ஸூஃபியிஸம் – குர்ஆன் ஹதீஸ் ஒளியில் ஓர் ஆய்வு

 ஸூஃபியிஸம்’ (Sufyism) என்ற சொல் நபி (ஸல்) அவர்களின் காலத்திலோ அல்லது, நேர்வழி பெற்ற கலீஃபாக்களின் காலத்திலோ அல்லது தாபியீன்கள், தபஅ தாபியீன்கள் காலத்திலோ அல்லது கண்ணியத்திற்குரிய நாற்பெரும் இமாம்களின் காலத்திலோ இருந்ததில்லை. ‘ஸூஃபியிஸம்’ எங்கிருந்து இஸ்லாத்திற்கு வந்தது என்று ஆராய்ந்தவர்கள் இந்தப்பெயர் வந்ததற்கான இரண்டு காரணங்களைக் கூறுகின்றனர்.

* ‘ஸூஃப்’ (Soof) என்ற கம்பளி அணிந்து திரிந்தவர்களிடமிருந்து வந்ததே ‘Sufyism’ என்ற ஸூஃபித்துவம் என்கின்றனர் சிலர்.

* ‘ஸோஃபியா’ (Sophia) என்ற கிரேக்க சொல்லிலிருந்து தழுவி வந்ததே இந்த ஸூஃபியிஸம் என்கின்றனர் மற்றும் சிலர்.

இந்த ஸூஃபித்துவம் தஸவ்வுஃப், மறைவான ஞானம் அறியும் வழி, ஆன்மீகப்பாதைஎன்றெல்லாம் பல வழிகளில் அறியப்படுகிறது. இதைப்பின்பற்றிய ஸூஃபிகள் இஸ்லாத்தில் தரீக்காக்கள் என்ற பெயர்களில் பல பிரிவுகளை ஏற்படுத்தி விட்டனர். ஸூஃபியிஸம் தோன்றிய ஆரம்பக்காலத்தில் வாழ்ந்த ஸூஃபிகளுக்கும், பிற்காலத்தில் வாழ்ந்த ஸூஃபிகளுக்கும் நிறைய வேறுபாடுகள் இருக்கின்றன. பிற்காலத்தில் வந்தவர்களே அமல்கள் என்ற பெயரில் இஸ்லாத்தில் பித்அத்துகளை உருவாக்கி அவற்றில் ஷிர்க்கையும் கலந்து விட்டனர். தரீக்கா என்ற அரபுச் சொல்லுக்கு ‘வழி’ என்றும் ‘பாதை’என்றும் பொருள்படுகிறது. ஸூஃபிகள் இதற்கு ‘இறைவனை அடையும் வழி’ என்று கூறுகிறார்கள். மேலும் இந்த ஸூஃபிகள் இறைவனை அடைவதற்கு அல்லாஹ் ஸுப்ஹானஹு வத்த ஆலா, ரஸூல் (ஸல்) அவர்கள் மூலம் அருளிய‘ஷரீஅத்’ என்ற தெளிவான சட்டங்கள் போதாது என்றும் இதைத்தவிர இவர்களின் புதிய கண்டுபிடிப்பான ‘தரீக்கத்’ ‘ஹகீக்கத்’ ‘மஃரிஃபத்’போன்ற படித்தரங்களையும் கடந்து வரவேண்டும் எனக் கூறுகின்றனர். மேலும், இந்த ஸூஃபிகள் கூறுகிறார்கள். ஒருவன் இந்த படித்தரங்களை ஒரு ‘குரு’ (ஷெய்கு அல்லது பீர்) துணையின்றி தானாகவே கடந்து வரமுடியாது என்றும் கூறுகின்றனர். ஷெய்கு உடைய பைஅத் பெற்றால் தவிர ஒருவன் மோட்சம் பெற முடியாது என்பதும் இவர்களின் வாதமாகும்.

இந்த ஸூஃபித்துவத்திற்கும் இவை மூலம் உருவான ஸாதுலிய்யா தரீக்கா, காதிரிய்யா தரீக்கா, நகஷபந்தியா தரீக்கா, நூரிய்யா தரீக்கா இதுபோன்ற இன்னும் இருநூறுக்கும் மேற்பட்ட தரீக்காக்களுக்கும் இஸ்லாத்திற்கும் எவ்விதத்திலும் சம்பந்தம் இல்லை. இவைகள் எல்லாம் இவர்களின் வெறும் கற்பனைகளாகும். நபி (ஸல்) அவர்களின் எச்சரிக்கையான‘மார்க்கத்தில் புதிதாக உருவாகும் அமல்களைப் பற்றி எச்சரிக்கையாக இருங்கள்; புதிதாக உருவாக்கப்படும் ஒவ்வொன்றும் பித்அத் ஆகும். ஒவ்வொரு பித்அத்தும் வழிகேடு ஆகும். ஒவ்வொரு வழிகேடும் நரகத்திற்கு உரியவை’இன்னும் இதுபோன்ற எண்ணற்ற ஹதீஸ்களின்படி இவைகள் அனைத்திலிருந்தும் ஒரு முஸ்லிம் ஒதுங்கியிருக்க வேண்டும்.

இனி இந்த ஆய்வு கட்டுரையில், ஸூஃபியிஸம் என்பது குர்ஆன் மற்றும் ஹதீஸ்களுக்கு எவ்வாறு முரண்படுகிறது என்பதை ஆராய்வோம்.

ஸூஃபியிஸம்: இதைப் பின்பற்றக்கூடியவர்கள் தங்களின் ஸூஃபிகள், ஷெய்குமார்கள், பீர்கள், இறைநேசர்கள் ஆகியோர்களைப் பிரார்த்தித்து அழைக்கின்றனர்.

இஸ்லாம்: “அவனையன்றி நீங்கள் எவர்களை பிரார்த்தி(த்து அழை)க்கின்றீர்களோ, அவர்களுக்கு அணுவளவு அதிகாரமும் இல்லை”(அல்குர்ஆன்:35:13)

இன்னும் 13:14, 35:14, 35:40, 40:60, 72:20, 25:17-19, 43:86, 40:20, 46:4,5, 28:88, 29:42போன்ற வசனங்கள் அல்லாஹ்வேயே அழைத்து உதவிதேட வேண்டும் என வலியுறுத்துகினறன.

ஸூஃபியிஸம்: இக்கொள்கையை உடையவர்கள் தங்களின் ஸூஃபிகள், ஷெய்குமார்கள், பீர்கள், குரு ஆகியோருக்கு மறைவான ஞானம் இருப்பதாக நம்புகின்றனர்.

