சிகரட் புகைப்பது தொடர்பான இஸ்லாமிய தீர்ப்பைக் காண்பதில் மத்ரஸதுல் ஹதீஸைச் சேர்ந்தவர்களும், மத்ரஸதுல் ரஃயை சேர்ந்தவர்களும் கையாள்கின்ற அடிப்படைகளின் மத்தியிலுள்ள வேறுபாட்டை நாம் காணலாம்.
மத்ரஸதல் ஹதீஸ் எனப்படுபவர்கள் ஹதீஸின் அடிப்படையில் பிக்ஹைக் கையாள்பவர்கள். மத்ரஸதுர் ரஃயி எனப்படுபவர்கள் சிந்தனையின் அடிப்படையில் பிக்ஹைக் கையாள்பவர்கள்.
சிகரட் புகைப்பது பற்றிய தீர்ப்பைக் கூறுவதற்கு அல் குர்ஆனிலோ, ஹதீஸிலோ நேரடியே சிகரட் என்ற வார்த்தை வரவில்லை. இப்போது இதற்கு எவ்வாறு தீர்வைக்காண்பது?
மத்ரஸதுல் ரஃயைச் சேர்ந்தவர்கள் சிகரட் புகைப்பதை மக்றூஹ் (வெறுக்கத்தக்கது) என்று கூறுகிறார்கள். அவர்களிடம் அது ஹராமல்ல. சிகரட் என்ற வார்த்தை நேரடியாக அல் குர்ஆனிலோ, ஹதீஸிலோ வராததன் காரணமாக சிகரட் புகைப்பதை அவர்கள் ஹராம் என்று கூறுவதில்லை. இருந்தாலும், சிகரட்டின் தன்மைக்கு ஒப்பானவற்றுக்குரிய தீர்ப்பு அல் குர்ஆனில் இருப்பதனால் அதனை மக்றூஹ் என்று தீர்ப்புக் கூறுகிறார்கள்.
ஆனால் இந்த விடயத்தில் மத்ரஸதுல் ஹதீஸைச் சேர்ந்தவர்கள் சிகரட் என்ற வார்த்தை அல் குர்ஆனிலோ, ஹதீஸிலோ வராவிட்டாலும் அதற்குரிய சட்டம் அல் குர்ஆனிலும், ஹதீஸிலும் அமைந்துள்ளது என்ற நிலைப்பாட்டில் இருக்கிறார்கள். ஒரு விடயத்தைப் பற்றிய வார்த்தை நேரடியாக அல் குர்ஆனிலோ, ஹதீஸிலோ வராவிட்டாலும் அந்த விடயத்தின் நிலைப்பாட்டைப் பற்றி அல் குர்ஆனும், ஹதீஸும் பேசாமல் இல்லை.
அல்லாஹ் கூறுகிறான்,
وَيُحِلُّ لَهُمُ الطَّيِّبَاتِ وَيُحَرِّمُ عَلَيْهِمُ الْخَبَائِثَ
தூய்மையானவற்றை அவர்களுக்கு ஆகுமாக்குவார், கெட்டவற்றை அவர்களுக்குத் தடுத்து விடுவார். (அல் குர்ஆன் 7:157)
மேற்கூறிய இறை வசனத்தின் அடிப்படையில், சிகரட் புகைப்பது ஹராமாகும். இது மத்ரஸதுல் ஹதீஸைச் சேர்ந்தவர்களிடத்தில் அல் குர்ஆனிலிருந்து நேரடியாக பெறப்பட்ட தீர்ப்பாகும். சிகரட் புகைப்பது ஹராமல்ல என்று கூறுவதற்கும், அது மக்றூஹ்தான் என்று கூறுவதற்கும் எங்கும் ஆதாரமில்லை. இதுவே, மத்ரஸதுல் ஹதீஸைச் சேர்ந்தவர்களின் நிலைப்பாடாகும்.
ஆனால் இந்த விடயத்தில் மத்ரஸதுர் ரஃயைச் சேர்ந்தவர்கள், அவர்களின் சிந்தனை அடிப்படையில்தான் தீர்ப்பு கூறியிருக்கிறாா்கள். ஆதாரங்கள் அல் குர்ஆனிலும், ஹதீஸிலும் நேரடியே இருக்க வேண்டும் என்ற அடிப்படையை மத்ரஸதுர் ரஃயி, மத்ரஸதுல் ஹதீஸ் ஆகிய இரு வகுப்பினரும் கூறினாலும் அதனைக் கையாள்வதில் இரு சாராருக்கும் வேறுபாடு காணப்படுகிறது.
அதாவது, மத்ரஸதுர் ரஃயைப் பொருத்த வரை சிகரட் புகைப்பது பற்றிய தீர்ப்பைக் கூறதற்கு, சிகரட் என்ற வார்த்தை அல் குர்ஆனிலோ, ஹதீஸிலோ நேரடியாக குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும். ஆனால், மத்ரஸதுல் ஹதீஸைச் சேர்ந்தவர்கள் பின்வரும் இறை வசனத்தின் அடிப்படையை அனைத்து விசயங்களிலும் பின்பற்றுவார்கள்.
அல்லாஹ் கூறுகிறான்,
مَا فَرَّطْنَا فِي الْكِتَابِ مِن شَيْءٍ
வேதத்தில் எதனையும் நாம் விட்டுவிடவில்லை. (அல் குர்ஆன் 6:38)
எனவே, அல்லாஹ்வின் வேதத்தில் அனைத்து விடயங்களுக்குமான சட்டங்களும் அமைந்திருக்கின்றன. அல்லாஹ்வின் வேதத்தை நாம் தரமாகக் கற்று, அதனை விளங்கி, அதன் வசனங்களின் எல்லைகளைத் தரமாகப் புரிந்து, அந்த வசனங்கள் எத்தகைய ஆழமான சட்டங்களைக் கொண்டிருக்கின்றன என்பதை அறிந்து கொண்டால் தான், ஒரு விடயத்தின் பெயர் புதிதாக இருந்தாலும், அதன் சட்டம் என்னவென்பதை நாம் விளங்கிக் கொள்ள முடியும்.
எனவே, அஹ்லுஸ் ஹதீஸ் அல்லது மத்ரஸதுல் ஹதீஸின் உலமாக்களைப் பொருத்தவரை சிகரட்டின் மீதான் சட்டமும், தீர்ப்பும் அல் குர்ஆனில் இருக்கின்றது. கெட்ட விடயங்கள் தடுக்கப்பட்டுள்ளதாக அல்லாஹ் கூறியுள்ளதால் அன்றைய காலத்தில் காணப்பட்ட கெட்ட விடயங்காளாக இருந்தாலும், அன்றைய காலத்தில் காணப்படாத இன்றுள்ள கெட்ட விடயங்களாக இருந்தாலும் அல்லது எதிர் காலத்தில் வருகின்ற கெட்ட விடயங்களாக இருந்தாலும், அனைத்துக்கும் கெட்ட விடயங்கள் தடுக்கப்பட்டுள்ளது என்ற சட்டம் தீர்ப்பாக அமையும். இதனடிப்படையில் அஹ்லுல் ஹதீஸ் உலமாக்களிடம் சிகரட்டின் மீதான தீர்ப்பு, அது ஹராம் என்பதாகும்.
அல்லாஹ்வே மிக அறிந்தவன்.