இஹ்ஸான் என்றால் என்ன?

இஹ்ஸான் (வணக்கத்தில் பூரணத்துவம்) என்றால் என்ன?

பதில்: அல்லாஹ் என்னை கண்காணிக்கிறான் என்ற உணர்வோடு அவனை வணங்குவது.

அல்லாஹ் தன் திருமறையில் கூறுகிறான்:

 الَّذِىْ يَرٰٮكَ حِيْنَ تَقُوْمُۙ‏
அவன் எத்தகையவனென்றால், நீர் (தனித்து வணங்குவதற்காக) நிற்கும் சமயத்தில் அவன் உம்மைப் பார்க்கிறான். (அல்குர்ஆன் : 26: 218)

وَتَقَلُّبَكَ فِى السّٰجِدِيْنَ‏
சிரம் பணிவோரில் (ரூகூவு, ஸுஜுது செய்வது கொண்டு நீர் இருக்கின்றபோது) உம்முடைய இயங்குதலையும் (அவன் பார்க்கிறான்)
 (அல்குர்ஆன் : 26 :219)

நபி ﷺ அவர்கள் கூறினார்கள்:
‘இஹ்ஸான் என்பது அல்லாஹ்வை நீங்கள் பார்ப்பதை போல் அவனை வணங்குவது. அந்த அளவு உங்களால் கவணம் செலுத்த முடியவில்லை என்றால் அவன் உங்களை பார்க்கிறான்’ (முஸ்லிம்)

நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள், 

நிச்சயமாக அல்லாஹ் எல்லாவற்றிலும் இஹ்ஸானை விதித்துள்ளான். (அல் அர்பைன் அந்நவவி 17)

நம் தொழுகை மட்டும் அல்லாமல், நம் வாழ்க்கை முழுவதும், எல்லா காரியங்களையும் நாம் அவனை பார்ப்பதை போல் அல்லது அவன் நம்மை பார்த்து கொண்டு இருக்கிறான் என்ற உணர்வோடு செயல்பட வேண்டும். அவ்வாறு செய்பவர் முஹ்ஸின் ஆவார்கள்.

அல்லாஹ் முஹ்ஸினை விரும்புகிறான்.


இஹ்ஸான் என்றால் என்ன?

நபி ﷺ அவர்கள் கூறினார்கள்: ‘இஹ்ஸான் என்பது அல்லாஹ்வை நீங்கள் பார்த்துக் கொண்டிருப்பது போன்ற உணர்வுடன் வழிபடுவதாகும். நீங்கள் அவனைப் பார்த்துக் கொண்டிராவிட்டாலும் அவன் உங்களை பார்த்துக்கொண்டிருக்கிறான்.’
 (புகாரி 50 முஸ்லிம் 1, 5)

இஹ்ஸானின் படித்தரங்கள் இரண்டு:

முதல் நிலை:

நீங்கள் அல்லாஹ்வை பார்த்துக் கொண்டிருப்பது போன்ற உணர்வுடன் அவனை வணங்குதல். இது முஷாஹதா கண்டுகொண்டிருக்கும் நிலை என்றழைக்கப்படுகிறது. அதாவது ஒரு அடியான் தனது உள்ளதால் அல்லாஹ்வைக் கண்டு கொண்டிருப்பது போன்ற மன நிலையுடன் அவனை வணங்குவதாகும். அப்போது ஈமானிய ஒளியால் அடியானின் மனம் நிரம்பிவிடும். அதன் மூலம் (சுவர்க்கம், நரகம் போன்ற) மறைவான விஷயங்கள் கண்முன்னே காட்சி தருவது போன்ற அகக்கண்ணால் அவற்றை அறிந்து கொள்ளும் நிலை ஏற்படுகிறது. இது தான் இஹ்ஸான் என்பதன் யதார்த்த நிலை.

