சிறந்த ஆசிரியர் நபிகள் நாயகம் ﷺ அவர்கள்.


படைப்பாளன் அல்லாஹ்வால் மனித குலத்தை  இணைவைப்பிலிருந்தும், சமூகச் சீர்கேடுகளிலிருந்தும்  பாதுகாப்பதற்காகத் தான்   இப்பூமிக்கு  இறுதித் தூதர் முஹம்மத்  (ﷺ) அவர்கள் அனுப்பப்பட்டார்கள். அவர்களுக்கு அருளப்பட்ட வேதம் அல் குர்ஆனாகும். இறைவனால் அவர்களுக்கு வழங்கப்பட்ட பணி அகிலத்தாரை அல் குர்ஆனின் பக்கம் அதனைக் கற்றுக் கொடுத்து அழைக்கும் பணியாகும். 

அல்லாஹ் கூறுகின்றான்.

يَا أَيُّهَا الرَّسُولُ بَلِّغْ مَا أُنزِلَ إِلَيْكَ مِن رَّبِّكَ ۖ وَإِن لَّمْ تَفْعَلْ فَمَا بَلَّغْتَ رِسَالَتَهُ ۚ وَاللَّهُ يَعْصِمُكَ مِنَ النَّاسِ ۗ إِنَّ اللَّهَ لَا يَهْدِي الْقَوْمَ الْكَافِرِينَ

தூதரே! உமது இறைவனிடமிருந்து உமக்கு அருளப்பட்டதை எடுத்துச் சொல்வீராக.! (இதைச்) செய்யவில்லையானால் அவனது தூதை நீர் எடுத்துச் சொன்னவராக மாட்டீர்.! அல்லாஹ் உம்மை மனிதர்களிடமிருந்து காப்பாற்றுவான். (தன்னை) மறுக்கும் கூட்டத்திற்கு அல்லாஹ் வழி காட்ட மாட்டான்.

அல் குர்ஆன்  5:67

 وَأَنزَلْنَا إِلَيْكَ الذِّكْرَ لِتُبَيِّنَ لِلنَّاسِ مَا نُزِّلَ إِلَيْهِمْ وَلَعَلَّهُمْ يَتَفَكَّرُونَ

நபியே நீர் மக்களுக்கு அருளப்பட்டதை  அவர்களுக்கு விளக்க வேண்டும் என்பதற்காகவும், அவர்கள் சிந்திக்க வேண்டும் என்பதற்காகவும் இந்தப் போதனையை உமக்கு நாம் அருளினோம்.

அல் குர்ஆன்  16:44

அல்லாஹ்வின் தூதர் அவர்கள் அவர்களுக்கு அருளப்பட்ட வஹியை (அல் குர்ஆனை)  அழகிய முறையில் மக்களுக்கு கற்றுக் கொடுத்தார்கள். அது மாத்திரமின்றி தனது வாழ்கையையும் அல் குர்ஆனிய வாழ்கையாக வாழ்ந்து காட்டினார்கள்.  செருப்பணிவது முதல் ஆட்சி அதிகாரம் வரை அனைத்துக்குமான வழிகாட்டல்களை நபிகளார் எமக்குக் கற்றுத் தந்துள்ளார்கள். 

அல்லாஹ் சொல்லுகிறான்.

لَّقَدْ كَانَ لَكُمْ فِي رَسُولِ اللَّهِ أُسْوَةٌ حَسَنَةٌ لِّمَن كَانَ يَرْجُو اللَّهَ وَالْيَوْمَ الْآخِرَ وَذَكَرَ اللَّهَ كَثِيرًا

அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்பி, அல்லாஹ்வை அதிகம் நினைக்கும் உங்களுக்கு அல்லாஹ்வின் தூதரிடம் அழகிய முன்மாதிரி இருக்கிறது.

அல் குர்ஆன்  33:21

ஒரு ஆசிரியரிடம் எப்படியான பண்புகள்  இருக்க வேண்டும். மாணவர்களை எப்படி வழிநடாத்த வேண்டும். என்று  நபிகளாரின் முன்மாதிரிகளிலிருந்து ஆசிரியர்களுக்கான சில வழிகாட்டல்கள்.

1) கல்வி கற்பதை ஆர்வமூட்டல்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

(நீண்ட ஹதீஸின் ஒரு பகுதி)
யார் கல்வியைத் தேடி ஒரு பாதையில் நடக்கிறாரோ அவருக்கு அதன் மூலம் சொர்க்கத்திற்குச்  செல்லும் பாதையை அல்லாஹ் எளிதாக்குகிறான். மக்கள் இறையில்லங்களில் ஒன்றில் ஒன்று கூடி, அல்லாஹ்வின் வேதத்தை ஓதிக்கொண்டும் அதை ஒருவருக்கொருவர் படித்துக்கொடுத்துக் கொண்டும் இருந்தால், அவர்கள்மீது அமைதி இறங்குகிறது. அவர்களை இறையருள் போர்த்திக்கொள்கிறது. அவர்களை வானவர்கள் சூழ்ந்துகொள்கின்றனர். மேலும் இறைவன், அவர்களைக் குறித்துத் தம்மிடம் இருப்போரிடம் (பெருமையுடன்) நினைவுகூருகிறான்.
 இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
.
ஸஹீஹ் முஸ்லிம் : 5231.

'எவருக்கு அல்லாஹ் நன்மையை நாடுகிறானோ அவரை மார்க்கத்தில் விளக்கம் பெற்றவராக ஆக்கி விடுகிறான்.. 
ஸஹீஹ் புகாரி : 71.

அல் குர்ஆனைத் தானும் கற்றுப் பிறருக்கும் கற்றுக் கொடுப்பவரே உங்களில் சிறந்தவர் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பாளர்: உஸ்மான்(ரலி)  புகாரி

'ஒருவருக்கு அல்லாஹ் வழங்கிய செல்வத்தை அவர் நல்ல வழியில் செலவு செய்தல்; இன்னொருவருக்கு அல்லாஹ் அறிவு ஞானத்தை வழங்கி, அதற்கேற்ப அவர் தீர்ப்பு வழங்குபவராகவும், கற்றுக் கொடுப்பவராகவும் இருப்பது ஆகிய இரண்டு விஷயங்களைத் தவிர வேறு எதிலும் பேராசை கொள்ளக் கூடாது' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார்.
ஸஹீஹ் புகாரி : 73

ஒவ்வொரு மாணவனுக்கும் கல்வியின் சிறப்பு பற்றி அறிவுரை கூறி ஆர்வத்தோடு கற்க முயற்சி செய்யத் தூண்டுவது  ஆசிரியர்களிடம் இருக்க வேண்டிய முக்கியப் பண்பாகும்.

2) மாணவர்களை அமைதியாக 
செவிதாழ்திக் கேட்கவைத்தல். 

