள் உணர முடியும். நோயுள்ளவருக்குத்தானே மருத்துவம் செய்ய வேண்டும்? அதுவும் உள்ள நோயை விட்டு விட்டு வேறு நோய்க்கு மருந்து கொடுக்க முடியாதல்லவா? அவ்லியா மோகம், தரீகத் என்பன எந்த இடத்தில் ஆதிக்கம் பெற்றுள்ளதோ அந்த இடத்தில் தானே அவை பற்றி விபரிக்க வேண்டும். நபி மார்களின் அழைப்புப் பணி பற்றிய வரலாறும் நமக்கு இதைத்தானே பாடமாகப் புகட்டுகின்றன. நபி(ஸல்) அவர்கள் மக்காவில் இருக்கும் போது அங்கு ஆதிக்கம் பெற்றிருந்த சிலை வணக்கத்தைதானே அதிகம் கண்டித்தார்கள்?
பிர்அவ்ன் எனும் கொடுங்கோலன் தன்னைத் தானே “உங்களில்” உயர்ந்த தெய்வம் நான் தான் எனப் பிரகடனப்படுத்தி மக்களைக் குறிப்பாக இஸ்ரவேலர்களை அடிமைப்படுத்தி அராஜகம் புரிந்து வந்தான். இவனிடம் தஃவத்திற்காக அனுப்பப்பட்ட மூஸா, ஹாரூன்(அலை) ஆகிய இருவரும் அவனிடம் சென்று பின்வருமாறு கூற வேண்டும் என அல்லாஹ் கட்டளையிடுகின்றான்.
“அவனிடம் நீங்களிருவரும் வந்து, “நிச்சயமாக நாங்கள் உன்னுடைய ரப்பின் ரஸூல்கள் இருவர் (ஆவோம்). ஆகையால் இஸ்ராயீலின் மக்களை எங்களுடன் அனுப்பி வைப்பாயாக! அவர்களை நீ வேதனை செய்ய வேண்டாம்! உன்னுடைய ரப்பிடமிருந்து ஓர் அத்தாட்சியை உன்னிடம் திட்டமாக நாங்கள் கொண்டு வந்துள்ளோம். ஸலாம் (சாந்தி) ஆகிறது நேர்வழியைப் பின்பற்றியவர் மீது உண்டாவதாக என்று இருவரும் கூறுங்கள்.” (20:47)

எங்களுக்கு, “நிச்சயமாக (அல்லாஹ் விதியாக்கும் வேதனையாகிறது (நாங்கள் கொண்டு வந்ததைப்) பொய்யாக்கி புறக்கணித்துச் செல்பவனின் மீது உண்டாகும் என்று திட்டமாக வஹி அறிவிக்கப்பட்டுள்ளது” (என்றும் கூறுங்கள்) (20:48)

இங்கு உரையாடல் உடன்பாடான விடயத்தில் இருந்துதானா ஆரம்பிக்கப்படுகின்றது என்பதை அவதானித்துப் பாருங்கள்.

தன்னைத்தானே இறைவன் எனக்கூறுபவனிடம் போய் நாம் இருவரும் உன்னுடைய ரப்பின் தூதர்கள் எனக்கூறி முதல்வாக்கியத்திலேயே முரண்படுகின்றார்களே! முரண்பட்ட விடயங்களை வெளிப்படையாகப் பேசுதல் சரியல்ல என்றிருக்குமென்றால் “நாம் இருவரும் எங்களுடைய இறைவனின் தூதர்கள்” என்று மறைமுகமாகவாவது கூறியிருக்க வேண்டுமே? ஏன் பொட்டில் அடித்தாப் போல் “உன்னுடைய ரப்பின்” எனக் கூற வேண்டும்? தொடர்ந்து மூஸா, ஹாருன் (அலை) அவர்கள் கூறிய இஸ்ரவேலர்களை எம்முடன் அனுப்பிவிடு, அவர்களை சித்திரவதை செய்யாதே, நாம் கூறும் சத்தியத்தை பின்பற்றுபவர்களுக்கே அமைதியுண்டாகும். அதைப் புறக்கணித்து பொய்யாக்குபவர்களுக்கு கடின தண்டனை கிடைக்கும் போன்ற எந்த விடயமாவது பிர்அவ்னுக்கு உடன்பாடானவைகளாக உள்ளனவா? இல்லையே.!

அளவை நிறுவைகளில் மோசடி செய்து மக்களின் பொருளைச் சுரண்டி வாழ்ந்த “மத்யன்” வாசிகளிடத்தே அனுப்பப்பட்ட “ஷுஅய்ப்”(அலை) அவர்கள் மக்களுடன் முரண்படக்கூடாது என்பதற்காக இது பற்றி வாயே திறக்காமல் இருந்தார்களா? இல்லையே.

“மத்யனின் (சமூகத்தின்) பால் அவர்களுடைய சகோதரர் ஷுஅய்பை (நபியாக அனுப்பினோம்), என் சமுகத்தினரே! அல்லாஹ்வையே நீங்கள் வணங்குங்கள்; அவனைத்தவிர (வேறு) எந்த நாயனும் உங்களுக்கு இல்லை. உங்களுடைய ரப்பிடமிருந்து தெளிவான ஆதாரம் திட்டமாக உங்களுக்கு வந்து விட்டது;. எனவே, அளவையும் (சரியாக அளந்து) எடையையும் (சரியாக நிறுத்து) நிறைவாக்குங்கள். மக்களுக்கு அவர்களுடைய பொருள்களைத் (தக்க அளவில் கொடுப்பதை)க் குறைக்காதீர்கள்: பூமியில் அது சீர்திருத்தமான பின் குழப்பம் உண்டாக்காதீர்கள்; நீங்கள் (உண்மையான) முஃமின்களாக இருந்தால் உங்களுக்கு அதுவே நன்மையாக இருக்கும் என்று அவர் கூறினார்.” (7:85)

மேற்படி வசனமும் 17:35, 12:54, 26:15, 14:84, 85 போன்ற வசனங்களும் அவர் ஏகத்துவத்திற்கு அடுத்தபடியாக இந்த மோசடியைக் கண்டித்ததாகத் தானே கூறுகின்றன.

ஒழுக்கக் கேட்டில் ஊறித்திழைத்த ஒரு கூட்டத்தில் “லூத் (அலை) அவர்கள் வாழ்கிறார்கள். நாம் வாழும் சமூகத்தில் ஒழுக்கக் கேடு சமூக அங்கீகாரம் பெற்றது என்ற அளவுக்கு முற்றிப்போயுள்ளது. எனவே இப்போதைக்கு இது பற்றி நாம் எதையும் பேசக் கூடாது. அவர்களுக்கு உடன்பாடான விடயங்களை மட்டும் பேசி “நைஸாக” ஆட்களைக் கைக்குள் போட்டுக் கொண்டு -அதன்பிறகு ஒரு ஐந்து பத்து வருடம் கழித்து இது கூடாது எனக் கூறினால் உள்ளம் பண்பட்ட மக்கள் உடனேயே ஏற்றுக் கொளவார்கள் என லூத் (அலை) அவர்கள் கணக்குப் போட்டுக் கொண்டிருந்தார்களா? இல்லையே!.

லூத்தையும் (நபியாக நாம் அனுப்பி வைத்தோம்). அவர் தம் சமூகத்தாரிடம், “மானக்கேடானதொரு காரியத்தை நீங்கள் செய்கின்றீர்களா? அகிலத்தாரில் எவரும் அதை (செய்வது) கொண்டு உங்களை முந்திவிடவில்லை” என்று கூறியதை (நினைவு கூறுங்கள்) ! (7:80)

நிச்சயமாக நீங்கள் பெண்களை விட்டு விட்டு இச்சைக்காக ஆண்களிடம் வருகிரீர்கள். அன்றியும், நீங்கள் வரம்பு மீறுகின்ற சமூகத்தவராக இருக்கின்றீர்கள்.” (என்றும் அவர் கூறினார்) (7:81)

மேற்படி வசனத்தின் மூலமும் 26:165, 27:54, 24:28,29 போன்ற வசனங்கள் மூலமும் அன்றைய சமூகத்தின் அங்கீகாரத்தை பெற்ற ஒழுக்கக் கேட்டை கண்டித்து சமூக எதிர்ப்பை லூத் (அலை) அவர்கள் சம்பாதித்துக் கொண்டதை உணரலாம்.

எல்லா நபிமார்களும் முதன் முதலில் போதித்த ஏகத்துவக் கொள்கை கூட அந்தந்த சமூகத்திற்கு முரண்பாடானதாக இருந்ததே ஒழிய உடன்பாடானதாக இருந்ததில்லை. இருப்பினும், கொலை, கொள்ளை, மது, விபச்சாரம் போன்ற சமூக உடன்பாட்டைத் தேடித்தரும் விடயங்களைக் கண்டிப்பதில் கவனத்தைச் செலுத்தாமல் மொத்த சமூகத்தினதும் எதிர்ப்பைத் தேடித்தரும் ஏகத்துவப் போதனையில் இருந்தே தமது தஃவத் பணியை ஆரம்பித்தனர்.

சமூகத்திற்கு முரணான விடயங்களை ஆரம்ப காலத்தில் போதிப்பது (“உஸ்லூபுத் தஃவத்”) அழைப்புப் பணியின் அணுகுமுறைக்கு முரணானது எனின் எந்த நபிக்கும் அழைப்புப் பணியின் அணுகுமுறை பற்றி சரியாகத் தெரியாது எனக் கூறப்போகின்றோமா?

மேலே நாம் குறிப்பிட்ட ஆதாரங்களினூடாக நமது “தஃவா” வை சமூகத்திற்கு உடன்பாடான விடயங்களில் இருந்துதான் ஆரம்பிக்க வேண்டும் என்ற சிந்தனை சந்தர்ப்பத்திற்கு எமக்குச் சரியெனப்பட்டாலும் கூட நபிமார்களின் பிரச்சார அணுகுமுறைக்கு மாறுபட்டது என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

அடுத்து “கருத்து வேறுபாடுள்ள விடயங்களில் தஃவத் பணி இல்லை” என்ற கருத்துத் தவறானது என்பது பற்றியும் நாம் விபரிக்கக் கடமைப்பட்டுள்ளோம்.

கருத்து வேறுபாடுள்ள விடயங்களைத் தப்லீக் பணி புரிவோர் தீர்க்காவிட்டால் அல்லது குறைந்த பட்சம் கருத்து வேறுபாடுள்ள விடயங்களில் நாம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்ற தெளிவையாவது மக்களுக்குக் கொடுக்காவிட்டால் வேறு யார்தான் அதைச் செய்யப் போகிறார்கள்? கருத்து வேறுபாடுள்ள விடயங்களில் நாங்கள் தலையிடாமல் இருந்தால் அவை தாமாக நீங்கிவிடுமா? தீர்வுதான் பிறக்குமா? இது விடயத்தில் நாம் ஒதுங்கிச் செல்வது பிரிவினையும், வேற்றுமையும் வளர துணை போவதாகவல்லவா இருக்கும்?.

