ஸஹாபாக்களின் வழிமுறையை பின்பற்றுதல்


எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே. ஸலவாத்தும், ஸலாமும் அகிலத்திற்கு அருட்கொடையாக வந்த எங்கள் உயிரிலும் மேலான இறுதித் தூதர் முஹம்மத் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் மீது உண்டாவதாக.

முஸ்லிம்கள், வழிகேட்டில் சிக்கிக் கொள்வதன் அடிப்படைக் காரணங்களில் ஒன்றுதான் வழிகேடு என்றால், என்னவென்பதை அறியாமல் இருப்பதாகும்.

வழிகேடு என்பதன் மிகச் சரியான வரைவிலக்கணம் என்னவெனில்,

"அல்லாஹ்வினாலும், அவனது தூதரினாலும் எந்தப் பாதை நேரான பாதையென்று காட்டித் தரப்பட்டிருக்கிறதோ, அந்தப் பாதையை விட்டும் வேறு திசையில் செல்வது வழிகேடாகும்".
இஸ்லாத்தில் உள்ள அனைத்து அம்சங்களையும், எமக்கு முன்னால் இந்த பூமியில், ஒரு சமூகம் பரிபூரணமாகப் நடைமுறைப்படுத்திச் சென்றிருக்கிறது. அவர்கள்தான், அல்லாஹ்வின் தூதருடைய தோழர்களான ஸஹாபா றிழ்வானுல்லாஹி அலைஹிம் அஜ்மஈன். அவர்களுக்கு மார்க்கத்தின் கொள்கையையும், சட்டதிட்டங்களைக் கற்றுக் கொடுத்து, பயிற்சியளித்த ஆசான் அகிலத்திற்கு அருட்கொடையாக வந்த அல்லாஹ்வின் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள்தான்.

அனைத்து மனிதர்களில் சிறந்தவரும், நபிமார்களின் தலைவருமான றஸுலுல்லாஹ்வின் தோழர்களாக, அந்த ஸஹாபாக்களை அல்லாஹ் தேர்ந்தெடுத்தான். மார்க்கத்தின் அனைத்து அம்சங்களிலும் எவ்வாறு இறைவனுக்கும், இறைத் தூதருக்கும் கீழ்படிந்து நடக்க வேண்டும் என்று கியாமத் வரையுள்ள அனைத்து மனிதர்களுக்கும், ஒரு முன்மாதிரியாக அந்த ஸஹாபாக்களின் சமூகத்தை அல்லாஹ் அமைத்தான். அந்த ஸஹாபாக்களின் சமூகம் எவ்வாறு மார்க்கத்தை நிலைநாட்டி நடைமுறைப்படுத்தினார்கள் என்று கவனிக்க வேண்டியது நேர்வழியின் அடிப்படையாகவும், பின்னால் வருகின்ற அனைத்து முஸ்லிம்களுக்கும் கடமையாகவும் அல்லாஹ் ஏற்படுத்தினான்.

இந்த உண்மையை அறிந்திருந்த அல்லாஹ்வின் அருள் பெற்ற அனைத்து அறிஞர்களும் ஸஹாபாக்களின் விளக்கத்தையும், பாதையையும் தங்களின் மார்க்கத்தின் வழிமுறையாக ஆக்கிக் கொண்டார்கள். இவர்களுக்கு மாறாக, தங்கள் மனோ இச்சையைப் பின்பற்றி ஷைத்தானால் தீண்டப்பட்டவர்கள், ஸஹாபாக்களின் பாதையை விட்டும் விலகி வழிகேட்டில் வெகுதூரம் சென்றுவிட்டார்கள். இவர்கள் ஹவாரிஜ், ரவாபித், கதரிய்யா ஜபரிய்யா, முர்ஜிஆ, முஃதஸிலா போன்ற வழிகேடான கொள்கைக்குள் சிக்கிக் கொண்டார்கள். நபிகளாரின் மறைவுக்குப் பின்னால், இந்த உம்மத்தினுள் உருவாகி வந்த இந்த வழிகேடுகள், இன்று இயக்கங்களின் பெயரில் பரிணாமம் எடுத்து முஸ்லிம் சமூகத்தினுள் வாழ்ந்து வருகின்றன. ஒவ்வொரு இயக்கமும் ஒரு தனிமனிதனின் சிந்தனையின் வெளிப்பாடாக உருவானவையே. தனிவழி ஒருபோதும் நபிவழியாகாது. நபிவழிதான் நம்வழியாக வேண்டும்.

