குழந்தைகளின் ஆளுமை விருத்திக்கு அண்ணல் நபியின் அழகிய வழிகாட்டல்




நூலாசிரியர்: அஷ்ஷெய்க் இஸ்மாயில் ஸலபி

இஸ்லாமிய நெறியில் குழந்தை வளர்ப்பு எனும் போது அவர்களது லௌகீக நலன் நாடிய ஆளுமைகள் மட்டுமன்றி, அவர்களின் ‘ஹிதாயத்’ எனும் ஆன்மிக ஆளுமை விருத்தியும் நோக்கமாகக் கொள்ளப்படும். இந்த வகையில் குழந்தைகளின் ஆன்மிக-லௌகீக முன்னேற்றத்திற்கு நபி(ஸல்) அவர்கள் கொடுத்த முக்கியத்துவம், அதற்காக அவர்கள் காட்டிய வழிமுறைகளை இங்கே சுருக்கமாகத் தொகுத்துத் தர விரும்புகின்றோம்.

1. பிரார்த்தனை:

நபி(ஸல்) அவர்கள் தமது எதிரிகளின் குழந்தைகளின் எதிர்கால முன்னேற்றத்திற்காகக் கூடப் பிரார்த்தனை செய்துள்ளார்கள். இது எதிர்கால சந்ததிகளின் சீர்திருத்தத்திற்கு அவர்கள் வழங்கிய முக்கியத்துவத்திற்குச் சிறந்த எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது.

நபி(ஸல்) அவர்கள் தாயிப் நகருக்குப் பிரச்சாரத்திற்குச் சென்ற போது, அம்மக்கள் நபி(ஸல்) அவர்களைத் துரத்தித் துரத்தித் தாக்கினர். நபி(ஸல்) அவர்களின் பொன்னான மேனியில் ஏற்பட்ட காயங்களிலிருந்து வடிந்த இரத்தத்தால் அவர்களின் பாதணிகள் தோய்ந்து போகும் அளவுக்குத் தாக்கப்பட்டார்கள்.

அப்போது அவர்கள் செய்த பிரார்த்தனை உருக்கமானதாகும். அப்போது அல்லாஹ்தஆலா நபியவர்கள் விரும்பினால் அந்த மக்களை அழித்து விட மலைக்குப் பொறுப்பான மலக்கை அனுப்பினான்.

எனினும் நபி(ஸல்) அவர்கள்;
‘இவர்கள் இல்லாவிட்டாலும் இவர்களின் சந்ததிகளில் அல்லாஹ்வுக்கு எதையும் இணையாக்காமல் அவன் ஒருவனை மட்டும் வணங்குபவர்கள் உருவாக வேண்டும் என்றே நான் விரும்புகின்றேன்’ எனக் கூறினார்கள்.

தனது எதிரிகளின் குழந்தைகள் கூட அல்லாஹ்வை மட்டும் வணங்குபவர்களாக உருவாக வேண்டும் என நபி(ஸல்) அவர்கள் பிரார்த்தித்துள்ளார்கள். நாம், ‘நமக்குச் சந்ததி தேவை!’, ‘எனக்குப் பேரப்பிள்ளை தேவை!’, ‘எனக்கு ஆண் பிள்ளை தேவை! என்றுதான் ஆசைப்படுகின்றோம்; அதற்காகத்தான் பிரார்த்திக்கின்றோம்; நேர்ச்சை செய்கின்றோம். என்றாவது, ஒரு நாளாவது ‘அல்லாஹ்வுக்கு இணை வைக்கக் கூடாது!’, ‘அவன் ஒருவனை மட்டுமே வணங்கும் சந்ததி தேவை!’ என்று பிரார்த்தித்துள்ளோமா? எனச் சற்று சிந்தித்துப் பாருங்கள்!

நபி(ஸல்) அவர்கள் குழந்தையின் உருவாக்கம் ஷைத்தானியத்திலிருந்து உருவாகாமல், ஆன்மிகத்தின் அடிப்படையில் அமைய வேண்டும் என்று வழிகாட்டினார்கள்.

உங்களில் ஒருவர் தன் மனைவியிடம் தாம்பத்தியத்திற்காகச் சென்றால்;
بسم الله اللهم جنبتا الشيطان وجنب الشيطان مارزقتنا

‘பிஸ்மில்லாஹ்! ஜன்னிப்னஷ் ஷைத்தான வஜன்னிபிஷ் ஷைத்தான மா ரஸக்தனா’
பொருள்:- எம்மை விட்டும், எமது (இந்த உறவின் மூலம்) எமக்கு நீ வழங்கும் குழந்தையை விட்டும் ஷைத்தானைத் தூரப்படுத்துவாயாக!’ என்று ஓதினால் அவர்களுக்குக் கிடைக்கும் குழந்தையை ஷைத்தான் அடைய மாட்டான் என்று கூறினார்கள்.

இந்த துஆவை ஓதி எமது சந்ததிகளை ஆன்மிகத்தின் அடித்தளத்தில் உருவாக்கினோமா? அல்லது ஷைத்தானின் அடிப்படையில் உருவாக்கினோமா? என்பதை அனைவரும் ஒரு முறை சிந்தித்துப் பார்ப்பது சிறந்ததாகும்.

கருவறைக் குழந்தைக்கும் துஆ:

கருவில் குழந்தை நீர்த் துளியாக இருக்கும் போதே நபி(ஸல்) அவர்கள் அதற்காகப் பிரார்த்தித்துள்ளார்கள்.

அபூதல்ஹா(ரழி) அவர்கள் பயணத்தில் இருக்கும் போது அவரது குழந்தை மரணித்து விட்டது. அவர் வீட்டுக்கு வந்ததும், அவரது மனைவி மரணச் செய்தியைக் கூறாது, அவருக்கு உணவளித்து, அன்று இல்லறத்திலும் ஈடுபட்டனர். ஈற்றில் மரணச் செய்தியைக் கூறினார்கள். இது குறித்து அபூதல்ஹா நபி(ஸல்) அவர்களிடம் கூறிய போது, ‘உங்கள் இருவரின் இரவிலும் அல்லாஹ் அருள் செய்வானாக!’ என்று பிரார்த்தித்தார்கள்.

நண்பரின் குழந்தை கருவில் உருவான போதே அதற்காகப் பிரார்த்தித்துள்ளார்கள். இந்தப் பிரார்த்தனையின் பலனை அவர் அடைந்தார் என்று வரலாறு கூறுகின்றது.

கருவறையிலிருந்தே கரிசணை ஆரம்பம்:

இன்று ‘சிறுவர் உரிமை’ பற்றிப் பலவாறு பேசுகின்றனர். குழந்தை கருவில் இருக்கும் போதே அதன் நலன் குறித்து நபி(ஸல்) அவர்கள் அக்கறை செலுத்தியுள்ளார்கள். இஸ்லாமிய சட்ட வரையறைகளும் இதை எமக்கு உணர்த்துகின்றன.

தண்டனையைத் தள்ளிப் போடல்:

ஒரு பெண் தண்டனைக்குரிய குற்றத்தைச் செய்து அவள் கர்ப்பிணியாகவும் இருந்தால், குழந்தையின் நலன் நாடி அவளது தண்டனை தள்ளிப் போடப்படும்.

ஒரு பெண் தான் விபச்சாரம் செய்ததாகவும், அதனால் தான் கருவுற்றுள்ளதாகவும் கூறுகின்றாள். நபி(ஸல்), அவளுக்குத் தண்டனையளிக்காது ‘குழந்தையைப் பெற்று விட்டு வா!’ என்கின்றார்கள். பெண்ணின் பொறுப்புதாரியை அழைத்து, ‘இந்தப் பெண்ணுடன் நல்ல முறையில் நடந்துகொள்ள வேண்டும்!’ என்றும் கூறுகின்றார்கள்.

அந்தப் பெண், குழந்தையைப் பெற்ற பின்னர் வந்த போது குழந்தை பால் மறந்ததன் பின்னர் வரச் சொன்னார்கள். குழந்தைக்குப் பால் மறந்து உரொட்டி உண்ணும் பருவத்தில் அந்தப் பெண் வந்த போது அவளுக்குத் தண்டனை அளிக்கப்பட்டது.

தாய் செய்த தவறுக்குத் தண்டனை அளிக்கும் போது, தவறுடன் சம்பந்தப்படாத குழந்தை பாதிக்கப்பட்டு விடக் கூடாது என்பதில் நபியவர்கள் காட்டிய அக்கறை இந்த ஹதீஸ் மூலம் தெளிவாகின்றது. அத்துடன் குழந்தையின் தாய்ப்பால் அருந்தும் உரிமைக்கு இஸ்லாம் கொடுத்த முக்கியத்துவமும் இங்கு தெளிவாகின்றது. ஆனால் இன்றைய சூழலில் ஒரு தாய் தவறு செய்து விட்டு தனது தவறுக்குக் கருவறையையே கல்லறையாக்கிக் குழந்தையைக் கொல்கிறாள். பெற்ற பிள்ளையைக் காட்டிலும், கழிவு நீர் ஓடும் காண்களிலும் வீசி எரிகிறாள். கழுத்தை நெறித்துக் கொல்கிறாள். கருணையின் உறைவிடமான கர்ப்பப் பைக்குள்ளேயே இப்படியும் கொடூரமா?

கடமைகளை நீக்குதல்:

இஸ்லாம் விதித்த கடமைகள் சிலவற்றைக் கூட குழந்தை நலன் நாடித் தாய்க்கு இஸ்லாம் நீக்கி விடுகின்றது. ஒரு பெண் கர்ப்பிணியாக இருந்து அல்லது பாலூட்டும் தாயாக இருந்து, தான் நோன்பு நோற்பதால் குழந்தைக்குப் பாதிப்பு ஏற்படும் எனில் அவள் நோன்பை விட்டு விட இஸ்லாம் அனுமதித்துள்ளது. இவ்வாறே ஜமாஅத் தொழுகை நடக்கும் போது குழந்தைகளின் அழுகுரல் கேட்டால் நபி(ஸல்) அவர்கள் ஓதுவதைச் சுருக்கி விடுவார்கள் என்பதை ஹதீஸ் மூலம் அறிகிறோம்.

சலுகை அளித்தல்:

ஒரு பெண்ணை அவளது கணவன் முதல் இரு தலாக் கூறினால், அவளுக்கு இத்தாக் காலம் முடியும் வரை செலவு கொடுக்க வேண்டும். மூன்றாம் தலாக் கூறி விட்டால் செலவு கொடுக்க வேண்டியதில்லை. இருப்பினும் மூன்றாம் தலாக் கூறப்பட்ட பெண் கர்ப்பிணியாக இருந்தால், குழந்தையைப் பெற்றெடுக்கும் வரை அவளுக்கு அவன் வாழ்வாதாரம் அளிக்க வேண்டும் என்பது இஸ்லாத்தின் சட்டமாகும். இது ‘சிறுவர் உரிமை’ கருவறையில் இருந்தே ஆரம்பிக்கின்றது என்பதையும், சிறுவர் நலனில் இஸ்லாம் எவ்வளவு அக்கறை செலுத்துகின்றது என்பதையும் தெளிவுபடுத்துகின்றது.

ஆணோ, பெண்ணோ குழந்தை என்பது அருளே!

சிலர் பெண் குழந்தையென்றதும் முகம் சுளிக்கின்றனர். குழந்தை ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் அல்லாஹ்வின் மிகப் பெரும் அருள்தான் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். குழந்தைப் பராமரிப்பில் ஆண்-பெண் பேதம் என்பது இருக்கவே கூடாது.

சிலர் ‘அதிக குழந்தை அபாக்கியம்!’ என எண்ணி, உருவான கருவையும் கலைத்து விடத் துடிக்கின்றனர். அல்குர்ஆன் குழந்தை பற்றிக்கூறும் இடங்களில் நற்செய்தி (19:7, 11:61, 16:59) என்றே கூறுகின்றது. எனவே, குழந்தைச் செல்வத்தைப் பாக்கியமாகப் பார்க்க வேண்டும். ஆண், பெண் பேதம் பார்க்கலாகாது.

நபிகளாரின் தஹ்னீக்:

நபி(ஸல்) அவர்கள் குழந்தைகள் விடயத்தில் காட்டிய அக்கறையைத் தெளிவுபடுத்தும் அம்சங்களில் இதுவும் ஒன்றாகும். தஹ்னீக் என்பது ஈத்தப்பழம் அல்லது இனிப்பான ஒரு பொருளை வாயில் மென்று மென்மைப்படுத்தி பிறந்த குழந்தையின் வாயில் வைப்பதைக் குறிக்கும். நபி(ஸல்) அவர்கள் இவ்வாறு குழந்தைகளுக்குச் செய்து அவர்களின் பரகத்திற்காக துஆவும் செய்துள்ளார்கள். இவ்வாறு இனிப்பூட்டுவது குழந்தைகளுக்கு நலனளிக்கின்றது. என்றும் அவர்களின் தாங்கும் சக்தியை அதிகரிக்கின்றது என்றும் நவீன மருத்துவம் கூறுகின்றது.

விபச்சாரத்தில் பிறந்த குழந்தை என்றாலும் உரிமை பறிக்கப்படக்கூடாது:

நபி(ஸல்) அவர்கள் குழந்தைகளின் உரிமை விடயத்தில் அவதானமாக நடந்துகொள்ளுமாறு ஏவியுள்ளார்கள். ஏற்கனவே நாம் குறிப்பிட்ட ஹதீஸில் விபச்சாரத்தில் பிறந்த ஒரு குழந்தை என்றாலும் அல்லாஹ்வின் தண்டனையை நிறைவேற்றுவதால் கூட தாயின் பாலைக் குடிக்கும் உரிமையை இழந்துவிடக் கூடாது என்பதிலே கரிசனை காட்டியுள்ளார்கள்.

இன்று சில தந்தையர்கள் தமது மனைவியரின் மரணத்தின் பின்னர் மறுமணம் புரிகின்றனர். இரண்டாவது மனைவி முதல் மனைவியின் குழந்தைகளைக் கொடுமைப் படுத்துவதைப் பார்க்கின்றோம். பூனையைக் கொடுமைப்படுத்திய பெண் நரகம் சென்றாள் எனக் கூறும் மார்க்கத்தில் இருந்துகொண்டு தாயில்லாக் குழந்தைகளை அதுவும் தனது கனவனின் குழந்தைகளைக் கொடுமை செய்யும் பெண்ணின் நிலை என்னவாகும் என்பதை இத்தகையவர்கள் சிந்திக்கக் கடமைப்பட்டுள்ளனர்.

அகீகா வழங்குதல்:

குழந்தையின் ஆன்மீக ஆளுமையையும் அல்லாஹ்வின் அருளையும் பெற அகீகா எனும் விருந்தோம்பல் வழி செய்கின்றது.

