-உஸ்தாத் M. பஷீர் ஃபிர்தவ்ஸி
மனிதனைப் பீடித்துள்ள நோய்களில் ஒன்று தான் அலட்சியம் எனும் நோய்
சிறியவர்கள், பெரியவர்கள், ஆண்கள், பெண்கள் என அனைவரும் இந்நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
கேள்விகள் பல பதில் ஒன்று,
மஸ்ஜிதுகள் ஏன் வெறிச்சோடிக்கிடக்கின்றன?
குர்ஆனைக் கற்பதற்கு இளைஞர்கள் ஏன் முன்வருவதில்லை?
முஸ்லிம்கள் ஏன் அல்லாஹ்வுக்கு அடிபணிந்து வாழ்வதில்லை?
முஸ்லிம்கள் ஏன் பாவமான காரியங்களையும், அல்லாஹ்வும் அவனது தூதரும் தடுத்தவற்றையும் துணிந்து செய்கிறார்கள்?
அல்லாஹ்வை நோக்கி விரைந்து வரவேண்டியவர்கள் அவனைவிட்டு ஏன் வெருண்டோடுகிறார்கள்?
அழைப்புப்பணியில் தொய்வு ஏன்?
காரணம்அலட்சியம்
அலட்சியம் மனிதனின் அறிவை பாழாக்கியுள்ளது.
அவனது உள்ளத்தையும் பாழ்படுத்தியுள்ளது. அலட்சியம் அல்லாஹ்வின் பக்கம் திரும்புவதைவிட்டு மனிதனை திசைதிருப்புகிறது இன்னும் பாவமன்னிப்பு கோருவதைவிட்டும், அவனுக்குக் கட்டுப் படுவதைவிட்டும், இபாதத் செய்வதைவிட்டும், அல்லாஹ்வை நினைவு கூறுவதைவிட்டும் மனிதனைத் தடுக்கிறது. இந்த ஆபத்தான, நம்மை அச்சுறுத்துகின்ற நோயிலிருந்து உடனடியாக மீளவேண்டும் இல்லையெனில் மிகமோசமான இழப்பையும், நஷ்டத்தையும் நாம் சந்திக்கநேரிடுவோம்
அல்லாஹ் கூறுகிறான்: *மனிதர்களுக்கு அவர்களுடைய கணக்கு விசாரணை (நாள்) நெருங்கி விட்டது. ஆனால், அவர்களோ (அதனைப்) புறக்கணித்து அலட்சியமாக இருக்கிறார்கள்*. (அல்குர்ஆன் 21:1)
மனிதன் எவ்வளவு அலட்சியத்தில் மூழ்கியுள்ளான் என்பதை இவ்வசனம் சுட்டிக்காட்டுகிறது.
அலட்சியம் என்றால் என்ன?
லட்சியம் இல்லாமல் இருப்பது குறிக்கோள் இல்லாமல் வாழ்வது என்பதற்கு அலட்சியம் என்று சொல்வோம். அவ்வாறே நல்லறங்கள் விஷயத்தில் பேணுதல் இல்லாமல், கவனக்குறைவாக இருப்பதனால் மனிதனிடம் ஏற்படும் அசட்டை என்பதற்கும் அலட்சியம் என்று சொல்வோம் யதார்த்தத்தில் அலட்சியம் என்பது மறுமையை மறந்து உலகவாழ்கையில் மூழ்கி மனோ இச்சையைப் பின்பற்றி சிந்திக்காமலும், நல்லுபதேசங்களை செவிமடுக்காமலும், நன்மையானவற்றைப் பார்க்காமலுமிருப்பதாகும்.