இந்த வழிகேடுகள் எத்தனை இருந்தபோதும், வரலாறு நெடுகிலும் ஸஹாபாக்களின் பாதையில், சத்தியத்தை சுமந்த கூட்டம் சிறு கூட்டமாகவேனும் உயிரோடு நிமிர்ந்து நிற்கிறது. அவர்கள் தாங்கள் சுன்னாவிலும், ஸஹாபாக்களின் பாதையிலும் இருப்பதை அடையாளம் காட்டும் வகையில் தங்களை அஹ்லுஸ்ஸுன்னா வல் ஜமாஆ என்று அழைத்துக் கொண்டார்கள்.

அதாவது,

சுன்னா என்றால், நபிகளாரின் வழிமுறை என்று பொருள். அல் ஜமாஅத் என்றால், நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் எந்த ஜமாஅத்தை அல்லது கூட்டத்தை உருவாக்கினார்களோ அந்த ஸஹாபாக்கள்தான் அந்த அல் ஜமாஅத். நபிவழியிலும், ஸஹாபாக்களின் பாதையிலும் செல்பவர்களே அஹ்லுஸ்ஸுன்னா வல் ஜமாஆ என்ற கூட்டத்தினர்.
இந்தக் கூட்டம், வரலாற்றில் அஹ்லுல் ஹதீஸ் என்ற பெயரிலும், அஹ்லுல் ஹதீஸி வல் அஸர் என்ற பெயரிலும் அழைக்கப்பட்டிருக்கிறார்கள். சிலர் தங்களை ஸலபிகள் என்று அழைத்துக் கொண்டார்கள்.

ஸலபி என்ற சொற்பிரயோகம் பயன்படுத்தப்பட்ட காரணம் என்னவெனில், வரலாற்றில் அஹ்லுஸ்ஸுன்னாவின் அறிஞர்கள் ஸஹாபாக்களை ஸலப் (முன்னோர்) என்று அழைப்பது, இன்று வரை வழக்கத்தில் இருந்து வருகிறது. நிச்சயமாக ஒரு முஸ்லிமின் சிறந்த முன்னோர்கள் ஸஹாபாக்கள்தான். அந்த ஸலப்களின் பாதையில் இருப்பதை அடையாளம் காட்டவே, ஸலபி என்ற சொற்பிரயோகத்தை அறிஞர்கள் பாவிக்கிறார்கள்.

நிச்சயமாக, சத்தியத்தைக் கொண்டுதான் மனிதர்கள் அறியப்பட வேண்டும். மனிதர்களைக் கொண்டு சத்தியம் அடையாளம் காணப்படுவதில்லை.
அஹ்லுஸ்ஸுன்னா வல் ஜமாஅத்துக்கும், ஏனைய அனைத்து இயக்கங்களுக்கும் இடையிலுள்ள வேறுபாடு என்னவெனில் இயக்கங்கள் ஒவ்வொன்றும், அதனை ஸ்தாபித்த தலைவர் ஒருவரின் வழிகாட்டுதலின் அடிப்படையையே தங்களின் பாதையாக அமைத்துக் கொண்டுள்ளன. உதாரணமாகக் கூறுவதென்றால், இன்று தவ்ஹீத் ஜமாஅத் என்ற பெயரில் இயங்கும் இயக்கங்கள், முஃதஸிலா என்ற வழிகெட்ட கொள்கையையுடைய P.ஜெய்னுல் ஆபிதீன் என்பவரால் ஆரம்பிக்கப்பட்டதாகும்.