“கருத்து வேறுபாடுள்ள விடயங்களில் தீர்ப்புக் கூறுவதற்காகவே (அல்லாஹ்) நபிமார்களுக்கு சத்திய வேதத்தை அருளினான்” (2:213)

மேலும், எதில் அவர்கள் கருத்து வேறுபாடு கொண்டிருந்தார்களோ அதனை அவர்களுக்கு நீர் விளக்கி வைப்பதற்காகவும் முஃமினான கூட்டத்தினருக்கு நேர்வழி காட்டியாகவும், ரஹ்மத்தாகவும் இருப்பதற்கே தவிர (இந்த) வேதத்தை (நபியே) உம்மீது நாம் இறக்கவில்லை. (16:64)

இவை போன்ற பல வசனங்கள் கருத்து முரண்பாடுள்ள விடயங்களில் தலையிட்டு அவற்றைத் தீர்வு செய்வதே சத்திய வேதத்தினதும், அதன் போதகர்களினதும் பணியாகும் என்பதைக் கூறிக் காட்டுகின்றன. தஃவத் பணிபுரியும் ஒருவர் எப்படி இம்முக்கிய பணியைப் புறக்கணித்து ஒதுங்கி வாழ முடியும்? இவ்வசனத்தை ஆழமாக நோக்கின் கருத்து வேறுபாடுள்ள விடயங்களில் தெளிவைக் கொடுப்பது “தாயி”யின் பணி என்பதையும், அது தான் ரஹ்மத்திற்கு மாற்றமான பிரிவினையைத் தவிர்ப்பதற்கான வழியாகவும் இருக்கும் என்பதையும் உணரலாம்.

கருத்து வேறுபாடுள்ள விடயங்களில் தஃவத் இல்லை என்ற கருத்து, தூரநோக்கின்மையாலும் இமாம்களின் கருத்துக்களைச் சரிவரப் புரிந்து கொள்ளாமையினாலும் விளைந்த தொன்றாகும். இது பற்றிய இமாம்களின் நிலைப்பாடு என்ன என்பதையும் ஆராய்வோம்.

இமாம் இப்னு தைமிய்யா (ரஹ்) அவர்கள் இதுபற்றி பின்வருமாறு விபரிக்கின்றார்கள்.

நன்மையை ஏவித் தீமையைத் தடுத்தல் பற்றி நூற்களைத் தொகுத்த ஷாஃபி மதஹபுடைய இன்னும் ஏனைய சிந்தனையுடைய மார்க்க அறிஞர்களின் கருத்து என்னவெனில் ஆழிய ஆய்வுக்குட்பட்ட இஜ்திஹாத்துடைய அம்சங்களில் கரம் கொண்டு (பலவந்தமாக) தடுக்கப்பட மாட்டாது என்பதாகும். இஜ்திஹாத் மூலம் பெறப்பட்ட அந்த முடிவைப் பின்பற்றுமாறு எவரும் இது விடயத்தில் மாற்றுக் கருத்துடையவர்களை நிர்ப்பந்திக்க முடியாது. எனினும், இது பற்றி மாற்றுக் கருத்துடையோருடன் அறிவாதாரத்துடன் (சமரச உணர்வுடன்) உரையாடலாம். அந்த உரையாடலினூடாக ஏதாவது ஒரு கருத்து உறுதியான ஆதாரத்தையுடையது எனக்கண்டால் அதைப் பின்பற்ற வேண்டும். இது விடயத்தில் ஒருவர் மற்றொருவரைத் “தக்லீத்” பண்ணினாலும் அது மறுக்கப்படமாட்டாது.

இவ்வாறு கூறிய இமாம் அவர்கள் மனித ஆய்வுக் (இஜ்திஹாதிற்) குரிய விடயங்களுக்கு உதாரணமாக மர்மஸ்தானத்தையும், பெண்ணையும் தொட்டால் வுழு முறியுமா, முறியாதா? உண்ணக் கூடிய கால் நடைகளின் சிறுநீர் சுத்தமானதா? அசுத்தமானதா? என்பன போன்ற பல உதாரணங்களைக் குறிப்பிடுகின்றார்கள்.
(பார்க்க: பதாவா இப்னு தைமிய்யா பாகம் 30: பக்கம் 80)

இது போன்ற விடயங்களில் மாற்றுக் கருத்துடையவர்களைக் கரம் கொண்டு தடுக்கவோ அல்லது எனது கருத்தைத் தான் பின்பற்ற வேண்டும் என நிர்ப்பந்திக்கவோ எவருக்கும் அதிகாரம் இல்லை. இவற்றின் உண்மை நிலையை உரையாடலின் மூலம் கண்டறிய முயற்சிக்க வேண்டும். ஒரு முடிவுக்கு வர முடியாமல் போனாலும் கூட மாற்றுக் கருத்துடையோருடன் புரிந்துணர்வுடன் நடக்க வேண்டும். என்பதே இமாம் அவர்களின் தீர்ப்பாகும்.

இஜதிஹாத்துடைய விடயங்களில் தஃவத் இல்லை என்பதைத்தான் மாற்றுக் கருத்துடைய அறிஞர்கள் இஹ்திலாபான (கருத்து வேறுபாடுள்ள) விடயங்களில் தஃவத் இல்லை எனத் தவறாகப் புரிந்துள்ளனர்.

இது பற்றி குறிப்பிட முனையும் அறிஞர் கஸ்ஸாலி அவர்கள் பின்வருமாறு கூறினார்கள். “நாம் தடுக்க முனைகின்ற தீமை இஜ்திஹாத் செய்யாமலேயே அது தீமை என சந்தேகமற அறியக் கூடியதாக இருக்க வேண்டும்.” இஜ்திஹாத்துடைய விடயத்தில் (கருத்து வேறுபாடுள்ள விடயத்தில் அல்ல) நாம் நடவடிக்கை எடுக்க (அதாவது மாற்றுக் கருத்துடையோரைத் தடுக்க) முடியாது.
(பார்க்க: இஹ்யாஉல் உலூமுத்தீன் பாகம் 2 பக்கம் 300)
(குறிப்பு : இக்கருத்தைக் கூறிய நூலாசிரியர் அதற்கு உதாரணங்களாகக் கூறும் விடயங்களில் எமக்கு உடன்பாடு இல்லை)

இமாம் இப்னு கையிம் ஜவ்ஸி அவர்கள் இது விடயமாக “இஃலாமுல் மூவ்கியின்” எனும் தமது கிரந்தத்தில் கூறும் முடிவை இது தொடர்பான தீர்க்கமான கூற்றாக நாம் கொள்ளலாம்.

“இஹ்திலாபுடைய (கருத்து வேறுபாடுடைய) விடயங்களில் மறுப்பு (தஃவத்) செய்வது கூடாது என்ற கருத்து சரியானதல்ல. ஒரு கருத்து சுன்னாவிற்கோ, முஸ்லிம் உலக அறிஞர்களின் ஏகோபித்த முடிவுக்கோ முரணாக இருக்குமெனின் அதை மறுப்பது அவசியமானது என்பதே ஏகோபித்த முடிவாகும்.” (3/288 – 284)

எனவே, எமது பிரச்சாரத்தை சமூக உடன்பாடான கருத்துக்களுடன் சுருக்கிக் கொள்ள வேண்டும். சமூக சிந்தனைக்கு முரண்பட்ட விடயங்களை ஆரம்ப காலத்தில் பிரச்சாரம் செய்யக் கூடாது. கருத்து வேறுபாடுள்ள விடயங்களை நாம் கண்டு கொள்ளவே கூடாது, என்ற கருத்துக்கள் இஸ்லாமிய அழைப்புப் பணியின் அணுகு முறைக்குட்பட்டவையல்ல என்பதைப் புரிய முடிகின்றது.
ஆகவே, எத்தனை துன்பங்கள் துரத்தினாலும், தொல்லைகள் நிழலாக தொடர்ந்தாலும் போற்றுவோர் போற்றட்டும். புழுதி வாரித் தூற்றுவோர் தூற்றட்டும் என்ற துணிவுடன் சத்திய முழக்கம் செய்ய வேண்டும். நீங்கள் பணிபுரியுங்கள். முடிவை அவன் கையில் விடுங்கள்.

சின்ன விடயங்களைச் சொன்னால் என்ன?

அழைப்புப்பணியில் ஈடுபடுவோர் சில்லறை விஷயங்களைப் பற்றி அலட்டிக் கொள்ளக் கூடாது. அடிப்படையையே ஆட்டங்காணச் செய்யும் எத்தனையோ ஓட்டைகள் இருக்கின்றன. அவற்றை அடைக்காமல் சில்லறை விஷயங்களில் மயிர்பிளக்கும் ஆராய்ச்சிக்காக நம் நேரத்தையும் காலத்தையும் விரயமாக்கலாமா? எனவே, அழைப்புப் பணியில் ஈடுபடுவோர் தாடி வைத்தல், அத்தஹியாத்தில் விரல் அசைத்தல், தக்பீர் நெஞ்சில் கட்டுதல், கத்தம் பாத்திஹா, கந்தூரி, மீலாது, மவ்லது, ராத்திபு, ஹழரா போன்ற சில்லறை விடயங்கள் பற்றி அலட்டிக் கொள்ளக் கூடாது. இல்லையென்றால் எத்தனையோ பெரிய, பெரிய விடயங்கள் பற்றி கூற முடியாது போய்விடும். எனவே, சில்லறை விடயங்கள் பற்றி அலட்டிக் கொள்ளாமல் இருப்பதே தஃவாவில் ஹிக்மத்தான வழிமுறையாகும் என்பது ஒரு சாராரின் வாதம்.

அழைப்புப்பணியின் படிமுறை வளர்ச்சி, சில்லறை விடயங்களில் தாஈயின் நிலைப்பாடு என்ன? இதில் தவ்ஹீத் வாதிகள் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டுள்ளமை என்பன பற்றி நாம் பல கோணங்களில் ஆராய்வோம்.

படிமுறை வளர்ச்சி

அழைப்புப் பணியில் ஈடுபடுவோர் தமது பிரச்சார இலக்காக எதைக் கொள்ளலாம் என்பதை உறுதியாகத் தீர்மானிக்க வேண்டும். அப்படித் தீர்மானிக்கும் போது முன்னுரிமையும் முக்கியத்துவமும் அளித்து பேசப்பட வேண்டியவைகளுக்கு அதற்குரிய இடம் அவசியம் அளிக்கப்பட்டேயாக வேண்டும்.

ஒரு இடத்தில் இணைவைக்கப்படுகின்றது அந்த இடத்தில் தொழுகையைப் பற்றியோ இன்ன பிற வணக்க வழிபாடுகள் பற்றியோ பேசுவதில் அர்த்தமில்லை.

விழி இழந்தவனுக்கு விளக்குப் பிடிக்கலாமா?
செவி இழந்தவனுக்கு கவி பாடலாமா?
கண்ணை விற்று சித்திரம் வாங்கலாமா?
கோட்டையே போனபின் கொடியேற்றம் நடத்தலாமா?
நதிகள் காய்ந்த பின் படகோட்ட முடியுமா?

