இமாம் அஹ்மத் ரஹிமஹுல்லாஹ் அவர்களின் சத்தியப் போராட்டம் அரசுக்கு எதிரான கிளர்ச்சியாகுமா?

-உஸ்தாத் MF அலீ

நாம் இமாம் அஹ்மத் ரஹிமஹுல்லாஹ் அவர்களின் சத்தியப் போராட்டத்தை அரசுக்கு எதிரான கிளர்ச்சியாக ஒருக்காலும் புரிந்துவிடக் கூடாது. இன்றும் குர்ஆன் படைக்கப்பட்டது என்று சவூதி மன்னரோ, எந்த மன்னரோ சொல்வாராகின், அந்தக் கருத்தை அசத்தியம் என்றே நாம் அனைவரும் சொல்வோம். இதற்குப் பெயர் கிளர்ச்சி அல்ல; எது சத்தியமோ, மார்க்கமோ, அதை மறைக்காமல் சொல்லிவிடுவது. அதற்கு நாமும் சாட்சி பகர்வது. இதுவும் யாருக்குச் சக்தியும் அது குறித்த கல்வி ஞானமும் உள்ளதோ, அவர்தான் செய்தாக வேண்டும். நபிமொழியில் புகழப்பட்டுள்ள இந்த சிறந்த ஜிஹாதையே இமாமவர்கள் செய்தார்கள். இதற்கும் அரசுக்கு எதிராக மக்களைத் தூண்டி கிளர்ச்சியை முன்னெடுப்பதற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. இதையும் அழகிய முறையில் ஆட்சியாளரின் நேர்வழிக்காக பிரார்த்தனை செய்த நிலையிலும், அவருக்கு ஆதாரத்தை நிலைநாட்டி தெளிவுபடுத்தும் எண்ணத்திலுமே செய்ய வேண்டும். இமாம் அஹ்மத் இப்படித்தான் நடந்து கொண்டார்கள்.

அப்போதும் அவர்கள் ஆட்சியாளர்களின் கடும் சித்திரவதைக்கு ஆளானார்கள். அல்லாஹ்வுக்காக பொறுமை காத்தார்கள். கலீஃபா மாமூன் உடைய ஆட்சிக்காலத்திலிருந்து கலீஃபா வாசிக்கின் காலம் வரை ஒரு நீண்ட நெருப்புப் பாதையை அவர்கள் கடந்தார்கள். கலீஃபா முத்தவக்கீல் காலம் வந்த பின்புதான் நிலைமை மாறியது. வாசிக் உடைய ஆட்சியின்போது ஐந்து வருடங்கள் தலைமறைவாக இருக்க வேண்டிய அச்சத்தின் காலத்தை அவர்கள் அடைந்த போதும், அதனால் ஹதீஸ் பாடங்களைக்கூட நடத்த முடியாமல் முடக்கப்பட்ட போதும், இமாமவர்கள் ஒருக்காலும் மன்னருக்கு எதிராக மக்களைத் தூண்டவில்லை.

இன்னும் சொல்லப் போனால், மன்னரை எதிர்த்து வேலை செய்து மக்களைத் திரட்ட ஆதரவு கேட்டு வந்த அறிஞர்களைக்கூட அவர்கள் தடுத்தார்கள். ஸுன்னாவில் வந்துள்ள தடை ஆதாரங்களை முன்வைத்து தனது அறையில் விவாதம் செய்தார்கள். இன்ஷா அல்லாஹ் நான் நிறைய ஆதாரங்களை உங்கள் கவனத்திற்கு கொண்டு வருகிறேன். இமாம் அஹ்மத் அவர்கள் குறித்து மட்டுமல்ல, அவர்களுக்கு முந்திய பிந்திய இமாம்கள் பலரின் நிலைப்பாடு குறித்தும் சரியான ஸனதுடன் உங்களுக்குப் பகிர்கிறேன்.

.............

ஹிஜ்ரி 235 ல் பிறந்து 311 ல் இறந்தவர் இமாம் அபூபக்ர் அல் கல்லால் ரஹிமஹுல்லாஹ். பக்தாதைச் சேர்ந்தவர். இமாம் அஹ்மதின் பிரபலமான நேரடி மாணவர்களில் ஒருவர். இவரும் இமாமவர்களின் மகனார் அப்துல்லாஹ் இப்னு அஹ்மத் இப்னு ஹன்பல் ரஹிமஹுல்லாஹ் அவர்களும் ஒரே சமயத்தில் இமாமிடம் கல்வி கற்றவர்கள். இருவரும் அறிவித்த ஆதாரப்பூர்வ பல செய்திகள் இமாம் அஹ்மது குறித்து இன்றும் எழுத்தில் இருக்கின்றன. இருவருக்கும் இடையில் ஓர் ஒற்றுமை இருவருமே அஸ்ஸுன்னா எனும் பெயரில் நூல்களை எழுதியுள்ளார்கள். அவற்றில் அபூ பக்ர் அல் கல்லால் அவர்களின் கிதாபுஸ் ஸுன்னாவில் ஸஹீஹான ஸனதுடன் அவர்கள் பதிவு செய்துள்ள ஆதாரத்தைக் கவனியுங்கள்.

