றஜப் மாதம் -அறிமுகம்

றஜப் என்பது வலுப்படுத்தல், மகிமைப்படுத்தல் என்ற கருத்துக்களைக் கொண்டுள்ளது. அரேபியர் இந்த மாதத்திற்குக் கொடுத்து வந்த கண்ணியத்தின் காரணமாகவே இந்தப் பெயர் வந்துள்ளது.  இஸ்லாமும் இந்த மாதத்தை   கண்ணியப்படுத்தியுள்ளது. 

ஜாஹிலிய்யஹ் காலத்திலும் இஸ்லாத்திலும் வாழ்ந்த அபூறஜாஃ அல்உதாரிதீ (றஹிமஹுல்லாஹ்) கூறினார்கள்: ... றஜப் மாதம் வந்துவிட்டால் (போர் நிறுத்தம் செய்வதைக் குறிக்கும் வகையில்) 'مُنَصِّلُ الأَسِنَّةِ' 'ஆயுத முனையை அகற்றக்கூடியது' என அந்த மாதத்தை அழைப்போம். றஜப் மாதத்தில் எந்த ஈட்டி முனையையும், அம்பு முனையையும் கழற்றிவைக்காமல் விடமாட்டோம். (புகாரி 4376)

றஜப் மாதம் யுத்தம் தடைசெய்யப்பட்ட கண்ணியப்படுத்தப்பட்ட நான்கு மாதங்களில் ஒன்றாகும். 

யுத்தம் தடைசெய்யப்பட்ட கண்ணியப்படுத்தப்பட்ட நான்கு மாதங்கள் எவை?
1-துல்-கஃதஹ் (11)
2-துல்-ஹிஜ்ஜஹ் (12)
3-முஹர்ரம் (1)
4-றஜப் (7)

إِنَّ عِدَّةَ الشُّهُورِ عِندَ اللَّهِ اثْنَا عَشَرَ شَهْرًا فِي كِتَابِ اللَّهِ يَوْمَ خَلَقَ السَّمَاوَاتِ وَالْأَرْضَ مِنْهَا أَرْبَعَةٌ حُرُمٌ ذَلِكَ الدِّينُ الْقَيِّمُ فَلَا تَظْلِمُوا فِيهِنَّ أَنفُسَكُمْ وَقَاتِلُوا الْمُشْرِكِينَ كَافَّةً كَمَا يُقَاتِلُونَكُمْ كَافَّةً وَاعْلَمُوا أَنَّ اللَّهَ مَعَ الْمُتَّقِينَ [التوبة : 36]  
{நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் அல்லாஹ்வுடைய பதிவில் வானங்களையும் பூமியையும் படைத்த நாளிலிருந்து மாதங்களின் எண்ணிக்கை பன்னிரண்டு ஆகும் - அவற்றில் நான்கு (மாதங்கள்) கண்ணியப்படுத்தப்பட்டவை; இது தான் நேரான மார்க்கமாகும். ஆகவே அம்மாதங்களில் (போர் செய்து அல்லது தடைசெய்யப்பட்டதை செய்து) உங்களுக்கு நீங்களே தீங்கிழைத்துக் கொள்ளாதீர்கள். இன்னும், இணைவைப்பவர்கள் ஒருங்கிணைந்து உங்களுடன் போராடுவதைப்போன்று நீங்களும் ஒருங்கிணைந்து அவர்களுடன் போராடுங்கள்,  நிச்சயமாக அல்லாஹ், பயபக்தியுடையோருடன் இருக்கின்றான் என்பதையும் உறுதியாக அறிந்து  கொள்ளுங்கள்.} (அல்குர்ஆன் 9:36)

இஸ்லாத்தில் இந்த நான்கு மாதங்களிலும் யுத்தத்தை ஆரம்பிப்பது தடை செய்யப்பட்டுள்ளது. ஆனால், நடந்து கொண்டிருக்கும் யுத்தத்தைத் தொடர முடியும். நபி ﷺ அவர்களின் காலத்தில், தாஇஃப் யுத்தம் ஷவ்வால் மாதத்தில் ஆரம்பித்து துல்-கஃதஹ் மாதத்திலும் தொடர்ந்தது. எதிரிகள் முஸ்லிம் நாட்டை இம்மாதங்களில் தாக்க வந்தால் அவர்களுக்கு எதிராகப் போராடவும் முடியும்.

