அல்லாஹு அக்பர்



- ஷைய்க். M. பஷீர் ஃபிர்தவ்ஸி

முஸ்லிம்களின் வாழ்வில் அன்றாடம் நூற்றுக்கும் அதிகமான தடவை மொழிகின்ற வார்த்தை தான் அல்லாஹு அக்பர் என்பது! இதில் இரண்டு வார்த்தைகள் உள்ளன ஒன்று அல்லாஹு இரண்டாவது அக்பர்.

அல்லாஹு என்றால் யார்?

மனிதர்களில் அதிகமானவர்கள் அல்லாஹ் என்றால் அரபியர்களின் இறைவன் என்றும் முஸ்லிம்களின் இறைவன் என்றும் எண்ணுகிறார்கள். உண்மையில் மனிதர்கள் அனைவரையும் படைத்த இறைவனைக் குறிப்பதற்கே அல்லாஹ் என்ற சொல்லை பயன்படுத்துகிறோம்.

அந்த ஒரே இறைவனைக் குறிக்க ஆங்கிலத்தில் காட் (God), தமிழில் கடவுள், ஹிந்தியில் பகவான் என்றெல்லாம் குறிப்பிடுவதைக் காணலாம். என்றாலும் மேற்கூறிய வார்த்தைகளைக் காட்டிலும் அல்லாஹ் என்ற சொல் தனித்து விளங்குகிறது என்பதற்கு பல்வேறு காரணங்கள் உண்டு அதில் சில காரணங்கள்:
இவ்வார்த்தைக்கு ஆண்பால் பெண்பால் கிடையாது, பன்மையும் கிடையாது. எப்போதும் இது ஒருமையிலேயே திகழும். உதாரணமாக காட், என்ற வார்த்தை God – god’s , goddess அல்லது கடவுள் – கடவுளர்கள் என்றும் பகவான் – பகவதி என்றும் பன்மைக்கும், பாலுக்கும் ஏற்றவாறு மாறுவதுபோல் அல்லாஹ் என்ற வார்த்தை ஒருபோதும் மாறுவதில்லை.

இறைவனின் மார்க்கம் அனைத்து மக்களுக்குமானது உலகில் உள்ள மக்கள் அவனையே அழைத்து பிரார்த்திக்க வேண்டும். எந்த மொழி பேசக்கூட்டியவராக இருந்தாலும் அவர் அல்லாஹ் என்று அழைக்கும் போது அதன் மூலம் உலகளாவிய சகோதரத்துவம் உருவாகிவிடுகிறது.

இந்த உலகத்தையும் அதில் உள்ள அனைத்தையும் படைத்து பரிபாலித்து வரும் ஏகானாகிய இறைவன் தனக்கு சூட்டிக்கொண்ட பெயர் தான் அல்லாஹ் என்பதாகும்.

இதன் பொருள் உண்மையான வணக்கத்திற்குத் தகுதியானவன் என்பதாகும்.
இமாம் இப்னுல் கய்யிம்(ரஹ்) அவர்கள் கூறினார்கள், “அல்லாஹ் என்ற பெயர் அவனது அழகிய அனைத்து பெயர்களின் பொருளையும் அதனுள் உள்ளடக்கியிருக்கிறது என்று அறிகிறோம்.

மேலும் கூறினார்கள் :
அல்லாஹ் என்ற பெயர் அவன் இறைவன் என்பதையும் வணக்கத்திற்குரியவன் என்பதையும் தெரிவிக்கிறது பணிவு, மதிப்பச்சம், நேசம் ஆகியவற்றால் படைப்புகள் அவனை வணங்குகிறார்கள். தேவைகளின் போது திடுக்கிட்டு அவன் பக்கம் திரும்புவார்கள்.
(மதாரிஜுஸ்ஸாலிகீன் 1\56)