நாம் ஜாஹிலிய்யாக் காலத்தில் குழந்தை பிறந்தால் ஆட்டை அறுத்து அதன் இரத்தத்தைக் குழந்தையின் தலையில் பூசுவோம். இஸ்லாம் வந்த பின்னர் ஆட்டை அறுத்துப் பகிர்வோம். குழந்தையின் தலையை மழித்து அதற்கு குங்குமத்தைப் பூசுவோம் என அபூபுரைதா (ரழி) அவர்கள் கூறியுள்ளார்கள். எனவே, குழந்தை பிறந்து 7ம் நாளில் ஆட்டை அறுத்து விருந்து வழங்குதல் அல்லது மாமிசத்தைப் பகிர்தல் நபிவழியாகும்.

‘ஒவ்வொரு குழந்தையும் ஆகீகாவுக்கு அடகு வைக்கப்பட்டுள்ளது. ஏழாம் நாளில் அதற்காக அறுக்கப்பட்டு தலை மழிக்கப்படும். குழந்தைக்குப் பெயர் சூட்டப்படும்’ என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (திர்மதி, நஸஈ)

எனவே அகீகா வழங்கி அல்லாஹ்வின் அருளைப் பெறுவதும் குழந்தை வளர்ப்புடன் சம்பந்தப்பட்டதாகும்.

அழகிய பெயர் சூட்டல்:
குழந்தைகளுக்குச் சூட்டப்படும் பெயர்கள் அழகானதாக இருக்க வேண்டும். நல்ல அர்த்தம் கொண்டதாகவும், அசிங்கமான உச்சரிப்பு அற்றதாகவும் இருக்க வேண்டும்.

குழந்தைகளின் பெயர்கள் வித்தியாசமாக அமைந்து விட்டால் அதுவே அவர்களுக்குப் பட்டப் பெயராக மாறி விடும். தனது தரக்குறைவான பெயரைக் கூறும் போதே அவன் கூனிக் குறுகிக் குற்ற உணர்வுடன் வாழும் நிலை உருவாகும். எனவே பெயர் அழகாகவும், நல்ல அர்த்தமுடையதாகவும், எடுப்பாகவும் இருக்க வேண்டும்.

நபிமார்களின் பெயர்களைச் சூட்டுங்கள். உங்கள் பெயர்களில் அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமானது ‘அப்துல்லாஹ்’, ‘அப்துர்ரஹ்மான்’ என்பதாகும். ஹாரிஸ் – حارث உழைப்பாளி, ஹும்மாம் – حمام முயற்சிப்பவன் என்பன மிகவும் உண்மையானவையாகும். ஹர்ப் (போர்), முர்ரா (கசப்பு) என்பன மிகவும் வெறுக்கத்தக்கவையாகும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(இப்னு உமர்(ரழி) – அபூதாவூத், நஸஈ)

இவ்வாறே சில பெயர்களைக் குறிப்பிட்டு அந்தப் பெயர்களை வைக்க வேண்டாம் என்றும் நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

எனவே குழந்தைகளுக்குப் பெயர் சூட்டும் போது விழிப்புடன் இருக்க வேண்டும். இன்று சிலர் தமது பிள்ளைகளின் பெயர் ஆங்கில உச்சரிப்புக்கு ளவலடந ஆக இருக்க வேண்டும் என்று விரும்புகின்றனர். ஆயினும் அதன் அர்த்தம் பற்றி அவர்கள் அலட்டிக்கொள்வதில்லை. ஆரம்ப காலத்தில் இருந்தது போல் நபிமார்களின் பெயர்களைச் சூட்டும் வழக்கமும் அருகி வருகின்றது. அவை பழைய பெயர்களாகப் பார்க்கப்படுகின்றன. இவ்வாறே முக்கிய ஸஹாபாக்களின் பெயர்கள் கூட பழைய பெயர் என்ற காரணத்தால் புறக்கணிக்கப்படுவதையும் அவதானிக்கலாம். இதனால் இஸ்லாமிய வரலாற்றை மறந்த சந்ததிகளாக எதிர்கால சந்ததியினர் மாறும் அபாயம் உள்ளது.

சிகை அலங்காரத்தில் கவனம் செலுத்துதல்:

நபி(ஸல்) அவர்கள் குழந்தை பிறந்து 7 ஆம் நாளில் அதன் தலைமுடி மழிக்கப்பட வேண்டும் என்று கூறுகின்றார்கள். இதன் மூலம் குழந்தையை விட்டும் தொல்லைகள் அகற்றப்படும் என்றும் கூறுகின்றார்கள். இவ்வாறான நிலையில் கைக் குழந்தைகளுக்கு மொட்டை அடிப்பது அதற்கு இராகத்தையும், சுகத்தையும் அளிக்கும்.

வளர்ந்த சிறுவர்-சிறுமியர் என்றால், ‘சிறுவர் தானே!’ என அவர்களின் சிகை அலங்காரத்தில் கவனம் செலுத்தாது இருக்க முடியாது. அவர்களின் தோற்றம் கோமாளித்தனமானதாகவோ, வெகுளித்தனத்தை வெளிப்படுத்துவதாகவோ அமைந்து விடக் கூடாது. இது அவர்களின் ஆளுமையைப் பாதிக்கும். தன்மானச் சிக்கலை உண்டுபண்ணும்.

இப்னு உமர்(ரழி) அவர்கள் இது குறித்துக் கூறும் போது, ‘நபி(ஸல்) அவர்கள் ‘அல்கஸஃ’ வைத் தடுத்தார்கள்’ என்று குறிப்பிட்டார்கள். ‘அல்கஸஃ என்றால் என்ன?’ எனக் கேட்ட போது, ‘சிறுவர்களின் தலையில் ஒரு பகுதியைச் சிரைத்து, மறுபகுதியை விட்டு விடுவதாகும்’ எனக் குறிப்பிட்டார்கள்.
(புகாரி, முஸ்லிம்)

பிள்ளைகளின் பெயரால் புனைப்பெயர் சூட்டல்:

ஒருவருக்கு அப்துல்லாஹ் என்றொரு குழந்தை இருந்தால், அவர் தன்னை அபூ அப்துல்லாஹ் என அடையாளப்படுத்திக்கொள்வதை இது குறிக்கும். இது குழந்தையிடத்தில் மாற்றத்தை ஏற்படுத்தும்.
எனது பெயரால்தான் என் தந்தை அறியப்படுகின்றார் என அறியும் போது, தான் தவறு செய்தால் தனது குடும்பத்தின் பெயர் கெட்டு விடும் என்ற உணர்வை ஏற்படுத்தும். நபி(ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதராக இருந்தும் கூட அவரது மகன் காசிமின் பெயரால் அபுல் காசிம் என அழைக்கப்பட்டுள்ளார்கள்.

அபூ ஷுறைஹ்(ரழி) அவர்கள் கூறுகின்றார்கள்;
‘தாம் வெளியூரில் இருந்து நபி(ஸல்) அவர்களைச் சந்திப்பதற்காகத் தமது தூதுக்குழுவினருடன் வந்திருந்த வேளை எனது கூட்டத்தினர் என்னை அபுல் ஹகம் (அறிவின் தந்தை) என அழைப்பதை நபி(ஸல்) அவர்கள் செவியுற்றார்கள். உடனே நபி(ஸல்) அவர்கள் என்னை அழைத்து, ‘அல்லாஹ்தான் ஞானம் மிக்கவன். அவனிடமே அனைத்து ஞானங்களும் மீளும். எனவே, நீ உன்னை ‘அபுல் ஹகம்’ என்று புனைப் பெயர் சூட்டிக்கொள்ளாதே!’ என்றார்கள். அதற்கு நான், ‘அல்லாஹ்வின் தூதரே! எனது கூட்டத்தினருக்கு மத்தியில் ஏதேனும் கருத்து வேறுபாடு ஏற்பட்டால் என்னிடம் வருவார்கள். நான் அளிக்கும் தீர்ப்பை இரு சாராரும் திருப்தியுடன் ஏற்பார்கள்!’ என்று கூறினேன். இது கேட்ட நபி(ஸல்) அவர்கள், ‘இது எவ்வளவு அழகான விடயம்!’ என்று கூறி விட்டு, ‘உனக்குக் குழந்தைகள் இருக்கின்றார்களா?’ எனக் கேட்டார்கள். ‘ஷுரைஹ், முஸ்லிம், அப்துல்லாஹ் என்று மூவர் உள்ளனர்!’ என்றேன். ‘அவர்களில் மூத்தவர் யார்?’ என நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள். நான், ‘ஷுரைஹ்!’ என்றேன். ‘அப்படியாயின் நீ அபூஷுரைஹ்!’ என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(அபூதாவூத்)

எனவே, குழந்தைகளின் பெயரைக் கொண்டு தந்தை ‘அபூ’ என்றும், தாய் ‘உம்மு’ என்றும் அழைக்கப்படுவது குழந்தைகளுக்கும் குடும்பத்திற்குமிடையில் நெருக்கத்தை உண்டுபண்ணுவதுடன் அவர்களிடத்தில் பொறுப்புணர்ச்சியையும் ஏற்படுத்தும்.

கத்னாச் செய்தல்:

ஆண் குழந்தைகளுக்கு ‘கத்னா’ செய்வது குழந்தையின் ஆன்மீகத்திற்கும், ஆண்மைக்கும், ஆரோக்கியத்திற்கும் ஊக்கமளிக்கும் ஒரு முக்கிய ஸுன்னாவாகும். ஆண்களுக்குப் போன்று பெண் பிள்ளையின் ‘கத்னா’ அவசியப்படுத்தப்படவில்லை. ஆனால் பெரும் தடை என்று கூறுவதற்கும் இல்லை.

சில நாடுகளில் பெண் பிள்ளைகளுக்குக் கூடப் பத்து வயது தாண்டிய பின்னர் ‘கத்னா’ச் செய்யும் வழக்கமுள்ளது. இதனால் சிலபோது பாரிய பாதிப்புக்களும் ஏற்படுகின்றன. இந்நடைமுறைகள் நமது நாட்டில் இல்லை என்பது திருப்தி தரும் அம்சமாகும்.

முன்னைய காலங்களில் ஆண் பிள்ளைகளுக்குச் செய்யும் ‘கத்னா’வையும் ‘ஸுன்னத்துக் கலியாணம்’ என்ற பெயரில் பெரும் அளவு விழாவாக எடுப்பதும், ‘கத்னா’வை முன்னிட்டுப் பல்வேறுபட்ட சடங்குகளை அரங்கேற்றுவதும் வழக்கமாக இருந்தது. எனினும் மார்க்க அறிவு வளர்ச்சி, பொருளாதார நெருக்கடி, மருத்துவ முன்னேற்றம் என்பன இந்நிலையை மாற்றி குழந்தை பிறந்த சில நாட்களிலேயே மருத்துவர் மூலம் ‘கத்னா’வை சர்வ-சாதாரணமாகச் செய்து விடும் வழிமுறை வளர்ந்து வருவது வரவேற்கப்பட வேண்டிய அம்சமாகும்.

குழந்தைகளினால் ஏற்படும் சிரமங்களை சகித்தல்:

சில பெற்றோரும், பெரியவர்களும் குழந்தைகள் சிறுநீர் கழிப்பர்; அசுத்தமாக இருப்பர் என்பதால் அவர்களைத் தூக்கிக் கொஞ்சுவதில்லை. அவர்களுடன் நெருக்கமாக இருப்பதும் இல்லை. இது தவறாகும்.

ஆயிஷா(ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்;
நபி(ஸல்) அவர்களிடம் குழந்தைகள் அழைத்து வரப்படுவார்கள். நபியவர்கள் அக்குழந்தைகளுக்காக ‘துஆ’ச் செய்வார்கள். ஒரு ஆண் குழந்தை நபியவர்களிடம் கொண்டு வரப்பட்டது. நபியவர்களின் ஆடையில் அக்குழந்தை சிறுநீர் கழித்து விட்டது. நபியவர்கள் அந்த இடத்தில் தண்ணீர் தெளித்தார்கள். அதைக் கழுவவில்லை. (முஸ்லிம்)

உம்மு கர்ஷ் அல்ஹுஸாயிய்யா(ரழி) அவர்கள் கூறுகின்றார்கள்;
நபி(ஸல்) அவர்களிடம் ஒரு ஆண் குழந்தை கொண்டு வரப்பட்டது. நபி(ஸல்) அவர்கள் அக்குழந்தையைத் தூக்கிய போது அது நபி(ஸல்) அவர்கள் மீது சிறுநீர் கழித்து விட்டது. நபி(ஸல்) அவர்கள் சிறுநீர் பட்ட தமது ஆடையில் நீரைத் தெளித்தார்கள். பின்னர் ஒரு பெண் குழந்தை கொண்டு வரப்பட்டது. அக்குழந்தையும் நபி(ஸல்) அவர்கள் மீது சிறுநீர் கழித்த போது நபி(ஸல்) அவர்கள் ஆடையில் சிறுநீர் பட்ட இடத்தைக் கழுவினார்கள். (அஹ்மத்)

நபி(ஸல்) அவர்களின் அடிமையாக இருந்த ஸைத்(ரழி) அவர்களது மகன் உஸாமா(ரழி) அவர்கள் பார்ப்பதற்குக் கண்ணங்-கரேர் என்று இருப்பார். இவருடைய தாயார் ஒரு ‘நீக்றோ’ அடிமையாவார்கள். நாம் அழகான பிள்ளைகள் மீதுதான் அன்பைச் சொரிவோம். அவர்களைத்தான் அள்ளி அணைப்போம். ஆனால் நபி(ஸல்) அவர்கள் பார்க்கப் பிடிக்காத பிள்ளைகளுடனும் பாசத்தைப் பொழிந்து பழகுவார்கள்.

இந்த உஸாமா(ரழி) அவர்கள் கூறுகின்றார்கள்;
நபி(ஸல்) அவர்கள் என்னைத் தூக்கி அவர்களது ஒரு தொடை மீதும், நபி(ஸல்) அவர்களது பேரன் ஹஸன்(ரழி) அவர்களைத் தூக்கி ஒரு மடியிலும் அமர்த்தி, பின்னர் எம்மிருவரையும் அணைத்துக் கொண்டு…
أللهم ارحمهما فانى ارحمهما

‘யா அல்லாஹ்! இவ்விருவர் மீதும் நீ கருணை காட்டுவாயாக! நானும் இவ்விருவர் மீதும் அன்பு காட்டுகின்றேன்’ எனப் பிரார்த்தித்தார்கள். (புகாரி)

எனவே, குழந்தைகளுடன் நெருங்கிப் பழக வேண்டும். அவர்களை மடியில் அமர்த்துவது, தூக்குவது, அவர்கள் மீது அன்பை வெளிப்படுத்துவது என்பன குழந்தைகளின் ஆளுமை விருத்திக்குப் பெரிதும் உதவும். நாம் பாதுகாப்பான, அன்பான சூழலில் வாழ்கின்றோம் என்ற உணர்வு அவர்களுக்குப் பெரிதும் உத்வேகம் அளிக்கும்.

