இமாம் அப்துல் அஸீஸ் பின் அப்தில்லாஹ் பின் பாஸ்

மேன்மைமிகு இமாம் அப்துல் அஸீஸ் பின் அப்தில்லாஹ் பின் பாஸ் (ரஹிமஹுல்லாஹ்) ஹிஜ்ரி 1330-1420

பெயரும் பரம்பரையும்: 

அப்துல் அஸீஸ் பின் அப்தில்லாஹ் பின் அப்திர்-ரஹ்மான் பின் முஹம்மத் பின் அப்தில்லாஹ் ஆலி பாஸ் அவர்கள் மார்க்கத்தில் ஆழ்ந்த அறிவும், வணிகம் மற்றும் விவசாயத்திலும் பின்புலத்தைக் கொண்ட குடும்பத்தில் பிறந்தவர்களாவர். அவரது குடும்பத்தினர் தங்கள் நற்பண்புகள் மற்றும் ஒழுக்க விழுமியங்களுக்காக அறியப்பட்டவர்களாவர். அவர்களின் பூர்வீகம் மதீனா எனவும், பின்னர் அவர்களின் மூதாதையர்களில் ஒருவர் துரையாவுக்கு குடிபெயர்ந்தார் என குறிப்பிடப்படுகிறது.

பிறப்பும் இளமைப் பருவமும்:

அவர் ஹிஜ்ரி 1330 துல்-ஹிஜ்ஜா மாதம் 12 ஆம் தேதி நஜ்தின் தலைநகரான ரியாத்தில் பிறந்தார். இங்குதான் அவர் தனது குழந்தைப் பருவம், மற்றும் இளமைப் பருவத்தை கழித்தார்.

அந்த நேரத்தில் ரியாத் நகரே மார்க்க அறிஞர்கள் மற்றும் நேர்வழிகாட்டிகளால் நிரம்பியிருந்த காரணத்தால் மிகுந்த மார்க்க அறிவு நிரம்பிய சூழலில் வளரும் வாய்ப்பு இமாம் இப்னு பாஸ் அவர்களுக்குக் கிட்டியது. குழப்பங்கள் நிறைந்து ஸ்திரமற்ற நிலையில் காணப்பட்ட ரியாத் நகரை மன்னர் அப்துல் அஜீஸ் மீண்டும் கைப்பற்றி, இஸ்லாமிய சட்டங்களின் அடிப்படையில் நீதியை நிலைநாட்டியதிலிருந்து அது அப்போது பாதுகாப்பு மற்றும் அமைதிக்க இடமாகவும் அறிஞர்கள் சஞ்சரிக்கும் இடமாகவும் இருந்தது.

‘மற்றப் பாடங்களுக்குச் செல்வதற்கு முன்பு குர்ஆனை மனனமிடல்’ என்ற ஸலஃபு அறிஞர்களின் வழிமுறைப்படி இமாம் இப்னு பாஸ் அவர்களும் முதலில் குர்ஆனை மனனமிடுவதன் மூலம் தனது கல்விப் பயணத்தை தொடங்கினார்கள், எனவே பருவ வயதை அடைவதற்கு முன்பே முழுக் குர்ஆனையும் இமாமவர்கள் மனப்பாடம் செய்தார்கள். பின்னர்  தனது பகுதியில் உள்ள அறிஞர்களிடம் சென்று கல்வியை கற்று வந்தார்கள்.

இதில் முக்கியமாக குறிப்பிடப்படவேண்டியது இமாமவர்களின் கல்விப்பயணத்தில் அவரது தாயாரின் பங்களிப்பு பற்றியாகும். அல்லாஹ் இமாமவர்களின் தாயார் மீது கருணை காட்டுவானாக. அன்னார்தான் இமாமவர்களை அறிவைப் பெறுவதற்கு தொடர்ந்து ஆர்வமூட்டி ஊக்கப்படுத்தி வந்தார்கள் என இமாமவர்கள் “எழுத்தாளர்களுடனான எனது பயணம்” என்ற கலந்துரையாடலில் குறிப்பிடுகிறார்கள்.