இதன் அடிப்படையில் படைப்பினங்கள் அனைவரும் வணங்கி,வழிபடத் தகுதியுடையவன் அல்லாஹ் மட்டுமே ..
நபியே நீர் கூறுவீராக! “அல்லாஹ் அவன் ஒருவனே. அவன் தேவைகள் ஏதும் இல்லாதவன். அவன் எவரையும் பெற்றெடுக்கவில்லை அவனையும் யாரும் பெற்றெடுக்கவில்லை. அன்றியும் அவனைப்போல் எவரும் (எதுவும்) இல்லை.”
(திருக்குர்ஆன் 112: 1-4)

மனிதர்களே! நீங்கள் உங்களையும் உங்களுக்கு முன்னிருந்தோரையும் படைத்த உங்கள் இறைவனையே வணங்குங்கள். (அதனால்) நீங்கள் தக்வா இறையச்சமும், தூய்மையும் உடையோராகலாம்.
(அல்குர்ஆன் 2:21)

அல்லாஹு அக்பர்

கபீர் என்றால் பெரியவன் என்று பொருளாகும். அக்பர் என்றால் மிகப்பெரியவன் என்று பொருளாகும். அல்லாஹு அக்பர் என்றால் அல்லாஹ் அனைத்தையும் விட மிகப்பெரியவன் மகத்துவமிக்கவன் இன்னும் எல்லாவற்றையும் விட கண்ணியமிக்கவன் என்பதாகும். அல்லாஹ் மிகப்பெரியவன் என்றால் அவனை விட பெரியது எந்த ஒன்றும் இல்லை. அனைத்தும் அவனுக்கு பணிகிறது. தக்பீர் என்பது அல்லாஹ்வின் மேன்மையை அறிவிப்பதும் உள்ளம் அவனது பெருமைக்கு பணிவதுமாகும்.

அல்லாஹ் அவனது (தாத்தால்) உள்ளமையாலும் ஆற்றலாலும், கண்ணியத்தாலும், வலிமையாலும், மகத்துவத்தாலும் மிகப்பெரியவன் ஆவான் மேற்கூறிய பொருள் ஒரு நம்பிக்கையாளனுக்கு அல்லாஹ்வின் மீதான உறுதியையும், அவனைக்குறித்த நல்லெண்ணத்தையும் வழங்குகிறது. அவனது வாழ்க்கையில் எந்த தடைகளுக்கு முன்னரும் தடுமாறி நிற்காமல் வரும் காலத்தைக் குறித்து அச்சம்கொள்ளாமலும் இழந்தவற்றிற்காக வருத்தப்படாமலும் இருப்பதற்குமுரிய உறுதியையும் அது வழங்குகிறது.

அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ்விற்கு மிகவும் பிடித்தமான வார்த்தை நான்கு சுப்ஹானல்லாஹ், அல்ஹம்துலில்லாஹ், லா இலாஹ இல்லல்லாஹ், அல்லாஹு அக்பர் இதில் எதைக்கொண்டு துவங்கினாலும் உனக்கு எந்த தீங்கும் இல்லை.
நூல்:ஸஹீஹ் முஸ்லிம் 2137

அல் அலீ என்ற அல்லாஹ்வின் பெயருடன் அல் கபீர் என்ற பெயர் இணைத்து கூறப்படுவதுண்டு.
(பார்க்க அல்குர்ஆன் 22:62 / 40:12)

அல்லாஹு அக்பர் என்று கூறுவதை செவியுறும் ஷைத்தான் சிறுமை அடைந்து விடுகிறான்.
தக்பீர் சொல்வது மகத்தான திக்ராகும் அதே போன்று அது மிகப்பெரிய இபாதத் ஆகும். எனவே தான் அல்லாஹ் தக்பீர் கூறுவதற்கு அடியார்களுக்கு அழைப்பை விடுக்கிறான் அதற்காக ஆர்வமூட்டுகிறான்.