கண்ணியப்படுத்துவதும், கண்ணியமாக நடத்துவதும்:

குழந்தைகளைப் பெற்றோரும், பெரியோரும் கண்ணியப்படுத்த வேண்டும். அவர்களுடன் கண்ணியமாகப் பழக வேண்டும். இதன் மூலம் கண்ணியமான நடத்தைகளைப் பிள்ளைகள் பழகிக் கொள்வார்கள். அவர்களை அவர்களுக்கென்றே உள்ள பெயர்கள் கொண்டு அழைப்பதும் அவர்களுக்கு உட்சாகமூட்டும்; அத்துடன் மகிழ்வளிக்கும்.

நபி(ஸல்) அவர்கள் அபூதல்ஹா(ரழி) அவர்கள் வீட்டுக்கு அடிக்கடி செல்வார்கள். அவர்களது மகன் அபூஉமைரை நபி(ஸல்) அவர்கள் மிக அன்புடன் ‘யா அபா உமைர்!’ என அழைப்பார்கள். இந்த அபூஉமைர் ஒரு குருவி வளர்த்து வந்தார். அது இறந்த போது பெரிதும் கவலைப்பட்டார். நபி(ஸல்) அவர்கள் இதை அறிந்து, ‘யா அபா உமைர்! பஅலன் னுஅய்ர்?’ (அபூ உமைரே! உங்கள் குருவிக் குஞ்சுக்கு என்னவானது) என இலக்கிய நயம் கொஞ்ச அவரிடம் பேசி அவரை மகிழ்வித்தார்கள்.

எனவே, சிறுவர்களைச் ‘சின்னப் பிள்ளைகள் தானே!’ எனக் குறைத்து மதிப்பிடும் வகையில் அழைக்காமல் அவர்களை கௌரவித்தே அழைக்க வேண்டும். இது அவர்களுக்குள்ளேயே ‘நாம் கௌரவமானவர்கள்’ என்ற உணர்வை ஊட்டும். இதன் மூலம் அவர்களது ஆளுமை வளர்வதுடன் தமது கௌரவத்தையும், கண்ணியத்தையும் பாதுகாக்க வேண்டும் என்பதால் பண்பாட்டுடன் நடக்க முற்படுவர்.

எனவேதான் அடிமைச் சிறுவர்களை ‘அடிமை’ என அழைக்காமல், ‘குலாம்’ (சிறுவனே!) என அழைக்குமாறு நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (முஸ்லிம்)

நெருக்கமான இறுக்கமான உறவு:

நபி(ஸல்) அவர்கள் அனைத்துச் சிறுவர்-சிறுமியருடனும் நெருக்கமான உறவு கொண்டிருந்தார்கள். சிறுவர்களைச் சந்திக்கும் போது ஸலாம் கூறுவார்கள். அவர்களுடன் உரையாடுவார்கள். அவர்களுக்கு ‘துஆ’ச் செய்வார்கள். சிறுவர்கள் உரிமையுடன் தன்னுடன் பழகுவதற்கு இடமளிப்பார்கள். இந்த உறவின் நெருக்கத்தின் காரணமாக தொழும் போது கூடக் குழந்தைகளைச் சுமந்து கொண்டு தொழுதுள்ளார்கள்.

அபூகதாதா அல்அன்ஸாரி(ரழி) அவர்கள் கூறுகின்றார்கள்;

உமாமா(ரழி) அவர்களைச் சுமந்து கொண்டு தொழுபவராக நபி(ஸல்) அவர்கள் இருந்தார்கள். (உமாமா நபியவர்களது பேத்தியாவார்கள். நபியவர்களின் மகள் ஸைனப்(ث) அவர்களது குழந்தையே உமாமாவாகும்.) ஸுஜூது செய்யும் போது பிள்ளையைக் கீழே வைப்பார்கள். எழும் போது சுமந்து கொள்வார்கள். (புகாரி)

நபி(ஸல்) அவர்கள் சிறுவர்-சிறுமியருடன் நெருக்கமாகவும், அன்பாகவும் பழகியதுடன் அவர்களுடன் விளையாடவும் செய்தார்கள். குழந்தைகளை முதுகில் ஏற்றிக் குதிரைச் சவாரி எனத் தானே தவழ்ந்து அவர்களை மகிழ்விப்பார்கள். இதனால் பழக்கப்பட்ட நபிகளாரின் பேரர் ஹஸன் அல்லது ஹுஸைன் ஒரு முறை நபி(ஸல்) அவர்கள் தொழுகையில் ஸுஜூதில் இருக்கும் போதே அவர் சவாரிக்கத் தயாராகின்றார் என எண்ணி அவரின் முதுகில் ஏறிய சம்பவங்களும் உள்ளன.

நபி(ஸல்) அவர்கள் ஒரு மஃரிப் அல்லது இஷாத் தொழுகையின் போது நீண்ட நேரம் ஸுஜூது செய்தார்கள். தொழுகை முடிந்ததும் ‘அல்லாஹ்வின் தூதரே! என்றுமில்லாதவாறு நீண்ட நேரம் ஸுஜூது செய்தீர்கள். உங்களுக்கு வஹீ வருகின்றதோ! என நாம் நினைத்தோம். அல்லது ஏதோ நடந்து விட்டதோ! என எண்ணினோம் எனக் காரணங்களைக் கூறினர். அதற்கு நபி(ஸல்) அவர்கள் ‘அப்படி ஒன்றுமில்லை. எனது பேரன் என் முதுகில் ஏறி விட்டார். அவர் தானாக இறங்கும் வரை நானாக எழுந்து அவருக்கு அதிர்ச்சியூட்டுவதை நான் வெறுத்தேன்’ (எனவேதான் தாமதித்தேன்) எனக் கூறினார்கள்.
(ஹதீஸின் சுருக்கம் – நஸாஈ, அஹ்மத்)

இந்த ஹதீஸ், நபி(ஸல்) அவர்கள் குழந்தைகளுடன் எவ்வளவு நெருக்கமான உறவை வைத்திருந்தார்கள் என்பதை எடுத்துக் காட்டுகின்றது.

அத்துடன் நபி(ஸல்) அவர்கள் குழந்தைகளுடன் பழகும் போது தானும் ஒரு குழந்தையாக மாறி, அவர்களுடன் விளையாடி இருப்பதையும் எடுத்துக் காட்டுகின்றது. அடுத்து, ஒரு குழந்தையை அதிர்ச்சியடையச் செய்யக் கூடாது என்பதற்காக ஒரு ஜமாஅத்துத் தொழுகையின் ஸுஜூதையே நபியவர்கள் நீட்டியுள்ளார்கள். எனவே குழந்தைகளை அதிர்ச்சியடையச் செய்வதோ, பயமூட்டுவதோ தவறு என்பதையும் இது எடுத்துக் காட்டுகின்றார்கள். எமது தாய்மார்கள் குழந்தைகளைத் தூங்க வைப்பதற்காகவும், உண்ண வைப்பதற்காகவும் ‘நாய் வருகிறது!’, ‘பேய் வருகிறது!’ எனப் பயமூட்டி அவர்களின் ஆளுமைகளைச் சிதைத்து விடுகின்றனர். இது தவறாகும்.

நபி(ஸல்) அவர்கள் சிறுவர்களைத் தோளில் சுமப்பார்கள். இது அவர்களுக்குப் பெரிதும் மகிழ்வளிக்கும்.

‘நபி(ஸல்) அவர்களது தோளில் ஹஸன்-ஹுஸைன் அவர்களிருவரும் இருந்தனர். இதைப் பார்த்த நான் ‘பாக்கியம் பெற்ற குதிரையில் சவாரி செய்கின்றீர்கள்!’ என்றேன். இது கேட்ட நபி(ஸல்) அவர்கள் ‘சவாரி செய்பவர்களும் பாக்கியம் பெற்றவர்கள்தாம்!’ எனக் கூறினார்கள்’ என உமர்(ரழி) அவர்கள் கூறுகின்றார்கள்.
(தபரானி, முஸன்னப் இப்னு அபீஷைபா)

நபி(ஸல்) அவர்கள் குழந்தைகளுடன் குழந்தையுணர்வுடன் பழகியிருப்பதை இந்த ஹதீஸும் உணர்த்துகின்றது.

அபூபுரைதா(ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்;
நபி(ஸல்) அவர்கள் குத்பா உரை நிகழ்த்தும் போது அவர்களது பேரர் ஹஸன்-ஹுஸைன்(ரழி) ஆகிய இருவரும் சிவப்பு நிற ஆடை அணிந்து தத்தித் தத்தி வந்தனர். உடனே நபி(ஸல்) அவர்கள் மிம்பரை விட்டும் இறங்கி இரு சிறுவர்களையும் சுமந்து மிம்பரில் அமர வைத்து விட்டு ‘அல்லாஹ் உண்மை உரைத்து விட்டான்’ என்று கூறி ‘நிச்சயமாக உங்களது செல்வங்களும், குழந்தைகளும் சோதனைதாம்’ (தகாபுன்:15) என்ற வசனத்தை ஓதினார்கள். பின்னர் ‘நான் இந்த எனது பிள்ளைகளைப் பார்த்தேன். அவர்கள் தத்தித் தத்தி வந்தனர். என்னால் அவர்களைச் சுமந்து இங்கே அமர்த்தும் வரை பேச்சைத் துண்டிக்காது பொறுமையாக இருக்க முடியவில்லை’ எனக் கூறினார்கள்.
(திர்மிதி, இப்னுமாஜா, அஹ்மத்)

குத்பாவைத் துண்டிக்கும் அளவுக்கு நபி(ஸல்) அவர்கள் அந்தச் சிறுவர்களுடன் நெருக்கமாகவும், அன்பாகவும் பழகியிருப்பதை இந்த ஹதீஸ் எடுத்துக் காட்டுகின்றது.

எமது பெற்றோர்களில் சிலர் சிறுவர்களுடன் நெருங்கிப் பழகக் கூடாது என்ற எண்ணத்தில் உள்ளனர். இது தவறாகும். நெருங்கிப் பழகுவதுடன் அவர்களுக்கு நேரிய-சீரிய வழியையும் காட்ட வேண்டும்.

அவர்களுடன் சேர்ந்து உண்பதும், ஒழுங்குகளைக் கற்றுக் கொடுப்பதும்:

குடும்பத்தில் அனைவரும் ஒன்றாக இருந்து உண்பது சிறந்த பண்பாகும். இந்தப் பண்புகள் இன்று அருகி விட்டன. அதனால் பாரிய ஒழுக்க வீழ்ச்சிகள் ஏற்பட்டு வருகின்றன. கடந்த காலங்களில் குடும்பத்தில் ஒருவர் இல்லாவிட்டாலும் உணவு உண்ணப்பட மாட்டாது. அவர் தேடப்படுவார். இப்போது அப்படி இல்லை. மேசையில் உணவு இருக்கும். அவரவர் எடுத்து உண்ண வேண்டியதுதான். இப்படி உண்ணும் போது பாசத்தையும், அன்பையும் பகிர்ந்துகொள்ள முடியாது. அடுத்தவர் தேவை அறிந்து விட்டுக் கொடுத்து வாழும் பண்பு ஏற்படாது. எனவே, குறைந்த பட்சம் இரவு உணவையாவது எல்லோரும் ஒன்றாக இருந்து உண்ணப் பழக வேண்டும். இந்தப் பழக்கம் உண்டாகி விட்டால் இளைஞர்கள் இரவு நேரங்களில் வீணே வீதிகளில் நேரத்தைக் கழிக்க மாட்டார்கள். ‘நான் வீட்டுக்குச் செல்லும் வரை வீட்டில் தாயோ, தந்தையோ உண்ண மாட்டார்கள்’ என்கிற உணர்வு அவனை வீட்டிற்கு விரட்டும்.

‘நான் எப்போது வேண்டுமானாலும் போகலாம். வீட்டு மேசையில் உணவிருக்கும். உண்டு விட்டு உறங்கலாம்’ என்ற உணர்வு இருப்பதால் வீதிகளில் இருந்து அரட்டை அடிக்கின்றனர். தப்புத்-தவறுகளைச் செய்கின்றனர். எனவே, ஒன்றாக இருந்து உண்ணும் அந்த நல்ல பழக்கத்தை மீண்டும் எமது குடும்பச் சூழலில் உருவாக்க வேண்டும்.

நபி(ஸல்) அவர்களது மனைவி உம்மு ஸலமா அவர்களுக்கு முதல் திருமணத்தில் பல குழந்தைகள் இருந்தனர்.

அவர்களில் ஒருவரான உமர் இப்னு அபீஸலமா(ரழி) அவர்கள் கூறுகின்றார்;
நான் நபி(ஸல்) அவர்களின் பராமரிப்பில் சிறு குழந்தையாக இருந்தேன். அப்போது சாப்பிடும் போது எனது கைகள் உணவு தட்டில் அங்கும் இங்குமாக உலாவின. அவ்வேளை நபி(ஸல்) அவர்கள் ‘மகனே! ‘பிஸ்மில்லாஹ்’ கூறுங்கள்! உங்களது வலது கையால் உண்ணுங்கள்! உங்களுக்கு முன்னால் இருப்பதை எடுத்து உண்ணுங்கள்!’ என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம், இப்னுமாஜா, அஹ்மத்)

எனவே, குழந்தைகளுடன் சேர்ந்து விளையாட வேண்டும். சேர்ந்து உண்ண வேண்டும். அதே வேளை நல்ல பழக்க-வழக்கங்களைக் கற்றுக் கொடுக்கவும் வேண்டும்.

சந்திக்கும் போது…

குழந்தைகளைப் பிரிந்து மீண்டும் சந்திக்கும் போது அவர்கள் பெரிதும் குதூகலமடைகின்றனர். தந்தையின் வரவை அவர்கள் எதிர்பார்க்கின்றனர். எமது மனதில் உள்ள குழப்பங்களையும், சிக்கல்களையும் ஒரு குப்பையில் போட்டு மூடி விட்டு மலர்ந்த முகத்துடன் அவர்களது மகிழ்வை அனுபவிக்க நாம் கற்றுக் கொள்ள வேண்டும். சில தந்தையர்களின் வரவு பிள்ளைகளின் உள்ளத்தில் அச்சத்தையூட்டுகின்றது. இந்த நிலை இருக்கக் கூடாது. குழந்தைகளின் மலர்ந்த முகம் சிலவேளை உங்களது உளக் குமுறல்களைக் கூட அடக்கி விடும்.

குழந்தையின் சிரிப்பைப் பற்றி ஒரு கவிஞன் கூறும் போது, ‘பொன்னில் இன்பம் பொருளில் இன்பம் என்றே உள்ளம் மயங்கும். பூவைப் போலச் சிரிக்கும் உன்னைக் கண்டால் உண்மை விளங்கும்’ எனக் கூறிக் குழந்தைகளின் சிரிப்பின் மகிமையைப் பாடுகின்றான்.