'நபி(ஸல்) அவர்கள் தங்களின் இறுதி ஹஜ்ஜின்போது (மக்களுக்கு உரையாற்றிய நேரத்தில்) என்னிடம் 'மக்களை அமைதியுடன் செவி தாழ்த்திக் கேட்கும் படி செய்வீராக!' என்று கூறினார்கள். (மக்கள் அமைதியுற்ற பின்னர்) 'எனக்குப் பிறகு நீங்கள் ஒருவர் கழுத்தை ஒருவர் வெட்டிக் கொள்ளும் இறைமறுப்பாளர்களாக மாறி விடவேண்டாம்' என்று கூறினார்கள்' என ஜரீர்(ரலி) அறிவித்தார்.
ஸஹீஹ் புகாரி : 121. 

நபிகளார் தனது இருபத்தி மூன்று  வருட காலப் பிரச்சாரத்தையும் இரத்தினச் சுருக்கமாக நினைவு கூறிய அரபாப் பேருரையை துவங்க முன் முதலில் மக்களை அமைதிப்படுத்தினார்கள். ஒரு பாடத்தை மாணவர்களுக்கு கற்றுக் கொடுக்க முன் மாணவர்களை அமைதிப்படுத்துவது ஆசிரியரிடம் இருக்க வேண்டிய முக்கிய பண்பாகும்.

3) உரத்த குரலில் கற்றுக் கொடுத்தல்.

'நாங்கள் மேற்கொண்ட பயணம் ஒன்றில் நபி (ஸல்) அவர்கள் எங்களுக்குப் பின்னே வந்து கொண்டிருந்தார்கள். தொழுகையின் நேரம் எங்களை நெருங்கிவிட்ட நிலையில் நாங்கள் வுளூச் செய்து கொண்டிருந்தபோது நபி(ஸல்) அவர்கள் எங்களிடம் வந்து சேர்ந்தார்கள். அப்போது நாங்கள் எங்கள் கால்களைத் தண்ணீரால் தடவிக் கொண்டிருந்தோம். (அதைக் கண்டதும்) 'குதி கால்களைச் சரியாகக் கழுவாதவர்களுக்கு நரகம் தான்!' என்று இரண்டு அல்லது மூன்று முறை தம் குரலை உயர்த்தி இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) அறிவித்தார் .

ஸஹீஹ் புகாரி : 60.

(பெருநாள் தினத்தில்)
'பெண்களுக்குக் (தம் உரையைக்) கேட்க வைக்க முடியவில்லை என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கருதி, பிலால்(ரலி) அவர்களுடன் பெண்கள் பகுதிக்குச் சென்று அறிவுரை கூறினார்கள்.. 
இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். 
ஸஹீஹ் புகாரி : 98. 

சில ஆசிரியர்கள் கற்றுக் கொடுப்பது முன் வரிசையில் அமர்ந்திருக்கும் மாணவர்களுக்கு மட்டும் தான் கேட்கக் கூடியதாக இருக்கும். ஒரு பாடத்தைக் கற்றுக் கொடுக்கும் போது குரலை உயர்த்தி மாணவர்கள் அனைவரும் கேட்கும் விதமாக ஆசிரியர்கள் கற்றுக் கொடுக்க வேண்டும். 

4) மாணவர்கள் மறந்து விடாது சரி வரக் கற்றுக் கொள்ள வேண்டும் என்பதற்காக ஒரே விடயத்தை மூன்று முறை மீட்டிக் கூறுதல். 

அபூ பக்ரா (ரலி) அறிவித்தார்கள். 

(ஒரு முறை) 'பெரும் பாவங்களிலேயே மிகப் பெரும் பாவங்களை நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா?' என்று நபி (ஸல்) அவர்கள் (மூன்று முறை) கேட்டார்கள். மக்கள், 'ஆம், இறைத்தூதர் அவர்களே! (அறிவியுங்கள்)' என்றார்கள். உடனே, நபி(ஸல்) அவர்கள், 'அல்லாஹ்வுக்கு இணைவைப்பதும்
 பெற்றோருக்குத் துன்பம் தருவதும் (தான் அவை)' என்று கூறிவிட்டு, சாய்ந்து கொண்டிருந்தவர்கள் எழுந்து அமர்ந்து, 'அறிந்து கொள்ளுங்கள்; பொய் சாட்சியமும் (மிகப் பெரும்பாவம்) தான்' என்று கூறினார்கள். 'நிறுத்திக் கொள்ளக் கூடாதா' என்று நாங்கள் சொல்கிற அளவுக்கு அதை (இறுதியாகச் சொன்னதை) திரும்பத் திரும்பக் கூறிக் கொண்டேயிருந்தார்கள். 

ஸஹீஹ் புகாரி : 2654. 

'நபி (ஸல்) அவர்கள் ஏதாவது ஒரு வார்த்தை பேசினால் அது அவர்களிடமிருந்து நன்கு புரிந்து கொள்ளப்பட வேண்டும் என்பதற்காக மும்முறை அதைத் திரும்பக் கூறுவார்கள். ஏதாவது ஒரு சமூகத்தாரிடம் சென்றால் மும்முறை ஸலாம் கூறுவார்கள்' அனஸ்(ரலி)அவர்கள்  அறிவித்தார்கள். 
ஸஹீஹ் புகாரி : 95. 

5) மாணவர்களின் அறிவுத்திறனை
 வளர்ப்பதற்காக சிந்திக்கத் தூண்டும் கேள்விகளைக் கேட்டு பதிலைக் கற்றுக் கொடுத்தல்.

'மரங்களில் இப்படியும் ஒருவகை மரம் உண்டு. அதன் இலை உதிர்வதில்லை. அது முஸ்லிமுக்கு உவமையாகும். அது என்ன மரம் என்பதை எனக்கு அறிவியுங்கள்?' என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கேட்டபோது மக்களின் எண்ணங்கள் நாட்டு மரத்தின் பால் திரும்பியது. நான் அதை பேரீச்சை மரம் தான் என்று கூற வெட்கப்பட்டு அதைச் சொல்லாமல் இருந்தேன். பின்னர் இறைத்தூதர் அவர்களே! அது என்ன மரம் என்று எங்களுக்கு அறிவியுங்கள்' எனத் தோழர்கள் கேட்டதற்கு, 'பேரீச்சை மரம்' என்றார்கள்' என இப்னு உமர்(ரலி) அறிவித்தார். 
ஸஹீஹ் புகாரி : 62. 

புத்தகத்தில் இருப்பதை அப்படியே வாசித்து விளக்கிவிட்டுச் செல்லாது மாணவர்களை சிந்திக்கத்தூண்டும் கேள்விகளினூடகக் கற்பிப்பது மாணவர்களின் ஆர்வத்தை அதிகரிக்கச் செய்யும் வழிமுறையாகும். 

6) மாணவர்கள் சலிப்படையாது ஆர்வத்தோடு கல்வி கற்கும் விதத்தில்  கற்றுக் கொடுக்க வேண்டும்.

