அஸ்-ஸில்ஸிலா அழ்-ழஈபா வல்-மௌலூஆ


வாசக நண்பர்களே!!!
இந்திய அன்பர் ஒருவரின் வேண்டுகோளுக்கிணங்க இமாம் அல்பானி ரஹிமஹுல்லாஹ் அவர்களின் سلسلة الأحاديث الضعيفة والموضوعة எனும் ஆதாரபூர்வமற்ற ஹதீஸ்கள் அடங்கிய தொகுப்பை தமிழில் மொழி பெயர்க்க விழைந்துள்ளேன்.
இதில் உளத்தூய்மையையும் நற்கூலியையும் வழங்குமாறு இறைவனிடம் இறைஞ்சுவதோடு, இதனை சரிபார்ப்பதோடு, ஏதாவது தவறுகள் காணப்படும் பட்சத்தில் திருத்தித் தந்துதவுமாறு அறிஞர் பெருமக்களிடம் பணிவாய் வேண்டிக்கொள்கிறேன்.
-ஷுஐப் உமரி 

தொகுப்பு :இமாம் அல்பானி ரஹிமஹுல்லாஹ்
மொழிபெயர்ப்பு :ஷுஐப் உமரி

ஹதீஸ்:01
மார்க்கம் என்பது புத்தி (பகுத்தறிவு) தான். யாருக்கு மார்க்கம் இல்லையோ அவருக்கு புத்தி இல்லை.
விமர்சனம்: 
இந்த செய்தியை இமாம் நஸாயி தனது الكنى விலும், அவர் வழியாக இமாம் தௌலாபி தனது الكنى والألقاب இலும் பதிந்துள்ளனர்.
“இது பாதிலான, மறுக்கப்பட்ட செய்தி” என்று இமாம் நஸாயி கூறுகின்றார்.
இதன் அறிவிப்பாளர் வரிசையில் இடம்பெறும் *பிஷ்ர் இப்னு غஙாலிப் என்பவரே இதற்குக் காரணம்.
“அவர் அறியப்படாதவர்” (மஜ்ஹூல்) என்று இமாம் அஸ்زதீ கூறியுள்ளதை இமாம் தஹபீ தனது ميزان الاعتدال இலும், இமாம் இப்னு ஹஜர் தனது لسان الميزان இலும் அங்கீகரித்துள்ளனர்.
புத்தியின் சிறப்பு பற்றி இந்த செய்தி உட்பட முப்பது சொச்சம் செய்திகளை தாவூத் இப்னுல் முஹப்பிர் என்பவர் வழியாக
இமாம் ஹாரிஸ் இப்னு அபீஉஸாமா தனது முஸ்னதில்” பதிந்துள்ளார்.
“அவை அனைத்தும் இட்டுக்கட்டப்பட்டவை” என்று இமாம் இப்னு ஹஜர் கூறியுள்ளார்.
இமாம் ஸுயூத்தி தனது
“புனையப்பட்ட முத்துக்கள் 4/10” இலும், இமாம் தாஹிர் அல்பதனீ அல்ஹிந்தீ தனது “இட்டுக்கட்டப்பட்டவைகளை நினைவூட்டல் 29/30” இலும் இந்த செய்தியை அடையாப்படுத்தியுள்ளனர்.
இந்த தாவூத் இப்னுல் முஹப்பிர் பற்றி இமாம் தஹபீ கூறுகையில் :
((“புத்தி” என்று புத்தகத்தை அவர் எழுதாமல் இருந்திருக்கலாம். “அவருக்கு ஹதீஸ் என்றால் என்னவென்று தெரியாது” என்று இமாம் அஹ்மதும், “ஹதீஸ் துறையில் நம்பத்தகுந்தவர் அல்ல” என்று இமாம் அபூஹாதமும், “ஹதீஸ் துறையில் விடப்பட்டவர்” என்று இமாம் தாரகுத்னீயும் கூறுகின்றனர்.
“புத்தி பற்றிய செய்தித் தொகுப்பை மைஸரா இப்னு அப்துரப்பிஹி தான் இட்டுக்கட்டினார். அதை அவரிடமிருந்து இந்த தாவூத் திருடி வேறு அறிவிப்பாளர் வரிசையை சேர்த்துக் கொண்டார். அப்துல் அஸீஸ் இப்னு ரஜாவும், ஸுலைமான் இப்னு ஈஸா அஸ்ஸிஜ்ஸீயும் இதை திருடி அறிவித்துள்ளனர்.” என்று இமாம் தாரகுத்னீ கூறியதாக அப்துல் கனீ இப்னு ஸயீத் கூறுகிறார்.
இமாம் அபூபக்ர் இப்னு அபித்துன்யா உடைய “புத்தியும் அதன் சிறப்பும்” என்ற கிதாபை ஆய்வு செய்ததில் அவற்றில் சிலது பலவீனமானதாகவும் இன்னும் சிலது இட்டுக்கட்டப்பட்டவையாகவும் இருக்கக் கண்டேன். எதுவும் ஆதாரபூர்வமானதாக இல்லை.
இந்த கிதாபை சரி பார்த்த ஸாஹித் அல்கௌஸரி அவை பற்றி மௌனம் காத்திருப்பது ஆச்சரியம் தான். அல்லாஹ் எங்களையும் அவரையும் மன்னிக்கட்டும்.
“புத்தி பற்றிய செய்திகள் அனைத்தும் பொய்” என்று இமாம் இப்னுல் கையிம் தனது “அல்மனாருல் முனீப் 25” இல் கூறியுள்ளார்.
பிற்சேர்க்கை:
1) இமாம் நஸாயி உடைய الكنى என்ற கிதாபு : الكنى என்றால் புனைப்பெயர்கள் என்று பொருள். இந்தப் பெயர் கொண்ட கிதாபுகளில் புனைப்பெயர்களில் அறியப்படும் அறிவிப்பாளர்கள் பற்றிய தகவல்கள் பதியப்பட்டிருக்கும். இந்தப் புத்தகத்தின் பிரதிகள் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.
