தலாக், இத்தா காரணங்களும் நியாயங்களும்

-S.H.M. இஸ்மாயில் ஸலஃபி

‘விவாகரத்துச் செய்யப்பட்ட பெண்கள் மூன்று மாதவிடாய்க் காலம் தங்களுக்காக எதிர்பார்த்திருக்க வேண்டும். அவர்கள் அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்புபவர்களாக இருந்தால் தங்களது கருவறைகளில் அல்லாஹ் படைத்ததை மறைப்பது அவர்களுக்கு ஆகுமானதல்ல. அவர்கள் இதற்குள் இணக்கப்பாட்டை விரும்பினால் அவர்களை மீண்டும் மீட்டிக் கொள்ள அவர்களின் கணவன்மார்களே முழு உரிமை யுடையவர்களாவர். (மனைவியர்களாகிய) இவர்கள் மீது முறைப்படி கடமைகள் இருப்பது போலவே இவர்களுக் கான உரிமைகளும் இருக்கின்றன. ஆயினும், ஆண்களுக்கு அவர்களை விட ஒருபடி உயர்வுண்டு! அல்லாஹ் யாவற்றையும் மிகைத்தவன்; ஞானமிக்கவன்.’ (2:228)

இந்த வசனம் பல அம்சங்கள் பற்றி பேசுகின்றது.

1. விவாகரத்து.

2. விவாகரத்து செய்யப்பட்ட பெண்ணின் இத்தா – காத்திருக்கும் – காலம்.

3. விவாகரத்து செய்யப்பட்ட பெண் தமது வயிற்றில் சிசு இருந்தால் அதை மறைக்கக் கூடாது.

4. குறித்த இத்தா காலத்திற்குள் விவாகரத்து செய்யப்பட்ட மனைவியை மீண்டும் அழைத்துக் கொள்ளும் உரிமை கணவனுக்கு உண்டு.

5. தலாக் விடப்பட்ட பெண்ணை பழிவாங்குவதற்காக மீண்டும் சேர்த்துக் கொள்ளக் கூடாது. மனைவியுடன் சேர்ந்து நல்ல முறையில் வாழ்க்கை நடத்தும் எண்ணத்துடனேயே மீண்டும் இணைய வேண்டும்.

6. ஆண்களுக்கு இருப்பது போலவே பெண்களுக்கும் உரிமைகள் உள்ளன.

7. குடும்ப வாழ்வில் ஆண்களுக்குப் பெண்களை விட ஒருபடி அந்தஸ்து உண்டு!

இவ்வாறான பல அம்சங்களை இந்த வசனம் பேசுகின்றது. இவை பற்றிய சுருக்கமான சில விளக்கங்களைப் பெற்றுக் கொள்ளுதல் அவசியமாகும்.

இஸ்லாம் விவாகரத்தை அனுமதித் துள்ளதுடன் அதை ஓரளவு இலகு படுத்தியும் உள்ளது. இது பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதியாக பலராலும் பார்க்கப்படுகின்றது. தலாக்.. தலாக்.. தலாக்.. என்று கூறி பெண்களை ஒதுக்கிவிட இஸ்லாம் அனுமதியளித்துள்ளது. இதனால் பெண்கள் பாதிக்கப்படுகின்றனர் என்று குற்றச்சாட்டு வைக்கப்படுகின்றது.

இஸ்லாம் நியாயமான காரணங்களினால்தான் ‘தலாக்’ – விவாகரத்தை அனுமதித்துள்ளது. திருமணம் என்ற ஒப்பந்தத்தின் அடிப்படையில் ஒன்று சேர்ந்தவர்களுக்கு அந்த ஒப்பந்தத்தை முறித்துக் கொள்வதற்கும் அனுமதி அளிப்பதுதான் நியாயமானது என்பதை நடுநிலையாக நின்று நிதானித்து சிந்தித்தால் உணர்ந்து கொள்ள முடியும்.

ஆண்களுக்கு மட்டுமன்றி பெண்களுக்கும் தாமாக முன்வந்து தமது கணவர்களிடமிருந்து விவாகரத்தைப் பெறுவதற்கான அனுமதியையும் இஸ்லாம் வழங்கியுள்ளது.