நபி(ஸல்) அவர்களின் சிறிய தந்தை அபூதாலிப் அவர்களது மகன் ஜஃபர்(ரழி) அவர்கள் போரில் ஷஹீதானார்கள். அவர்களது குழந்தைகள் மீது நபி(ஸல்) அவர்கள் பெரிதும் பாசம் வைத்திருந்தார்கள்.

ஜஃபர்(ரழி) அவர்களது மகன் அப்துல்லாஹ் கூறுகின்றார்;

நபி(ஸல்) அவர்கள் பயணத்திலிருந்து வரும் போது அவர்களது குடும்பத்துச் சிறுவர்கள் அவர்களை வரவேற்கச் செல்வார்கள். ஒரு முறை அவர்கள் ஒரு பயணத்திலிருந்து வந்தார்கள். நான் அவர்களை முந்திச் சென்று சந்தித்தேன். என்னை நபியவர்கள் சுமந்து அவர்களது வாகனத்தின் முன்னால் வைத்துக் கொண்டார்கள். அதன் பின் ஹஸன் அல்லது ஹுஸைன் அவர்கள் வந்தார்கள். அவர்களை நபியவர்கள் தமக்குப் பின்னால் வைத்துக் கொண்டார்கள். எங்கள் மூவரையும் சுமந்துகொண்டு நபியவர்களது வாகனம் மதீனாவுக்குள் நுழைந்தது.

இந்த ஹதீஸில் நபி(ஸல்) அவர்களின் வருகையை நபியவர்களின் பேரப் பிள்ளைகள் மட்டுமன்றி அவர்களது உறவுக் காரர்களின் குழந்தைகள் நபியவர்களின் மனைவியரின் முன்னைய கணவருக்குப் பிறந்த குழந்தைகள் என அனைவரும் ஆவலுடனும், அன்புடனும் எதிர்பார்த்திருந்ததை எடுத்துக் காட்டுகின்றது. குழந்தைகளுடன் அன்பையும், பாசத்தையும் பகிர்வதற்கு நபி(ஸல்) அவர்கள் இதையும் ஒரு நல்ல வழிகாட்டுதலாகப் பயன்படுத்தியுள்ளார்கள் என அறிய முடிகின்றது.

சிறுவர்களைக் காணாத போது தேடுதல்:

தந்தை வீட்டுக்கு வந்ததும் தனது பிள்ளைகள் குறித்து விசாரிக்க வேண்டும். குழந்தைகள் எங்கேனும் சென்று வரத் தாமதித்தால் அவர்களைத் தேடவேண்டும். இது குழந்தைக்கு எமது பெற்றோர் எம்மீது அக்கறையாக உள்ளனர் என்ற உணர்வை ஊட்டும் நாம் வெளியிடங்களுக்குச் சென்றால் வேலை முடிந்ததும் வீட்டுக்குச் சென்று விடவேண்டும். இல்லை என்றால் எமது பெற்றோர் எமது வருகையை எதிர்பார்த்து ஏக்கத்துடன் வழி மேல் விழி வைத்துக் காத்திருப்பர் என்ற எண்ணத்தை ஏற்படுத்தும். இந்த உணர்வு குழந்தைகளைத் தவறான வழியில் செல்லாமல் காக்கும் அரணாகத் திகழும்.

வீணாக வீதிகளில் விளையாடித் திரியும் இளைஞர்களின் எண்ணிக்கையைக் குறைக்கும். இன்று இளைஞர்கள் பலரும் வழிகெடுவதற்கு வீட்டுடன் அவர்களுக்கு இறுக்கமான தொடர்பின்மை என்பது முக்கிய காரணமாகும். நண்பர்களுடன் சேர்ந்து ஆபாசப் படங்களைப் பார்க்கின்றனர். மேலதிக வகுப்பு, வீட்டுப் பயிற்சி எனப் பெற்றோரை ஏமாற்றி விட்டு கேளிக்கைகளில் ஈடுபடுகின்றனர். நண்பர்களின் தூண்டுதலால் சிகரட் மற்றும் போதைப் பாவனைக்கு அடிமையாகின்றனர். எனவே பிள்ளைகள் நீண்ட நேரம் தம்மை விட்டும் பிரிந்திருந்தால் பெற்றோர்கள் அவர்களைத் தேடுபவர்களாக இருக்க வேண்டும்.

ஒரு முறை நபி(ஸல்) அவர்கள் பனூ கைனுகா கோத்திரத்தின் சந்தைக்குச் சென்று வந்தார்கள். பின்னர் தனது இரு முழங்கால்களையும் கைகளால் பிடித்துக்கொண்ட நிலையில் மஸ்ஜிதில் அமர்ந்தார்கள். பின்னர் ‘அந்த சுல்லான் எங்கே? அந்த சுல்லானை அழைத்து வாருங்கள்!’ எனக் கூறினார்கள். ஹஸன்(ரழி) அவர்கள் வந்ததும் பாய்ந்து அவரை அரவணைத்து அன்பு முத்தம் பொழிந்து ‘யா அல்லாஹ்! இவரை நான் நேசிக்கின்றேன்! எனவே நீயும் இவரை நேசிப்பாயாக! இவரை நேசிப்பவர்களையும் நேசிப்பாயாக!’ என்று பிரார்த்தித்தார்கள் என அபூஹுரைரா(ரழி) அவர்கள் கூறுகின்றார்கள்.

முத்தமிடுதல்:

முத்தம் அன்பைப் பரிமாறும் ஒரு ஊடகமாகும். சிறுவர்களுடன் உரையாடும் போது அன்பான ஸ்பரிசம் அவர்களது உடலில் ஊக்கத்தை ஊட்டும். தம்மைத் தொட்டுத் தழுவிப் பேசுபவர்களிடம் குழந்தைகள் பாதுகாப்பையும், பாசத்தையும் பெறுவதாக உணர்கின்றனர். இந்த வகையில் அன்புப் பரிமாற்றத்தில் முத்தத்திற்கு முக்கிய இடம் உண்டு.

எல்லாப் பெற்றோர்களும் தமது பிள்ளைகள் மீது பெருமளவு பாசத்துடன்தான் இருக்கின்றனர். சிலர் பாசத்தை மனதில் வைத்துப் பூட்டி வைத்து விடடுத்தான் பழகுகின்றனர். இது தவறானதாகும். பெற்றோர்களின் மனதில் உள்ள பாசத்தைப் பிள்ளைகள் உணர முடியாது. எனவே பாசத்தைப் பேசும் வார்த்தைகள் ஊடாகவும், பழகும் முறையாலும், அன்பான அரவணைப்பின் மூலமும் வெளிப்படையாகக் காட்ட வேண்டும்.

நபி(ஸல்) அவர்கள் (தமது பேரக் குழந்தைகளான) ஹஸன்-ஹுஸைன்(ரழி) இருவரையும் முத்தமிட்டார்கள். அப்போது அங்கே இருந்த அக்ரஃ இப்னு ஹாபிஸ்(ரழி) அவர்கள் (நீங்கள் குழந்தைகளை முத்தமிடுகிறீர்களா!) எனக்குப் பத்துப் பிள்ளைகள் உள்ளனர். அவர்களில் எவரையும் நான் முத்தமிட்டதில்லை!’ என்று கூறினார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள் ‘அன்பு காட்டாதவர் அன்பு காட்டப்பட மாட்டார்!’ எனக் கூறினார்கள்.
(அறிவிப்பவர்:அபூஹுரைரா(ரழி), ஆதாரம்:புகாரி)

இன்றைய பெற்றோர்களில் பலரும் தமது குழந்தைகள் தம்முடன் பாசத்துடனும், பரிவுடனும் நடப்பதில்லை; நம்மை மதிப்பதில்லை என்ற ஏக்கத்தில் காலத்தைக் கழிக்கின்றனர். மற்றும் சிலர் முதியோர் இல்லங்களில் தமது இறுதிக் காலத்தைக் கழிக்கின்றனர். குழந்தைகளுக்கு வாழ்க்கைக்குத் தேவையான பொருட்களை வாங்கிக் கொடுத்தாலும், கொடுக்காது விட்டாலும் அது பெரிய தாக்கத்தை அவர்களது மனதில் ஏற்படுத்தாது. இருப்பினும் தமது பெற்றோர்கள் தம்மீது போதிய அக்கறையும், கரிசனையும் காட்டவில்லை என்ற எண்ணம் அடிமனதில் அழகாகப் பதிந்து விட்டால் அது ஆபத்தாக அமைந்து விடும். எனவே, எமது குழந்தைகள் எமது இறுதிக் காலத்தில் எங்கள் மீது அன்பு காட்ட வேண்டுமானால் நாம் அவர்களது இளமைப் பருவத்தில் எமது அன்பை வெளிப்படுத்த வேண்டும். அதற்கான சிறந்த வழியாக முத்தமிடுவது அமைந்திருப்பதை இந்த நபிமொழி உணர்த்துகின்றது.

குழந்தை பெரியவர்களுடன் செய்யும் குறும்புத்தனங்களை அங்கீகரித்தல்:

குழந்தைகள் என்றால் குறும்புத்தனம் இருக்கவே செய்யும். பல நேரங்களில் அவர்களின் குறும்புத்தனங்கள்தான் நொந்து போன உள்ளங்களுக்கு ஒத்தடமாக அமைந்து விடுகின்றது. வீட்டில் நிலவும் விரும்பத்தகாத அமைதியை அவர்களின் குறும்புகள்தான் விரட்டியடிக்கின்றன. கணவன்-மனைவிக்கிடையே ஏற்படும் தகராறுகள், மன முரண்பாடுகள் என்பவற்றைத் தீர்த்து வைக்கும் நீதிபதியாகக் கூட அவர்களின் குறும்புத்தனம் அமைந்து விடுவதுண்டு! எனவே குழந்தைகளின் குறும்புத்தனம் வெறுக்கப்பட வேண்டிய ஒன்று அல்ல. குழந்தைகளின் குறும்புத்தனம் ஆபத்தை விளைவிக்காமல் பார்த்துக்கொண்டால் போதுமானது.

குழந்தைகள் எதையும் அறிய வேண்டும் என்று ஆர்வம் கொள்வர். அவர்களின் குறும்புத்தனமும், அறிந்துகொள்ளும் ஆர்வமும் கூட்டணி அமைத்து அவர்கள் பேசும் பேச்சுக்களும், செய்யும் செயல்களும் உண்மையில் இரசிக்கத்தக்கவை. எனினும் வீட்டுக்கு வந்த பெரியவர்களிடம் அவர்கள் வித்தியாசமான வினாக் கணைகளைத் தொடுக்கும் போது சூழ இருப்பவர்கள் சிலபோது சங்கடப்பட நேர்வதுண்டு! சில சிறுவர்கள் வீட்டுக்கு அடிக்கடி வருபவர்களிடம் ‘நீங்க ஏ எங்கட ஊட்டுக்கு ஒரே வார? ஒங்கட ஊட்டுல டீ இல்லயா?’ என்றெல்லாம் கேட்டுத் தொலைப்பார்கள். வந்தவர் சற்று நெளிவார். வீட்டாரும் இப்படிக் கேட்டு விட்டானே எனச் சங்கடப்படுவதுடன் பிள்ளைகளைக் கண்டிக்கவும் செய்வர். சிலர் குழந்தைத்தனத்தை இரசிக்கத் தெரியாமல் ‘எங்கட வருகயப் பத்தி ஊட்டுல தப்பாகப் பேசீக்குறாங்க! அதுதான் சிறுவன் இப்படிக் கேக்குறான்!’ எனத் தவறாக எண்ணி விடுகின்றனர். இது தவறாகும்.

சிறுவர்கள் பல விடயங்கள் குறித்தும் சிந்திக்கின்றார்கள். அவர்களிடம் கள்ளம்-கபடம் இல்லாததினால் தமது மனதில் எழுந்த எண்ணத்தை பளிச்சென வெளிப்படையாக வெளிப்படுத்துகின்றனர். இது அவர்களின் சிந்தனையின் வெளிப்பாடு. இதைத் தடுத்து அவர்களின் சிந்திக்கும் திறனையும், கற்பனை வளத்தையும் முளையிலேயே முடக்கி விடக்கூடாது.

இவ்வாறே சில பிள்ளைகள், பெரியவர்கள் சிலரின் உடையைப் பிடித்து இழுப்பர்; சீண்டிப் பார்ப்பர்; தாடியைப் பிடிப்பர். இதுவெல்லாம் குழந்தைகள் உள்ளத்தில் அச்சத்தை அகற்றி அவர்கள் அடுத்தவர்களுடன் சகஜமாகப் பழகும் ஆளுமையை அடைந்து வருகின்றனர் என்பதற்கான அடையாளங்களாகும். எனவே எமது நிலையிலிருந்து இதை நோக்காமல் சிறுவர்கள் என்ற அவர்களது மனநிலையிலிருந்து நோக்கி இச்செயல்பாடுகளைப் புரிந்து நடந்துகொள்ள வேண்டும்.
‘அப்படிச் செய்யாதே!’, ‘இப்படிப் பேசாதே!’ என்று அவர்களை அதட்டி அவர்களின் குறும்புத்தனத்தை அழிப்பதோ, அவர்களின் உள்ளத்தை உடைப்பதோ, குழந்தை உள்ளத்தைச் சிதைப்பதோ தவிர்க்கப்பட வேண்டியதாகும்.

நபி(ஸல்) அவர்களிடம் கறுப்புப் புள்ளிகள் போடப்பட்ட ஒரு ஆடை கொண்டுவரப்பட்டது. ‘இதை நாம் யாருக்கு அணிவிக்கலாம்?’ என நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள். கூட்டத்தில் இருந்தவர்கள் மௌனம் காத்தனர். எனவே நபி(ஸல்) அவர்கள் ‘ஹாலித் இப்னு ஸயித்(ரழி) அவர்களின் மகள் உம்மு காலிதை அழைத்து வாருங்கள்!’ என்று கூறினார்கள். அச்சிறுமி சுமந்து வரப்பட்டாள். நபி(ஸல்) அவர்கள் அச்சிறுமியை எடுத்துத் தன் கையாலேயே அந்த ஆடையை அவளுக்கு அணிவித்தார்கள்.

பின்னர், ‘ஸனா! ஸனா!’ என்று கூறினார்கள். இது அறபு வார்த்தை அல்ல. இது அபீஸீனியப் பாஷையாகும். ‘ஸனா’ என்றால் அழகு என்று அர்த்தமாகும். இந்தச் சிறுமி அபீஸீனியாவிலிருந்து வந்திருந்ததால் அந்தச் சிறுமிக்குப் புரியும்படி அவளது பாஷையில் ‘அழகாக இருக்கிறது!’ என்று கூறினார்கள். அது மட்டுமன்றி அச்சிறுமியின் நீண்ட ஆயுளுக்காகப் பிரார்த்தனையும் செய்தார்கள்.

