முறியடிக்கப்பட்ட யூதர்களின் சதி

 அஷ்ஷெய்க் எஸ்.எச்.எம். இஸ்மாயில் ஸலபி

(ஆசிரியர்: உண்மை உதயம்)

‘(ஈஸாவை நிராகரித்தோர் அவரைக் கொலை செய்ய) சூழ்ச்சி செய்தனர். (அதற் கெதிராக) அல்லாஹ்வும் சூழ்ச்சி செய்தான். அல்லாஹ் சூழ்ச்சியாளர்களில் மிகச் சிறந்த வனாவான்.’ (அல்குர்ஆன்-3:54)

ஈஸா(அ) அவர்களது பிரச்சாரத்தை யூதர்கள் மறுத்தனர். சில சீடர்கள் அவர்களை ஏற்றுக் கொண்டனர். இதன் காரணமாக இயேசுவை கொலை செய்ய யூதர்கள் சதி நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். பைபிள் சொல்லும் தகவல் பிரகாரம் அந்தக் கால அரசனுக்கு எதிராக இயேசு செயற்படுவதாக இராஜ துரோகம் செய்வதாகச் சோடித்து இயேசுவைப் பழிதீர்க்க முற்பட்டனர். இயேசு ஒவ்வொன்றிலிருந்தும் நுட்பமாகத் தப்பி வந்தார்.

ஈற்றில் இயேசுவைக் கொலை செய்வதற்காகப் பிடித்துச் செல்வதற்கு யூதர்கள் வந்தனர். யூதர்களின் இந்த சதியை அல்லாஹ் முறியடித்தான். அல்லாஹ்வும் யூதர்களுக்கு எதிராக சதி செய்ததாகவும் அவன் சதி செய்பவர்களில் சிறந்தவன் என்றும் இந்த வசனம் கூறுகின்றது. 

அல்லாஹ் செய்த சதி என்ன என்பதை மற்றொரு வசனம் இப்படிக் கூறுகின்றது.

‘மேலும் அவர்கள் நிராகரித்ததினாலும் மர்யமின் மீது மாபெரும் அவதூற்றை அவர்கள் கூறியதினாலும் (அவர்கள் சபிக்கப் பட்டனர்.)’

‘மேலும் அல்லாஹ்வின் தூதராகிய மர்யமின் மகன் ஈஸா அல்மஸீஹை நாமே கொலை செய்தோம் என்று அவர்கள் கூறியதினாலும் (சபிக்கப்பட்டனர்.) அவர்கள் அவரைக் கொலை செய்யவும் இல்லை, அவரைச் சிலுவையில் அறையவும் இல்லை. மாறாக அவர்களுக்கு (அவரைப் போன்ற) ஒருவன் ஒப்பாக்கப்பட்டான். நிச்சயமாக அவர் விஷயத்தில் கருத்து வேறுபாடு கொண்டோர் அவர் பற்றி சந்தேகத்திலேயே இருக்கின்றனர். வெறும் யூகத்தைப் பின்பற்றுவதைத் தவிர அவரைப் பற்றி எவ்வித அறிவும் அவர்களுக்கு இல்லை. உண்மையாக அவர்கள் அவரைக் கொலை செய்யவில்லை.’ (அல்குர்ஆன்-4:156-157)

யூதர்களின் இறை நிராகரிப்பிலும் இயேசுவின் தாயார் மீது அவர்கள் சுமத்திய அவதூற்றின் காரணமாகவும், இயேசுவையும் கொன்றுவிட்டோம் என்று கூறுவதனாலும் அவர்க்ள சபிக்கப்பட்டார்கள் என்று குர்ஆன் கூறுகின்றது.

அவர்கள் அவரை சிலுவையில் அறையவும் இல்லை, கொல்லவும் இல்லை. இயேசு போல வேறு ஒருவர் ஒப்பாக்கப்பட்டார் எனக் குர்ஆன் கூறுவதுடன் அவர்கள் அவரைக் கொல்லவே இல்லை. அவரை அல்லாஹ் தன்னளவில் (கொல்லப்படாத) நிலையில் உயிருடன் உயர்த்திக் கொண்டான்.

