அ. மண்ணறையின் நிகழ்வுகள்:
இது மரணித்தவரிடத்து (அடக்கம் செய்யப்பட்ட பின்னர்) கேட்கப்படும் கேள்விகளைக் குறிக்கும். அவனிடத்தில் நீர் ஏற்றிருந்த உனது ரப்பு யார்? உனது மார்க்கம் என்ன? நீர் பின்பற்றிய தூதர் யார்? என்பன போன்ற கேள்விகள் கேட்கப்படும்.
முஃமின்களை அல்லாஹ் சரியான பதில்கள் மூலம் நிலைபெறச் செய்வான். அப்போது முஃமின்கள் எனது ரப்பு அல்லாஹ், எனது மார்க்கம் இஸ்லாம், எனது தூதர் முஹம்மத் (ஸல்) என்று பதிலளிப்பர்.
காபிர்களை இறைவன் வழிதவறச் செய்து விடுவான். அப்போது நான் அறியேன் என்பான். முனாஃபிக்குகள் மனிதர்கள் ஏதோ கூறிக்கொண்டிருந்தனர். அதனையே நாமும் கூறினோம். எனவே அவற்றிற்குறிய பதிலை நாம் அறியோம் என்பர்.
ஆ. மண்ணறையின் இன்பமும் துன்பமும்:-
அல்லாஹ்வை நிராகரித்த காபிர்களுக்கும், முனாபிக்குகளுக்கும், அநியாயம் பண்ணிக் கொண்டிருந்தவர்களுக்குமே மண்ணறையில் வேதனையளிக்கப்படும். இதைய அல்குர்ஆன் இவ்வாறு கூறுகிறது:
அல்லாஹ்வின் மீது பொய்க் கற்பனை செய்பவன், அல்லது வஹீயின மூலம் தனக்கு ஒன்றுமே அறிவிக்கப்படாமலிருக்க, “எனக்கு வஹீ வந்தது” என்று கூறுபவன் அல்லது “அல்லாஹ் இறக்கிவைத்த இ(வ்வேதத்)தைப் போல் நானும் இறக்கிவைப்பேன்” என்று கூறுபவன், ஆகிய இவர்களை விடப் பெரிய அநியாயக்காரன் யார் இருக்க முடியும்? இந்த அநியாயக்காரர்கள் மரண வேதனையில் இருக்கும் போது நீங்கள் அவர்களைப் பார்த்தால், மலக்குகள் தம் கைகளை நீட்டி (இவர்களிடம்) “உங்களுடைய உயிர்களை வெளியேற்றுங்கள் இன்றைய தினம் நீங்கள் இழிவுதரும் வேதனையைக் கூலியாகக் கொடுக்கப்படுவீர்கள். ஏனெனில், நீங்கள் உண்மையல்லாததை அல்லாஹ்வின் மீது கூறிக் கொண்டிருந்தீர்கள் இன்னும், அவனுடைய வசனங்களை (நம்பாது நிராகரித்துப்) பெருமையடித்துக் கொண்டிருந்தர்கள்” (என்று கூறுவதை நீர் காண்பீர். (அல் அன்ஆம்:93)
மேலும் அல்குர்ஆன் கூறுகிறது:
அந்நரக நெருப்பு அதன் மீது மாலையிலும் அவர்கள் காட்டப்படுகிறார்கள், மேலும் மறுமை நாள் நிலைபெற்றுவிடும் நாளில் பிர்அவ்னைச் சார்ந்தோரை கடினமான வேதனையில் புகுத்துங்கள் (என மலக்குகளுக்கு கூறப்படும்) (அல் முஃமின் :46)
ரஸுல் (ஸல்) அவர்கள் கூறினார்கள், மண்ணறையின் வேதனையிலிருந்து அல்லாஹ்விடம் பாதுகாவல் தேடுங்கள் என்பதாக. (ஆதாரம் முஸ்லிம் 2867)
முஃமின்களுக்கும், உண்மையாளர்களுக்குமே மண்ணறையில் இன்பங்கள் காத்திருக்கின்றன. இதனையே அல்குர்ஆன் வசனம் இவ்வாறு கூறுகிறது.