90- وأخبرني علي بن عيسى ، قال : سمعت حنبلا يقول في ولاية الواثق : اجتمع فقهاء بغداد إلى أبي عبد الله ، أبو بكر بن عبيد ، وإبراهيم بن علي المطبخي ، وفضل بن عاصم ، فجاؤوا إلى أبي عبد الله ، فاستأذنت لهم ، فقالوا : يا أبا عبد الله ، هذا الأمر قد تفاقم وفشا ، يعنون إظهاره لخلق القرآن وغير ذلك ، فقال لهم أبو عبد الله : فما تريدون ؟ قالوا : أن نشاورك في أنا لسنا نرضى بإمرته ، ولا سلطانه ، فناظرهم أبو عبد الله ساعة ، وقال لهم : عليكم بالنكرة بقلوبكم ، ولا تخلعوا يدا من طاعة ، ولا تشقوا عصا المسلمين ، ولا تسفكوا دماءكم ودماء المسلمين معكم ، انظروا في عاقبة أمركم ، واصبروا حتى يستريح بر ، أو يستراح من فاجر ، ودار في ذلك كلام كثير لم أحفظه ومضوا ، ودخلت أنا وأبي على أبي عبد الله بعدما مضوا ، فقال أبي لأبي عبد الله : نسأل الله السلامة لنا ولأمة محمد ، وما أحب لأحد أن يفعل هذا ، وقال أبي : يا أبا عبد الله ، هذا عندك صواب؟ ، قال : لا ، هذا خلاف الآثار التي أمرنا فيها بالصبر ، ثم ذكر أبو عبد الله قال : قال النبي ﷺ : (إن ضربك فاصبر ، وإن . . . وإن فاصبر) ، فأمر بالصبر ، قال عبد الله بن مسعود : وذكر كلاما لم أحفظه.

இமாம் அஹ்மத் இப்னு ஹன்பல் அவர்களின் சகாக்களில் ஒருவர் கூற, தான் செவியுற்றதாக அலீ இப்னு ஈஸா தெரிவித்ததாவது:

வாசிக் உடைய ஆட்சிக் காலத்தில் பக்தாதின் மார்க்கச் சட்ட நிபுணர்கள் இமாம் அஹ்மத் அவர்களிடம் வந்து குழுமினார்கள். அவர்களில் அபூ பக்ர் இப்னு உபைத், இப்ராஹீம் இப்னு அலீ அல் மத்பகீ மற்றும் ஃபத்ள் இப்னு ஆசிம் போன்ற சட்ட நிபுணர்களும் இமாம் அவர்களிடம் பேசுவதற்கு வந்திருந்தார்கள். (இமாமவர்களின் உதவியாளர் ஆகிய) நான் அவர்களுக்கு அனுமதி அளித்தேன். "இந்த (ஆட்சியாளரின்) விவகாரம் போகப் போக மோசமாகிக் கொண்டே இருக்கிறது. மோசத்திலும் மோசம்" என்றார்கள். அதாவது, ஆட்சியாளர் வெளிப்படையாகவே குர்ஆன் படைக்கப்பட்டது என்று பேசி வருவதையும், இன்னும் அவரின் வேறு பிரச்சினைகளையும் அவர்கள் இந்த வார்த்தைகளின் மூலம் குறிப்பிட்டார்கள்.