2) இமாம் தௌலாபி உடைய الكنى والألقاب எனும் கிதாபு :இந்த கிதாபும் முன்னையதைப் போன்றதாகும். الكنى والأسماء என்றே இந்த கிதாபு அச்சிடப்பட்டுள்ளது.
3) இமாம் தஹபீ உடைய ميزان الاعتدال எனும் கிதாபு :குறை கூறப்பட்ட அறிவிப்பாளர்களின் பட்டியல் அடங்கிய புத்தகம். குறை ஏற்றுக் கொள்ளப்பட்டதாகவோ அல்லது மறுக்கப்பட்டதாகவோ இருக்கலாம்.
4) இமாம் இப்னு ஹஜர் உடைய لسان الميزان எனும் கிதாபு :இமாம் தஹபீ உடைய ميزان الاعتدال இல் உள்ள, ஆறு கிரந்தங்களின் அறிவிப்பாளர்களை விடுத்து ஏனையவர்களின் தகவல்கள்
ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளதோடு, இமாம் தஹபீக்கு விடுபட்டவைகளும் தொகுக்கப்பட்டுள்ளன.
5) இமாம் ஹாரிஸ் இப்னு அபீஉஸாமா உடைய முஸ்னத் எனும் கிதாபு :”முஸ்னத்” என்ற பெயரில் உள்ள கிதாபுகளில் ஒவ்வொரு ஸஹாபாக்களும் அறிவித்த ஹதீஸ்கள் அவரவர் பெயரில் ஒன்று சேர்க்கப்பட்டுள்ளன.
6) இமாம் இப்னுல் கையிம் உடைய அல்மனாருல் முனீப் எனும் கிதாபு : அதாரபூர்வமற்ற செய்திகளை இணங்கானும் வழிமுறைகள் பற்றி விவரிக்கப்பட்டுள்ளது.

ஹதீஸ்:02
யாருடைய தொழுகை அவரை மானக்கேடான, வெறுக்கத் தக்க விடயங்களை விட்டும் தடுக்கவில்லையோ அவர் அல்லாஹ்வை விட்டும் தூரமாகுவதையே அதிகரித்துக் கொண்டிருக்கிறார்.
விமர்சனம்: 
இது ஒரு பாதிலான செய்தியாகும். மக்கள் மத்தியில் பிரபலமாக இருந்தாலும் ஸனது (அறிவிப்பாளர் வரிசை) மத்ன் (உள்ளடக்கம்) ஆகிய இரு விதத்திலும் ஆதாரபூர்வமானதாக இல்லை.
ஸனது ரீதியான கண்ணோட்டம் :
(1)இந்த செய்தியை நபியவர்கள் கூறியதாக இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹு வழியாக
இமாம் தபரானியின் அல்முஃஜமுல் கபீர் 3/106/2,
இமாம் குழாஈ உடைய முஸ்னதுஷ் ஷிஹாப் 2/43,
இமாம் இப்னு அபீஹாதம் தனது தப்ஸீரில் பதிந்துள்ளதாக கூறும் இமாம் இப்னு கஸீருடைய தப்ஸீர் 2/414,
இமாம்க்ஷஇப்னு உர்வாவுடைய அல்கவாகிபுத் தராரீ 83/2/1 ஆகிய கிரந்தங்களில் பதிவாகியுள்ளது.
இதன் அறிவிப்பாளர் வரிசையில் இடம்பெறும் லைஸ் இப்னு அபீஸுலைம் என்பவர் பலவீனமானவர்.
ஹாபிழ் இப்னு ஹஜர் இவர் பற்றி கூறும் போது :
மார்க்கப் பற்றுள்ளவராக இருந்தாலும் இறுதிக் காலத்தில் நிலைகுழைந்து விட்டார். இந்நிலை ஏற்படுவதற்கு முன்னர் அறிவித்த ஹதீஸ்கள் எவை எனப் பிரித்தறியப்படாததால் அவர் ஹதீஸ் கலையில் ஓரங்கட்டப்பட்டுள்ளார் என்கிறார்.
இமாம் ஹைஸமீ தனது “மஜ்மஉஸ் ஸவாயித் 1/134” இலும், அவரது ஆசிரியரான ஹாபிழ் இராகீ தக்ரீஜுல் இஹ்யா எனும் கிதாபிலும் இது பலவீனமானது என்று கூறியுள்ளனர்
(2)இதே செய்தி இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹு அவர்களின் கூற்றாக இமாம் தபரீ உடைய “தப்ஸீர் 20/92” இல் பதிவாகியுள்ளது.
இதன் அறிவிப்பாளர் வரிசையில் பெயர் கூறப்படாத ஒருவர் இடம்பெற்றிருந்தாலும் இதுவே (அதாவது அவரது கூற்று என்பதே) சரியானதாகும்.
(3)இதே செய்தி இப்னு மஸ்ஊத் ரழியல்லாஹு அன்ஹு அவர்களின் கூற்றாக இமாம் அஹ்மதுடைய உடைய “ஸுஹ்த் 159” இலும் இமாம் தபரானி உடைய அல்முஃஜமுல் கபீரிலும் பதிவாகியுள்ளது.
ஆனால் இதன் வாசகம் “யாருடைய தொழுகை அவருக்கு நல்லதை ஏவி தீயதை தடுக்கவில்லையோ” என்று இடம் பெற்றுள்ளது.
ஹாபிழ் இராகீ கூறுவது போன்று இதன் அறிவிப்பாளர் வரிசை சரியானதாகும். இதன் படி இக்கூற்று நபியவர்களுடையதல்ல. நபித்தோழருடையது என்பது தெளிவாகிறது.