இரண்டாவது நிலை:

அல்லாஹ்வின் கண்காணிப்பு. இது முராக்கபா (கண்காணித்தல் நிலை) என்று அழைக்கப்படும். அதாவது அல்லாஹ் தன்னை கண்காணித்துக் கொண்டு உற்று நோக்கிக்கொண்டு தனக்கு மிகவும் அருகில் இருக்கிறான் என்ற நம்பிக்கையுடன் ஒரு அடியால் நல்லறங்களில் ஈடுபடுவதையே இது குறிக்கும். எனவே ஒரு அடியான் அமல்களில் ஈடுபடும் போது இந்த மன நிலையை ஏற்படுத்திக் கொண்டு அதன் அடிப்படையில் செயல்பட்டால் அவர் அல்லாஹ்வுக்கு மாத்திரம் அமல் செய்தவராவார்.

ஏனெனில் நற்செயல்களில் ஈடுபடும் போது இவ்வாறான நிலை ஏற்படுவதே அல்லாஹ் அல்லாதோருக்காக வணக்க வழிபாடுகள் புரிவதில் இருந்து ஒரு அடியானை எப்பொழுதும் பாதுகாக்கிறது.

இபாதா அல்மஹ்ழா அல்லாஹ் இபாதத்தாகவே ஆக்கி தந்த வணக்க வழிபாடுகளை அல்லாஹ்வுக்காக மட்டுமே செய்ய வேண்டும். அல்லாஹ்வுக்காக என்று இல்லாமல் மற்ற நோக்கங்கள் கலந்துவிடும் போது அது அல்லாஹ்வின் தண்டனையைப் பெற்றுத் தரக் கூடியதாக ஆகிவிடும்.

இபாதா கைரமஹ்ழாவை உலக நடைமுறைகளை அல்லாஹ்வுக்காக என்று நிய்யத் செய்து செய்யும்போது அல்லாஹ் அதற்கு நிறைவான கூலி கொடுப்பான் அல்லாஹ்வுக்காக என்ற நிய்யத் இல்லாமல் செயல்படும்போது அது கூலியும் கிடையாது பாவமும் கிடையாது.

நம்அனைத்து செயல்பாடுகளையும் அல்லாஹ்வுக்காக என்று நிய்யத் வைத்து அல்லாஹ்வை கண்டுகொண்டதை போல் அல்லது அல்லாஹ் நம்மை கண்காணிக்கிறான் என்கிற உணர்வோடு இஹ்ஸானோடு செய்தால் அதிகமான கூலியை பெற்றுக் கொள்ள முடியும்.

இஸ்லாத்தின் படிதரங்கள் மூன்று: 

இஸ்லாம்

1. லா இலாஹ இல்லல்லாஹு முஹம்மது ரஸுலுல்லாஹ் என்று சாட்சி கூறி, தொழுகை, நோன்பு, ஜகாத், ஹஜ் போன்ற கடமைகளை நிறைவேற்றும் போது அவர் ஒரு முஸ்லிம் ஆவார்.

2. முஃமின்

நம்பிக்கை கொள்ள வேண்டிய 6 விஷயங்கள் அதாவது அல்லாஹ், மலக்குமார்கள், வேதங்கள், தூதர்கள், மறுமைநாள், விதியை நம்புதல் போன்ற நம்பிக்கை கொண்டு அதன் அடிப்படையில் தன்னுடைய செயல்களை அமைத்துக் கொள்ளும் போது அவர் ஒரு முஃமினாக ஆவார்.

3. முஹ்ஸின்

இரண்டு ஷாஹாதாக்களை கூறி கடமைகளையும் நிறைவேற்றி நம்ப வேண்டிய ஆறு விஷயங்களையும் சரியான முறையில் நம்பிக்கை கொண்டு அல்லாஹ்வை பார்ப்பதைப் போல் அல்லது அல்லாஹ் தன்னை கண்காணிக்கிறான் என்ற உணர்வுடன் ஒருவன் தன்னுடைய, செயல்களை அமைத்துக் கொள்ளும் போது அவர் ஒரு முஹ்ஸினாக ஆகிறார்.