யூதர்கள் இயேசுவைக் கொல்வதற்கு சதி செய்தார்கள். அல்லாஹ்வும் சதி செய்தான். அவருக்கு ஒருவர் ஒப்பாக்கப்பட்டார். இது எப்படி நடந்தது?

இயேசுவைப் பிடிப்பதற்காகச் சென்றவர்களில் யூதா என்றொருவன் இருந்தான். இவன் இயேசுவின் சீடர்களில் ஒருவன். இவனே இயேசுவைக் காட்டிக் கொடுத்ததாக பைபிள் கூறுகின்றது.

அல் குர்ஆன் விளக்கவுரைகளில் இயேசுவைக் காட்டிக் கொடுக்க வந்த யூதாவின் முகத்தோற்றம் இயேசுவின் முகத்தோற்றம் போல் மாறிவிட்டதாகவும், இயேசுவைப் பிடிக்க வந்தவர்கள் இயேசுவைப் போல் உருமாற்றப் பட்டவனையே இயேசு எனப் பிடித்து கொலை செய்ததாகவும் விளக்கம் கூறுகின்றனர். அப்படி அவர்கள் செய்தாலும் இது இயேசுவா? இல்லையா? என்கின்ற ஐயம் அவர்களுக்கு இருந்துள்ளது. 

ஏனெனில், யூதாவின் முகம் இயேசுவின் முகம் போன்றும் உடல் அவனது உடல் போன்றும் இருந்துள்ளது. இதனால் இவன் இயேசு என்றால் யூதாஸ் எங்கே? இவன் யூதாஸ் என்றால் இயேசு எங்கே? என்ற ஐயம் அவர்களுக்குள் எழுந்துள்ளது. அவர்கள் விரித்த வலையில் அவர்களையே அல்லாஹ் வீழ்த்திவிட்டான் என்று விபரிக்கின்றனர்.

இயேசுவின் சீடர்களில் ஒருவரான பர்னபாஸ் அவர்களும் ஒரு இன்ஜீலை எழுதியுள்ளார். இப்போது கிறிஸ்தவர்கள் ஏற்றுள்ள மத்தேயு, லூக்கா, மாற்கு, யோவான் ஆகிய நான்கு சுவிசேசங்களும் இயேசுவின் சீடர்களால் எழுதப்பட்டவை அல்ல. அவற்றைக் கிறிஸ்தவ உலகு ஏற்றுள்ளது. ஆனால், இயேசுவின் சீடர்களில் முக்கியமான ஒருவரான பர்னபா எழுதிய சுவிசேசத்தைக் கிறிஸ்தவ உலகு மறுத்துவிட்டது. அதில் இயேசுவைப் பிடிக்க வந்தவர்களுக்கு இயேசுவைக் காட்டிக் கொடுக்க வந்த யூதாதான் இயேசு போன்று உரு மாற்றப்பட்டதாகப் பதிவு செய்யப் பட்டுள்ளது.

அடுத்து, சில அறிஞர்கள் இயேசு தனது சீடர்களிடம் தற்போது தனது இடத்தில் இருந்து உயிரைத் தியாகம் செய்பவர் சுவனத்தில் தன்னுடன் இருப்பார் என உத்தரவாதம் அளித்த போது அவரது உண்மைச் சீடர் ஒருவர் அத்தியாகத்திற்கு முன்வந்ததாகவும் அவர் இயேசு போல் உரு மாற்றம் செய்யப் பட்டதாகவும் அவரையே யூதர்கள் கொலை செய்ததாகவும் கூறுகின்றனர்.

எது எப்படி இருப்பினும் இயேசு போல் வேறு ஒருவர் உருவம் மாற்றப்பட்டதன் மூலம் யூதர்கள் சதி முறியடிக்கப்பட்டது. இயேசு உயிருடன் வானுக்கு உயர்த்தப்பட்டார்.