எனவே இந்த இயக்கத்தின் அனைத்து செயற்பாடுகளும் P.ஜெய்னுல் ஆபிதீன் என்ற அவ்வியக்கத்தின் தலைவரின் வழிகாட்டுதல்களின் அடிப்படையில்தான் அமைந்திருக்கும். இதே அடிப்படையில் அஷ்அரிய்யா என்ற வழிகெட்ட கொள்கையைச் சுமந்த அபுல் அஃலா மௌதூதி என்பவரால் ஜமாஅதே இஸ்லாமி என்ற இயக்கம் ஆரம்பிக்கப்பட்டது. இதே போன்று இல்யாஸ் ஹான்தலவி என்பவரால் தப்லீக் ஜமாஅத் என்ற இயக்கம் நிருவப்பட்டது. இதுதான் இயக்கங்கள் அனைத்தும் உருவானதன் அடிப்படையாகும். ஆனால் இதற்கு மாறாக அஹ்லுஸ்ஸுன்னா வல் ஜமாஆவின் தலைவர் றஸுலுல்லாஹ்வைத் தவிர வேறு யாராகவும் இருக்க முடியாது.

யாரெல்லாம் அல் குர்ஆனையும், அஸ்ஸுன்னாவையும் ஸஹாபாக்களின் சமூகம் விளங்கி நடைமுறைப்படுத்திய பிரகாரம் தாங்களும் விளங்கி செயற்படுகிறார்களோ அவர்கள் கூட்டமாக வாழ்ந்தாலும், தனி மனிதனாக வாழ்ந்தாலும் அவர்கள் அஹ்லுஸ்ஸுன்னா வல் ஜமாஆவின் பாதையில் இருப்பவர்களாவர். எனவே ஸஹாபாக்களின் முன்மாதிரியை அடிப்படையாகக் கொண்டுதான் எவ்வாறு அல் குர்ஆனை விளங்க வேண்டுமென்பதும், நபியைப் பின்பற்ற வேண்டுமென்பதும் இஸ்லாத்தில் நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. இதனைத்தான் எமக்கு அல் குர்ஆன் வசனங்களும் நபிமொழிகளும் தெட்டத் தெளிவாக வழிகாட்டுகின்றன.

அல்லாஹ் கூறுகிறான்,

فَاِنْ اٰمَنُوْا بِمِثْلِ مَآ اٰمَنْتُمْ بِهٖ فَقَدِ اهْتَدَوْا ‌ۚ وَاِنْ تَوَلَّوْا فَاِنَّمَا هُمْ فِىْ شِقَاقٍ‌ ۚ فَسَيَكْفِيْکَهُمُ اللّٰهُ ‌ۚ وَهُوَ السَّمِيْعُ الْعَلِيْمُؕ‏

நீங்கள் ஈமான் கொண்டது போன்று அவர்களும் ஈமான் கொண்டால் அவர்கள் நேர்வழி அடைவார்கள். அவர்கள் புறக்கணித்து விட்டால் நிச்சயமாக அவர்கள் பிரிவில்தான் இருக்கிறார்கள். அவர்களைப் பற்றி உங்களுக்கு அல்லாஹ் போதுமானவன். அவன் செவியேற்கின்றவன். மிக்க அறிந்தவன். (அல் பகரா : 137)

மேற்கூறிய இறைவசனத்தில், 'நீங்கள் ஈமான் கொண்டது போல்' என்று அல்லாஹ் விளித்துக் கூறுவது றஸுலுல்லாஹ்வையும், ஸஹாபாக்களையும் தவிர வேரெவரையுமல்ல.