இமாம் இப்னு பாஸ் அவர்களுக்கு அவரது வாழ்க்கையின் முதல் பகுதியில் கண் பார்வை இருந்தது. பின்னர் அல்லாஹ்வின் நியதிக்கமைய, ஹிஜ்ரி 1346 இல் ஏற்பட்ட கண் நோயினால் இமாமவர்களின் பார்வை பலவீனமடைந்தது, இறுதியில் ஹிஜ்ரி 1350 இல் அவர் இருபதுகளை நெருங்கியிருந்த போது அவரது பார்வையை முழுமையாக இழந்தார். இருப்பினும், அறிவைத் தேடுவதில் அவரது அயராத் தன்மை மற்றும் விடாமுயற்சியிலிருந்து பார்வையிழப்பானது அவரைத் தடுக்கவில்லை, கல்வியில் அவர் தொடர்ந்து சிறந்து விளங்கினார்.

குறிப்பிடத்தக்க வகையில், பார்வை இழப்பானது இமாம் இப்னு பாஸ் அவர்களுக்கு  நன்மையாகவே அமைந்தது, ஏனெனில் இதனால் அவர் பல நன்மைகளை அடைய முடிந்தது, எடுத்துக்காட்டாக அவற்றில் சிலதை குறிப்படலாம்:

1. அல்லாஹ்விடமிருந்து வெகுமதி: இமாம் அல்-புகாரி தனது ஸஹீஹில் ஒரு ஹதீஸ் குத்ஸீயை அறிவித்தார், அதில் அல்லாஹ் கூறினான்: "என் அடியான் தனது  விருப்பத்துக்குரியவை இரண்டை (கண்கள்) இழந்து சோதிக்கப்பட்டு அவன் பொறுமை காப்பேனேயானால், நான் அதற்குப் பகரமாக சொர்க்கத்தை வழங்குவேன்."[ஸஹீஹ் அல்-புகாரி 5653]

2. வலுவான மனன சக்தி: இமாம் இப்னு பாஸ் அவர்கள் எமது சகாப்தத்தில் ஹதீஸ்களை மனனமிட்ட தலைசிறந்த ஹாபிழ்களில் ஒருவராவார். ஆறு ஹதீஸ் தொகுப்புகள் மட்டுமல்லாது இமாம் அஹ்மதின் முஸ்னத் போன்ற இன்ன பிற தொகுப்புகளிலுள்ள ஹதீஸ்களைப் பற்றி அவரிடம் கேட்டால் கூட,  ஹதீஸின் அறிவிப்பாளர் தொடருடன் ஹதீஸின் வார்த்தை அமைப்புகள், அதன் தரம் பற்றி பேசிய அறிஞர்கள் அதன் விரிவுரைகள் மற்றும் அதற்கு விளக்கவுரை அளித்தவர்கள் பற்றியெல்லாம் நன்கு அறிந்து வைத்திருப்பதை காணலாம். 

3. உலக அலங்காரங்களில் ஆர்வமின்மை: இமாம் இப்னு பாஸ் அவர்கள் உலக வாழ்க்கையின் இன்பங்களைப் பின்தொடர்வதைத் தவிர்த்து, மிக எளிமையான பற்றற்ற வாழ்க்கை முறையை மேற்கொண்டார்கள்.

4. உயர்ந்த நிலை: பார்வை இழப்பானது, இமாம் இப்னு பாஸ் அவர்களுக்கு அறிவைத் தேடிக் கற்பதையும்  தனது தேடலில் அதிக உறுதியையும் விடாமுயற்சியையும் அதிகரிக்கச் செய்ததே தவிர வேறு எதையும் இழக்கச் செய்யவில்லை. இதனால் உலகம் முழுவதும் அறியப்பட்ட மூத்த அறிஞர்களில் ஒருவராகவும் ஆனார். அல்லாஹ் உண்மையில் அவரது கண்களில் இருந்த ஒளியை அவரது இதயத்திற்கும், கல்வியறிவின் மீதான நேசம் மற்றும் நபியின் சுன்னாவைப் பின்பற்றுவதன் மூலம் அவரது வாழ்வில் ஒளியூட்டுவது கொண்டும் பகரமாக ஆக்கினான்.

