வணக்க வழிபாடுகளில் நிய்யத்தை வாயால் மொழிவது குறித்து மார்க்கத்தின் நிலைப்பாடு என்ன?

بسم الله الرحمن الرحيم

வணக்கம் என்பது பிற்காலத்தில் தோன்றியவர்களால் அறிமுகப்படுத்தப்பட்டதல்ல. மாறாக ஒவ்வொரு வணக்கத்தையும் அல்லாஹ்விடமிருந்து அறிமுகப்படுத்தியவர்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களே. இதில் எவருக்கும் சந்தேகமில்லை. சந்தேகத்திற்கும் இடமில்லை. வெறுமனே நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வணக்க வழிபாடுகளை ஸஹாபாக்களுக்கு அறிவித்துக்கொடுத்துவிட்டு அமைதியடையவில்லை. மாறாக அவ்வணக்கங்கள் எவ்வாறு மேற்கொள்ளப்பட வேண்டும், மற்றும் அல்லாஹ்விடம் அவ்வணக்கங்கள் ஏற்றுக்கொள்ளப்படுவதற்கு அவைகளை நாம் எவ்வாறு மேற்கொள்ள வேண்டும் என்பதையும் கற்றுக்கொடுத்தார்கள்.

நான் எவ்வாறு தொழுவதை நீங்கள் கண்டீர்களோ அவ்வாறே தொழுங்கள் என அவர்கள் ஸஹாபாக்களுக்கு கூறினார்கள். - புஹாரீ - மேலும், என்னிடமிருந்து ஹஜ் கிரியைகளை நீங்கள் எடுத்துக்கொள்ளுங்கள் எனக்கூறியுள்ளார்கள். - புஹாரீ -

மேற்குறிப்பிடப்பட்ட இரு ஹதீஸ்களும் வணக்க வழிபாடுகள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் அங்கீகாரத்தைப் பெற்றிருக்க வேண்டும் என்பதைத் தெளிவுபடுத்துகின்றது. அது மட்டுமின்றி அவருடைய அங்கீராம் இல்லாத ஓர் அமல் செய்யப்படுமாயின் அது அல்லாஹ்விடத்தில் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: யார் எமது மார்க்கத்தில் இல்லாத ஒரு செயலைச் செய்கிறாரோ அது நிராகரிக்கப்படும்.

-     முஸ்லிம்

கவலைக்குரிய விடயம் என்னவென்றால் இன்று வணக்கம் என்ற பெயரில் பல அனாச்சாரங்கள் எம்மத்தியில் நடைபெறுவதை நாம் பார்க்கலாம். இவ்வாறு தற்பொழுதும் ஒரு சிலர்களால் நடைபெறும் ஒரு பித்அத்தே குறித்ததொரு வணக்கத்தை நிறைவேற்றும் போது அவர்கள் அதன்  நிய்யத்தை வாயால் மொழிவதாகும். குறிப்பாக தொழுகை மற்றும் நோன்பு போன்ற வணக்க வழிபாடுகளில் அவர்கள் நிய்யத்தை வாயால் மொழிவார்கள். மேலும், ஒரு சில ஆலிம்கள் இந்த நிய்யத்களை மக்களுக்கு சொல்லிக்கொடுப்பது கவலைக்குரிய விடயமாகும்.

ஆகவே, இத்தொகுப்பில் நிய்யதை வாயால் மொழிவது பித்அத்தாகும் என்பதை நிரூபித்து ஆதாரங்களையும் மார்க்க அறிஞர்களின் கருத்துக்களையும் முன்வைத்துள்ளேன். அல்லாஹ் இதன் மூலம் அனைவருக்கும் பயனளிப்பானாக.

நிய்யத் என்ற சொல்லின் தமிழ் கருத்தின் மூலமே நாம் நிய்யத்தை வாயால் மொழிவது பித்அத் என்பதை நிரூபிக்கலாம். நிய்யத் என்றால் நாடுதல், எண்ணுதல் என்பதே பொருளாகும். யாராவது தன்னுடைய வாயால் நாட முடியுமா? அல்லது எண்ண முடியுமா? நிச்சயமாக நாடுதல் மற்றும் எண்ணுதல் ஆகிய செயல்கள் உள்ளத்தாலேயே நடைபெறுகின்றன என்பதை யாரும் மறுப்பதற்கு இடமில்லை. ஆகவே, தெளிவாகவே இதன் மூலம் நாம் நிய்யத் என்பது நாவால் மொழியப்பட வேண்டிய ஒன்றல்ல என்பதைப் புரிந்துகொள்ளலாம்.

அல்லாஹுத்தஆலா அல்குர்ஆனில் பின்வருமாறு கூறுகின்றான்: நபியே! உங்கள் உள்ளங்களில் உள்ளவற்றை நீங்கள் மறைத்தாலும் அல்லது அதனை நீங்கள் வெளிப்படுத்தினாலும் அதனை அல்லாஹ் அறிவான் எனக் கூறுங்கள்.