இஸ்லாம்: “(நபியே!) உம் கனவில் அவர்களை(த் தொகையில்) உமக்குக் குறைவாகக் காண்பித்ததையும், அவர்களை உமக்கு அதிகமாக காண்பித்திருந்தால், நீங்கள் தைரியம் இழந்து (போர் நடத்தும்) காரியத்தில் நீங்கள் (ஒருவருக்கொருவர் பிணங்கித்) தர்க்கம் செய்து கொண்டிருந்திருப்பீர்கள் என்பதையும் நினைவு கூறுவீராக! எனினும் (அப்படி நடந்து விடாமல் உங்களை) அல்லாஹ் காப்பாற்றினான்; நிச்சயமாக அவன் உள்ளங்களில் உள்ளவற்றை அறிபவன்” (அல்குர்ஆன்: 8:43)

நபியவர்களுக்கு மறைவான ஞானம் இருந்திருந்தால், பத்ருபோரில் எதிரிகளின் உண்மையான படைபலம் என்ன என்று அறிந்து தைரியம் இழந்திருக்கக் கூடும். மறைவான ஞானம் இல்லாததால், நபியவர்கள் கனவில் எதிரிகள் பலம் குறைவாகக் காண்பிக்கப்பட்டதை சரி என்று நம்பி தைரியமாக போருக்கு சென்றார்கள் என மேற்கண்ட இறைவசனம் கூறுகிறது.

“(நபியே! உமக்கு) இது மறைவான நிகழ்ச்சிகளில் உள்ளதாகும். நாம் இதனை உமக்கு (வஹீ மூலம்) அறிவித்தோம். நீரோ அல்லது உமது கூட்டத்தினரோ இதற்கு முன் இதனை அறிந்திருக்கவில்லை. நீரும் பொறுமையைக் கைக்கொள்வீராக! நிச்சயமாக இறுதியில் (நல்ல) முடிவு பயபக்தி உடையவர்களுக்குத் தான் (கிட்டும்)”(அல்குர்ஆன்: 11:49)

“(நபியே!) நீர் கூறும்: ‘அல்லாஹ் நாடினாலன்றி நான் எனக்கே யாதொரு நன்மையோ அல்லது தீமையோ செய்து கொள்ள சக்தியற்றவன்; மறைந்திருப்பவற்றை நான் அறிபவனாக இருந்தால் நன்மைகளை அதிகமாகத் தேடிக் கொண்டிருப்பேன்; (அந்நிலையில் எவ்விதமான) தீங்கும் என்னைத் தீண்டியிராது – நம்பிக்கை கொள்ளும் மக்களுக்கு நான் அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவனும், நன்மாராயம் கூறுபவனுமேயன்றி வேறில்லை” (அல்குர்ஆன்: 7:188)

மேற்கண்ட வசனங்கள் நபி (ஸல்) அவர்களுக்கு மறைவான ஞானம் இல்லை என்பதை தெளிவாக உரைக்கும்போது, மற்ற யாருக்குமே இந்த மறைவான ஞானம் இருக்க முடியாது. அவ்வாறு மறைவான ஞானம் இருக்கும் என்று நம்பினால் அவர்கள் மேற்கண்ட இறைவசனங்களை பகிரங்கமாக மறுக்கின்றனர்.

‘மறைவான ஞானம் அனைத்தும் அல்லாஹ்வைத்தவிர வேறு யாருக்கும் கிடையாது’ என்பதை திருக்குர்ஆனின் பல வசனங்கள் வலியுறுத்துகின்றன. பார்க்கவும்: 11:31, 64:4, 27:65, 34:14, 72:10, 2:31-32, 6:59, 27:20-27, 12:102, 33:63.

ஸூஃபியிஸம்: ஸூஃபிகள், ஸாதுலிய்யா தரீக்காவின் ஹல்கா (திக்ரு) முறை, காதிரிய்யா தரீக்காவின் ராத்தீபு (திக்ரு) முறை, நூரிய்யா தரீக்காவின் வணக்கமுறை என ஒவ்வொரு தரீக்காவினரும் பல்வேறு வணக்க முறைகளை உருவாக்கி இருக்கின்றனர். 

இஸ்லாம்: “….இன்றைய தினம் உங்களுக்காக உங்கள் மார்க்கத்தை பரிபூரணமாக்கி விட்டேன்; மேலும் நான் உங்கள் மீது என் அருட்கொடையைப் பூர்த்தியாக்கி விட்டேன். இன்னும் உங்களுக்காக நான் இஸ்லாம் மார்க்கத்தையே (இசைவானதாகத்) தேர்ந்தெடுத்துள்ளேன்….” (அல்குர்ஆன்: 5:3)

அல்லாஹ் மார்க்கத்தை பரிபூரணமாக்கி விட்டபின் எதற்காக புதிய வணக்கமுறைகள்?

நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்:

‘….செய்திகளில் சிறந்தது அல்லாஹ்வின் வேதமாகும். நேர்வழியில் சிறந்தது முஹம்மது (ஸல்) அவர்களின் நேர்வழியாகும். விஷயங்களில் கெட்டது மார்க்கத்தில் புதிதாக உருவாக்கப்பட்டது (பித்அத்) ஆகும். ஒவ்வொரு பித்அத்தும் வழிகேடாகும்’ அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி), ஆதாரம்: முஸ்லிம்.

‘யாராவது நமது மார்க்கத்தில் இல்லாத புதிய அமலைச் செய்தால் அது நிராகரிக்கப்படும்’புகாரி ஹதீஸ் எண்:2499.

‘யாராவது நமது மார்க்கத்தில் இல்லாத புதிய அமலைச் செய்தால் அது நிராகரிக்கப்படும்’ முஸ்லிம் ஹதீஸ் எண்:3243

‘பித்அத் புரியும் ஒருவரது தொழுகை, நோன்பு, தர்மம், உம்ரா, ஹஜ், குர்பானி, தீனுக்கான முயற்சிகள், தீனில் செலவழித்தல் அனைத்தும் அல்லாஹ்விடத்தில் ஒப்புக்கொள்ளப்பட மாட்டாது. குழைத்த மாவில் இருந்து தலைமுடி எவ்வளவு இலகுவாக வெளியேற்றப்படுமோ, அதுபோல் பித்அத் (நபி (ஸல்) அவர்கள் காட்டித்தராத புதிய அமல்) செய்யும் ஒருவன் இஸ்லாத்தில் இருந்து வெளியேறுவான்’அறிவிப்பவர்: ஹுதைபா (ரலி), ஆதாரம்: இப்னுமாஜா.

ஸுஃபியிஸம்: இதைப் பின்பற்றுபவர்கள் தங்களின் ஸூஃபிகள், ஷெய்குகள், பீர்கள் ஆகியோர்களின் கால்களில் விழுவது, கால்களைத் தொட்டு முத்தமிடுவது போன்ற அனாச்சாரங்களைச் செய்கின்றனர்.

இஸ்லாம்: ‘நபி (ஸல்) அவர்கள் தங்களின் கால்களில் விழுந்து மரியாதை செய்வதற்கு விரும்பிய ஸஹாபாக்களுக்கு அனுமதியளிக்காதது மட்டுமல்லாமல் இவ்வாறு செய்வதை முற்றிலுமாகத் தடுத்து விட்டார்கள்’அறிவிப்பவர்: கைஸ் இப்னு ஸஃது (ரலி), நூல்: அபூதாவூத் (1828), தாரமீ (1427)

ஸுஃபியிஸம்: பைஅத் கொடுக்கிறோம் என்ற பெயரில் அந்நிய ஆணும், பெண்ணும் தனியறையில் சந்திக்கின்றனர்.

