அல் குர்ஆனின் வரைவிலக்கணம்


بــــــــــــــــســـــم الله الرحـــــــمــــن الرحـــــــــيــم

الحمد لله رب العالمين والصلاة والسلام على من لا نبي بعده اما بعد

ஏழு வானங்களின் மேல் இருந்து இறக்கப்பட்டது அல்குர்ஆன். அதனை விளங்குவதற்கு மிக அடிப்படையான ஒரு பகுதி, அதன் வரைவிலக்கணத்தை அறிந்து கொள்வதாகும். அல் குர்ஆன் ஒரு வேதமாகும். இது ஏனைய நூல்களைப் போன்று ஒரு சாதாரணமான நூலல்ல. இதனைப் பிரித்துக் காட்டுவதற்கு அஹ்லுஸ்ஸுன்னதி வல் ஜமாஅத்தின் கொள்கையைச் சுமந்த இமாம்கள், அல் குர்ஆனுக்கு ஒரு வரைவிலக்கணத்தைக் கூறி இருக்கிறார்கள்.

அதாவது,

அல் குர்ஆன் அல்லாஹ்வின் பேச்சாகும்.
அது ஒரு படைப்பல்ல.
அது அவனிடமிருந்தே ஆரம்பமானது.
இன்னும் அவனிடமே திரும்பும்.
அல் குர்ஆன் என்பது அல்லாஹ்வின் பேச்சு என்று குறிப்பிட்டுக் காட்டுவதன் காரணம், முஃதஸிலா என்ற வழிகேடான கொள்கையைச் சுமந்தவர்கள் அல்லாஹ்வின் பெயர்களுக்கும், பண்புகளுக்கும் முரண்பட்ட கருத்துகளைக் கூறினார்கள். இவர்கள் கிறிஸ்தவர் யூதர்களின் மார்க்கத்தின் அடிப்படையாக இருக்கும் தர்க்கம் منطق, தத்துவக் கல்வி فلسفة, போன்ற கல்விகளை இஸ்லாத்தினுள் புகுத்தினார்கள்.

இக்கல்விகள் நம்முடைய மார்க்கத்தினுள் புகுந்த பாதிப்பினால் முஃதஸிலா என்ற கூட்டம் உருவாகினது. அவர்கள் அல்லாஹ்வின் பெயர்களையும், பண்புகளையும் விளங்குவதற்கு, தர்க்கத்தினை வழிமுறையாக ஆக்கிக் கொண்டனர். இதன் விளைவாக அவர்களின் புத்திக்கு, எதுவெல்லாம் முரணாகத் தோன்றுகிறதோ, அதனை எல்லாம் மறுக்க ஆரம்பித்தனர். இதனால் ஏற்பட்ட மிக மோசமான பாதிப்புகளில் ஒன்றுதான், இவர்கள் ரப்புல் ஆலமீனான அல்லாஹ்வை தங்களின் புத்தியினாலும், சுய விளக்கங்களாலும் தெரிந்து கொள்வதற்கு முயற்சி செய்தார்கள்.

அல்லாஹு (ஸுப்ஹானஹு வதஆலா) அவனுடைய பண்புகளைக் கொண்டு, அவனைப் பற்றிக் கூறியவற்றை முஃதஸிலிகள் மறுத்துக் கூறினர். மேலும் இவர்களின் அறிஞர்கள் ஒவ்வொருவரும் அல்லாஹ்வை எவ்வாறு விளங்க வேண்டும் என்று பல விளக்கங்களைக் கூறினார்கள்.

இதன் விளைவாக நாம் வணங்கும் அல்லாஹ்வை, இவர்கள் தங்களின் விளக்கங்களைக் கூறி, வேறொரு கடவுளாக உருவாக்கி விட்டார்கள். எந்த ரப்புல் ஆலமீனை நாம் வணங்குகின்றோமோ அந்த ரப்புல் ஆலமீனை இவர்கள் இல்லாமல் ஆக்கி விட்டார்கள். இவர்கள் தங்கள் விளக்கத்தினால் ஒன்றை உருவாக்கி, அதற்கு அல்லாஹ் என்று பெயரைக் கொடுத்து விட்டார்கள்.