ஆசிரியர்கள்:

குர்ஆனை மனப்பாடம் செய்த பிறகு, இமாம் இப்னு பாஸ் ரஹிமஹுல்லாஹு அவர்கள், ரியாத்தின் பல அறிஞர்களின் கீழ் இஸ்லாமிய உயர்கல்வியை கற்றார்கள், அவர்களில் மிக முக்கியமானவர்கள்:

1. ஷேக் முஹம்மது பின் அப்தில்-லத்தீஃப் ஆலி ஷேக், இமாம் முஹம்மது பின் அப்தில்-வஹ்ஹாபின் கொள்ளுப் பேரன்.

2. ஷேக் ஸாலிஹ் பின் அப்தில்-‘அஸீஸ் ஆலி ஷேக், இமாம் முஹம்மது பின் அப்தில் வஹ்ஹாபின் கொள்ளுப் பேரனான ரியாத்தின் தலைமை நீதிபதி 

3. ஷேக் ஸாத் பின் ஹமத் அல்-அதீக், ரியாத்தின் நீதிபதி

4. ஷேக் ஹமாத் பின் ஃபாரிஸ், ரியாத் கருவூலத்தின் துணைவேந்தர்,

5. ஷேக் ஸாத் வக்காஸ் அல்-புகாரி, மக்காவைச் சேர்ந்த அறிஞரான இவரிடமிருந்து, இமாமவர்கள் ஹிஜ்ரி 1355 இல் தாஜ்வீத் கலையை கற்றுக்கொண்டார்.

6. ஷேக் முஹம்மது பின் இப்ராஹீம் ஆலி ஷேக், சவுதி அரேபியாவின் முன்னாள் தலைமை முப்தி. ஹிஜ்ரி 1347முதல் ஹிஜ்ரி 1357 வரை இமாமவர்கள் சுமார் பத்து ஆண்டுகள் இவர்களது ஆய்வு வட்டங்களில் கலந்து கொண்டார்கள, இஸ்லாமிய கலைகள் அனைத்தையும் இமாமவர்கள் இவர்களிடமிருந்து கற்றுத் தேர்ந்தார்கள். பின்னர் இவர்கள் இமாம் இப்னு பாஸ் அவர்களின் பெயரை நீதிபதி பதவிக்காக முன்மொழிந்தார்கள். ​​​​

அல்லாஹ் அவர்கள் அனைவருக்கும் கருணை காட்டுவானாக.

கல்வி வாழ்க்கை:

கர்ஜ் மாவட்டத்தின் நீதிபதியாக இமாம் இப்னு பாஸ் தேர்ந்தெடுக்கப்பட்டபோது, ​​பதவி ஆசையோ விருப்பமோ இல்லாமல்தான் அதை ஏற்றுக்கொண்டார்கள். அவரது ஆசிரியரான ஷேக் முஹம்மது பின் இப்ராஹீம் ஆலி ஷேக்கின் அளித்த ஊக்கத்தினாலும், மன்னர் அப்துல் அஜீஸ் அளித்த உத்தரவுக்குக் கட்டுப்பட்டுமே அவர்கள் அப்பதவிக்கு வந்தார்கள். பின்னர் இமாமவர்கள் அந்த நேரத்தில் கர்ஜ் மாவட்டத்தின் தலைநகராக இருந்த அத்-தலாம் நகருக்குச் சென்றார்கள், மக்கள் அவரை அன்புடன் வரவேற்றனர். அவரை அங்கு ஏற்றிச் சென்ற காரில் இருந்து இறங்கியவுடன், அவர் மத்திய மசூதியில் நுழைந்து சுன்னாவின்படி இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள். பின்னர் இமாமவர்கள் அந்த நேரத்தில் அத்தலாமின் அமீராக இருந்த நசீர் பின் சுலைமான் அல்-ஹுக்பானீ, அல்லாஹ் அவருக்கு கருணை காட்டுவானாக, அவர்கள் முன்னிலையில் சிறிது நேரம் ஓய்வெடுத்தார்கள். அதன்பின் மக்கள் இமாமவர்களைச் சுற்றி திரண்டனர், அவர்களுக்கு மத்தியில் இமாமவர்கள் ஓர் ஆழமான உரையை நிகழ்த்தினார்கள். அதில் தனக்கு நீதிபதி பதவியை பெறுவதில் விருப்பமில்லை எனவும், எனினும் அமீர் இட்ட கட்டளையினால் அமீருக்குக் கட்டுப்பட்டு அப்பதவியை ஏற்றுக்கொண்டதாகவும் கூறினார்கள்.