இஸ்லாம்: ‘அந்நிய ஆணும், பெண்ணும் தனியறையில் சந்திப்பதை கடுமையாகக் கண்டித்த நபி (ஸல்) அவர்கள், தனித்திருக்கும் அவர்களுடன் மூன்றாவதாக ஷைத்தானும்கூட இருப்பதாகக் கூறினார்கள்’ அறிவிப்பாளர்: உமர் (ரலி), நூல்: திர்மிதி.

ஸுஃபியிஸம்: ‘மஃரிஃபத்’ என்ற நிலையை அடைந்த ஸூஃபிகள், இஸ்லாத்தின் கடமைகளான தொழுகை, நோன்பு, ஹஜ் போன்ற வணக்கங்களைச் செய்யத் தேவையில்லை என்று நம்புகின்றனர். ஏனெனில் அவர்கள் ‘காண்பதெல்லாம் இறையுறுவே’ என்ற நிலையை எய்தி இறைவனோடு ஐக்கியமாகி விட்டதாகக் கூறுகின்றனர். அதாவது அவர்கள் ‘வஹ்தத்துல் உஜூத்’ (Unity of Existence) என்ற அத்வைத கோட்பாட்டை நம்புகின்றனர். (நவூதுபில்லாஹி மின்ஹா)

இஸ்லாம்: இது இஸ்லாத்தின் அடிப்படைக்கே முரணான மாற்று மதத்தவரின் அத்வைத கருத்தாகும். இதை நம்புபவர் முஸ்லிமாகவே இருக்க முடியாது. அல்லாஹ் கூறுகிறான்:

“நிச்சயமாக நான்தான் அல்லாஹ்! என்னைத்தவிர வேறு நாயன் இல்லை; ஆகவே என்னையே நீர் வணங்கும்; என்னைத் தியானிக்கும் பொருட்டு தொழுகையை நிலநிறுத்துவீராக!” (அல்குர்ஆன்: 20:14)

“இன்னும், ஜின்களையும், மனிதர்களையும் அவர்கள் என்னை வணங்குவதற்காகவேயன்றி நான் படைக்கவில்லை” (அல்குர்ஆன்: 51:56)

“நிச்சயமாக அல்லாஹ்வே என்னுடைய இறைவனும், உங்களுடைய இறைவனும் ஆவான். ஆகவே அவனையே வணங்குங்கள். இதுவே (ஸிராத்துல் முஸ்தகீம் எனும்) நேரான வழியாகும்” (அல்குர்ஆன்: 3:51)

“….நிச்சயமாக குறிப்பிட்ட நேரங்களில் தொழுகையை நிறைவேற்றுவது முஃமின்களுக்கு விதியாக்கப் பெற்றுள்ளது” (அல்குர்ஆன்: 4:103)

இதுபோன்ற இன்னும் ஏராளமான திருமறையின் வசனங்கள் அல்லாஹ்வை மட்டுமே வணங்க வேண்டும்; அவனை வனங்காமல் பெருமையடிப்பவர்களை அல்லாஹ் கடுமையாகத் தண்டிப்பான் என வலியுறுத்துகிறது.

ஸுஃபியிஸம்: இதைப் பின்பற்றுபவர்கள் ‘திக்ரு’(ஹல்கா) செய்கிறோம் என்ற பெயர்களில் உரத்த குரலில் சப்தமாக ‘அல்லாஹ்’ எனக்கூவி அழைத்து பாட்டிசைத்து உடலை அசைத்து ஆட்டம் போடுகின்றனர். 


இஸ்லாம்: “(நபியே!) நீர் உம் மனதிற்குள் மிக்க பணிவோடும், அச்சத்தோடும் (மெதுவாக) உரத்த சப்தமின்றி காலையிலும், மாலையிலும் உம் இறைவனின் (திருநாமத்தை) திக்ரு செய்து கொண்டு இருப்பீராக! (அவனை) மறந்து விட்டிருப்போரில் ஒருவராக நீர் இருக்க வேண்டாம்” (அல்குர்ஆன்: 7:205)

“உண்மையான முஃமின்கள் யார் என்றால், அல்லாஹ்(வின் திருநாமம் அவர்கள் முன்) கூறப்பட்டால், அவர்களுடைய இருதயங்கள் பயந்து நடுங்கிவிடும்; அவனுடைய வசனங்கள் அவர்களுக்கு ஓதிக்காண்பிக்கப்பட்டால் அவர்களுடைய ஈமான் (பின்னும்) அதிகரிக்கும்; இன்னும் தன் இறைவன் மீது அவர்கள் முற்றிலும் நம்பிக்கை வைப்பார்கள்” (அல்குர்ஆன்: 8:2)

மேலும் நபி (ஸல்) அவர்கள் கூறியிருக்கிறார்கள்:‘மனதிற்குள் அடக்கமாகப் பிரார்த்தனை (திக்ரு) செய்யுங்கள்; நீங்கள் செவிடனையோ, மறைவானவனையோ பிரார்த்திக்கவில்லை. எல்லாவற்றையும் உங்களுடன் இருந்து கேட்டுக்கொண்டு இருக்கின்ற இறைவனிடம் தான் பிரார்த்தனை செய்கின்றீர்கள்’அறிவிப்பவர்: அபூமூஸா அல் அஷ்அரி (ரலி), ஆதாரம்: புகாரி.

ஸூஃபியிஸம்: ஸூஃபியாக்களைப் பின்பற்றுபவர்கள் திக்ரு (ஹல்கா) செய்யும்போது அல்லாஹ்வின் பெயரை ‘அஹ்’ என்றும் ‘ஆஹ்’ என்றும் திரித்துக் கூறுகின்றனர்.

இஸ்லாம்: “அல்லாஹ்வுக்கு அழகிய திருநாமங்கள் இருக்கின்றன; அவற்றைக் கொண்டே நீங்கள் அவனைப் பிரார்த்தியுங்கள். அவனுடைய திருநாமங்களைத் தவறாக பயன்படுத்துவோர்களை (புறக்கணித்து) விட்டுவிடுங்கள் – அவர்களுடைய செயல்களுக்காக அவர்கள் (தக்க) கூலி கொடுக்கப்படுவார்கள்” (அல்குர்ஆன்: 7:180)

ஸூஃபியிஸம்: ஸூஃபிகளைப் பின்பற்றக்கூடியவர்கள் திக்ரு – ஹல்கா செய்கிறோம் என்ற பெயரில் ஆஹ், அஹ் என்று உரக்க சப்தமிட்டவாறு கைதட்டுகின்றனர்.