இதனைத்தான் இமாம் இப்னுல் கைய்யிம் (ரஹிமஹுல்லாஹ்) கஸீததுந் நூனிய்யா என்ற நூலில் பின்வருமாறு கூறினார்கள்.

 “முஷ்ரிக்குகளோ சிலைகளை வணங்கினார்கள். ஆனால் (தஃவீல்) மாற்றுக் கருத்தைக் கொடுக்கும் முஅவ்விலூன்கள் இல்லாத ஒன்றை வணங்குகிறார்கள்.”
எனவே, இவர்கள் தங்களுடைய சொந்தக் கணிப்பில், கடவுளை உருவாக்குவதற்கு முயற்சி செய்கின்றனர். இதனால், தாங்கள் உருவாக்கிய கடவுளை அல்லாஹ் என்று பெயரைச் சொன்னாலும், அது அல்லாஹ்வாக ஆகாது.

இஸ்லாத்திற்கும், குப்ருக்கும் இடையில் உள்ள ஒரு அடிப்படையான வேறுபாடு என்னவெனில், 'இஸ்லாத்தில் மாத்திரம்தான் இறைவனைப் பற்றி இறைவனே எமக்குச் சொல்லித் தருகிறான்'. அதன் மூலமே நாம் அவனைத் தெரிந்து கொள்கிறோம். ஆனால் ஏனைய மதங்களில், அவர்கள் வணங்கும் கடவுள்களைப் பற்றி, அவர்களே ஒரு விளக்கத்தைக் கொடுத்து, இதுதான் எங்கள் கடவுள் என்று கூறுகிறார்கள். இவ்வாறு, தாங்களே தங்களின் கடவுளுக்கு ஒரு விளக்கத்தை கொடுப்பவர்களுக்கு, இஸ்லாம் தரும் பதில் என்னவெனில், ஒரு மனிதன் கடவுளைப் பற்றிய ரகசியங்கள் அனைத்தையும் தெரிந்து கொள்ள முடியும் என்றால், அந்த மனிதன் கடவுளை விட சக்திய உடையவனாக இருக்க வேண்டும்.

ஒரு மனிதனால் கடவுளின் ரகசியங்களை அறிய முடியும் என்றால், அந்தக் கடவுள் கடவுளாக இருப்பதற்குத் தகுதியற்றதாகும். மற்ற மதத்தவர்கள் கூறும் இதே அடிப்படையில் நாமும், நமது புத்தியினால், இதுதான் எங்கள் இறைவனின் தன்மைகள் என்றும், ரகசியங்கள் என்றும் கூற முடியும் என்று இருந்தால், அந்த இறைவனை விடவும் நாம் அனைத்தையும் அறிந்தவர்கள் என்றுதான் சொல்ல வேண்டும். அவ்வாறு சொன்னால் அதனை விடவும் பெரும் குப்ர் இருக்க முடியாது.

அல்லாஹு (ஸுப்ஹானஹு வ தஆலா) அவனே தன்னை யாரென்று அல் குர்ஆனில் கூறியிருக்கின்றான். இன்னும் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களும் ஸஹீஹான ஹதீஸ்களில் அல்லாஹ்வைப் பற்றிக் கூறி இருக்கிறார்கள். இதனை விட்டு, யாரெல்லாம் தங்களின் தனி வழிமுறையினால் அல்லாஹ்வை உருவாக்க முயற்சி செய்கிறார்களோ, அவர்கள் நிச்சயமாக அல்லாஹ்வை இல்லாமலாக்கி விட்டார்கள்.

