அல்லாஹ்வைப் பொய்ப்பிப்போரை அவனே பார்த்துக் கொள்வான்.

அர்ஷின் இரட்சகனாகிய கருணை மிகு அல்லாஹ்வை மதித்து அவன் வழங்கிய எண்ணில் அடங்காத அருட்கொடைகளை அறிந்தும்  குறைவான 
அடியார்களே அவனுக்கு நன்றி செலுத்துவதாக குர்ஆன் குறிப்பிடுகின்றது.

அதில் நன்றி சொல்கின்ற குறைவான அடியார்களாக இருக்க வேண்டிய நாம் நன்றி மறந்தவர்களில் உள்ளடங்கி விடக் கூடாது என்பதில்  மிகக் கவனமாக இருக்க வேண்டும். 

அல்லாஹ்வின் இறை வசனமான

{وَقَلِيلٌ مِنْ عِبَادِي الشَّكُورُ}.[سبأ:13]. 
எனது அடியார்களில் குறைந்த தொகையினரே நன்றிபாராட்டுவோராக இருக்கின்றனர். (ஸபஃ- 13) என்ற மேற்படி வசனத்தை அடைந்த கலீஃபா உமர் (ரழி) அவர்கள் தன்னை விழித்து, சுய பரிசோதனை செய்து இவ்வாறு பேசினார்களாம்.

فقال عمر رضي الله عنه يخاطب نفسه: ((كل الناس أعلم منك يا عمر، اللهمَّ اجعلني من القليل الشَّاكر، لا من الكثير الساهي واللاهي)).

உமரே! உன்னைத் தவிர அனைத்து மக்களும் விபரமானவர்களே. யா அல்லாஹ்!   நன்றி செலுத்தும் குறைவான அந்த மக்களில் என்னையும் சேர்த்துக் கொள். வீணாக விளையாடித் திரியும்  பெரும்பாலானவர்களோடு என்னை ஆக்கி விடாதே! 

ஆம்! சுவனவாதிகள் அப்படித்தான் காட்சி தருவார்கள். சாட்சி கூறுவார்கள். 
 رضي الله عنك يا عمر
உமரே அல்லாஹ் உம்மைப் பொருந்திக் கொள்வானாக! 

நமது இரட்சகன், நம்மை இரட்சிப்பவனாகிய அந்த அல்லாஹ்வே. அதில் எவ்வித சந்தேகமும் கிடையாது .

நாம் அவனையே வணங்கி வழிபடத் தகுதியானவனாக இந்த நிமிடம் வரை நம்பிக்கை கொள்கின்றோம்.
அதன்காரணமாகவே நாம் لا إله إلا الله உண்மையாக வணங்கி வழிபடத் தகுதியானவன் அல்லாஹ்வைத் தவிர வேறு ஒருவரும் இல்லை என  நாவினால் தூய எண்ணத்தோடு கூறி, உள்ளத்தாலும் உறுதியாக நம்புகின்றோம்.
محمدٌ رسول الله இறைத்தூதரைக் கூட தூதராக எடுத்துள்ளோமே தவிர அவர்களை வணங்கப்படுபவராகவோ, அவரது மண்ணறையை கொண்டாட்ட இடமாகவோ நாம் எடுத்துக் கொள்ள வில்லை. 

அல்லாஹ்வின் பின்வரும் கேள்வியையும் அவனது செயலையும் பற்றி சற்று சிந்திக்க வேண்டும் .

يَا أَيُّهَا الْإِنسَانُ مَا غَرَّكَ بِرَبِّكَ الْكَرِيمِ (6)
மனிதனே! சங்கைமிக்க உமது இரட்சகனை விட்டும் உன்னை மதிமயங்கச் செய்தது என்ன?

 الَّذِي خَلَقَكَ فَسَوَّاكَ فَعَدَلَكَ
அவன் எத்தகையவன் எனில் அவனே உன்னைப் படைத்தான். பின்னும் அவனே உன்னை செவ்வையாக்கினான். பின்னும் அவனே உன்னை சீராக்கினான்.
 (7) فِي أَيِّ صُورَةٍ مَّا شَاءَ رَكَّبَكَ
அவன் நாடிய (அழகிய நேர்த்தியான) தோற்றத்தில் உன்னை அவனே இணைத்தான். (அல்இன்ஃபிதார்-6,7)

உண்மைதான் ரப்பே!
நீ எமக்கு வழங்கிய  எமது உடலில் உள்ள உறுப்பின் ஒரு நாள் அசைவிற்கு கூட நாம் இன்னும் நன்றி செலுத்த முடியாத பலவீனர்களாக இருக்கின்றோம்.

 எங்கள் இரட்சகனே! நீ உனது கருணையால் எம்மை மன்னித்து விடு!  என்பதைத் தவிர வேறென்ன வார்த்தைகள்தான் நம்மிடம் உண்டு?

இது இவ்வாறிருக்க அந்த அல்லாஹ்வின்
நிலத்தில் அவன் பொழிவிக்கின்ற  மழைப் பிச்சையில் வாழ்ந்து கொண்டு, அதில் அவன் விளைவித்து தருவதை வயிறு முட்ட உண்டு கொண்டு, நியூஸிலேந்து  கேப்பைகள் போல வளர்ந்து கொண்டு பொய்யர்களாக, சமூகத் துரோகிகளாக, பிற மனிதர்களை நோவினைப் படுத்துவோராக இருப்பது மாத்திரமின்றி , அவனைப் பொய்ப்பிப்பது, அவனைப் பற்றி இழிவாக பேசுவது, தேவையில்லாத வார்த்தைகளால் அவனை ஏளனம் செய்வது போன்ற கேடு கெட்ட செயல்பாட்டாளர்களின் தோணி தொடர்ந்தும் கடலில் பயணிக்காது. 

அது கடல் நடுவில் கவிழ்ந்து போகும். 
அல்லாஹ் பின்வருமாறு கூறுவது அவர்களுக்கு நடந்தே ஆகும் .

وَذَرْنِي وَالْمُكَذِّبِينَ أُولِي النَّعْمَةِ وَمَهِّلْهُمْ قَلِيلًا●  إِنَّ لَدَيْنَا أَنْكَالًا وَجَحِيمًا ● وَطَعَامًا ذَا غُصَّةٍ وَعَذَابًا أَلِيمًا [ المزمل / ١١ - ١٤]

(முஹம்மதே)! அருள்பாக்கியம் பெற்றும் (என்னைப்)  பொய்ப்பிப்போரோடு என்னை விட்டு விடுவீராக! நிச்சயமாக நம்மிடம்  நோவினை தரும் தண்டனையும் கூடவே, நரக வேதனையும் தொண்டையில் சிக்கிக் கொள்ளும் (கள்ளி முள்) உணவும், நோவினை தரும் வேதனையும் உண்டு. (அல்-முஸ் ஸம்மில். 11-14)

ஃபிர்அவன், ஹாமான், காரூன், நம்றூத், கன்ஆன், குரைஷியக் காஃபிர்கள் போன்ற கொடியவர்களுக்கு அல்லாஹ் வழங்கிய தண்டனை பற்றி அறிவோமல்லவா?

அதனால் அல்லாஹ்வைப் பொய்ப்பிப்போரை அவனிடமே விட்டு விடுவோம்.
اللهم عليك بهم எனப் பிரார்த்தனை செய்து கொண்டே இருப்போம். அவன் நமக்கு போதுமானவன்.


-எம்.ஜே. எம்.  ரிஸ்வான் மதனி

Previous Post Next Post