ஒரு வெற்றிகரமான குடும்பத்தலைவிக்குரிய அழகு சாதனங்கள்



மனிதர்களே! உங்கள் இறைவனுக்குப் பயந்து நடந்து கொள்ளுங்கள், அவன் உங்கள் யாவரையும் ஒரே ஆத்மாவிலிருந்து படைத்தான், அவரிலிருந்தே அவர் மனைவியையும் படைத்தான்; பின்னர் இவ்விருவரிலிருந்து, அநேக ஆண்களையும் பெண்களையும் (வெளிப்படுத்தி உலகில்) பரவச் செய்தான். ஆகவே, அல்லாஹ்வுக்கே பயந்து கொள்ளுங்கள்; அவனைக்கொண்டே நீங்கள் ஒருவருக்கொருவர் (தமக்குரிய உரிமைகளைக்) கேட்டுக் கொள்கிறீர்கள்; மேலும் (உங்கள்) இரத்தக் கலப்புடைய உறவினர்களையும் (ஆதரியுங்கள்) - நிச்சயமாக அல்லாஹ் உங்கள் மீது கண்காணிப்பவனாகவே இருக்கின்றான். (04:01)

இறைநம்பிக்கை அவசியம் :

இறைவன் தன்னுடைய திருமறை நெடுகிலும் இந்த முஸ்லிம் சமுதாயத்தைப் பார்த்து, ஓ! இறைநம்பிக்கை கொண்டவர்களே! என்று விளித்துப் பேசுவதைப் பார்க்கலாம். இறைவன் நிர்ணயித்துள்ள வரம்புகளின் மீது நம்முடைய முழு கவனத்தையும் செலுத்தினோமென்றால், அந்த வரம்புகளின் இறுதி முடிவு வெற்றியை அடித்தளமாகக் கொண்டிருப்பதைக் காணலாம். அவனது அந்த கருணையின் அடிப்படையில் தான் நாம் இன்று ஒரு வெற்றிகரமான சமுதாயத்தின் சொந்தக்காரர்களாக, இறைநம்பிக்கை கொண்டவர்களாக இருந்து கொண்டிருக்கின்றோம். எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே! இறைவன் விதித்திருக்கின்ற அந்த வரம்புகளின் மீது நம்முடைய சொந்த விருப்பு வெறுப்புகளைத் திணித்தோமானால், இறைவனுடைய அந்த வரம்புகள் பாழ்பட்டு விடுவதோடு, நம்முடைய வெற்றியும் அதனுடன் சேர்த்தே பாழ்பட்டு விடும். இறைவன் நம்மைப் பாதுகாப்பானாக!

மேலும், அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் ஒரு காரியத்தைப்பற்றிக் கட்டளையிட்டு விட்டால், அவர்களுடைய அக்காரியத்தில் வேறு அபிப்பிராயம் கொள்வதற்கு ஈமான் கொண்டுள்ள எந்த ஆணுக்கோ பெண்ணுக்கோ உரிமையில்லை. ஆகவே, அல்லாஹ்வுக்கும் அவனுடைய ரஸுலுக்கும் எவரேனும் மாறு செய்தால் நிச்சயமாக அவர்கள் பகிரங்கமான வழிகேட்டிலேயே இருக்கிறார்கள். (33:36).

இறைநம்பிக்கை கொண்ட குடும்பத்தலைவிகளுக்கோர் உதாரணங்கள்

மேலும், ஈமான் கொண்டவர்களுக்கு ஃபிர்அவ்னின் மனைவியை அல்லாஹ் உதாரணமாக கூறுகிறான். அவர் ''இறைவா! எனக்காக உன்னிடத்தில், சுவர்க்கத்தில் ஒரு வீட்டைக் கட்டித் தருவாயாக! இன்னும் ஃபிர்அவ்னை விட்டும், அவன் செயல்களை விட்டும் என்னை காப்பாற்றுவாயாக! இன்னும் அநியாயக்கார சமூகத்தாரிடமிருந்தும் என்னைக் காப்பாற்றுவாயாக"" என்று (பிரார்த்தித்துக்) கூறினார். மேலும், இம்ரானின் புதல்வியான மர்யமையும் (அல்லாஹ் உதாரணமாக்கினான்) அவர் தம் கற்பைக் காத்துக் கொண்டார்; நாம் (அவரில்) நம் ரூஹிலிருந்து (ஆத்மாவிலிருந்து) ஊதினோம். மேலும், அவர் தம் இறைவனின் வார்த்தைகளையும், அவனுடைய வேதங்களையும் மெய்ப்பித்தார் - (ஏற்றுக் கொண்டார்). இன்னும், அவர் (அல்லாஹ்வை வணங்கி) வழிபட்டவர்களில் ஒருவராகவும் இருந்தார். (66:12)