ஈமான் என்பது உள்ளத்தால் நம்புவதும், நாவால் மொழிவதும், உடலுருப்புகளால் செயற்படுத்துவதுமாகும்.
எனவே ஸஹாபாக்கள் நம்பிக்கை கொண்டது போன்றும், அவர்கள் சொன்னது போன்றும், அவர்கள் செயற்பட்டது போன்றும் எமது காரியங்களை அமைத்துக் கொள்வதுதான், அந்த ஸஹாபாக்கள் ஈமான் கொண்டது போல் நாமும் ஈமான் கொண்டதாக அமையும். அதுவே நேர்வழியின் அடிப்படையாகும். அதன்பால்தான் அல்லாஹ் வழிகாட்டுகின்றான். எனவே ஸஹாபாக்களுக்குப் பின்னால் கியாமத் வரை வருகின்ற அனைத்து மனிதர்களுக்கும் அன்று றஸுலுல்லாஹ்வும், ஸஹாபாக்களும் எவ்வாறு செயற்பட்டார்களோ, அவ்வாறு செயற்படுவதுதான் அவர்கள் நேர்வழியில் இருப்பதற்கு உத்தரவாதமாகும். அதனைப் புறக்கணித்து ஒரு சாணளவு தூரமானாலும், அவர்கள் ஒரு பிரிவை உருவாக்கி நேர்வழியை விட்டும் பிரிந்து சென்று விடுவார்கள். 

மேலும் அல்லாஹ் கூறுகிறான்,

وَمَنْ يُّشَاقِقِ الرَّسُوْلَ مِنْۢ بَعْدِ مَا تَبَيَّنَ لَـهُ الْهُدٰى وَ يَـتَّبِعْ غَيْرَ سَبِيْلِ الْمُؤْمِنِيْنَ نُوَلِّهٖ مَا تَوَلّٰى وَنُصْلِهٖ جَهَـنَّمَ‌ ؕ وَسَآءَتْ مَصِيْرًا

இன்னும் நேரான வழி இன்னதென்று தனக்குத் தெளிவானதன் பின்னர், எவர் இத்தூதரை விட்டும் பிரிந்து விசுவாசிகளின் (அல் முஃமினீன்களின்) வழியல்லாத (வேறு) வழிகளைப் பின்பற்றுகிறாரோ, அவரை நாம் அவர் திரும்பிய வழியிலேயே திருப்பிவிடுவோம். அவரை நரகத்தில் புகுத்தி விடுவோம். அது சென்றடையுமிடத்தில் மிகக் கெட்டது. (அன்னிஸா : 115)

இவ்விறை வசனத்தில்,

அல்லாஹ் 'விசுவாசிகளின் (அல் முஃமினீன்களின்) வழி' என்று குறிப்பிட்டுக் கூறுவது ஸஹாபாக்களையேயாகும். அது ஸஹாபாக்களாக இருக்காவிட்டால், அது வேறு யாராகவும் இருப்பதற்குத் தகுதியில்லை என்று இமாம் இப்னு தைமிய்யா (றஹிமஹுல்லாஹ்) கூறுகிறார்கள்.
இங்கு அல்லாஹ்வின் வாக்கு தெளிவாகக் கூறுவது என்னவெனில், அதாவது தூதரை விட்டும் பிரிந்து செல்வதென்றால், அது அல் முஃமினீன்கள் என்ற ஸஹாபாக்களின் பாதையல்லாத ஏனைய பாதைகளில் செல்வதாகும். அது நம்மை நரகத்திற்கே இட்டுச் செல்லும். ஸஹாபாக்களின் விளக்கமல்லாத ஏனைய விளக்கங்கள் அனைத்தும் வழிகேடுகளென்பது இரு கருத்துக்குரிய விடயமல்ல.