(இன்னும்) நிச்சயமாக எங்கள் இரட்சகன் அல்லாஹ் தான் என்று கூறி பின்னர், (அதன் மீது) உறுதியாக நிலைத்துமிருந்தார்களே அத்தகையோர் மீது மலக்குகள் (மரண வேளையில்) இறங்கி (செல்ல இருக்கும் மறுமையைப் பற்றி) நீங்கள் பயப்படாதீர்கள். நீங்கள் இவ்வுலகில் விட்டுச் செல்லும் மனைவி, மக்கள், சொத்து, சுகம் யாவற்றையும் பற்றி கவலையும் படாதீர்கள். நீங்கள் வாக்களிக்கபட்டுக் கொண்டிருந்தீ்ர்களே அத்தகைய சுவனபதியைக் கொண்டு நன்மாராயம் பெறுங்கள் (எனக் கூறுவார்கள்). (ஹாமிம் ஸஜ்தா:30)
ரஸுல் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
மண்ணறையில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு ஒரு முஃமின் பதிலைக் கூறிவிட்டால் வானத்திலிருந்து ஓர் அழைப்பு வந்து என்னுடைய அடியான் சரியான பதிலைக் கூறிவிட்டான். எனவே சுவனத்தின் விரிப்பை அவனுக்கு அளியுங்கள். சுவனத்தின் ஆடையை அவனுக்கு அணிவியுங்கள். மேலும் சுவர்க்கத்திற்கான ஒரு வாயிலை அவனுக்கு திறந்து கொடுங்கள் என்று கூறும். தொடர்ந்து கூறினார்கள், சுவனத்தின் ரூஹிலிருந்தும் சுவாசத்தையும் அவருக்கு கொடுக்கப்படும். பார்வை எட்டக் கூடிய அளவு அவரது மண்ணறை விசாலமாக்கப்படும். (ஆதாரம் அபூதாவுத் 4755, அஹ்மத் 18534)
மண்ணறையின் இன்பமும், துன்பமும் நடைமுறைக்கு மாற்றமானது, நடைபெறமடியாது எனக் கூறியதன் காரணத்தால் ஒரு கூட்டத்தார் வழிதவறிவிட்டனர். ஒரு புதை சூழியைத் திறந்து பார்த்தால் அதிலே வைக்கப்பட்ட உடல் அவ்வாறே இருக்கவும், தோண்டப்பட்ட சூழியின் அளவு சுருங்கியோ, விரிந்தோ இன்றி, ஒரு மாற்றமுமின்றியே இருக்கிறது என்றும் கூறுகின்றனர்.
இதற்கான மறுப்பு:
எனினும் இறைவழிகாட்டலும், நடைமுறை நிகழ்வுகளும், பகுத்தறிவும் இவ்வாறான ஒரு நிகழ்வு ஏற்படக் கூடியது சாத்தியமே என்கின்றன.
இறைவழிகாட்டல்: முன்னர் கூறிய ஆதாரங்கள் மண்ணறையின் இன்பத்தையும், துன்பத்தையும் உறுதிப்படுத்துகின்றன. இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் கூறுகிறார்கள், நபிகளார் மதீனாவின் ஒரு சில அடக்கஸ்தலங்களின் பக்கம் சென்றார்கள். இருவர் மண்ணறைகளில் தண்டனை அனுபவித்துக் கொணடிருக்கும் சப்தத்தை செவியுற்றார்கள் ஒரு (நீண்ட நபி மொழியில்) ஒருவர் சிறு நீர் கழித்து நன்றாக சுத்தம் செய்யாதவராகவும், அடுத்தவர் கோள் சொல்லித் திரிந்ததன் காரணமாகவமே தண்டனையை அனுபவித்துக் கொணடிருந்தனர் என்றார் நபிகளார். (ஆதாரம்: புஹாரி 218)
நடைமுறையில்:
நித்திரையில் இருக்கக் கூடிப ஒருவர் தான் ஒரு பரந்து விரிந்த ஓரிடத்தில் பல இன்பங்களை அனுபவிப்பது போன்று காண்கிறார். அல்லது ஓர் நெருக்கமான இடத்தில் வேதனைபடுவது போன்று காண்கிறார். ஆனால் அவர் கண் விழித்ததும் இவற்றை தனது படுக்கையிலே அனுபவித்ததை பார்க்கிறார். உறக்கம் மரணத்திற்கு சமமே என்பர். இதனாலே அல்லாஹ் தூக்கத்தை இறப்பிற்கு ஒப்பிட்டுள்ளான்.
உயிர்களை அவை இறக்கும் போதும் தம் நித்திரையில் இறப்பெய்யாதவற்றையும் அல்லாஹ்வே கைப்பற்றுகிறான். பின்னர் எதன் மீது மரணத்தை அவன் விதித்து விட்டானோ அதைத் (தன்னிடமே, அவன் நிறுத்திக் கொள்கின்றான். மேலும் மற்றவற்றை குறிப்பிடப்பட்ட காலம் வரை (வாழ்வதற்காக) அவன் அனுப்பி விடுகிறான், சிந்தித்துப் பார்க்கக் கூடிய சமூகத்தாருக்கு நிச்சயமாக இதில் படிப்பினைகள் இருக்கின்றன.
பகுத்தறிவு:
சில சமயங்களில் உறங்கிக் கொணடிருப்பவர் முற்றிலும் உண்மைக்கு சார்பான கனவுகளைக் காண்பார். ஒருவர் நபி (ஸல்) அவர்களை கூறப்பட்ட அவரது பண்புகளுடன் கனவில் காண்பது போன்று. யாராயினும் அவ்வாறு நபி (ஸல்) அவர்களைக் கண்டால் அது முற்றிலும் உண்மையானதே. ஆயினும் உறங்கிக் கொணடிருப்பவர் தனது அறையில் இருந்து கொண்டு மிகவும் தொலைவில் உள்ள ஒரு நிகழ்வையே காண்கிறார். உலக வாழ்வில் இது இடம் பெற சாத்தியமிருப்பின் மறுமையில் இடம்பெற இருக்காதா என்ன?