இயேசுவின் வபாத்:

‘ ‘ஈஸாவே! நிச்சயமாக நான் உம்மைக் கைப்பற்றுபவனாகவும், என்னளவில் உம்மை உயர்த்துபவனாகவும், நிராகரிப்பாளர்களை விட்டும் உம்மைத் தூய்மைப்படுத்துபவனாகவும் உம்மைப் பின்பற்றுவோரை, நிராகரித்தோரை விட மறுமை நாள் வரை உயர்வாக ஆக்குபவனாகவும் இருக்கின்றேன். பின்னர் உங்கள் மீளுதல் என்னிடமேயாகும். அப்போது நீங்கள் எதில் கருத்து முரண்பட்டுக் கொண்டிருந்தீர்களோ அதில் நான் உங்களுக்கு மத்தியில் தீர்ப்பளிப்பேன்’ என அல்லாஹ் கூறியதை (எண்ணிப் பாருங்கள்.)’ (அல்குர்ஆன்-3:55)

ஈஸா(அ) அவர்கள் உயிருடன் உயர்த்தப்பட்டார்கள். மீண்டும் உலக அழிவு நெருங்கும் போது இறங்கி வருவார்கள். அந்திக் கிறிஸ்து எனும் மஸீஹுத் தஜ்ஜாலைக் கொலை செய்வார்கள். நீதியான ஆட்சியை உலகுக்கு வழங்குவார்கள். இயற்கையாக மரணிப்பார்கள் என்பது இஸ்லாமிய நம்பிக்கையாகும். 

எனினும், இந்த வசனத்தில் ஈஸா(அ) அவர்களைப் பார்த்து يَا عِيسَىٰ إِنِّي مُتَوَفِّيكَ ‘யா ஈஸா! இன்னீ முதவப்பீக’ ‘ உம்மை நான் வபாத்தாக்குவேன்’ என்று கூறுவதாக உள்ளது. வபாத் எனும் வார்த்தை ஈஸா(அ) விடயத்தில் இரு இடங்களில் பயன்படுத்தப் பட்டுள்ளது. இது ஈஸா(அ) அவர்கள் மரணித்துவிட்டார்கள் என்பதைத்தான் உணர்த்துகின்றது என முஸ்லிம்களில் உள்ள சில வழிதவறியவர்கள் குர்ஆனுக்கு தப்பான அர்த்தம் கற்பிக்கின்றனர். எனவே, இது குறித்து தெளிவு அவசியமாகின்றது.

ஈஸா(அ) அவர்களைத் தாம் சிலுவையில் அறைந்து கொன்றுவிட்டதாக யூதர்கள் கூறுகின்றனர். அவர்கள் அவரைக் கொலை செய்யவில்லை. அவர் இயல்பாக மரணித்தார்கள் என்றால் அதை அல்லாஹு தஆலா அவர்களைக் கொல்லவில்லை, அவர் இயல்பாகவே மரணித்தார் என்று கூறியிருப்பான். ஆனால், அவரை சிலுவையில் அறையவும் இல்லை, கொல்லவும் இல்லை. அவர்களுக்கு ஒருவர் ஒப்பாக்கப்பட்டதால் உறுதியாக அவர்கள் அவரைக் கொல்லவே இல்லை. அவரை அல்லாஹ் தன்னளவில் உயர்த்திக் கொண்டான் என்று குர்ஆன் கூறுகின்றது. (பார்க்க: அல்குர்ஆன்- 4:157-158)

அவர் கொல்லப்படவில்லை. மாறாக, உயர்த்தப்பட்டார் என்று கூறப்படுவதன் மூலம் அவர் உயிருடன் உயர்த்தப்பட்டார் என்பது உறுதி செய்யப்படுகின்றது.

ஈஸா நபியின் மரணத்திற்கு முன்னர்:

அடுத்து அதைத் தொடர்ந்து வேதம் கொடுக்கப்பட்டவர்கள் ஈஸா நபியின் மரணத்திற்கு முன்னர் அவரை முறையாக விசுவாசிப்பார்கள் என்றும் கூறப்படுகின்றது.