'இலகுவாக்குங்கள்; சிரமத்தைக் கொடுக்காதீர்கள். மேலும் நல்லவற்றையே சொல்லுங்கள். சலிப்படைந்து ஓடிவிடுமாறு செய்யாதீர்கள்; வெறுப்பூட்டாதீர்கள்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என அனஸ்(ரலி) அறிவித்தார். 
ஸஹீஹ் புகாரி : 69. 

'எங்களுக்குச் சலிப்பேற்பட்டு விடக் கூடும் என்று அஞ்சிப் பல்வேறு நாட்களிலும் கவனித்து எங்களுக்கு நபி(ஸல்) அவர்கள் அறிவுரை வழங்குபவர்களாக இருந்தார்கள்' என இப்னு மஸ்வூத்(ரலி) கூறினார்.
ஸஹீஹ் புகாரி : 68. 

'அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் (ரலி) அவர்கள் ஒவ்வொரு வியாழக்கிழமை அன்றும் மக்களுக்கு அறிவுரை கூறும் வழக்கம் உடையவர்களாய் இருந்தார்கள். அப்போது (ஒரு நாள்) ஒருவர் அவர்களிடம் 'அபூ அப்துர் ரஹ்மானே! தாங்கள் ஒவ்வொரு நாளும் எங்களுக்கு அறிவுரை பகர்ந்திட வேண்டும் எனப் பெரிதும் விரும்புகிறேன்' என்றார். அதற்கு (உங்களைச் சலிப்படையச் செய்து விடுவேனோ என்று அஞ்சுவதுதான் இதைவிட்டும் என்னைத் தடுக்கிறது. நான் உங்களுக்குச் சந்தர்ப்ப சூழ்நிலைகளைக் கவனித்து அறிவுரை கூறுகிறேன். அவ்வாறு தான் நபி(ஸல்) அவர்கள் நாங்கள் சலிப்படைவதை அஞ்சி எங்களுக்கு அறிவுரை கூறிவந்தார்கள்' என்றார்' எனஅபூ வாயில் அறிவித்தார். 
ஸஹீஹ் புகாரி : 70. 

இன்று சிறு வயது முதல் கல்வியின் பெயரால் காலை,  மதியம் , மாலை,  இரவு  என எல்லா நேரங்களிலும் மாணவர்கள் ஓய்வின்றி கல்விக்காக அழைவதை நாம் காண்கிறோம் . இருபத்தி நான்கு  மணிநேரமும் படி படி என்று மாணவர்களை வற்புறுத்துவது கல்வியில் ஒருவித வெறுப்பை ஏற்படுத்தும் காரியமாகும் என்பதை ஆசிரியர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.

7) மாணவர்கள் புரிந்து கொள்ளும் விதமாக உவமைளைக் கூறிக் கற்றுக் கொடுத்தல். 

'அல்லாஹ் என்னை நேர்வழி மற்றும் ஞானத்துடன் அனுப்பியதற்கு உவமையாவது, நிலத்தில் விழுந்த பெருமழை போன்றதாகும். அவற்றில் சில நிலங்கள் நீரை ஏற்று ஏராளமான புற்களையும் செடி, கொடிகளையும் முளைக்கச் செய்தன. வேறு சில தண்ணீரைத் தேக்கி வைத்துக் கொள்ளும் தரிசு நிலங்களாகும். அதனை இறைவன் மக்களுக்குப் பயன் படச் செய்தான். அதனை மக்கள் அருந்தினர்; (தம் கால் நடைகளுக்கும்) புகட்டினார்; விவசாயமும் செய்தனர். அந்தப் பெருமழை இன்னொரு வகை நிலத்திலும் விழுந்தது. அது (ஒன்றுக்கும் உதவாத) வெறும் கட்டாந்தரை. அது தண்ணீரைத் தேக்கி வைத்துக் கொள்ளவும் இல்லை; புற்பூண்டுகளை முளைக்க விடவுமில்லை. இதுதான் அல்லாஹ்வின் மார்க்கத்தில் விளக்கம் பெற்று நான் கொண்டு வந்த தூதினால் பயனடைந்து, கற்றுத் தெரிந்து பிறருக்கும் கற்றுக் கொடுத்தவருக்கும் நான் கொண்டு வந்த தூதை ஏறிட்டுப் பாராமலும் நான் கொண்டு வந்த அல்லாஹ்வின் நேர் வழியை ஏற்றுக் கொள்ளாமலும் வாழ்கிறவனுக்கும் உவமையாகும்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என அபூ மூஸா(ரலி) அறிவித்தார். 
ஸஹீஹ் புகாரி : 79. 

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்' 
நல்ல நண்பன் மற்றும் கெட்ட நண்பனின் நிலையானது கஸ்தூரியைச் சுமக்கிறவனின் நிலையையும், (உலைக் களத்தில்) உலை ஊதுகிறவனின் நிலையையும் ஒத்திருக்கிறது. கஸ்தூரியைச் சுமப்பவன் ஒன்று அதை உனக்கு அன்பளிப்பாக வழங்கலாம். அல்லது நீ அவனிடமிருந்து (அதை விலைக்கு) வாங்கிக் கொள்ளலாம். அல்லது அதிலிருந்து நீ நறுமணத்தையேனும் பெறலாம். ஆனால் உலை ஊதுபவனோ ஒன்று உன்னுடைய ஆடையை எரித்துக் கரித்துவிடுவான்; அல்லது (அவனிடமிருந்து) நீ துர்வாடையையாவது அடைந்தே தீருவாய். 
என அபூ மூஸா(ரலி) அறிவித்தார்.

ஸஹீஹ் புகாரி : 5534. 

நேரடியாக ஒரு விடயத்தை விளக்குவதை விட உதாரணங்களைக் கூறி விளக்கும் போது அது மனதில் ஆலமாகப் பதியும்.  அதனால் தான் அல்லாஹ்வும் அவனது தூதரும் பல விடயங்களை சம்பவங்கள், மற்றும் உதாரணங்களைக் கூறி எமக்குத் தெளிவு படுத்தியுள்ளார்கள். இப்படியான முறைகள் ஆசிரியர்களாகிய எம்மிடம் இருக்க வேண்டும்.

8) சபையில் தவறு செய்யும் மாணவர்களின் தவறை அழகிய முறையில் திருத்திக் கொடுத்தல்.

முஆவியா பின் அல்ஹகம் அஸ்ஸுலமீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் (ஒரு நாள்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் தொழுதுகொண்டிருந்தேன். அப்போது (தொழுதுகொண்டிருந்த) மக்களில் ஒருவர் தும்மினார். உடனே நான் "யர்ஹமுக் கல்லாஹ்” (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரிவானாக) என்று (மறுமொழி) கூறினேன். 