மேலும் அல்லாஹ் கூறுகின்றான்,

 وَالسّٰبِقُوْنَ الْاَوَّلُوْنَ مِنَ الْمُهٰجِرِيْنَ وَالْاَنْصَارِ وَالَّذِيْنَ اتَّبَعُوْهُمْ بِاِحْسَانٍ ۙ رَّضِىَ اللّٰهُ عَنْهُمْ وَرَضُوْا عَنْهُ

முஹாஜிர்களிலும் அன்ஸார்களிலும் எவர்கள் முந்திக் கொண்டார்களோ அவர்களையும் அவர்களை நல்ல முறையில் பின்பற்றியவர்களையும் பற்றி அல்லாஹ் திருப்தியடைந்தான். அவர்களும் அல்லாஹ்வைப் பற்றி திருப்தியடைந்தார்கள். (அத்தவ்பா : 100)

இந்த இறைவசனத்தில், அல்லாஹ் எமக்கு அவனுடைய திருப்தியைப் பெறும் வழிமுறையைக் காட்டித் தருகின்றான். எந்த சமூகத்தின் மீது திருப்தியடைந்தானோ அந்த ஸஹாபாக்களின் சமூகத்தைப் பற்றி, உள்ளத்தில் எந்தவொரு தப்பான எண்ணமும் கொள்ளாமல், இஹ்ஸானோடு நல்ல முறையில் அவர்களைப் பின்பற்றுமாறும், அதன் மூலம் அவ்வாறு பின்பற்றுபவர்களைப் திருப்தியடைவதாக வெளிப்படையாகவும், தெளிவான வார்த்தைகளிலும் அல்லாஹ் கூறிவிட்டான்.

ஸஹாபாக்களின் பின் வருகின்றவர்கள் அவர்களைப் பற்றி எந்தவித தப்பெண்ணமும், குரோதமும் கொள்ளக் கூடாது என்பதற்கு அல்லாஹ் அல் குர்ஆனின் மற்றுமொரு இடத்தில் எடுத்துக் காட்டுகின்றான். ஹஷ்ர் என்ற அத்தியாயத்தில் 8 முதல் 10 வரையான வசனங்களில் முஹாஜிர்களையும், அன்ஸார்களையும் பற்றிக் கூறிவிட்டு, அதனைத் தொடர்ந்து அவர்களின் பின் வருகின்றவர்கள் அந்த ஸஹாபாக்களோடு எவ்வாறு நடந்து கொள்வார்கள் என்பதையும் பின்வருமாறு அல்லாஹ் கூறிக் காட்டுகின்றான்.

اَلَمْ تَرَ اِلَى الَّذِيْنَ نَافَقُوْا يَقُوْلُوْنَ لِاِخْوَانِهِمُ الَّذِيْنَ كَفَرُوْا مِنْ اَهْلِ الْكِتٰبِ لَٮِٕنْ اُخْرِجْتُمْ لَنَخْرُجَنَّ مَعَكُمْ وَلَا نُطِيْعُ فِيْكُمْ اَحَدًا اَبَدًاۙ وَّاِنْ قُوْتِلْتُمْ لَـنَـنْصُرَنَّكُمْ ؕ وَاللّٰهُ يَشْهَدُ اِنَّهُمْ لَـكٰذِبُوْنَ‏

மேலும் அவர்களுக்குப் பின் வந்தார்களே அத்தகையவர்கள் 'எங்கள் இரட்சகனே! எங்களையும் விசுவாசம் கொள்வதில் எங்களை முந்திக் கொண்டார்களே அத்தகைய எங்கள் ககோதரர்களையும் நீ மன்னித்தருள்வாயாக! விசுவாசம் கொண்டவர்களைப் பற்றி எங்களுடைய இதயங்களில் வெறுப்பை ஆக்காதிருப்பாயாக! எங்கள் இரட்சகனே! நிச்சயமாக நீ மிக்க இரக்கமுடையவன். மிகக் கருணையுடையவன் என்று கூறுவார்கள். (அல் ஹஷ்ர் : 10)

