-மௌலவி யூனுஸ் தப்ரீஸ், சத்தியக் குரல் ஆசிரியர்-
பிரார்த்தனை என்பது ஒரு வணக்கமாகும். பிரார்த்தனையின் மூலமாக மனிதன் இறைவனை நெருங்குகிறான். தனது தேவைகளை நேரடியாக முறைப்பாடு செய்து இறைவனோடு நேரடியாக பேசும் சந்தர்ப்பத்தை அல்லாஹ் மனிதனுக்கு ஏற்ப்படுத்தி கொடுத்துள்ளான். பொதுவாக எல்லா சந்தர்ப்பங்களிலும் இறைவனிடம் பிரார்த்தனை செய்யலாம். அதே நேரம் சில குறிப்பிட்ட இடங்கள், மற்றும் நேரங்களை நபியவர்கள் குறிப்பிட்டு இந்த நேரத்தில் உங்கள் ரப்பிடத்தில் கேளுங்கள் என்று நமக்கு வழிக் காட்டியுள்ளார்கள்.
நபியவர்கள் குறிப்பிட்ட பல நேரங்களில் முக்கியமான நேரம் தான் இரவின் கடைசி பகுதியாகும். அதைப்பற்றி தான் இந்த கட்டுரையின் மூலம் நான் உங்களுக்கு தெளிவுப்படுத்த உள்ளேன்.
இரவில் ஒரு நேரம்:
“நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இரவில் ஒரு (குறிப்பிட்ட) நேரம் உண்டு; சரியாக அந்த நேரத்தில் ஒரு முஸ்லிமான மனிதர் இம்மை மற்றும் மறுமை தொடர்பான எந்த நன்மையை வேண்டினாலும் அதை இறைவன் அவருக்கு வழங்காமல் இருப்பதில்லை. இவ்வாறு ஒவ்வோர் இரவிலும் நடக்கிறது.- இதை ஜாபிர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (முஸ்லிம் 1384)
இரவில் இந்த நேரம் தான் என்று நேரடியாக குறிப்பிட்டு சொல்லாமல் மூடலாக இந்த நேரத்தைப் பற்றி நபியவர்கள் எடுத்துக் காட்டுகிறார்கள். அடுத்த ஹதீஸை கவனியுங்கள்.
இறைவன் இறங்கி வரும் நேரம்:
“அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ், ஒவ்வோர் இரவிலும் இரவின் முதல் மூன்றிலொரு பகுதி முடியும்போது, கீழ் வானிற்கு இறங்கிவந்து, “நானே அரசன்;நானே அரசன்! என்னிடம் பிரார்த்திப்பவர் எவருமுண்டா? அவரது பிரார்த்தனையை நான் ஏற்கிறேன். என்னிடம் கேட்பவர் எவரும் உண்டா? அவருக்கு நான் கொடுக்கிறேன். என்னிடம் பாவமன்னிப்புக் கோருபவர் எவரும் உண்டா? அவரை நான் மன்னிக்கிறேன்”என்று கூறுகிறான். வைகறை (ஃபஜ்ர்) நேரம் புலரும்வரை இவ்வாறு கூறிக்கொண்டிருக்கிறான்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். ( புகாரி 7495, முஸ்லிம் 1387)
இறைவன் நேரடியாக இறங்கி வந்து, அடியார்களுடன் பேசும் நேரம் இரவின் கடைசி பகுதி என்பதை இந்த ஹதீஸ் நமக்கு தெளிவுப்படுத்துகிறது. பொதுவாக நபியவர்கள் இரவை மூன்றாக பிரிப்பார்கள். அதில் இரண்டு பகுதியை தூங்குவதற்காகவும், முன்றாவது இறுதிப் பகுதியை நின்று வணங்கி இறைவனிடம் பிரார்த்தனை செய்வதற்காகவும் அமைத்துக் கொள்வார்கள்.
மஃரிபிலிருந்து இரவு ஆரம்பம் ஆகிறது. அப்படி என்றால் மஃரிபிலிருந்து சுப்ஹூ வரை உள்ள நேரத்தை கணக்குப்பார்த்து முன்றாக பிரிக்க வேண்டும். அல்லது இஷா தொழுகையிலிருந்து சுப்ஹூ வரை உள்ள நேரத்தை மூன்றாக பிரித்து கொள்ள வேண்டும். எப்படியோ அதில் கடைசி இரவை வணக்கத்திற்காக எடுத்துக் கொள்ள வேணடும். அந்த கடைசி இரவில் தான் அல்லாஹ் அடிவானத்திற்கு இறங்கி வருகிறான் என்பதை நாம் விளங்கிக் கொள்வோம்.
சேவல் கூவும் நேரம்:
“மஸ்ரூக் அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்களுக்கு விருப்பமான அமல் எது என்று ஆயிஷா(ரலி) அவர்களிடம் கேட்டேன். அதற்கவர்கள் ‘தொடர்ந்து செய்யும் அமல்’ என்று விடையளித்தார்கள். (இரவில்) நபி(ஸல்) அவர்கள் எப்போது எழுவார்கள் என்று கேட்டேன். அதற்கவர்கள் ‘சேவல் கூவும்போது எழுவார்கள்’ என்று விடையளித்தார்கள்.