திருமணம் சுவர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றது என்று கூறி விருப்பமில்லாதவளுடன், ஒத்து வாழ முடியாத சூழ்நிலையிலும் நரக வாழ்க்கை வாழ வேண்டும் என்று இஸ்லாம் கூறவில்லை. ‘கல்லானாலும் கணவன்.. புல்லானாலும் புருஷன்’ என்று கல்லுடனும், புல்லுடனும் மல்லுக் கட்டி வாழ்க்கை நடத்த வேண்டும் என்று பெண்களையும் இஸ்லாம் கட்டிப் போடவில்லை.

மனைவி நடத்தை சரியில்லாதவளாக இருந்தால் மட்டுமே விவாகரத்து செய்யலாம் என சில சட்டங்கள் சொல்கின்றன. எனவே, ஒரு மனைவியைக் கணவனுக்குப் பிடிக்காவிட்டால் அவள் மீது வேண்டுமென்றே இட்டுக்கட்டி அவளை விகாகரத்து செய்ய முற்படுகின்றான். சாதாரணமாக அவனுக்கு விவாகரத்து செய்யும் உரிமையைக் கொடுத்தால் அவனும் இந்தத் தவறைச் செய்ய வேண்டியிருக்காது. அவளும் வீண் களங்கத்தைச் சுமக்க வேண்டியிருக்காது. விவாகரத்துப் பெற்ற பின் தனக்கென புதிய வாழ்வை அவள் அமைத்துக் கொள்ளவும் இது உதவியாக இருக்கும்.

விவாகரத்து செய்ய முடியாத சூழ்நிலைகளால் கணவன் மனைவியையும், மனைவி கணவனையும் கொலை செய்யும் நிகழ்ச்சிகள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றன. விவாகரத்து அனுமதிக்கப்பட்டால் அவர்கள் முறையாகப் பிரிந்து தமக்கென புது வாழ்வை அமைத்துக் கொள்ளலாம். இதன் மூலம் இத்தகைய கொடூரக் கொலைகளைக் குறைக்கலாம்.

மனைவியைப் பிடிக்காத சிலர் விவாகரத்து செய்ய முடியாத காரணத்தினால் தினமும் அவளை நோவிப்பதுடன் அவளுக்கு இல்லற சுகத்தைக் கொடுக்கவும் மறுக்கின்றனர். இதே வேளை, தமக்கென சின்ன வீடுகளை (வைப்பாட்டிகளை) ஏற்பாடு செய்து கொள்கின்றனர்,

இதனால் அவனும் கெடுகின்றான் அவனால் இன்னுமொரு பெண்ணும் தவறான வழியில் செல்கின்றாள். சில போது இவனால் ஒதுக்கப்பட்ட மனைவியும் வேலி தாண்டும் வெள்ளாடாக மாறும் நிலைக்குள்ளாகின்றாள். விவாகரத்தை அனுமதித்து அவர்கள் தமக்கென ஒரு வழியை அமைத்துக் கொள்வது இலகுபடுத்தப்பட்டால் இது போன்ற பாவங்களையும் குறைக்கலாம். கணவன்-மனைவி இருவருமே நிம்மதியற்ற வாழ்வில் இருந்து விடுபடவும் இது வழிவகுக்கும்.

விவாகரத்துக்களால் பல பாதிப்புக்கள் இருந்தாலும் விவாகரத்தை இஸ்லாம் அனுமதித்ததற்கு அதைவிட அதிக நன்மைகளும், நியாயங்களும் காரணங்களாக உள்ளதை இக்கோணத்தில் சிந்தித்தால் புரிந்து கொள்ள முடியும்.

இஸ்லாம் விவாகரத்தை அனுமதித்தாலும் அதை ஊக்கப்படுத்தவில்லை. முடிந்தவரை அதைத் தவிர்க்கவே விரும்புகின்றது. இல்லற வாழ்வில் உள்ள நெளிவு சுழிவுகளைப் புரிந்து கொண்டு இருவரும் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து வாழ்வதையே இஸ்லாம் விரும்புகின்றது; ஊக்குவிக்கின்றது.