உஹதுப் போர் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. இறைநிராகரிப்பாளர்கள் அண்ணல் முஹம்மது (ஸல்) அவர்களைக் கொலை செய்யும் நோக்கத்துடன் அவரை நெருங்கிக் கொண்டிருக்கின்றார்கள். ஆனால் அண்ணல் நபி (ஸல்) அவர்களோ, மிகச் சிறிய இறைநம்பிக்கையாளர் குழுவுடன் அந்த இறைநிராகரிப்பாளர்களை எதிர்த்துப் போரிட்டுக் கொண்டிருக்கின்றார்கள். இத்தகைய இறைநம்பிக்கையாளர்களின் குழுவில் இருந்தவர்களில், நஸீபா உம்மு இமாரா அல் அன்ஸாரிய்யா (ரலி) என்ற நபித்தோழியும் ஒருவர். அன்றைய போர்களின் பொழுது, காயம்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதும், அவர்களுக்கு தண்ணீர் அளிப்பதும் தான் பெண்களின் வேலையாக இருந்தது. நம்முடைய உம்மு இமாரா அவர்களோ, இந்தப் பணியை விட்டு விட்டு, இக்கட்டான அந்தச் சூழ்நிலையில் தன்னுடைய வாளை எடுத்துக் கொண்டு போரிட்டுக் கொண்டும், தன்னுடைய அம்பைக் கொண்டு எதிரிகளை துவம்சம் செய்து கொண்டுமிருந்தார். காரணம் நபி (ஸல்) அவர்களைக் காப்பதற்கு மிகச் சிலரே அந்த இடத்தில் நின்று கொண்டிருந்தார்கள். எனவே, நம்முடைய உம்மு இமாரா (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களைக் காப்பதற்காக போரில் இறங்கி விட்டார்கள். இந்தப் போரில் இவரின் கணவரும், மகனும் கூட கலந்து கொண்டு இஸ்லாத்தின் எதிரிகளைத் துவம்சம் செய்து கொண்டிருந்தார்கள். போர்; நடைபெற்றுக் கொண்டிருந்த அந்த சமயத்தில், எதிரிகளின் தாக்குதல் காரணமாக, மிகப் பலமான காயமொன்றை உம்மு இமாரா (ரலி) அவர்களைத் தாக்கியது, வேதனைப்படுத்தியது. முஹம்மது (ஸல்) அவர்களை நோக்கி, யா ராசூலுல்லாஹ்! நானும் என்னுடைய குடும்பத்தார்களும் மறுமையில் தங்களுடன் சொர்க்கத்தில் இருப்பதற்காக துஆச் செய்யுங்கள் என்று கூறினார்கள். ரசூல் (ஸல்) அவர்களும் அவ்வாறே துஆச் செய்ய, அதைக் கேட்ட உம்மு இமாரா (ரலி)  அவர்கள், இனி இந்த உலகத்தில் எந்த நல்லதும், எந்தக் கெட்டதும் என்னை அணுகினாலும் அதைப் பற்றி நான் இனிக் கவலைப்பட மாட்டேன் என்று கூறி விட்டு, எதிரிகளை எதிர்க்க களம் புகந்து விட்டார்கள். எதுவரைஎனில், எதிரிகளை எதிர்த்து எதிர்த்து, அவர்களது உடலில் 12 இடங்களில் காயம்பட்டது. இதைப் பற்றி முஹம்மது (ஸல்) அவர்கள், நான் என்னுடைய வலது பக்கமோ, அல்லது இடது பக்கமோ திரும்பும் பொழுதெல்லாம், அங்கு உம்மு இமாரா அவர்கள் இல்லாமல் இருந்ததில்லை, என்னைக் காப்பதற்காக அவ்வளவு வீரத்துடன் சுற்றிச் சுழன்று போரிட்டுக் கொண்டிருந்தார்கள் என்று கூறினார்கள்.