நிச்சயமாக முடியாது. எனவே, எந்த இடத்தில் எதற்கு முதன்மையும் முக்கியத்துவமும் அளிக்க வேண்டும் என்பதை சரியாகத் தீர்மானித்து அந்த இடத்தில் அதற்கு முன்னுரிமை அளிப்பதே சரியான வழிமுறையாகும். பின்வரும் நபி மொழிப் பிரச்சாரத்திற்கான படிமுறை வளர்ச்சி எது என்பதைத் தெளிவுற விளக்குகின்றது.

நபி(ஸல்) அவர்கள் முஆத் (ரழி) அவர்களை யமனுக்கு அனுப்பும் போது அவர்களை நோக்கிப் பின்வருமாறு கூறினார்கள்:-
முஆதே! நீர் வேதம் அருளப்பெற்ற ஒரு சமூகத்தின் பக்கம் செல்கிறீர்! நீர் அவர்களுக்கு விடுக்கும் முதல் அழைப்பாக ஏகத்துவம் இருக்கட்டும். அதை அவர்கள் ஏற்றுக் கொண்டால் அவர்களுக்கு அல்லாஹ் ஒரு தினத்தில் ஐவேளைத் தொழுகையைக் கடமையாக்கியுள்ளான் என்று கற்றுக் கொடுப்பீராக! அதற்கும் அவர்கள் கட்டுப்பட்டால் அல்லாஹ் அவர்கள் மீது “ஸகாத்” விதித்திருப்பதையும் அது அவர்களின் செல்வந்தர்களிடமிருந்து பெறப்பட்டு அவர்களில் உள்ள ஏழைகளுக்குப் பகிர்ந்தளிக்கப்படும். என்றும் கற்றுக் கொடுப்பீராக.
அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ்(ரழி)
ஆதாரம்: புகாரி, முஸ்லிம்

ஆரம்பத்தில் ஏகத்துவத்தையும் அதன்பின் தொழுகையையும் அதன்பின் ஸகாத்தையும் யூத கிரிஸ்தவர்களுக்கு எடுத்துக் கூறுமாறு நபி(ஸல்) அவர்கள் கூறியதில் இருந்து அதி முக்கியமாக ஏவ வேண்டிய ஒன்று இருக்க அதை விட்டு விட்டு அதை விட ஷரீஅத் முக்கியத்துவம் அளிக்காத ஒன்றை எடுத்துக் கூறுதல் பொருத்தமற்றது என்பதைப் புரிய முடிகின்றது.

இந்த அடிப்படையில் “அகீதா” வில் கோளாறு உள்ளவர்களிடத்தில் சுன்னத், பர்ழ் பற்றிப் பேசுதல் அர்த்தமற்றதே! தொழுகையே இல்லாதவர்களிடத்தில் தொழுகையின் உள்ளே உள்ள சர்ச்சைகள் பற்றி விலாவாரியாக விளக்குவதும் பொருத்தமற்றதே.

இவ்வாறு நாம் கூறுவதை “தொழாத ஒருவர் தொழ ஆரம்பித்த பின்னரும் அது தொடர்பான சுன்னத்துக்களை அவருக்குக் கற்றுக் கொடுக்கத் தேவையில்லை”. என புரிந்து கொள்ளக் கூடாது. தொழாதவர்களை தொழ அழைப்பவர்கள் அழைப்பை ஏற்றுக் கொண்டவர்களுக்கு தொழுகின்ற முறையை உள்ளது உள்ளபடி கற்றுக் கொடுப்பது கடமையாகும்.

“அடிப்படைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றோம்” என்று தொழுகைக்கு அழைத்துவிட்டு அது தொடர்பான செய்திகளை மறைப்பது அடிப்படையான தொழுகையின் மகத்துவத்தைக் குறைப்பதாகவே அமையும். அடிப்படைகளை விட்டு விட்டு மேலோட்ட மானவற்றில் கவனம் செலுத்தக் கூடாது. எனக் கூறுகின்ற நாம், அடிப்படைகளை ஏற்றுக் கொண்டவர்களிடம் மேலோட்டமானவற்றை மறைப்பதும் கூடாது என்பதைப் புரிந்து கொண்டால் சரி. (பெரிய விடயங்களைப் பேசுகின்றோம் என்று சின்னவற்றை விட்டு விடுவதும் சில்லறைகளைப் பேசி, பெரியதை விடுவதும் தவறானதே! இரண்டையும் போதிப்பதே முறையாகும். முக்கியத்து வத்திலும் முதன்மையளிப்பதிலும் வித்தியாசம் இருக்கலாம்.)

எனவே, சில்லறைப் பிரச்சினைகளைத் தவிர்த்தல் என்பது பிரச்சாரப் பணியில் எல்லாக் காலங்களுக்கும் உரிய ஒன்றாக இருக்காது. ஒருவரிடம் சொல்லத் தேவை யில்லாத ஒரு விடயம் இன்னொருவரிடம் சொல்ல வேண்டியதாயிருக்கலாம் என்பதைப் புரிய முடிகின்றது.

மறுப்பதும் செய்யாமல் இருப்பதும்

சில்லறைப் பிரச்சினைகளைப் பெரிதுபடுத்துதல் என்ற பிரச்சினையை நாம் இன்னுமொரு கோணத்தில் நோக்குவோம்.

தொழாத ஒருவரிடம் சுன்னத்துத் தொழுகையை ஏவவேண்டியதில்லை. அவர் தொழ ஆரம்பித்து விட்டால் அதன் பின் சுன்னத்துத் தொழுகையை வலியுறுத்திப் பேச வேண்டும். அதை அவர் செயல்படுத்தாமல் இருந்தால் குற்றமில்லை. இதற்காக அவரைக் குறைகாணவோ பெரிதாக அலட்டிக் கொள்ளவோ வேண்டியதில்லை.

இதே நபர் அந்த சுன்னத்துத் தொழுகைகளை பொடு போக்கு, அக்கறையின்மை, சோம்பல், வேலைப்பளு போன்ற காரணங்களுக்காக அல்லாமல் வெறுப்போடு விட்டுவிடுகிறார் என்று வைத்துக் கொள்வோம். இப்போது இது வன்மையான கண்டனத்துக்குள்ளாக வேண்டிய நிலையை அடைகின்றது.

“யார் எனது வழி முறையைப் புறக்கணிக்கின்றாரோ அவர் என்னைச் சேர்ந்தவரில்லை.”
அறிவிப்பவர் : அனஸ் (ரழி)
நூல் : முஸ்லிம்

என்ற நபி மொழியை அவதானிக்கும் ஒரு “தாயீ” (அழைப்பாளன்) நிச்சயமாக ஒரு சுன்னத்தை ஒரு தனி நபர் அல்லது ஒரு சமூகம் வெறுப்போடு விடும் போது சுன்னத்துத் தானே? இதற்கேன் அலட்டிக் கொள்வான்? என்று இருக்க மாட்டான்.

இதிலிருந்து சாதாரணமாக ஒரு சுன்னத்தை விடுதல் வேறு, வெறுப்போடு அதை விடுவது வேறு என்பதைப் புரிய முடிகின்றது.

அதே நபர், அந்த சுன்னத்தான தொழுகையைக் கிண்டல் பண்ணுகிறார். குறைத்து மதிப்பிடுகிறார், இழிவாகப் பேசுகிறார் என்று வைத்துக் கொள்ளுங்கள்.

இப்போது ஒரு “தாயீ” (அழைப்பாளன்) கிண்டல் பண்ணப்படுவது சுன்னத்தைத் தானே? பர்ழை அல்லவே? இதைப் போய் பெரிது படுத்த வேண்டுமா? சுன்னத் கிண்டல் செய்யப்படுவதற்கு அது செயல்படுத்தப்படுவது தானே காரணம்? சுன்னத்தைச் செய்பவர்கள் அதை செய்யாமல் விட்டால் பிரச்சினையே இருக்காதே? என்றெல்லாம் கற்பனையாவது பண்ணிப் பார்க்கலாமா?

“அல்லாஹ்வையும், அவனது வசனங்களையும், அவனது தூதரையுமா நீங்கள் பரிகசிக்கின்றீர்கள்…, நீங்கள் விசுவாசம் கொண்டதற்குப் பின்னர் நிச்சயமாக (அதனை) நிராகரித்தே விட்டீர்கள்.” (9:65,66)

என்ற மறை வசனத்தை அறிந்த ஒரு “தாயீ” சுன்னத் கிண்டல் செய்யப்படுவதை ஒரு சுன்னத் எவ்விதக் காரணமும் இல்லாமல் விடப்படுவதோடு சமப்படுத்தி நோக்கலாமா? கூடாது, கூடவே கூடாது.

எனவே, ஒரு சுன்னத் செயல்படுத்தப்படாமல் இருப்பது வேறு அது கிண்டலோடு அவமரியாதையோடு விடப்படுவது வேறு, இதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

அதே நபர், சுன்னத் தொழுகை என்ற ஒன்று இல்லை என்று மறுத்துப் பேசுகின்றார். பர்ழையே பலர் தொழாமல் இருக்கின்றனர். இவர் சுன்னத்துத் தொழுகையைத் தானே மறுக்கிறார். இதைப் பெரிது படுத்தக் கூடாது. பர்ழைத் தொழுகிறாரே அது போதாதா? என ஒரு “தாயீ” கூற முடியுமா? முடியாது. எனவே செயல்படுத்தாமல் இருப்பது வேறு, மறுப்பது வேறு, மறுக்கப்படும் போது எதிர்ப்பது கடமை என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

அதே நபர் சுன்னத்துத் தொழுபவர்களை இல்லாத ஒன்றைச் செய்வதாகக் கூறி கண்டிக்கின்றார், அடிக்கின்றார், இதைச் செய்யக் கூடாது என்று மல்லுக்கு நிற்கிறார்.

சுன்னத்தை தானே விடச் சொல்லுகிறார். விட்டால் போச்சுது. இதற்காகப்போய் அடி வாங்கிக் கொண்டு இருக்க வேண்டுமா? என்று ஒரு தாயீ கூற முடியுமா? நிதானமாகச் சிந்தித்துப் பாருங்கள்.
ஒரு சுன்னத் ஒரு சிலரால் விடப்படுமென்றால் சும்மா இருக்கலாம். (ஒரு கூட்டம் ஒட்டு மொத்தமாக ஒரு சுன்னத்தை விடுமென்றால் அதை எதிர்க்கும் கட்டாயம் ஏற்படும்) ஆனால் அதே கூட்டம் சுன்னாவை எதிர்க்கும் என்றால் அதை செயல்படுத்திக் காட்டுவதும், பிரச்சாரம் பண்ணுவதும் கட்டாயம் என்கின்ற அளவுக்கு உயர்ந்து விடும்.