இந்த வசனத்தின் அடிப்படையில் ஸஹாபாக்களுக்குப் பின்வருபவர்களின் கடமை, அந்த ஸஹாபாக்களுக்காகப் பிரார்த்திப்பதாகும். ஸஹாபாக்களைக் குறைகூறிக்கெண்டு அவர்களைப் பற்றிய தப்பெண்ணத்துடனும், வெறுப்புடனும் இருப்பது நேர்வழியை விட்டு தூரமாகிச் சென்றுவிட்ட பித்அத்வாதிகளினதும், முனாபிக்குகளினதும், ஸின்தீக்குகளினதும் பண்பாகும். எனவேதான் ஸஹாபாக்களை நாம் பின்தொடர்வதற்கு முன், அவர்களின் விடயத்தில் எமது உள்ளத்தை நாம் தூய்மையாக வைத்திருக்க வேண்டும். இதன் அடிப்படையில் எங்கள் ஸலப்களான (முன்னோர்களான) ஸஹாபாக்களின் வழிமுறையைத் தவிரவுள்ள ஏனைய அனைத்துப் பாதைகளை விட்டும் நாம் தவிர்ந்திருக்க வேண்டும்.

மார்க்க விசயத்தில், அன்று ஸஹாபாக்கள் விளங்காத ஒன்றை இன்று நாம் புதிதாக விளங்கியிருந்தால் அது அன்று இருக்காததும், இன்று உருவானதுமான புதிய விளக்கமாகும். எல்லா புதிய விடயங்களும் பித்அத்களாகும். எல்லா பித்அத்களும் வழிகேடுகளாகும்.

அனஸ் இப்னு மாலிக் (றழியல்லாஹு அன்ஹு) அறிவிக்கிறார்கள்,நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறியதாக,

எனது உம்மத் 73 கூட்டமாகப் பிரியும். ஒன்றைத் தவிர, அனைத்தும் நரகம் செல்லும். அந்தக் கூட்டம் யாரைன்று கேட்கப்பட்போது (நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள், இன்று நானும் எனது தோழர்களும் எதன் மீதிருக்கின்றோமோ அதில் இருப்பவர்கள். (திர்மிதி, ஹாகிம் இன்னும் ஏனைய நூல்கள்)

மற்றுமொரு அறிவிப்பில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் அதுதான் அல் ஜமாஅத்

இந்நபிமொழி முன்னர் குறிப்பிடப்பட்ட அல் குர்ஆன் வசனங்களின் கட்டளையை தெளிவாக நபிகளாரின் வார்த்தைகளினால் எடுத்துக் காட்டுகிறது. அல் ஜமாஅத் என்பது நாம் ஒரு ஜமாஅத்தை அல்லது இயக்கத்தை உருவாக்கிவிட்டு, இவ்வாறு இருக்கும் படிதான் றஸுலுல்லாஹ் கூறியிருக்கிறார்கள் என்று கூறுவதால் அது றஸுலுல்லாஹ் கூறிய அல் ஜமாஅத்துடன் சேர்ந்திருப்பதாக அமையாது. மாறாக அல் ஜமாஅத்துடன் இணைந்திருப்பது என்பதன் பொருள் என்னவெனில் றஸுலுல்லாஹ்வும், ஸஹாபாக்களும் இருந்த அந்த சத்தியத்துடன் இணைந்திருப்பதாகும். ஒருவர் தனி மனிதனாக அக்கொள்கையில் வாழ்ந்தாலும் அவர் அல் ஜமாஅத்துடன் இணைந்தே இருக்கிறார்.

இமாம் அபூ அப்துல்லாஹ் மாலிக் இப்னு அனஸ் (றஹிமஹுல்லாஹ்) கூறுகிறார்:

இந்த சமுதாயத்தின் ஆரம்பத்தில் உள்ளவர்கள் எதனால் சீரடைந்தார்களோ அதனைக் கடைபிடிப்பதன் மூலமே இந்த சமுதாயத்தின் கடைசியில் உள்ளவர்களும் சீரடைய முடியும்.