விவாகரத்துக்களைக் குறைக்குமுகமாக வாழ்க்கைத் துணையைத் தெரிவு செய்யும் போதே மார்க்கமுடைய, ஒழுக்கமுடையவர் களைத் தெரிவு செய்ய இஸ்லாம் வழிகாட்டுகின்றது. திருமணத்திற்கு முன்னரே ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று பணிக்கின்றது. திருமணத்தின் பின்னர் வாழ்க்கைத் துணையிடம் ஏதேனும் குறையைக் கண்டால் அதைப் பெரிதுபடுத்தாமல் உள்ள நலவுகளைப் பார்த்து திருப்தியடையக் கற்றுக் கொடுக்கின்றது. அவர்களை நீங்கள் வெறுத்த போதிலும் அவர்களுடன் நல்ல முறையில் நடந்து கொள்ளுங்கள் என்று பணிக்கின்றது.

‘அவர்களுடன் நல்ல முறையில் வாழ்க்கை நடத்துங்கள். நீங்கள் அவர்களை வெறுத்தாலும் (பொறுத்துக் கொள்ளுங்கள்.) ஏனெனில், நீங்கள் ஒன்றை வெறுக்க, அல்லாஹ் அதில் அதிகமான நன்மைகளை வைத்திருக்கக் கூடும்.’
(4:19)

இவ்வாறு இன்பமயமான இல்லற வாழ்க்கைக்குப் பல வழிகளை இஸ்லாம் போதிக்கின்றது. இதன் பின்னரும் பிரச்சினைகள் இருந்தால் ஐந்தாம் கட்ட நடைமுறையாகவே இஸ்லாம் தலாக்கைக் கூறுகின்றது.

மனைவியிடம் தவறான போக்கைக் கண்டால்:

1. நல்ல முறையில் எடுத்துச் சொல்லி திருத்த வேண்டும்.

2. அதற்கும் கட்டுப்படாவிட்டால் படுக்கையிலிருந்து ஓரமாக்கி உளவியல் ரீதியில் திருத்த முற்பட வேண்டும்.

3. அதற்கும் சரிப்பட்டு வராதவிடத்து காயம் ஏற்படாவண்ணம் இலேசாக அடித்துத் திருத்த முற்பட வேண்டும்.

4. அதற்கும் சரிப்பட்டு வராவிட்டால் கணவன்-மனைவி இருவரினதும் குடும்பத்தைச் சேர்ந்த பெரியவர்களிடம் முறையிட்டு சரி செய்ய முற்பட வேண்டும்.

இந்தக் கட்டத்திற்கு வந்த பின்னரும் மாற்றம் இல்லையென்றால் விவாகரத்தை நாடுவதை இஸ்லாம் ஐந்தாவது வழிமுறையாகக் கூறுகின்றது.

‘பெண்களை நிர்வகிக்க ஆண்கள் தகுதி யுடையோராவர். அவர்களில் சிலரை மற்றும் சிலரைவிட அல்லாஹ் சிறப்பித்திருப்பதாலும், (ஆண்களாகிய) அவர்கள் தமது செல்வங்களிலிருந்து செலவழிப்பதாலும் ஆகும். எனவே, நல்லொழுக்கமுள்ள பெண்கள் கட்டுப்பட்டு நடப்போராகவும், (கணவனில்லாது) மறைவாக இருக்கும் சமயத்தில் அல்லாஹ்வின் பாதுகாவல் கொண்டு தம்மைப் பாதுகாத்துக் கொள்வோராகவும் இருப்பர். எவர்கள் கணவருக்கு மாறுசெய்வார்கள் என்று நீங்கள் அஞ்சுகின்றீர்களோ, அவர்களுக்கு உபதேசம் செய்யுங்கள். (திருந்தாவிட்டால்) படுக்கைகளில் அவர்களை வெறுத்து விடுங்கள். (அதிலும் திருந்தாவிட்டால்) அவர்களுக்கு (இலேசாக) அடியுங்கள். அவர்கள் உங்களுக்குக் கட்டுப்பட்டால், அவர்களுக்கு எதிராக எந்த வழியையும் தேடாதீர்கள். நிச்சயமாக அல்லாஹ் உயர்ந்தவனும், பெரியவனுமாக இருக்கின்றான்.’