-     ஆல இம்ரான்: 29

இந்த வசனம் நிய்யத்தை வாயால் மொழியத்தான் வேண்டும் எனக்கூறுபவர்களுக்கு தகுந்த பதிலடி வழங்குகின்றது. அது எவ்வாறு என்பதை நாம் பார்க்கலாம்.

எமது உள்ளத்தில் உள்ள விடயங்கள் யாவற்றையும் அல்லாஹ் அறிவான் என்பது மறுக்க முடியாத ஓர் உண்மையாகும். நாம் உள்ளத்தில் இருப்பவற்றை பிறருக்கு கூறினாலும் அல்லது கூறாவிட்டாலும் அவைகளை அல்லாஹ் அறிவான் என்பதை மேற்குறிப்பிடப்பட்ட வசனம் அறிவிக்கின்றது. ஆகவே, ஒருவர் தொழும்போது அல்லது வேறு ஒரு வணக்கத்தைச் செய்யும்போது நிய்யத்தை வாயால் மொழிந்தாலும் மொழியாவிட்டாலும் அந்த வணக்கம் அல்லாஹ்வுக்காக செய்யப்படுகின்ற வணக்கமா? அல்லது மனிதர்கள் பார்க்க செய்யப்படுகின்ற வணக்கமா? என்பதை அல்லாஹ் அறிவான். ஒருவர் அல்லாஹ்வுக்காக தொழுகிறேன் என்று நிய்யத்தை வாயால் மொழிந்துவிட்டு பிற மனிதர்கள் தன்னை பார்க்க வேண்டும் என்பதற்காக தொழுதால் அவர் வாயால் மொழிந்த நிய்யத்திற்காக வேண்டி அத்தொழுகைக்கு கூலி கொடுக்கப்படுமா? நிச்சயமாக இல்லை. அவருடைய உண்மையான நிய்யத்தை அடிப்படையாக வைத்தே அவருக்கு கூலி வழங்கப்படும். ஆகவே, நிய்யத்தை வாயால் மொழிவது அவசியமற்றது என்பதை நாம் தெளிவாக விளங்கிக்கொள்ள வேண்டும்.

இரண்டு ஹதீஸ்களை முன்வைத்து தொழுகையில் நிய்யத் வாயால் மொழியப்படுவது பித்அத் என்பதை இங்கு உறுதிப்படுத்துகிறேன்.

ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள்: நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தொழுகையை தக்பீரைக்கொண்டே ஆரம்பிக்கக்கூடியவர்களாக இருந்தார்கள்.

- முஸ்லிம்

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நிய்யத்தை தொழுகைக்கு முன் வாயால் மொழிந்திருந்தால் நிச்சயமாக அதை ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவித்திருப்பார்கள்.

ஒரு மனிதர் பள்ளிவாசலுக்கு வந்தார். பின்பு அவர் தொழுதார். தனது தொழுகையை அவர் துரிதப்படுத்தினார். பின்பு திரும்பி நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு ஸலாம் கூறினார். அதற்கு அவர்கள் வஅலைக்கு முஸ்ஸலாம் எனக்கூறிவிட்டு நீ திரும்பிச் சென்று மீண்டும் தொழு எனக்கூறினார்கள். இவ்வாறு மூன்று முறைகள் இந்நிகழ்வு நடைபெற்றது. பின்பு அம்மனிதர் சத்தியத்தைக் கொண்டு உங்களை அனுப்பியவனின் மீது சத்தியமாக இதைவிட எனக்கு அழகாகத் தொழ முடியாது எனவே, நீங்கள் எனக்கு கற்றுத்தாருங்கள் எனக்கூறினார். அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நீ தொழுகைக்காக எழுந்தால் வுழூவைப் பூரணமாக நிறைவேற்று, பின்பு கிப்லாவை முன்னோக்கி தக்பீர் கூறு என தொழுகையின் முறையை தொடர்ந்து அவர்கள் கற்றுக்கொடுத்தார்கள்.

-     தபராணீ

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தொழத்தெரியாத அம்மனிதருக்கு தொழுகையைக் கற்றுக்கொடுக்கும்போது தொழுகைக்காக நீ எழுந்தால் நிய்யத்தை வாயால் மொழிவாயாக எனக்கூறவில்லை. ஆகவே, நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தொழும்போது நிய்யத்தை வாயால் மொழியவில்லை. அவ்வாறு மொழியுமாறு தனது தோழர்களுக்குக் கற்றுக்கொடுக்கவுமில்லை.

நிய்யத்தை வாயால் மொழிவது குறித்து ஒரு சில அறிஞர்களின் கருத்துக்களை இங்கு நான் முன்வைக்கின்றேன்.