உடனே  மக்கள் என்னை வெறித்துப் பார்த்தனர். நான் "என்னை என் தாய் இழக்கட்டும்! நீங்கள் ஏன் என்னை இவ்வாறு பார்க்கிறீர்கள்?" என்று கேட்டேன். மக்கள் (பதிலேதும் கூறாமல்) தங்கள் கைகளால் தொடைகள் மீது தட்டினர். என்னை  அவர்கள் அமைதியாக இருக்கச் சொல்கிறார்கள் என்று நான் அறிந்துகொண்டு அமைதியாகி விட்டேன்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுது முடித்ததும் என் தந்தையும் என் தாயும் நபியவர்களுக்கு அர்ப்பணமாகட்டும்- (பின்வருமாறு அறிவுரை) கூறினார்கள்.

 அவர்களுக்கு முன்னரோ, பின்னரோ அவர்களை விட மிக அழகிய முறையில் கற்பிக்கும் ஆசிரியர் ஒருவரை நான் (என் வாழ்நாளில்) கண்டதேயில்லை.

அல்லாஹ்வின் மீதாணையாக!
அவர்கள் என்னைக் 
கண்டிக்கவுமில்லை..
அடிக்கவுமில்லை..
திட்டவுமில்லை...

(மாறாக,) அவர்கள், 
"இந்தத் தொழுகையானது, மக்களின் பேச்சுகளுக்கு உரிய நேரமன்று"

"தொழுகை என்பது இறைவனைத் துதிப்பதும் பெருமைப்படுத்துவதும் 
குர்ஆன் ஓதுவதுமாகும்" 

என்றோ அல்லது இதைப் போன்றோ சொன்னார்கள்.

நான், "அல்லாஹ்வின் தூதரே! 
நான் அறியாமைக் காலத்திற்கு நெருக்கமானவன். அல்லாஹ் இந்த இஸ்லாத்தை வழங்கினான். எங்களில் சிலர் சோதிடர்களிடம் செல்கிறார்களே?" என்றேன்.

 அதற்கு அவர்கள் "சோதிடர்களிடம் நீங்கள் செல்லாதீர்கள்" என்றார்கள். 

நான் "எங்களில் இன்னும் சிலர் பறவையை வைத்துக் குறி பார்க்கிறார்களே?" என்றேன். அதற்கு நபியவர்கள் "இது, மக்கள் தம் உள்ளங்களில் காணும் (ஐதீகம் சார்ந்த) விஷயமாகும். ஆனால், இது "அவர்களை" அல்லது"உங்களை" (செயலாற்றுவதிலிருந்து) தடுத்திட வேண்டாம்" என்று கூறினார்கள்.

 நான், "எங்களில் இன்னும் சிலர் (நற்குறி அறிய மணலில்) கோடு வரை(யும் பழங்கால கணிப்பு முறையை மேற்கொள்)கின்றனர்" என்றேன். அதற்கு அவர்கள், "நபிமார்களில் ஒருவர் இவ்வாறு கோடு வரைந்துவந்தார். யார் அவரைப் போன்று கோடு வரைகிறாரோ அது (சாத்தியம்)தான்" என்றார்கள்.

அடுத்து என்னிடம் ஓர் அடிமைப் பெண் இருந்தாள். அவள் என் ஆட்டு மந்தையை (மதீனாவிற்கு அருகிலுள்ள) உஹுத் மலை மற்றும் (அதையொட்டி அமைந்துள்ள) ஜவ்வானிய்யாப் பகுதியில் மேய்த்து வந்தாள். 

ஒரு நாள் நான் சென்று பார்த்தபோது ஓநாய் ஒன்று அவளிடமிருந்த ஆடுகளில் ஒன்றைக் கொண்டு சென்றுவிட்டது. (சராசரி) மனிதன் கோபப்படுவதைப் போன்று நானும் கோபப்பட்டேன். ஆயினும், அவளை நான் அறைந்துவிட்டேன்.  நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்றபோது அது குறித்து அவர்கள் என்னைக் கடுமையாகக் கண்டித்தார்கள்.

நான், "அல்லாஹ்வின் தூதரே! நான் அவளை விடுதலை செய்து விடட்டுமா?" என்று கேட்டேன். அதற்கு அவர்கள், "அந்தப் பெண்ணை என்னிடம் அழைத்துவாருங்கள்!" என்று சொன்னார்கள். 

நான் அவளை அழைத்துச் சென்றபோது அவளிடம், "அல்லாஹ் எங்கே இருக்கின்றான்?" என்று நபியவர்கள் கேட்டார்கள்.

 அவள், "வானத்தில்” என்று பதிலளித்தாள்.

நபி அவர்கள், "நான் யார்?"  என்று கேட்டார்கள். 

அவள், "நீங்கள் அல்லாஹ்வின் தூதர்" என்றாள். 

அவர்கள் (என்னிடம்), "அவளை விடுதலை செய்துவிடுங்கள்! ஏனெனில், அவள் இறைநம்பிக்கையுடைய (முஃமினான) பெண் ஆவாள்" என்றார்கள்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
ஸஹீஹ் முஸ்லிம் : 935. 

.
நான் நபி (ஸல்) அவர்களின் பராமரிப்பில் சிறு குழந்தையாக இருக்கும் போது என் கை சாப்பிடும் பாத்திரத்தின் பக்கம் சென்றது, அப்போது நபியவர்கள், பையனே! பிஸ்மி சொல்லி சாப்பிடு, இன்னும் வலது கையால் சாப்பிடு, உனக்குப் பக்கத்தில் உள்ளதைச் சாப்பிடு, என எனக்குக் கூறியதாக உமர் இப்னு அபூஸலமா (ரலி) அவர்கள் கூறினார்கள். 
புகாரி, முஸ்லிம்

ஆசிரியர்களிடம் இருக்கும் மிக மோசமான பண்புகளில் ஒன்று தான் மாணவர்கள் தவறு செய்யும் போது அவர்களின் சுய கவ்ரவம் பாதிக்கும் விதத்தில் ஒருமையான வார்தைகளினூடாக சக மாணவர்களின் முன்னிலையில் ஏசுவது ,அடிப்பது , கடுகடுப்பது, அவமானப்படுத்துவது. இது போன்ற பண்புகள் மாணவர்களை மணம் புண்பட வைத்து பாடசாலையையும், படிப்பையும், ஆசிரியர்களையும் வெறுக்கும் அளவுக்கு மாற்றுகின்றது. இப்படியான முறைகளை பேராசிரியர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தங்களை உயிராக நேசித்த தோழர்களிடமோ, அவர்களை வெறுத்தவர்களிடமோ காட்டவில்லை. நபிகளார் தவறுகளை அழகிய முறையில் திருத்திக் கொடுத்துள்ளார்கள். 

9) கட்டுப்படாத மாணவர்களைக் கண்டித்தல்.

