அல்லாஹ்வின் பெயர்கள் பண்புகளை கற்பது..

அல்லாஹ் என்பது இறைவனுக்குரிய பெயர்ச்சொல். அல்லாஹ்வை நாம் அவனது பண்புகளைக்கொண்டே அறிந்துகொள்கிறோம். அப்பண்புகள் என்பவை அல்லாஹ் நமக்குத் தன்னைப் பற்றி வருணித்தவை ஆகும். அவற்றை எண்ணிக்கையில் அடக்கிவிட முடியாது. அவனது பண்புகளின் ஒவ்வொரு இயல்பையும் புரிந்து உணரக்கூடிய நிலையில் மனித அறிவு இல்லை.
 
ஒருவர் கற்றுக்கொள்கிற கல்வியின் சிறப்பு என்பது அவர் எதைக் குறித்து கற்றுக்கொள்கிறார் என்பதைப் பொறுத்தது. இதை நாம் அறிவோம். அல்லாஹ்வைக் குறித்தும் அவனுடைய பண்புகளைக் குறித்தும் உள்ள கல்வியை விட மிகவும் உயர்ந்த, கண்ணியத்திற்குரிய கல்விப் பிரிவு உலகில் எதுவுமே இல்லை. இக்கல்விப் பிரிவானது அல்லாஹ்வின் மீதான அச்சத்தையும் நேசத்தையும் ஒருசேர முஸ்லிம்களின் உள்ளங்களில் கொண்டு வருகிறது. இந்தக் கல்வி அறிவின் சிறப்பை உணர்த்தும்விதமாக நபியவர்கள் தமது தோழர்களை நோக்கிக் கூறினார்கள்: அல்லாஹ் மீது சத்தியமாக, உங்களை விட அல்லாஹ்வைப் பற்றி நன்கு அறிந்தவன் நான். மேலும் உங்களை விட அவனுக்கு அஞ்சுகிறேன். (ஸஹீஹ் முஸ்லிம் 5814)  
 
இந்தக் கல்வியின் சிறப்புகளில் ஒன்று, எந்த நோக்கத்திற்காக மக்களை அல்லாஹ் படைத்தானோ அதில் இருக்கிறது. தன்னை வணங்கவே அவன் நம்மைப் படைத்தான். அவனை வணங்குதல் என்பது அவனை அறிந்துகொள்ளாமல் சாத்தியப்படாது. அவனை எந்தளவுக்கு அதிகமாக நாம் அறிந்துகொள்கிறோமோ, அந்தளவு மகத்தானதாக நமது வணக்கம் இருக்கும். ஆகவே அல்லாஹ்வின் பெயர்கள், பண்புகளைக் குறித்த கல்விப் பிரிவு அவனை அறிந்துகொள்வதற்கு மிகவும் இன்றியமையாததாக உள்ளது. அவனது பெயர்கள், பண்புகள் எனும் இரண்டு கிளைகளைக் குறித்து ஒரு முஸ்லிம் அறிந்துகொள்வது அவர் தம்முடைய இறைவனை நெருங்குவதற்கு வழியாக உள்ளது.
 
குர்ஆன்:

அல்லாஹ்வுக்கு மிக அழகான பெயர்கள் இருக்கின்றன. ஆகவே, அவற்றைக்கொண்டே நீங்கள் அவனை அழையுங்கள். (அவனிடம் பிரார்த்தனை செய்யுங்கள்.) அவனுடைய பெயர்களில் (தவறான பொருள் கொண்டு) திரித்துக்கூறுபவர்களை நீங்கள் விட்டுவிடுங்கள்; இவர்கள் தங்கள் செயலுக்குத் தக்க கூலியை விரைவில் அடைவார்கள்.(அல்குர்ஆன் 7:180)
 
அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரிய வேறோர் இறைவன் இல்லை. அவனுக்கு அழகான பெயர்கள் இருக்கின்றன.(அல்குர்ஆன் 20:8)
 
(நபியே!) நீர் கூறும்: ‘நீங்கள் அல்லாஹ் என்றழையுங்கள் அல்லது அர்ரஹ்மான் (அளவற்ற அருளாளன்) என்றழையுங்கள்; (இவ்விரண்டில்) எந்தப் பெயர் கொண்டு நீங்கள் அவனை அழைத்த போதிலும் (அழையுங்கள்.) அவனுக்கு அழகான (இன்னும்) பல பெயர்கள் இருக்கின்றன.(அல்குர்ஆன் 17:110)
 
