அல்லாஹ்வின் (றிஸ்க்) உணவை விரயம் செய்தால்...

அல்லாஹ் கூறுகிறான்...
உண்ணுங்கள், பருகுங்கள்.. வீண்விரயம் செய்யாதீர்கள்.. விரயம் செய்வோரை அல்லாஹ் நேசிப்பதில்லை. (அல்குர்ஆன்)

வீண்விரயம் செய்யாதே! நிச்சயமாக விரயம் செய்வோர் சாத்தானின் சகோதரர்களாவன். சைத்தானோ அல்லாஹ்வுக்கு மாறுசெய்தவனாவான்.

நபியவர்கள் ஒருநாள் தம் மனைவி ஆயிஷாவின் வீட்டுக்கு வந்தபோது வீட்டின் ஓர் மூலையில் ரொட்டித் துண்டொன்று எறியப்பட்டுக் கிடந்ததைப் கண்டு அதை எடுத்து  அழுக்குகளைத் தட்டி ஊதிவிட்டு அதனைச் சாப்பிட்டார்கள். பின் இந்த உணவானது இறைவனின் புறத்திலிருந்து அனுப்பப்பட்ட விருந்தாளியாகும். அதனை உரிய முறையில் கண்ணியப்படுத்தாவிடில் அது திருப்பி அழைத்துக் கொள்ளப்படும். அல்லாஹ்வின் கோபத்தால் றிஜ்கு பறிக்கப்பட்டால் அது மீண்டும் திருப்பிக் கொடுக்கப்படுவது அரிதிலும் அரிதான சிலருக்கு மாத்திரமே என நபியவர்கள் கூறினார்கள். 
(ஆதாரம் ஸஹீஹூல் ஜாமிஉ)

பனூ இஸ்ரவேலர்களின் காலத்தில் ஒரு பெண் மழை காரணமாக  வெளியே செல்ல முடியாததால் தன் குழந்தை கழித்த மலத்தை ரொட்டித் துண்டு ஒன்றினால் துடைத்து வீசியெறிந்தாள். இதனால் அல்லாஹ் அவ்வூருக்குப் பஞ்சத்தை இறங்கினான். இறுதியில் அப்பெண் தாங்கமுடியாத பசியினால் தான் முன்பு வீசியெறிந்த ரொட்டுயின் நினைவு வந்து அதைத் தோண்டுயெடுத்து அசுத்தம் நீக்கி உண்ணும் நிலையை ஏற்படுத்தினான்.  பின் அவள் தஃபாச் செய்ததை அடுத்து அல்லாஹ் மழையை இறங்கினான்.
(கிதாபஸ் ஸுஹ்த் - இப்னு குதாமா)

வீண்விரயம் என்பது உணவில் மாத்திரமின்றி தேவையற்ற ஆடை அணிகலன்கள், வீட்டு மனைகளுக்கு செய்யும் தேவையற்ற ஆடம்பர செலவினங்கள், விரயமான மின்சார, தண்ணீர், எரிபொருள் பாவனைகள், இப்படி அனைத்து துறைகளிலும் கவனிக்கப்படும்.

இன்று உலக சனத்தொகையில் மூன்றில் ஒருவர் இரவு உணவின்றி உறங்கச் செல்கின்றனர் என்பது உ.உ தி அமைப்பின் புள்ளிவிபரம். உலக சனத்தொகை 600 கோடியெனில் இருநூறு கோடிப் பேருக்கு சரியாக மூவேளை உணவு கிடைப்பதில்லை என்பதே இதன் அர்த்தம். 

விலைவாசி அதிகரிப்பால் நிறையப்பேர் தமது உணவுப்பழக்கத்தை மாற்றி எளிமையாக்கிவிட்டார்கள் என்பதும், பலர் கெளரவத்தை இழந்து பிச்சையெடுக்க ஆரம்பித்து விட்டார்களென்பதும் நமக்குத் தெரியாத விடயமல்ல.

நாம் திருமணம் மற்றும் வலீமா, விசேட விருந்துபசாரத்தின் போது குறைந்தது 5 சதவீதம் பின்வரும் சாராரையும் இணைத்துக் கொண்டு விருந்தளித்தால் அவர்களுக்கு நிச்சயம் இறைதிருப்தி கிட்டும் என்பதில் சந்தேகமில்லை.

சிறுவர் இல்லத்திலுள்ள தாய் தந்தைகளின் அரவணைப்பற்ற சிறார்கள்.

முதியோர் இல்லத்தில் வசிக்கும் வயோதிபர்கள்.

மாற்றுத் திறணாளிகளான புலக் குறைபாடுள்ள சிறுவர்கள். 

வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழும் வசதியற்ற குடும்பங்கள் ( இவர்களின் தரவுகள் பள்ளிவாசல்களில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன.)   

முழு நேர மத்ரஸாக்களில் மார்க்கக் கல்வி கற்கும் மாணவர்கள்.

கடைகளிலுள்ள கூலித்தொழிலாளர்கள், தினக்கூலிகள்.    

இன்னும் பலர்.


ஏழையின் சிரிப்பில் இறை திருப்தியை காண் என்று சொல்வது இதைத்தான்.

-ஜலீல் மதனி
Previous Post Next Post