இஸ்லாம்: அல்லாஹ்வின் பள்ளிகளில் கைதட்டுபவர்களை குர்ஆன் வன்மையாகக் கண்டிக்கிறது. “அப்பள்ளியில் அவர்களுடைய தொழுகையெல்லாம் சீட்டியடிப்பதும், கைதட்டுவதுமே தவிர வேறில்லை. (ஆகவே மறுமையில் அவர்களுக்கு கூறப்படும்)நீங்கள் நிராகரித்ததின் காரணமாக (இப்போது) வேதனையைச் சுவையுங்கள் (என்று)” (அல்குர்ஆன்: 8:35)

ஸூஃபியிஸம்: அல்லாஹ்வின் பள்ளிகளில் திக்ரு – ஹல்கா செய்கிறோம் என்ற பெயரில் ஆஹ், அஹ் என்று சிலர் கூறிக் கொண்டிருக்கும் போது மற்ற சிலர் தங்களின் தரீக்காவின் பாடல்களை இராகமிசைத்து பாடி, அப்பாடல்களின் மூலம் தங்களின் ஸூஃபிகளையும், ஷெய்குகளையும் அளவுக்கு மீறி புகழ்ந்து அவர்களை அழைத்துப் பிரார்த்திக்கின்றனர்.

இஸ்லாம்: “அன்றியும் நிச்சயமாக மஸ்ஜிதுகள் அல்லாஹ்வுக்கே இருக்கின்றன; எனவே (அவற்றில்) அல்லாஹ்வுடன் (சேர்த்து வேறு) எவரையும் நீங்கள் பிரார்த்திக்காதீர்கள்” (அல்குர்ஆன்:72:18)

ஸூஃபியிஸம்: இறைவனின் பெயரை திக்ரு செய்கிறோம் என்ற பெயர்களில் ‘இல்லல்லாஹ்’அல்லது ‘அல்லாஹ்’ என்று மட்டும் தனித்துக் கூறுகின்றனர்.

இஸ்லாம்: அல்லாஹ்வை திக்ரு செய்ய்ம்போது இவ்வாறு ‘அல்லாஹ்’ என்று தனித்து கூறுவதற்கு எவ்வித பொருளுமில்லை. இது பித்அத்தான திக்ரு முறையாகும். அண்ணல் நபி (ஸல்) அவர்களின் வழிமுறையான திக்ருகள் என்பது அர்த்தமுள்ள வார்த்தைகளைக் கொண்டு திக்ரு செய்வதாகும். உதாரணமாக ‘ஸுப்ஹானல்லாஹி வல்ஹம்துலில்லாஹி வலாஇலாஹ இல்லல்லாஹு அல்லாஹ் அக்பர்’ என்பது போன்ற திக்ருகளைச் செய்ய வேண்டும். மேலும் சிலர் கூறுவது போல வெறும் ‘இல்லல்லாஹ்’(பொருள்: அல்லாஹ்வைத் தவிர) என்று மட்டும் கூறுவது அர்த்தமற்றதாகும்.

ஸூஃபியிஸம்: ஸூஃபிகளில் சிலர் இறைவனைப் பெண்ணாக வர்ணிக்கிறார்கள். உதாரணமாக ஸூஃபி இப்னுல் ஃபாரிஸ் என்பவர் தன்னுடைய ‘கஷ்ஃபுல் உஜூஹ்’ என்ற நூலில் இவ்வாறு வர்ணித்திருக்கிறார். (நவூதுபில்லாஹி மின்ஹா) 

இஸ்லாம்: “….அவனைப் போன்று எப்பொருளும் இல்லை; அவன் தான் (யாவற்றையும்) செவியேற்பவன், பார்ப்பவன்”(அல்குர்ஆன்:42:11)

“அன்றியும் அவனுக்கு நிகராக எவரும் இல்லை” (அல்குர்ஆன்:112:4)

ஸூஃபியிஸம்: ஸூஃபிகளில் சிலர் குர்ஆனின் வசனங்களை அவர்களின் விருப்பத்திற்கேற்ப மாற்றியமைத்துக் கொண்டு ஓதுகின்றனர். ஆதாரம்: ‘அல்யாவகீத் வல்ஜவாஹீர்’ வால்யூம்-1, பக்கம்-107.

இஸ்லாம்: அல்லாஹ் கூறுகிறான்: “….(வேதக்காரர்களில்) ஒருசாரார் இறைவனின் வசனங்களைக் கேட்டு; அதை விளங்கிக் கொண்ட பின்னரும் தெரிந்து கொண்டே அதை மாற்றி விட்டார்கள்” (அல்குர்ஆன்:2:75)

“…. (அவர்கள்) வசனங்களை அதற்குரிய இடங்களிலிருந்து மாற்றுகிறார்கள். போதனைகளின் பெரும் பகுதியை மறந்து விட்டார்கள்….” (அல்குர்ஆன்:5:13)

இன்னும் 2:79, 5:14-15 போன்ற திருமறை வசனங்களின் மூலம் அல்லாஹ்வின் வசனங்களை மாற்றி அமைத்தனாலும், மறந்ததாலும் தான் முந்தைய சமுதாயத்தவர்கள் வழிதவறிப் போனார்கள் என்று அல்லாஹ் கூறுவதை நாம் சற்று சிந்திக்க வேண்டும்.

ஸூஃபியிஸம்: ஸூஃபிகளில் சிலர் மறுமையில் இப்லீஸ் இறைவனுக்கு நெருக்கமாக இருப்பான் என நம்புகின்றனர். ஆதாரம்:’அல் இன்ஸானுல் காமில்‘ பக்கம்:38-39. (நவூதுபில்லாஹி மின்ஹா)

இஸ்லாம்: அல்லாஹ்வால் சபிக்கப்பட்டவனாகிய இப்லீஸ் நரகில் தள்ளப்படுவான் என குர்ஆன் கூறுகிறது. “அதற்கு இறைவன் ‘நீ (இப்லீஸ்) நிந்திக்கப்பட்டவனாகவும், வெருட்டப்பட்டவனாகவும் இங்கிருந்து வெளியேறி விடு – அவர்களில் உன்னைப் பின்பற்றுவோரையும், உங்கள் யாவரையும் கொண்டு நிச்சயமாக நரகத்தை நிரப்புவேன்’ என்று கூறினான்” (அல்குர்ஆன்:7:18) மேலும் பார்க்க வசனம்: 26:93-102.

ஸூஃபியிஸம்: ஹதீஸ்கள் எனப்படும் நபி (ஸல்) அவர்களின் சொல், செயல், அங்கீகாரம் மற்றும் வழிமுறைகளைப் பின்பற்றுவது மறுமைக்குப் பலனற்றது. ஹதீஸ்களைப் படிப்பது வீணானதே என்கின்றனர் ஸூஃபிகளில் சிலர். ஆதாரம்: ‘கூத்துல் குலூப்’ பக்கம்: 156-157.

இஸ்லாம்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் வாழ்க்கை நெறிமுறைகளை (ஹதீஸ்களை)ப் பின்பற்ற வேண்டியதன் அவசியத்தை திருமறை பல இடங்களில் வலியுறுத்திக் கூறுகிறது.