நபிமொழி:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:அல்லாஹ்வுக்கு நூறில் ஒன்று போக தொண்ணூற்றொன்பதுபெயர்கள் உள்ளன. அவற்றை அறிந்து (அதன் மீது நம்பிக்கை வைத்து அதை நினைவில்) கொள்பவர் சொர்க்கத்தில் நுழைவார்.(ஸஹீஹுல் புகாரீ 2736)
 
அல்லாஹ்வின் பெயர்களுக்கும் பண்புகளுக்கும் இடையே உள்ள வேறுபாடு:

அல்லாஹ்வின் பெயர்கள் அனைத்தும் அவனுக்கு மட்டுமே உரியவை. அவை அவனுடைய பண்புகளைக் காட்டக்கூடியவை. உதாரணமாக, அல்காதிர் (பேராற்றல் மிக்கவன்), அல்அலீம் (மிக அறிந்தவன்), அல்ஹகீம் (மிகவும் ஞானமிக்கவன்), அஸ்ஸமீஃ (நன்கு செவியுறுபவன்), அல்பசீர் (நன்கு பார்க்கக்கூடியவன்) என்று ஒவ்வொரு பெயரிலும் அவனது பண்பும் அடங்கியுள்ளது. இந்தப் பெயர்களில் அவனது அறிவு, ஞானம், கேள்விப்புலன், பார்வை ஆகிய பண்புகள் உள்ளன. ஆக பெயர்களில் பண்புகளில் அடங்கியிருப்பதால் அவை இரண்டு விஷயங்களைக் காட்டுகின்றன. ஆனால் பண்புகள் என்பவை ஒன்றையே காட்டுகின்றன. அவை பெயர்களாக ஆகிவிடாது. நாம் அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் கூறியுள்ள எல்லாப் பண்புகளையும் அல்லாஹ்வின் மகிமைக்குத் தக்கவாறு நம்பிக்கை கொள்கிறோம். அவனது உள்ளமை எவ்வாறு அவனது படைப்புகளின் உள்ளமைக்கு ஒப்பாக இருக்காதோ அதுபோன்றே அவனது பண்புகளும் அவனுடைய படைப்புகளின் பண்புகளுக்கு ஒப்பாகுவதில்லை என்று நம்பிக்கை கொள்கிறோம்.
 
அறிஞர்களின் பார்வை:

ஷெய்குல் இஸ்லாம் இப்னு தைமிய்யா (ரஹ்) கூறுகிறார்கள்:
புகழுக்குரியவனான அல்லாஹ் தன்னை மிக அறிந்தவன் (அல்அலீம்), பேராற்றல் மிக்கவன் (அல்கதீர்), நன்கு செவியுறுபவன் (அஸ்ஸமீஃ), நன்கு பார்ப்பவன் (அல்பசீர்), மிகவும் மன்னிப்பவன் (அல்கஃபூர்), அளவற்ற அருளாளன் (அர்ரஹ்மான்) ஆகிய பெயர்களாலும் இன்னும் பல பெயர்கள் பண்புகளைக் கொண்டும் அறிமுகப்படுத்துகிறான். நாம் இவற்றின் பொருளைப் புரிந்துகொள்கிறோம். அறிவுக்கும் ஆற்றலுக்கும் இடையே உள்ள வேறுபாட்டை, கருணை, கேள்விப்புலன், பார்வை ஆகியவற்றுக்கு இடையே உள்ள வேறுபாட்டைத் தெரிந்து வைத்துள்ளோம். எல்லாப் பெயர்களுமே அல்லாஹ்வின் உள்ளமையைக் குறிப்பிடுகின்றன என்பதை ஏற்றுக்கொண்டுள்ளோம். அவற்றின் அர்த்தங்களுக்கு இடையே வேறுபாடு இருந்தாலும், அவை அனைத்தும் அவனது உள்ளமையைத்தான் குறிப்பிடுகின்றன. அந்த உள்ளமையில் வெவ்வேறு பண்புகள் உள்ளன. (மஜ்மூஃ அல்ஃபதாவா 3/59) 
 