 இந்தச் சிறுமி, தான் பெரியவளான போது இந்த ஹதீஸை அறிவிக்கும் போது;
‘பின்னர் நான் நபி(ஸல்) அவர்களை அண்டி அவர்களின் இறுதி நபித்துவ முத்திரை அடையாளத்தைப் பிடித்து விளையாட ஆரம்பித்தேன். அப்போது (நான் நபி(ஸல்) அவர்களுடன் மரியாதைக் குறைவாக நடப்பதாக எண்ணிய) எனது தந்தை என்னை அதட்டினார். அதற்கு நபியவர்கள் எனது தந்தையைப் பார்த்து ‘அவளை அவள் பாட்டில் விட்டு விடு!’ எனக் கூறினார்கள்.

உண்மையாக நடந்துகொள்ளுதல்:

பிள்ளைகள், பெரியவர்களை முன்மாதிரியாகக் கொள்கின்றனர். இந்த வகையில் பெரியவர்கள் – குறிப்பாகப் பெற்றோர்கள் பிள்ளைகளுக்குச் சிறந்த முன்மாதிரிகளாகத் திகழ வேண்டும். குழந்தைகளுடன் பேசும் போது பொய் பேசலாகாது! வாக்களித்தால் மீறக்கூடாது! போலி வாக்குறுதிகள் அளிக்கவும் கூடாது! இந்த விடயத்தில் பெற்றோர்கள் – குறிப்பாகத் தாய்மார்கள் தவறு விடுகின்றனர்.

அழுகின்ற பிள்ளையைச் சமாளிப்பதற்காகவும், பிள்ளைகளிடமிருந்து வேலை வாங்குவதற்காகவும் அது தருவவேன், இது தருவேன் என அரசியல்வாதிகள் போன்று போலி வாக்குறுதிகளை அள்ளி வீசுகின்றனர். பின்னர் தேர்தல் முடிந்த கதை போன்று கண்டுகொள்ளாமல் விட்டு விடுகின்றனர். இதனால் குழந்தைகள் பொய்யையும், வாக்களித்து விட்டு மாறு செய்வதையும், ஏமாற்றுவதையும் சர்வ-சாதாரண விஷயங்களாக எடுத்துக்கொள்வர். இவை மூன்றும் முனாஃபிக்குகளின் பண்பாகும். இந்த மூன்று குற்றத்தையும் சாதாரணக் குற்றங்களாக அவர்கள் கருத ஆரம்பித்து விட்டால் அது அவர்களது எதிர்கால வாழ்வில் பாரிய வீழ்ச்சியை உண்டுபண்ணி விடும். இந்த வகையில் பிள்ளைகளிடம் பொய் சொல்லவோ, போலி வாக்குறுதி அளிக்கவோ கூடாது. அவர்களைச் சின்ன விஷயத்தில் கூட ஏமாற்றக் கூடாது!

இதற்கு மாற்றமாக நடந்தால் பெற்றோர் பற்றிய நல்லெண்ணம் பிள்ளைகளிடம் எடுபட்டு விடும். ‘எனது தாய் பொய் சொல்பவள்; எனது தந்தை ஏமாற்றுபவர்’ என்ற எண்ணம் ஏற்பட்டு விட்டால் அவர்கள் பெற்றோரின் எந்தப் போதனைகளையும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். எனவே இது விடயத்தில் பெரும் பொறுப்புணர்வுடன் நடந்துகொள்ள வேண்டும்!

அப்துல்லாஹ் இப்னு ஆமிர்(ரழி) அவர்கள் கூறுகின்றார்கள்;

‘எங்களது வீட்டில் நபி(ஸல்) அவர்கள் இருக்கும் போது எனது தாய் என்னை அழைத்தார்கள். அப்போது ‘வா! ஒரு சாமான் தருவேன்!’ எனக் கூப்பிட்டார். இது கேட்ட நபி(ஸல்) அவர்கள் ‘நீங்கள் குழந்தைக்கு என்ன கொடுக்க விரும்புகின்றீர்களா?’ எனக் கேட்டார்கள். எனது தாய் ‘நான் பேரீத்தம் பழம் கொடுப்பேன்!’ என்றார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள் (இப்படி அழைத்து விட்டு) குழந்தைக்கு எதையாவது நீங்கள் வழங்காவிட்டால் பொய் சொன்ன குற்றம் உங்கள் மீது பதியப்படும்!’ எனக் கூறினார்கள்.

எனவே குழந்தைகளை ஏமாற்றவோ, அவர்களிடம் பொய் பேசவோ, போலி வாக்குறுதிகளை வழங்கவோ கூடாது. இது அவர்களின் ஆளுமையில் பாரிய வீழ்ச்சியை உண்டுபண்ணும் என்பதைப் பெற்றோர் உணர்ந்துகொள்ள வேண்டும்.

ஆடை விடயத்தில் அவதானம்:

‘ஆள் பாதி! ஆடை பாதி!’ என்பர். ஆடையை வைத்து மனிதன் மதிப்பிடப்படுகின்றான். எனவே மனிதன் அணியும் ஆடை அவனுக்கு கண்ணியத்தையும், ஆளுமையையும் அளிக்கின்றது. சில ஆடைகள் குப்பார்களின் அடையாளமாகவும் மற்றும் சில ஆடைகள் குற்றச் செயல்களைச் செய்பவர்களினதும், நாகரிகமற்றவர்களினதும் ஆடைகளாக உள்ளன. மற்றும் சில ஆடைகள் ஒழுக்கங்கெட்டவர்களின் அடையாளமாக இருக்கின்றது. எனவே எமது குழந்தைகளின் ஆடை விடயத்தில் நாம் மிகுந்த அக்கரை செலுத்த வேண்டும்.

சில பெற்றோர் ஆண்பிள்ளைகளுக்குப் பெண்பிள்ளைகளினதும், பெண்பிள்ளைகளுக்கு ஆண்பிள்ளைகளினதும் ஆடைகளை அணிவித்து அழகு பார்க்கின்றனர். ஆண்பிள்ளை இல்லாத பெற்றோர் தனது பெண்பிள்ளைக்கு ஆண்பிள்ளைகளுக்குரிய ஆடைகளை அணிவித்துத் தமது ஆசையைத் தீர்த்துக்கொள்ள முற்படுகின்றனர். இதை இஸ்லாம் தடுத்துள்ளது.

ஆண் போன்று ஆடை அணியும் பெண்ணையும், பெண் போன்று ஆடை அணியும் ஆணையும் நபி(ஸல்) அவர்கள் சபித்துள்ளார்கள். உங்கள் குழந்தைகள் நபி(ஸல்) அவர்களின் சாபத்துக்குள்ளாகுவதை நீங்கள் விரும்புகின்றீர்களா?

இவ்வாறு பால் மாறி ஆடை அணிவது பழக்க-வழக்கத்திலும், பண்பாட்டிலும் பாரிய பாதிப்பை ஏற்படுத்தும். ஆணிடம் பெண் தன்மையையும், பெண்ணிடம் ஆண் தன்மையையும் ஏற்படுத்தி விடும். இதனால் அவர்களிடம் ஒழுக்க வீழ்ச்சி ஏற்படுவதுடன் சமுகத்தின் கேலிப் பொருளாகவும் அவர்கள் மாறி விடுவார்கள்.

அடுத்து, அணியும் ஆடை கண்ணியமானதாக இருந்தால் அதை அணிந்தவனின் செயல்பாடும் கண்ணியமானதாக இருக்கும். இன்றைய பெற்றோர் சினிமா நடிகர்களின் ஆடைகளைத் தமது குழந்தைகளுக்கு அணிவித்து அழகு பார்க்க ஆசைப்படுகின்றனர். அவர்கள் அணியும் ஆடைக்கு ஏற்ப அவர்களிடம் செயல்பாட்டிலும் மாற்றம் இருக்கும். முரட்டுத்தனமான ஆடை அணிபவர்களிடம் நீங்கள் மென்மையை எதிர்பார்க்க முடியாது. அநாகரிகமான ஆடைகளை அணிபவர்களிடம் நீங்கள் நாகரிகத்தை எதிர்பார்க்க முடியாது. எனவே ஆடை விடயத்தில் அவதானம் செலுத்த வேண்டும். கண்ணியமான தோற்றத்தைத் தரும் ஆடைகளை அவர்களுக்கு அணிவிக்க வேண்டும்.

 நபி(ஸல்) அவர்கள் குழந்தைகளின் ஆடை விடயத்தில் கரிசனை காட்டியுள்ளார்கள்.

அம்ரிப்னுல் ஆஸ்(ரழி) அவர்களின் மகன் அப்துல்லாஹ்(ரழி) அவர்கள் கூறுகின்றார்கள்;
‘நான் மஞ்சள் சாயம் பூசப்பட்ட இரண்டு ஆடைகள் அணிந்த நிலையில் என்னை நபி(ஸல்) அவர்கள் கண்டார்கள். ‘உனது தாய்தான் இந்த ஆடையை அணிவித்தாளா? இது நிராகரிப்பாளரின் ஆடை. இதை அணிய வேண்டாம்!’ எனக் கூறினார்கள். (முஸ்லிம்)

இந்த வகையில் நபி(ஸல்) அவர்கள் சிறுவர்களின் ஆடையில் அவதானம் செலுத்தியிருப்பதை அவதானிக்கலாம். எனவே, பெற்றோர் தமது குழந்தைகளுக்கு ஆடை எடுக்கும் போது கூடிய அக்கறை செலுத்த வேண்டும். சில பெற்றோர் வயதுக்கு வந்த பெண் பிள்ளைகளின் ஆடை விடயத்தில் கூட அலட்சியமாக இருக்கின்றனர். ‘ஜீன்ஸ்’, டீ-சேர்ட் சகிதம் தலையில் ஒரு துண்டைப் போட்டுக்கொண்டு பாதையில் பவணிவர அனுமதிக்கின்றனர். இது ஹறாமாகும். நாளை மறுமையில் நிச்சயமாக இதற்கு நாம் பதில் சொல்லியாக வேண்டும். ஆடை என்பது ஒரு மனிதனின் ஆளுமையிலும், ஒழுக்கத்திலும் அதிக தாக்கத்தைச் செலுத்தும் அம்சமாகும் என்பதைக் கவனத்தில் கொண்டு குழந்தைகளின் ஆடை விடயத்தில் அதிக அக்கறை செலுத்துவது அவசியமாகும்.

சிநேகம் கொள்ளுதல்:

பெரியவர்களிடமிருந்து அறிவையும், ஒழுக்கத்தையும், சமூகப் பண்பாட்டையும் பெற்றுக்கொள்ளும் விதமாகச் சிறுவர்கள் பெரியவர்களுடன் சினேகம் கொள்ளும் உரிமையைப் பெற்றுள்ளனர். இளம் பிராயத்தினருடன் சமூக அந்தஸ்த்துப் பெற்ற பெரியவர்கள் நெருக்கமாகப் பழகும் போது அவர்கள் மகிழ்வடைகின்றனர். அதைத் தமக்குக் கிடைத்த கௌரவமாகக் கருதுகின்றனர். தாமும் சமூகத்தில் மதிக்கத்தக்க பிரஜையாக மாறிவிட்டதாக உணர்கின்றனர். இந்த வகையில் சமூக-சமயப் பெரியவர்கள் சிறுவர்களுடன் சிநேகம் கொள்வது அவர்களது ஆளுமையை விருத்தி செய்யும். இந்த வகையில் நபி(ஸல்) அவர்கள் இளம் சிறுவர்களுடன் சிநேகமாகப் பழகியுள்ளார்கள். அவர்களது அறிவுக்கும், ஆற்றலுக்கும் ஏற்ப அவர்களுக்குப் போதனை செய்துள்ளார்கள். அனஸ், இப்னு உமர், இப்னு அப்பாஸ், இப்னு மஸ்ஊத் என நபி(ஸல்) அவர்களின் சினேகத்தைப் பெற்ற சிறுவர்கள் ஏராளம் உள்ளனர்.

ஒரு நாள் நபி(ஸல்) அவர்கள் இப்னு அப்பாஸ்(ரழி) அவர்களைத் தனது வாகனத்தில் ஏற்றிக்கொண்டு பயணிக்கும் போது, ‘சிறுவனே! நான் உனக்குச் சில வார்த்தைகளைக் கற்றுத் தருகின்றேன். நீ அவற்றைப் பேணிக்கொள்! அல்லாஹ் உன்னைப் பாதுகாப்பான். நீ அவற்றைப் பேணிக்கொள்! அவனை உன் முன்னால் காண்பாய். நீ பிரார்த்தித்தால் அல்லாஹ்விடம் மட்டுமே கேட்க வேண்டும். நீ பாதுகாவல் தேடினால் அல்லாஹ் ஒருவனிடம் மட்டுமே பாதுகாவல் தேட வேண்டும். அறிந்துகொள்! மனித சமூகம் ஒன்றுசேர்ந்து உனக்கு உதவ முற்பட்டாலும் அல்லாஹ் உனக்கு எழுதியதைத் தவிர அதிகமாக எந்த உதவியையும் செய்திட முடியாது. அவ்வாறு மனித சமூகம் உனக்குத் தீங்கு செய்ய எண்ணி விளைந்தாலும் உனக்கென அல்லாஹ் விதித்ததைத் தவிர அதிகமாக எந்தத் தீங்கையும் அவர்களால் செய்து விட முடியாது. பேனைகள் உயர்த்தப்பட்டு விட்டன. ஏடுகள் காய்ந்து விட்டன’ என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

இவ்வாறே ஒரு முறை பழ்ல் இப்னு அப்பாஸ்(ரழி) என்ற சிறுவர் நபியவர்களுடன் வாகனத்தில் இருந்தார். ஒரு பெண் நபி(ஸல்) அவர்களிடம் மார்க்க விடயம் தொடர்பாகக் கேள்வி கேட்டார். பழ்ல் அந்தப் பெண்ணையே பார்த்துக்கொண்டிருந்தார். நபி(ஸல்) அவர்கள் அந்த இளைஞரின் முகத்தை மறுபக்கம் திருப்பி விட்டார்கள் என்றெல்லாம் ஹதீஸ்களில் காண முடிகின்றது. இவை நபி(ஸல்) அவர்கள் இளம் ஸஹாபாக்களுடன் கொண்டிருந்த இறுக்கமான சினேகத்திற்குச் சான்றுகளாகத் திகழ்கின்றன.

சிறுவர்களின் உள்ளத்தை ஈர்க்கும் வார்த்தைகளைப் பயன்படுத்துதல்:

நபி(ஸல்) அவர்கள் சிறுவர்களுடன் நெருக்கமான சினேகம் கொண்டு அவர்களின் ஆளுமை விருத்திக்குப் பங்காற்றினார்கள். இவ்வாறே சிறுவர்களின் உள்ளத்தை ஈர்க்கும் மென்மையான, அன்பான வார்த்தைகளைப் பயன்படுத்துவார்கள்.