மேற்படி ஆயத்தில் "ஆகவே அம்மாதங்களில் உங்களுக்கு நீங்களே தீங்கிழைத்துக் கொள்ளாதீர்கள்." என்பதன் அர்த்தம்: பாவம் செய்யாதீர்கள் என்பதாகும். எனவே இம்மாதங்களில் பாவம் செய்வது ஏனைய மாதங்களில் பாவம் செய்வதை விட அதிகப்படியான குற்றமாகும் என முபாஸ்ஸிரீன்கள் விளக்கம் அளித்துள்ளனர் 

عن أبي بكرة، عن النبي ﷺ قال:  "إن الزمان قد  استدار  كهيئته يوم خلق الله السماوات والأرض؛ السنة اثنا عشر شهرا منها أربعة حرم؛ ثلاث متواليات: ذو القعدة، وذو الحجة، والمحرم، ورجب مضر الذي بين جمادى وشعبان". (البخاري 4662)
நபி ﷺ அவர்கள் (ஹஜ்ஜதுல் வதாவில் உரையாற்றிய போது) கூறினார்கள்: ((அல்லாஹ் வானங்களையும் பூமியையும் படைத்த நாளில் இருந்த (பழைய) நிலைக்கே காலம் திரும்பிவிட்டது. ஓர் ஆண்டு என்பது பன்னிரண்டு மாதங்கள் ஆகும். அவற்றில் நான்கு மாதங்கள் (யுத்தம் செய்வது விலக்கப்பட்ட) கண்ணியப்படுத்தப்பட்ட மாதங்களாகும். (அந்த நான்கு மாதங்களில்) மூன்று மாதங்கள் தொடர்ந்து வருகின்றவையாகும். அவை: துல்கஃதஹ், துல்ஹிஜ்ஜஹ், முஹர்ரம் மற்றும் ஜுமாத(ல் ஆகிரஹ்வு)க்கும் ஷஅபானுக்கும் இடையிலுள்ள முளர் குலத்து (மக்கள் அதிகம் மதிக்கும்) 'றஜப்' மாதம் ஆகும்.))  (புகாரி 4662)

"றஜபு முளர்" (முளர் குலத்து றஜப் மாதம்) என்று நபி ﷺ அவர்கள் இந்த ஹதீஸில் குறிப்பிட்டிருப்பதற்கான காரணம் என்ன?
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு முன் வாழ்ந்த ஜாஹிலிய்யஹ் கால அரேபியர்களும் கூட இந்த நான்கு மாதங்களிலும் யுத்தம் செய்யக் கூடாது என்ற அல்லாஹ்வின் சட்டத்தை நடை முறைப்படுத்தி வந்தனர். ஆனால் அவர்கள் சில நேரங்களில் யுத்தம் செய்யும் நிலையில் இருக்கும் பொழுது அவர்களுடைய வசதிக்காக வேண்டி இந்த மாதங்களில் மாற்றங்களை செய்வார்கள்.  ஆனாலும் அரேபிய கோத்திரமான முளர் கோத்திரம் இந்த மாதத்திற்கு மதிப்புக் கொடுத்து இதில் எந்த மாற்றமும் செய்ய மாட்டார்கள். இதனால் அவர்களோடு இணைத்து இந்த மாதம் சொல்லப்படுகிறது.

அரேபியர் இறை சட்டத்துக்கு மாற்றமாக மாதங்களில் ஏற்படுத்தியிருந்த மாற்றம் எது?