நிச்சயமாக நாம் ஜின்களிலிருந்தும், மனிதர்களிலிருந்தும் அநேகரை நரகத்திற் கென்றே படைத்துள்ளோம். அவர்களுக்கு இருதயங்கள் இருக்கின்றன – ஆனால் அவற்றைக் கொண்டு அவர்கள் நல்லுணர்வு பெற மாட்டார்கள். அவர்களுக்குக் கண்கள் உண்டு ஆனால், அவற்றைக் கொண்டு அவர்கள் (இறைவனின் அத்தாட்சிகளைப்) பார்ப்பதில்லை. அவர்களுக்குக் காதுகள் உண்டு. ஆனால் அவற்றைக் கொண்டு அவர்கள் (நற்போதனையைக்) கேட்க மாட்டார்கள் – இத்தகையோர் கால்நடைகளைப் போன்றவர்கள். இல்லை! அவற்றை விடவும் வழி கேடர்கள். இவர்கள் தாம் (நம் வசனங்களை) அலட்சியம் செய்தவர்களாவார்கள்*. (அல்குர்ஆன் 7:179)
மனிதன் நேர்வழியை அடைவதற்காக அல்லாஹ் அவனுக்குத் தந்த உறுப்புகளைக் கொண்டு பயன்பெறாதவர்கள் அவர்களது உள்ளத்தில் கல்வியும் ஞானமும் இடம் பிடிப்பதில்லை அவர்களது கண்களைக் கொண்டு அல்லாஹ்வின் அத்தாட்சிகளை அவர்கள் பார்த்து அதன் மூலம் பயனடைவதுமில்லை அவர்களது செவிப்புலன்கள் மூலம் நன்மையானவற்றை செவிமடுப்பதுமில்லை இவர்களைப் போன்றவர்களைக் குறித்து அல்லாஹ் கூறுகிறான்:
மேலும் அவர்களுக்கு செவிப்புலனையும், பார்வைகளையும், இருதயங்களையும் நாம் கொடுத்திருந்தோம். ஆயினும் அவர்கள் அல்லாஹ்வின் வசனங்களை நிராகரித்துக் கொண்டிருந்த போது, அவர்களுடைய செவிப் புலனும், பார்வைகளும் இருதயங்களும் அவர்களுக்கு யாதோர் பயனுமளிக்கவில்லை – எ(வ் வே)தனைப் பற்றி அவர்கள் பரிகாசம் செய்து கொண்டிருந்தார்களோ, அதுவே அவர்களைச் சூழ்ந்து கொண்டது*. (அல்குர்ஆன் 46:26)
மனிதன் நிலையான மறுமையைப் புறக்கணித்து அழிந்து போகும் உலகத்திற்காக பாடுபட்டுக்கொண்டிருகிறான்.
நிச்சயமாக எவர்கள் நம்மைச் சந்திப்பதை(ச் சிறிதும்) நம்பாது, இவ்வுலக வாழ்க்கையை (மிகவும்) விரும்பி, அதில் திருப்தியடைந்து கொண்டும் இன்னும் எவர்கள் நம் வசனங்களைப் புறக்கணித்துக் கொண்டும் இருக்கிறார்களோ*. (அல்குர்ஆன் 10:7)
இன்னும் அல்லாஹ்வின் சந்திப்பை வெறுக்கிறான் எனவேதான் மறுமைக்காக எதனையும் முற்படுத்தாமல் இருக்கிறான்.
ஈமான்கொண்டவர்களே அல்லாஹ்வுக்கு அஞ்சி நடந்து கொள்ளுங்கள். மேலும்,
ஒவ்வொருவரும் (மறுமை) நாளுக்காக தான் முற்படுத்தி வைத்திருப்பதைப் பார்த்துக் கொள்ளட்டும். இன்னும், நீங்கள் அல்லாஹ்வை அஞ்சி நடந்து கொள்ளுங்கள். நீங்கள் செய்பவற்றை, நிச்சயமாக அல்லாஹ் நன்கறிந்தவன். அன்றியும், அல்லாஹ்வை மறந்து விட்டவர்கள் போன்று நீங்கள் ஆகிவிடாதீர்கள். ஏனெனில், அவர்கள் தங்களையே மறக்கும்படி (அல்லாஹ்) செய்து விட்டான். அத்தகையோர் தாம் ஃபாஸிக்குகள் – பெரும் பாவிகள் ஆவார்கள். (அல்குர்ஆன் 59:18,19)
உலக வாழ்க்கைக்காக ஓடி ஓடி சம்பாதிக்கின்றான் ஹலால் என்றோ ஹராம் என்றோ பாராமல் செல்வத்தைச் சேகரிக்கிறான், பாவங்களில் மூழ்கி இன்பமடைகிறான், சத்தியத்தைவிட்டு முகம் திருப்பி பெருமையடிக்கிறான்.
எவ்வித நியாயமுமின்றி, பூமியில் பெருமையடித்து நடப்பவர்களை, என் வசனங்களை விளங்கிக் கொள்வதை விட்டும் திருப்பிவிடுவேன். அவர்கள் எல்லா அத்தாட்சிகளையும் கண்ட போதிலும் அவற்றை நம்பமாட்டார்கள். அவர்கள் நேர் வழியைக் கண்டால் அதனைத் (தங்களுக்குரிய) வழியென ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் – ஆனால் தவறான வழியைக் கண்டால், அதனை(த் தங்களுக்குரிய நேர்) வழியென எடுத்துக்கொள்வார்கள். ஏனெனில் அவர்கள் நம் அத்தாட்சிகளைப் பொய்யெனக் கூறினார்கள். இன்னும் அவற்றைப் புறக்கணித்தும் இருந்தார்கள்*. (அல்குர்ஆன் 7:146.)
அவர்கள் இந்த உலக வாழ்விலிருந்து (அதன்) வெளித்தோற்றத்தையே அறிகிறார்கள்- ஆனால் அவர்கள் மறுமையைப் பற்றி அலட்சியமாக இருக்கிறார்கள். (அல்குர்ஆன் 30:7)
அலட்சியம், அறிந்துகொள்வது எப்படி?