சிலபோது ‘யா குலாம்!’ (பையனேஃசிறுவனே) என அழைப்பார்கள். சிலபோது ‘அருமை மகனே!’ எனச் செல்லமாக அழைப்பார்கள். தனது பணியாளான அனஸ்(ரழி) அவர்களை நபி(ஸல்) அவர்கள் ‘யா புனைய!’ (எனது அன்பு மகனே! சின்ன மகனே! என்று அர்த்தம் தொணிக்கும் பதம்) கொண்டு அழைத்துள்ளார்கள்.

சிலபோது புனைப்பெயர் வைத்து அழைப்பார்கள். அதில் சிலபோது நகைச்சுவையும் இழையோடியிருக்கும். அலி(ரழி) அவர்கள் கோபத்தோடு மண்ணில் படுத்திருந்து மண் ஒட்டிய நிலையில் காட்சியளித்த போது, ‘யா அபத்துராப்!’ (மண்ணின் தந்தையே!) என அழைத்துள்ளார்கள். இவ்வாறு ஒரு நபித்தோழரை ‘இரண்டு காதுகளையுடையவரே!’ என்றும், மற்றும் ஒருவரை ‘துல்யதைன்!’ (இரு கைகளையுடையவரே!) என்றும் அவர் கூறி அழைத்துள்ளார்கள். சிலபோது ‘யப்ன அஹீ!’ (என் சகோதரனின் மகனே!) என்று அழைப்பார்கள். இவ்வாறு உரையாடும் போது அவர்கள் தயக்கமின்றிப் பெரியவர்களுடன் பழகும் பக்குவத்தை அடைவார்கள்.

சிறுவர்களின் உணர்வுகளை மதித்தல்:

சிறுவர்களின் உணர்வுகளை மதித்து நடக்கும் போது அவர்கள் தாம் சமூக அந்தஸ்த்தைப் பெறுவதாக உணர்கின்றனர். அவர்களது உரிமைகள் மறுக்கப்படுவதாக அவர்கள் உணர்ந்தால் அவர்கள் உள ரீதியாக ஊனமுறுகின்றனர். எனவே அவர்களின் உணர்வுகளையும், உரிமைகளையும் மதித்து நடக்க வேண்டும்.

ஒரு சபையில் நபி(ஸல்) அவர்களுக்குப் பால் கொடுக்கப்பட்டது. அதை அருந்தி விட்டு நபி(ஸல்) அவர்கள் வலது பக்கம் பார்த்தார்கள். அங்கே இப்னு அப்பாஸ் எனும் சிறுவர் இருந்தார். இடது பக்கம் அபூபக்கர்(ரழி) போன்ற பெரியவர்கள் இருந்தார்கள். அப்போது பால் கிண்ணத்தைப் பெரியவர்களுக்குக் கொடுக்க விரும்பிய நபி(ஸல்) அவர்கள் இப்னு அப்பாஸ்(ரழி) அவர்களிடம் ‘பெரியவர்களுக்குக் கொடுப்பதற்கு எனக்கு அனுமதியளிப்பாயா!’ எனக் கேட்டார்கள். அவர் மறுத்த போது கிண்ணத்தை அவரது கையிலேயே கொடுத்தார்கள்.

சிறுவர்களின் உரிமைகளையும், உணர்வுகளையும் நபி(ஸல்) அவர்கள் எவ்வளவு முக்கியத்துவம் கொடுத்து நோக்கியுள்ளார்கள் என்பதற்கு இந்த நபிமொழி நல்ல சான்றாகும்.

விளையாட அனுமதியுங்கள்!

சிறுவர்கள் விளையாட்டையும், வெளியில் பயணம் செல்வதையும் விரும்புவார்கள். குறிப்பாகப் பெற்றோர்களுடன் பயணிப்பதில் அவர்களுக்கு அலாதிப் பிரியம் உண்டு. எனவே இவற்றைப் பெற்றோரும், பெரியோர்களும் மதித்து நடக்க வேண்டும்.

சில பெற்றோரும், பெரியோரும் சிறுவர்கள் விளையாடுவதை அனுமதிக்க மாட்டார்கள். ‘திண்டால் உண்டால் சும்மா இருக்க வேண்டியது தானே!’ எனத் தமது நிலையிலிருந்து சிறுவர்களை நோக்குவர். சிறுவர்களை விளையாட அனுமதிப்பது அவர்களின் ஆளுமைகளை விருத்தி செய்யும்.
விளையாடும் போது சட்டத்திற்குக் கட்டுப்படவும், தோல்வியைத் தாங்கிக்கொள்ளவும், கூட்டு முயற்சியில் ஒருவருக்கொருவர் உறுதுணையாகச் செயல்படவும், தலைமை தாங்கவும், தலைமைக்குக் கட்டுப்படவும் அவர்கள் பழக்கப்படுகின்றனர்.

நபி(ஸல்) அவர்கள் ஆகுமான விளையாட்டுக்களை அங்கீகரித்துள்ளார்கள். அபூதல்ஹா(ரழி) அவர்களது மகன் அபூ உமைர் குருவிக் குஞ்சோடு விளையாடுவதை நபி(ஸல்) அவர்கள் தடுக்கவில்லை. ஆயிஷா(Ë) அவர்கள் திருமணத்தின் பின் நபி(ஸல்) அவர்களின் வீடு செல்லும் போது தனது விளையாட்டுப் பொருட்களையும் எடுத்துச் சென்றார்கள். அதை நபி(ஸல்) அவர்கள் அங்கீகரித்தார்கள். ஆயிஷா(Ë) அவர்களின் தோழிகள் அவர்களுடன் நபி(ஸல்) அவர்களின் வீட்டில் விளையாடுவதையும் அங்கீகரித்தார்கள். இந்த அங்கீகாரம் விளையாட்டின் அவசியத்தையும், அதன்பால் சிறுவர்களுக்குள்ள தேவையையும் உணர்த்துகின்றது.

இன்றைய சிறுவர்கள் தமது விளையாடும் உரிமையை இழந்து நிற்கின்றனர். ‘படி! படி!’ என்ற பெற்றோரின் திணிப்பு, பாடசாலை-பள்ளிக்கூடம்-டியூஷன் என அவர்களது இயல்பு வாழ்வு இயந்திரமயமாக்கப்பட்டுள்ளது. இது தவறாகும்.

படிப்பு என்பது களைப்பும் சோர்வும் தரும் ஒரு அம்சமாகும். அந்தக் களைப்பும் சோர்வும் நீங்கிப் புத்துணர்ச்சி பெற விளையாட்டு மிக அவசியமாகும். தொடர்ந்து சிறுவர்கள் படிப்பது உள்ளத்தைச் சாகடித்து விடும். அவர்களது கனவுகளை நசுக்கி விடும். இதன் பின் அவர்கள் படிப்பது ஒழுங்காக ஏறாது. எனவே இடைக்கிடையே அவர்கள் விளையாட வேண்டும். அந்த விளையாட்டுக்கள் அவர்களது உள்ளத்திற்கு ஊக்கமளிப்பதாகவும், உடலுக்கு உற்சாகம் அளிப்பதாகவும் இருக்க வேண்டும். இன்று எமது சிறுவர்களிடம் வளர்ந்து வரும் கம்ப்யூட்டர் கேம்ஸ், ஃபோன் கேம்ஸ் என்பன உடலுக்கு உற்சாகமளிக்காதவை. அவை பார்வைக்குச் சோர்வை அளிக்கும். ஓரளவு இந்த விளையாட்டுக்களை அனுமதித்தாலும் தொடர்ந்து மணிக்கணக்கில் இந்த விளையாட்டுக்களில் ஈடுபடுவது விளையாட்டின் எத்தகைய நன்மைகளையும் அளிக்காது என்பது கவனத்திற்கொள்ளத்தக்கதாகும்.

விளையாடும் சிறுவர்களை உற்சாகப்படுத்துதல்:

நபி(ஸல்) அவர்கள் சிறுவர்கள் ஒன்றுசேர்ந்து விளையாடும் போது அவர்களை உற்சாகப்படுத்தியுள்ளார்கள். அம்பெறிந்து விளையாடியவர்களைப் பார்த்து, ‘இஸ்மாயீலின் பிள்ளைகளே! நீங்கள் அம்பெறியுங்கள்! உங்கள் தந்தை அம்பெறிபவராக இருந்தார்’ எனக் குறிப்பிட்டார்கள். இதேவேளை மோசமான விளையாட்டில் ஈடுபடும் போது கண்டித்தும் உள்ளார்கள். அம்பெறிந்து விளையாடும் போது உயிருள்ள பிராணிகளை இலக்காக வைத்து எறிபவர்களைச் சபித்துள்ளார்கள். இந்த வகையில் விளையாட்டை ஊக்குவித்த நபி(ஸல்) அவர்கள் சிறுவர்கள் விளையாடும் போது பார்வையாளராக இருந்து அவர்களை ஊக்குவித்துமுள்ளார்கள். ஒரு முறை அனஸ்(ரழி) அவர்களை நபி(ஸல்) அவர்கள் ஒரு வேலைக்காகத் தேடிய போது அவர் சிறுவர்களுடன் விளையாடிக்கொண்டிருந்தார். நபி(ஸல்) அவர்கள் அந்தச் சிறுவர்களுக்கு ஸலாம் கூறி அனஸ்(ரழி) அவர்களை ஒரு தேவைக்காக அனுப்பி விட்டு ஒரு நிழலில் அமர்ந்து அனஸ்(ரழி) வரும் வரை விளையாட்டை அவதானித்தார்கள். பெரியவர்களும், பெற்றோர்களும் தம்மைப் பார்த்துக்கொண்டிருப்பதாக அறிந்தால் சிறுவர்கள் இன்னும் அதிக உற்சாகத்துடன் விளையாடுவார்கள்.

பிரிக்கக் கூடாது:

குழந்தைகளையும், பெற்றோர்களையும் அல்லது அந்தக் குழந்தைகள் ஒட்டி உறவாடி வாழ்ந்தவர்களையும் பிரிப்பது கொடிய குற்றமாகும். பெற்றோரின் அரவணைப்பில் வாழ்வது என்பது குழந்தைகளின் உரிமையாகும். இன்று இந்த உரிமைகளும் தந்தைகளிடமிருந்து பிரிக்கப்பட்டு விட்டது.

வறுமை, சீதனம் சேர்த்தல், ஆடம்பர மோகம், பிறரைப் போல வாழும் ஆசை, பிறரின் தூண்டுதல் போன்ற பல காரணங்களால் பல தாய்மார்கள் பெற்றெடுத்த பிள்ளைகளைப் பிறரின் பொறுப்பில் போட்டு விட்டு வெளிநாடு செல்கின்றனர். தனது பிள்ளைகளை ஏக்கத்தில் தவிக்க விட்டு விட்டு பணத்திற்காகப் பிறரின் பிள்ளையை அரவணைத்து வளர்க்கின்றனர். தாய்ப்பாசம் இல்லாது வாழும் இந்த மலர்கள் செய்த குற்றம் என்ன?

இவ்வாறே தந்தையரின் வெளிநாட்டு வேலைவாய்ப்பால் தந்தையின் அரவணைப்பைக் குழந்தைகள் இழக்கின்றனர். போர்க் காலத்தில் கூட குழந்தைகளையும் பெற்றோர்களையும் பிரிப்பதை இஸ்லாம் தடுத்துள்ளது.

ஆடு-மாடு போன்ற கால்நடைகள், பறவைகள் என்பன போன்ற உயிரினங்களுக்குள் கூடத் தாய்க்கும், சேய்க்குமிடையில் பிரிவினையை உண்டுபண்ணுவதை இஸ்லாம் தடுத்துள்ளது. ஆடு-மாடுகளை விற்கும் போது தாயையும், கன்றையும் தனித்தனியாகப் பிரித்து விற்பதை நபி(ஸல்) அவர்கள் தடுத்துள்ளார்கள். குழந்தைகள் பெற்றோரை விட்டும் பிரிந்து வாழ்ந்தால் அவர்களது மன வளர்ச்சியும், ஆளுமை விருத்தியும் பாதிக்கப்படும். பின்வரும் ஹதீஸ் மூலம் இவ்விடயத்தில் இஸ்லாம் காட்டிய கரிசனையைக் கண்டுகொள்ள முடியும்.

பெற்றோருக்கும், பிள்ளைகளுக்கும், இரு சகோதரர்களுக்குமிடையில் பிரிவினையை உண்டுபண்ணுபவனை நபி(ஸல்) அவர்கள் சபித்தார்கள். அதுமட்டுமன்றி சபையில் வரும் போது தந்தைக்கும், பிள்ளைக்குமிடையில் அமர்வதையும் நபி(ஸல்) அவர்கள் தடுத்தார்கள். தந்தை, தான் தனது குழந்தையின் இயல்புகளையும், பழக்கங்களையும், தேவைகளையும் அறிந்திருப்பார். குழந்தை சிலபோது பசியை உணரலாம்; தூங்க விரும்பலாம்; மலசல தேவையை வெளியிடலாம். சபையில் பெற்றோர் பிள்ளையிடம் இருக்கும் போது இந்தத் தேவைகளை உணர்ந்து செயல்படலாம். அந்தக் குழந்தைக்கு வழிகாட்டலாம். இதற்கு மாற்றமாகக் குழந்தைக்கும் பெற்றோருக்குமிடையில் அமர்வது பல சங்கடங்களை ஏற்படுத்தும்.

குழந்தை, தான் தனித்து விடப்பட்டது போன்ற உணர்வை அடையலாம். கூட்டம் எப்போது கலையும்? என்ற எதிர்பார்ப்பே குழந்தையிடம் இருக்கும். கூட்டம் கலைந்ததும் தந்தையைப் பிரிந்து விட்டால் என்ன செய்வது? என்ற அச்சம் அதை ஆட்கொள்ளும். அந்தக் கூட்டத்திலிருந்து அந்தப் பிள்ளை எந்தப் பயனையும் பெறாது. எனவேதான் தந்தைக்கும், அவரது குழந்தைக்கும் நடுவில் அவைகளில் அமர்வதை நபி(ஸல்) அவர்கள் தடுத்தார்கள். (இப்னுமாஜா)

எனவே, பெற்றோர்களுக்கும் பிள்ளைகளுக்கும் அல்லது அந்தப் பிள்ளையை அன்புடன் அரவணைப்பவர்களுக்குமிடையில் பிரிவை ஏற்படுத்துவது குழந்தைகளின் ஆளுமை விருத்திக்கு ஆபத்தானது என்பதை அறியலாம்.

எனவே சிறுவர்களுக்கும், அவர்கள் அன்புடன் பழகுபவர்களுக்குமிடையில் பிரிவினையை உண்டுபண்ணுவதைத் தவிர்த்தல் வேண்டும். தனிப்பட்ட ரோசம், கோபத்திற்காகப் பெரியவர்கள் இளம் பிஞ்சுகளின் இதயத்தில் அம்பைப் பாய்ச்சக் கூடாது.