“….நீங்கள் முஃமின்களாக இருப்பின் அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் கீழ்படியுங்கள்” (அல்குர்ஆன்:8:1)

“மேலும், அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் ஒரு காரியத்தைப்பற்றி கட்டளையிட்டு விட்டால், அவர்களுடைய அக்காரியத்தில் வேறு அபிப்பிராயம் கொள்வதற்கு ஈமான் கொண்டுள்ள எந்த ஆணுக்கோ பெண்ணுக்கோ உரிமையில்லை; ஆகவே, அல்லாஹ்வுக்கும் அவனுடைய ரஸூலுக்கும் எவரேனும் மாறு செய்தால் நிச்சயமாக அவர்கள் பகிரங்கமான வழிகேட்டிலேயே இருக்கிறார்கள்” (அல்குர்ஆன்:33:36)

இன்னும் 4:13-14, 4:69, 24:51-52, 33:71, 3:132, 47:33, 24:51, 72:23 போன்ற வசனங்கள் யாவும் அல்லாஹ்வின் திருமறையான குர்ஆனையும், நபி (ஸல்) அவர்களின் வழிமுறைகளான ஸஹீஹான ஹதீஸ்களையும் பின்பற்ற வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துகின்றன.

ஸூஃபியிஸம்: ‘ஏகத்துவமும், பல இறைக்கொள்கைகளும் ஒன்றுதான். இவைகள் எல்லாம் இறைவனை அடையும் பல்வேறு வழிகளில் ஒன்று’ என்று ஸூஃபிகளில் சிலர் கூறுகின்றனர். ஆதாரம்: அல் இன்ஸானுல் காமில். 

இஸ்லாம்: அல்லாஹ் தன் திருமறையிலே கூறுகிறான். “நிச்சயமாக நாம் தான் அல்லாஹ்! என்னத்தவிர வேறு நாயன் இல்லை. ஆகவே, என்னையே நீர் வணங்கும். என்னைத் தியானிக்கும் பொருட்டு தொழுகையை நிலைநிறுத்துவீராக” (அல்குர்ஆன்:20:14)

“(நபியே!) உமக்கு முன்னர் நாம் அனுப்பிய ஒவ்வொரு தூதரிடமும்: ‘நிச்சயமாக (வணக்கத்திற்குரிய) நாயன் என்னைத் தவிர வேறு எவருமில்லை; எனவே, என்னையே நீங்கள் வணங்குங்கள்’ என்று நாம் வஹீ அறிவிக்காமலில்லை” (அல்குர்ஆன்:21:25)

ஸூஃபியிஸம்: இன்னும் சில ஸூஃபியாக்கள் அத்வைத பைத்தியம் முற்றிப்போய் தம்மைத் தாமே கடவுளாகக் கூறிக் கொள்கின்றனர். மன்சூர் ஹல்லாஜ் என்ற ஸூஃபி ‘அனல் ஹக்’ நானே இறைவன் என்று பிதற்றித் திரிந்தார்.

இஸ்லாம்: “இன்னும், அவர்களில் எவரேனும் ‘அவனன்றி நிச்சயமாக நானும் நாயன்தான்’ என்று கூறுவாரேயானால், அ(த்தகைய)வருக்கு – நாம் நரகத்தையே கூலியாகக் கொடுப்போம் – இவ்வாறே நாம் அநியாயக்காரர்களுக்கு கூலி கொடுப்போம்” (அல்குர்ஆன்:21:29)

ஸூஃபியிஸம்: நபி (ஸல்) அவர்கள் ‘மறைவான ஞானம் அறியும் வழி’ என்ற இரகசியத்தை அலி (ரலி) அவர்களைத் தவிர வேறு யாருக்கும் சொல்லிக் கொடுக்கவில்லை. மறைவான இரகசியத்தை அறியும் அந்த ஞானவழி அலி (ரலி) அவர்களின் பரம்பரை மூலம் ஸூஃபிகளுக்கு வந்து கொண்டிருக்கிறது.

இஸ்லாம்: அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் ‘யார் நபி (ஸல்) அவர்கள், அல்லாஹ் வஹியின் மூலம் அருளியவற்றில் சிலவற்றை மறைத்து விட்டார்கள் என்று கூறுகிறாரோ அவர் பொய்யுரைத்து விட்டார். அல்லாஹ் கூறுகிறான்: “தூதரே! உம் இறைவனிடமிருந்து உம்மீது இறக்கப்பட்டதை (மக்களுக்கு) எடுத்துக் கூறிவிடும். (இவ்வாறு) நீர் செய்யாவிட்டால், அவனுடைய தூதை நீர் நிறைவேற்றியவராக மாட்டீர். அல்லாஹ் உம்மை மனிதர்களி(ன் தீங்கி)லிருந்து காப்பாற்றுவான். நிச்சயமாக அல்லாஹ் நிராகரிக்கும் கூட்டத்தாரைநேர்வழியில் செலுத்தமாட்டான்” (அல்குர்ஆன்: 5:67) எனக் கூறினார்கள்’. அறிவிப்பாளர்: மஸ்ரூக் (ரலி) நூல்: புகாரி (4477, 6832) முஸ்லிம் (259) திர்மிதி (2994) அஹ்மத் (23094)

மேலும் நபி (ஸல்) அவர்கள் தங்கள் தோழர்களில் சிலருக்கு சில சமயங்களில் சில பிரார்த்தனைகளைக் கற்றுக் கொடுத்துள்ளார்கள். அவை ஹதீஸ் கிரந்தங்கள் வாயிலாக அத்தோழர்கள் மூலம் முழு உம்மத்திற்க்கும் போதிக்கப்பட்ட அமல் ஆகும். அவ்வாறில்லாமல், நபி (ஸல்) அவர்கள் எவருக்கும் கற்றுத்தராத விஷேசமான கல்வியை (மற்ற நபித்தோழர்களிடம் மறைத்து) அலி (ரலி)க்கு மட்டும் கற்றுக் கொடுத்தார்கள் என்று கூறுபவர், நபியவர்களின் தூதுத்துவத்தைக் களங்கப்படுத்தி, இறைவன் மக்களுக்கு அருளியவற்றில் சிலவற்றை மறைத்து, மேற்கண்ட இறைக்கட்டளைக்கு நபியவர்கள் மாறுசெய்து மோசடி செய்து விட்டார்கள் என்று துணிந்து நபி (ஸல்) மீது அவதூறு கற்பிக்கின்றார். நவூதுபில்லாஹி மின்ஹா!