இப்றாஹீம் நபியின் மார்க்கத்தைப் பின்பற்றுவதாகக் கூறி வந்த அரேபியர் இப்றாஹீம் நபி அவர்கள் போதித்த ஏகத்துவத்திற்கு மாற்றமாக இணை வைப்பில் ஈடுபட்டனர், அல்லாஹ்வின் சட்ட திட்டங்களுக்கு மாற்றமான பல நூதன அனுஷ்டானங்களை  உருவாக்கி வைத்திருந்தார்கள். இப்றாஹீம் நபி அவர்கள் தனது மகன் இஸ்மாஈல் நபியுடன் சேர்ந்து  அல்லாஹ்வின் கட்டளைப்படி கஃபஹ் ஆலயத்தை நிர்மாணித்தார்கள். அங்கு ஹஜ் செய்வதை மார்க்கமாக அறிவித்தார்கள். இவ்விரு நபிமார்களும் மரணித்துப் பல காலங்கள் கடந்து சென்ற பிறகு அரேபியர்கள் அல்லாஹ்வை வணங்குவதுடன் நல்லடியார்களின் சிலைகளையும் வணங்கி அல்லாஹ்வின் நெருக்கத்தைப் பெறலாம், அவர்கள் தமக்காக அல்லாஹ்விடம் சிபாரிசு செய்வார்கள் என்று நம்பி வந்தனர். சிலை வணக்கத்திற்கு எதிராகப் போராடிய இப்றாஹீம் நபி மற்றும் இஸ்மாயில் நபி அவர்களின் சிலைகளையே கஃபஹ்வுக்குள் வைத்திருந்தார்கள். பெரும் பாவமான இத்தகைய இணைவைப்பில் ஈடுபட்டதோடு மாத்திரமல்லாமல், இப்றாஹீம் நபியின் மார்க்கத்தில் இல்லாத நூதனமான விடயங்களை உருவாக்கிக் கொண்டார்கள். அவர்கள் உருவாக்கிய இறை சட்டத்திற்கு மாற்றமான ஒரு செயல்பாடு தான் யுத்தம் தடை செய்யப்பட்ட மாதத்தை வேறொரு மாதத்திற்குப் பிற்படுத்தி, யுத்தம் செய்ய தடை செய்யப்பட்ட மாதத்தின் பெயரை அந்த மாதத்திற்கு வைத்துக் கொள்வதாகும். அவர்கள் தங்களது வசதிக்கு ஏற்ப நடந்து கொண்டதன் மூலம் யுத்தம் தடைசெய்யப்பட்ட மாதத்தை யுத்தம் தடை செய்யப்படாத மாதமாகவும், யுத்தம் தடை செய்யப்படாத மாதத்தை யுத்தம் தடைசெய்யப்பட்ட மாதமாகவும் மாற்றிக் கொண்டனர். இதனை அல்லாஹ் அல்குர்ஆனில் கண்டித்துள்ளான். இவ்வாறு அல்லாஹ்வின் சட்டங்களை மாற்றுவது "குப்ர்" ஆகும் என்று மேலே சுட்டிக்காட்டப்பட்ட மாதங்களைப் பற்றிய  9:36 ஆயத்திற்குப் பிறகு அல்லாஹுத்தஆலா இதனை குறிப்பிட்டுள்ளான். 

إِنَّمَا النَّسِيءُ زِيَادَةٌ فِي الْكُفْرِ يُضَلُّ بِهِ الَّذِينَ كَفَرُوا يُحِلُّونَهُ عَامًا وَيُحَرِّمُونَهُ عَامًا لِّيُوَاطِئُوا عِدَّةَ مَا حَرَّمَ اللَّهُ فَيُحِلُّوا مَا حَرَّمَ اللَّهُ زُيِّنَ لَهُمْ سُوءُ أَعْمَالِهِمْ وَاللَّهُ لَا يَهْدِي الْقَوْمَ الْكَافِرِينَ [التوبة : 37]  
{(யுத்தம் செய்யக்கூடாது என்று தடுக்கப்பட்ட இம்மாதங்களை அவர்கள் தங்கள் விருப்பப்படி) பிற்படுத்துவது குஃப்ரை (நிராகரிப்பை)யே அதிகப்படுத்துகிறது; இதனால் நிராகரிப்பவர்கள் வழி கெடுக்கப்படுகின்றனர். ஏனெனில் ஒரு வருடத்தில் அ(ம்மாதங்களில் யுத்தம் புரிவ)தை அனுமதிக்கப் பட்டதாகக் கொள்கிறார்கள்; மற்றொரு வருடத்தில் அதைத் தடுத்து விடுகின்றனர். இதற்குக் காரணம் (தாங்கள் தடுத்துள்ள மாதங்களின் எண்ணிக்கையை) அல்லாஹ் தடுத்திருக்கும் மாதங்களின் எண்ணிக்கைக்குச் சரியாக்கி, அல்லாஹ் தடுத்திருக்கும் மாதங்களை தாங்கள் ஆகுமாக்கிக் கொள்வதற்காகத்தான். அவர்களின் (இத்)தீச்செயல்கள் அவர்களுக்கு (ஷைத்தானால்) அலங்கரிக்கப்பட்டுவிட்டன; அல்லாஹ், நிராகரிக்கும் கூட்டத்தை நேர் வழியில் செலுத்த மாட்டான்.} (அல்குர்ஆன்: 9:37)

நபி ﷺ அவர்கள் ஒவ்வொரு மாதத்தையும் அதற்குரிய சரியான நிலைமைக்கு கொண்டு வந்தார்கள். அதனையே மேற்படி ஹதீஸில் இறுதி ஹஜ்ஜின் போது அறிவித்தார்கள்.


