ஸுபியாக்களிடையே செய்குல் அக்பர், கிப்ரீதுல் அம்ர் என அழைக்கபடும் இப்னு அரபி ஹி 560ல் ஸ்பெயினில் உள்ள முர்ஸிய்யா என்ற ஊரில் பிறந்தவர். இவரது பெயர் முஹம்மத் இப்னு அலி இப்னு முஹம்மத் இப்னு அஹ்மத் அல்ஹாதமுத் தாஇய்யு. இப்னு அரபி என்ற பெயர் கொண்டு அழைக்கப்படுகின்றார்.
இவர் தனது எட்டாவது வயதில் அஸ்பீலியாவுக்குச் சென்று குர்ஆனை மனனமிட்டார். கிராஅத், ஹதீஸ் கலைகளையும் படித்தார். இலக்கியத் துறையில் அதிக ஆர்வம் செலுத்தினார். அதன்பின் ஆன்மீகக் கல்வியில் அக்கறை செலுத்தலானார். துறவு வாழ்க்கையை மேற்கொண்டார். தனித்திருந்து வணக்க வழிபாடுகளில் ஈடுபடலானார்;. இறுதியில் ஸூபியாக்கள் எனப்படும் கூட்டத்தின் பெரும் தலைவர்களில் ஒருவரானார்.
ஐரோப்பாவின் வாசலான ஸ்பெயினில் வாழ்ந்ததால் அன்றைய ஐரோப்பாவின் கலாசாரங்களையும் தத்துவ ஞானத்தையும் நன்கு அறிந்திருந்தார். ஸூபியாக்களைச் சந்திப்பதற்காகவும் அறிவைத் தேடுவதற்காகவும் டுனீசியா, தில்மஸான், பாஸ் உட்பட ஆபிரிக்க நாடுகள் பலவற்றிற்குப் பிரயாணம் செய்தார். பிறகு மக்கா சென்று ஹஜ்ஜை முடித்துக்கொண்டு ஈராக் சென்றார்.
ஹி. 603ல் எகிப்துக்குச் சென்று அங்கு பல ஸூபியாக்களைச் சந்தித்தார். அங்கு இருந்தவாறு பல நூற்களை எழுதினார். அவரது நூல்கள் கண்டனத்துக்குரிய பல விடயங்களை உள்ளடக்கியதாக இருந்தன. அங்கிருந்த உலமாக்கள் அவரை காபிர் என்றும் ஸின்தீக் என்றும் பத்வா வழங்கினர். அபுல் ஹஸன் அல் பஜாஈ என்ற பிரபல ஆலிம் அரசரிடம் சிபார்சு செய்து அவரை மரண தண்டனையிலிருந்து விடுவித்தார்.
மீண்டும் மக்கா சென்ற அவர் ஹி.607 வரை அங்கு தங்கியிருந்தார். அவ்வமயம் புதூஹாதுல் மக்கிய்யா என்ற பிரபலமான நூலை எழுத ஆரம்பித்தார். அந்நூல் ஸூபியாக்களின் அறிவுகளில் பெரும் பகுதியை உள்ளடக்கியதாக இருப்பதுடன் வஹ்ததுல் வுஜூத்ஷ என்ற அனைத்திறைக் கொள்கையை மூலக்கருவாகக் கொண்டிருந்தது.
துருக்கிய நாடுகளுக்குச் சென்ற அவர் அப்போது ரோம் ராஜ்யத்தில் இஸ்லாமிய தலைநகரான கோனியாஷவில் தங்கி மேலும் சில நூல்களை எழுதினார். அங்கு ஸத்ருத்தீன் கவ்னவியின் தாயாரைத் திருமணம் செய்தார். ஸத்ருத்தீன் பிற் காலத்தில் இவரது முக்கிய சீடரானார். பக்தாதுக்கு வந்த போது அவாரிபுல் மஆரிப்ஷ நூலாசிரியர் சிஹாபுத்தீன் ஸுஹ் ரவர்தியைச் சந்தித்தார். டமஸ்கஸ் வந்த அவர் இறுதி வரை அங்கேயே இருந்தார். மக்காவில் ஆரம்பித்த புதூஹாதுல் மக்கிய்யா என்ற நூலைப் பூர்த்தி செய்ததுடன் இன்னும் பல நூல்களையும் இயற்றினார்.