‘இன்னும் அவ்விருவருக்குமிடையில் பிளவை நீங்கள் அஞ்சினால், அவனது குடும்பத்திலிருந்து ஒரு நடுவரையும், அவளது குடும்பத்திலிருந்து ஒரு நடுவரையும் (சமாதானம் செய்ய) அனுப்புங்கள். இவ்விருவரும் (அவர்களுக்குள்) நல்லிணக்கத்தை விரும்பினால் அல்லாஹ் அவ்விருவருக்குமிடையில் இணக்கத்தை ஏற்படுத்துவான். நிச்சயமாக அல்லாஹ் நன்கறிந்த வனாகவும் மிக நுட்பமானவனாகவும் இருக்கின்றான்.’
(4:34-35)

விவாகரத்தும் இத்தாவும்:

இவ்வளவு படிமுறைகளைக் கடந்து இறுதிக்கட்டமாக ‘தலாக்’ அனுமதிக்கப்பட்ட போதும் ஒரே தடவையில் ‘தலாக்.. தலாக்.. தலாக்..’ என மூன்று முறை கூறி திருமண பந்தத்தை முறித்து விட முடியாது. கணவன் மனைவியைத் தலாக் கூறினால் மனைவி மூன்று மாதத் தீட்டுக்கள் ஏற்படும் வரை அல்லது மூன்று மாதத்தீட்டு ஏற்பட்டு சுத்தமாகும் வரை கணவனுக்காகக் காத்திருக்க வேண்டும். இந்தக் கால எல்லைக்குள் அவளுக்கு உணவு, உடை, இருப்பிடம் அனைத்தையும் கணவனே கொடுக்க வேண்டும். இந்தக் கால கட்டத்திற்குள் அவர்கள் இருவரும் விரும்பினால் சேர்ந்து கொள்ள முடியும். கால கட்டம் முடிந்து விட்டால் விரும்பினால் அவர்கள் புதிய திருமணத்தின் மூலம் இணைந்து கொள்ளலாம். இவ்வாறு இரு முறை கணவன்-மனைவி இருவரும் தலாக் மூலம் பிரியவும் மீண்டும் மீட்டிக் கொள்வதன் மூலம் அல்லது புதிய திருமணத்தின் மூலம் இணையவும் முடியும்.

இத்தாவின் சட்டங்கள்:

இந்த வசனத்தில் பொதுவாக விவாகரத்து செய்யப்பட்;ட பெண்கள் மூன்று மாதவிடாய் காலங்கள் காத்திருக்க வேண்டும் என்று கூறப்படுகின்றது. இதில் சில விதிவிலக்குகளும் உள்ளன.

1. கர்ப்பிணிகள்:

‘மாதவிடாய் குறித்து நம்பிக்கையிழந்த உங்கள் பெண்களின் (இத்தா) விடயத்தில் நீங்கள் சந்தேகம் கொண்டவர்களுக்கும் (இதுவரை) மாதவிடாய் ஏற்படாதவர்களுக்கும் உரிய ‘இத்தா’ காலம் மூன்று மாதங் களாகும். இன்னும், கர்ப்பிணிகளுக்குரிய (இத்தா) காலக்கெடு, அவர்கள் தமது சுமையைப் பிரசவிக்கும் வரையிலாகும். எவர் அல்லாஹ்வை அஞ்சுகின்றாரோ, அவரது காரியத்தை அவருக்கு அவன் எளிதாக்குவான்.’
(65:4)

கர்ப்பிணிப் பெண்கள் தலாக் விடப்பட்டால் அல்லது அவனது கணவன் மரணித்துவிட்டால் பிள்ளையைப் பெறும் வரை அவள் இத்தா – காத்திருக்க வேண்டும். அதுவரை அவள் மறு மணம் செய்ய முடியாது. தலாக் விடப்பட்டு ஒரு நாளில் குழந்தை கிடைத்தாலும் அவளது இத்தா காலம் முடிந்து விடும் அல்லது ஏழு எட்டு மாதங்கள் குழந்தையைப் பெற காலம் இருந்தாலும் அதுவரை அவள் காத்திருக்க வேண்டும்.