‘வேதத்தையுடையோரில் எவரும் (அவர் மீண்டும் பூமிக்கு வந்து) அவர் மரணிப்பதற்கு முன்னரே அவரை நம்பிக்கை கொள்ளாமல் இருக்க மாட்டார். மறுமை நாளிலோ அவர் (வேதமுடைய) அவர்களுக்கு எதிராக சாட்சி சொல்பவராக இருப்பார்.’ (அல்குர்ஆன்-4:159)

ஈஸா நபியின் மரணத்திற்கு முன்னர் முறையாக விசுவாசிப்பார்கள் என்ற இந்த வசனத்தின் மூலம் இந்த வசனம் அருளப்பட முன்னர் ஈஸா நபி மரணிக்கவில்லை என்பது உறுதி செய்யப்படுகின்றது. 

யூத, கிறிஸ்தவர்கள் முறையாக அவரை விசுவாசிக்கும் வரை அவர் மரணிக்கமாட்டார் என்பதும் தெளிவாகின்றது.

எனவே, ஈஸா நபி இன்னும் மரணிக்கவில்லை. மறுமை நெருங்கும் போது அவர் பூமிக்கு இறங்குவார். அப்போது அவரைக் கடவுள் என்றும் கடவுளின் குமாரன் என்றும் கூறி வரும் கிறிஸ்தவர்களும் விபச்சாரத்தில் பிறந்தவர் என்று கூறும் யூதர்களும் அவரை முறையாக நம்புவார்கள். அதன் பின்னர் அவர் மரணிப்பார். 

மறுமையின் அடையாளம்:

ஈஸா நபி மறுமை நாளின் அடையாளமாவார்கள் எனக் குர்ஆன் குறிப்பிடுகின்றது. 

‘நிச்சயமாக (ஈஸாவாகிய) அவர் மறுமைக்கான அடையாளமாவார். அது குறித்து நீங்கள் சந்தேகம் கொள்ள வேண்டாம். நீங்கள் என்னையே பின்பற்றுங்கள். இதுவே நேரான வழியாகும்.’ (அல்குர்ஆன்-43:61)

மறுமையின் பெரிய பத்து அடையாளங்களில் ஈஸா நபி வானிலிருந்து பூமிக்கு இறங்குவதும் ஒன்றாகும் என ஹதீஸ்கள் கூறுகின்றன. எனவே, அவர் உயிருடன் உள்ளார், மீண்டும் பூமிக்கு வருவார் என்பதே சரியானதாகும்.

ஈஸாவுக்கு முன்னர் உள்ள தூதர்கள் மரணித்துவிட்டார்கள்:

‘மர்யமின் மகன் மஸீஹ் ஒரு தூதரேயன்றி வேறில்லை. அவருக்கு முன்னரும் பல தூதர்கள் சென்றுவிட்டனர். அவரின் தாயோ உண்மையாளர். அவ்விருவரும் உணவு உண்பவர்களாகவே இருந்தனர். அத்தாட்சி களைஅவர்களுக்கு நாம் எவ்வாறு தெளிவுபடுத்துகின்றோம் என்பதை (நபியே!) நீர் கவனிப்பீராக! பின்னர் இவர்கள் எவ்வாறு திசை திருப்பப்படுகின்றனர்? என்பதையும் கவனிப்பீராக!’ (அல்குர்ஆன்-5:75)

இந்த வசனத்தில் இயேசு கடவுள் இல்லை என்பது பற்றிப் பேசப்படுகின்றது. ஈஸா(அ) இறைத்தூதர்தான். அவருக்கு முன்னுள்ள இறைத்தூதர்கள் யாவரும் மரணித்துவிட்டனர். இவரும் அது போன்று மரணிக்கக்கூடியவர்தான். ஆனால், இன்னும் மரணிக்கவில்லை என்று இந்த வசனம் உணர்த்துகின்றது.

