உன் மனதில் உன்னைப் பெரியவன் என எண்ணி, உன் இரட்சகனிடத்தில் நீ சிறியவனாகி விடாதே


       காலித் பின் உமைர் அல்அதவீ (ரஹிமஹுல்லாஹ்)  அவர்கள் கூறியதாவது:

உத்பா பின் ஃகஸ்வான் (ரழியழ்ழாஹு அன்ஹு) அவர்கள் எங்களிடையே உரையாற்றினார்கள். அப்போது அவர்கள் இறைவனைப் போற்றிப் புகழ்ந்து விட்டுப் பின்வருமாறு கூறினார்கள்:

“இறை வாழ்த்துக்குப்பின்! இந்த உலகம் விடைபெற்றுக்கொள்வதாக அறிவித்துவிட்டு, விரைவாகத் திரும்பிச் சென்றுகொண்டிருக்கிறது. பருகிக்கொண்டிருப்பவரின் கோப்பையின் அடியில் எஞ்சியிருக்கும் சிறிதளவு பானத்தைப் போன்றே இவ்வுலகின் தவணை எஞ்சியுள்ளது. நீங்கள் இங்கிருந்து புறப்பட்டு நிலையான உலகை நோக்கிச் செல்லப்போகிறீர்கள்.

எனவே உங்களிடம் உள்ள நற்செயல்களுடனேயே நீங்கள் திரும்பிச் செல்லுங்கள். ஏனெனில், "நரகத்தின் விளிம்பிலிருந்து தூக்கிப் போடப்படும் ஒரு கல்லானது, எழுபது ஆண்டுகள் பயணித்தாலும் அதன் அடிப்பாகத்தை அடையாது" என்று எங்களுக்குச் சொல்லப்பட்டது. அல்லாஹ்வின் மீதாணையாக! அந்த நரகம் நிரப்பப்பட்டே தீரும். (இது உங்களுக்கு) ஆச்சரியமளிக்கிறதா?

மேலும், எங்களிடம் "சொர்க்கத்தின் நிலைக்கால்களில் இரு நிலைக்கால்களுக்கிடையேயான தொலைவு நாற்பதாண்டு பயணத் தொலைவாகும்" என்றும் சொல்லப்பட்டது. நிச்சயமாக ஒரு நாள் அந்தச் சொர்க்கம் மக்கள் திரளால் நிரம்பத்தான் போகிறது.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் (ஆரம்பமாக இஸ்லாத்தை ஏற்று) இருந்த ஏழு பேரில் ஏழாவது நபராக நான் இருந்தேன். அப்போது உண்பதற்கு இலை தழைகளைத் தவிர வேறு எந்த உணவும் எங்களுக்கு இருக்கவில்லை. (அதை உண்டதால்) எங்கள் வாயெல்லாம் புண்ணாகிவிட்டது.

அப்போது நான் சால்வை ஒன்றைப் பெற்றேன். அதை இரண்டாகக் கிழித்து நானும் சஅத் பின் மாலிக் (ரழியழ்ழாஹு அன்ஹு) அவர்களும் பங்கிட்டுக்கொண்டோம். அதன் ஒரு பகுதியை நான் கீழங்கியாக அணிந்துகொண்டேன். அதன் மற்றொரு பகுதியை சஅத் (ரழியழ்ழாஹு அன்ஹு) அவர்கள் கீழங்கியாக அணிந்து கொண்டார்கள்.

ஆனால், இன்று எங்களில் ஒருவர் காலைப் பொழுதை அடையும்போது நகரங்களில் ஒன்றுக்கு தலைவராகவே காலைப் பொழுதை அடைகிறார். *'அல்லாஹ்விடம் நான் சிறியவனாயிருக்க, என் மனதில் (என்னைப் பற்றிப்) பெரியவனாக நான் கருதிக் கொள்வதிலிருந்து அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கோருகிறேன்!'* (உலகத்தின் மீது பற்றில்லாமல் இருந்த) நபித்துவ(க் கால)ம் முடிந்தே போய்விட்டது. அதன் இறுதிப்பகுதி ஆட்சியதிகாரமாகவே இருக்கும். (இனி) நீங்கள் எங்களுக்குப்பின் ஆட்சித் தலைவர்களிடமிருந்து (சோதனைகளை) அனுபவிப்பீர்கள்”.( நூல்: முஸ்லிம் - 5676 )

🔅அஷ்ஷெய்க் அப்துர்ரஸ்ஸாக் அல்பத்ர் (ஹபிfழஹுல்லாஹ்) கூறுகின்றார்கள்:-

           *“தன் மனதில் தன்னைப் பெரிதாக நினைத்து மனிதன் பெருமையடித்துக்கொள்ளுதல், தன் நிலை மற்றும் தான் செய்யும் பணியில் அவன் பெருமிதமடைதல், தன் எஜமானனாகிய அல்லாஹ்வை கண்ணியப்படுத்துவதிலும் அவனின் அடையாளச் சின்னங்களை கெளரவப்படுத்துவதிலும் அவன் அலட்சியமாக நடந்துகொள்ளுதல்  ஆகிய இவ்விடயங்களில் மனிதன் எச்சரிக்கையாக இருந்து கொள்ளட்டும்! மனதால் பெருமிதப்படும் பெருமைக்காரன், நீரின் மேல் பரப்பில் கண்ணாடி போல் வட்டமாக ஏற்பட்டு விரைவாக அகன்றுவிடும் நீர்க்குமிழையொத்தவன் போலாவான்!”*

{ அஷ்ஷெய்க் அப்துர்ரஸ்ஸாக் அவர்களின் இணையதளம் - 

http: al-badr.net )


🎯 قال عتبة بن غزوان رضي الله عنه في تعوّذه : *« .... أعوذ بالله أن أكون في نفسي عظيما وعند الله صغيرا .... »* (رواه مسلم، رقم الحديث : ٥٦٧٦ )

          قال الشيخ عبدالرازق البدر حفظه الله تعالى: « ليحذر العبد أن يتعاظم في نفسه، ويعجب بحاله وعمله، ويغفل عن تعظيم سيّده ومولاه، وتعظيم شعائره فيكون من الخاسرين. وما أشبه المتعاظم بالفقاعة تنتفخ على سطح الماء كالقارورة المستديرة ثم تنفقئ سريعا ».

{ المصدر: موقع الشيخ عبدالرازق

http: al-badr.net )

🎁➖➖➖➖➖➖➖➖🎁

               *✍தமிழில்✍*

                  அஷ்ஷெய்க் *N.P.ஜுனைத்(காஸிமி,மதனி)*

புதிய சாளம்பைக்குளம்,வவுனியா


Previous Post Next Post