இமாமவர்கள் அங்கு பதவியேற்றுப் பணிபுரியத் தொடங்கியவுடன், அல்லாஹ் அவரது கைகளால் நிறைய நன்மைகளைக் கொண்டு வந்தான், மேலும் அவர் மக்களுக்கு நீதியாகவும் கருணையுடனும் தீர்ப்பளித்தார்கள். அவர்கள் இப் பதவியில் பதினான்கு ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றினார்கள். இக் காலகட்டத்தில், கர்ஜ் மாவட்டம் நல்லறங்கள்மிக்க நேர்வழிப்பட்ட இடமாக மாறியது. அந்த மக்களின் நல்ல மனங்கள், நல்லொழுக்கம், பயபக்தி, நீதியின் மீதான உயர்ந்த மதிப்பின் கரணாமாகவும் மேலும் நீதி மன்றங்கள் அத்தலாத்தில் இருந்ததினால் இமாமவர்கள் அங்கு இமாம் அப்துல்லாஹ் பின் பைசல் பின் அத்துர்க்கி வழங்கிய நீதிபதியின் உத்தயோகபூர்வ இல்லத்தில் வசித்து வந்ததினாலும் இவ்வெற்றியை இலகுவாக அடைந்து கொள்ள முடிந்தது.

இமாம் இப்னு பாஸ் அவர்கள் தனது மார்க்கத் தீர்ப்புகள் (ஃபதாவா) மற்றும் அவரது நன்மை பயக்கும் நூல்களுக்காக முஸ்லீம் உலகம் முழுவதும் நன்கு அறியப்பட்டவர்களாவர். சவூதி அரேபியாவில் கல்விக் கருத்தரங்குகளுக்கான குழுக்களுக்கு அவர் தலைமை தாங்குவார், மேலும் சவூதி ராஜ்யத்திற்கு வெளியே உள்ள முஸ்லிம்களுக்கு தொலைபேசியினூடாக பல்வேறு விரிவுரைகளை வழங்குவார். வானொலியினூடாக ஹஜ் மற்றும் ரமழானின் புனித காலங்களில் மக்களின் கேள்விகளுக்கு இமாமவர்கள் பதிலளிப்பார். மேலும் அவரது வார்த்தைகள் உலகம் முழுவதும் உள்ள முஸ்லிம் பத்திரிகைகள், சஞ்சிகைகள் மற்றும் கட்டுரைகளில் வெளிவரும்.

