-By மௌலவி யூனுஸ் தப்ரீஸ் சத்தியக் குரல் ஆசிரியர்-
சுகயீனம் காரணமாக அல்லது பெண்கள் மாதவிடாய் காலத்தில் விட்ட நோன்புகளை நிறைவேற்றுவதற்கு முன்பே மரணித்து விட்டால் அவரது குடும்பத்தை சாரந்தவர்கள் அந்த நோன்பை தாராளமாக நிறைவேற்ற நபியவர்கள் அனுமதியளிக்கிறார்கள்.
“இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு பெண்மணி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, “என் தாயாருக்கு ஒரு மாத நோன்பு கடமையிருந்த நிலையில் இறந்துவிட்டார். (அவர் சார்பாக நான் நோன்பு நோற்கலாமா?)” என்று கேட்டார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அவர் மீது கடன் ஏதும் இருந்தால் அதை நீ நிறைவேற்றுவாய் அல்லவா?” என்று கேட்டார்கள். அதற்கு அவர் “ஆம்” என்றார். “அவ்வாறாயின், நிறைவேற்றுவதற்கு மிகவும் தகுதிவாய்ந்தது அல்லாஹ்வின் கடனே” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.(முஸ்லிம் 2109)
“இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, “அல்லாஹ்வின் தூதரே! ஒருமாத நோன்பு கடமையிருந்த நிலையில் என் தாயார் இறந்துவிட்டார். அதை அவர் சார்பாக நான் நிறைவேற்றலாமா?” என்று கேட்டார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “உன் தாயார்மீது கடனேதும் இருந்தால், அவர் சார்பாக அதை நீ நிறைவேற்றுவாயா?” என்று கேட்டார்கள். அவர் “ஆம்” என்றார். “அவ்வாறாயின், நிறைவேற்றப்படுவதற்கு மிகவும் தகுதி வாய்ந்தது அல்லாஹ்வின் கடனே” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம் 2110)
எனவே ரமலான் காலத்தில் எத்தனை நோன்புகள் எனக்கு பிடிக்க முடியாமல் போய் விட்டது என்பதை தனது வீட்டார்களுக்கு தெரியப் படுத்தியிருக்க வேண்டும். அல்லது டயரி போன்ற ஏதாவது முக்கியமான ஒன்றில் எழுதி வைத்திருக்க வேண்டும். ஏன் ஏன்றால் சில நேரங்களில் அல்லாஹ்வின் ஏற்பாட்டின் படி மரணம் வந்து விட்டது என்றால் நாம் களா செய்ய இருந்த நோன்பை (விடுபட்ட நோன்பை) நமது குடும்ப உறவுகள் நிறைவேற்றுவார்கள். அது ஏற்றுக் கொள்ளப்படுவதோடு, அதன் நன்மைகளும் நமது கப்ருக்கு வந்து சேரும். இந்த விவகாரத்தில் சரியான முறையில் நாம் நடந்து கொள்ள வேண்டும்.