بسم الله الرحمن الرحيم
குத்பாவை அரபுமொழியில் நிகழ்த்துவது விரும்பத்தக்கது என்பதில் அறிஞர்கள் உடன்பட்டுள்ளனர்.
ஆனால், அரபுமொழியில் குத்பாவை நிகழ்த்துவது குத்பாவுக்குரிய நிபந்தனையாகுமா? என்பதில் அவர்கள் கருத்து வேறுபாடு கொண்டுள்ளனர்.
இது தொடர்பாக அறிஞர்களிடம் மூன்று கருத்துக்கள் காணப்படுகின்றன.
முதல் கருத்து:
அரபுமொழியில் குத்பா நிகழ்த்த சக்திபெற்றவர் குத்பாவை அரபுமொழியில் நிகழ்த்துவது நிபந்தனையாகும். செவிமடுப்பவர்கள் அரபுமொழியை அறியாவிட்டாலும் சரியே.
இக்கருத்தை மாலிகி மத்ஹபைச் சேர்ந்த அறிஞர்கள் கூறியுள்ளனர். மேலும் ஹன்பலி மத்ஹபிடத்திலும் இக்கருத்து பிரபல்யமான கருத்தாகவும் காணப்படுகிறது. ஷாபிஈ மத்ஹபிலும் இக்கருத்து மிகச்சரியான கருத்தாக குறிப்பிடப்பட்டுள்ளது.
(பார்க்க : அல்பவாகிஹுத்தவானீ 1-306, கஷ்ஷாபுல் கினாஃ 2-34, அல்மஜ்மூஃ 4-522)
இரண்டாவது கருத்து:
அரபுமொழியில் குத்பா நிகழ்த்த சக்திபெற்றவர் குத்பாவை அரபுமொழியில் நிகழ்த்துவது நிபந்தனையாகும். ஆனால், செவிமடுப்பவர்கள் அரபுமொழியை அறியாதவர்களாக இருந்தால் குத்பா செய்பவர் மக்களின் மொழியில் குத்பாவை நிகழ்த்தலாம்.
இக்கருத்தை ஹன்பலி மத்ஹபைச் சேர்ந்த சில அறிஞர்கள் கூறியுள்ளனர்.
மூன்றாவது கருத்து:
குத்பாவை அரபுமொழியில் நிகழ்த்துவது விரும்பத்தக்கதாகும். மாறாக அது குத்பாவுக்குரிய நிபந்தனையல்ல. குத்பா செய்பவர் அரபுமொழியல்லாத அவர் பேசக்கூடிய மொழியில் குத்பாவை நிகழ்த்தலாம்.
இக்கருத்தை இமாம் அபூஹனீபா மற்றும் ஷாபிஈ மத்ஹபில் சிலரும் கூறுகின்றனர்.
(பார்க்க : ரத்துல் முஹ்தார் 1-543, அல்மவ்ஸூஅதுல் பிக்ஹிய்யா 19-180)
சரியான கருத்து:
மூன்றாவது கருத்தே மிகச்சரியானதும் மிக ஏற்றமானதும் ஆகும்.
அதற்கு பின்வரும் காரணங்களைக் குறிப்பிடலாம்
1. குத்பாவை அரபுமொழியில் நிகழ்த்துவது நிபந்தனையாகும் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை.
2. அல்லாஹு தஆலா கூறுகின்றான் : மேலும், (நபியே! ஒவ்வொரு சமூகத்தாருக்கும்) அவர் விளக்கிக் கூறுவதற்காக எந்த ஒரு தூதரையும் அவருடைய சமூகத்தாரின் மொழியைக் கொண்டேயல்லாது நாம் அனுப்பவில்லை. (சூறா இப்றாஹீம் : 04)
குத்பாவின் நோக்கம் பயன்பெறுவது, தெளிவு பெறுவதாகும், செவிமடுப்பவர்களின் மொழியில் நிகழ்த்தப்பட்டாலே அந்த நோக்கம் நிறைவேறும் என்பதை மேற்கூறப்பட்ட குர்ஆன் வசனம் தெளிவுபடுத்துகிறது.
3. நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் அரபுமொழியில் குத்பாவை நிகழ்த்தினார்கள் என்பது அது அவர் பேசக்கூடிய மொழியாகவும் அவருடைய சமூகம் பேசக்கூடிய மொழியாகவும் இருந்தமையினாலாகும்.
மூன்றாவது கருத்தை சரிகண்ட சில அறிஞர்களின் விளக்கங்கள்.
1. இஸ்லாமிய உலக ஒன்றியம் அமைப்பின் அறிஞர்கள் கூறுகின்றனர் :
நடுநிலையான கருத்து யாதெனில், வெள்ளிக்கிழமையின் குத்பா, பெருநாள் குத்பா போன்றவற்றை அரபுமொழி பேசப்படாத நாடுகளில் அரபுமொழியில் நிகழ்த்துவது அந்த குத்பா ஏற்றுக்கொள்ளப்படுவதற்குரிய நிபந்தனையல்ல. ஆனாலும், குத்பாவின் முகவுரை, மற்றும் குத்பாவில் உள்ளடக்கப்படக்கூடிய குர்ஆன் வசனங்களை அரபுமொழியில் கூறுவது மிகச்சிறந்தது.
(கராராதுல் மஜ்மஉல் பிக்ஹீ : 99)
2. லஜ்னதுத் தாஇமா அறிஞர்கள் கூறுகின்றனர் :
வெள்ளிக்கிழமை குத்பாவை அரபுமொழியில் நிகழ்த்துவது நிபந்தனையாகும் என்பதற்கு நபியவர்களிடமிருந்து எந்த ஹதீஸும் அறிவிக்கப்படவில்லை. நபியவர்கள் வெள்ளிக்கிழமை குத்பாவையும் ஏனைய சொற்பொழிவுகளையும் அரபுமொழியில் நிகழ்த்தியமை அது அவர் பேசக்கூடிய மொழியாகவும் அவருடைய சமூகம் பேசக்கூடிய மொழியாகவும் இருந்தமையினால் தான். எனவே, அவர்கள் விளங்குகின்ற மொழியில் நபியவர்கள் அவர்களுக்கு குத்பா நிகழ்த்தி அவர்களுக்கு வழிகாட்டி, சில விடயங்களை ஞாபகமூட்டினார்கள்.
(பதாவா அல்லஜ்னதுத் தாஇமா : 8-253)
3. அஷ்ஷெய்ஹ் இப்னுபாஸ் (ரஹிமஹுல்லாஹ்) கூறுகின்றார் :
பள்ளிவாசலில் உள்ள அதிகமானோர் அரபுமொழியை அறியாதவர்களாக இருந்தால் அரபுமொழியல்லாத ஏனைய மொழிகளில் குத்பாவை நிகழ்த்துவது குற்றமில்லை. அல்லது குத்பாவை அரபுமொழியில் நிகழ்த்திய பின்னர் அதனை மொழிபெயரக்கலாம்.
ஆனால், ஜும்ஆவுக்கு வருகை தந்தவர்களில் பெரும்பாலானோர் அரபுமொழியை விளங்குபவர்களாகவும் மொத்தமாகவே அதனுடைய கருத்துக்களை புரிந்து கொள்பவர்களாகவும் இருந்தால் நபிவழிக்கு மாற்றம் செய்யாமல் அரபுமொழியிலேயே குத்பாவை நிகழ்த்துவது மிக ஏற்றமானது. குறிப்பாக ஸலபுஸ்ஸாலிஹீன்கள் அரபுமொழி பேசாத மக்களின் பள்ளிவாசல்களில் குத்பா நிகழ்த்தும் போது அதனை அவர்கள் மொழிபெயர்த்துச் சொன்னார்கள் என்பது அறிவிக்கப்படவில்லை. ஏனென்றால், அந்த சமயம் கண்ணியம் இஸ்லாத்திற்கே இருந்தது. மேலும் பெரும்பான்மை, உயர்வு அரபுமொழிக்கே காணப்பட்டது.