முஹ்ஸின்
முஃமின்
முஸ்லிம்

இதுவே இஸ்லாத்தின் 3 படித்தரங்கள் ஆகும்.

இஹ்ஸான் மற்றும் முஹ்ஸின் என்பது மிகவும் உயர்ந்த படித்தரம் ஆகும்.

ஈமானிலிருந்து இஹ்ஸானுக்கு மாறுவது பின்வரும் வசனத்தில் தெளிவாகிறது:

ஈமான் கொண்டு, நற்கருமங்கள் செய்பவர்கள் (எதிர்காலத்தில்) தங்களைப் (பாவத்திலிருந்து) காத்துக் கொண்டும், ஈமான் கொண்டும், மேலும் நற்கருமங்கள் செய்து கொண்டும், (விலக்கப்பட்டவற்றை விட்டுத்) தங்களைப்(பின்னரும்) பாதுகாத்துக் கொண்டு, ஈமானில் உறுதியாக இருந்து கொண்டும், மேலும் (அல்லாஹ்வுக்கு) அஞ்சியவர்களாக அழகிய நன்மைகளைச் செய்து வருவார்களானால், சென்ற காலத்தில் (இவ்விதிமுறைகள் வருமுன்) தடுக்கப்பட்டவற்றை அவர்கள் புசித்து விட்டது குறித்து அவர்கள் மீது குற்றம் ஏற்படாது; நன்மை செய்கிறவர்களையே (முஹ்சினீன்) அல்லாஹ் நேசிக்கிறான்.[அல் குர்’ஆன் 5:93]

எல்லோராலும், இஹ்சானை அடைய முடியாது, மேலும் அதை அடைவதும் கட்டாயக் கடமையல்ல.  அல்லாஹ் (சுபஹ்) குர்’ஆனில் சில மிகப் புகழுக்குரிய செயல்களைக் குறிப்பிடுகிறான, அதற்குப்பின் முஹ்சின்கள் மீது அவனுக்குள்ள நேசத்தைக் குறிப்பிடுகிறான்:

அவர்கள் இன்பமான (செல்வ) நிலையிலும், துன்பமான (ஏழ்மை) நிலையிலும் (இறைவனின் பாதையில்) செலவிடுவார்கள்; தவிர கோபத்தை அடக்கி கொள்வார்கள்; மனிதர்(கள் செய்யும் பிழை)களை மன்னிப்போராய் இருப்பார்கள்; (இவ்வாறு அழகாக) நன்மை செய்வோரையே அல்லாஹ் நேசிக்கின்றான்.[அல் குர்’ஆன் 3:134]

எனவே நீர் அவர்களை மன்னித்துப் புறக்கணித்து விடுவீராக. மெய்யாகவே நன்மை செய்வோரை அல்லாஹ் நேசிக்கிறான்.[அல் குர்’ஆன் 5:13]

முஹ்சினுக்குள்ள சில சிறப்பான நற்கூலிகள்

கவலையிலிருந்து பாதுகாப்பு:

அப்படியல்ல! எவனொருவன் தன்னை அல்லாஹ்வுக்கே (முழுமையாக) அர்ப்பணம் செய்து, இன்னும் நற்கருமங்களைச் செய்கிறானோ, அவனுடைய நற்கூலி அவனுடைய இறைவனிடம் உண்டு. இத்தகையோருக்கு அச்சமில்லை; அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள். [அல் குர்’ஆன் 2:112]

அல்லாஹ்வின் நேசம்:

நன்மை செய்யுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் முஹ்ஸின்களை -நன்மை செய்வோரை- நேசிக்கின்றான்.[அல் குர்’ஆன் 2:195]
Previous Post Next Post