இஸ்லாத்தை முறிக்கும் காரியங்கள்.

(இஸ்லாத்தை விட்டும் வெளியேற்றும் செயல்கள்.)

இஸ்லாமிய சகோதரர்களே! அடியர்கள் அனைவரும் இஸ்லாத்தில் சேர்ந்து அதன் சட்ட திட்டங்களைப் பற்றிப்பிடிப்பதை அல்லாஹ் கடமையாக்கி அதற்கு மாற்றமான அனைத்தையும் விட்டும் விலகிட வேண்டுமென எச்சரித்தும் இருக்கின்றான். இந்த விஷயத்தை மக்களிடம் எடுத்து விளக்க முஹம்மது(ஸல்) அவர்களை நபியாக அல்லாஹ் அனுப்பி வைத்தான். அவர்களைப் பின்பற்றியவர்கள் தான் நேர் வழிபெற்றவர்கள் எனவும் பின்பற்றாமல் புறக்கணித்தவர்கள் வழிகெட்டவர்கள் எனவும் அறிவித்திருக்கின்றான். இஸ்லாத்திலிருந்து வெளியேறி விடுவதற்கான காரணங்களையும் இணைவைத்தல் இறைநிராகரிப்பு ஆகியவை பற்றியும் பல திருவசனங்களில் எச்சரித்திருக்கின்றான்.

ஒரு முஸ்லிம் இஸ்லாத்திற்கு முரணான பல காரணங்களால் மார்க்கத்தை விட்டும் வெளியேறியவனாகக் கருதப்படுவான். அவன் இஸ்லாத்தை விட்டும் வெளியேறி விடுவதால் அவனது உடல் பொருளுக்கு இஸ்லாம் உத்திரவாதம் அளிக்காது. இஸ்லாத்தை விட்டும் வெளியேற்றுகின்ற காரணங்களுள் மிகத் தீயதும் பயங்கரமானதுமான பத்துக் காரியங்களை மார்க்க அறிஞர்கள் குறிப்பிட்டுள்ளனர். அவற்றிலிருந்து நீங்களும் விலகி மற்றவர்களையும் விலக்கிப் பாதுகாப்புப் பெறுவதற்காக அவற்றை சிறு விளக்கங்களுடன் சுருக்கமாகக் கூறுகின்றோம்.

முதலாவது: அல்லாஹ்வுக்குச் செலுத்த வேண்டிய வணக்க வழிபாடுகளில் அவனுக்கு இணை வைத்தல்.

அல்லாஹ் குறிப்பிடுகிறான்:

إِنَّ اللَّـهَ لَا يَغْفِرُ أَن يُشْرَكَ بِهِ وَيَغْفِرُ مَا دُونَ ذَٰلِكَ لِمَن يَشَاءُ

நிச்சயமாக அல்லாஹ் தனக்கு இணை வைப்பதை மன்னிக்கவே மாட்டான். இதைத் தவிர மற்ற எதையும் தான் நாடியவர்களுக்கு மன்னிப்பான். (அல்குர்ஆன் 4:48)

இன்னும் அல்லாஹ் கூறுகிறான்:

إِنَّهُ مَن يُشْرِكْ بِاللَّـهِ فَقَدْ حَرَّمَ اللَّـهُ عَلَيْهِ الْجَنَّةَ وَمَأْوَاهُ النَّارُ ۖ وَمَا لِلظَّالِمِينَ مِنْ أَنصَارٍ

எவனொருவன் அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பானோ அவனுக்கு அல்லாஹ் சுவனபதியை நிச்சயமாக ஹராமாக்கி விட்டான். மேலும் அவன் ஒதுங்குமிடம் நரகமேயாகும். அக்கிரமக்காரர்களுக்கு உதவிபுரிவோர் எவருமில்லை. (அல்குர்ஆன் 5:72)

இறந்தவர்களிடம் தமது தேவைகளைக் கேட்பதும் அவர்களிடம் பாதுகாப்புத் தேடுவதும் அவர்களுக்காக அறுத்துப்பலியிடுவதும் நேர்ச்சை செய்வதும் இந்த வகையைச் சார்ந்ததே.

இரண்டாவது: தனக்கும் அல்லாஹ்வுக்கும் மத்தியில் ஒருவரை இடைத்தரகராக ஏற்படுத்தி அவர்களை அழைத்துத் தமக்காக அல்லாஹ்விடம் சிபாரிசு செய்யக் கோருவதும் அவர்களிடத்தில் முழு நம்பிக்கை வைப்பதும் இறை நிராகரிப்பாகும்.

மூன்றாவது: அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பவர்களை இறை நிராகரிப்பவர்கள் என யார் கருதவில்லையோ அவர்களும் அவர்களை சேர்ந்தவர்களே என்பதை சந்தேகம் கொள்வோரும் அவர்களின் கொள்கை வழிமுறைகளைச் சரியானது எனக் கருதுவோரும் இறைநிராகரிப்பாளர்களே.