நம்மிடம் அலட்சியம் உள்ளது என்பதைப் பெரும்பாலானோர் உணர்ந்துகொள்வதில்லை நமது நிலையை அறிந்துகொள்ள என்ன வழி? அறிஞர் ஒருவர்கூறினார்: ஒரு நாள் சூரியன் மறையும்போது அந்நாளில் எந்த அமலையும் செய்யாமல் என் ஆயுள் குறைந்து விடுகிறதே என்பதற்காக அன்றி வேறு எதற்காகவும் நான் வருந்தியதில்லை. நாம் எந்த நன்மையும் செய்யாமல் இருக்கும் நிலையில் நாட்கள் உருண்டோடிவிட்டால் நாம் அலட்சியமாக நாட்களை கழிப்பவர்களாக இருக்கிறோம் என்பது தான் அதன் பொருள் அவ்வாறே நம்மிடம் அலட்சியப்போக்கு உள்ளதா இல்லையா என்பதை அறிய நேரத்திற்கு நாம் எவ்வளவு முக்கியத்துவம் வழங்குகிறோம் என்று பார்த்தால் போதுமானது நேரத்தைப் பயனில்லாத வகையில் வீணாகக் கழிக்கிறோம் என்றால் நாம் அலட்சியமுடையவராக இருக்கிறோம். அலட்சியமும் மறதியும் மறதி என்பதை அல்லாஹ் மனிதனிடம் ஏற்படுத்தியுள்ள பலவீனமாகும் ஆனால் அலட்சியம் என்பது பலவீனமல்ல.
இமாம் இப்னுல் கய்யிம் அல் ஜவ்ஸி அவர்கள் கூறினார்கள்: அலட்சியம் என்பது ஒருவரின் விருப்பத்துடன் நடப்பதாகும் மறதி என்பது விருப்பமில்லாமல் ஏற்படுவதாகும் எனவே தான் அல்லாஹ் *(நபியே!) நீர் உம் மனதிற்குள் மிக்க பணிவோடும், அச்சத்தோடும் (மெதுவாக) உரத்த சப்தமின்றி காலையிலும், மாலையிலும் உம் இறைவனின் (திருநாமத்தை) திக்ரு செய்து கொண்டு இருப்பீராக! (அவனை) மறந்து விட்டிருப்போரில் ஒருவராக நீர் இருக்க வேண்டாம்*. (அல்குர்ஆன் 7:205)
அலட்சியமானவர்களில் ஒருவர் ஆகிவிடவேண்டாம் என்று கூறுகிறான்
மறதியாளர்களில் ஒருவராக ஆகிவிடாதீர்கள் என்று கூறவில்லை.
-மதாரிஜுஸ்ஸாலிகீன் 2ஃ406
எனது உம்மத்திற்கு அல்லாஹ் தவறையும் மறதியையும் நிர்பந்திக்கப்பட்டு செய்வதையும் மன்னித்துவிட்டான்.
அறிவிப்பாளர்: அபுதர்(ரழி)
நூல்: இப்னு மாஜா 2043 ஸஹீஹ் இப்னு ஹிப்பான் 7219
அல்முஃஜமுல் கபீர்லி தப்ரானி 11274
மனிதன் அல்லாஹ்விற்கு நன்றி கெட்டவனாக இருப்பதற்கும் அவனை நிராகரிப்பதற்கும் அலட்சியம்தான் காரணமாக உள்ளன. அல்லாஹ்வின் அத்தாட்சிகளைக் கண்டு அதன் மூலம் படிப்பினைபெறாமல் அதனை மறுப்பதற்கும் அலட்சியம் தான் காரணமாக உள்ளன. வானங்களிலும் பூமியிலும் அவன் ஏராளமான சான்றுகளை ஏற்படுத்தி வைத்துள்ளான், அவைகள் அனைத்தும் படைத்தவனின் ஆற்றலையும் அவனது வல்லமைகளையும ;பறைசாற்றக்கூடியதாக உள்ளன இவைகளை கண்கூடாக கண்ட பின்னரும் அல்லாஹ்வை மறந்து அவனைப் புறக்கணித்து வாழ்வோர்கள் நன்றி கெட்டவர்களாவார்கள் என்பதை அல்லாஹ் தெளிவுபடுத்தியுள்ளான் (அல்குர்ஆன் 16:108)
அவர்களது புலன்கள் அவர்களுக்கு பிரயோஜனம் அளிக்காத வகையில் ஆக்கியுள்ளான் என்பதையும் இவ்வசனத்தில் அல்லாஹ் தெளிவுபடுத்தியுள்ளான்
மனிதனை அல்லாஹ் லட்சியத்துடன் படைத்துள்ளான்.