ஒருமுறை அலி (ரலி) அவர்களிடம் தான் இவ்வாறு கேட்டதாக அபூ ஜுஹைஃபா (ரலி) அறிவிக்கிறார்கள்:

‘குர்ஆனில் இல்லாத (விஷேச) ஞானம் எதுவும் உங்களிடம் உண்டோ?’ என நான் அலி (ரலி) அவர்களிடம் கேட்டேன். அதற்கு அவர்கள், அல்லாஹ்வின் வேதத்தை விளங்குவதில் ஒரு மனிதனுக்கு கொடுக்கப்பட்டிருக்கின்ற ஞானத்தையும், இதோ இந்த ஏட்டில் உள்ளவற்றையும் தவிர வேறு எதுவும் அல்லாஹ்வின் மீது ஆணையாக என்னிடமில்லை என்று கூறினார்கள். ஏட்டில் உள்ளது என்னவென்று நான் கேட்டபோது அவை நஷ்டஈடு, கைதிகளை விடுதலை செய்வது, நிராகரிப்பாளர்களின் கொலை சம்பந்தப்பட்ட சட்டங்கள் தான் இவை என்று கூறிவிட்டார்கள்.ஆதாரநூல்: புகாரி (2820, 4663) இப்னுமாஜா (2648)

உண்மையில் சற்று சிந்தித்தால் இது எவ்வளவு பெரிய பொய் என்பது விளங்கும். நபித்தோழர்களில் அலி (ரலி) அவர்களைவிட அபூபக்கர் (ரலி), உமர் (ரலி), உஸ்மான் (ரலி) போன்ற உயர்ந்த நபித்தோழர்களுக்கு சொல்லித்தராமல் அலி (ரலி)க்கு மட்டும் விஷேசமாகக் கற்றுக் கொடுத்தார்கள் என்றால், அபூபக்கர் (ரலி), உமர் (ரலி), உஸ்மான் (ரலி) ஆகியோர் விளங்கத் தகுதியற்றவர்கள் என்று பொருள். இம்மார்க்கத்தை இவர்களைவிட யாரால் தெளிவாக விளங்க முடியும்? மேலும் அலி (ரலி) அவர்கள் இதனை நபி (ஸல்) அவர்களுக்குப் பின் பிறருக்கு கூறியிருந்தால் மார்க்கத்தில் நபிக்கு மோசடி செய்தவர்களாவார். ஏனெனில், நபி (ஸல்) அவர்கள் தமக்கு மட்டும் விஷேசமாக கூறியதை எப்படி பிறருக்கு சொல்லலாம்? அப்படி அலி (ரலி) அவர்கள் மற்ற நபித்தோழர்களைவிட எந்த அறிஞனை அதை சொல்லித் தருவதற்கு தகுதியானவராக கண்டார்கள்? எனவே அலி (ரலி) அவர்களை மட்டிலும் உயர்த்தி மற்ற நபித்தோழர்களை (அபூபக்கர் (ரலி), உமர் (ரலி), உஸ்மான் (ரலி) உட்பட) இழிவுபடுத்தும் இந்த வழிகெட்ட ‘ஷியா’ கொள்கையை விட்டும் வல்ல அல்லாஹ் நம் அனைவரையும் பாதுகாப்பானாக! ஆமீன்!

“(நபியே!) நீர் கூறும்: ‘அல்லாஹ் நாடினாலன்றி நான் எனக்கே யாதொரு நன்மையோ அல்லது தீமையோ செய்துகொள்ள சக்தியில்லாதவன்; மறைந்திருப்பவற்றை நான் அறிபவனாக இருந்தால் நன்மைகளை அதிகமாக தேடிக்கொண்டிருப்பேன்; (அந்நிலையில் எவ்விதமான) தீங்கும் என்னைத் தீண்டியிராது – நம்பிக்கை கொள்ளும் மக்களுக்கு நான் அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவனும், நன்மாராயம் கூறுபவனுமேயன்றி வேறில்லை”(அல்குர்ஆன்: 7:188)

‘மூன்று விஷயங்கள் நபி (ஸல்) அவர்களிடம் இருந்தது’ என்று எவராவது கூறினால் அவர் பொய்யுரைத்து விட்டார் என்று ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள். அந்த மூன்று விஷயங்களாவன:

*எவரேனும் முஹம்மது (ஸல்) இறைவனைப் பார்த்தார்கள் என்று கூறினால் அவர் பொய்யுரைத்து விட்டார்.

*எவரேனும் முஹம்மது (ஸல்) அவர்களுக்கு நாளை நடப்பது (மறைவான விஷயம்) தெரியும் என்று கூறினால் அவர் பொய்யுரைத்து விட்டார்.

*எவரேனும் இறைவனிடமிருந்து வந்த வஹியில் சிலவற்றை நபி (ஸல்) அவர்கள் மறைத்து விட்டார்கள் என்று கூறினால் அவர் பொய்யுரைத்து விட்டார். அறிவிப்பாளர்: மஸ்ரூக் (ரலி) நூல்: புகாரி (4477, 6832). முஸ்லிம் (259). திர்மிதி (2994). அஹ்மத் (23094)

ஸூஃபியிஸம்: தங்களுக்கு ஏதேனும் கஷ்டங்கள், ஆபத்துக்கள் நேருமாயின் தாங்கள் ‘யாஷெய்கு’ அல்லது ‘யா பீர்’ என்று அவர்கள் அழைத்தால் அந்த ஷெய்குமார்களோ அல்லது ஸூஃபிகளோ வந்து உதவுவார்கள் என்று இக்கொள்கைகளை நம்புபவர்கள் கூறுகின்றனர். 

இஸ்லாம்: “ஆதலின் அல்லாஹ்வுடன் வேறொரு நாயனை அழைக்காதீர்; அவ்வாறு (செய்வீர்) ஆயின், வேதனை செய்யப்படுபவர்களில் ஒருவராக நீர் ஆகிவிடுவீர்” (அல்குர்ஆன்: 26:213)

ஸூஃபியிஸம்: ஸூஃபியாக்கள் தம்மைத்தாமே வருத்திக் கொண்டு இவ்வுலக வாழ்க்கையை விட்டும் ஒதுங்கி இஸ்லாம் விரும்பாத துறவறத்தை மேற்கொள்கின்றனர்.

இஸ்லாம்: “….அவர்கள் தாங்களே புதிதாக உண்டாக்கிக் கொண்ட துறவித்தனத்தை நாம் அவர்கள் மீது விதிக்கவில்லை….” (அல்குர்ஆன்: 57:27)

இஸ்லாம் குடும்பத்தார்களுடன் மற்ற உறவினர்களுடன் சேர்ந்து வாழ்வதை வலியுறுத்துகிறது. மேலும் இஸ்லாத்தை அழிப்பதற்காக வருபவர்களை எதிர்த்து நிற்க வலியுறுத்துகிறது. மேலும் குர்ஆன் இவ்வுலகின் நற்பாக்கியங்களை விட்டும் ஒதுங்கி விடவேண்டாம் எனக் கூறுகிறது.