“எனக்குப் பின் என் சுன்னத்துக்களில் மக்கள் மரணிக்கச் செய்தவைகளுக்கு உயிர் கொடுக்கும். உத்தமர்களான அனாதரவானவர்களுக்கு சுபசோபனம் உண்டாவதாக.” (திர்மிதி 2765) என்ற நபி மொழி எதைக் கூறுகின்றது என்று சிந்தித்துப் பாருங்கள்.

முடிவாக ஒரு சுன்னத் அது மிகச் சிறிய விசயமாக இருந்தாலும் செயல்படுத்தப்படாமல் இருப்பது வேறு, கேலிக்கும், கிண்டலுக்கும், மறுப்புக்கும், எதிர்ப்புக்கும் உள்ளாக்கப்படுவது வேறு. முன்னைய நிலையைப் பொறுத்துக் கொள்ள வேண்டும். பின்னைய நிலையில் பொங்கி எழ வேண்டும்.
ஏவுதலும் எடுத்து நடத்தலும்

இதே பிரச்சினையை நாம் இன்னுமொரு கோணத்தில் நோக்க வேண்டிய தேவை உள்ளது.
சிலர் அடிப்படைகளே இல்லாமல் இருக்கலாம். அவர்களிடம் போய் கிளைப்பிரிவுகள் பற்றிப் பேச வேண்டிய தில்லையென்பது நியாயம் தான். மது அருந்திக் கொண்டிருக்கும் ஒருவரிடம் “இருந்து கொண்டு, பிஸ்மி கூறி அருந்துங்கள்” என்று கூற முடியாதல்லவா? எனவே, இது போன்றவர்களிடம் இது போன்ற சந்தர்ப்பங்களில் சுன்னத்துக்கள் பற்றி ஏவ வேண்டியதில்லை என்பதை ஏற்கலாம்.

இதற்காக இது போன்றவர்கள் முன்னிலையில் என்றாலும் இது போன்ற சந்தர்ப்பங்களில் என்றாலும் கூட அடிப்படைகளை அறிந்து ஏற்று, அதைப் பிறருக்கு எடுத்துக் கூறும் நாம் சுன்னத்துக்களை அவர்களுக்காக தவிர்க்க முடியாதல்லவா?

ஏவுதல் என்பது வேறு, நாம் எடுத்து நடத்தல் என்பது வேறு, சில விசயங்கள் கால சூழலை வைத்து நோக்கும் போது நாம் எடுத்துக் கூறும் அளவிற்குத் தேவையோ, முக்கியத்துவமோ அற்றதாக இருக்கலாம். ஆனால், அண்ணலாரின் நடைமுறைகள் எப்போதும், எக்காலத்திலும் நாம் எடுத்து நடக்கும் அளவிற்கு உயர்வுடையதாகும்.

மதுபானம் அருந்துபவனிடம் “உட்கார்ந்து பிஸ்மி கூறி குடி” எனக் கூற முடியாது. என்றாலும் நீரை அருந்தும் நாம் இதைக் கடைப்பிடிக்கலாம் அல்லவா?

ஹராமான களியாட்டங்களில் பங்கு கொள்கின்ற ஒருவரிடம் அதைத் தடுப்பதற்கு முன்னர் கந்தூரி போன்றவற்றில் கலந்து கொள்ளாதீர்கள் என்று பிரச்சாரம் பண்ணுவதுதான் பொருத்தமற்றது என்கின்றனர். அப்படியாயின் ஹராமான களியாட்டங்களில் பங்கு கொள்ளாதவர்களாகிய அவர்களாவது இவை போன்ற வற்றில் இருந்து ஒதுங்கியிருக்க வேண்டுமல்லவா?

எனவே, சுன்னத்தான விடயங்களை ஏவுவதற்கு காலத்தையும் நேரத்தையும் சூழலையும் அதற்கேற்ற மக்களையும் தேடுகின்ற நாம், இந்த வாய்ப்புக்கள் வரும்வரை அதை எடுத்துச் செயல்படுத்துவதையும் தள்ளி வைக்க முடியாது.

ஏவுவதற்குத் தேவையற்ற சந்தர்ப்பம் என்றாலும் கூட நாம் எடுத்து நடக்க வேண்டும். ஏவும் சூழ் நிலை இல்லை என்பதற்காக எடுத்து நடக்காமல் இருப்பது மடமையாகும்.

மது அருந்தும் ஒருவர் சீர் திருந்திய பின்னர் நீர் அருந்தும் ஒழுங்கைக் கற்றுக் கொடுக்க காத்துக் கொண்டிருக்கும் ஒரு “தாயீ” அவன் திருந்தியதன் பின்னர் நாமும் நீர் அருந்தும் ஒழுங்கை கடைப்பிடிக்கலாம் அது வரை இந்த ஒழுங்கு பற்றி அலட்டிக் கொளளத் தேவையில்லை எனக் கருத்துக் கூறினால் அது எப்படி முட்டாள் தனமானது என முத்திரை குத்தப்படுமோ அதே போன்றுதான் சுன்னத்துக்களை எடுத்துக் கூறும் சூழ்நிலை வரட்டும் என்று சுன்னத்துக்களை செயல்படுத்தாமல் இருக்கும் தஃவா அணுகுமுறையுமாகும். அலைகள் ஓயட்டும், ஆழ்கடலில் குளிக்கலாம் என்று காத்திருப்ப வனுக்கும். கடல் வற்றிய பின் கருவாடு உண்ணக் காத்திருக்கும் கொக்கிற்கும் இந்த தஃவா அணுமுறைக்கும் பெரிய வித்தியாசம் இருப்பதாகத் தெரியவில்லை.
ஒட்டு மொத்தமாக கூறுவதென்றால் ஏவுவது வேறு, எடுத்து நடப்பது வேறு. ஏவும் நிலையில்லை என்பதற்காக எடுத்து நடக்காமல் இருக்க முடியாது. என்பதைப் புரிந்து கொள்ளல் வேண்டும்.

பிரச்சினையை இனம் காணல்

இதே பிரச்சினையை நாம் இன்னுமொரு கோணத்தில் நோக்குவோம்.

பிரச்சினை எது? அதைப் பெரிதுபடுத்துவோர் யார்? என்பதை பொது மக்களும், ஏன் தாயீகளும் கூட உணராமல் இருக்கின்றனர். பிரச்சினை எது என்பதையும் அதைப் பெரிதுபடுத்துவோர் யார் என்பதையும் இனம் காண வேண்டும். அவர்களிடம் தான் பிரச்சினைகளைப் பெரிதுபடுத்தாதீர்கள், என்ற போதனையைச் செய்ய வேண்டும்.

தற்போது பெரும்பாலும் சரியான சுன்னாக்களே சில்லறைப் பிரச்சினை என்று கூறப்படுவதைக் காண முடியும்.

சுன்னாக்கள் பிரச்சினை என்றோ, சில்லறை என்றோ கீழ்ப்படுத்தப்படுவது, ஒதுக்கப்படுவது நிச்சயம் ஒரு முஸ்லிமால் சகிக்க முடியாததாகும். சின்ன விஷயமாக இருந்தாலும் நபி செய்தால் அது நபி வழி என்று உயர்வாகவே நோக்கப்பட வேண்டும். நபி வழி எப்போதும் தீர்வாக இருக்குமேயொழிய பிரச்சினையாக இருக்காது. எனவே, சுன்னத்திற்கு மாற்றமான வழி முறைகள் தான் சில்லறை என்றும் , பிரச்சினைகள் என்றும் சுட்டிக் காட்டப்பட வேண்டும்.

அடுத்து பெரிது படுத்துதல் என்றால் என்ன என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். ஒரு சுன்னத்தை பர்ழ் எனக் கூறுவது பெரிது படுத்தலாகும். அல்லது சுன்னத் ஒன்றைச் செய்யாதவருடன் சர்ச்சைக்குச் செல்வது, சண்டையிடுவது வேண்டுமானால் அதைப் பெரிது படுத்து வதாகும்.
ஒரு முஃமின் சுன்னாவை ஒருவர் செயல்படுத்த வில்லை என்பதற்காக அவருடனும் சர்ச்சை செய்து அதைப் பெரிதுபடுத்தவும் மாட்டான். ஒரு சுன்னத்தை சில்லறைப் பிரச்சினை என்று கூறி இழிவுபடுத்தவும் மாட்டான். சுன்னத்தை சுன்னத் என்றே கூறுவான்.

இதனை மனதில் ஆழப்பதிய வைத்துக் கொண்டு சில்லறைப் பிரச்சினைகள் எவை? அவற்றைப் பெரிது படுத்துதல் என்றால் என்ன? என்பவற்றையும் சற்று நோக்குவோம்.

எது பிரச்சினை?

எம்மைப் பொறுத்த வரையில் ஒரு நபிவழி பிரச்சினையாக இருக்காது, அது சில்லறை என ஒதுக்கப்படவும் கூடாது. ஆனால், இன்று பெரும்பாலும் சரியான சுன்னாக்கள் தான் சில்லறைப் பிரச்சினைகளாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

தக்பீர் நெஞ்சில் கட்டுவது சிலரால் சில்லறைப் பிரச்சினையாக (சிலரைப் பொருத்தவரை கையை உடைப் போம் எனக் கோஷமிடுமளவுக்கு அது பெரிய ரொம்ப ரொம்பப் பெரிய பிரச்சினை) நோக்கப்படுகின்றது.

குர்ஆன், சுன்னாவின் கண்ணோட்டத்தைப் பொறுத்தவரை தக்பீரை நெஞ்சின் மீது கட்டுவது சுன்னத்தாகவும், அதை, தொப்புளுக்குக் கீழும் நெஞ்சுக்கும் தொப்புளுக்குமிடையிலும் கட்டுவது தான் பிரச்சினையாகவும் சுன்னாவுக்கு மாற்றமாகவும் இருக்கும்.

யார் பெரிது படுத்துபவர்கள்?

சுன்னத்துக்கள் சில்லறைகளாக, பிரச்சினையாக கருதப்படுவது போலவே நபி வழி நடப்போரே இன்று குழப்ப வாதிகளாக சில்லறைப் பிரச்சினைகளைப் பெரிது படுத்துபவர்களாக சமூகத்தால் நோக்கப்படுகின்றனர்.

குழப்பத்தை விரும்பாத, சில்லறைகளை பெரிது படுத்த விரும்பாத மாற்றுக் கருத்துடையோரின் கருத்துப்படி நெஞ்சில் தக்பீர் கட்டுவது சில்லறைப் பிரச்சினையாகும்.

ஒருவர் பள்ளியில் நெஞ்சில் தக்பீர் கட்டித் தொழுகிறார் என வைத்துக் கொள்வோம். இது சில்லறைப் பிரச்சினைதானே இதைப் பெரிதுபடுத்தக் கூடாது தானே (அவர் கருத்துப்படி வேறு இடத்தில் தக்பீர் கட்டுவது சுன்னத் என்றே வைத்துக் கொள்வோம்) ஒரு சுன்னத்தை நிலைநாட்டி ஒற்றுமை என்ற பர்ழை உடைக்கலாமா? எனவே சில்லறைப் பிரச்சினைகளைப் பெரிதுபடுத்த விரும்பாதவர்கள் இது பற்றி அலட்டிக் கொள்ளாமல் தங்கள் பாட்டில்போய்க் கொண்டிருக்க வேண்டியதுதானே.?

