மனித மனங்களில் தாக்கத்தை ஏற்படுத்தி அவர்களின் பிரியத்தை அடைவதற்கான வழிகள் குறித்து இத்தொடரில் பார்த்து வருகிறோம். அவற்றில் மூன்றாவது, பிறரிடம் பேசும் போது அவர்கள் பேசுவதை காது தாழ்த்தியும், கவனத்துடனும் கேட்பது. அத்துடன் அவர்கள் பேசும் செய்தியை இடையில் துண்டித்து விடாமல் அவர்களை முழுமையாக பேச விட வேண்டும்.
நாம் ஒருவரின் உரையாடலில் கவனம் செலுத்துகிறோம் என்றால் அவருடைய பேச்சுக்கு தகுந்தவாறு தேவையான இடங்களில் ஆம் என்றோ இல்லை என்றோ கூற வேண்டும். அல்லது ம்.. ம்.. ம்.. என்று அவரது பேச்சுடன் தொடர்பில் இருக்க வேண்டும்.
அத்துடன் அவர் சொல்லும் செய்திகளுக்கு ஏற்ப நமது முகபாவனையும் மாறிக் கொண்டிருக்க வேண்டும்.
இவ்வாறு நடந்து கொள்வதன் மூலம் நம்மிடம் பேசுபவர் நாம் அவருடைய பேச்சுக்கு முக்கியத்துவம் கொடுப்பதாகவும் நாம் அவரை மதிப்பாகவும் அவர் உணர்வார்.
இதனைத் தொடர்ந்து அவர் நம்மை நேசிக்கவும் ஆரம்பிப்பார். தனக்கு முக்கியத்துவம் கொடுப்பவர் மீது பற்றும் பாசமும் கொள்வது மனித இயல்பு. நாம் முக்கியத்துவம் பெற வேண்டுமென்றால் முக்கியத்துவம் கொடுப்பவராக வேண்டும்.
ஒவ்வொருவருக்கும் அவரவருடைய கருத்துக்களும் உணர்வுகளும் முக்கியமானவை. அந்த முக்கியமானவற்றை அவர்கள் வெளிப்படுத்தும் போது நாம் அதில் ஈடுபாடு காட்டாவிட்டால் அவர்கள் நம்மிடமிருந்து விலகிச் செல்லும் வாய்ப்பாக அது அமைந்து விடும்.
ஒருவர் பேசுவதை கவனமே இல்லாமல் கேட்டுக் கொண்டிருப்பது ஒரு தவறான அணுகுமுறை.
அதேபோல், ஒருவர் மற்றொருவர் பேசும்போது அவர் சொல்ல வருவதை முழுமையாகச் சொல்ல விடாமல் இடைமறித்துப் பேசுவது ஒரு கெட்ட பழக்கம்.
அடுத்தவர் பேச்சுக்கு தகுந்த மதிப்பளிக்கத் தெரியாததுதான் இந்த விரும்பத்தகாத நடைமுறைக்குக் காரணம்.
நாம் ஒருவரிடம் பேசும்போது, நாம் சொல்லப் போவதை சொல்ல விடாமல் துண்டித்துப் பேசுபவரை நாம் விரும்புவதில்லை. இப்படித்தான் நம் விசயத்தில் மற்றவர்களின் நிலையும்!
பேசி முடித்து விட்டீரா?
எல்லா நன்மையிலும் முன்மாதிரியாக திகழும் அண்ணல் நபி (ஸல்) அவர்கள் பிறர் பேசுவதை காது கொடுத்து கவனத்துடன் கேட்கும் நல்ல நடைமுறைக்கும் முன்மாதிரியாகத் திகழ்கிறார்கள்.
மக்கா வாழ்க்கையில் கடுமையான தொல்லைகளுக்கு பின்னரும் நபியும் அவர்களின் தோழர்களும் கொள்கையிலிருந்து பின்வாங்காததால் இறைமறுப்பாளர்கள் சார்பில் நபியிடம் பேரம் பேச வந்தார் உக்பா பின் ரபீஆ.