வெறுமனே இவர்கள், அல்லாஹ் என்ற பெயரை மட்டுமே உச்சரிப்பார்கள். இதனால் அவர்களின் திசை மாறி அவர்கள் அல்லாஹ்வின் பெயரில் வேறு ஒன்றை வணங்கிக் கொண்டிருப்பார்கள். அதன் காரணமாக அவர்களுடைய பயமும், கீழ்படிதலும் அல்லாஹ்வின் மீது இருக்கவில்லை. அவர்களுடைய செயற்பாடுகளில் அல்லாஹ்வை அஞ்சி நடக்கும் தன்மையை அவர்களின் உள்ளம் உருவாக்கவில்லை. ஏனென்றால், அவர்கள் வணங்குவது அவர்களின் விளக்கத்தினால் உருவாக்கியதொரு கடவுளையே தவிர ரப்புல் ஆலமீனான அல்லாஹ்வையல்ல.

இந்த பித்னா இஸ்லாமிய உம்மத்தில் எப்போது தோற்றம் பெற்றதோ, அப்போதிருந்தே இஸ்லாமிய கல்வி ஒரு விளையாட்டான கல்வியாக மாறிவிட்டது. எனவேதான் அவ்வாறு விளையாடுபவா்கள் முஸ்லிமாக இருந்தும், குர்ஆனின் விடயத்தில் அல்லாஹ்வின் மீது அச்சமின்றிப் பேசுகிறாா்கள். நபிமொழிகளோடு விளையாடுகிறாா்கள். முந்திக் கொண்டு மார்க்கத் தீர்ப்புக் கொடுக்கிறாா்கள். அவனுடைய இஷ்டப் பிரகாரம் ஹராமை ஹலாலாக்குகிறாா்கள். ஹலாலை ஹராமாக்குகிறாா்கள். ஷிர்க்கை தவ்ஹீத் என்று சொல்கிறார்கள். பித்அத்தை சுன்னா என்று சொல்கிறார்கள். இதற்கான காரணம், மார்க்கம் சொல்லித் தந்த வரைவிலக்கணம், அவனுடைய வரைவிலக்கணமாக அமையவில்லை. 

அல்லாஹ்வின் பெயர்களையும், பண்புகளையும் அவனது சுய புத்தியினால் தட்டிவிட்ட பின்னால், அல்லாஹ்வின் சட்டங்களுக்குக் கீழ்படிவது அவனுக்குக் கடமையாகத் தோன்றாது. இந்த பித்னாவில்தான் முஃதஸிலா என்ற கூட்டம் மாட்டிக் கொண்டது. அதாவது அல்லாஹ் தன் பண்புகளாகவும், பெயர்களாகவும் கூறியவற்றை முஃதஸிலாக்கள் மறுத்தார்கள். கோபப்படுகிறான், சூழ்ச்சி செய்கிறான், பேசுகிறான், இறங்குகிறான், உயர்ந்தான் போன்ற அவனது பண்புகளை முஃதஸிலாக்கள் மறுத்து, அதற்கு காரணமும் சொல்லிக் கொண்டார்கள். முஃதஸிலா இப்பண்புகளெல்லாம், பலவீனமான படைப்பினங்களுக்கு உள்ள பண்புகள் என்று சாட்டுகளை கூறி, அல்லாஹ்வுக்கு இப்பண்புகள் இருப்பது சாத்தியம் இல்லை என மறுத்தார்கள்.

மனிதர்களைப் பொருத்த வரை, பேச்சு என்பது ஒருவன் தன் அறிவைப் பயன்படுத்தி, சிந்தித்து, நாவைப் பிரயோகித்து உச்சரிப்பதைத்தான் பேச்சு என்று நாம் சொல்கிறோம். பேச்சு என்பது அல்லாஹ்வின் பண்புகளில் ஒன்றாகும். அல் குர்ஆனிலும், ஹதீஸிலும் அல்லாஹ் பேசினான் என்று வந்துள்ளவற்றுக்கு முஃதஸிலாக்கள் ஒரு விளக்கத்தைக் கொடுத்தார்கள்.