(4)”நிச்சயமாக தொழுகை வெறுக்கத் தக்க, மானக்கேடான விட்டும் தடுக்கும்” என்ற அல்குர்ஆன் வசனம் இறங்கிய போது நபியவர்கள் இதனைக் கூறியதாக ஹஸனுல் பஸ்ரி ரஹிமஹுல்லாஹ் என்ற தாபியீ கூறுகின்ற செய்தி இமாம் இப்னுல் அஃராபீ உடைய “முஃஜம் 1/193” இல் பதிவாகியிருக்கிறது.
(இந்த அறிவிப்பில் இரு குறைகள் உள்ளன. ஒன்று 
இது ஒரு முர்ஸலான அறிவிப்பாகும். (அதாவது :ஒரு தாபியீ தனக்கும் நபியவர்களுக்கும் இடையில் உள்ளவரைக் குறிப்பிடாமல் நபியவர்களின் காலத்தில் நடந்த விடயமொன்றை அறிவிப்பது.
இரண்டாவது  ஹஸனுல் பஸ்ரி இடமிருந்து இதை அறிவிக்கும் இஸ்மாயீல் என்பவர் அபூமுஹம்மத் அல்பஸ்ரியாக இருந்தால் அவர் நம்பகமானவர் தான். ஆனால் அபூ இஸ்ஹாக் அல்மக்கீயாக இருந்தால் அவர் பலவீனமானவர் ஆவார்.
இமாம் குழாஈ உடைய “முஸ்னதுஷ் ஷிஹாப் 2/43” இல் பதிவாகியுள்ள முர்ஸலான செய்தியின் அறிவிப்பாளர் வரிசையில் உள்ள மிக்தாம் இப்னு தாவூத் என்பவர் நம்பகமானவரல்ல என்று இமாம் நஸாயி கூறுகின்றார்.
என்றாலும் நபியவர்கள் கூறியதாக ஹஸனுல் பஸ்ரி அறிவிக்கும் செய்தியொன்று நம்பகமான அறிவிப்பாளர் வரிசையுடன் அலீ இப்னு மஃபத் என்பவருடைய “வழிபடுதலும் மாறு செய்தலும்” என்ற கிதாபில்
இடம்பெற்றுள்ளதாக இமாம் இராகீ கூறுகின்றார்.
ஹஸனுல் பஸ்ரி வரையிலான அறிவிப்பாளர் வரிசை ஏற்கத்தக்கதாக இருந்தாலும் இது நபியவர்கள் சொன்ன ஸஹீஹான ஹதீஸாகி விடாது. ஏனென்றால் “முர்ஸல் என்பது பெரும்பாலான ஹதீஸ் கலை அறிஞர்களின் கருத்துப்படி
பலவீனமான அறிவிப்பாகும்” என்பது ஹதீஸ் துறையில் அறியப்பட்ட ஒரு விடயமாகும்.
“ஹஸனுல் பஸ்ரி பல்துறை அறிஞராகவும், உயர் அந்தஸ்து உள்ளவராகவும், நம்பகமானவராகவும் இருந்தார். என்றாலும் அவர் முர்ஸலாக அறிவித்தவை ஆதாரமானதல்ல” என்று இமாம் இப்னு ஸஃத் கூறுகின்றார்.
தனக்கும் நபியவர்களுக்கும் இடையிலுள்ளவரை மூடலான வார்த்தையில் கூறினாலே இவரது அறிவிப்பு ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை எனும் போது, இடையிலுள்ளவரை கூறாமலே இருந்தால் எவ்வாறு ஏற்றுக் கொள்ளப்படும்?
“ஹஸன் அதிகம் இருட்டடிப்பு செய்பவராக இருந்தார். ஏதாவது ஒரு ஹதீஸை மூடலான வார்த்தையில் அறிவித்தாரானால் அது ஆதாரமாகக் கொள்ள முடியாததாகி விடுகிறது. குறிப்பாக இன்னாரிடமிருந்து அவர் கற்கவில்லை என்று அடையாளப்படுத்தப்பட்டவர்களுடைய பெயர் குறிப்பிடப்படும் போது இன்னும் உறுதியாகிறது.
உதாரணத்திற்கு : அபூஹுரைரா ரழியல்லாஹு அன்ஹுவிடமிருந்து அவர் கற்கவில்லை என்று அறியப்பட்டதால் அவர் வழியாக வரும் அறிவிப்புகள் ஏற்கப்படுவதில்லை.” என்று இமாம் தஹபீ மீஸானுல் இஃதிதாலில் கூறுகின்றார்.
(5)இதை ஹஸனுல் பஸ்ரி உடைய கூற்றாக இமாம் அஹ்மதுடைய “ஸுஹ்த் 264” இலும், இமாம் தபரியுடைய “தப்ஸீர் 20/92” இலும் பதிவாகியிருக்கிறது. இதன் அறிவிப்பாளர் வரிசை நம்பகமானதாக இருப்பதால் இதுவே (அதாவது ஹஸனுல் பஸ்ரி உடைய கூற்று என்பதே) சரியானதாகும்.
சுருங்கக்கூறின் :
இதனை நபியவர்களோ இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹுவோ கூறியதாக ஊர்ஜிதப்படுத்தப்படவில்லை. இப்னு மஸ்ஊத் ரழியல்லாஹு அன்ஹு மற்றும் ஹஸனுல் பஸ்ரி ரஹிமஹுல்லாஹ் ஆகியோருடைய கூற்று என்பது நிரூபணமாகியுள்ளது.
இமாம் இப்னு தைமிய்யா அவர்களும் தனது “அல்ஈமான் 12” இல் இந்த செய்தியை இப்னு மஸ்ஊத், இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹுமா ஆகியோரின் கூற்றாக பதிந்துள்ளார்.
“இதுவே மிகச் சரியானது” என்று
இமாம் இப்னு உர்வா அல்கவாகிபுத் தராரீயில் கூறுகின்றார்.