“அன்றியும், (தனக்குச்) சந்ததியை எடுத்துக் கொள்ளாதவனும், (தன்) ஆட்சியில் தனக்குக் கூட்டாளி எவரும் இல்லாதவனும், எந்தவித பலவீனத்தை கொண்டும் எந்த உதவியாளனும் (தேவை) இல்லாமலும் இருக்கிறானே அந்த நாயனுக்கே புகழ் அனைத்தும்” என்று (நபியே!) நீர் கூறுவீராக; இன்னும் (அவனை) எப்பொழுதும் பெருமைப் படுத்த வேண்டிய முறையில் பெருமைப் படுத்துவீராக.
(அல்குர்ஆன் 17:111)

மேலும், உம் இறைவனைப் பெருமைப் படுத்துவீராக.
(அல்குர்ஆன் 74:3)

மார்க்கத்தில் தக்பீர் சொல்வதற்குரிய இடங்கள் 

1.அதானின் போது

அதான் கூறும்போதும் இகாமத் கூறும்போதும் அல்லாஹ் அக்பர் என்று தான் தக்பீர் கூறவேண்டும். அதானில் நாள் ஒன்றுக்கு முப்பது முறை தக்பீர் சொல்லப்படுகிறது.

2.இகாமத்தின் போது

இகாமத்தில் இருபது முறை தக்பீர் சொல்லப்படுகிறது.

3.தொழுகையின் போது

தொழுகையில் ஆரம்பத்தில் தக்பீர் சொல்லவேண்டும் அதன் பின்னர் ருகூஃ, சுஜூத் போன்ற அசைவின் போதும் தக்பீர் சொல்லவேண்டும்.

கடமையான தொழுகையில் மட்டும் ஒருவர் தொண்ணுற்றி நான்கு முறை தக்பீர் சொல்ல வேண்டும். இமாம் நவவி(ரஹ்) அவர்கள் கூறினார்கள், இரண்டு ரகஅத் தொழுகையில் பதினொரு முறை தக்பீர் சொல்லவேண்டும் அவை தக்பீருத் தஹ்ரீம் மேலும் ஒவ்வொரு ரகஅத்திலும் ஐந்து தக்பீர். மூன்று ரகஅத் தொழுகையில் பதினேழு முறை தக்பீர் சொல்லவேண்டும் அவை தக்பீருத் தஹ்ரீம், முதல் தஷஹ்ஹுதில் இருந்து எழும் போது கூறும் தக்பீர் மேலும் ஒவ்வொரு ரகஅத்திலும் ஐந்து தக்பீர். நான்கு ரகஅத் தொழுகையில் இருபத்தி இரண்டு முறை மொத்தமாக ஐவேளைத் தொழுகையில் தொண்ணுற்றி நான்கு தக்பீர் சொல்லவேண்டும்.
ஷரஹ் ஸஹீஹ் முஸ்லிம் 4\98

4.தொழுகைக்கு பின்னர்

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி(ஸல்) அவர்கள் தொழுகையை முடித்துவிட்டார்கள் என்பதை (மக்கள் கூறும்) தக்பீரை வைத்து நான் அறிந்துகொள்வேன்.
நூல்:ஸஹீஹுல் புஹாரி 842

5.துல்ஹிஜ்ஜா மாதத்தின் ஆரம்ப பத்து நாட்கள்

அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள், இந்த பத்து நாட்களில் செய்கின்ற அமல்கள் வேறு நாட்களில் செய்யும் அமல்களை விட அல்லாஹ்விற்கு மிகவும் பிடித்தமானதாகும். எனவே அதில் தக்பீரையும் (அல்லாஹு அக்பர்) தஹ்லீலையும் (லா இலாஹ் இல்லல்லாஹ்) தஹ்மீத் (அல்ஹம்துலில்லாஹ்) என்பதையும் அதிகமாகக் கூறுங்கள்.
நூல்: முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா 13919

6.மேட்டில் ஏறும் போது தக்பீர் சொல்வது

ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் மேட்டில் ஏறும்போது ‘அல்லாஹு அக்பர்’ (அல்லாஹ் மிகப் பெரியவன்) என்று தக்பீர் கூறிவந்தோம்.
ஸஹீஹுல் புஹாரி 2993