இமாம் அபூ அப்துல்லாஹ் அஹ்மத் இப்னு ஹம்பல் (றஹிமஹுல்லாஹ்) கூறுகிறார்:

எங்களிடத்தில் சுன்னாவின் அடிப்படை என்பது ஸஹாபாக்கள் எதில் இருந்தார்களோ அதனைப் பற்றிப் பிடிப்பதும் அவர்களை நாம் பின்பற்றுவதற்கு முன்மாதிரியாக எடுப்பதும் பித்அத்களைத் தவிர்ந்து கொள்வதுமாகும். ஏனெனில் எல்லா பித்அத்களும் வழிகேடாகும்.

இமாம் அப்துர்ரஹ்மான் இப்னு அம்ர் அல் அவ்ஸாயி (றஹிமஹுல்லாஹ்) கூறுகிறார்:

நீங்கள் ஸலப்களின் அறிவித்தல்களைப் பற்றிக் கொள்ளுங்கள். மக்கள் உங்களை எதிர்த்தாலும் சரியே. மக்களின் வார்த்தைகளில் எச்சரிக்கையோடு இருங்கள். அதனை அவர்கள் வார்த்தைகளால் அலங்காரமாகக் காட்டினாலும் சரியே.

இதுவரை நாம் பார்த்த அல் குர்ஆன் ஆயத்களும், ஹதீஸ்களும், அறிஞர்களின் வார்த்தைகளும் எமக்குத் தெளிவாக எடுத்துக் காட்டுவது என்னவெனில்,

கியாமத் வரை வருகின்ற அனைத்து முஸ்லிம்களுக்கும் இருக்கும் ஒரே கடமை, அன்று றஸுலுல்லாஹ்வும், ஸஹாபாக்களும் எவ்வாறு இந்த மார்க்கத்தை எடுத்து நடந்தார்கள் என்பதை அறிந்து கொள்வதும், அதன் படி தமது வாழ்வை அமைத்துக் கொள்வதுமாகும்.
பூரணத்துவப்படுத்தப்பட்ட மார்க்கத்தைப் பின்பற்றுவதே எம்மீதுள்ள கடமையே தவிர, பின்பற்றுவதற்குப் புதிதாக ஒரு வழிமுறையை உருவாக்குவதல்ல. இயக்கங்கள் ஒவ்வொன்றும் தங்களுக்கென ஒரு தனிவழியை உருவாக்கிவிட்டு, அப்பாவி மக்களிடம் இதுதான் மார்க்கமென்று காட்டுவதால், மக்கள் யாரின் பின்னால் செல்வதென்று தெரியாமல் குழம்பிப்போயுள்ளனர். தனிமனித உருவாக்கமான வழிகெட்ட இவ்வியக்கங்களில் தமிழுலகிற்கு அறிமுகமான சில இயக்கங்களான தப்லீக் ஜமாஅத், ஜமாஅதே இஸ்லாமி, தவ்ஹீத் ஜமாஅத், இஹ்வானுல் முஸ்லிமீன் போன்றவை பிரபலமானவை. இவை அனைத்தை விட்டும் முஸ்லிம்கள் தவிர்ந்து கொள்ள வேண்டும். எந்த அறிஞர்கள் அஹ்லுஸ்ஸுன்னாவைச் சேர்ந்தவர்களாக இருக்கிறார்களோ, அவர்களை மக்கள் அடையாளம் கண்டு அவர்களிடம் நெருங்குவதற்கும், வழிகேட்டிலிருந்து தூரமாகுவதற்கும் முயற்சி செய்ய வேண்டும்.

அல்லாஹ் மிக அறிந்தவன்.

-அஷ்ஷெய்க் அபூ அப்திர் ரஹ்மான் யஹ்யா ஸில்மி ஹபிழஹுல்லாஹ்
Previous Post Next Post