இப்னு அரபி ஸுபியாக்களில் அதிகமாக நூல்களை இயற்றியவராகக் கணிக்கப்படுகின்றார். அவர் எழுதிய 200 க்கும் மேற்பட்ட நூல்களில் புதூஹாதுல் மக் கிய்யா, புஸுஸுல் ஹிகம், அல்பனா பில் முசாஹதா, அன்காஉ மக்ரிப், முஹாளரதுல் அப்ரார் என்பன சிலவாகும்.
இப்னு அரபி வழிகேட்டில் உச்ச நிலையை அடைந்த ஸுபியாக்களின் தலைவராகக் கருதப்படுகின்றார். வஹ்ததுல் வுஜூத் என்ற அனைத்திறைக்கொள்கை உட்பட பல வழிகெட்ட கொள்கைகளை அறிமுகப்படுத்தினார். தனது வழிகேடுகளில் அதிகமானவற்றை தனக்கு மிகவும் விசுவாசமும் நெருக்கமும் உள்ள ஒரு சிலருக்கு மாத்திரமே வெளிப்படுத்தியிருந்தார். அவரது மரணத்தின் பின்பே அவரது வழிகேடுகள் வெளியே வந்தன. பெரும்பாலான உலமாக்கள் அவர் காபிர், ஸிந்தீக் என்று பத்வா வழங்கினர். அவரது கருத்துக்களைக் கண்டித்து மறுப்பு நூல்கள் வெளிவர ஆரம்பித்தன.
தகிய்யுத்தீனுல் பாஸி அல்இக்துஸ் ஸமீன் என்ற நூலிலும் புர்ஹானுத்தீனுல் பகாஈ தன்பீஹுல் கபிய் இலா தக்பீரி இப்னு அரபி என்ற நூலிலும் அல்ஸகாவீ அல்கவ்லுல் முன்பீ பீ தர்ஜமதி இப்னு அரபி என்ற நுலிலும் தூய அகீதாவை சீர்கெடுக்கும் அவரது வழிகேடுகளை அம்பலத்துக்குக் கொண்டு வந்திருப்பதுடன் அந்தக் காலத்தில் அவருக்கு மறுப்பெழுதிய உலமாக்களையும் அவர் காபிர் என்று பத்வா வழங்கிய உலமாக்களையும் குறித்துக் காட்டியுள்ளனர். அவர்களது மறுப்புரைகளையும் கொண்டுவந்துள்ளனர்.
இப்னு அரபியின் நூல்களில் உள்ள குப்ரிய்யத்தான விடயங்களைப் பாராமல் அவனது துறவு வாழ்க்கையையும் வணக்க வழிபாடுகளில் அவன் காட்டும் ஆர்வத்தையும் பார்த்த சிலர் அவனைப் புகழ்ந்துள்ளனர். அவரைப் புகழக்கூடியவர்களில் பெரும் பகுதியனரும் அவரது நுல்களில் கூறும் அவரது கருத்துக்களுக்கு இணங்கவில்லை. அவற்றிற்கு மறைவான கருத்துக்கள் உண்டு. அவற்றை அவரே அறிவார் எனக் கூறி இப்னு அரபியைப் பாதுகாத்தனர்.
நபியவர்களோ, நபித்தோழர்களோ, மற்றும் சிறந்த உம்மத் என நபியவர்களில் அத்தாட்சிப்படுத்தப்பட்ட முதல் மூன்று நூற் றாண்டுகளையும் சேர்ந்தவர்களோ இப்படியான வார்த்தைகளைக் கூறவில்லை. மத்ஹபுகளின் தலைவர்களோ மற்றைய உலமாக்களோ இவ்வாறான வார்த்தைகளைப் பயன்படுத்தவில்லை.
இப்னு அரபி புதூஹாதுல் மக்கியாவில் தாம் காதமுல் அவ்லியா வலிமார்களுக்கு முத்திரையானவர், நபிமார்கள் மலக்குகளின் உதவியுடன் அறிவைப் பெறுகின்றனர். வலிமார்கள் அல்லாஹ்விடமிருந்து அறிவைப் பெறுகின்றனர் எனக் குறிப்பிட்டு தாம் நபியை விடவும் உயர்ந்தவர் என்று நிரூபிக்க முனைகின்றான். இப்னு அரபி இத்தகைய கருத்தைக் கொண்டுள்ளார் என்பதை புதூஹாதுல் மக்கிய்யாவில் தெட்டத் தெளிவாகவே புரிந்துகொள்ள முடியும்.