2. மாதத்தீட்டு இல்லாத பெண்கள்:

மாதத்தீட்டு வராத பெண்களாக இருந்தால் அவர்கள் மூன்று மாதங்கள் இத்தா இருக்க வேண்டும். சந்திரக் கணக்குப் பிரகாரம் இம்மாதங்கள் தீர்மாணிக்கப்படும். மேலே குறிப்பிட்;ட வசனம் இதற்கு ஆதாரமாக அமைகின்றது.

3. திருமணம் முடித்து உடலுறவு கொள்ளப்படும் முன்னர் தலாக் விடப்பட்ட பெண்:

‘நம்பிக்கை கொண்டோரே! நம்பிக்கை யாளர்களான பெண்களை நீங்கள் மணம் முடித்து, அவர்களை நீங்கள் தீண்டுவதற்கு முன் விவாகரத்துச் செய்துவிட்டால், நீங்கள் கணக்கிடக் கூடிய ‘இத்தா’ (எனும் காத்திருக்கும் காலம்) எதுவும் உங்களுக்காக அவர்கள் மீதில்லை. ஆகவே, அவர்களுக்கு வாழ்க்கை வசதிகளை வழங்கி, அவர்களை அழகிய முறையில் விட்டு விடுங்கள்.’ (33:49)

திருமணம் முடித்ததும் ஏதேனும் பிரச்சினையில் தலாக்விட நேர்ந்தால் அந்தப் பெண்களும் விவாகரத்து விடப்பட்ட பெண்கள் என்ற வட்டத்திற்குள் வந்தாலும் அவர்கள் இத்தா இருக்க வேண்டும் என்ற சட்டத்திலிருந்து விதிவிலக்குப் பெறுகின்றனர். அவர்கள் இத்தா இருக்க வேண்டியதில்லை.

திருமணம் முடித்து உடலுறவு கொள்ள முன் தலாக் விட்ட கணவன் அவளை மீட்டிக் கொள்வதில் அதிக உரிமையுடையவன் என்ற அந்தஸ்தையும் இழந்துவிடுவான்.

அடுத்து பெண்களைப் பழிவாங்க நினைத்து தலாக் விடப்பட்ட பெண்ணை மீட்டிக் கொள்ளக் கூடாது என்றும் இந்த வசனம் கூறுகின்றது. அவர்களுடன் நல்ல முறையில் வாழும் எண்ணம் இருந்தால் மட்டுமே மீட்டிக் கொள்ள வேண்டும். மாற்றமாக அல்லாஹ்வின் வசனத்தைப் பயன்படுத்தி அவளை மீட்டிவிட்டு அல்லாஹ்வின் சட்டத்திற்கு விரோதமாக பெண்களுடன் கொடூரமாக நடந்து கொள்வது அல்லாஹ்வின் சட்டங்களுடன் விளையாடு வதாகவே கருதப்படும். ஆண்களின் பழிவாங்கும் இந்த வக்கிரப் புத்தியைப் பின்வரும் வசனம் வன்மையாகக் கண்டிக்கின்றது.

‘நீங்கள் (உங்கள்) மனைவியர்களை (மீளக்கூடிய) விவாகரத்து செய்து, அவர்களின் (இத்தா) காலக்கெடுவின் எல்லையை அவர்கள் நெருங்கிவிட்டால், அவர்களை உரிய விதத்தில் வைத்துக் கொள்ளுங்கள். அல்லது நல்லமுறையில் அவர்களை விட்டு விடுங்கள். (மாறாக) வரம்பு மீறி அவர்களைத் துன்புறுத்துவதற்காக அவர்களை உங்களிடம் வைத்துக் கொள்ளாதீர்கள். இவ்வாறு யார் செய்கிறாரோ நிச்சயமாக அவர் தனக்கே அநியாயம் செய்து கொண்டார். அல்லாஹ்வின் வசனங்களைக் கேலியாக எடுத்துக் கொள்ளாதீர்கள். உங்கள் மீதுள்ள அல்லாஹ்வின் அருட்கொடையையும் உங்கள் மீது அவன் இறக்கிய வேதத்தையும் ஞானத்தையும் நினைவு கூருங்கள். அதன் மூலம் உங்களுக்கு அவன் உபதேசிக்கின்றான். இன்னும் அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்ளூ நிச்சயமாக அல்லாஹ் யாவற்றையும் நன்கறிந்தவன் என்பதையும் நீங்கள் அறிந்து கொள்ளுங்கள்.’ (2:231)