ஷெய்க் முஹம்மது ஸாலிஹ் அல்உஸைமீன் (ரஹ்) கூறுகிறார்கள்: அல்லாஹ்வின் பெயர்கள், பண்புகளில் பெயர்கள் அனைத்தும் ஒரே உள்ளமையைக் குறிப்பிடுகின்றன. அவற்றின் அர்த்தங்கள் அடிப்படையில் அவை அவனது பண்புகளாக உள்ளன. முதலாவது கருத்து என்னவெனில் அவை அனைத்தும் ஒன்றே. அதாவது, அவை அனைத்தும் அல்லாஹ் எனும் ஒரே உள்ளமையைக் குறிப்பிடுகின்றன. இரண்டாவது கருத்தின்படி அவை வேறுபட்டவை. காரணம், அவற்றின் அர்த்தங்கள் வெவ்வேறானவை.
 
ஆக, அல்ஹய்யு (என்றும் உயிருள்ளவன்), அல்அலீம் (நன்கு அறிந்தவன்), அல்கதீர் (பேராற்றல்மிக்கவன்), அஸ்ஸமீஃ (நன்கு செவியுறுபவன்), அல்பசீர் (நன்கு பார்ப்பவன்), அர்ரஹ்மான் (அளவற்ற அருளாளன்), அர்ரஹீம் (நிகரற்ற அன்பாளன்), அல்அஸீஸ் (யாவற்றையும் மிகைத்தவன்), அல்ஹகீம் (மிகவும் ஞானமுடையவன்) ஆகிய எல்லாப் பெயர்களுமே ஒரே உள்ளமைக்கு, அதாவது அல்லாஹ்வுக்குப் பெயர்களாக உள்ளன. ஆனால் அல்ஹய்யு (என்றும் உயிருள்ளவன்) என்பதின் அர்த்தம் அல்அலீம் (நன்கு அறிந்தவன்) என்பதின் அர்த்தத்திலிருந்து வேறுபடும். அல்அலீம் என்பதின் அர்த்தம், அல்கதீர் என்பதிலிருந்து வேறுபடும். இப்படியே ஒவ்வொன்றையும் உதாரணமாகக் கூறலாம்.
 
இப்படித்தான் அல்லாஹ் பெயர்களையும் பண்புகளையும் குறித்து குர்ஆனில் குறிப்பிடுகிறான். ஒரு வசனத்தில் “அவன் மிகவும் மன்னிப்பவனாகவும் மிகவும் கருணையுள்ளவனாகவும் உள்ளான்” என்று கூறுகிறான்.
 
وَرَ‌بُّكَ الْغَفُورُ‌ ذُو الرَّ‌حْمَةِ
சூரா அல்கஹ்ஃப்பில் உமது இறைவன் மிகவும் மன்னிப்பவனாகவும் கருணை கொண்டவனாகவும் இருக்கிறான் என்று (18.58) குறிப்பிடுகிறான்.
 
இந்த இரண்டாவது வசனத்தில் அவனுடைய கருணைப் பண்பு என்பது பண்பாக மட்டும் கூறப்பட்டுள்ளது. அரபுமொழி வல்லுநர்கள் அனைவரும் ஏற்றுக்கொண்ட விஷயமாகும் இது. மொழி அறிந்த மக்கள் அனைவரும் இதைப் புரிந்துகொள்வார்கள். அறிவுள்ளவரைத்தான் அலீம் என்பார்கள். கேள்விப்புலன் இல்லாதவரை ஸமீஃ அழைக்கப்படாது. பார்வையற்றவரை பசீர் என்று அழைக்கப்படாது. எந்த ஆதாரமும் இல்லாமலே இது ஒரு தெளிவான விஷயமாகும்.(அல்கவாயிதுல் முஸ்லா ஃபீ சிஃபாத்தில்லாஹி வ அஸ்மாயில் ஹுஸ்னா, பக்கம் 8)
 