றஜப் மாதத்தில் விசேடமான அமல்கள் உண்டா?

றஜப் மாதத்திற்கு என்று விசேடமான தொழுகை, நோன்பு உம்றஹ் மற்றும் வேறு எந்த ஒரு விசேடமான வணக்க வழிபாடும் கிடையாது. அவ்வாறு எந்த ஆதாரபூர்வமான நபிமொழிகளிலும் இடம் பெறவில்லை.

ஷாபிஈ மத்ஹபைச் சேர்ந்த இமாம் இப்னு ஹஜர் -றஹிமஹுல்லாஹ்- அவர்கள் றஜப் மாதம் பற்றி வந்திருக்கக் கூடிய அனைத்து ஹதீஸ்களையும் ஒன்று திரட்டி, அவை ஆதாரபூர்வமானவை அல்ல; அவற்றில் பல பலவீனமான செய்திகளாகவும் பெரும்பாலானவை இட்டுக்கட்டப்பட்ட செய்திகளாகவும் இருக்கின்றன என்று தனது تبيين العجب بما ورد في شهر رجب என்ற நூலில் தெளிவுபடுத்தியுள்ளார்.


றஜப் மாதத்தில் முக்கியமான நிகழ்வுகள் ஏதேனும் நடந்ததா?

இம்மாதத்தில் முக்கியமான நிகழ்வுகள் நடந்ததாக எந்த ஒரு ஆதாரபூர்வமான அறிவிப்பும் இல்லை. சில முக்கியமான நிகழ்வுகள் நடந்ததாக பலவீனமான கருத்துக்களே இருக்கின்றன. இம்மாதத்தின் முதல் இரவில் நபியவர்கள் பிறந்ததாகவும்,     27ஆவது இரவில் அவர்கள் நபியாக தேர்வு செய்து அனுப்பப்பட்டதாகவும், இன்னும் ஒரு கருத்தின் படி 25ஆவது இரவில் நபியாக அனுப்பப்பட்டதாகவும் சொல்லப்பட்டுள்ளது. இன்னும் ஒரு கருத்தின் படி இம்மாதத்தில் 27ஆவது இரவில் நபியவர்கள் இஸ்ரா, மிஃறாஜ் சென்றதாகவும் சொல்லப்பட்டுள்ளது. இவை அனைத்துக்கும் எந்த ஒரு ஆதாரபூர்வமான அறிவிப்பும் கிடையாது.

இஸ்ரா, மிஃறாஜ் இந்த மாதத்தின் 27ஆவது இரவில் நடந்ததா? அந்த இரவைக் கொண்டாட முடியுமா?
இஸ்ரா, மிஃறாஜ் எந்த இரவில் நடந்தது என்பதில் கருத்து வேறுபாடு உள்ளது. ஏனெனில் மிஃறாஜ் நடந்தது உறுதி; அதில் அணுவளவு சந்தேகமும் கிடையாது. நபியவர்களின் மக்கஹ் வாழ்க்கையில் அது நடைபெற்றது. பல நபித்தோழர்கள் அதனை அறிவித்துள்ளார்கள். நபி ﷺ அவர்களோ, நபித்தோழர்களோ எந்த ஒரு செய்தியிலும், இந்த மாதத்தில் இத்தனையாவது இரவில் தான் நடந்தது என்று அறிவித்த எந்த ஒரு  அறிவிப்பும் கிடையாது. பிற்காலத்தில் வந்தவர்கள் இது எந்த இரவில் நடந்தது என்று தங்களுடைய ஆய்வுகளை வைத்து பல்வேறு கருத்துக்களைக் கூறியுள்ளார்கள். அவற்றில் எதற்கும் உறுதியான ஆதாரம் கிடையாது.