இம்ரான் இப்னு ஹுஸைன், இப்னு அப்பாஸ், இப்னு மஸ்ஊத் ஹஸனுல் பஸ்ரி ஆகியோரின் மர்பூஆன (நபியவர்களின் கூற்றாக வந்த) அறிவிப்புகளை இமாம் இப்னு கஸீர் பதிந்து விட்டு, :
“இப்னு மஸ்ஊத், இப்னு அப்பாஸ், ஹஸனுல் பஸ்ரி, கதாதா, அஃமஷ் உட்பட இன்னும் பலரின் கூற்று தான் இது என்பதே மிகச் சரியானது” என்று குறிப்பிடுகிறார்.
இம்ரான் உடைய அறிவிப்பு 985 ஆம் இலக்கத்தில் வரவிருக்கிறது. அதில் “அவருக்கு தொழுகையே இல்லை” என்று இடம் பெற்றுள்ளது. அதுவும் மறுக்கப்பட்ட செய்தியாகும்.
மத்ன் ரீதியான கண்ணோட்டம்:
பாவம் செய்யும் ஒருவர்
ஷர்த்துகளையும் வாஜிபுகளையும் பேணித் தொழுதால் அதை மார்க்கம் அங்கீகரிக்கும் போது, அவர் செய்யும் பாவத்தினால் எவ்வாறு அல்லாஹ்வை விட்டும் தூரமாகுவார்?
இதனால் இந்த செய்தியை இமாம் இப்னு தைமிய்யா : “அல்லாஹ்விடம் நெருக்கமாக்கும் தொழுகையின் வாஜிபுகள் அனைத்தையும் தொழுபவர்
நிறைவேற்றாத பட்சத்தில் அந்தத் தொழுகை மூலம் அல்லாஹ்வின் பக்கம் நெருங்குவதற்குப் பதிலாக தூரமாகவே இருக்கிறார்” என்று வலிந்துரை செய்கிறார்
இவ்வாறான தொழுகையைத் தான் இந்த செய்தி குறிக்கிறது என்ற இவரின் இந்தக் கருத்தை ஏற்க முடியாதுள்ளது. ஏனெனில் வாஜிபுகளையும் ஷர்த்துகளையும் விட்டுத் தொழுவது தொழுகையே அல்ல. எனவே இந்த செய்தி பரிபூரணமான தொழுகையைத் தான் குறித்து நிற்கின்றது.
“நிச்சயமாக தொழுகை வெறுக்கத் தக்க, மானக்கேடான விட்டும் தடுக்கும்” என்று அல்லாஹ் கூறுகிறான்.
“ஒருவர் இரவெல்லாம் தொழுகிறார். ஆனால் பொழுது விடிந்ததும் திருடுகிறார்” என்று நபியவர்களிடம் கூறப்பட்ட போது, “அவரது தொழுகை அவரைத் தடுத்து விடும்” என்றார்கள். இந்த ஹதீஸை அபூஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாக
முஸ்னத் அஹ்மத்,முஸ்னதுல் பஸ்ஸார்
இமாம் தஹாவியின் முஷ்கிலுல் ஆஸார் 2/430
இமாம் பغகவியின் “அலீ இப்னுல் ஜஃதின் ஹதீஸ்9/97/1
இமாம் கலாபாதீ உடைய மிப்தாஹு மஆனில் ஆஸார் 31/1/69/1 ஆகிய கிரந்தங்களில் ஆதாரபூர்வமான ஹதீஸாக பதியப்பட்டுள்ளது.
குறித்த நபர் திருட்டுக் குற்றத்தை செய்து கொண்டிருக்கும் நிலையில் நிறைவேற்றும் பரிபூரணமான தொழுகை அவரைத் திருத்தி விடும் என்று இங்கு நபியவர்கள் கூறுகின்றார்கள்.
“தொழுகையை நேரத்திற்கு பேணித் தொழுபவரை தடுக்கப்பட்டவைகளை செய்வதை விட்டும் தொழுகை தடுக்கும்” என்பதையே நபியவர்கள் நாடுகிறார்கள்.” என்று இமாம் அப்துல் ஹக் அல்இஷ்பீலி தனது “தஹஜ்ஜுத்1/24” இல் விளக்குகிறார்.
எனவே இதுவரை கூறப்பட்டதிலிருந்து இந்த செய்தி ஸனது மற்றும் மத்ன் இரு விதங்களிலும் பலவீனமானது என்பது தெளிவாகிறது.
இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹுவுடைய அறிவிப்பை இமாம் ஜார்பர்தீ தனது தப்ஸீரில் பதிந்து விட்டு “இவ்வாறான செய்திகளை அச்சமூட்டுவதற்காக சொல்லப்பட்டது என்று எடுத்துக் கொள்ளலாம். ஏனென்றால் அது ஷர்த்தாகவோ வாஜிபாகவோ இல்லை” என்று கூறுகின்றார்.
இதை இமாம் இஸ்ஸுத்தீன் இப்னு அப்திஸ்ஸலாம் தனது “நஸீஹத் 1/32” இல் சரிகண்டு விட்டு, “தொழுகை பாவங்களைப் போக்குகிறது என்று கூறும் ஸஹீஹான ஹதீஸ்களுக்கும் இது முரண்படுகின்து. இவ்வாறிருக்க எப்படி (அல்லாஹ்வை விட்டும்) தூரமாக்கும்? இது அறிவுபூர்வமான விடயமல்ல. இது இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹுவுடைய கூற்று என்ற வகையில் அச்சமூட்டுவதற்காக சொல்லப்பட்டது என்று எடுத்துக் கொள்ளலாமே அல்லாமல் நபியவர்களின் கூற்றாக இதைக் கருதுவது சாத்தியமற்றதாகும்.
இதற்கு ஸஹீஹுல் புகாரியில் இடம்பெறும் பின்வரும் ஹதீஸ் ஆதாரமாக இருக்கிறது :
“ஒரு பெண்ணை முத்தமிட்ட ஒருவர் நபியவர்களிடம் முறைப்பட்ட போது “நிச்சயமாக நன்மைகள் பாவங்களை அழித்து விடுகின்றன” என்று அல்லாஹ் வசனத்தை இறக்கினான்.”