முஹம்மது (ஸல்) அவர்கள் பள்ளிவாசலில் நுழைகின்றார்கள். அந்தப் பள்ளியை இரண்டாகப் பிரித்து விடக் கூடிய அளவுக்கு ஒரு கயிறு கட்டப்பட்டிருந்தது. அதைப் பார்த்த முஹம்மது (ஸல்) அவர்கள், எந்த காரணத்திற்காக இந்தக் கயிறு கட்டப்பட்டிருக்கின்றது எனக் கேட்டார்கள். உங்களது மனைவி ஜைனப் அவர்கள் இரவுத் தொழுகையின் பொழுது, களைப்படைந்து விட்டால் நின்று கொண்டு, இந்தக் கயிற்றைப் பிடித்துக் கொண்டு தொழுவதற்காக இதைக் கட்டியிருக்கின்றார்கள் என்று பதில் கூறப்பட்டது. அதைக் அவிழ்த்து விடுங்கள், உங்களில் யாரேனும் தொழ நாடினால், அவரால் இயலும் வரையிலும் அவர் நின்று கொண்டு தொழட்டும், அவருக்கு இயலவில்லை எனில் அவர் ஓய்வெடுத்துக் கொள்ளட்டும் என்று முஹம்மது (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்).

ஒரு முறை அன்னை ஆயிஷா (ரலி) அவர்களுக்கு பரிசுப் பொருளாக ஒரு லட்சம் திர்ஹம் கிடைத்தது. அந்தப் பரிசுப் பொருள் கிடைத்த அன்று ஆயிஷா (ரலி) அவர்கள் நோன்பு நோற்றிருந்தார்கள். மேலும் அந்த நேரத்தில் அவரது வீட்டில் அடுத்த வேளைக்குச் சமைப்பதற்கு எந்தப் பொருளும் இல்லாத நிலையில், தனக்குக் கிடைத்த அந்தப் பரிசுப் பொருளை அனைத்தையும் அப்படியே தானம் செய்து விட்டார்கள். சிறிது நேரம் கழித்து வந்த அவரது வேலைக்காரப் பெண் கூறினாள் : உங்களது நோன்பை திறப்பதற்கு இறைச்சி வாங்குவதற்காகவாவது ஒரு திர்ஹத்தை நீங்கள் மீதப்படுத்தி வைத்திருக்கலாமே என்று வினவிய பொழுது, எனக்கு வீட்டில் எதுவுமே இல்லை என்பது ஞாபகம் இருந்திருக்கும்பட்சத்தில், அவ்வாறு தான் செய்திருப்பேன் என்று கூறினார்களாம்.

இங்கே நாம் இறைநம்பிக்கையாளர்கள் பின்பற்ற வேண்டிய சில முன்மாதிரிமிக்கவர்களைப் பற்றிக் கூறினோம். என்னருமைச் சகோதரிகளே! நாம் நம்முடைய நடத்தையிலே இறைநம்பிக்கை கொண்டவர்களாக இல்லை எனில், நம்முடைய குடும்பத்திற்கும் நம்முடைய கணவர்களுக்கும் நாம் எவ்வாறு நன்மையான காரியங்களை எடுத்துச் சொல்ல முடியும்? ஒரு பாத்திரத்தில் என்ன இருக்கின்றதோ அதைத் தான் அதிலிருந்து பெற்றுக் கொள்ள முடியும். அதைத் தவிர்த்து வேறு எதையாவது பெற்றுக் கொள்ள முடியுமா? சட்டியில் உள்ளது தானே அகப்பையில் வரும்!

இறைநம்பிக்கை கொண்டவர்கள் எப்பொழுதுமே தங்களது கணவருக்கும், பிள்ளைகளுக்கும் இறைவனுக்குப் பயந்து வாழக் கூடிய வாழ்க்கையையே தேர்ந்தெடுப்பார்கள். ஏனென்றால், உண்மையாளர்கள் எப்பொழுதுமே தங்களது இறைவனுக்குப் பயந்த வாழ்க்கையையே தேர்ந்தெடுப்பார்கள். அதனால் எவ்வளவு நட்டம் வந்த போதிலும்!

இஸ்லாத்தின் அந்தக் கடினமான தருணங்களில், உம்மு இமாரா (ரலி) அவர்கள் எவ்வளவு தீரத்துடன் போரிட்டடார்கள் என்பது மட்டுமல்ல, அவருடைய அந்த உண்மையான அர்ப்பணிப்பின் மூலம் தான், அந்த வாசகமும் அவரிடமிருந்து வெளிப்பட்டது, சொர்க்கச் சோலைகளில் என்னுடைய குடும்பத்துடன் இறைத்தூதர் (ஸல்) அவர்களுடன் இருப்பதற்காக, இந்த உலகத்தில் எந்த விலையையேனும் நான் தரத் தயாராகி விட்டேன் என்று கூறியதை நாம் பார்க்கின்றோம்.