நான்காவது: நபி(ஸல்) அவர்கள் காட்டிய நேர்வழியை விட மற்றவர்களின் வழி காட்டல்கள் பரிபூரணமானவை என நம்புகிரவர்களும். அல்லது நபி(ஸல்) அவர்கள் தீப்பை விடக் மற்றவர்களின் தீர்ப்பே சிறந்தது என்று யார் நம்புகிறவர்களும் இறை நிராகரிப்பவர்களே.

ஐந்தாவது: நபி(ஸல்) அவர்கள் கொண்டு வந்த ஷரீஅத்தில் எதையேனும் வெறுத்தால் அவன் இறை நிராகரிப்பாளனாக ஆகிவிடுகிறான். வெறுப்புடன் அச்செயலை அவன் எடுத்து நடந்தாலும் சரியே. ஏனெனில் அல்லாஹ் கூறுகிறான்:

அல்லாஹ் இறக்கி வைத்ததை மெய்யாகவே அவர்கள் வெறுத்தார்கள். ஆகவே அவர்களுடைய செயல்களை அவன் அழித்துவிட்டான். (அல்குர்ஆன் 47:9)

ஆறாவது: நபி(ஸல்) அவர்கள் கொண்டு வந்த மார்க்கத்தில் எதையாவது கேலி செய்பவனும் அல்லது அம்மார்க்கம் கூறும் பிரதிபலனையோ தண்டனையையோ கேலி செய்பவனும் இறை நிராகரிப்பவனாகிவிடுகிறான். ஏனெனில் அல்லாஹ் கூறுகிறான்:

அல்லாஹ்வையும் அவன் வசனங்களையும் அவன் தூதரையுமா நீங்கள் பரிகசித்துக் கொண்டிருந்தீர்கள்? என்று நபியே! நீர் கேட்பீராக! நீங்கள் செய்யும் விஷமத்தனமான பரிகாசத்திற்கு வீண் புகல் கூற வேண்டாம். நீங்கள் நம்பிக்கை கொண்ட பின் நிச்சயமாக நிராகரிப்போராய் விட்டீர்கள். (அல்குர்ஆன் 9:65,66)

ஏழாவது: சூனியம் செய்தல். சூனியத்தின் வகையைச் சார்ந்தது தான் (1.) வேண்டாத வெறுப்புண்டாக்குதல் (2.) தகாத ஆசையூட்டுதல் ஆகியவை. இவ்வாறு செய்வோரும் இதை விரும்பக்கூடியவர்களும் இறை நிராகரிப்பவாகிவிடுகின்றனர். ஏனெனில் அல்லாஹ் கூறுகிறான்:

அவர்களிடம் சூனியத்தைக் கற்க வருபவர்களை நோக்கி நாங்கள் சோதனையாக இருக்கிறோம். இதைக் கற்று நீங்கள் இறைநிராகரிப்பவர்களாகி விடாதீகள் என்று சொல்­ எச்சரிக்காத வரையில் எவருக்கும் இந்தச் சூனியத்தைக் கற்றுக் கொடுக்கவில்லை. (அல்குர்ஆன் 2:102)

எட்டாவது: முஸ்லிம்களுக்கு எதிராக இணைவைப்பவாகளுடன் சேர்ந்து அவர்களுக்குத் துணைபுரிவது. இது பற்றி அல்லாஹ் குறிப்பிடுகிறான்:

அவர்களை (யூதர்களையும் கிறித்தவர்களையும்) உங்களுடைய பாதுகாவலராகக் கொண்டால் நிச்சயமாக அவரும் அவர்களைச் சேர்ந்தவர் தான். நிச்சயமாக அல்லாஹ் அநியாயக்கார மக்களுக்கு நேர்வழி காட்டமாட்டான். (அல்குர்ஆன் 5:51)

ஒன்பதாவது: நபி(ஸல்) அவர்களின் ஷரீஅத்தை விட்டு வெளியேறுவது சிலருக்கு கூடும் என நம்பக்கூடியவனும் நிராகரிப்பளராகி விடுகின்றான். ஏனெனில் அல்லாஹ் கூறுகிறான்:

இஸ்லாம் அல்லாத வேறு மாக்கத்தை எவரேனும் விரும்பினால் அது ஒரு போதும் அவர்டமிருந்து ஒப்புக்கொள்ளப்பட மாட்டாது. மேலும் அத்தகையவர் மறுமை நாளில் நஷ்டமடைந்தோரில் தான் இருப்பார்.(அல்குர்ஆன் 3:85)

பத்தாவது: அல்லாஹ்வின் மார்க்கமான இஸ்லாத்தைக் கற்றறிய முற்படாமலும் அதன்படிச் செயல்படாமலும் அம்மார்க்கத்தைப் புறக்கணித்து மறுத்தல். இது பற்றி அல்லாஹ் கூறுகிறான்:

எவன் தன்னுடைய இறைவனின் வசனங்களால் நினைவூட்டப்பட்ட பின்னரும் அவற்றைப் புறக்கணித்து விடுகின்றானோ அவனை விட அநியாயக்காரன் எவன் இருக்கிறான்? நிச்சயமாக நாம் இத்தகைய குற்றவாளிகளைத் தண்டிப்போம்.(அல்குர்ஆன் 32:22)