 முஃதஸிலாக்களின் வாதம் என்னவெனில், அல்லாஹ் பேசுகிறான் என்றால்,

அவனுக்கு நாவிருக்கிறதா?
அவனும் அறிவினால் சிந்தித்து நாவைப் பிரயோகித்து உச்சரிக்கிறானா?
போன்ற கேள்விகளைப் கேட்டு, படைப்பினங்களின் இந்தப் பண்புகள் அல்லாஹ்வுக்கு இருக்க முடியாது என்று கூறி, அல்லாஹ் பேச மாட்டான் என மறுத்தார்கள். எனவே அல் குர்ஆன் அல்லாஹ்வின் பேச்சல்ல என்று கூறினார்கள். இந்த வழிகேட்டுக்கு அடிப்படைக் காரணம், அவர்கள் அல்லாஹ்வின் பண்பையும், படைப்பினங்களின் பண்பையும் சமமாகக் கருதியதுதான்.

அல்லாஹு ஸுப்ஹானஹு வ தஆலா அஷ்ஷுறா என்ற அத்தியாயத்தில் கூறுகிறான்,

لَيْسَ كَمِثْلِهِ شَيْءٌ وَهُوَ السَّمِيْعُ البّصِير

அவனைப் போன்று எப்பொருளும் இல்லை. அவன் அனைத்தையும் செவியேற்பவனும் அனைத்தையும் காண்பவனுமாவான். (அஷ் ஷுறா :11)

அவனைப் போன்று எதுவுமில்லை என்றால், நாம் எவ்வாறு எமது செயலையும், அல்லாஹ்வின் செயலையும் ஒரே தன்மை கொண்டதாகக் கருத முடியும்?

அல்லாஹ்வுக்கு உள்ள பெயர்களும், பண்புகளும் அவனுக்கு மாத்திரமே தனித்துவமானவையாகும்.
முஃதஸிலாக்களின் இந்த பித்னாவில்தான், தென் இந்தியாவைச் சேர்ந்த பி. ஜே. என்பவரும் மாட்டிக் கொண்டார். அல்லாஹ்வின் பண்புகளை மறுக்கும் போக்கு இவரிடமும் இருக்கிறது. தவ்ஹீதைப் பிரச்சாரம் செய்கிறேன் என்று முன்வந்து, இறுதியில் அல்லாஹ்வின் பண்புகளுக்கு மாற்றுக் கருத்தைக் கூறி மறுக்கும் போக்கைக் கையாண்டு, தவ்ஹீதை நிலைநாட்ட வந்தவர் குப்ரைப் பிரச்சாரம் செய்கிறார்.

அல்லாஹ்வின் மீதான நம்பிக்கையில், வழிகேடான கருத்துகளைப் புகுத்தி, நம்பிக்கையைக் குழப்பிவிட்ட முஃதஸிலாக்களின் நோயினால் இந்த இஸ்லாமிய உம்மத் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. முஃதஸிலாக்கள் அல்லாஹ்வின் பண்புகளை மறுத்தார்கள். அதனால்தான், அல்லாஹ்வின் பேச்சு என்ற பண்பையும் மறுத்தார்கள். இதன் காரணமாக அல் குர்ஆன் அல்லாஹ்வின் பேச்சல்ல என்றும், அதனை அல்லாஹ் ஒரு படைப்பாகவே அவனது தூதருக்கு அனுப்பினான் என்றும் இவர்கள் தங்களின் விளக்கத்தைக் கொடுத்தார்கள்.

இந்த வழிகேடான கருத்து வெளிவந்த போது உடனே உலமாஉல் முஸ்லிமீன் இதற்கு மறுப்பாக பதில் கொடுத்தார்கள். அல் குர்ஆன் படைப்பல்ல என்றும், அது அல்லாஹ்வின் பேச்சு என்றும் அவ்வறிஞர்கள் கூறினார்கள்.

அல்லாஹ்வே மிக அறிந்தவன்.

-ஷெய்க் யஹ்யா ஸில்மி ஹபிழஹுல்லாஹ்

Previous Post Next Post