1. இமாம் இப்னு தைமியா ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறினார்கள்: முஸ்லிம்களின் ஏகோபித்த முடிவின்படி நிய்யத்தை பகிரங்கப்படுத்துவது கட்டாயமான ஒன்றுமல்ல மற்றும் விரும்பத்தக்க ஒன்றுமல்ல. மாறாக நிய்யத்தை பகிரங்கப்படுத்துபவர் பித்அத்வாதியாவார், மார்க்கத்திற்கு முரணாகச் செயற்பட்டவராவார். இவ்வாறு மார்க்கத்தில் உண்டு என நம்பியவராக இதை ஒருவர் செய்தால் அவர் ஒரு மடையராவார், வழிகெட்ட ஒருவருமாவார். ஒழுக்கமூட்டப்படுவதற்கும் அவர் தகுதியானவராவார். அவ்வாறு இல்லையென்றால் அதற்காக வேண்டி அவர் தண்டிக்கப்படுவதற்கு தகுதியடைவார்.

2. அஷ்ஷெய்க் பின் பாஸ் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறுகின்றார்கள்: நிய்யத்தை வாயால் மொழிவது பித்அத்தாகும். அதை பகிரங்கமாகக் கூறுவது பாவத்தில் கடுமையானதாகும். உள்ளத்தால் நிய்யத் வைப்பதே சுன்னாவாகும். ஏனென்றால், அல்லாஹ் இரகசியத்தையும் மறைவானவற்றையும் அறியக்கூடியவனா இருக்கின்றான். அவனே பின்வருமாறு கூறுகின்றான்: நபியே! நீங்கள் அல்லாஹ்வுக்கே உங்களுடைய மார்க்கத்தைக் கற்றுக்கொடுக்கின்றீர்களா? அல்லாஹ்வோ வானங்களில் உள்ளவற்றையும் பூமியில் உள்ளவற்றையும் அறியக்கூடியவனாக இருக்கின்றான் எனக்கூறுங்கள்.

நிய்யத்தை வாயால் மொழிவது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைத் தொட்டோ அவர்களுடைய தோழர்களில் ஒருவரைத்தொட்டோ பின்பற்றப்பட்ட இமாம்களைத்தொட்டோ உறுதி செய்யப்படவில்லை. ஆகவே, இது மார்க்கத்தில் இல்லாத ஒன்று என்பதை இதன் மூலம் அறியப்பட்டுவிட்டது. மாறாக இது உருவாக்கப்பட்ட பித்அத்களில் ஒன்றைச் சார்ந்ததாகும்.

3. அஷ்ஷெய்க் முக்பில் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறுகின்றார்கள்: நிய்யத்துடைய இடம் உள்ளமாகும். அதை வாயால் மொழிவது பித்அத்களில் ஒரு பித்அத்தாகும். இமாம் ஷாபிஈ ரஹிமஹுல்லாஹ் இதை ஆகுமாக்கினார் என்று இடம்பெற்ற செய்தி சரியான ஒன்றல்ல. அதை ஆகுமாக்கியவர்கள் ஷாபிஈ மத்ஹபைச்சார்ந்த பிற்காலத்து அறிஞர்களில் சிலராவர்.

4. அஷ்ஷெய்க் இப்னு உஸைமீன் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறுகின்றார்கள்: நிய்யத்தை வாயால் மொழிவது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் காலத்திலோ ஸலபுகளின் காலத்திலோ அறியப்பட்ட ஒன்றாக இருக்கவில்லை. அது மனிதர்கள் உருவாக்கியவற்றில் ஒன்றாகும்.

5. அஷ்ஷெய்க் ஸாலிஹ் அல்பவ்ஸான் ஹபிழஹுல்லாஹ் அவர்கள் கூறுகின்றார்கள்: தொழுகையின் நிபந்தனைகளில் ஒன்றே நிய்யத்தாகும். அறபு மொழி அடிப்படையில் நிய்யத் என்றால் நாடுதல் என்பதாகும். மார்க்க அடிப்படையில் அல்லாஹ்வின் பக்கம் நெருங்குதல் என்ற அடிப்படையில் ஒரு வணக்கத்தைச் செய்ய உறுதிகொள்ளல் என்பதாகும். அதனுடைய இடம் உள்ளமாகும். அதை வாயால் மொழியத்தேவையில்லை. மாறாக, அது பித்அத்தாகும். ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களோ அவர்களுடைய தோழர்களோ இதைச் செய்யவில்லை. எனவே, ஒருவர் தான் நாடும் தொழுகையை தனது உள்ளத்தால் நிய்யத் வைக்க வேண்டும்.

அன்பின் வாசகர்களே! நாம் மேலே குறிப்பிட்ட தகவல்களில் இருந்து நிய்யத்தை வாயால் மொழிவது பித்அத்தான அம்சம் என்பதை நல்லமுறையில் புரிந்து கொண்டிருப்பீர்கள். எனவே, நீங்கள் புரிந்து கொண்ட சத்தியத்தின் அடிப்படையில் காரியமாற்ற எம்மனைவருக்கும் அல்லாஹ் துணை நிற்பானாக!

- அஸ்கி இப்னு ஷம்சிலாப்தீன்
Previous Post Next Post