ஈஸாவோ அவரது தாயோ கடவுள் தன்மை கொண்டவர்கள் அல்லர் எனக் கூறுவதற்காக அவர்கள் கனவு காண்பவராக இருந்தார்கள் என அல்லாஹ் கூறுகின்றான். ஈஸா நபி மரணித்திருந்தால் அதையே அவரது இறைமைக்கு மறுப்பாகக் கூறியிருக்கலாம். இயேசு இறைத்தூதர். அவரே மரணித்து விட்டார் என்று கூறியிருக்கலாம். அவருக்கு முன்னர் வந்துள்ள தூதர்கள் மரணித்து விட்டார்கள் என்பதன் மூலம் அவர் இன்னும் மரணிக்கவில்லை என்பது உறுதி செய்யப் படுகின்றது.

இந்த ஆதாரங்களையும் அடிப்படை யையும் மையமாக வைத்துத்தான் ஈஸா நபியுடன் சம்பந்தப்பட்ட வபாத் என்ற பதத்தை அணுக வேண்டும். ‘தவப்(க)பா’ என்றால் முழுமையாகக் கைப்பற்றுதல், வழங்குதல் என்ற அர்த்தங்கள் உள்ளன. மரணத்தின் போது உயிர் கைப்பற்றப்படுவதால் மரணத்தைக் குறிக்கவும் இந்த வார்த்தை பயன்படுத்தப் படுகின்றது.

‘அல்லாஹ்விடம் நீங்கள் மீட்டப்படும் நாளை அஞ்சிக் கொள்ளுங்கள். பின்னர் ஒவ்வொரு ஆத்மாவுக்கும் அவை சம்பாதித்தவற்றிற்கு (கூலி) முழுமையாக வழங்கப்படும்;. அவர்கள் அநியாயம் செய்யப்பட மாட்டார்கள்.’ (அல்குர்ஆன்-2:281)

இங்கே ‘தவப்(க)பா’ என்ற பதம் கூலி வழங்கப்படும் என்ற அர்த்தத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இங்கே வபாத்திற்கு மரணம் என்றுஅர்த்தம் செய்ய முடியாது. (இதே அர்த்தத்தில் அல்குர்ஆன்-3:61, 3:185, 16:111) ஆகிய வசனங்களில் இந்தப் பதம் பயன்படுத்தப் பட்டுள்ளது. கைப்பற்றுதல் என்ற அர்த்தத்திலும் இப்பதம் பயன்படுத்தப்படும். உதாரணமாக,

‘உங்கள் பெண்களில் எவரேனும் மானக் கேடான செயலைச் செய்துவிட்டால் அவர்களின் மீது (அதை நிரூபிக்க) உங்களில் நான்கு சாட்சிகளை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். அவர்கள் சாட்சி கூறினால் அப்பெண்கள் மரணிக்கும் வரை, அல்லது அல்லாஹ் அவர்களுக்கு ஒரு வழியை ஏற்படுத்தும் வரை அவர்களை வீடுகளில் தடுத்து வையுங்கள்.’ (அல்குர்ஆன்-4:15)

حَتَّىٰ يَتَوَفَّاهُنَّ الْمَوْتُ ‘ஹத்தா யதவப்(க)பாஹுன்னல் மவ்த்’ என்பதற்கு மரணம் மரணிக்கச் செய்யும் வரை என்பது அர்த்தம் அல்ல. மரணம் அவர்களைக் கைப்பற்றும் வரை என்பதே அர்த்தமாகும்.

‘உயிர்களை, அவை மரணிக்கும் வேளையிலும், மரணிக்காதவற்றை அவற்றின் தூக்கத்திலும் அல்லாஹ்வே கைப்பற்று கின்றான். பின்னர் எதன்மீது மரணத்தை அவன் விதித்து விட்டானோ அதை அவன் தடுத்து வைத்துக் கொள்கிறான். மற்றையதைக் குறிப்பிட்ட தவணை வரை அனுப்பிவிடுகிறான். நிச்சயமாக இதில் சிந்திக்கும் சமூகத்தாருக்குப் பல அத்தாட்சிகள் இருக்கின்றன.’ (அல்குர்ஆன்-39:42)

இந்த வசனத்தில் يَتَوَفَّى ‘யதவப்(க)பா’ என்பதற்கு மரணிக்கச் செய்கின்றான் என்பது அர்த்தமல்ல. கைப்பற்றுகின்றான் என்பதே அர்த்தமாகும்.