இமாம் இப்னு தைமிய்யா “இந்த செய்தி நபியவர்கள் சொன்னதாக ஊர்ஜிதப்படுத்தப்படவில்லை. அல்லாஹ் கூறுவது போன்று தொழுகை வெறுக்கத் தக்க மானக் கேடான விடயங்களை விட்டும் தடுக்கும். ஒரு போதும் தொழுகை அல்லாஹ்வை விட்டும் தூரமாக்காது. தொழுபவன் பாவியாக இருந்தாலும் தொழாதிருப்பவனை விட சிறந்தவனாகவும் அவனை விட அல்லாஹ்விடம் நெருக்கமானவனாகவும் இருக்கிறான்” என்று தனது பதாவாவில் கூறுகின்றார்.
இந்த செய்தி கருத்து ரீதியாகவும் பலவீனமானது என்பதையே அவரது பேச்சு உணர்த்துகிறது. அதுவே உண்மையுமாகும்.
“இது பொய்யான செய்தி” என்று இமாம் இப்னுல் ஜுனைத் கூறியதாக இமாம் தஹபீ “மீஸானுல் இஃதிதால் 3/293” இல் எடுத்தெழுதியுள்ளார்.

ஹதீஸ்:03
மனிதர்களின் உறுதி மலைகளையும் தகர்த்து விடும்…
விமர்சனம்: 
இது ஹதீஸ் இல்லை. இமாம் இஸ்மாயில் அல்அஜலூனி தனது “கஷ்புல் خகபா” வில் :
“இதை ஒரு ஹதீஸாக நான் அறியவில்லை. அஹ்மத் கஸ்ஸாலி, இது நபியவர்களுடைய கூற்று என்று கூறியதாக சிலர் கூறுகின்றனர். ஆராய்ந்து பார்க்க வேண்டும்” என்கிறார்.
ஹதீஸ் கிரந்தங்களில் நாமும் ஆராய்ந்த வகையில் எங்கும் கிடைக்கவில்லை. அஹ்மத் கஸ்ஸாலி தனது சகோதரர் முஹம்மத் கஸ்ஸாலியைப் போன்ற ஒரு சூபித்துவ சிந்தனையுள்ள, சட்டக் கலை அறிஞரே தவிர ஹதீஸ் கலை அறிஞரல்ல. எனவே அவர் சொல்வதை ஆதாரமாகக் கொள்ள முடியாது.
முஹம்மத் கஸ்ஸாலி தனது இஹ்யாவில் நபியவர்கள் கூறியதாக பதிந்துள்ள அநேகமான செய்திகள் ஹாபிழ் இராகீ போன்றவர்களால் “அடிப்படையற்றவை” என்று விமர்சனத்திற்கு உட்பட்டவையாகும்.

ஹதீஸ்:04
கால்நடைகள் புற் பூண்டுகளை சாப்பிடுவது போன்று பள்ளிவாசலில் பேசுவது நன்மைகளை அழித்து விடும்.
விமர்சனம்:
இது எந்த ஹதீஸ் கிரந்தங்களிலும் இடம் பெறாத அடிப்படையற்ற செய்தியாகும்.
இமாம் கஸ்ஸாலி “இஹ்யா உலூமித்தீன் 1/136” இல் இதனைப் பதிவு செய்துள்ளார். அவரது கிதாபிலுள்ள செய்திகளை பகுப்பாய்வு செய்த இமாம் இராகீ : “எந்த ஹதீஸ் கிரந்தங்களிலும் நான் இதைக் காணவில்லை.” என்கிறார்.
தப்ஸீருல் கஷ்ஷாபுடைய ஹதீஸ்களை ஆய்வு செய்த
இமாம் இப்னு ஹஜர் இது பற்றி எதுவும் கூறவில்லை. 73/95 , 130/176
“இதற்கு ஒரு அறிப்பாளர் வரிசை கூட இல்லை” என்று
இமாம் ஸுப்கி தபகாதுஷ் ஷாபிஇய்யா 4/145 – 147 இல் கூறுகின்றார்.
“நெருப்பு விறகை அழிப்பது போன்று பள்ளிவாசலில் ஆகுமானவைகளைப் பேசுவது நன்மைகளை அழித்து விடும்.” என்றே இச்செய்தி மக்கள் மத்தியில் பிரபலமாக உள்ளது.

ஹதீஸ்:05
யாரேனும் ஒரு அடியான் அல்லாஹ்வுக்காக ஏதாவது ஒன்றை விட்டால் அல்லாஹ் அதற்குப் பகரமாக அவனுடைய தீனுக்கும் துன்யாவுக்கும் சிறந்த ஒன்றை வழங்குவான்.
விமர்சனம்:
இந்த வாசகம் இட்டுக்கட்டப்பட்டதாகும். (வேறு வார்த்தையில் ஆதாரபூர்வமானதாக இறுதியில் வரும்)ஹிஜ்ரி 1379 ரமழானில் டமஸ்கஸ் வானொலியில் ஒருவர் சொல்லக் கேட்டேன்.
இந்த செய்தி இமாம் அபூநுஐமுடைய ஹில்யதுல் அவ்லியா 2/196,
இமாம் தைலமியின் பிரபலமற்ற ஹதீஸ்கள் தொடுக்கப்பட்ட ஹாபிழ் இப்னு ஹஜரின் அல்கغராயிபுல் முல்தகதா 4/27,
இமாம் ஸிலபியின் துயூரிய்யாத் 2/200,
இமாம் இப்னு அஸாகிருடைய தாரீகு திமிஷ்க் 3/208/2, 15/79/1,
ஆகிய கிரந்தங்களில் பதிவாகியுள்ளது.
இதன் அறிவிப்பாளர் வரிசை இட்டுக்கட்டப்பட்டுள்ளது.ஏனெனில் அதில் இமாம் ஸுஹ்ரிக்கு கீழுள்ள எவரும் ஹதீஸ் கிதாபுகளில் கூறப்படுபவர்கள் அல்ல. அப்துல்லாஹ் இப்னு ஸஃதைத் தவிர. அவர் கூட பொய்யர் என்றே அறியப்படுகிறார்.