புத்தகங்கள் மற்றும் கட்டுரைகள்:

இமாமவர்களின் இடைவிடாத தஃவா மற்றும் கல்விப் பணிகளுக்கு மத்தியிலும் உலக முஸ்லிம்களுக்கு அறிவு தேவைப்படும் முக்கியமான பிரச்சினைகளைப் பேசும் நூல்கள் மற்றும் ஆய்வுகளை எழுதுவதற்கும் அவர் அதிக நேரத்தை ஒதுக்கினார். அவரது மிகவும் பிரபலமான ஆக்கங்களில் சில:

1. சுன்னாவைப் பின்பற்றுதன் கடமை 
2. கருத்தியல் தாக்குதல் 
3. இமாம் முஹம்மது பின் அப்தில்-வஹாபின் வாழ்க்கை மற்றும் அழைப்பு 
4. தொழுகையின் மூன்று உடன்படிக்கைகள் 
5. சரியான நம்பிக்கை மற்றும் அதற்கு எதிரானவை 
6. முஸ்லீம் உம்மாவுக்கு முக்கியமான பாடங்கள் 
7. அரபு தேசியவாதத்தின் ஒரு விமர்சனம் 
8. தபர்ருஜ் ஆபத்துகள் 
9. நோன்பு மற்றும் ஜகாத் பற்றிய இரண்டு கட்டுரைகள் 10. (வரை/புகை) படங்கள் தொடர்பான விதிமுறை
11. நபிகள் நாயகத்தின் பிறந்த நாளைக் கொண்டாடுவது தொடர்பான விதிமுறை
12. பித்அத்களுக்கு எதிரான எச்சரிக்கை

மேலும் பல புத்தகங்கள் உள்ளன, அவற்றை இமாமின் அதிகாரப்பூர்வ இணையதளமான binbaz.org.sa இல் படித்து அச்சிடலாம். இவைகள் அவரது பலமுறை சேகரிக்கப்பட்டு, தொகுக்கப்பட்டு பல தொகுதிகளாக வெளியிடப்பட்ட ஃபதாவா (மார்க்கத் தீர்ப்பு) களுக்கு மேலதிகமானவை ஆகும்,

கல்வி மற்றும் மார்க்க ரீதயில் வகித்த பதவிகள்:

1.சவூதி அரேபியாவின் கர்ஜ் மாவட்டத்தில் ஹிஜ்ரி 1357 முதல் ஹிஜ்ரி 1371 வரை பதினான்கு ஆண்டுகள் நீதிபதியாக பணியாற்றினார்கள்.

2 இமாமவர்கள் ஹிஜ்ரி 1372 இல் ரியாத்தின் கல்வி நிறுவனத்திலும், ஹிஜ்ரி 1373 இல் தொடங்கப்பட்ட ஷரீஆக் கல்லூரியிலும் ஃபிக்ஹ், தவ்ஹீத் மற்றும் ஹதீஸ் பாடங்களை உள்ளடக்கியதாகக் கற்பித்தார்கள். இமாமவர்கள் ஹிஜ்ரி 1380 வரை ஒன்பது ஆண்டுகள் இந்த ஆசிரியர் பதவியில் இருந்தார்கள்.

3. ஹிஜ்ரி 1381 இல், இமாமவர்கள மதினாவின் இஸ்லாமிய பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக நியமிக்கப்பட்டார்கள், அங்கு அவர் ஹிஜ்ரி 1390 வரை பணியாற்றினார்கள்.

4 பின்னர் அவர் ஹிஜ்ரி 1390 இல் மதீனா இஸ்லாமிய பல்கலைக்கழகத்தின் வேந்தராக நியமிக்கப்பட்டார்கள், அதன் முன்னாள் வேந்தர் ஷேக் முஹம்மது பின் இப்ராஹீம் ஆலி ஷேக் ஹிஜ்ரி 1389 ரமலானில் இறந்த பிறகு இந்நியமனம் இடம்பெற்றது. இமாமவர்கள் ஹிஜ்ரி 1395 வரை இந்த பதவியில் இருந்தார்கள்.

5. ஹிஜ்ரி 10/14/1395 இல், இமாம் இப்னு பாஸை இஸ்லாமிய ஆராய்ச்சி, தீர்ப்புகள், தாவா மற்றும் வழிகாட்டுதலுக்கான கவுன்சிலின் தலைவராக நியமிக்குமாறு மன்னர் உத்தரவிட்டார். அவர் ஹிஜ்ரி 1414 வரை இந்த பதவியை வகித்தார்.