“மேலும், அல்லாஹ் உனக்கு கொடுத்த (செல்வத்)திலிருந்து மறுமை வீட்டைத் தேடிக்கொள். எனினும் இவ்வுலகத்தில் உன் நஸீபை (உனக்கு விதித்திருப்பதை) மறந்து விடாதே! அல்லாஹ் உனக்கு நல்லதைச் செய்திருப்பதைப் போல், நீயும் நல்லதைச் செய்! இன்னும், பூமியில் குழப்பம் செய்ய விரும்பாதே; நிச்சயமாக அல்லாஹ் குழப்பம் செய்பவர்களை நேசிப்பதில்லை” (அல்குர்ஆன்: 28:77)

‘நாங்கள் உமர் (ரலி) அவர்களுடன் இருந்தபோது அவர்கள் ‘நம்முடைய சக்திக்கு அப்பாற்பட்டு, கஷ்டமான அமல்களைச் செய்வதை விட்டும் நாம் தடுக்கப்பட்டுள்ளோம்’ என்று கூறினார்கள்’ அறிவிப்பாளர்: அனஸ் (ரலி) நூல்: புகாரி (9/396)

ஸூஃபியிஸம்: அல்லாஹ் இவ்வுலகத்தையும் மற்றும் இதிலுள்ளவைகளையும் நபி (ஸல்) அவர்களுக்காகத்தான் படைத்ததாக ஸூஃபியாக்கள் கூறுகிறார்கள்.

இஸ்லாம்: அல்லாஹ் கூறுகிறான்: “இன்னும், ஜின்களையும், மனிதர்களையும் அவர்கள் என்னை வணங்குவதற்காகவேயன்றி நான் படைக்கவில்லை” (அல்குர்ஆன்: 51:56)

மேலும் அல்லாஹ் நபி (ஸல்) அவர்களைப் பார்த்துக் கூறுகிறான்: “(நபியே!) இவர்கள் (இழிவாகப்) பேசுவது உம் நெஞ்சத்தை எப்படி நெருக்குகிறது என்பதை நாம் அறிவோம். நீர் (அப்பேச்சைப் பொருட்படுத்தாது) உம் இறைவனைப் புகழ்ந்து துதிப்பீராக! ஸுஜூது செய்(து சிரம் பணி)வோர்களில் நீரும் ஆகிவிடுவீராக! உமக்கு மரணம் வரும்வரை உமது இறைவனை வணங்குவீராக!”(அல்குர்ஆன்:15:97-99)

ஸூஃபியிஸம்: ‘இறைவனை நினைக்கும்போது தங்களின் ஷெய்குகளின் உருவங்களை மனதில் நினைத்துக் கொள்ள வேண்டும்’ என்று இஹ்ஸான் என்பதற்கு விளக்கமளித்த ஸூஃபிகள் கூறுகிறார்கள்.

இஸ்லாம்: நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்:‘இஹ்ஸான்’ என்பது அல்லாஹ்வை வணங்கும்போது அவனைப் பார்ப்பது போன்று வணங்குவதாகும். நாம் அவனைப் பார்க்க முடியாது. எனினும், அவன் நம்மைப் பார்த்துக் கொண்டிருக்கிறான்’ அறிவிப்பாளர்கள்: இப்னு உமர் (ரலி) நூல்: முஸ்லிம். அபூஹுரைரா (ரலி) நூல்: புகாரி.

ஸூஃபியிஸம்: ஸூஃபிகள் தங்களால் இறைவனைக் காண முடியும் என வாதிடுகின்றனர்.

இஸ்லாம்: “நாம் குறித்த காலத்தில் (குறிப்பிட்ட இடத்தில்) மூஸா வந்தபோது, அவருடைய இறைவன் அவரிடம் பேசினான்; அப்போது மூஸா: ‘என் இறைவனே! நான் உன்னைப் பார்க்க வேண்டும்; எனக்கு உன்னைக் காண்பிப்பாயாக!’ என்று வேண்டினார். அதற்கு அவன், ‘மூஸாவே! நீர் என்னை ஒருக்காலும் பார்க்க முடியாது. எனினும் நீர் இந்த மலையைப் பார்த்துக் கொண்டிரும். அது தன் இடத்தில் நிலைத்திருந்தால், அப்போது நீர் என்னைப் பார்ப்பீர்!’ என்று கூறினான். ஆகவே, அவருடைய இறைவன் அம்மலை மீது தன்னுடைய பேரொளியை தோற்றுவித்தபோது, அவன் அம்மலையை நொறுக்கித் தூளாக்கி விட்டான்; அப்போது மூஸா மூர்ச்சையாகிக் கீழே விழுந்து விட்டார். அவர் தெளிவடைந்ததும், ‘(இறைவா!) நீ மிகவும் பரிசுத்தமானவன்; நான் உன்னிடம் மன்னிப்புக் கோருகிறேன்; ஈமான் கொண்டவர்களில் நான் முதன்மையானவனாக இருக்கிறேன்” என்று கூறினார்” (அல்குர்ஆன்: 7:143)

கலீமுல்லாஹ் என போற்றப்படும் அல்லாஹ்வுடன் உரையாடிய ஒரு சிறந்த நபிக்கே இறைவனைக் காண முடியாது என்றிருக்கும்போது ஸூஃபிகளால் எவ்வாறு இறைவனைக் காண முடியும்? அப்படியென்றால் ஸூஃபிகள் மூஸா (அலை) அவர்களை விட உயர்ந்து விட்டனரோ? மேலும் இறைவன் கூறுகிறான்:

“பார்வைகள் அவனை அடைய முடியாது; ஆனால் அவனோ (எல்லாப்) பார்வைகளையும் (சூழ்ந்து) அடைகிறான். அவன் நுட்பமானவன்; தெளிவான ஞானமுடையவன்” (அல்குர்ஆன்: 6:103)

நபி (ஸல்) அவர்களே இறைவனை காணவில்லை. பார்க்க மேலே ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கும் ஹதீஸ்.

ஸூஃபியிஸம்: இக்கொள்கையை உடையவர்கள் தங்களின் ஸூஃபிகள் கொடுத்த தட்டு, தகடு, தாயத்து போன்றவற்றை ஆபத்து, சிக்கல்களிலிருந்து பாதுகாவல் பெறுவதற்காக பயன்படுத்துகின்றனர். 
 

இஸ்லாம்: நபி (ஸல்) அவர்கள் கூறியிருக்கிறார்கள்: ‘குர்ஆன் அல்லாததைக் கொண்டு ஓதிப்பார்த்தல். தாயத்துகள், ஏலஸ்கள் கட்டுதல் (தாவிசுகள்), தவ்லாக்கள் ஆகியவையெல்லாம் ஷிர்க்காகும்’ என்ற ஹதீஸ் அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் (ரலி) அவர்கள் அறிவித்து அபூதாவூத், அஹ்மத் போன்ற நூல்களில் இடம்பெற்றுள்ளது.

ஸூஃபியிஸம்: இக்கொள்கையை உடையவர்கள் தங்களின் ஸூஃபிகளின் மீது கண்மூடித்தனமான அளவுகடந்த பக்தியைச் செலுத்துகின்றனர். இதனால் அந்த ஸூஃபிகள் குர்ஆன் மற்றும் ஹதீஸ்களுக்கு மாற்றமான கருத்துக்களைக் கூறினாலும் கூட அதை அப்படியே ஏற்றுச் செயல்படுகின்றனர்.