“இவர் ஹதீஸ்களை இட்டுக்கட்டும் பொய்யர்’ என்று இமாம் தாரகுத்னீ கூறுகிறார். ‘அவர் மிகவும் பலவீனமானவர்’ என்று
அஹ்மத் இப்னு அப்தான் கூறுகின்றார்” என்று இமாம் தஹபீ மீஸானுல் இஃதிதாலிலும், தொடர்ந்து இமாம் இப்னு ஹஜர் லிஸானுல் மீஸானிலும் கூறியுள்ளனர்.
இன்னுமொரு அறிவிப்பாளரான பக்கார் இப்னு முஹம்மத் என்பவர் பற்றி தாரீகு திமிஷ்கில் கூறியுள்ள இமாம் இப்னு அஸாகிர் அவரது நம்பகத்தன்மை பற்றி எதுவும் கூறவில்லை.
என்றாலும் பின்வரும் அறிவிப்பு ஆதாரபூர்வமானதாகும்.
யாரேனும் ஒரு அடியான்
அல்லாஹ்வுக்காக ஏதாவது ஒன்றை விட்டால் அல்லாஹ் அதற்குப் பகரமாக சிறந்த ஒன்றை அவனுக்கு வழங்குவான். 
இது இமாம் வகீஉடைய ஸுஹ்த் 2/68/2, அவரிடமிருந்து இமாம் அஹ்மதுடைய முஸ்னத் 5/363,,இமாம் குழாஈ உடைய முஸ்னதுஷ் ஷிஹாப் 1135,
இமாம் அஸ்பஹானி உடைய தர்கீப் 1/73
ஆகிய கிதாபுகளில் பதிவாகியிருக்கிறது.
இதன் அறிவிப்பாளர் வரிசை ஸஹீஹ் முஸ்லிமுடைய அறிவிப்பாளர் வரிசையின் தரத்திலுள்ளதாகும்.
இதே செய்தியை உபை இப்னு கஃப் ரழியல்லாஹு அன்ஹு வழியாக துணை ஆதாரத்துடைய தரத்திலான அறிவிப்பாளர் வரிசையுடன் இமாம் அஸ்பஹானி பதிவு செய்துள்ளார்.

ஹதீஸ்:06
புழுதியை விட்டும் தூரமாக இருங்கள். அதன் மூலம் மூச்சுத்திணறல் (ஆஸ்துமா) உண்டாகும்
விமர்சனம்:
இது ஹதீஸ் கிரந்தங்களில் இடம் பெறுவதாக நாம் அறியவில்லை
இமாம் இப்னுல் அஸீர் தனது “அந்நிஹாயா” வில் இதை ஹதீஸென்று பதிந்துள்ளார். ஆனால், இது நபியவர்கள் கூறியதாக ஹதீஸ் கிரந்தங்களில் இருப்பதாகத் தெரியவில்லை.
என்றாலும் இமாம் இப்னு ஸஃத் “தபகாதுல் குப்ரா 8/2/198” இல் அப்துல்லாஹ் இப்னு ஸாலிஹ் அல்மிஸ்ரி சொன்னதாக பின்வரும் செய்தியை பதிந்துள்ளார்.
“நபியவர்களின் அடிமை இப்னு ஸன்தர் சில நபர்களுடன் அம்ருப்னுல் ஆஸ் (ரழியல்லாஹு அன்ஹுமா) உடன் சென்று கொண்டிருக்கும் போது முன்னால் சென்றவர்கள்
புழுதியைக் கிளப்பினார்கள். அம்ரு ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் தனது தலைப்பாகயால் மூக்கை மூடிவிட்டு, : புழுதியைத் தவிர்ந்து கொள்ளுங்கள் அது மிக இலகுவாக (உடலில்) புகுந்து கொள்ளக்கூடியதும் வெளி வருவதற்கு மிகக் கஷ்டமானதுமாகும். அது நுரையீரலைச் சென்றடைந்தால் மூச்சுத்திணறல் (ஆஸ்துமா) உண்டாகும்
அப்துல்லாஹ் இதை ஹர்மலாவிடமிருந்தும் அவர் சிலர் இப்னு ஸன்தரிடமிருந்து தனக்கு அறிவித்ததாகவும் கூறுகின்றனர்.
இது ஸஹாபியுடைய கூற்றாக இருந்தாலும் மூன்று காரணங்களால் பலவீனமாகின்றது.
  • ஒன்று :இமாம் இப்னு ஸஃத் தனக்கு அப்துல்லாஹ்விடமிருந்து இந்த செய்தியை அறித்தவரை கூறவில்லை. எனவே இது முஅல்லக் என்ற வகையைச் சேர்ந்ததாகும்.
  • இரண்டு :அப்துல்லாஹ் ஸஹீஹுல் புகாரியின் அறிவிப்பாளராக இருந்தாலும் அவரில் சிறு பலவீனம் இருக்கிறது.
இவர் பற்றி இமாம் இப்னு ஹிப்பான் இவ்வாறு கூறுகிறார் :
“மார்க்கப்பற்றுள்ளவராக இருந்தாலும், அவரது அண்டை வீட்டுக்காரரால் அவருடைய அறிவிப்புகளில் மறுக்கப்பட வேண்டிய செய்திகள் சேர்ந்தன. ‘அவ்விருவரும் பகைத்துக் கொண்டிருந்தனர். அண்டை வீட்டுக்காரர் அப்துல்லாஹ்வின் ஆசிரியரின் பெயரில் ஹதீஸ்களை இட்டுக்கட்டி அப்துல்லாஹ்வின் கையெழுத்தைப் போன்று அவற்றை எழுதி வீட்டுக்குள் அவரது புத்தகங்களுக்கு மத்தியில் எறிந்து விடுவார். அப்துல்லாஹ்வும் தன்னுடைய எழுத்திலுள்ள அவற்றை தனது அறிவிப்புகள் என்று எண்ணி அவற்றை அறிவிக்கலானார். என்று இமாம் இப்னு ஹுஸைமா சொல்ல நான் கேட்டேன்.”