இமாம் இப்னுல் கய்யிம் (ரஹ்) கூறுகிறார்கள்: அல்லாஹ்வின் அழகிய பெயர்கள் எண்ணிக்கையில் அடங்காதவை. அவற்றை இத்தனை என்று வரையறை செய்துவிட முடியாது. அல்லாஹ் தனக்குச் சூட்டிக் கொண்ட பெயர்கள், பண்புகளில் அவனுக்கு மட்டுமே தெரிந்தவை உண்டு. அவை அவனுடைய மறைவான அறிவில் உள்ளன. அவற்றை எந்த வானவரும் இறைத்தூதரும் அறியமாட்டார். அதையே இந்த ஹதீஸில்
أَسْأَلُكَ بِكُلِّ اسْمٍ هُوَ لَكَ سَمَّيْتَ بِهِ نَفْسَكَ، أَوْ أَنْزَلْتَهُ فِي كِتَابِكَ، أَوْ عَلَّمْتَهُ أَحَدًا مِنْ خَلْقِكَ ، أَوِ اسْتَأْثَرْتَ بِهِ فِي عِلْمِ الْغَيْبِ عِنْدَكَ، أَنْ تَجْعَلَ الْقُرْآنَ رَبِيعَ قَلْبِي
“அல்லாஹ்வே! உனக்கு நீயே சூட்டிக் கொண்ட உன் எல்லாப் பெயர்கள் பொருட்டாலும், அல்லது நீ உன் வேதத்தில் இறக்கிய, அல்லது உன் படைப்புகளில் எவருக்கேனும் நீ கற்றுக் கொடுத்த, அல்லது உன்னுடைய மறைவான அறிவில் மறைத்து வைத்துள்ள பெயர்கள் பொருட்டாலும் கேட்கிறேன். மகத்தான குர்ஆனை என் உள்ளத்திற்கு வசந்தமாக ஆக்கு” என்று கூறப்படுகிறது. (முஸ்னது அஹ்மது 3712, அஸ்ஸஹீஹா 199)
 
எனவே அவனது பெயர்களை மூன்று வகைப்படுத்தலாம்:

1. தனக்குச் சூட்டிக்கொண்ட பெயர்களில் தாம் நாடிய வானவர்களுக்கும் மற்ற பிறருக்கும் அவன் கற்றுக்கொடுத்தவை. அவனது வேதத்திலும் அவை வெளிப்படுத்தப்படவில்லை.
 
2. தனது வேதத்தில் வெளிப்படுத்தி தன் அடியார்களுக்கு அவன் கற்றுக்கொடுத்துள்ளவை.
 
3. தனது மறைவான அறிவில் அவன் மறைத்துவிட்டவை. அவற்றை தன் படைப்பில் எந்த ஒன்றுக்கும் அவன் வெளிப்படுத்தவில்லை. எனவேதான், “உன் அறிவில் நீ வைத்துக்கொண்டவை” என்று துஆவில் கூறப்படுகிறது. அதாவது, நீ மட்டுமே அறிவாய் என்று அர்த்தம். இதனுடைய அர்த்தம் அந்தப் பெயர்களால் மட்டுமே அழைக்க வேண்டும் என்பதல்ல. அல்லாஹ் தனது வேதத்தில் வெளிப்படுத்தியுள்ள பெயர்களாக இருந்தாலும் அவையும் அவனை அழைத்துப் பிரார்த்தனை செய்யவே உள்ளனவாகும். (அவற்றைக் கொண்டு மற்றவர்களை அழைக்கக் கூடாது.) (பதாஇல் ஃபவாயித்1/174-176) 
 
இமாம் இப்னு கஸீர் (ரஹ்) கூறுகிறார்கள்: ஆகவே அல்லாஹ்வின் அழகிய பெயர்கள் தொண்ணூற்று ஒன்பதுடன் முடிந்துவிடுவதில்லை என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும். (தஃப்சீர் இப்னு கஸீர்2/328) 
 
மேலும் காண்க மஜ்மூஃ அல்ஃபதாவா இப்னு தைமிய்யா22/482-486) 

சுருக்கம் இதுவே: அல்லாஹ்வின் பெயர்கள், பண்புகள், செயல்கள் ஆகியவற்றுக்கு எல்லை இல்லை. குர்ஆனையும் நபிமொழிகளையும் ஆழமாகக் கற்ற எவரும் இவ்விஷயத்தை எவ்விதச் சந்தேகத்திற்கும் இடமின்றி தெரிந்துகொள்ளலாம். அஹ்லுஸ்ஸுன்னத் வல்ஜமாஅத்தின் இவ்வாறே நம்பிக்கை கொள்கிறது. அது அல்லாஹ்வின் பெயர்கள், பண்புகள் விஷயத்தில் சரியான சட்டங்களையும் வழிமுறைகளையும் கைக்கொண்டுள்ளது.
 
Previous Post Next Post