குழந்தைகள் ஏழு வயதை அடையும் போது அவர்களைத் தொழும்படி ஏவுங்கள்! பத்து வயதை அடைந்து விட்டால் அடித்தாவது தொழ வையுங்கள்! என நபி (ஸல்) கூறினார்கள்.
(அறிவிப்பவர் : அம்ர் பின் ஷுஐப் -ரலி, நூல் : அபுதாவூத்)

وَاللَّاتِي تَخَافُونَ نُشُوزَهُنَّ فَعِظُوهُنَّ وَاهْجُرُوهُنَّ فِي الْمَضَاجِعِ وَاضْرِبُوهُنَّ فَإِنْ أَطَعْنَكُمْ فَلَا تَبْغُوا عَلَيْهِنَّ سَبِيلًا إِنَّ اللَّهَ كَانَ عَلِيًّا كَبِيرًا [النساء/34]

பிணக்கு ஏற்படும் என்று (மனைவியர் விஷயத்தில்) நீங்கள் அஞ்சினால்

 1:அவர்களுக்கு அறிவுரை கூறுங்கள்! 2:படுக்கைகளில் அவர்களை விலக்குங்கள்! 3:(காயங்கள் ஏற்படாதவாரு)அவர்களை அடியுங்கள்! 

அவர்கள் உங்களுக்குக் கட்டுப்பட்டு விட்டால் அவர்களுக்கு எதிராக வேறு வழியைத் தேடாதீர்கள்! அல்லாஹ் உயர்ந்தவனாகவும், பெரியவனாகவும் இருக்கிறான்.

திருக்குர்ஆன் 4:34
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
உங்களில் ஒருவர் (எவரையாவது தக்க காரணத்துடன்) தாக்கினால் முகத்(தில் அடிப்ப)தைத் தவிர்க்கட்டும்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)

நூல் : புகாரி 2559

இன்றைய உளவியலாளர்கள் மாணவர்களை அடிக்கவே கூடாது, கண்டிக்கவே கூடாது. அவர்கள் போக்கில் அவர்களை விட்டுவிட வேண்டும்  என்று சொல்கின்றார்கள்  . உண்மையில் இக்கூற்று நடைமுறை சாத்தியமற்ற கூற்றாகும். மாணவர்கள் வரம்பு மீறி ஒழுக்கக் கேடான காரியங்களில் ஈடுபடும் போது பெற்றோரின் ஆலோசனையுடன் காயங்கள் ஏற்படாத முறையில் அவர்களை திருத்த வேண்டும் எனும் நோக்கில் அடிப்பது தவறில்லை என்பதை மேலுள்ள குர்ஆன் வசனமும் ஹதீஸும் சொல்கின்றது. இதற்காக எடுத்ததற்கெல்லாம் அடிப்பது முறையில்லை அது அரக்கக் குணமாகும். சில ஆசிரியர்கள் மாணவர்கள் தப்புப்பன்னினால் கண்ணத்தில் அரைவதை வழக்கமாக் கொண்டுள்ளனர் இது தடுக்கப்பட்ட காரியமாகும்.

10) அறியாமையின் விபரீத விளைவுகளை மாணவர்களுக்கு கற்றுக் கொடுத்தல்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

அல்லாஹ், மக்களி(ன் மனங்களி)லிருந்து கல்வியை ஒரேயடியாகப் பறித்துக்கொள்ள மாட்டான். மாறாக,கல்விமான்களைக் கைப்பற்றிக் கொள்வதன் மூலம் கல்வியைக் கைப்பற்றுகிறான். இறுதியில் ஒரு கல்வியாளரைக்கூட அவன் விட்டுவைக்காதபோது, மக்கள் அறிவீனர்களையே தலைவர்களாக ஆக்கிக்கொள்வார்கள். அவர்களிடம் கேள்வி கேட்கப்படும். அறிவில்லாமலேயே அவர்கள் தீர்ப்பு வழங்குவார்கள். (இதன் மூலம்) தாமும் வழிதவறி, பிறரையும் வழிதவறச் செய்வார்கள்.
இதை அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

ஸஹீஹ் முஸ்லிம் : 5191. 

'எனக்குப் பின்னர் வேறு எவரும் உங்களுக்கு அறிவிக்க முடியாத நபிமொழி ஒன்றை (இப்போது) நான் உங்களுக்கு அறிவிக்கப் போகிறேன். 'கல்வி குறைந்து போய் விடுவதும் அறியாமை வெளிப்படுவதும் வெளிப்படையாய் விபச்சாரம் நடப்பதும் ஐம்பது பெண்களுக்கு அவர்களை நிர்வகிக்கும் ஒரே ஆண் என்ற நிலமை வரும் அளவுக்குப் பெண்கள் மிகுதியாவதும் ஆண்கள் குறைந்து விடுவதும் மறுமை நாளின் சில அடையாளங்களாகும்' என்று இறைத்தூதர் (ஸல்) கூறக் கேட்டிருக்கிறேன். என அனஸ்(ரலி) அறிவித்தார். 
ஸஹீஹ் புகாரி : 81. 

மாணவர்கள் கல்வி கற்பதில் ஆர்வம் கொள்ளும் விதமாக அவர்களுக்கு அறியாமையின் பின் விளைவுகளைப் பற்றி ஞாபகமூட்டுவது அவசியமாகும்.

11) கேள்வி கேட்கும் மாணவர்களுக்கு செவிதாழ்த்தி பதில் கூறுதல்.

அபூசயீத் அல்குத்ரீ  (ரலி) அவர்கள் கூறியதாவது:

(ஒரு நாள்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், சொற்பொழிவு மேடைமீது அமர்ந்தார்கள். அவர்களைச் சுற்றி நாங்களும் அமர்ந்தோம். அப்போது அவர்கள் "எனக்குப் பின், உங்களிடையே இவ்வுலகின் கவர்ச்சியும், அதன் அலங்காரங்களும் தாராளமாகத் திறந்து விடப்படுவதானது, உங்கள் விஷயத்தில் நான் அஞ்சுகின்றவற்றில் ஒன்றாகும்" என்று கூறினார்கள். அப்போது ஒரு மனிதர், "அல்லாஹ்வின் தூதரே! (செல்வம் எனும்) நன்மை, தீமையை உருவாக்குமா?" என்று கேட்டார். அதற்கு (பதிலளிக்காமல்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (சிறிது நேரம்) மௌனமாக இருந்தார்கள். 

அப்போது அந்த மனிதரிடம் "உமக்கு என்ன ஆயிற்று? நீர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் பேச்சுக் கொடுக்கிறீர். ஆனால், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களோ உம்மிடம் பேசாமலிருக்கிறார்களே!" என்று கேட்கப்பட்டது.

 (அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் மௌனம் தொடருவதைக் கண்ட)நாங்கள் அவர்களுக்கு இறைஅறிவிப்பு (வஹீ) அருளப்படுகிறது என்று கருதினோம். பிறகு அவர்கள் இயல்பு நிலைக்கு வந்து தம்மீதிருந்த வியர்வைத் துளிகளைத் துடைத்துவிட்டு, "இந்தக் கேள்வி கேட்டவர் (எங்கே?)" என்று (அவரைப் பாராட்டுவதைப் போல) கேட்டார்கள். 