அதை விட்டு விட்டு ஒற்றுமை விரும்பிகள் சில்லறைப் பிரச்சினைகளைப் பெரிதுபடுத்த விரும்பா தவர்கள் தக்பீர் நெஞ்சில் கட்டியவரை ஏசி, அடித்து பள்ளியில் இருந்து இழுத்து வெளியேபோட்டு விட்டு குழப்பவாதி, பிரச்சினைவாதி என சீல் குத்துவது எங்ஙனம் நியாயமாகும்?

தக்பீர் கட்டியவர் குழப்பவாதியா? அதைப் பலவந்தமாகத் தடுக்க முற்படுபவர்கள் குழப்பவாதிகளா? இவ்விரு சாராரில் யார் சில்லறைப் பிரச்சினைகளைப் பெரிதுபடுத்துவோர் என்பதை சமுதாயம் சிந்திக்க வேண்டும். அவர்களைப் பார்த்துத் தான் சில்லறைகளைப் பெரிதுபடுத்தாதீர்கள் என்று பிரச்சாரமும் புரிய வேண்டும்.

மாற்ற வேண்டியது மார்க்கத்தையா? மக்களையா?

இப்போது இன்னுமொரு சந்தேகம் எழலாம். தக்பீர் நெஞ்சில் கட்டினால் மக்கள் அடிக்கின்றனர், ஏசுகின்றனர் எனவே இந்த சின்ன விடயத்தை விட்டுக் கொடுக்கலாம் தானே? எங்கே கட்டினால் என்ன? இடத்தைக் கொஞ்சம் மாற்றிக் கொண்டால் என்ன குறைந்தா போகப்போகிறது? இப்படியும் சில அழைப்பாளர்கள் சிந்திக்கலாம்.

இஸ்லாமிய பிரச்சாரம் என்றால் மார்க்கக் கருத்திற்கேற்ப மக்கள் நடத்தை, சிந்தனை என்பவற்றை மாற்றுவதேயன்றி, மக்கள் நிலைக்கேற்ப மார்க்க முடிவுகளை மாற்றுவதல்ல என்பதை ஒவ்வொரு அழைப்பாளனும் அழுத்தமாக உள்ளத்தில் பதிய வைத்துக் கொள்ள வேண்டும்.

இத்தகைய சிந்தனைப் போக்கால் தான் முன்னைய வேதங்களில் மனித யூகங்கள் நுழைந்து அதன் தூய்மை கெட்டது. மார்க்க விடயத்தில் மாற்றம் செய்வது அது சிறிதாக இருந்தாலும் கூட கண்டிக்கத் தக்கதே! இதில் இஸ்லாம் யாருக்கும் எவ்வித உரிமையையும் வழங்கவில்லை, இதனைப்பின்வரும் வசனங்கள், நிகழ்ச்சிகள் மூலம் மிகத்தெளிவாக அறியலாம்.

“இன்னும் நேரான வழி இன்னதென்று தனக்குத் தெளிவானதன் பின்னர் எவர் (தம்முடைய) இத்தூதருக்கு மாறு செய்து, விசுவாசிகளின் வழியல்லாத (வேறு வழியான) தைப் பின்பற்றுகிறாரோ அவரை நாம், அவர் விரும்பிய (தவறான) வழியிலேயே திருப்பிவிடுவோம். (பின்னர்) அவரை நரகத்தில் புகுத்தி விடுவோம். அது சென்றடையும் இடத்தில் மிகக் கெட்டது”.
(4:115)

அறிந்த உண்மையை உதறித்தள்ளிவிட்டு மாற்று வழியில் செல்ல முடியாது என்பதை மேற்படி வசனம் தெளிவு படுத்துகிறது.

“அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் யாதொரு காரியத்தை முடிவெடுத்து விட்டால், அவர்களுடைய அக்காரியத்தில் சுயமாக வேறு அபிப்பிராயம் கொள்வதற்கு விசுவாசியான எந்த ஆணுக்கும், எந்த பெண்ணுக்கும் உரிமையில்லை. (அதில்) அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எவர் மாறு செய்கிறாரோ அவர், பகிரங்கமாக வழிகேடாக திட்டமாக வழிகெட்டுவிட்டார். (33:36)

இஸ்லாம் கூறும் முடிவுகளில் மாற்றம் செய்ய எவருக்கும் எவ்வித உரிமையும் கிடையாது எனவும், அவ்விதம் செய்வது வழிகேடு என்பதையும் மேற்படி வசனம் உணர்த்துகின்றது.

மார்க்கத்தில் சின்ன மாறுதல் கூடச் செய்ய எவருக்கும் உரிமையில்லை என்பதையும், சுன்னாக்களை சில்றைகளாக்கக் கூடாது என்பதனையும், சின்ன விடயங்கள் கூட பிரச்சாரத்திற்குட்பட்டவையே என்ப தனையும் தெளிவுபடுத்தும் சில சம்பவங்களை இனிக் கவனிப்போம்.

1. பாராஃ இப்னு ஆஸிப் எனும் தோழருக்கு நபி(ஸல்) அவர்கள் உறங்கும் போது ஓத வேண்டிய ஒரு “துஆவை” கற்றுக் கொடுத்தார்கள். அதை அவர் திரும்பக் கூறும் போது “வநபிய்யிக” எனக் கூற வேண்டிய இடத்தை “வரஸூலிக” என மாற்றிக் கூறிய போது, “இல்லை” எனக் கூறிக் கண்டித்துவிட்டு “வநபிய்யிக” என்றே ஓத வேண்டும் என நபி(ஸல்) அவர்கள் திருத்திக் கொடுத்தார்கள். (ஆதாரம் : புகாரி 6311, 5025)

“நபி” என்பதை “ரஸூல்” என மாற்றியதைக் கூட நபி (ஸல்) அவர்கள் அனுமதிக்க வில்லை என இந் நபிமொழி தெளிவுபடுத்துகின்றது. இதன் மூலம் சுன்னாவில் ஒரு சிறு மாறுதலும் செய்ய அனுமதியில்லை என்பது தெளி வாகின்றது.

2. “நபி (ஸல்) அவர்கள் பெண்கள் பள்ளிக்குச் செல்ல அனுமதி கேட்டால் மறுக்காதீர்கள் எனக் கூற நான் கேட்டேன் என அப்துல்லாஹ் இப்னு உமர் (ரழி) அவர்கள் கூறினார்கள். இது கேட்ட (அவரது மகன்) பிலால் இப்னு அப்துல்லாஹ் அவர்கள் (காலம் கெட்டு விட்டதைக் காரணம் கூறி) “நான் அனுமதிக்கமாட்டேன்” எனக் கூறிவிட்டார். இது கேட்ட இப்னு உமர் பிலாலைக் கோபத்தோடு நோக்கி நெஞ்சில் அடித்துவிட்டு, “நான் நபி (ஸல்) அவர்களது ஹதீஸைக் கூறும் போது நீ அதனை மறுத்துப் பேசுகின்றாயா?” எனக் கேட்டுவிட்டு கடுமை யாகத் திட்டினார்கள். பின்னர் நான் உன்னுடன் பேசமாட்டேன் எனக்கூறிவிட்டு, அதே நிலையிலேயே மரணித்தார்கள்.
(புகாரி 865,873,5235 தாரமி 1278,1279, அபூதாவூத் 564 , இப்னு மாஜா 16, ஷரஹ் ஷஹீஹ் முஸ்லிம் பாகம் 4, பக்கம்161,141)

பெண்கள் தொழும் இடத்தைப் பொறுத்தவரையில் அவர்களுக்கு அவர்களது இல்லமே ஏற்றது என்று நபி (ஸல்) அவர்களே கூறியுள்ளார்கள். (அபூதாவூத் 563) அதிலும் குறிப்பாக வீட்டில் அவர்களுக்கெனத் தனி அறை இருப்பின் அதுவே நல்லது. என்றும் கூட கூறியுள்ளார்கள். (அபூ தாவூத் 566) பெண்களுக்கு கூட்டுத் தொழுகை கடமையில்லை. இவ்வளவு இருந்தும் கூட அனுமதி கேட்டால் மறுக்க வேண்டாம் என்று கூறியுள்ள ஒரு கூற்றை மறுத்த மைக்காக இப்படிக் கண்டிக்கப்பட்டுள்ளாரே! இன்று எத்தனை நபி வழிகள் எவ்வித நியாயமுமின்றி மறுப்புக்கும் எதிர்ப்புக்கும், கேலிக்கும் உள்ளாக்கப் படுகின்றன. இது போன்ற சில்லறை விடயத்திற்காக இப்படி ஆத்திரப் பட்டுள்ளாரே இப்னு உமர் அலி என்ன தீவிர வாதியா? குழப்பவாதியா? பிரிவினைவாதியா?.
3. அப்துல்லாஹ் இப்னு முஅப்பல்(ரழி) அவர்கள், விரலிடுக்கில் கல்லை வைத்துச் சுண்டி விளையாடிக் கொண்டிருந்த ஒருவரைக் கண்டு “அவரிடம் இவ்வாறு செய்யாதே! நபி (ஸல்) அவர்கள் இதனைத் தடுத்துள்ளார்கள். ஏனென்றால், இதனால் வேட்டையாடவோ, விரோதிகளை எதிர்க்கவோ முடியாது. இது உன் தோழனின் பல்லை உடைத்து விடலாம் அல்லது கண்ணைக் கெடுத்து விடலாம் எனக் கூறினார். மீன்டும் ஒரு முறை அதே மனிதரை அதே விளையாட்டில் ஈடுபட்டிருக்கக் கண்டபோது இதைத் தவிர்க்குமாறு நபி(ஸல்) அவர்கள் கூறிய ஹதீஸை நான் கூறியதன் பின்னரும் நீ அதைச் செய்கின்றாயே! நான் உன்னுடன் இனிக் கதைக்கவே மாட்டேன் எனக் கூறினார்.
(ஆதாரம் : இப்னு மாஜா (17), முஸ்லிம், பாடம் :கிதாபுஸ் ஸைத்)

இமாம் நவவி (ரஹ்) அவர்கள் மேற்படி ஹதீஸிற்கு விளக்கமளிக்கும் போது “பித்அத்” புரிவோர், பாவிகள் அறிந்து கொண்டே சுன்னாவைப் புறக்கணிப்போர் போன்றோரை நிரந்தரமாக வெறுப்பதற்கு மேற்படி நிகழ்ச்சியில் ஆதாரமுண்டு. மூன்று நாட்களுக்கு மேல் வெறுக்கக் கூடாது என்பது சுயமாக உலகாதாய காரணங்களுக்காக வெறுப்பதையே குறிக்கும் எனக் குறிப்பிடுகின்றார்கள். (ஷரஹ் ஷஹீஹ் முஸ்லிம் பாகம்: 13,பக்கம் 106)

ஒரு ஹதீஸை எவ்வித காரணமுமின்றி மீறிய ஒருவரை வெறுத்த நபித் தோழர் தீவிரவாதியா? அல்லது சில்லறைப் பிரச்சினையை பெரிது படுத்தியவரா?