மற்றோர் அறிவிப்பில் சேவல் கூவும்போது எழுந்து தொழுவார்கள் என்று காணப்படுகிறது. (புகாரி 1132)
பொதுவாக சேவல் பல சந்தர்ப்பங்களில் கூவும். இருந்தாலும் கூடுதலாக சுப்ஹூ நேரத்திற்கு முன் சேவல் கூவுவதை காணலாம். சேவல் மலக்குமார்களைப் பார்த்தால் கூவும் என்பதாக நபியவர்கள் உறுதிப் படுத்தியுள்ளார்கள். சேவல் கூவும் இந்த நேரம் இறைவனை நின்று வணங்கி, பிரார்த்தனை செய்வதற்கு மிகவும் பொருத்தமான நேரமாகும் என்பதை தான் மேற்ச் சென்ற ஹதீஸ் நமக்கு எடுத்துக் காட்டுகிறது.
ஸஹர் நேரம்:
ரமலான் நோன்போடு சம்பந்தப்பட்ட ஸஹர் நேரத்தைப் பற்றி நபியவர்கள் கூறும் போது, ஸஹர் செய்யுங்கள் அதில் பரகத் உள்ளது என்றார்கள். அதாவது அந்த குறிப்பிட்ட நேரம் பரகத் பொருந்திய நேரமாகும் என்பதை தான் நபியவர்கள் சொல்கிறார்கள்.
“இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
‘நீங்கள் ஸஹ்ர் செய்யுங்கள்; நிச்சயமாக ஸஹ்ர் செய்வதில் பரக்கத் இருக்கிறது!’
இதை அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார். (புகாரி 1923)
பொதுவாக ஸஹர் செய்வதில் பரகத் உள்ளதா என்றால் கிடையாது. பரகத் பொருந்திய நேரத்தில் ஸஹர் செய்யும் போது அந்த உணவில் பரகத் கிடைக்கும். ஒருவர் மூன்று மணிக்கு அல்லது அதற்கு முன்னரே ஸஹர் செய்கிறார் என்று வைத்துக் கொள்ளுங்களேன். இதில் பரகத் இருக்குமா என்றால் இருக்காது. ஸஹர் கூடும் ஆனால் பரகத் பொருந்திய ஸஹராக இருக்காது.பரகத் பொருந்திய நேரமும், நாம் சாப்பிடும் உணவும் ஒரே நேரத்தில் அமைந்தால் அதில் பரகத் கிடைக்கும். அந்த பரகத் பொருந்திய நேரம் எது என்பதை பின் வரும் ஹதீஸ் உறுதிப்படுத்துகிறது.
“அனஸ்(ரலி) அறிவித்தார்.
‘நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் ஸஹ்ர் செய்தோம்; பின்னர், தொழுகைக்கு அவர்கள் தயாராகிவிட்டார்கள்!’ என்று ஸைத் இப்னு ஸாபித்(ரலி) கூறினார்; நான் ‘பாங்குக்கும் ஸஹ்ருக்குமிடையே எவ்வளவு நேரம் இருந்தது?’ என்று கேட்டேன். அதற்கவர் ‘ஐம்பது வசனங்கள் (ஓதும்) நேரம் இருந்தது!’ என்று பதிலளித்தார். (புகாரி 1921)
அந்த பரகத் பொருந்திய நேரத்தை மேற்ச் சென்ற ஹதீஸின் மூலமாக நபியவர்கள் உறுதிப் படுத்துகிறார்கள். அதாவது பஜ்ருக்கு முன் ஐம்பது குர்ஆன் வசனங்கள் ஓதும் நேரம் என்பதாகும் என்பதை விளங்கிக் கொள்ள முடியும். நபியவர்களைப் பொருத்த வரை நிறுத்தி, நிதானமாக குர்ஆன் வசனங்களை ஓதுவார்கள். நபியவர்கள் அந்த ஐம்பது வசனங்களை ஓதுவதற்கு சுமார் முப்பது அல்லது நாற்பது நிமிடங்கள் எடுக்கலாம். அப்படியானால் பஜ்ருக்கு முன் அந்த நேரத்தை கணக்குப் பார்த்துக் கொண்டால் பொருத்தமாக இருக்கும்.
பின் வரும் குர்ஆன் வசனமும் அந்த நேரத்தை உறுதிப்படுத்துகிறது.
“நிச்சயமாக பயபக்தியுடையவர்கள், (சுவர்க்கத்தின்) சோலைகளிலும், நீரூற்றுகளிலும் இருப்பார்கள்
“அவர்கள் தங்களிறைவன் அவர்களுக்கு அளித்ததை (திருப்தியுடன்) பெற்றுக் கொள்வார்கள்;“ நிச்சயமாக அவர்கள் இதற்கு முன்னர் நன்மை செய்வோராகவே இருந்தனர்.
“அவர்கள் இரவில் மிகவும் சொற்ப நேரமேயன்றித் தூங்கமாட்டார்கள்.
“அவர்கள் விடியற் காலங்களில் ( ஸஹர் நேரத்தில் பிரார்த்தனைகளின் போது இறைவனிடம்) மன்னிப்புக் கோரிக் கொண்டிருப்பார்கள்.
முடிவு:
மேற்ச் சென்ற அனைத்து ஹதீஸ்களை ஒன்று சேர்த்துப் பார்க்கும் போது பஜ்ருக்கு முன் சுமார் நாற்பத்தி ஐந்து நிமிடங்கள் பிரார்த்தனையின் மூலம் இறைவனோடு பேசுவதற்கு உச்சக் கட்டமான நேரமாகும் என்பதை புரிந்து கொள்ள முடியும். எனவே அன்பு நேயர்களே ! இந்த நேரத்தை அடைந்து கொள்ள வேண்டும் என்றால் பஜ்ருக்கு முன் எழுந்து இறைவனை தொழுது விட்டு, அந்த தொழுகையின் ஸஜ்தாவிலிருந்தே நமது சகல தேவைகளையும் அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்யும் பழக்கத்தை அமைத்துக் கொள்வோம். அல்லாஹ் மிக அறிந்தவன்.