அடுத்து, ‘தவப்பா’ என்பது உறங்கச் செய்வதற்கும் குர்ஆனில் பயன்படுத்தப் பட்டுள்ளது. 

எனவே, ஈஸா(அ) குறித்து பயன்படுத்தப்படும் வபாத் எனும் வார்த்தை மரணம் என்று அர்த்தம் செய்ய முடியாது. அவர் இன்னும் மரணிக்கவில்லை. எனவே, கைப்பற்றுதல் என்ற அர்த்தமே செய்ய வேண்டும்.

இந்த வசனத்தில் ஈஸாவே உம்மை நான் கைப்பற்றுவேன். என்னளவில் உயர்த்திக் கொள்வேன். நிராகரிப்பாளர்களிடமிருந்து உன்னைப் பரிசுத்தப்படுத்துவேன் என்று கூறப்படுகின்றது. உன்னைக் கைப்பற்றுவேன் என்பதற்கு மரணிக்கச் செய்து உயர்த்துவேன் என்று அர்த்தம் செய்தால் இந்த வசனத்திற்கு அர்த்தமே அற்றுவிடும். மரணத்தின் பின் உயர்த்தப்படுவதில் இந்த இடத்தில் எந்தப் பயனும் இல்லை.

அடுத்து, ஈஸா நபியுடன் சம்பந்தப்பட்டு வபாத் எனும் பதம் பின்வரும் வசனத்தில் பயன்படுத்தப்படுகின்றது.

‘எனது இரட்சகனும் உங்கள் இரட்சகனுமாகிய அல்லாஹ்வையே நீங்கள் வணங்குங்கள், என்று (கூறும்படி) நீ என்னை ஏவியதைத் தவிர வேறு எதனையும் நான் அவர்களுக்குக் கூறவில்லை. நான் அவர்களுடன் இருந்த போது அவர்களை அவதானித்துக் கொண்டிருந்தேன். நீ என்னைக் கைப்பற்றியதும், நீயே அவர்களைக் கண்காணிப்பவனாக இருந்தாய். நீதான் யாவற்றையும் கண்காணிப்பவனாக இருக்கின்றாய்.’ (அல்குர்ஆன்-5:117)

நான் அவர்களிடம் இருக்கும் போது நான் அவர்களைக் கண்காணித்து வந்தேன். நீ என்னைக் கைப்பற்றிய பின்னர் நீயே அவர்களைக் கண்காணிப்பவனாக இருந்தாய் என்கின்றார்கள். இந்த இடத்தில் تَوَفَّيْتَنِي ‘தவப்(க)பய்த்தனீ’ என்பதற்கு ‘நீ என்னைக் கைப்பற்றிய போது’ என்று அர்த்தம் செய்யாமல் ‘நீ என்னை மரணிக்கச் செய்த போது’ என்று அர்த்தம் செய்வதாக இருந்தால் இந்த வசனம் பின்வருமாறு வந்திருக்க வேண்டும்.

நான் உயிருடன் இருந்த போது அவர்களைக் கண்காணித்து வந்தேன். நீ என்னை மரணிக்கச் செய்த போது நீயே அவர்களைக் கண்காணிப்பவனாவாய் என்று வந்திருக்க வேண்டும்.

நான் உயிருடன் இருக்கும் போது என்று கூறாமல் நான் அவர்களுடன் இருக்கும் போது அவர்களைக் கண்காணித்தேன் என்று ஈஸா நபி கூறுவதில் இருந்து வபாத் என்பது மரணத்தைக் குறிக்கவில்லை. கைப்பற்றுதலைத்தான் குறிக்கின்றது என்பது உறுதியாகின்றது. 

எனவே, ஈஸா நபி இன்னும் மரணிக்கவில்லை. ஆனால், அவர்களுக்கும் மரணம் உண்டு. மீண்டும் அவர்கள் பூமியில் வந்து வாழ்ந்து இயல்பாக மரணத்தை அடைவார்கள் என்பதே குர்ஆனினதும் சுன்னாவினதும் சரியான தீர்வாகும்.

Previous Post Next Post