4. மிஸ்ரிப்னு மர்வான் வெள்ளிக் கிழமை குத்பாவின் போது கையை உயர்த்திப் பிரார்த்திப்பதைக் கண்ட உமாரதிப்னுருவய்பா என்ற ஸஹாபி “இந்த இரு கைகளையும் அல்லாஹ் சபிப்பானாக! நபி (ஸல்) அவர்கள் மிம்பரில் இருக்கையில் துஆவின் போதோ அதல்லாத வேளையிலோ சுட்டுவிரலால் சைக்கினை செய்வதை விட அதிகமாகக் கையை உயர்த்துவதை நான் பார்த்ததே இல்லை” எனக் கூறி சைக்கினையும் செய்து காட்டினார். (ஆதாரம் : அபூதாவூத்)

இந்தச் சின்ன விஷயத்தைப் போய் இந்த மனிதர் பகிரங்கமாகக் கண்டித்துப் பெரிது படுத்தியுள்ளாரே! இந்த ஸஹாபி சில்லறைவிடயங்களைப் பெரிது படுத்தும் தஃவா அணுகுமுறை தெரியாத மனிதராகவல்லவா இருக்கிறார் என்று கூறப் போகிறார்களா?

5. (உம்றாவுடைய விடயத்தில்) இப்னு அப்பாஸ்(ரழி) அவர்கள் நபி மொழி ஒன்றை ஆதாரமாகக் கொண்டு ஒரு தீர்ப்பு வழங்கினார்கள். அதைக் கேட்ட சிலர், “அபூபக்கர், உமர்(ரழி) ஆகிய இருவரும் இதற்கு மாற்றமாகக் கூறுகிறார்களே” என்று வினவிய போது இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள், “உங்கள் மீது கல்மாரி பொழிந்து விடும்” என நான் பயப்படுகின்றேன். அல்லாஹ்வின் தூதர் கூறினார் என நான் கூறும் போது அபூபக்கர் கூறினார். உமர் கூறினார் என்கிறீர்களே எனக்கேட்டு இப்போக்கைக் கண்டித்தார்கள். (ஆதாரம் : அஹ்மத், தபராணி)

இது நபி வழி தான் எனத்தெரிந்த பின்னரும் அதற்கு மாற்றமாக சுய கருத்தை, சமூக நடத்தையை முன்வைப்பது சின்ன விஷயமா? அப்படி நபித்தோழர்கள் எவரேனும் கருதியதற்கான ஆதாரங்களைக் காட்ட முடியுமா? அவர்கள் அப்படிக் கருதவில்லையானால் இந்தக் கருத்து சுன்னத் வல் ஜமாஅத்தின் கருத்தாக இருக்க முடியுமா? வெற்றி பெற்ற கூட்டத்தின்கருத்துக்கு மாற்றமான ஒரு கருத்தைத் தமது பிரச்சாரத்திற்கும் அமைப்பிற்கும் அடிப்படையாகக் கொள்வது எம்மை எங்கே கொண்டு போய்ச் சேர்க்கும்? இவற்றையெல்லாம் சற்று சிந்தித்துப் பார்க்கக் கூடாதா? மார்க்கத்தின் ஏதேனும் ஒரு விடயத்தை சில்லறை என ஒதுக்கக் கூடாது எனக் கூறும் நபிமொழியைப் புறக்கணிக்கலாமா?

“உன்சகோதரனை இன்முகத்தோடு நோக்குவது போன்ற ஒரு நல்லறத்தைக் கூடக் குறைத்து மதித்து விடாதே”
அறிவிப்பவர் : அபுதர் (ரலி)
ஆதாரம் : முஸ்லிம்

இறுதியாக,

நபி வழிகள் எதுவாக இருந்தாலும் அது உயர்வாகவே நோக்கப்பட வேண்டும். நபிவழி மறுப்பு, எதிர்ப்பு, இழிவு என்பவற்றுக்குள்ளாக்கப்படக் கூடாது. சுன்னத்துத்தானே என அற்பமாக நாம் எண்ணவும் கூடாது. ஏனெனில் இது கூட நபிவழியை உரியமுறையில் மதிக்காத போக்கேயாகும்.
நபி வழியைச் செயல்படுத்துவது குழப்பமாகவோ, அதைப்பெரிது படுத்துவதாகவோ இருக்காது. அதை மறுப்பதும், செய்பவர்களை எதிர்ப்பதும் தான் குழப்பு வதாகவும் சமூக ஒற்றுமையைச் சிதைப்பதாகவும் இருக்கும்.

எனவே, சுன்னாவை சில்லறைப் பிரச்சினை என்போருக்கும், சுன்னாக்கள் நடைமுறைப்படுத்தப்படும் போது அதை செயல் படுத்துவோரை எதிர்த்து சமூக ஒற்றுமையைக் குழப்புவர்களுக்கும் இது விடயத்தில் தெளிவையும் நல்லறிவையும் வழங்கும் விதத்தில் எமது பிரச்சாரத்தை அமைத்துக் கொள்வோமாக.

நல்லதை ஏவினால் போதுமா?

அழைப்புப் பணியில் ஈடுபடுவோர் நல்லறங்களை மட்டும் ஏவினால் போதும் தீமைகளை அவர்கள் விலக்க வேண்டியதில்லை. நன்மையை ஏவினால் அதைச் செய்வோர் காலப் போக்கில் தீமைகளில் இருந்து தாமாகவே ஒதுங்கிக் கொள்வார்கள். வெளிச்சம் வந்தால் இருள் தானாக அகன்று விடும். இருளை நாமாக அகற்ற வேண்டிய தேவை இருக்காது.

அழைப்பாளர்கள் தவறுகளைத் தடுக்க முற்பட்டால் அதனால் தவறு செய்வோர் சினமுறுவர். அழைப்பாளனைப் புறக்கணிப்பர். எனவே, தவறு செய்பவர்களோடு நாம் கொஞ்சம் விட்டுக் கொடுத்துத்தான் போக வேண்டும். அவர்களோடு சேர்ந்து நாம் செயல்பட்டால் தான் நாம் சொல்வதை அவர்கள் கேட்பார்கள் என்று சில அழைப்பாளர்கள் எண்ணுகின்றனர்.

அது மட்டுமின்றி இப்படி தஃவத் பணிபுரிவதுதான் “ஹிக்மத்”தான வழி எனவும் வாதிடுகின்றனர். இதற்கு மாற்றமான முறையில் தஃவத் பணிபுரிவோரை முட்டாள்கள், அரை வேக்காடுகள், மக்களை புரிந்து கொள்ளாதவர்கள், நுணிப்புல் மேய்பவர்கள் என்றெல்லாம் ஏளனமும் செய்கின்றனர்.

இஸ்லாமிய அழைப்புப் பணியின் அணுகு முறையாக இதனை நாம் ஏற்க முடியமா? என்பது பற்றி ஆராய்வோம்.

உதாரணங்கள் ஆதாரங்களாகாது:

பெரும்பாலும் இத்தரப்பினர் தமது வாதங்களுக்கு உதாரணங்களையே ஆதாரங்களாக எடுத்து வைப்ப துண்டு. ஒரு உண்மையை விபரிப்பதற்கு உதாரண ங்களைப் பயன்படுத்துவதை இஸ்லாம் அங்கீகரிக்கின்றது. ஆனால் உதாரணங்களையே முழு ஆதாரமாக நாம் கொள்ள முடியாது. ஒளியை ஏற்றினால் இருள் தானாக அகன்றுவிடும் என்று இத்தரப்பார் வாதிப்பர். இதே பிரச்சினையை உதாரணத்தை அடிப்படை ஆதாரமாகக் கொண்டு வாதிப்பதாயின் பின்வருமாறும் கூறலாம்.

ஒரு நிலத்தில் பயிர் நடுவதாயின் முதலில் நிலத்தில் உள்ள களைகளை அகற்ற வேண்டும். பயிரை நாட்டினால் களைகள் தாமாக அழிந்து விடும் என நாம் கூற முடியாது. எனவே நன்மையை ஏவுவதற்கு முன் அவனிடம் இருக்கும் தீமைகள் எனும் களைகளைக் களைய வேண்டும்.

மேற்படி உதாரணத்தை வைத்து நாம் முடிவு செய்தால் ஒளி வந்தால்….. உதாரணத்திற்கு நேர்மா ற்றமான முடிவைப் பெற முடிகின்றதல்லவா? எனவே, உதாரணங்கள் மூல ஆதாரங்கள் அல்ல. ஆதாரங்களின் அடிப்படையில் பெற்ற முடிவுகளை விளக்கும் ஒரு ஊடகமாக நாம் உதாரணங்களைக் கொள்ள வேண்டும்.

தீமையைத் தடுங்கள்:

அல்குர்ஆனில் சில குறிப்பிட்ட விடயங்கள் இணைத்துப் பேசப்படுவதுண்டு. அவற்றை நாம் பிரித்து நோக்குவது வழி கேட்டிற்கே வழி வகுக்கும்.

உதாரணமாக, “அல்லாஹ்வைப் பின்பற்றுங்கள் அவன் தூதரையும் பின்பற்றுங்கள்” “தொழுகையை நிலை நிறுத்தி ஸகாத்தும் கொடுங்கள்” போன்ற வசனங்களைக் கூறலாம்.

அல்லாஹ்வைப் பின்பற்றுவோம். அவன் தூதரைப் பின்பற்ற மாட்டோம் என்றோ, அல்லாஹ்வைப் பின்பற்றினால் அவன் தூதரையும் பின்பற்றித் தானே ஆக வேண்டும் எனவே நாம் அல்லாஹ்வைப் பின்பற்றுங்கள் என்று மட்டும் தான் போதிப்போம் என்றோ கூறுவது வழிகேடாகும்.

இவ்வாறே, அல்குர்ஆனில் நன்மையை ஏவித் தீமையைத் தடுங்கள் என்று இரண்டும் இணைந்தே பேசப்படுகின்றது. அவற்றுக்கிடையில் பிரிவை ஏற்படுத்தி நன்மையை ஏவினால் போதும் எனக் கூறுவது தெளிவான வழிகேடேயாகும். இதோ அல்குர்ஆன் இரண்டையும் இணைத்துக் கூறும் சில வசனங்கள்.