இஸ்லாத்தை விட்டும் வெளியேற்றும்படியான இவற்றைப் பரிகாசமாக எண்ணிச் செய்பவனுக்கும் பிடிவாதமாகச் செய்பவனுக்கும் பயந்து பயந்து செய்பவனுக்குமிடையில் எவ்வித வேறுபாடும் இல்லை. வற்புறுத்தப்பட்டுச் செய்பவன் மட்டும் விதிவிலக்குப் பெறுகிறான். இவையனைத்தும் தீமையை விளைவிக்கும் பயங்கரமான காரியங்கள் ஆகும். மனிதர்களில் பெரும்பாலானவர்கள் அதிகமாக வீழ்ந்து விடும் தவறுகளும் ஆகும். எனவே ஒரு முஸ்லிம் இவற்றைத் தானும் அஞ்சி ஒதுங்கி விடுவதுடன் பிறரையும் எச்சரிப்பது அவசியமாகும்.

மனிதர்களால் இயற்றப்பட்ட சட்டங்களும் விதி முறைகளும் இஸ்லாமிய ஷரீஅத் சட்டத்தை விடச் சிறந்தது என நம்பக்கூடியவரும் இஸ்லாமிய சட்ட திட்டங்களை இந்த இருபதாம் நூற்றாண்டில் செயல்படுத்த முடியாது எனக் கருதுபவரும் முஸ்லிம்கள் அனைத்துத் துறைகளிலும் பின் தங்க இஸ்லாமே காரணம் என்று கூறுபவரும் அல்லது இஸ்லாம் என்பது ஒரு தனி மனிதனுக்கும் அவன் இறைவனுக்குமிடையிலுள்ள தொடர்பு மட்டுமே ஏனைய வாழ்கைத் துறைகளில் அதற்குச் சம்பந்தமில்லை எனக் கூறுபவரும் இறை நிராகரிப்பவர்கள் தான்.

திருடியவனின் கையை வெட்டுதல் திருமணமான விபச்சாரர்களை கல்லால் அடித்து அல்லாஹ்வின் சட்டத்தை நிலை நாட்டுவது போன்றவை தற்காலத்துக்குப் பொருந்தாது எனக் கருதுபவனும் அந்த வகையில் சேருகிறான்.

கொடுக்கல் வாங்கல் அல்லது தண்டனைச் சட்டங்கள் இன்னும் இது போன்றவற்றில் அல்லாஹ் அல்லாதவர்களின் தீர்ப்பை வழங்குவது கூடும் எனக் கருதுபவனும் அந்த வகையில் சேர்ந்து இறை நிராகரிப்பவனாக ஆகிவிடுகிறான். அந்தச் சட்டங்கள் அல்லாஹ்வின் சட்டத்தை விடச் சிறந்தது என அவன் நம்பாவிட்டாலும் அல்லாஹ் தடுத்தவற்றை ஆகுமாக்குகின்றான்.

எனவே மார்க்கத்தில் தெளிவாக அறியப்பட்ட விபச்சாரம், மது அருந்துதல், வட்டி வாங்குதல் அல்லாஹ்வின் ஷரீஅத் அல்லாதவற்றின் படித் தீர்ப்பு வழங்குதல் போன்ற அல்லாஹ் ஹராமாக்கியவற்றை ஆகுமாக்குபவன் இறை நிராகரிப்பாளர் ஆகிவிடுகின்றான்.

ரமலானில் பசித்திருந்தோம். தாகித்திருந்தோம். வழிபாடுகளில் ஈடுபட்டோம். குர்ஆனை ஓதினோம். இரவில் விழித்து வழிபாடுகள் புரிந்தோம். இன்னும் இரண்டு மாதங்களில் ஹஜ் செய்ய இருக்கிறோம். பல லட்சங்கள் செலவு செய்து அரஃபா முஸ்தலிஃபா போன்ற இடங்களில் மிகக் கஷ்டப்பட்டு செய்ய வேண்டிய வழிபாடு என்பதில் மாற்றுக்கருத்தில்லை. இந்த வழிபாடுகள் இறைவனால் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டுமென்றால் கண்டிப்பாக நாம் உண்மை முஸ்லிம்களாக மூமின்காளாக இருக்க வேண்டும். இஸ்லாத்தை விட்டும் வெளியேற்றும் செயல்களைச் செய்து விட்டு நாம் என்ன நல்லறம் செய்தாலும் அதை அல்லாஹ் ஏற்றுக் கொள்ளமாட்டான் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

அல்லாஹ்வுக்கு கோபத்தை ஏற்படுத்துகின்ற செயல்களை விட்டும் அவனது கொடிய தண்டனைகளை விட்டும் அல்லாஹ்விடமே பாதுகாப்புத் தேடுகின்றோம். அவனது தூதர் முஹம்மது (ஸல்) அவர்களுக்கும், அவர்களின் தோழர்கள் மீதும் அல்லாஹ் அருள் புவரினாக!

Previous Post Next Post