இஸ்லாம்: “மேலும், அல்லாஹ்வும், அவனுடைய தூதரும் ஒரு காரியத்தைப் பற்றிக் கட்டளையிட்டு விட்டால், அவர்களுடைய அக்காரியத்தில் வேறு அபிப்பிராயம் கொள்வதற்கு ஈமான் கொண்டுள்ள எந்த ஆணுக்கோ பெண்ணுக்கோ உரிமையில்லை. ஆகவே, அல்லாஹ்வுக்கும் அவனுடைய ரஸூலுக்கும் எவரேனும் மாறு செய்தால் நிச்சயமாக அவர்கள் பகிரங்கமான வழிகேட்டிலேயே இருக்கிறார்கள்” (அல்குர்ஆன்: 33:36)

ஸூஃபியிஸம்: ஸூஃபியாக்கள் தாங்கள் சுய நினைவிலிருக்கும் போதே நபி (ஸல்) அவர்களின் தூதுத்துவம் இல்லாமல் நேரடியாகவும் உள்ளத்து உதிப்பின் மூலமாகவும் இறைவனிடமிருந்து அறிவைப் பெறுவதாகக் கூறுகின்றனர். அதாவது (ஹத்தஸனீ கல்பி அன் ரப்பி – என் உள்ளம் என் இறைவனிடமிருந்து எனக்கு கூறிற்று என்கின்றனர்)

இஸ்லாம்: மார்க்கம் சம்பந்தபட்ட சட்டங்களையோ கல்விகளையோ அல்லாஹ் அருளிய திருமறையின் மூலம் அல்லது அவனது தூதர் (ஸல்) அவர்கள் மூலம் தான் நாம் அறிந்து கொள்ள முடியும். இவ்விரண்டின் துணையில்லாமல் நமது சிந்தனையால் யூகித்து கூற முடியாது. எவர் ஒருவர் மார்க்கத்தில் ஒன்றை ‘இது எனக்கு இறைவனிடமிருந்து உள்ளத்தின் உதிப்பால் கிடைத்தது’ என்று கூறினால், அவர் அல்லாஹ்வின் திருமறையை பொய்ப்பித்தவர் ஆவார்.

“…. இன்றைய தினம் உங்களுக்காக உங்கள் மார்க்கத்தை பரிபூரணமாக்கி விட்டேன். மேலும் நான் உங்கள் மீது என் அருட்கொடையைப் பூர்த்தியாக்கி விட்டேன்….” (அல்குர்ஆன்: 5:3)என்று அல்லாஹ் கூறுவதிலிருந்து, தீன் என்பது முழுமையாக்கப்பட்டு விட்டது. எவரின் உள்ளத்து உதிப்பும் இனி இந்த உம்மத்துக்கு தேவையில்லை என்பது தெளிவு.

அல்லாஹ் பின்வரும் வசனங்களில் தன்னுடைய வேதத்தையும், தூதரையும் பின்பற்றுமாறு கட்டளையிடுகிறான். நமது உள்ளத்தில் உதிக்கும் மனோ இச்சையைப் பின்பற்ற வேண்டாம் என நம்மை எச்சரிக்கிறான்.

“(நபியே!) நீர் கூறும்: ‘நீங்கள் அல்லாஹ்வை நேசிப்பீர்களானால், என்னைப் பின்பற்றுங்கள்; அல்லாஹ் உங்களை நேசிப்பான்; உங்கள் பாவங்களை உங்களுக்காக மன்னிப்பான்; மேலும் அல்லாஹ் மன்னிப்பவனாகவும், மிக்க கருணை உடையவனாகவும் இருக்கின்றான்” (அல்குர்ஆன்: 3:31)

“ஈமான் கொண்டவர்களே! நீங்கள் அல்லாஹ்வுக்கு வழிபடுங்கள். இன்னும் இத்தூதருக்கு வழிபடுங்கள். உங்கள் செயல்களைப் பாழாக்கி விடாதீர்கள்” (அல்குர்ஆன்: 47:33)

“உமக்கு அவர்கள் பதில் கூறாவிடில், நிச்சயமாக அவர்கள் தம் மன இச்சைகளையே பின்பற்றுகிறார்கள் என்று நீர் அறிந்து கொள்ளும்; இன்னும் அல்லாஹ்விடமிருந்து கிடைத்த நேர்வழியின்றித் தன் மன இச்சையைப் பின்பற்றுபவனை விட, மிக வழிகெட்டவன் எவன் இருக்கிறான்; நிச்சயமாக அல்லாஹ் அக்கிரமக்கார சமூகத்தாருக்கு நேர்வழி காட்ட மாட்டான்” (அல்குர்ஆன்: 28:50)

“எனினும் அநியாயக்காரர்கள் கல்வி ஞானமில்லாமல் தம் மனோ இச்சைகளையே பின்பற்றுகிறார்கள்; ஆகவே எவர்களை அல்லாஹ் வழிகெடச் செய்தானோ, அவர்களை நேர்வழியில் கொண்டு வருபவர் யார்? மேலும் அவர்களுக்கு உதவி செய்வோர் எவருமில்லர்” (அல்குர்ஆன்: 30:29)

“எவனொருவன் நேர்வழி இன்னது என்று தனக்குத் தெளிவான பின்னரும், (அல்லாஹ்வின்) இத்தூதரை விட்டுப் பிரிந்து, முஃமின்கள் செல்லாத வழியில் செல்கின்றானோ, அவனை அவன் செல்லும் (தவறான) வழியிலேயே செல்லவிட்டு நரகத்திலும் அவனை நுழையச் செய்வோம்; அதுவோ, சென்றடையும் இடங்களில் மிகக் கெட்டதாகும்” (அல்குர்ஆன்: 4:115)

ஸூஃபியிஸம்: இதைப் பின்பற்றுபவர்கள் தங்களின் ஸூஃபிகள் மற்றும் அவ்லியாக்களின் கல்லறைகளுக்குப் பயணம் செய்து அவர்களை வழிபடுகின்றனர்.

இஸ்லாம்: ‘மஸ்ஜிதுல் ஹராம், எனது மஸ்ஜித் (மஸ்ஜிதுந்நபவி) மற்றும் மஸ்ஜிதுல் அக்ஸா ஆகிய இம்மூன்று இடங்களைத்தவிர வேறு இடங்களுக்கு நன்மையை நாடி பயணம் செய்யாதீர்கள்’ அறிவிப்பாளர்: அபூ ஸயீதுல் குத்ரி (ரலி).

எனவே, இந்த மாதிரியான வழிகேடுகளை விட்டும் அல்லாஹ் நம்மைக் காப்பாற்றி, நம் அனைவருக்கும் நேரான வழியைக் காண்பித்து அவனுடைய வேதத்தையும், அவனுடைய தூதருடைய வழிமுறைகளை மட்டுமே பின்பற்றி நடக்க அருள் புரிவானாக! ஆமீன்!!

முடிவுற்றது.
Previous Post Next Post