திட்டுவதையும், குறை கூறுவதையும் தவிர்த்தல்:

சில பெற்றோர் எப்போதும் தமது குழந்தைகளைக் குறை கூறிக்கொண்டும், குத்திப் பேசிக்கொண்டும் இருப்பர். அவர்களின் பணிகளில் குறை காண்பதில் இவர்களுக்கு அளாதிப் பிரியம் இருக்கும். இருப்பினும் குழந்தைகளின் நன்மைகளையோ, திறமைகளையோ மறந்தும் கூட இவர்கள் போற்றுவதும் இல்லை; புகழ்வதுமில்லை. இதனைப் பின்வரும் விதமாக ஒரு கவிஞன் பாடுவதை இவர்கள் நினைத்துப் பார்க்க வேண்டும்;

ஊக்கமருந்தினைப் போன்றது பெற்றோர் போற்றும் புகழுரைகள்
நோய் தீர்க்கும் மருந்தினைப் போன்றது கற்றோர் கூறும் அறிவுரைகள்
பிள்ளைகள் பெற்றோரின் புகழுரைகளை விரும்புகின்றனர். இது அவர்களை ஊக்கப்படுத்தும்; உற்சாகப்படுத்தும். அவர்களின் ஆற்றல்களை அதிகரிக்கும்.

சில பெற்றோர் குழந்தைகளின் திறமைகளைக் கண்டு மனதுக்குள் மகிழ்ந்துகொள்வர். ஆனால் பிள்ளைகளைப் போற்ற மாட்டார்கள். வகுப்பில் மகன் இரண்டாவது வந்துள்ளான் என்றால் முதலில் இரண்டாவது வந்ததைப் போற்றாமல் ‘ஏன் முதலாவது வரவில்லை எனக் கண்டிப்பர். சில பெற்றோர் பெண் பிள்ளைகளின் வேலைகளைப் பார்த்துக் குறை கூறுவர். யாருடைய நினைப்பில் வீட்டைக் கூட்டினாய்? என்ற தொணியில் பேசுவர். பிள்ளைகளுடன் இப்படி நடந்துகொண்டால் எதையும் சிறப்பாகச் செய்ய வேண்டும் என்ற எண்ணம் பிள்ளைகளின் உள்ளத்தில் பிறப்பதில்லை. நான் எதைச் செய்தாலும், எப்படிச் செய்தாலும் எனது பெற்றோர் குறைதான் கூறுவார்கள் என்ற மனநிலையுடன்தான் செயற்படுவார்கள். எனவே சிறப்பாகச் செய்ய வேண்டும் என்று கவனமெடுத்துக் கருமமாற்ற மாட்டார்கள். அவர்களின் பணியைப் பார்த்துப் பெற்றோர் பாராட்டுவர் என்ற நிலையிலிருந்தால் பாராட்டைப் பெறுவதற்காக, பெற்றோரின் மனதைப் பரவசப்படுத்துவதற்காகக் கூடிய அவதானிப்புடன் செயற்படுவர். இது குழந்தைகளிடம் ஆற்றலையும், ஆளுமையையும், ஆக்கத்திறனையும் அதிகரிக்கும்.

சிலர் பிள்ளைகளின் குற்றங்களின் போது அவர்களை மட்டரகமாகப் பேசுவர். ‘இவன் ஒன்றுக்கும் உதவமாட்டான்!’, ‘இவன் மாடு மேய்க்கத்தான் சரிப்படுவான்!’, ‘இவனைப் பெற்றதற்கு ஒரு உலக்கையைப் பெற்றிருக்கலாம்!’ இப்படியெல்லாம் குழந்தைகளைக் குறைத்துப் பேசிக்கொண்டிருந்தால் அவர்களது உள்ளத்திலேயே அவர்களைப் பற்றிய மட்டரகமான எண்ணம் எழுந்து விடும். இதன் பின்னர் இவர்கள் எந்தப் பொறுப்புக்களையும் ஏற்க அஞ்சுவர். நான் எதற்கும் இலாயக்கற்றவன் என்ற எண்ணம் அவர்களது ஆழ்மனதில் பதிந்து அவர்களது முயற்சிகளுக்கும், திறமைகளுக்கும் முட்டுக்கட்டை போட்டுக்கொண்டே இருக்கும். எனவே குழந்தைகளைக் குறை கூறிக்கொண்டோ, மட்டரகமாகக் குறைத்து மதிப்பிடும் வண்ணமோ பேசிக்கொண்டிருக்கலாகாது. அவர்களைப் போற்றும் வார்த்தைகளால் வார்த்தெடுக்க வேண்டும்; வளர்த்தெடுக்க வேண்டும். குறைகளை நிதானமாகவும், முறையாகவும் சுட்டிக்காட்டி அவர்களின் திறமைக்கான வாயில்களைத் திறந்து விடவேண்டும்.

‘நான் நபி(ஸல்) அவர்களுக்கு 10 ஆண்டுகள் பணிவிடை செய்துள்ளேன். அல்லாஹ்வின் மீது சத்தியமாக அவர்கள் என்னைப் பார்த்து ‘சீ..!’ என்றோ, நான் செய்த ஒரு செயல் குறித்து ‘ஏன் செய்தாய்?’ என்றோ, நான் செய்யாத ஒரு செயல் குறித்து ‘ஏன் செய்யவில்லை?’ என்றோ கேட்டதில்லை’ என்ற அனஸ்(ரழி) அவர்களின் கூற்றுக் குறித்துச் சிந்திப்பது அவசியமாகும்.

இதேவேளை, குழந்தைகளுக்கு எதிராகப் பெற்றோர்கள் சபிப்பதையும், திட்டுவதையும் அவசியம் நிறுத்தியாக வேண்டும். சில பெற்றோர் – குறிப்பாகத் தாய்மார்கள் தமது பிள்ளைகளைச் ‘சனியன் பிடித்தது! செத்துத் தொலைஞ்சால் நிம்மதி! இதுல வாயில மண்ணப் போட..!’ என்று திட்டித் தீர்ப்பார்கள்.

திட்டுவதைப் பொதுவாக இஸ்லாம் தடுக்கின்றது. பெற்றோர்கள் குழந்தைகளுக்குச் செய்யும் துஆக்கள் விரைவாக ஏற்றுக் கொள்ளப்படுகின்றன. இந்த வகையில் பெற்றோர் தமது குழந்தைகளின் நலனுக்காகப் பிரார்த்திக்க வேண்டும். இதற்கு மாற்றமாகக் குழந்தைகளுக்கு எதிராகத் திட்டுவது கண்டிக்கத் தக்கதாகும்.

‘உங்களுக்கு எதிராகவோ, உங்கள் குழந்தைகளுக்கு எதிராகவோ, உங்கள் பணியாளர்களுக்கு எதிராகவோ, உங்கள் சொத்துக்களுக்கு எதிராகவோ நீங்கள் பிரார்த்திக்காதீர்கள். கேட்பதை அல்லாஹ் வழங்கும் ஒரு நேரம் உள்ளது. அந்த நேரத்தில் துஆக் கேட்கப்பட்டு விட்டால் பதிலளிக்கப்பட்டு விடும்’ என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஜாபிர்(ரழி) – முஸ்லிம்)

குழந்தைகளைத் திட்டுவோர் இந்த ஹதீஸைக் கவனத்திற்கொண்டு தம்மைத் திருத்திக்கொள்ளக் கடமைப்பட்டுள்ளனர்.

உற்சாகமூட்டப் பரிசில்கள் வழங்குதல்:

குழந்தைகளின் ஆற்றல்களையும், ஆளுமையையும் வளர்ப்பதற்காக அவர்களிடையே போட்டி வைத்துப் பரிசில்கள் வழங்கலாம்.

நபி(ஸல்) அவர்கள் – அப்துல்லாஹ், உபைதுல்லாஹ், கதீர் இப்னு அப்பாஸ் போன்றோரை ஒரு வரிசையில் நிறுத்தி வைத்து, யார் என்னிடம் முதலாவது வருகிறாரோ அவருக்கு இப்படி இப்படிப் பரிசு வழங்குவேன் என்று கூறுவார்கள். அவர்களும் போட்டி போட்டுக்கொண்டு ஓடுவார்கள். வந்த வேகத்தில் அவர்கள் நபி(ஸல்) அவர்களது மார்பின் மீதும், தோளின் மீதும் விழுவார்கள். நபியவர்களும் அச்சிறுவர்களை வாரியணைத்து அன்பு முத்தம் பொழிவார்கள்’ என அப்துல்லாஹ் பின் ஹாரிஸ்(ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

எனவே, பாராட்டுடன் பரிசில்களும் இணைந்துகொண்டால் அவர்களின் உற்சாகமும், உத்வேகமும் உச்சக் கட்டத்திற்கு உயரும்.

அறிவைத் தூண்டல்:

குழந்தைகளின் சிந்திக்கும் திறனை வளர்ப்பதற்காக அவர்களிடம் கேள்வி கேட்டு அவர்கள் சரியான பதிலளிக்கும் போது அவர்களைப் பாராட்டலாம்.

இப்னு உமர்(ரழி) அவர்கள் கூறுகிறார்கள்;
ஒரு நாள் நபி(ஸல்) அவர்கள், ‘ஒரு மரம் உள்ளது. அதன் இலை விழாது. அது முஸ்லிமுக்கு ஒப்பானது. அது என்ன மரம்? என்று எனக்குக் கூறுங்கள்!’ என்றார்கள். மக்கள் ஏதோ பாலைவன மரம் என எண்ணினர். எனினும் அது ஈத்தமரம் என நான் நினைத்தேன். ஆனால் வெட்கத்தால் கூறவில்லை. பின்னர் ‘அது என்ன மரம்?’ என்று நீங்களே கூறுங்கள்!’ எனக் கேட்ட போது நபி(ஸல்) அவர்கள் ‘அது ஈத்தமரம்!’ என்று கூறினார்கள்.
(புகாரி, முஸ்லிம்)

இது போன்ற கேள்விகள் சிறுவர்களைச் சிந்திக்கத் தூண்டும். பழமொழிகள், விடுகதைகள், புதிர்க் கணக்குகள் என்பவையும் இந்த வகையில் பெரிதும் உதவக் கூடியவையாகும்.

குழந்தைகளிடையே பாரபட்சம் வேண்டாம்:

சில பெற்றோர் தமது குழந்தைகளுக்கிடையே பாரபட்சம் காட்டுவர். ஆண் பிள்ளைக்கும், பெண் பிள்ளைக்குமிடையில் பாரபட்சம் காட்டுவர். சில வீடுகளில் மூத்தபிள்ளை-இளைய பிள்ளைக்கிடையே பாரபட்சம் காட்டப்படுவதுண்டு. இது தவறாகும். இந்த நடைமுறையால் குழந்தைகளுக்கு இடையே சகோதர பாசம் செத்துப் போய் விடுகின்றது. குரோத எண்ணம் ஏற்படுகின்றது. போட்டியும், பொறாமையும் அவர்கள் மத்தியில் ஆதிக்கம் செலுத்துகின்றன. இதனால் அவர்களது உள்ளம் சுருங்கி விடுகின்றது. விட்டுக் கொடுக்கும் இயல்போ, தாராளத் தன்மையோ, பணிந்து போகும் பண்போ, பகிர்ந்துண்ணும் பக்குவமோ அவர்களிடம் ஏற்பட வழியற்றுப் போகின்றது. எனவே பெற்றோர் இது விடயத்தில் அதிக அக்கறை காட்ட வேண்டும்.

உங்கள் குழந்தைகள் அனைவரும் உங்கள் குழந்தைகளே! அவர்கள் மீது பாசம் வைப்பதில் உள்ளத்தைச் சமநிலையில் வைத்துக்கொள்ள முடியாது. இருப்பினும் பாசத்தை வெளிப்படுத்தும் விதத்தில் ஏற்றத் தாழ்வோ, வித்தியாசங்களோ ஏற்பட்டு விடக்கூடாது.

‘அல்லாஹ்வை அஞ்சிக்கொள்ளுங்கள்! உங்கள் குழந்தைகளுக்கிடையில் நீதமாக நடந்துகொள்ளுங்கள்!’ என நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (முஸ்லிம்)

ஒரு நபித்தோழர் தனது ஒரு குழந்தையை அன்போடு மடியிலும், மற்றொரு குழந்தையை ஒதுக்கியும் வைத்த போது ‘இவ்விருவர்களையும் நீ சமமாக நடத்தக் கூடாதா?’ என நபி(ஸல்) அவர்கள் கண்டித்தார்கள்.

ஒரு நபித்தோழர் தனது ஒரு பிள்ளைக்கு ஒரு தோட்டத்தை அன்பளிப்பாக வழங்குவதாகவும், அதற்கு நபி(ஸல்) அவர்களைச் சாட்சியாக இருக்குமாறும் கேட்டுக்கொண்டார். நபி(ஸல்) அவர்கள் ‘உனக்கு வேறு பிள்ளைகள் இருக்கின்றார்களா?’ எனக் கேட்டார்கள். அவர் ‘இருக்கின்றார்கள்!’ என்று கூறியதும், ‘இதே போன்று அவர்களுக்கும் வழங்கியுள்ளாயா?’ எனக் கேட்டார்கள். நபித்தோழர் ‘இல்லை!’ என்றதும், ‘இந்த அநியாயத்திற்கா என்னைச் சாட்சியாக்குகின்றாய்?’ என நபி(ஸல்) அவர்கள் கண்டித்தார்கள். எனவே பெற்றோர்கள் குழந்தைகளுக்கு மத்தியில் பாரபட்சம் காட்டி அவர்களின் ஆளுமையை ஆணி வைத்து அறையும் அநியாயத்தை அவசியம் அகற்றியேயாக வேண்டும்.

ஒழுக்க விழுமியங்களைப் போதித்தல்:

நபி(ஸல்) அவர்கள் தம்மோடு அண்டி வாழ்ந்த சிறுவர்களின் ஒழுக்கம், பாதுகாப்பு, நலன் அனைத்திலும் அக்கறை காட்டியுள்ளார்கள்.

ஹிஜாப் சம்பந்தப்பட்ட சட்டம் இறக்கப்படுவதற்கு முன்னர் அனஸ்(ரழி) அவர்கள், நபி(ஸல்) அவர்களிடம் ‘சர்வசாதாரணமாக அனுமதியின்றியே வந்து செல்வார்கள். ஹிஜாப் சட்டம் அருளப்பட்ட போது அனஸ்(ரழி) அவர்கள், நபி(ஸல்) அவர்களிடம் வந்தார்கள்; ‘மகனே! அப்படியே நில்லுங்கள்! உள்ளே நுழைவதற்கான சட்டம் மாற்றப்பட்டு விட்டது. நீங்கள் உள்ளே நுழைவதென்றால் அனுமதி பெற்றே வரவேண்டும்’ எனக் கூறினார்கள்.
(ஆயிஷா(ரழி): புகாரி – அதபுல் முப்ரத்)

சிறுவர்கள் – குறிப்பாக 3 நேரங்களில் வீட்டில் அறைகளுக்குள் நுழைவதாக இருந்தால் கூட அனுமதி பெறவேண்டும்.