6. ஹிஜ்ரி 1/20/1414 இல், மன்னர் இமாம் இப்னு பாஸை சவூதி அரேபியாவின் தலைமை முப்தியாக நியமித்தார். மூத்த அறிஞர்கள் குழுவின் தலைவராகவும், இஸ்லாமிய ஆராய்ச்சி மற்றும் தீர்ப்புகளுக்கான குழுவின் தலைவராகவும் அவர் இந்த பதவியை வகித்தார்.

பின்வரும் பதவிகளையும் வகித்தார்கள்:

1. இஸ்லாமிய ஆராய்ச்சி மற்றும் தீர்ப்புகளுக்கான நிரந்தரக் குழுவின் தலைவர், 
2. முஸ்லிம் உலக லீக்கின் ஸ்தாபகக் குழுவின் தலைவர் மற்றும் உறுப்பினர், 
3. உயர் உலக லீக் கவுன்சிலின் தலைவர், 
4. மசூதிகளுக்கான உலக உச்ச கவுன்சிலின் தலைவர், 
5. முஸ்லிம் உலக லீக்கின் கீழ் உள்ள மக்காவில் உள்ள இஸ்லாமிய ஃபிக்ஹ் பேரவையின் தலைவர்,
6. மதீனா இஸ்லாமிய பல்கலைக்கழகத்தின் உயர் கவுன்சில் உறுப்பினர், 
7. இஸ்லாமியப் பிரச்சாரத்திற்கான உச்சக் குழுவின் உறுப்பினர்.

மாணவர்கள்:

இமாம் இப்னு பாஸ் ரஹ்மல்லாஹு அன்ஹு அவர்களின் வகுப்புகள் மற்றும் கற்றல் வட்டங்களில் கலந்துகொள்ளும் ஏராளமான மாணவர்கள் இருந்தனர். அவற்றில் மிகவும் பிரபலமான மற்றும் சிறப்பு வாய்ந்தவர்கள்:

1. முஹம்மது பின் சாலிஹ் அல்-உதைமீன், மூத்த அறிஞர்கள் பேரவையின் முன்னாள் உறுப்பினர், அல்லாஹ் அவருக்கு கருணை காட்டுவானாக, 
2. அப்துல்லாஹ் பின் ஹசன் அல்-குவூத், இஸ்லாமிய ஆராய்ச்சி மற்றும் ஃபதாவாவிற்கான நிரந்தரக் குழுவின் தற்போதைய உறுப்பினர் மற்றும் மூத்த அறிஞர்கள் கவுன்சில், . 
3. அப்துல்லாஹ் பின் அப்திர்-ரஹ்மான் அல்-குதய்யான், இஸ்லாமிய ஆராய்ச்சி மற்றும் ஃபதாவாவிற்கான நிரந்தரக் குழுவின் தற்போதைய உறுப்பினர் மற்றும் மூத்த அறிஞர்கள் கவுன்சில், 
4. 'அப்துல்-முஹ்சின் அல்-'அபாத், மதீனா இஸ்லாமிய பல்கலைக்கழகத்தின் முன்னாள் வேந்தர் மற்றும் துணைவேந்தர், 
5. சாலிஹ் பின் ஃபவ்ஸான் அல்-ஃபவ்ஸான், இஸ்லாமிய ஆராய்ச்சி மற்றும் ஃபதாவாவிற்கான நிரந்தரக் குழுவின் தற்போதைய உறுப்பினர் மற்றும் மூத்த அறிஞர்கள் கவுன்சில், 
6. ரபீ பின் ஹதீ அல்-மத்கலீ, 
7. ‘அப்துல்-‘அஜிஸ் பின் ‘அப்தில்லாஹ் அர்-ராஜிஹி

உடல் பண்புகள் மற்றும் தோற்றம்:

இமாம் இப்னு பாஸ் (ரஹி) அவர்கள் உயரமானவராகவோ, குட்டையாகவோ இல்லாமல், நடுத்தரமான உருவம் கொண்டவராக இருந்தார்கள். அவருடைய முகம் வட்டமாகவும் தங்கப் பழுப்பு நிறத்திலும் இருந்தது. வளைந்த மூக்கு மற்றும் கன்னங்களில் குட்டையான ஆனால் தாடைக்குக் கீழே தடிமனாக அவருடைய தாடி கருப்பாக இருந்தது, ஆனால் அதிகமான வெள்ளை முடிகள் தோன்ற ஆரம்பித்ததும், மருதாணியால் சாயம் பூசினார். உண்மையில், அவரது தோற்றத்திற்கான விபரிப்பு அவருக்கு முன் இருந்த பல அறிஞர்களின் விபரிப்பை ஒத்திருந்தது.

அழகான தோற்றத்துடன் இருந்தார்கள். அவர்கள் எப்போதும் வெள்ளை ஆடைகளை அணிய முயற்சிப்பார்கள், மேலும் அகலமான ஆடைகள் மற்றும் அவரது கெண்டைக் காலின் நடுப்பகுதியை அடையும் துணிகளை விரும்புவார்கள்.

பணிவும் பயக்தியும்:

இமாமவர்கள் உயர்வுமிக்கோனான அல்லாஹ்வுக்கு முன் தனது நிலை என்ன என்பதை அறிந்திருந்தார்கள். இதன் காரணமாக மக்களை அன்பாகவும், கனிவாகவும், இரக்கத்துடனும் நடத்துவார்கள். யார்மீதும் வரம்பு மீறவோ, யாரிடமும் கர்வத்தை காட்டவோ மாட்டார்கள். மக்களெல்லாம் தன்னுடைய கல்வி, பதவிநிலை கண்டு தன்னைப்பற்றி உயர்வாக கருதவேண்டும் என்ற தவறான எண்ணத்தை ஒருபோதும் ஏற்படுத்திக் கொண்டதுமில்லை, ஏழைகள் மற்றும் தேவையுடையவர்களுடன் இருக்கும்போது அவர்களை விட்டுவிட்டு முதலில் எழுந்திருக்க மாட்டார்கள், அவர்களுடன் கலந்திருப்பதையும், அவர்களுடன் பழகுவதையும் தவிர்க்கமாட்டார்கள். தனக்குக் கீழே இருப்பவர்களின் அறிவுரைகளைக் கேட்பதில் இருந்து அவர்கள் ஒருபோதும் திரும்பிக்கொண்டதுமில்லை.

தனது மாணவர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்களின் திருமணக் கூட்டங்களுக்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டால் அவற்றில் கலந்து கொள்வார்கள். அவர் எப்பொழுதும் சீக்கிரமாக வந்து, சகோதரர்களில் ஒருவரிடம் குர்ஆனிலிருந்து சில வசனங்களை ஓதுமாறு கேட்டுக் கொள்வார், பின்னர் அவர் அங்கிருந்த அனைவருக்கும் விளக்குவார்.

மரணம்:

இமாம் இப்னு பாஸ் ஹிஜ்ரி 1420 (5/13/1999) முஹர்ரம் 27 வியாழன் அன்று இருதய செயலிழப்பு காரணமாக காலமானார்கள். அப்போது அவருக்கு 89 வயது. சவூதி அரேபியா முழுவதிலும் உள்ள லட்சக்கணக்கான மக்கள் அவரது இறுதிச் சடங்குகளைக் காண திரண்டனர், மேலும் அவர் மக்காவில் உள்ள 'அத்ல்’ கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டார்கள். உலகெங்கிலும் உள்ள முஸ்லிம்கள் அவரது இழப்பிற்கு இரங்கல் தெரிவித்தனர், மேலும் சில மாதங்களுக்குப் பிறகு முஸ்லிம் உலகம் மற்றொரு சிறந்த அறிஞரான இமாம் அல்-அல்பானி அவர்களை இழந்தது, அல்லாஹ் அவர்கள் இருவருக்கும் கருணை காட்டுவானாக.
Previous Post Next Post