“உங்களில் ஒரு கூட்டத்தார் (மனிதர்களை) நன்மையின் பால் அழைக்கின்றவர்களாகவும், நல்லதைக் கொண்டு (மக்களை) ஏவுகின்றவர்களாகவும், தீய செயல்களிலிருந்து (அவர்களை) விலக்குகின்றவர்களாகவும் இருக்கட்டும். அவர்களேதாம் வெற்றி பெற்றோர்”. (3:104)

“(விசுவாசங் கொண்டோரே!) மனிதர்களுக்காக தோற்றுவிக்கப்பட்ட (சமுதாயத்தார்களிலெல்லாம்) மிக்க மேன்மையான சமுதாயமாக நீங்கள் இருக்கிறீர்கள். (ஏனெனில்) நன்மையான காரியங்களை நீங்கள் ஏவுகிறீர்கள். தீமையை விட்டும் (அவர்களை) நீங்கள் விலக்குகிறீர்கள்.” (3:110)

மேற்படி வசனங்களில் நன்மையை ஏவித் தீமையைத் தடுத்தல் என்ற இரு விடயமும் இணைத்துக் கூறப்பட்டிருப்பதைக் காணலாம். நன்மையை ஏவினால் தீமை தானாக அழிந்து விடும் என்ற அற்புதத் தத்துவம்(?) அல்லாஹ்வுக்குத் தெரியாமல் போய் விட்டதா? அல்லாஹ்வுக்குத் தெரியாத ஒரு ஹிக்மத்தான அணுகு முறையைத் தாம் கண்டு பிடித்துவிட்டதாகக் இவர்கள் கூறப் போகின்றனரா?

இது இஸ்லாமிய சிந்தாந்தமா?

தவறுகளைக் கண்டும் காணாதது போல் அல்லது அது தவறு அல்ல என்பது போல் நடந்து கொள்ளச் சொல்லும் இந்நயவஞ்சகப்போக்கு இஸ்லாமிய சிந்நாத்தம் அல்ல என்பதை இத்தரப்பார் சிந்திக்கத் தவறி விட்டனர்.

“அதர்மம் அதிகரிக்கும் போது அதனை அழிக்கக் கடவுள் அவதாரம் எடுப்பார்” என இந்து மதம் கூறுவதால் அதர்மத்தை அழிக்க ஒரு இந்து முக்கியத்துவம் அளிக்க வேண்டியதில்லை என்ற சிந்தனையை அதன் அங்கத்த வர்களுக்கு அளிக்கின்றது. எனவேதான் தீமையைக் கண்டால் விலக்கு என்று அல்ல விலகி விடு எனப் போதிக்கின்றனர். தீமையைப் பார்க்காதே. தீமையைப் பேசாதே! தீமையைக் கேட்காதே. என்று போதித்தவர்கள் கூட தீமையை எதிர் என்றோ, தடு என்றோ போதிக்க வில்லை.

ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தையும் கொடு உன் ஒரு உடையைக் கேட்டால் மற்றொரு ஆடையையும் சேர்த்துக் கொடு. தீமையோடு எதிர்த்து நில்லாதே என்கிறது கிறிஸ்தவ மதம்.

ஏனைய மதங்களோடு ஒப்பிடும்போது தன் அங்கத்தவர்களுக்கு தீமையை எதிர்த்துப் போராடும் உணர்வை வழங்கியிருப்பது இஸ்லாத்தின் ஒரு தனிப்பட்ட சிறப்பம்சம் என்பதை ஒரு ஆய்வாளன் அறிந்துகொள்ளலாம். இதனால்தான் இஸ்லாம் சர்வதேச மட்டத்தில் அதிக எதிர்ப்பையும் சந்தித்து வருகின்றது.

எனவே, மேற்படி தகவல்களிலிருந்து “தீமையை எதிர்க்காமை” என்ற இந்த தஃவத் அணுகு முறை இஸ்லாமிய சித்தாந்தம் அல்ல என்பதையும் இது இந்து, கிறிஸ்தவ சமய அணுகு முறைகள் என்பதையும் அறிய முடிகின்றது!

தீமையைத் தடுக்காதோர் நிலை:

தீமையைத் தடுக்காமை இறை கோபத்தைத் தேடித் தரும் தீய சிந்தனையாகும். இதனை அல்குர்ஆன் கூறும் பின்வரும் சம்பவம் தெளிவாக எடுத்துக்காட்டுகிறது.

“பனு இஸ்ரவேலர்களுக்கு சனிக்கிழமையில் வேலை செய்வது தடுக்கப்பட்டிருந்தது. கடலோரத்தில் வாழ்ந்த ஒரு கூட்டத்தை அல்லாஹ் சோதிப்பதற்காக அன்றைய தினத்தில் மீன்களை அதிகமாக நீர் மட்டத்திற்கு வரச்செய்தான். இதனைக் கண்ட ஒரு கூட்டம் மீன்பிடிக்கிறது. இன்னும் ஒரு கூட்டம் மீன்பிடிப்பதைத் தடுக்கிறது. இன்னுமொரு கூட்டம் தவறுசெய்யாமலும், தவறுசெய்வோரைத் தடுக்காமலும் இருக்கிறது. அல்லாஹ்வின் கட்டளைவந்தபோது தவறு செய்தவர்களும் தவறைத் தடுக்காதவர்களும் குரங்குகளாக மாற்றப்பட்டனர்.” (பார்க்க: 7,163-166)

மேற்படி சம்பவத்தில் தீமையைத் தடுத்தோர் தவிர்ந்த மற்றைய தீமை செய்தோர்-நன்மை செய்தோர் ஆகிய இரு தரப்பாரும் தண்டிக்கப்பட்டிருப்பதைக் காணலாம்.

தவறின் பங்குதாரர்கள்:

தீமையைத் தடுக்காதோரையும் இஸ்லாம் தவறு செய்பவர்களாகவே நோக்குகின்றது. இதோ தீமையைத் தடுக்காதோரை உவமிக்க நபி(r) அவர்கள் கூறும் உதாரணத்தைப் பாருங்கள்.

அல்லாஹ்வின் வரையறைகளைப் பேணுபவருக்கும் மீறுபவருக்கும் உதாரணம் ஒரு கப்பலில் பயணம் செய்யும் கூட்டத்தை ஒத்ததாகும். அதில் சிலர் கப்பலின் மேல் தளத்திலும் சிலர் கீழ்த் தளத்திலும் இருக்கின்றனர். கீழ்த்தளத்தில் உள்ளோருக்கு நீர் தேவைப்பட்டால் அவர்கள் மேலே சென்று தான் எடுக்க வேண்டும். எனவே, அவர்கள் நாம் நமது தளத்தில் துவாரமிட்டால் (அடிக்கடி மேலே சென்று) மேல் தளத்தில் இருப்பவர்களுக்கு இடைஞ்சல் செய்யாதிருக்கலாம் எனத் தமக்குள் கூறிக்கொண்டனர். மேல் தளத்தில் இருப்போர் கீழ்த்தளத்தில் இருப்போரைத் தடுக்காமல் அவர்கள் விருப்பப்படி நடக்க விட்டால் இரு தரப்பினரும் அழிந்து விடுவர். மாற்றமாக அவர்களைத் தடுப்பார்களாயின் அனைவரும் பாதுகாக்கப்படுவர். என நபி(r) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : நுஃமான் இப்னு பஷீர் (ரழி) ஆதாரம் : புகாரி

மேற்படி உதாரணம் தவறைத் தடுக்காதோரும் பாவத்தில் பங்கு தாரார்கள் என்பதை விளக்குகின்றது. ஒரு சமூகத்தில் தவறு பகிரங்கமாக நடந்து, அதைத் தடுக்கும் ஆற்றல் உள்ளவர்கள் இருந்தும் அதைத் தடுக்கா விட்டால் அல்லாஹ்வின் தண்டனை அனைவரையும் வந்தடையும். என்பதை நபி மொழிகள் உறுதி செய்கின்றன.

சேர்ந்து திருத்துதல்:

இத்தரப்பார் தவறு செய்பவர்களுடன் சேர்ந்து சென்றால் தான் அவர்களைத் திருத்த முடியும் என நம்புகின்றனர். நாம் செய்யும் நல்லற ங்களில் அவர்களை இணைப்பதற்காக அவர்கள் செய்யும் சில தவறுகளில் நாம் உளப்பூர்வமாக இல்லாவிட்டாலும் உடலளவிலாவது அவர்களுடன் ஒத்துழைப்பதாகக் காட்டிக் கொள்ள வேண்டும் என்கின்றனர்.

பனு இஸ்ரவேலர்களும் இதே நிலையில் தான் வழிகெட்டனர். அவர்கள் சபிக்கப்பட்டதற்கான காரணத்தையும், அவர்களில் ஏற்பட்ட முதல் பலவீனத் தையும் நபி(r) அவர்கள் பின்வருமாறு விபரித்துக் கூறுகின்றார்கள்.

பனு இஸ்ரவேலர்களில் குறைபாடு முதலில் எப்படி நுழைந்தது எனின், அவர்களில் ஒரு நல்ல மனிதர் தவறு செய்யும் ஒருவரைக் கண்டால் “அல்லாஹ்வை அஞ்சிக் கொள்! நீ செய்த (இந்தத்) தவறை விட்டுவிடு இது உனக்கு ஆகாது” என்றெல்லாம் ஆரம்பத்தில் கூறுவார். ஆனால், மறு தினமும் அதே நபரை அதே நிலையில் கண்டாலும் கூட அவரோடு சேர்ந்து இவர் உண்பதையும் குடிப்பதையும், அமர்வதையும் தவிர்க்க மாட்டார். அவர்கள் தவறு செய்பவர்களுடன் அதே நிலையில் இணைந்திருந்த போது அல்லாஹ் ஒருவருடைய உள்ளத்தைப் போன்று மற்றவர் உள்ளத்தையும் மாற்றி விட்டான். எனக் கூறி விட்டு,

“இஸ்ராயீலின் சந்ததிகளில் எவர்கள் நிராகரித்தார்களோ அவர்கள் தாவூத், மர்யமுடைய மகன் ஈஸா ஆகியோரின் நாவாலும் சபிக்கப்பட்டேயிருக்கின்றனர். ஏனென்றால், அவர்கள் வரம்பு கடந்தும், பாவம் செய்தும் வந்தனர்”.

“(அன்றி) அவர்கள் செய்து வந்த எந்த விலக்கப்பட்ட காரியத்தையும் ஒருவருக்கொருவர் தடை செய்யவுமில்லை. அவர்கள் செய்து கொண்டிருந்தவையும் நிச்சயமாக மிகத் தீயவை. அவர்களில் பெரும் பான்மையினர், நிராகரிப்போரையே தோழமை கொள்வதை (நபியே) நீர் காண்பீர். அல்லாஹ் அவர்கள் மீது கோபிக்கும் படி, அவர்கள் தமக்குத் தாமாகவே தேடியனுப்பியது மிகக் கெட்டது. அவர்கள் (நரக) வேதனையில் என்றென்றுமே தங்கி விடுவார்கள்”.