சிறிய முன்னுரைக்குப் பின் உத்பா நான்கு விசயங்களை முன்வைத்தார். உமக்கு செல்வம் தேவையென்றால் நீரே எல்லோரையும் விட பணக்காரராக ஆகுமளவுக்கு உமக்காக செல்வத்தை சேகரித்துத் தருகிறோம். உமக்கு பதவி வேண்டுமென்றால் உம்மை எங்களுக்கு அரசராக்கிக் கொள்கிறோம். உமக்கு சிறப்புத் தேவை என்றால் உம்மை எங்களுக்குத் தலைவராக்கிக் கொள்கிறோம். அல்லது உமக்கு ஏற்படுவது சைத்தானின் பாதிப்பு என்றால் அதற்காக நாங்கள் எங்கள் செல்வத்தை செலவழித்து உமக்கு மருத்துவம் பார்க்கிறோம் என்றார்.
இதனை உத்பா விரிவாக பேசியதை முழுமையாக கேட்டுக் கொண்டிருந்த நபி (ஸல்) அவர்கள், அவர்கள் சொல்ல வேண்டியதை சொல்லி முடித்து விட்டீரா? என்று கேட்டார்கள். அதற்கு அவர் ஆம் என்று சொன்ன பிறகே நபியவர்கள் “இப்போது நான் சொல்வதைக் கேளுங்கள் எனக் கூறி சில திருக்குர்ஆன் வசனங்களை ஓதிக் காட்டினார்கள்.”
இந்த நிகழ்ச்சியை நாம் கவனத்துடன் நோக்க வேண்டும். உத்பா, நபியவர்களின் இறைப்பணியை உலக நோக்கத்திற்காக செய்யக் கூடியது என்று கொச்சைப் படுத்துகிறார். அப்படியிருந்தும் நபியவர்கள் அவரை முழுமையாக பேச விடுகிறார்கள்.
அவர் முதலாவதாக செல்வத்தைப் பற்றி சொன்ன உடனேயே நபியவர்கள் குறுக்கிட்டு, எனக்கு செல்வமோ அல்லது வேறு உலக லாபமோ நோக்கமில்லை என்று அவருடைய பேச்சை துண்டித்திருக்கலாம். அப்படிச் செய்யவில்லை. அப்படி செய்யாததால் விளைந்த பலன் என்ன?
நபியிடமிருந்து அப்போது விடைபெற்ற உத்பா, நபி மீது நல்லெண்ணம் கொண்டவராகவே விடைபெற்றுச் சென்றார்.
தன்னை எதிர்பார்த்திருந்த இறைமறுப்பாளர்களிடம் சென்று “முஹம்மதுக்கு நிச்சயம் வெற்றி கிடைக்கும்; அவர் வழியில் அவரை விட்டு விடுங்கள்” என்றே சொன்னார்!. – உத்பாவின் கருத்தை இறைமறுப்பாளர்கள் ஏற்கவில்லை என்பது தனி விசயம்-
இப்படி தனக்கு முரண்பட்டவர்கள், உடன்பட்டவர்கள் என யாராக இருந்தாலும் அவர்கள் பேச வந்ததை முழுமையாக பேச விட்டு செவியேற்பதே நபியின் நடைமுறை! மேற்கண்ட நிகழ்ச்சி “அர் ரஹீகுல் மக்தூம்” நூலில் சகாப்தம் பகுதியில் விரிவாக கூறப்பட்டுள்ளது.
எதில் ஆர்வம்?
பொதுவாக உரையாட அமர்ந்தால் நான் என்னுடைய கருத்துக்களை பேசிவிட வேண்டும் என்பதுதான் எல்லோருடைய விருப்பமும், அப்படியானால் அடுத்தவர் விருப்பத்துக்காக நமது விருப்பத்தைவிட்டுக் கொடுப்பது சிறப்புதானே?
இது குறித்து முற்கால இஸ்லாமிய அறிஞர்களும் நமக்கு வழிகாட்டுதலை வழங்கியுள்ளார்கள்.
ஹசன் பசரீ (ரஹ்) அவர்கள் கூறியது: "நீ பிறருடன் அமர்ந்திருக்கும் போது பேசுவதை விட கேட்பதில் ஆர்வம் கொண்டவனாயிரு! அழகிய முறையில் செவி தாழ்த்திக் கேட்கவும் கற்றுக் கொள்! யாருடைய பேச்சையும் இடைமறித்து துண்டிக்காதே!"
நூல் : அல் கராயிதீ அவர்களின் மகாரிமுல் அக்லாக்-
அழகிய முறையில் செவி தாழ்த்துவது எப்படி?