றபீஉனில் அவ்வலில் நடந்ததாக ஒரு கருத்தும், றஜபில் நடந்ததாக இன்னொரு கருத்தும், றமளானில் நடந்ததாக மூன்றாவது ஒரு கருத்தும், ஷவ்வாலில் நடந்ததாக நான்காவது ஒரு கருத்தும், துல்கஃதஹ்வில் நடந்ததாக ஐந்தாவது ஒரு கருத்தும், துல்ஹிஜ்ஜஹ்வில் நடந்ததாக ஆறாவது ஒரு கருத்தும்  சொல்லப்பட்டுள்ளது. 

இத்தனை கருத்து வேறுபாடுகள் வருவதற்குப் பிரதானமான காரணம்: இந்த நிகழ்வு எப்போது நடந்தது என்பதில் பிற்காலத்தில் நபி அவர்களோ நபித்தோழர்களோ கவனம் எடுக்கவில்லை; மாறாக நிகழ்வின் முக்கியத்துவத்தையும் அதிலிருந்து பெறப்படும் படிப்பினைகளையும் மட்டுமே அவர்கள் கருத்தில் கொண்டார்கள் என்பது தெளிவாகிறது. 
அது இன்ன இரவில் தான் நடந்தது என்று நமக்கு உறுதியாகத் தெரிந்தாலும் கூட அந்த இரவை எம்மால் கொண்டாட முடியாது. ஏனெனில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களோ அவர்களின் பாசறையில் வளர்ந்த நபித்தோழர்களோ அந்த இரவைக் கொண்டாடவில்லை; அதில் விசேடமான எந்த ஒரு வணக்கத்திலும் அவர்கள் ஈடுபடவில்லை. எனவே அவர்கள் செய்யாத ஒன்றை நாம் செய்வது மார்க்கத்தில் நாம் புதிதாக உருவாக்குகின்ற ஒரு பித்அத்தாகவே அமையும். அதனை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கடுமையாக கண்டித்துள்ளார்கள். அதற்கு நமக்கு நன்மை கிடைக்கப் போவதில்லை. மாறாக நபியவர்கள் காட்டாத வழியில் இறைவனை வழங்குவது பாவத்தையே அதிகரிக்கச் செய்யும். நாம் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கும் நபித்தோழர்களுக்கும் பாடம் கற்றுக் கொடுப்பதாகவே கருதப்படும். எனவே மார்க்கத்தில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு செய்வதற்கு முடியுமாக  இருந்த ஒரு விடயத்தை அவர்கள் செய்யவில்லை என்றால் அது மார்க்கம் அல்ல என்பது தான் அர்த்தம். அதனை நாம் செய்வது மார்க்கத்தில் நாம் புதிதாக உருவாக்குவதாகவே அமையும். 
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: "யார் எமது மார்க்கத்தில் இல்லாத ஒன்றை உருவாக்குகிறாரோ அது மறுக்கப்படும்". இன்னொரு அறிவிப்பில் கூறினார்கள்: "யார் எமது மார்க்கத்தில் இல்லாத ஒரு அமலைச் செய்கிறாரோ அது மறுக்கப்படும்". 

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு செய்ய முடியுமாக இருந்தும் செய்யாத ஒரு விடயத்தை நாமும் செய்யாமல் விடுவது தான் நபி அவர்களை நாம் பின்பற்றுவதாக இருக்கும். இதனையே நாம் ஸுன்னஹ் தர்கிய்யஹ் என்று சொல்கிறோம். அதாவது நபி ﷺ அவர்கள் விட்டதை விடுவதும் நபி வழியாகும். 
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஒவ்வொரு உரையிலும் ஆரம்பத்திலே கூறுவார்கள்: வார்த்தைகளில் சிறந்தது அல்லாஹ்வின் வார்த்தையாகும். வழிமுறைகளில் சிறந்தது முஹம்மதின் வழிமுறையாகும். காரியங்களில் மோசமானது புதிதாக (மார்க்கத்தில்) உருவாக்கப்பட்டவை ஆகும். 

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தமது தோழர்களுக்குக் கூறினார்கள்: உங்களில் எனக்குப் பிறகு வாழ்பவர்கள் அதிகமான கருத்து வேறுபாடுகளைக் காண்பீர்கள். அப்போது நீங்கள் எனது வழிமுறையையும் நேர்வழி பெற்ற கலீபாக்களின் வழிமுறையையும் பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள். அதனை உங்கள் கடைவாய்ப் பற்களால் இறுக்கமாகப் பிடித்துக் கொள்ளுங்கள்.

-ஸுன்னஹ் அகாடமி

Previous Post Next Post