‘நம்பிக்கை கொண்டோரே! உங்களது அடிமைகளும், உங்களில் பருவ வயதை அடையாதவர்களும், பஜ்ரு தொழுகைக்கு முன்னரும், உங்கள் (மேலதிக) ஆடைகளைக் களைந்திருக்கும் நண்பகல் வேளையிலும், இஷாத் தொழுகையின் பின்னரும் ஆகிய மூன்று வேளைகளிலும் (உங்களிடம் நுழைய) உங்களிடம் அனுமதி கோரிக்கொள்ளட்டும். (இவை) மூன்றும் உங்களுக்குரிய அந்தரங்க நேரங்களாகும். இவை அல்லாத வேளைகளில் (அவர்கள் உங்களிடம் வருவது) உங்கள் மீதும் அவர்கள் மீதும் குற்றமில்லை. உங்களில் சிலர் மற்றும் சிலரைச் சுற்றி வருபவர்களே!’ (24:58)

பெண்கள் தங்கள் ஆடைகளைத் தளர்த்தியிருக்கும் சந்தர்ப்பங்களில் அனுமதி பெற்றே உள்ளே வரவேண்டும் என்பதைச் சிறுவர்களுக்குக் கற்றுக் கொடுக்க வேண்டும். இந்தப் பழக்கம் அவர்களின் ஆளுமையை வளர்க்கின்றது.

பாதுகாப்புத் தேடுதல்:

குழந்தைகளின் வெளிப்படையான பாதுகாப்பில் மட்டுமன்றி, ஆன்மிக ரீதியான பாதுகாப்பிலும் பெற்றோரும், மற்றோரும் அதிக அக்கறை காட்ட வேண்டும்.

நபி(ஸல்) அவர்கள் ஹஸன்-ஹுஸைன்(ரழி) ஆகிய இருவருக்குமாக பின்வருமாறு பாதுகாப்புத் தேடுவார்கள்;

பொருள்:
அனைத்து வகைச் ஷைத்தான்களை விட்டும், விஷஜந்துக்களை விட்டும், நோவினை தரும் அனைத்து வகைக் கண்ணூறுகளை விட்டும் அல்லாஹ்வின் பரிபூரணமான வார்த்தைகளைக் கொண்டு நான் பாதுகாவல் தேடுகின்றேன்.

குறிப்பு:
நபி(ஸல்) அவர்கள் ஹஸன்(ரழி), ஹுஸைன்(ரழி) ஆகிய இருவருக்குமாகப் பாதுகாப்புத் தேடும் போது ‘உயீதுகுமா’ (உங்கள் இருவரையும் பாதுகாக்க வேண்டுகின்றேன்!) என்ற வார்த்தையைப் பயன்படுத்தினார்கள். ஒரு ஆண்மகனுக்காகப் பிரார்த்திப்பதாயின், ‘உயீதுக’ என்றும் பெண்பிள்ளைக்கு ‘உயீதுகி’ என்றும் மாறுபடும்.

அதே வேளை, இஸ்மாயீல்-இஸ்ஹாக்(அலை) ஆகியோருக்கும் இவ்வாறு பிரார்த்தித்ததாகவும் கூறுவார்கள்’ என இப்னு அப்பாஸ்(ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள். (அஹ்மத்)
எனவே, கண்ணுக்குப் புலப்படாத பாதிப்புக்களிலிருந்து எமது குழந்தைகளைப் பாதுகாக்கும் விடயத்திலும் பெற்றோர் கவனஞ்செலுத்த வேண்டும்.

தீய நேரங்களைத் தவிர்த்தல்:

சிறுவர்கள் விளையாடுவதை இஸ்லாம் ஊக்குவிக்கின்றது. இருப்பினும் அவர்களுக்குத் தீங்கை ஏற்படுத்தும் நேரங்களைத் தவிர்த்துக்கொள்ளுமாறு நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
‘சூரியன் மறையும் நேரம் ஷைத்தான்கள் (இரவுதங்க இடம் தேடி) பரவும் நேரமாகும். இந்த நேரத்தில் குழந்தைகள் வெளியில் விளையாடுவதைக் கட்டுப்படுத்த வேண்டும். இரவு ஆரம்பமாகும் போது உங்கள் குழந்தைகளை வீட்டிற்குள் வைத்திருங்கள்! ஏனெனில் அப்போது ஷைத்தான்கள் பரவித் திரிகின்றன. இரவானதும் நீங்கள் அவர்களை விடலாம். ‘பிஸ்மில்லாஹ்!’ கூறி உங்கள் கதவை மூடுங்கள்! ‘பிஸ்மில்லாஹ்!’ கூறி விளக்கை அணையுங்கள்!. ‘பிஸ்மில்லாஹ்!’ கூறித் தண்ணீர்ப் பையைக் கட்டுங்கள்! ‘பிஸ்மில்லாஹ்!’ கூறி உங்கள் பாத்திரங்களை மூடுங்கள்!’ என நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (புகாரி)

எனவே, மஃரிப் வேளையில் குழந்தைகள் வீட்டிற்குள் வந்து விடும் விதத்தில் அவர்களுக்கான விளையாட்டு நேரத்தை மட்டுப்படுத்தி ஒழுங்குபடுத்த வேண்டும். இதன் மூலம் வளரும் சந்ததியின் இரவு நேரங்களில் தவறான செயற்பாடுகளில் ஈடுபடுவதையும் தவிர்க்கலாம். விளையாட்டின் பெயரில் இளம் சந்ததியினர் ஆபாசப் படங்களைப் பார்க்கவும், சிகரட்-போதைப்பொருள் பாவனை-ஒழுக்கச் சீர்கேடுகளில் ஈடுபடவும் இந்தச் ஷைத்தான் பரவும் நேரம் பயன்படுத்தப்படுவதையும் தவிர்க்கலாம்.

படுக்கையை விட்டும் பிரித்தல்:

சிறுவர்கள் வளர்ந்து 7 வயதைத் தாண்டும் போது பெற்றோர்கள் அவர்களைத் தனியான படுக்கைக்கு மாற்ற வேண்டும். அவர்கள் தனியாகப் படுக்கும் போது தானும் பெரிய மனிதனாகி விட்டதாக உணர்கின்றனர். அவர்களுக்கு எனத் தனியறை-தனிக்கட்டில்-தனிமேசை என்று ஒதுக்கப்பட்டால் அதைப் பராமரிப்பதிலும், ஒழுங்குபடுத்துவதிலும் கவனம் செலுத்துகின்றனர். இது அவர்களின் ஆளுமை வளர்ச்சிக்கு வழிவகுக்கும்.

அடுத்து, சிறுவர்கள் குறிப்பிட்ட வயதை அடைந்த பின்னரும் அவர்கள் பெற்றோருடன் சேர்ந்து உறங்குவதில் பாரிய ஒழுக்க வீழ்ச்சிக்கான பாதைகள் திறக்கப்படுகின்றன. சிறுவர்கள் எதையும் அறியும் ஆவலில் உள்ளனர். சிலபோது பெற்றோரின் இல்லற நடத்தைகளைத் தூங்குவது போன்ற பாவனையில் அவர்கள் அவதானிக்கலாம். இதனால் அவர்களது நடத்தையில் பாரிய மாற்றம் ஏற்படும். ‘இது என்ன?’ எனச் செய்து பார்க்க முற்படுவர். சிலபோது பார்ப்பதில் ஆர்வம் அதிகரித்து விட்டால் இதற்காக முயற்சி செய்து பார்க்கும் மனநிலைக்கு மாறிவிடுவர். சிலர் இதில் உச்சக்கட்ட மனநிலைப் பாதிப்புக்குக் கூட ஆளாகுகின்றனர்.

இஸ்லாம் குழந்தைகள் 7 வயதைத் தாண்டிய பின்னர் ஒரே படுக்கையில் ஒன்றாகப் படுக்க வைப்பதையும், ஒரே போர்வையில் ஒன்றாகப் போர்த்திப் படுக்கும் நிலையைச் சகோதரர்களுக்கு மத்தியில் கூட தவிர்க்குமாறும் கட்டளையிடுகின்றது.

நல்ல நட்பு:

மனிதனின் மன அமைதிக்கு நல்ல நட்பு அவசியமாகும். சிறுவர்களும், இளைஞர்களும் நட்பை மதிக்கின்றனர். எனவே குழந்தைகளின் நட்பு விஷயத்தில் பெற்றோர் அதிக அக்கறை செலுத்த வேண்டும். நல்ல நட்புகளை ஏற்படுத்த வேண்டும். 10 வயதுப் பையன் 20 வயது இளைஞனுடன் நெருங்கிப் பழகுவது போன்ற நட்பு முறைகளைத் தவிர்க்க வேண்டும். தன்னினச் சேர்க்கையும், தவறான பாலியல் நடைமுறைகளும் பரவி வருவதால் குழந்தைகளின் நட்பு விடயத்தில் அதிக விழிப்புடன் இருக்க வேண்டும். குழந்தைகளுக்கு நல்ல நட்புகளை ஏற்படுத்திக் கொடுப்பதுடன் தீய நட்பின் தீங்கு பற்றியும் எச்சரிக்க வேண்டும்.

தவறுகளைக் களைதல்:

குழந்தைகள்-வளர்ந்த வாலிபர்களின் நடத்தைகளை உன்னிப்பாக அவதானித்து அவர்களை வழிநடத்துவது அவசியமாகும்.

பழ்ல் இப்னு அப்பாஸ்(ரழி) அவர்கள் நபி(ஸல்) அவர்களுக்குப் பின்னால் வாகனத்தில் இருந்தார். அப்போது கருப்புக் கன்னங்களையுடடைய ஒரு அழகான பெண் நபி(ஸல்) அவர்களிடம் மார்க்க விளக்கத்தைக் கேட்பதற்காக வந்தாள். இந்த இளைஞர் அந்தப் பெண்ணைப் பார்த்தார். நபி(ஸல்) அவர்கள் அவர்களது முகத்தை மறுபக்கம் திருப்பி விட்டார்கள் என நபிமொழிகள் கூறுகின்றன. இங்கே நபி(ஸல்) அவர்கள் அந்த இளைஞனின் இயல்பைப் புரிந்து அவரது நடத்தையை அவதானித்து வழிநடத்தியிருப்பதை அவதானிக்கலாம்.

அவர்களின் உரிமைகள் விடயத்தில் அனுமதி பெறல்:

குழந்தைகளின் உரிமைகள் விடயத்தில் பெற்றோர் நிதானமாகச் செயற்பட வேண்டும். பிள்ளைகளின் உரிமைகளைப் பெற்றோரோ, பெரியவர்களோ அலட்சியம் செய்யக்கூடாது.

நபி(ஸல்) அவர்கள் ஒரு சபையில் இருந்த போது பால் கொண்டுவரப்பட்டது. அவர்கள் அதை அருந்தி விட்டு வலது பக்கம் பார்த்த போது இப்னு அப்பாஸ்(ரழி) அவர்கள் இருந்தார்கள். இடது பக்கத்தில் பெரிய ஸஹாபாக்கள் இருந்தனர். நபி(ஸல்) அவர்கள் பெரிய ஸஹாபாக்களுக்குப் பாலை வழங்க விரும்பினார்கள். அந்தச் சிறுவரிடம் ‘இந்தப் பெரியவர்களுக்கு முதலில் பாலை வழங்க எனக்கு நீ அனுமதி தருவாயா?’ எனக் கேட்டார்கள். அவர் மறுத்த போது அவரிடமே முதலில் வழங்கினார்கள். (புகாரி, முஸ்லிம்)

பாலை முதலில் பெறும் உரிமையைக் கூட நபி(ஸல்) அவர்கள் மறுக்க விரும்பவில்லை. எனவே குழந்தைகளின் நியாயமான உரிமைகள் பெற்றோர்களால் பறிக்கப்படக் கூடாது.

நல்ல வாழ்க்கைத் துணையைத் தேடிக் கொடுத்தல்:

குழந்தைகள் பெரியவர்களானதும் அவர்களுக்கு மார்க்க ஒழுக்கமுள்ள நல்ல துணையை மணமுடித்துக் கொடுப்பது பெற்றோரின் பொறுப்பாகும். ஆணோ, பெண்ணோ யாராக இருந்தாலும் அவர்கள் சம்மதிக்காதவர்களுடன் நிர்ப்பந்தமாக நிச்சயதார்த்தம் செய்யக் கூடாது. சில தாய்மார் ‘நீ எனது மருமகளைத்தான் முடிக்க வேண்டும்!’ என்று மகனையும், ‘அவன்தான் உனது முறைமாப்பிள்ளை!’ எனப் பெண்ணையும் நிர்ப்பந்திக்கின்றனர். இது தவறாகும்.

சில பிள்ளைகள் பெற்றோர்களைப் பற்றிச் சிந்திக்காமல் அனைத்தையும் தாமே செய்து முடித்து விடுகின்றனர். இதுவும் தவறாகும். பிள்ளைகள் காதலித்துத் திருமணம் செய்வதை அனுமதிக்க முடியாது. இதை இஸ்லாம் கண்டிக்கின்றது. எனினும் ஒவ்வொரு மனிதனுக்கும் தனது வாழ்க்கைத் துணை பற்றிய ஆசைகளும், ஆர்வங்களும், கற்பனைகளும் இருக்கும். இதனைக் கவனத்திற்கொண்டு அவர்களின் ஆசைக்கு ஏற்ப தகுதியான துணையைப் பெற்றோர் திருமணம் செய்து வைப்பது பெற்றோரின் கடமையாகும்.

இதுவரை குழந்தைகள்-சிறுவர்களின் ஆளுமை விருத்திக்கு நபி(ஸல்) அவர்கள் காட்டித் தந்த பல வழிகாட்டல்களை ஆய்வு செய்தோம். சிறுவர் உளவியல் தொடர்பான அறிவும், ஆராய்ச்சியும் உள்ள இஸ்லாமிய அறிஞர்கள் நபி(ஸல்) அவர்கள் சிறுவர்களுடன் பழகிய விதத்தினை ஆழமாக ஆய்வு செய்தால் இன்னும் பயனுள்ள பல தகவல்களைப் பெறமுடியும். இது எனது அறிவுக்கு எட்டிய விதத்தில் முறையான ஒழுங்குபடுத்தல் இல்லாத சில அவதானங்கள் மட்டுமே! என்பதை வாசகர்கள் கவனத்திற்கொள்ள வேண்டும். இதில் ஏதும் குறைகள் இருந்தால் அது எனது ஆய்வினதும், அனுபவத்தினதும் குறையே தவிர நபி(ஸல்) அவர்களது வழிகாட்டலில் உள்ள குறையாக நிச்சயமாக அது இருக்காது என்பதை கவனத்திற்கொள்க!
(முற்றும்)
Previous Post Next Post