7.தக்பீர் ஹஜ்ஜின் அடையாளங்களில் ஒன்று

ஜம்ராவில் கல்லெறியும் போது மினாவிலிருந்து அரஃபாவிற்கு செல்லும்போது,
முஹம்மத் பின் அபீபக்ர் அஸ்ஸகஃபீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நானும் அனஸ் பின் மாலிக்(ரலி) அவர்களும் மினாவிலிருந்து அரஃபாவுக்குப் போகும்போது அனஸ்(ரலி) அவர்களிடம், “நீங்கள் அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களுடன் இருந்தபோது இன்றைய (அரஃபா) நாள் என்ன செய்தீர்கள்?” எனக் கேட்டேன்.
அதற்கு, “அன்று எங்களில் சிலர் தல்பியா (லப்பைக்க அல்லாஹ்) கூறிக்கொண்டிருந்தனர்; அதற்கு ஆட்சேபம் தெரிவிக்கப்படவில்லை. வேறுசிலர் தக்பீர் கூறினார்கள்; அதற்கும் ஆட்சேபம் தெரிவிக்கப்படவில்லை” என அனஸ்(ரலி) அவர்கள் கூறினார்கள்.
(ஸஹீஹுல் புஹாரி 1659)

8.இரண்டு பெரு நாட்களிலும் 

ஈதுல் ஃபித்ர், ஈதுல் அள்ஹா ஆகிய இரண்டு பெருநாட்களிலும் பெருநாள் இரவிலிருந்து தொழுகையின் நேரம் வரை தக்பீர் சொல்வது.

உங்களுக்கு நேர்வழி காட்டியதற்காக அல்லாஹ்வின் மகத்துவத்தை நீங்கள் போற்றி நன்றி செலுத்துவதற்காகவுமே (அல்லாஹ் இதன் மூலம் நாடுகிறான்).
(அல்குர்ஆன் 2:185)

9.ஈது தொழுகையில் அதிகப்படியான தக்பீர் சொல்வது

அல்லாஹ்வின் தூதர்(ஸல்) ஈதுல் அள்ஹா மற்றும் ஈதுல் ஃபித்ர் தொழுகை முதல் ரகஅத்தில் ஏழு தக்பீரும் இரண்டாவது ரகஅத்தில் ஐந்து தக்பீரும் கூறக்கூடியவராக இருந்தார் என ஆயிஷா(ரழி) அவர்கள் அறிவித்தார்கள்.
நூல்:சுனன் அபீதாவூத் 1149

10.அல்லாஹ்வின் தூதர் வாகனத்தில் ஏறினால் மூன்று முறை தக்பீர் கூறுவார்கள்

அல்லாஹு அக்பர் என்பது முஸ்லிமின் வாழ்வில் ஈமானிய புத்துணர்ச்சியை அளிக்கிறது.

அல்லாஹ்வின் மார்க்கத்திற்காக தன்னை அர்ப்பணித்துக்கொண்ட வீரன் அவனது மார்க்கத்தையும், நீதியையும், நியாயத்தையும், நிலைநாட்ட மேற்கொள்ளும் முயற்சியின் போது எதிரியின் அச்சுறுத்தலுக்கு பணியாமல் அடக்குமுறைக்கு அஞ்சாமல் நெஞ்சுறுதியோடு இருப்பதற்குரிய உற்சாகத்தை அல்லாஹு அக்பர் என்கிற வார்த்தையே அவனுக்கு உரமாக உள்ளது.

போர்க்களத்தில் அல்லாஹு அக்பர் என்று கூறும்போது அல்லாஹ்வின் கண்ணியத்தையும், அவனது வல்லமையையும், மகத்துவத்தையும், அவனது உதவியையும் நம்பிக்கையாளன் உணர்கிறான். அதன் காரணமாக அல்லாஹ்விடம் ஆற்றலையும், உறுதிப்பாட்டையும், இக்லாஸையும் (உளத்தூய்மையையும்) வேண்டுகிறான்.
Previous Post Next Post