தேவைப்படும் போது அரபுமொழியல்லாத ஒரு மொழியில் குத்பாவை நிகழ்த்தலாம் என்பதற்கு மார்க்கத்தில் ஆதாரம் உண்டு. அல்லாஹு தஆலா கூறுகின்றான் : மேலும், (நபியே! ஒவ்வொரு சமூகத்தாருக்கும்) அவர் விளக்கிக் கூறுவதற்காக எந்த ஒரு தூதரையும் அவருடைய சமூகத்தாரின் மொழியைக் கொண்டேயல்லாது நாம் அனுப்பவில்லை. (சூறா இப்றாஹீம் : 04)
அதேபோன்று தான் நபித்தோழர்கள் அரபுமொழி பேசாத ரோம பாரஸீக நாடுகளுடன் போர் செய்யும் போது மொழிபெயர்ப்பாளர்களினூடாக அவர்களை இஸ்லாத்தின் பால் அழைப்பு விடுக்காமல் அவர்களோடு போர் செய்யவில்லை.
(மஜ்மூஉல் பதாவா : 12-372)
4. அஷ்ஷெய்ஹ் இப்னு உஸைமீன் (ரஹிமஹுல்லாஹ்) கூறுகின்றார் :
இவ்விடயத்தில் சரியான கருத்து குத்பாவுக்கு சமூகமளித்தவர்கள் விளங்குகின்ற மொழியில் குத்பா நிகழ்த்துவது கூடும் என்பதாகும். வருகை தந்தவர்கள் அரேபியர்களாக இல்லாவிட்டால் அரபுமொழியை அறியாதவர்களாக இருந்தால் அவர்களுடைய மொழியிலேயே குத்பா நிகழ்த்தப்பட வேண்டும். இதுவே அவர்களுக்கு தெளிவு போய்ச் சேர்வதற்கான வழிமுறையாகும். குத்பாவுடைய நோக்கம் அல்லாஹ்வின் கட்டளைகளை மக்களுக்கு தெளிவுபடுத்துவதும், அவர்களுக்கு உபதேசம் செய்வதும், அவர்களுக்கு வழிகாட்டுவதுமாகும். ஆனாலும், குர்ஆன் வசனங்கள் அவசியம் அரபுமொழியில் கூறப்பட்டு பின்னர் மக்களின் மொழியில் அவை தெளிவுபடுத்தப்பட வேண்டும்.
மக்களின் மொழியில் சொற்பொழிவு நிகழ்த்தப்பட வேண்டும் என்பதற்கு ஆதாரம் பின்வரும் அல்குர்ஆன் வசனமாகும். அல்லாஹு தஆலா கூறுகின்றான் : மேலும், (நபியே! ஒவ்வொரு சமூகத்தாருக்கும்) அவர் விளக்கிக் கூறுவதற்காக எந்த ஒரு தூதரையும் அவருடைய சமூகத்தாரின் மொழியைக் கொண்டேயல்லாது நாம் அனுப்பவில்லை. (சூறா இப்றாஹீம் : 04)
மக்கள் தெளிவு பெறும் வழிமுறை அது அவர்களின் மொழியில் அமைந்திருப்பதேயாகும் என்பதை அல்லாஹ் தெளிவுபடுத்துகிறான். எனவே அரபு அல்லாத மொழியில் குத்பாவை நிகழ்த்த முடியும். ஆனாலும், குர்ஆன் வசனங்களை குறிப்பிடுகின்றபோது குர்ஆனுடைய அரபுமொழியில் அவற்றைக் குறிப்பிட்டு பின்னர் மக்களின் மொழியில் அவற்றை தெளிவுபடுத்துவது அவசியமாகும்.
(பதாவா நூருன் அலத்தர்ப் : ஜும்ஆத் தொழுகை தொடர்பான பகுதி)
அல்லாஹ் மிக அறிந்தவன்!
- அஸ்கி அல்கமி