அதைக் கேட்ட இமாமவர்கள், 'நீங்கள் என்ன நாடுகிறீர்கள்?' என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள், "நாங்கள் உங்களிடம் நாடுவது என்னவென்றால், எங்களுடன் சேர்ந்து நீங்களும் இவரின் ஆட்சி மற்றும் அதிகாரத்தில் திருப்தி அடையவில்லை என்று சொல்ல வேண்டும்" எனக் கோரினார்கள். அவர்களிடம் இமாம் அஹ்மத் ஒரு மணி நேரம் விவாதித்தார்கள். பின்னர் கூறினார்கள்: "உங்கள் உள்ளங்களில் உள்ளபடி (குர்ஆன் படைக்கப்பட்டதல்ல என்றும், அது அல்லாஹ்வின் வார்த்தைதான் என்றும்) மறுப்பை வெளிப்படுத்துவதில் உறுதியாகவே இருங்கள். ஆனால், ஆட்சியாளருக்குக் கீழ்ப்படிவதை விட்டும் உங்கள் கைகளை விலக்கிக் கொள்ளாதீர்கள். முஸ்லிம்களின் பிடிமானத்தைப் பிளந்துவிடாதீர்கள். (அவர்களைக் கிளர்ச்சிக்குத் தூண்டிப் பிரிவினையை ஏற்படுத்திவிடாதீர்கள்.)  உங்கள் இரத்தத்தைச் சிந்திவிடாதீர்கள். உங்களுடன் முஸ்லிம்களின் இரத்தத்தையும் சிந்தச் செய்துவிடாதீர்கள். உங்கள் செயல்களால் ஏற்படப்போகும் இறுதி விளைவைச் சிந்தியுங்கள்.  பொறுமையாக இருங்கள்; எந்தளவுக்கு என்றால் நல்லோர்களின் ஆட்சி வழங்கப்பட்டு நிம்மதி அடையும் வரை அல்லது இறையச்சமற்ற பாவியின் ஆட்சி நீக்கப்பட்டு நிம்மதி அடையும் வரை பொறுமையாக இருங்கள்."

இது விஷயத்தில் இன்னும் நிறைய பேசப்பட்டன. நான் அவற்றை மனனம் செய்யவில்லை. பின்பு அவர்கள் கிளம்பிச் சென்றார்கள். நானும் எனது தந்தையும் அவர்கள் போன பிறகு இமாமவர்களின் அறைக்குள் நுழைந்தோம். இமாம் அஹ்மதிடம் என் தந்தை அப்போது கூறினார்கள்: 'எங்களுக்கும் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் சமூகத்திற்கும் அல்லாஹ்விடம் பாதுகாப்பைக் கேட்டு பிரார்த்தனை செய்கிறோம். (அனைவரும் அல்ல) ஒருவர் செய்வதைக்கூட நான் இந்தச் செயல்பாட்டை (கிளர்ச்சியை) விரும்பவில்லை.'

அடுத்து என் தந்தை, "அபூ அப்துல்லாஹ் (அஹ்மத்) அவர்களே, இதை (இந்தக் கிளர்ச்சிப் போக்கை) நீங்கள் சரியானதாக நினைக்கிறீர்களா?" என்று கேட்டார்.  அதற்கு இமாம் கூறினார்கள்: "இல்லை; இது நபிமொழிகளில் அறிவிக்கப்பட்ட செய்திகளுக்கு முரணாக இருக்கின்றது. பொறுமையைக் கொண்டுதான் நமக்குக் கட்டளை இடப்பட்டுள்ளது."

பின்னர் இமாமவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறியதாக "உன்னை அடித்தாலும் பொறுமையாக இருப்பீராக. இன்னும், பொறுமையாக இருப்பீராக" என்ற நபிமொழியை நினைவுகூர்ந்தார்கள். பொறுமையை ஏவினார்கள். அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் கூறிய ஒன்றை நினைவுகூர்ந்தார்கள். அந்தக் கூற்றுகளை நான் மனனம் செய்யவில்லை. (அல் கல்லால், கிதாபுஸ் ஸுன்னா, 90)

உண்மையில், அரசுக்கு எதிராகத் தங்களுடன் பேசுமாறு ஆதரவு கேட்டு வந்த அறிஞர்களை இமாம் தடுத்தார்கள். என்றாலும், சத்தியத்தைச் சொல்வதில் அவர்கள் பின்வாங்கிவிடவில்லை. இதன் காரணம், இது அரசின் விவகாரம் அல்ல, மார்க்க விவகாரம் என்பதனாலே. அது வேறு; கிளர்ச்சி செய்தல் வேறு. பக்தாதின் ஃபுகஹாக்கள் அரசை எதிர்க்க நினைத்தபோதும் அவர்களுக்கு உபதேசம் செய்து அனுப்புகிறார்கள். அவர்களின் போக்கு நபியவர்களின் கட்டளைக்கு முரணானது என்றும் சொல்கிறார்கள்.

முஃதஸிலாக்களை விட ஜஹ்மியாக்கள் அகீதாவில் மிகவும் வழிகெட்டவர்கள். வாசிக் ஒரு ஜஹ்மியாக இருந்தார். தனது ஆட்சியின்போது மக்களைக் கட்டாயப்படுத்தினார். தனது அகீதாவை யார் ஏற்றவர், யார் ஏற்கவில்லை என்றுகூட சோதிப்பவராக இருந்தார். இந்த அளவுக்கும் இதைவிடவும் அதிகமாக அவர் அநீதி இழைத்த போதிலும் இமாம் அஹ்மத் அவருக்கு எதிராக கிளர்ந்து எழுவதைத் தடுத்தார்.
Previous Post Next Post