பின்னர், ""நன்மையால் நன்மையே விளையும். வசந்த காலத்தில் விளைகின்ற (பயிர்கள்) ஒவ்வொன்றும் (கால்நடைகளை), வயிறு புடைக்கத் தின்ன வைத்துக் கொன்று விடுகின்றன; அல்லது கொல்லும் அளவிற்குச் சென்று விடுகின்றன. பச்சைப் புற்களைத் தின்னும் கால்நடையைத் தவிர. (அது மடிவதில்லை. ஏனெனில்,) அது (பச்சைப் புற்களைத்) தின்று வயிறு நிரம்பிவிடும்போது, சூரியனை நேராக நோக்கி(ப் படுத்துக்கொண்டு அசை போடுகின்றது); சாணமிட்டு சிறுநீரும் கழிக்கின்றது. பின்னர் (வயிறு காலியானவுடன் மீண்டும் சென்று) மேய்கிறது.

இந்த (உலகின்) செல்வம் இனிமையும், பசுமையும் உடையதாகும். ஒரு முஸ்லிம் தமது செல்வத்திலிருந்து ஏழைகளுக்கும் அநாதைகளுக்கும் வழிப்போக்கர்களுக்கும் கொடுத்துக் கொண்டிருக்கும்வரை அ(வரது செல்வமான)து அவருக்குச் சிறந்த தோழனாகும்.-(இவ்வாறே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்) அல்லது அவர்கள் கூறியதைப் போன்று.- யார் முறையற்ற வழிகளில் செல்வத்தை எடுத்துக்கொள்கின்றாரோ அவர் உண்டும் வயிறு நிரம்பாதவரைப் போன்றவர் ஆவார். மேலும், மறுமை நாளில் அந்தச் செல்வம் அவருக்கு எதிரான சாட்சியாக அமையும்" என்று கூறினார்கள்.
ஸஹீஹ் முஸ்லிம் : 1901. 

சில ஆசிரியர்கள் கற்றுக் கொடுப்பார்கள் ஆனால்  மாணவர்கள் எதிர் கேள்வி கேட்பதை விரும்பமாட்டார்கள். நபி (ஸல்) அவர்கள் கேள்வி கேட்டவரைத் தேடியறிந்து பதில் கூறும் வழக்கமுடையவராக இருந்துள்ளார்கள். 

12) வினவப்பட்டதை விட விரிவாக பதில் கூறுதல்.

'ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம் இஹ்ராம் கட்டியவர் அணிய வேண்டிய ஆடைகளைப் பற்றிக் கேட்டதற்கு, 'சட்டை, தலைப்பாகை, கால்சட்டைகள், முக்காடு (அல்லது தொப்பி), பச்சைச் சாயம் தோய்த்த ஆடை, அல்லது சிவப்புக் குங்குமச் சாயம் தோய்த்த ஆடை ஆகியவற்றை (இஹ்ராம் கட்டியவர்) அணியக் கூடாது. பாதணிகள் கிடைக்கவில்லையானால் (கணுக்கால்வரை) உயரமான காலுறைகளை அவர் அணிந்து கொள்ளலாம். (ஆனால்) கணுக்காலுக்குக் கீழே உயரம் குறையும் வரை அவ்விரண்டையும் வெட்டிவிடட்டும்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என இப்னு உமர்(ரலி) அறிவித்தார். 
ஸஹீஹ் புகாரி : 134. 

மாணவர்களின் கேள்விக்காண பதிலைக் கூறும் போது அக் கேள்விக்குரிய நிறைவான பதிலை வழங்குவது கற்றறிந்த ஆசிறியரின் பண்பாகும்.

13) மாணவர்களின் உரிமைகளைப் பேணுதல்.

சஹ்ல் பின் சஅத்(ரலி)  அவர்கள் கூறியதாவது:    
                   
 நபி (ஸல்) அவர்களிடம் ஒரு பானம் (பால்) கொண்டு வரப்பட்டது. (அதை) அவர்கள் குடித்தார்கள். *அப்போது அவர்களுடைய வலது பக்கத்தில் ஒரு சிறுவரும் இடது பக்கத்தில் முதியவர்களும் இருந்தனர்.* நபி (ஸல்) அவர்கள் அந்த சிறுவரிடம், நீ அனுமதியளித்தால் நான் இவர்களுக்கு (என் பக்கத்திலுள்ள முதியவர்களுக்கு) கொடுத்து விடுகின்றேன் என்று கூறினார்கள். 

அந்தச் சிறுவர், அல்லாஹ்வின் தூதரே! தங்களிடமிருந்து (எனக்குக் கிடைக்கக் கூடிய) என் பங்கை வேரொவருக்காகவும் விட்டுக் கொடுக்க நான் தயாராக இல்லை என்று கூறினார். நபி (ஸல்) அவர்கள் அச்சிறுவரின் கையில் அந்த (மீதி)ப் பானத்தை வைத்தார்கள்.

ஸஹீஹ் புகாரி 2602 

எல்லா நிலைகளிலும் மாணவர்களின் உரிமைகள் பாதிக்கப்படாது நடப்பது ஆசிரியர்களிடம் இருக்க வேண்டிய முக்கியப் பண்பாகும்.

14) மாணவர்களுக்கு ஒழுக்கம் மற்றும் நற்பண்புகளைக்  கற்றுக் கொடுத்தல்.

மஸ்ரூக் பின் அல்அஜ்தஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

முஆவியா (ரலி) அவர்கள் (இராக்கில் உள்ள) கூஃபாவுக்கு வந்தபோது நாங்கள் அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்களிடம் சென்றோம். அப்போது அவர்கள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை நினைவுகூர்ந்து, "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இயற்கையாகவும் அருவருப்பாகப் பேசுபவராக இருக்கவில்லை; செயற்கையாகவும் அருவருப்பாகப் பேசுபவராக இருக்கவில்லை" என்று கூறிவிட்டு, "நற்குணங்கள் வாய்ந்தவரே உங்களில் மிகவும் சிறந்தவர்" என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சொன்னார்கள் என்றும் தெரிவித்தார்கள்.

ஸஹீஹ் முஸ்லிம் : 4640. 

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: 
ஒரு மனிதரிடம் அடிமைப் பெண் ஒருத்தி இருந்து, அவளுக்கு அவர் ஒழுக்கம் கற்பித்து, கல்வியையும் அழகிய முறையில் கற்றுக் கொடுத்து, அவளை விடுதலையும் செய்து, திருமணமும் முடித்து வைத்தால் அவருக்கு இரண்டு நன்மைகள் கிடைக்கும். மேலும், ஓர் அடிமை அல்லாஹ்வின் உரிமையையும் தன் எஜமானர்களின் உரிமையையும் (ஒழுங்காக) நிறைவேற்றுவானாயின் அவனுக்கும் இரண்டு நன்மைகள் கிடைக்கும். 
என அபூ மூஸா அஷ்அரீ(ரலி) அறிவித்தார். 
ஸஹீஹ் புகாரி : 2547. 