ஏன் இந்தக் காலம்:

தலாக் விடப்பட்ட பெண்கள் அல்லது கணவன் இறந்த விதவைப் பெண்கள் இவ்வளவு காலம் ஏன் காத்திருக்க வேண்டும் என்று கேள்வி எழுப்புகின்றனர். இத்தா என்பது பெண்களுக்கு இழைக்கப்படும் கொடுமை என்றும் விமர்சிக்கின்றனர். இத்தா காலம் முடிந்த பின்னர் பெண்கள் மறுமணம் செய்வதை இஸ்லாம் விரும்புகின்றது. விதவைகள் மறுமணம் செய்வதைத் தடுப்பவர்கள்தான் இத்தா என்பது கொடுமை என்று கொக்கரிக்கின்றனர்.

தலாக் விடப்பட்ட பெண்கள் இத்தா இருக்கும் போது கணவன்-மனைவி இருவரும் தத்தமது தவறுகளை உணர்ந்து அல்லது தமது துணைகளின் தேவையைப் புரிந்து அவர்கள் மீண்டும் இணைந்து வாழ இந்த இத்தா வழிவகுக்கின்றது.

குழந்தை இருக்கின்றதா? இல்லையா? (கருவுற்றுள்ளாளா) என்பதை அறிய சிறுநீர் பரிசோதனை செய்தாலே போதும்தானே? அதற்காக இவ்வளவு காலம் காத்திருக்க வேண்டுமா என்றும் கேட்கின்றனர்.

பரிசோனை மூலம் குழந்தை உண்டா? இல்லையா? என்பதை ஊர்ஜிதம் செய்யலாம் என்பது உண்மையே! எனினும்,

• இத்தா என்பது குழந்தை உண்டா? இல்லையா? என்பதை அறிந்து கொள்வதற்காக மட்டுமல்ல,

• அத்துடன், ஏற்கனவே கூறியது போல் இத்தா என்பது இணைந்து வாழ்வதற்கான கால அவகாசமாகவும் உள்ளது.

• அத்துடன் இஸ்லாத்தின் பார்வையில் அது ஒரு இபாதத், இறை வழிபாடு! குழந்;தை பெறும் தன்மையை இழந்தவர்கள் (?) கூட இந்த அடிப்படையில் இத்தா இருந்தாக வேண்டும்.

• இந்தப் பரிசோதனைகள் சில போது பொய்த்துப் போவதுண்டு! பணம் கொடுத்தால் தேவையான அடிப்படையில் மருத்துவ சான்றிதழ்கள் பெற முடியும். மூன்று மாதம், நான்கு மாதம் என்பது வயிற்றில் குழந்தை உண்டா? இல்லையா? என்பதை ஓரளவு கண்ணால் கண்டு யூகிக்கக் கூடிய காலகட்டமாகும். இதில் குளறுபடிகள் வருவதற்கான வாய்ப்பு குறைவாகும். இப்படி பல காரணங்களைக் கூறலாம். இருப்பினும், அண்மைய விஞ்ஞான ஆய்வுகள் இந்த காத்திருக்கும் காலத்தின் முக்கியத்துவத்தை நிரூபித்துள்ளது. 

இந்த அடிப்படையில் இஸ்லாம் கூறும் இந்த ‘இத்தா’ -காத்திருக்கும்- காலம் என்பது ஆன்மீக ரீதியானது, உணர்வுபூர்வமானது மட்டுமன்றி அறிவு பூர்வமானதும் கூட என்பதை அறியலாம்.
Previous Post Next Post