  • மூன்று :ஹர்மலாவுக்கு இப்னு ஸன்தரிடமிருந்து அறிவித்தவர் யாரென்று கூறப்படவில்லை.

ஹதீஸ்:07
இரண்டு விடயங்களை நெருங்க வேண்டாம் :அல்லாஹ்வுக்கு இணைவைத்தல்,மக்களுக்கு தீங்கு விளைவித்தல்.
விமர்சனம்:
இந்த வார்த்தை பிரபலமானதாக இருந்தாலும் எந்த ஹதீஸ் கிரந்தங்களிலும் இடம்பெறுவதில்லை
இமாம் கஸ்ஸாலி உடைய இஹ்யா உலூமித்தீன் 2/185 இல் பின்வருமாறு இடம் பெற்றுள்ளது.
“இரண்டு விடயங்கள் இருக்கின்றன. அவற்றை விடக் கெட்டது எதுவுமில்லை : அல்லாஹ்வுக்கு இணைவைத்தல், மக்களுக்கு தீங்கு விளைவித்தல்.
இன்னும் இரண்டு விடயங்கள் இருக்கின்றன. அவற்றை விட நல்ல செயல் எதுவுமில்லை. அல்லாஹ்வை நம்புவதும், அவனது அடியார்களுக்கு பயனளித்தலும் ஆகும்.”
இதுவும் எந்த ஹதீஸ் கிரந்தங்களிலும் இடம்பெறாததாகும். இஹ்யாவை பகுப்பாய்வு செய்த இமாம் இராகீ, :
அலீ ரழியல்லாஹு அன்ஹு வழியாக இமாம் அபூஷுஜாஃ அத்தைலமீ தனது “பிர்தவ்ஸ்” இல் இதனைப் பதிவு செய்திருக்கிறார்.
(ஆனால் “பிர்தவ்ஸ்” உடைய செய்திகளுக்குரிய அறிவிப்பாளர் வரிசையை தொகுத்து வழங்கிய) அவரது மகன் அபூமன்ஸூர் அத்தைலமீ இந்த செய்திக்குரிய அறிவிப்பாளர் வரிசையைக் கூறவில்லை.” என்று கூறுகின்றார்.
இஹ்யாவில் பதியப்பட்டிருக்கும்
அறிவிப்பாளர் வரிசை இல்லாத ஹதீஸ்களின் பட்டியலில் இதனை இமாம் ஸுப்கீ சேர்த்துள்ளார். 4/156

ஹதீஸ்:08
துன்யாவுக்காக உழைக்கும் போது தொடர்ந்தும் வாழப் போகிறேன் என்று நினைத்துக் கொள். மறுமைக்காக உழைக்கும் போது நாளையே மரணிக்கப் போகிறேன் என்று நினைத்துக் கொள்.
விமர்சனம்:
சமீபகாலமாக மக்களிடம் இது பிரபலமாக இருந்தாலும் இதை நபியவர்கள் கூறியதாக எந்த ஹதீஸ் கிரந்தங்களிலும் இல்லை.
ஷைக் அப்துல் கரீம் அல்ஆமிரி அவர்களும் தனது “ஹதீஸல்லாதவற்றை தெளிவுபடுத்தல்” என்ற புத்தகத்தில் இது பற்றிக் குறிப்பிடவில்லை.
இது நபித்தோழருடைய கூற்றாக இரு வழிகளில் பதியப்பட்டுள்ளது.
  • உபைதுல்லாஹ் இப்னு ஐزஸார் என்பவர் அப்துல்லாஹ் இப்னு அம்ரு ரழியல்லாஹு அன்ஹு கூறியதாக இமாம் இப்னு குதைபா ரஹிமஹுல்லாஹ் தனது கغரீபுல்ஹதீஸ் 1/46/2 இல் பதிந்துள்ளார்.
இந்த உபைதுல்லாஹ்வைப் பற்றிய தகவல்கள் எதையும் நான் ஆரம்பத்தில் அறியவில்லை. பின்னர் மக்காவாசி ஒருவர் இமாம் அப்துர்ரஹ்மான் அல்முஅல்லிமீ அல்யமானீ ரஹிமஹுல்லாஹ் உடைய கூற்றை மேற்கோள் காட்டியதற்கிணங்க இமாம் புகாரியுடைய “தாரீக் 3/394” இலும், இமாம் இப்னு அபீஹாதமுடைய “அல்ஜர்ஹு வத்தஃதீல் 2/2/330” இலும் அவர் பற்றி காணக் கிடைத்தது. ரஹிமஹுமல்லாஹ்
“அவரை இமாம் யஹ்யா இப்னு ஸயீத் அல்கத்தான் ரஹிமஹுல்லாஹ் ‘நம்பகமானவர்’ என்று கூறியதாகவும், இமாம் ஹஸனுல் பஸ்ரி ரஹிமஹுல்லாஹ் போன்ற தாபியீன்களிடமிருந்து செய்திகளை இவர் அறிவிப்பவர்” என்று இரு கிதாபுகளிலும் பதியப்பட்டுள்ளது.
இமாம் இப்னு ஹிப்பானும் தனது “அஸ்ஸிகாத் : நம்பகமானவர்கள் 7/148” இலும் இவரைக் குறிப்பிட்டுள்ளார்.
எனவே (இவர் தாபியீன்களிடமிருந்து மாத்திரம் அறிவிப்பவர் என்பதால்) இந்த அறிவிப்பாளர் வரிசை இடையில் துண்டிக்கப்பட்டிருக்கிறது.
வேறு அறிவிப்பாளர் வரிசையில் இமாம் ஹைஸமீ “ஸவாயிது முஸ்னதில் ஹாரிஸ் 2/139” இல் பதிந்துள்ள பின்வரும் செய்தியும் இதனை உறுதிப்படுத்துகிறது.