தவறுகளை விட்டும் பாதுகாக்கப்பட்ட மஃஸூமான நபிமார்களின் வாயிலிருந்து ஒரு நாளும் தவறான வார்த்தைகள் வெளிவராது. அவர்கள் கூறும் வார்த்தைகள் ஏதும் வெளிப்படையில் தவறாகாத் தோன்றினாலும் அதற்காக வேறு கருத்துக்கள் வழஙகப்படலாம். ஆனால் சாதராண ஒரு மனிதனின் வார்த்தைகளுக்கு வேறுகருத்து வழங்க ஆரம்பித்தால் இஸ்லாமிய அகீதாவே தவிடுபொடியாகிவிடும்.
இப்னு அரபியின் வார்த்தைகள் இஸ்லாத்தின் அடிப்படைக்கு முரணானது, அவற்றிற்கு வேறு கருத்துக்கள் கொடுப்பதன் மூலம் அவனைப் பாதுகாக்க முடியாது என்பதை உணர்ந்த சிலர், அவை அவரது எதிரிகளால் அவரை அறியாமால் அவரது நூல்களில் செருகப்பட்டுள்ளன என வாதித்தனர். இன்றும் கூட பலர் அவ்வாறு கூறி அவனைக் காப்பாற்ற முயல்கின்றனர். அவனது ஒவ்வொரு நூலிலும் பெரும் பகுதி இவ்வாறான கருத்துக்களைக் கொண்டி ருக்கும்போது எப்படி அவை செருகுதல்கள் என்பதை ஏற்றுக்கொள்ள முடியும்.? செருகுதல்கள் எனக் கருதப்படுகின்றவைகளை எடுத்துவிட்டால் அங்கு எஞ்சப்போவது எதுவும் இல்லை. செருகுதல்கள் அல்லாதவை இவை தான் இன்று வரை எவரும் பிரித்துக் காட்டவில்லை. இந்நிலையில் அவனது நூல் களில் எப்படி நம்பிக்கை வைக்க முடியும்? ஸுபியாக்களில் ஒரு பிரிவினர் இன்று வரை அவற்றை தங்கள் வேத நூலகக் கருதுகின்றனர். மீள்பதிப்புச்செய்கின்றனர். பொக்கிஷமாகப் பாதுகாக்கின்றனர். அவர்களே இப்னு அரபியை செய்குல் அக்பர், றஹிம ஹுல்லாஹ் என்று கூறி கண்ணியப்படுத்தவும் அவனது நூல்களை வாசிக்கவும் தூண்டுகின்றனர்.
இப்னு அரபியைச் சரிகண்ட இன்னொரு பிரிவினர் அவரை செய்குல் அக்பர், கிப்ரீதுல் அஹ்மர் (கிடைப்தற்கு அரிதான ஒரு பொருள்) என அழைக்கின்றனர். அவரது கொள்கைகளைப் பின்பற்றவும் செய்கின்றனர். சில காலத்துக்கு முன் எமது நாட்டிலும் இவ்வாறான கருத்துக்களைப் பகிரங்கமாகச் சொன்ன சிலருக்கு இலங்கை உலமா சபை மதம் மாறியவர்கள் எனத் தீர்ப்பும் வழங்கியது அறிந்ததே. இந்தியாவிலும் இவ்வாறான தீர்ப்புக்கள் வழங்கப்பட்டுள்ளன. இன்று கூட இலங்கை, இந்தியா போன்ற நாடுகளில் அனைத்திறைக் கொள்கையைப் பூரணமாக நம்பியவர்கள் இருக்கவே செய்கின்றனர். தரீக்காக்களின் செய்குமார்கள் அந்தக் கொள்கையைப் போதித்து வருகின்றனர். அவர்களது அவ்ராதுகளில் அவை இடம்பெற்றிருப்பதைப் போன்று எமது நாடுகளில் ஓதப்படுகின்ற மவ்லிதுகளிலும் அவற்றைக் காணலாம். (இன்ஷா அல்லாஹ் இன்னொரு கட்டுரையில் மவ்லிதுகளில் உள்ள இத்தகைய கருத்துக்களை வெளிப்படுத்துவோம்.)
அபூ ஸலமா