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒருவருக்கொருவர் கோபம் கொள்ளாதீர்கள்; பொறாமை கொள்ளாதீர்கள்;  பிணங்கிக் கொள்ளாதீர்கள். அல்லாஹ்வின் அடியார்களே! (அன்பு காட்டுவதில்) சகோதரர்களாய் இருங்கள். ஒரு முஸ்லிம் தம் சகோதரருடன் (மனஸ்தாபம் கொண்டு) மூன்று நாட்களுக்கு மேல் பேசாமல் இருப்பது அனுமதிக்கப்பட்ட (ஹலாலான) செயலன்று.
இதை அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

ஸஹீஹ் முஸ்லிம் : 5001. 

அப்துல்லாஹ் பின் ஸம்ஆ (ரலி) அவர்கள் கூறியதாவது:

(நீண்ட ஹதீஸின் ஒரு பகுதி)
பிறகு (உடலிலிருந்து பிரியும்) நாற்ற வாயு காரணமாக மக்கள் சிரிப்பது குறித்து, "(அப்படிச் சிரிக்க வேண்டாமென தடை செய்தார்கள்) உங்களில் ஒருவர் தாம் செய்யும் ஒரு செயலுக்காக (அதே செயலைப் பிறர் செய்யும்போது) ஏன் சிரிக்கிறார்?" என்று கேட்டு உபதேசித்தார்கள்.

ஸஹீஹ் முஸ்லிம் : 5484. 

ஆசிரியர்கள் மூலம் தான் இன்னும் பல ஆசிரியர்களையும் ,எல்லாத் துறைகளிலும் பட்டதாரிகளையும் உருவாக்க முடியும். எனவே ஒழுக்கமில்லாத கல்வியைப் புகட்டினால் எந்தப் பட்டதாரியையும் முழுமையான அறிவாளியாகக் காணமுடியாமல் போய்விடும். ஒழுக்கத்தோடு சேர்ந்த கல்வியைக் கொடுக்காமல் ஆசிரியர்களாகிய நாம் எப்படிப்பட்ட கல்விமான்களை உருவாக்கினாலும் அவர்கள் சமூகத்துக்கு பயனற்றவர்களாகவே இருப்பார்கள்.  அத்தகையோர் தங்களின் பட்டம் பதவிகளை கேடயாமாகப் பயன்படுத்தி சமூக சீர்கேடுகளையே மேற்கொள்வார்கள். மனிதநேயம் அவர்களிடம் இருக்காது. பேராசிரியர்  நபிகள் நாயகம்  (ஸல்) அவர்கள் தனது அழகிய குணத்தைக் கொண்டு சிறந்த மனிதர்களை உருவாக்கினார்கள். 

15) மாணவர்களிடமுள்ள திறமையைப் பாராட்டுதல்.

அபூதர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், "ஒரு மனிதர் நற்செயல் புரிகிறார். அதற்காக அவரை மக்கள் பாராட்டிப் பேசுகின்றனர். இதைப் பற்றித் தாங்கள் என்ன கருதுகிறீர்கள்?" என்று கேட்கப்பட்டது.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அது இறைநம்பிக்கையாளருக்கு முன் கூட்டியே வரும் நற்செய்தியாகும்" என்றார்கள்.

ஸஹீஹ் முஸ்லிம் : 5144. 

அபூமூசா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னிடம், (நான் இனிய குரலில் குர்ஆன் ஓதுவதைப் பாராட்டி), "நீங்கள் நேற்றிரவில் குர்ஆன் ஓதிக்கொண்டிருந்ததைச் செவியுற்றேன். அப்போது நீங்கள் என்னைப் பார்த்திருந்தால் (உங்களுக்கு மகிழ்ச்சியாய் இருந்திருக்கும்). (இறைத்தூதர்) தாவூத் (அலை) அவர்களுக்கு வழங்கப்பட்டிருந்த சங்கீதம் (போன்ற இனிய குரல்) ஒன்று உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது" என்று கூறினார்கள்.
ஸஹீஹ் முஸ்லிம் : 1454. 

சலமா பின் அல்அக்வஉ (ரலி) அவர்கள் கூறியதாவது:

(நீண்ட ஹதீஸின் சுருக்கம்)
காலையில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "இன்றைய தினத்தில் நம் குதிரைப் படையில் மிகச் சிறந்த வீரர் அபூகத்தாதா ஆவார். நம் காலாட் படையில் மிகச் சிறந்த வீரர் சலமா ஆவார்" என்று (பாராட்டிக்) கூறினார்கள்.
பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், குதிரைப்படை வீரருக்கான ஒரு (பரிசுப்) பங்கும், காலாட்படை வீரருக்கான ஒரு பங்குமாக இரு பங்குகள் சேர்த்து (போர்ச் செல்வமாக) எனக்கு வழங்கினார்கள்....

ஸஹீஹ் முஸ்லிம் : 3695. 

மாணவர்களிடமுள்ள திறமைகளைப் பாராட்டுவது. மேலும் அவர்களை ஊக்குவிக்கும் விதத்தில் பரிசுகளை வழங்குவது போன்ற பண்புகள் ஆசிரியர்களிடம் இருந்தால் திறமையான மாணவர்கள் உருவாகுவது மட்டுமல்லாமல் ஆசிரியர், மாணவர் என்ற உறவில் நல்லிணக்கம் ஏற்படவும் அது காரணமாக  இருக்கும். திறமைகள் பாராட்டப்படாமல் இருக்கும் பட்சத்தில் மாணவர்கள் சோர்வடைந்து பின் தள்ளப்பட்டு விடுவார்கள்.

16)ஆசிரியர்கள் மாணவர்களோடு அன்பாக நடக்க வேண்டும். 