உபைதுல்லாஹ் கூறுகிறார் : ரமல் என்ற இடத்தில் வயதான ஒருவரை சந்தித்தேன். “நபித்தோழர்களில் யாரையாவது சந்தித்ததுண்டா? என்று அவரிடம் கேட்டதற்கு, “அப்துல்லாஹ் இப்னு அம்ரு ரழியல்லாஹு அன்ஹுவை சந்தித்திருக்கிறேன்” என்று கூறி மேற்கூறிய செய்தியை அறிவித்தார்.
(இதிலிருந்து உபைதுல்லாஹ் பெயர் அறியப்படாத ஒரு தாபியிடமிருந்து தான் இதனை அறிவிக்கிறார் என்பது தெளிவாகிறது)
  • இன்னொரு அறிவிப்பாளர் வரிசையூடாக முஹம்மத் இப்னு அஜ்லான் என்பவர் அப்துல்லாஹ் இப்னு அம்ரு ரழியல்லாஹு அன்ஹு கூறியதாக இமாம் இப்னுல் முபாரக் ரஹிமஹுல்லாஹ் உடைய “ஸுஹ்து 2/218” இல் பதியப்பட்டுள்ளது.
இதுவும் இடையில் துண்டிக்கப்பட்டதாகும்.
இது போக, நபியவர்கள் கூறியதாக (வேறு வாசகங்கள் இரு விதங்களில்) அறிவிக்கப்படுகிறது.
1)நபியவர்கள் கூறியதாக அப்துல்லாஹ் இப்னு அம்ரு ரழியல்லாஹு அன்ஹு அறிவிக்கும் செய்தியொன்று இமாம் பைஹகீ ரஹிமஹுல்லாஹ் உடைய “ஸுனன் 3/19” இல் பின்வரும் வாசகத்துடன் பதியப்பட்டுள்ளது :
“நிச்சயமாக இம்மார்க்கம் உறுதியானதாகும். மிருதுவாக அதில் ஈடுபடுங்கள். இரட்சகனை வணங்குவதில் உங்களுக்கு நீங்களே வெறுப்பை உண்டாக்கிக் கொள்ள வேண்டாம். ஏனெனில் ஒரு விடயத்தில் அளவு கடந்து செயற்படுபவர் எதையும் சாதிக்கப் போவதில்லை.
மறுமைக்காக உழைக்கும் போது நான் மரணிக்கப் போவதில்லை என்று நினைத்துக் கொள்.
பாவங்களைத் தவிர்க்கும் போது நாளைக்கு மரணிக்கப் போகிறேன் என்று நினைத்துக் கொள்.”
இந்த செய்தியும் இரு காரணங்களால் பலவீனமானதாகும்.
ஒன்று :
அப்துல்லாஹ் ரழியல்லாஹு அன்ஹுவிடமிருந்து இதை அறிவிக்கும் உமர் இப்னு அப்துல் அஸீஸ் ரஹிமஹுல்லாஹ் உடைய அடிமை பற்றிய தகவல்கள் இல்லை.
இரண்டு :
ஆறாம் இலக்க செய்தியில் கூறப்பட்ட அப்துல்லாஹ் இப்னு ஸாலிஹ் என்ற பலவீனமானவர் இதன் அறிவிப்பாளர் வரிசையிலும் இடம் பெறுகிறார்.
அடுத்ததாக, இந்த செய்தியில் துன்யாவுக்காக உழைப்பதைப் பற்றி கூறப்படவில்லை. மாறாக மறுமைக்காக உழைக்கும் போது நிதானமாக இருக்க வேண்டும் என்பதையே வலியுறுத்துகிறது.
“அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமான அமல், குறைவாக இருந்தாலும் தொடர்ந்து செய்வதாகும்” என்ற புகாரி, முஸ்லிமுடைய ஹதீஸுக்கு இது ஒத்துப் போகிறது.
02)நபியவர்கள் கூறியதாக ஜாபிர் ரழியல்லாஹு அன்ஹு அறிவிக்கும் செய்தி இமாம் பஸ்ஸார் உடைய முஸ்னதில் இருப்பதாக “கஷ்புல்அஸ்தார் 1/57/74” இலும், அவர் வழியாக இமாம் அபுஷ் ஷைக் இப்னு ஹய்யான் ரஹிமஹுல்லாஹ் உடைய “அல்அம்ஸால் 229” இலும் பின்வரும் வாசகம் மட்டும் இடம் பெற்றுள்ளது.
“நிச்சயமாக இம்மார்க்கம் உறுதியானதாகும். மிருதுவாக அதில் ஈடுபடுங்கள். ஏனெனில் ஒரு விடயத்தில் அளவு கடந்து செயற்படுபவர் எதையும் சாதிக்கப் போவதில்லை.”
இதன் அறிவிப்பாளர் வரிசையில் இடம் பெறும் யஹ்யா இப்னுல் முதவக்கில் என்பவர் ஒரு பொய்யர் என்று இமாம் ஹைஸமீ ரஹிமஹுல்லாஹ் “மஜ்மஉஸ் ஸவாயித் 1/62” இல் கூறுகின்றார்.
இது போன்ற ஒரு செய்தி 847 ஆம் இலக்கத்தில் வரவிருக்கிறது.
இந்த செய்திக்கு மாற்றீடாக அபூஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அறிவித்துள்ள ஸஹீஹுல் புகாரியுடைய பின்வரும் ஹதீஸை எடுத்துக் கொள்ளலாம்.
“நிச்சயமாக இந்த மார்க்கம் எளிதானது. இம்மார்க்கத்தை எவரும் (தமக்கு) சிரமமானதாக ஆக்கினால், அவரை அது மிகைத்துவிடும். எனவே, நடுநிலைமையையே மேற்கொள்ளுங்கள். இயன்றவற்றைச் செய்யுங்கள்; நற்செய்தியையே சொல்லுங்கள்….”
Previous Post Next Post