“அவர்கள் அல்லாஹ்வையும், இந்த நபியையும், அவருக்கு அருளப்பெற்ற (வேதத்)தையும் (உண்மை யாகவே) விசுவாசங் கொண்டிருந்தால், (நிராகரித்த) அவர்களை (த் தங்களுக்கு)த் தோழர்களாக எடுத்துக் கொண்டிருக்க மாட்டார்கள். ஆனால், அவர்களில் பெரும்பாலோர் பாவிகளாகவே இருக்கின்றனர்” (5:78-81) என்ற வசனங்களை ஓதினார்கள். அதன் பின் அல்லாஹ்வின் மீது சத்தியமாக நீங்கள் நன்மையை ஏவிக் கொண்டே இருங்கள். தீமையைத் தடுத்துக் கொண்டே இருங்கள். அநியாயக் காரரின் கரத்தைப் பிடித்து இழுத்து வந்து சத்தியத்தில் நிறுத்துங்கள். இல்லையெனில் உங்களில் ஒருவரின் உள்ளத்தைப் போல் மற்றவர் உள்ளத்தையும் அல்லாஹ் மாற்றி விடுவான். அதன் பின் இஸ்ரவேலர்கள் சபிக்கப்பட்டது போல் நீங்களும் சபிக்கப்பட்டு விடுவீர்கள்.
அறிவிப்பவர் : இப்னு மஸ்ஊத் (ரழி)
ஆதாரம் : அபூதாவூத் (4336), திர்மிதி (3050), இப்னு மாஜா (4006)

சேர்ந்து திருத்துதல் என்ற கோட்பாடு மேற்படி ஹதீஸிற்கு முரணானது என்பதைக் காணலாம்.
நல்லோருடன் மோதுவதா?

தீயோருடன் ஒத்துப் போனால் தான் தீமையை ஒழிக்கலாம் என நம்பும் இவர்கள் நல்லோருடன் எதிர்த்து நிற்கும் போக்கைக் கடைப்பிடிப்பது தான் புரியாத புதிராக உள்ளது. இத்தரப்பார் தீயோருடன் இணைந்து செல்ல நாமும் சற்றுத் தீமை செய்ய வேண்டும் என்பதை நிரூபிக்க ஒரு ஆதாரம் கூறுவர். மது போதையுடைய ஒரு சாரதி தவறான பக்கத்தில் வாகனத்தைச் செலுத்தி வருகின்றார். எதிர்த் திசையில் வரும் நாம், நாம் போகும் பக்கம் சரியான பக்கம் தானே எனச் சென்றால் முட்டிக்கொள்ளத் தான் நேரிடும். எனவே, மோதலைத் தவிர்க்க நாம் “ரோங்சைட்” டில் போய்த்தான் ஆக வேண்டும் என்கின்றனர்.

சந்தர்ப்ப வசத்திற்கு இவ்வுதாரணம் பொருத்த மாகப்பட்டாலும் இதே உதாரணத்தை இப்படி நோக்கிப் பாருங்கள்.

எதிர்த் திசையில் இரண்டு வாகனங்கள் வருகின்றன. ஒன்று சரியான பக்கத்திலும் மற்றையது “ரோங் சைட்டி”லும் வருகின்றது. முட்டித்தான் ஆக வேண்டும் என்றால் ரோங் சைட்டில் வரும் வாகனத்தோடு மோதுவதா? அல்லது சரியான பக்கத்தில் வரும் வாகனத்தோடு அதாவது நாம் ரோங்சைட் போய் மோதுவதா?

முன்னையது பாதிப்பை ஏற்படுத்தினாலும் குற்றத்தை எதிர்த்தரப்பு சாரதி மீது போட்டு நீதியை நமக்கு சாதகமாக்கும். பின்னையது இழப்புடன் குற்றத்தையும் எம்தலையில் சுமத்திவிடும். அத்தோடு தவறான திசையில் வந்தவரைப் பாதுகாப்பதற்காக நாமும், சரியான திசையில் வந்த சாரதியும் பாதிப்புக்களைச் சந்திக்க நேரிடும்.

நியாய உணர்வும் புத்தியுமுடையவன் முன்னை யதைத்தான் தேர்ந்தெடுப்பான். ஆனால், இத்தரப்பார் பின்னையதைத்தான் தேர்ந்தெடுக்கின்றனர்.

தீயோருடன் சேர்ந்து செல்ல வேண்டும் என்பதற்காக நல்லோரை பகைத்துக் கொள்கின்றனர். ஏகத்துவ வாதிகளுக்கு எதிர்ப்புக் கொடி காட்டி சடங்கு வாதிகளுடன் சல்லாபம் புரிகின்றனர். உண்மையா ளர்களுக்கு இடையூறு செய்து அசத்திய வாதிகளுக்கு உற்சாக மூட்டுகின்றனர். தம்மைக் கூட காபிர், வழி கேடன் எனத்தூற்றுவோருடனும் சினேகம் கொண்டு நட்புப் பாராட்டும் அதேநேரம் நல்லோரை சினத்தோடு நோக்குகின்றனர். இது நீதி நெறி தவறாத ஒரு முஸ்லிமின் வழிமுறையாக இருக்குமா?

யூத கிறிஸ்தவர்களின் முன்மாதிரி:

தவறு செய்பவர்களுடன் சேர்ந்து செல்லும் வழி முறை யூத கிறிஸ்தவர்களின் வழிமுறை. இஸ்லாமிய வழிமுறை அல்ல. இதனையே நாம் மேலே கூறிய ஹதீஸ் உணர்த்துகின்றது.

ஆரம்பத்தில் தவறு செய்பவர்களுடன் சேர்ந்து இருந்தவர்கள் பின்னர் தவறைச் செய்பவர்களாகவே மாறி விட்டனர் என்பதை மேற்படி ஹதீஸ் விளக்குகின்றது. இதே நிலையை இன்று நாம் நிதர்சனமாகக் கண்டு வருகின்றோம்.

ஆரம்பத்தில் ஏகத்துவத்தை தெளிவாக எடுத்துக் கூறி சிர்க் பித்அத்தை வன்மையாகக் கண்டித்த சிலர், சிர்க் பித்அத்தை கண்டிக்காமல் சேர்ந்து மார்க்கப்பணி புரிய முற்பட்டனர்.

சேர்ந்து செல்ல வேண்டும் என்பதற்காக கப்ருவழிபாடு புரிவோரையும் கண்டிக்காது தமது அழைப்புப் பணியில் பங்கெடுக்க வைத்தனர். மௌலிது, கத்தம், ராத்திபு போன்ற நிகழ்ச்சிகளுக்கும் சென்று உதவி, ஒத்தாசை புரிந்து அவர்களையும் தம்மோடு இணைத்துக் கொண்டனர்.

காலப்போக்கில் நன்மையை ஏவி அதன் மூலம் தீமையைத் தானாக வெளியேற்றி விட வேண்டும் என்ற நல்லெண்ணம் கொண்ட வர்களை விட கத்தம், மௌலீது, ராதிபு போன்ற பித்அத்துக்களையே மார்க்கமாக நம்பிய அழைப்பாளர்களின் எண்ணிக்கை பெருக ஆரம்பித்தது.

காலப் போக்கில் சிர்க், பித்அத் போன்ற அனாச்சா ரங்களை யாராவது கண்டித்துப் பேசினால் அதை எதிர்க்கும் குழுவினராக மேற்படி அழைப்பாளர்கள் மாறிவிட்டனர்.

இதைக் கண்கூடாகக் கண்டாலும் கூட தடுக்கும் ஆற்றல் அற்றவர்களாக ஆரம்பகால அழைப்பாளர்கள் மௌனம் சாதிக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது.

இப்போது மேல் மட்ட நல்லெண்ணம் கொண்ட வர்களால் கூட, கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு மார்க் கத்தைப் பற்றிய சரியான அறிவில்லாத அழைப்பாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் நல்லெண்ணம் கொண்ட மேல்மட்டத்தவர்களும் கீழ் மட்ட அழைப்பாளர் களுக்கேற்ப தலையசைக்கும் நிலை அல்லது அவர்களின் தவறுகளுக்கு உதவி செய்யும் நிலை தோன்றியுள்ளது. அல்லாஹ் கெட்டவர்களின் உள்ளத்தைப் போல நல்லவர்களின் உள்ளத்தையும் மாற்றி விட்டானோ என்னமோ?

இந்நிலை ஏற்படக் கூடாது என்பதற்காகத்தான் நபி (ஸல்) அவர்கள் பின்வருமாறு கூறினார்கள்.
உங்களில் யாராவது தீமையைக் கண்டால் அதை அவர் தன் கையால் தடுக்கட்டும். அதற்கு முடியாவிட்டால் தன் நாவால் தடுக்கட்டும். அதற்கும் முடியாவிட்டால் உள்ளத்தால் அதை வெறுத்து ஒதுங்கிக் கொள்ளட்டும். இதுவே ஈமானின் மிகப் பலவீனமான நிலையாகும்.
அறிவிப்பவர் : அபு ஸயீதுல் குத்ரி (ரழி)
ஆதாரம் : முஸ்லிம், அபு தாவுத் (1140, 4340),
திர்மிதி (2173), நஸயி, இப்னு மாஜா(4013)

தவறைத் தடுக்க முடியாது எனின் ஒதுங்குதல் அவசியம் என்பதை மேற்படி ஹதீஸின் மூலம் புரிய முடிகின்றது.

எனவே நன்மையை ஏவித் தீமையைத் தடுக்கும் பணி ஒரே நேரத்தில் நடக்க வேண்டும். தவறைத் தடுக்க முடியாத சூழ்நிலை இருந்தால் தவறோடு சம்பந்தப்படாமல் ஒதுங்துதல் வேண்டும். தவறு செய்பவனுடன் தவறு செய்யும் சந்தர்ப்பத்தில் எமக்கு எவ்விதத் தொடர்பும் இருக்கக் கூடாது.

நாம் இதுவரை மார்க்கத்தை மறைத்தல் என்பது எவ்விதத்திலும் இஸ்லாமிய பிரச்சார அணுகு முறையாக இருக்காது என்பதைக் கண்டோம்.

இக்கருத்துக்குச் சாதகமாக எடுத்து வைக்கப்படும் வாதங்களையும் அதன் பலமற்ற தன்மை பற்றியும் விரிவாக ஆராய்ந்தோம்.

நாமறிந்த வகையில் இஸ்லாத்தை எம்மால் முடிந்தவரை தெளிவாக மக்கள் முன் ஒளிவு மறைவு, கூட்டல் குறைத்தல், திரித்தல் இன்றி எடுத்து வைப்பதே அழைப்புப் பணியாகும். அவ்வாறு எடுத்து வைக்கும் போது ஏற்படும் இன்னல்களை ஏற்றுத் தனக்குத் தொல்லை தருபவர்களின் ஹிதாயத்திற்காகப் பிரார்த்திப்பவனே அழைப்பாளன் ஆவான்.

எல்லாம் வல்ல அல்லாஹூத் தஆலா சத்தியத்தைத் தெளிவாக எடுத்துக் கூறும் சத்தியப் போதகர்களாகவும் அவ்வழியில் ஏற்படும் இன்னல்களைச் சகித்துக் கொள்ளும் உண்மைப் போராளிகளாகவும் எம்மையும் உங்களையும் ஆக்கி அருள் புரிவானாக.

வாஆகிரு தஃவானா அனில்ஹம்துலில்லாஹி
ரப்பில் ஆலமீன் வல்லாஹு அஃலம்.

(முற்றும்)
Previous Post Next Post