فَبِمَا رَحْمَةٍ مِّنَ اللّٰهِ لِنْتَ لَهُمْ‌ وَلَوْ كُنْتَ فَظًّا غَلِيْظَ الْقَلْبِ لَانْفَضُّوْا مِنْ حَوْلِكَ‌ فَاعْفُ عَنْهُمْ وَاسْتَغْفِرْ لَهُمْ وَشَاوِرْهُمْ فِى الْاَمْرِ‌ فَاِذَا عَزَمْتَ فَتَوَكَّلْ عَلَى اللّٰهِ‌ اِنَّ اللّٰهَ يُحِبُّ الْمُتَوَكِّلِيْنَ‏

(நபியே!) அல்லாஹ்வுடைய அருளின் காரணமாகவே நீங்கள் அவர்கள் மீது மென்மையானவராக நடந்து கொண்டீர்கள். நீங்கள் கடுகடுப்பானவராகவும், கடின உள்ளம் கொண்டவராகவும் இருந்திருப்பீர்களானால் உங்களிடமிருந்து அவர்கள் வெருண்டோடி இருப்பார்கள். ஆகவே, அவர்(களின் குற்றங்)களை நீங்கள் மன்னித்து (இறைவனும்) அவர்களை மன்னிக்கப் பிரார்த்திப்பீராக! அன்றி, (யுத்தம், சமாதானம் ஆகிய) மற்ற காரியங்களிலும் அவர்களுடன் கலந்து ஆலோசித்தே வாருங்கள்! (யாதொரு விஷயத்தை செய்ய) நீங்கள் முடிவு செய்தால் அல்லாஹ்விடமே பொறுப்பை ஒப்படையுங்கள். ஏனென்றால், நிச்சயமாக அல்லாஹ் (தன்னிடம்) பொறுப்பு சாட்டுபவர்களை நேசிக்கின்றான்.
(அல்குர்ஆன் : 3:159)

இன்று அதிகமான இடங்களில் ஆசிரியர் மாணவர் உறவு என்பது கீரியும், பாம்பையும் போன்றுள்ளது.  ஆசிரியர்களுக்கு மாணவர்கள் சிலரைப்  பிடிப்பதில்லை. மாணவர்களுக்கு ஆசிரியர்கள் சிலரைப் பிடிப்பதில்லை. இந்த நிலமை சமூகத்திலிருந்து அழிக்கப்பட வேண்டிய ஒன்றாகும்.  சிலவேலை மாணவர்களுக்கு ஆசிரியர்களின் பண்புகள், நடத்தைகள், பேச்சுக்கள் போன்றவையே அவர்களை பிடிக்காமல் வெறுப்பதற்கான காரணங்களாகவும் இருக்கலாம் என்பதை உணர்ந்து தம் குறைகளை மாற்றிக் கொள்ள முயற்சி செய்ய வேண்டும். ஆசிரியர்கள் மாணவர்களுடன் இறக்க குணமுடையவர்களாக நற்பண்புடன் நடந்து கொள்ள முயற்சிக்க வேண்டும். மாணவர்கள் தவறு செய்தால் மன்னித்து அறிவுரை கூற வேண்டும். சில வேலை நாம் நடத்தும் பாடம் மாணவர்களுக்கு தெளிவில்லாமல் இருக்கலாம் எனவே  பாட விவகாரங்களில் அவர்களுடன் ஆலோசனை செய்து கற்பித்தல் முறையில் அவர்களுக்கு இலகுவாக  புரிந்து கொள்ள முடியுமான முறையை அறிந்து அவ்வழி முறையினூடாக பாடங்களைக் கற்றுக் கொடுக்க முயற்சிக்க வேண்டும். 

17) ஆசிரியர் மாணவர்களுக்காகப் பிரார்த்தனை செய்தல்.

'இறைத்தூதர் (ஸல்) அவர்கள் என்னை அணைத்து 'இறைவா! இவருக்கு வேத ஞானத்தைக் கற்றுக் கொடு' என்று கூறினார்கள்' என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.
ஸஹீஹ் புகாரி : 75.

ஒவ்வொரு வகுப்பிலும் திறமையான மாணவர்களும் இருப்பார்கள் திறமையற்ற மாணவர்களும் இருப்பார்கள்.  எனவே ஆசிரியர்கள் ஒவ்வொரு மாணவர்களையும் தனது பிள்ளைகளாக நினைத்து அவர்களுக்காக பிரார்த்தனை புரிய வேண்டும். இது சிறந்த ஆசிரியர்களிடம் இருக்க வேண்டிய பண்பாகும். பேராசிரியர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தனது மாணவர்களான நபித்தோழர்களுக்கு பல கட்டங்களிலும் பிரார்த்தனை செய்துள்ளார்கள்.

18) ஆசிரியர்களும் மாணவர்களும் கட்டாயம்  கேட்க வேண்டிய பிரார்த்தனை.

அபூஉஸ்மான் அந்நஹ்தீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

ஸைத் பின் அர்கம் (ரலி) அவர்கள், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறிவந்ததைப் போன்றுதான் நான் உங்களிடம் அறிவிக்கிறேன்" என்று கூறிவிட்டுப் பின்வருமாறு சொன்னார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பின்வருமாறு பிரார்த்திப்பது வழக்கம்:

اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ العَجزِ وَالكَسَلِ، وَالجُبنِ وَالبُخلِ، وَالهَرَمِ وَعَذَابِ القَبرِ، اللَّهُمَّ آتِ نَفسِي تَقوَاهَا، وَزَكِّهَا أَنتَ خَيرُ مَن زَكَّاهَا، أَنتَ وَلِيُّهَا وَمَولاهَا، اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِن عِلمٍ لا يَنفَعُ، وَمِن قَلبٍ لا يَخشَعُ، وَمِن نَفسٍ لا تَشبَعُ، وَمِن دَعوَةٍ لا يُستَجَابُ لَهَا

பொருள்: 
இறைவா! உன்னிடம் நான் இயலாமையிலிருந்தும் சோம்பலிலிருந்தும் கோழைத்தனத்திலிருந்தும் கருமித்தனத்திலிருந்தும் தள்ளாமையிலிருந்தும் மண்ணறையின் வேதனையிலிருந்தும் பாதுகாப்புக் கோருகிறேன். இறைவா! எனது உள்ளத்தில் உன்னைப் பற்றிய அச்சத்தை ஏற்படுத்தி, அதைத் தூய்மைப்படுத்துவாயாக! அதைத் தூய்மைப்படுத்துவோரில் நீயே சிறந்தவன். நீயே அதன் உரிமையாளன்; அதன் காவலன். இறைவா! உன்னிடம் நான் பயனளிக்காத கல்வியிலிருந்தும் உன்னை அஞ்சாத உள்ளத்திலிருந்தும் திருப்தியடையாத மனத்திலிருந்தும் ஏற்கப்படாத பிரார்த்தனையிலிருந்தும் பாதுகாப்புக் கோருகிறேன்.

ஸஹீஹ் முஸ்லிம் : 5266.

அன்பார்ந்த சகோதர சகோதரிகளே..! அல்லாஹ்வின் தூதரிடத்தில் அனைவருக்கும் பல முன்மாதிரிகள் இருக்கின்றது.  இந்த ஆக்கத்தில் ஆசிரியர்களிடம் இருக்க வேண்டிய சில பண்புகளை நபிகளாரின் வாழ்கையிலிரிந்து எடுத்துக் கூறியுள்ளேன்.  இங்கே கூறப்படாதவற்றை நீங்கள் பின்னூட்டத்தில் பதிவு செய்யுங்கள். 

நட்புடன்:
அல் ஹாபில் இன்திகாப் உமரீ
அட்டுலுகம 
இலங்கை

Previous Post Next Post