இன்னும் ,ஜின்களையும் , மனிதர்களையும் அவர்கள் என்னை வணங்குவதற்காகவேயன்றி நான் படைக்கவில்லை (அல்குர்ஆன் 51:56)
வீணுக்காகவும் விளையாட்டிற்காகவும் அல்லாஹ் எதனையும் செய்யமாட்டான் அல்லாஹ் தன்னை எதற்காகப் படைத்தான் என்பதை அறியாத மனிதன் வாழ்க்கையின் லட்சியத்தை மறந்து அலட்சியமானவனாக வாழ்வான். அத்தகைய மனிதன் அவனது மரணநேரம் நெருங்கும்போது ஞானோதயம் வந்தவனாகப் புலம்புவான் என்பதாக அல்லாஹ் கூறிக்காட்டுகிறான்: *அவர்களில் ஒருவனுக்கு மரணம் வரும்போது, அவன்: என் இறைவனே! என்னைத் திரும்ப (உலகுக்குத்) திருப்பி அனுப்புவாயாக!” என்று கூறுவான்*. (அல்குர்ஆன் 23:99)
நான் விட்டுவந்ததில் நல்ல காரியங்களைச் செய்வதற்காக” (என்றும் கூறுவான்). அவ்வாறில்லை! அவன் கூறுவது வெறும் வார்த்தையே(யன்றி வேறில்லை) அவர்கள் எழுப்பப்படும் நாள்வரையும் அவர்கள் முன்னே ஒரு திரையிருக்கிறது*. (அல்குர்ஆன் 23:100)
(இறுதி நாளைப் பற்றிய) உண்மையான வாக்குறுதி நெருங்கினால், (அதைக்காணும்) காஃபிர்களின் கண்கள் திறந்தபடியே நிலைகுத்தி நின்றுவிடும். (அன்றியும் அவர்கள்) எங்களுக்கு கேடு தான்! நிச்சயமாக நாங்கள் இதை உதாசீனப்படுத்தியவர்களாகவே இருந்துவிட்டோம். – அது மட்டுமில்லை – நாம் அநியாயம் செய்தவர்களாகவும் இருந்து விட்டோம்*” (என்று கூறுவார்கள்). (அல்குர்ஆன் 21:97)
இவ்வாறுதான் தன்னைத்தானே உயர்ந்தவனான இரட்சகன் என்று கூறி கொண்டிருந்த ஃபிர்அவ்னும் அவனுடைய மரணத்தறுவாயில் அழுது புலம்பினான் என்று அல்லாஹ் கூறுகிறான் .
அவனும் அல்லாஹ்வுடைய கட்டளையை அலட்சியம் செய்யக்கூடியவனாக இருந்தான் மேலும், இஸ்ராயீலின் சந்ததியினரை நாம் கடலைக் கடக்க வைத்தோம். அப்போது, ஃபிர்அவ்னும், அவனுடைய படைகளும், (அளவு கடந்து) கொடுமையும், பகைமையும் கொண்டு அவர்களைப் பின் தொடர்ந்தார்கள். (அவனை மூழ்கடிக்க வேண்டிய நேரம் நெருங்கி) அவன் மூழ்க ஆரம்பித்ததும் அவன்: இஸ்ராயீலின் சந்ததியினர் எந்த நாயன் மீது ஈமான் கொண்டுள்ளார்களோ, அவனைத் தவிர வேறு இறைவன் இல்லையென்று *நானும் ஈமான் கொள்கிறேன்*. *இன்னும் நான் அவனுக்கே முற்றும் வழிபடுபவர்களில்*
*(முஸ்லிம்களில்)* *ஒருவனாக இருக்கின்றேன்” என்று கூறினான். இந்த நேரத்தில் தானா (நீ நம்புகிறாய்)*? *சற்று முன் வரையில் திடனாக நீ மாறு செய்து கொண்டிருந்தாய். இன்னும், குழப்பம் செய்பவர்களில் ஒருவனாகவும் இருந்தாய்* . *எனினும்* *உனக்குப் பின்னுள்ளவர்களுக்கு ஓர் அத்தாட்சியாக இன்றைய தினம் நாம் உன் உடலைப் பாதுகாப்போம். நிச்சயமாக மக்களில் பெரும்பாலோர் நம் அத்தாட்சிகளைப்பற்றி அலட்சியமாக இருக்கின்றார்கள்*” (என்று அவனிடம் கூறப்பட்டது) . (அல்குர்ஆன் 10:90,92)
மரணம் நெருங்கிய பின்னர் வாழ்க்கையின் லட்சியத்தைக் குறித்து மனிதன் சிந்திப்பதனால் அவனுக்கு எவ்வித பயனுமில்லை வாழ்க்கையை தொலைத்தவனின் இறுதியிடம் நரகம் தான்.