ஞானி ஒருவர் தன் மகனுக்குச் செய்த அறிவுரையை இப்றாஹீம் பின் அல் ஜீனைத் (ரஹ்) அவர்கள் நமக்கு எடுத்துக் கூறுகிறார்கள் : "மகனே! அழகிய முறையில் பேசக் கற்றுக் கொள்வதைப் போல் அழகிய முறையில் செவி தாழ்த்திக் கேட்பதையும் கற்றுக் கொள். அழகிய முறையில் செவி தாழ்த்திக் கேட்பது என்பது “பேசுபவர் தனது பேச்சை முடிக்கும் வரை நீ பொறுத்திருப்பது. முகத்தால் முன்னோக்குவது, பார்ப்பது, நீ அறிந்த செய்தியை அவர் பேசினாலும் இடையிடையே நீ குறிக்கிடாமல் இருப்பது!” -நூல் : அல் ஃபகீஹ் வல் முத்தஃபக்கீஹ்-
ஒருவர் பேசுவதை நாம் அக்கறையுடன் கேட்கிறோம் என்றால் அவருடைய அந்தப் பேச்சிலுள்ள கோரிக்கைகள், கேள்விகள் ஆகியவற்றுக்கு முறையாக பதிலளிக்கவும் வேண்டும். அவ்வாறு பதிலளிக்காமல் விட்டால் அதுவும் அவரை அலட்சியப்படுத்தியதாகவே ஆகும். இதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்!
ஒருவரின் பேச்சை அக்கறையுடன் கேட்பதனாலும் முறையாக அவருக்கு மறுமொழி கூறுவதாலும் அவரை நாம் மதிப்பதாகவும் அவரை நாம் நேசிப்பதாகவும் உணர்வார். அதனால் அவரும் நம்மை நேசிப்பார்.
இதற்கு நபித் தோழர் அம்ர் பின் அல் ஆஸ் (ரலி) அவர்களுக்கு நபியுடன் ஏற்பட்ட அனுபவம் ஒரு சான்றாக உள்ளது. நபி (ஸல்) அவர்கள், அம்ர் பின் அல் ஆஸ் (ரலி) அவர்கள் பேசுவதை கவனத்துடன் கேட்கவும் செய்வார்கள். பேசிக் கொண்டுமிருப்பார்கள். இதனால் தன்னையே நபியவர்கள் அதிகமாக நேசிப்பதாக நினைக்க ஆரம்பித்தார்கள்.
இது குறித்த அம்ர் பின் அல் ஆஸ் (ரலி) அவர்கள் கூறுவது : நான் நபி (ஸல்) அவர்களிடம் சென்று, மனிதர்களில் தங்களுக்கு மிகவும் பிரியமானவர் யார்? என்று கேட்டேன். அவர்கள் ஆயிஷா ரலி என்று பதில் சொன்னார்கள். நான் ஆண்களில் உங்களுக்கு மிகவும் பிரியமானவர் யார்? என்றேன். அபூபக்கர் (ரலி) என்று பதிலளித்தார்கள். பிறகு யார் என்று கேட்டேன் உமர் (ரலி) என்றார்கள். இன்னும் பலரையும் கணித்து –அவர்களெல்லாம் தமக்கு மிகவும் பிரியமானவர்கள் என்று- கூறினார்கள். “தமக்கு பிரியமானவர்கள் பட்டியலில் என்னைக் கடைசி ஆளாக ஆக்கி விடுவார்களோ” என்று அஞ்சியபடி நான் மௌனமாக இருந்து விட்டேன்.
நூல் : புகாரி 4358
இங்கு இன்னொன்றையும் கவனத்தில் கொள்ள வேண்டும்! நம்முடைய பொன்னான நேரத்தை வீணடிக்கும் விதத்தில் பிறர் நம்மிடம் பேசினால் அவர்கள் மனம் நோகும்படி பேசி விடாமல் சாதுர்யமாக அவர்களிடமிருந்து நாம் தப்பித்து விட வேண்டும்!
பிறர் பேச்சை மதித்து செவிதாழ்த்திக் கேட்போம். அவர்களிடம் தாக்கத்தை ஏற்படுத்துவோம். அவர்களின் மனங்களில் இடம்பிடிப்போம்!
-M. அப்துர்ரஹ்மான் மன்பஈ.,MA.,M.phil