அதே போல, தனக்குக் கிடைத்த அந்தப் பரிசுப் பொருட்களை வைத்து தன்னுடைய வாழ்வை வளமாக்கிக் கொள்ள வழிதேடாமல், தன்னுடைய அடுத்த வேளை உணவுக்கு என்ன இருக்கின்றது என்பதைப் பற்றிக் கூடக் கவலைப்படாமல், செல்வம் என்பது இறைவனின் அமானிதம், அதைப் பற்றி நாம் மறுமையில் கணக்குச் சொல்லக் கடமைப்பட்டிருக்கின்றோம் என்று ஆயிஷா (ரலி) அவர்கள் நினைத்த காரணத்தினால் தான், தனக்குக் கிடைத்த அந்தப் பெருந்தொகையை சற்றும் தாமதிக்காமல் விரைந்து அதைத் தானம் செய்து விட்டதைப் பார்க்கின்றோம்.

அடுத்து, அந்தப் பெண்கள் இறைவனுக்கு செய்யக் கூடிய கடமைகளில் முதன்மையானதாக உள்ள அந்த இறைவணக்கம் - தொழுகையை நிறைவேற்றவும், இன்னும் இரவுத் தொழுகைகள் மூலம் அதிகப்படியான இறைஉவப்பைப் பெற்றுக் கொள்ளவும், தங்களால் இயலாத நிலையிலும் எந்தளவு அர்ப்பணத்துடன் நடந்திருக்கின்றார்கள் என்றும் பார்க்கும் பொழுது நம் மேனி சிலிர்க்கின்றது.

இன்று நாம் விட்டில் பூச்சிகள் போல் மின்னி மறையக் கூடிய நட்சத்திரங்களை, மேக்அப் நாயகிகளை அல்லவா நம்முடைய முன்மாதிரிகளாக எடுத்துக் கொண்டிருக்கின்றோம். சகோதரிகளே இந்தநிலை மாற வேண்டும். நாம் நம்முடைய முன்மாதிரிகளாக அந்த ஸஹாபியப் பெண்மணிகளைத் தான் எடுத்துக் கொள்ள வேண்டும்.

முஃமின்களே! உங்களையும், உங்கள் குடும்பத்தாரையும் (நரக) நெருப்பை விட்டுக் காப்பாற்றிக் கொள்ளுங்கள்; அதன் எரிபொருள் மனிதர்களும், கல்லுமேயாகும். அதில் கடுமையான பலசாலிகளான மலக்குகள் (காவல்) இருக்கின்றனர். அல்லாஹ் அவர்களை ஏவிய எதிலும் அவர்கள் மாறு செய்ய மாட்டார்கள்;. தாங்கள் ஏவப்பட்டபடியே அவர்கள் செய்து வருவார்கள். (66:6)

பெண்களே உங்களது வெற்றிக்கான அடிப்படைகள் :

அறிவுள்ளவளாக இருக்க வேண்டும்.

ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் :

முஹம்மது (ஸல்) அவர்களது தூதுத்துவப் பணிக் காலத்தில், எப்பொழுதெல்லாம் இறைவசனங்கள் இறங்குகின்றனவோ, அந்த வசனத்தில் அடங்கியிருக்கும் ஹலாம் மற்றும் ஹராம் போன்றவற்றையும், மற்றும் அந்த வசனங்களில் அடங்கியுள்ள ஏவல்கள் மற்றும் விலக்கல்களையும், அதன் வார்த்தைக்கு வார்த்தை சரியான அளவில் நாங்கள் மனனமிடாமல் நாங்கள் இருக்க மாட்டோம். ஆயிஷா (ரலி) அவர்கள் தங்களது வார்த்தைகளால், அந்த அன்ஸாரிப் பெண்களைப் பற்றி இவ்வாறு புகழாரம்சூட்டுகின்றார்கள் : இந்த அன்ஸாரிப் பெண்கள் எவ்வளவு நல்ல பெண்கள்! ஆவர்களது அந்த வெட்கம் அவர்களது மார்க்கக் கல்வியைக் கற்றுக் கொள்வதில் எந்தவிதத்திலும் தடையாக இருந்ததில்லை.

முஹம்மது (ஸல்) அவர்கள் இறந்ததன் பின்பு, உம்மு ஐமன் (ரலி) அவர்களது கண்களில் துக்கத்தால் அடிக்கடி கண்ணீர் வழிந்தோடிக் கொண்டிருக்கும். அவரிடம் நீங்கள் ஏன் இவ்வாறு அடிக்கடி அழுகின்றீர்கள் என்று வினவிய பொழுது, முஹம்மது (ஸல்) அவர்கள் இறந்துவிடக் கூடியவர்கள் தான் என்பது எனக்கு நன்றாகத் தெரியும், ஆனால் நான் இப்பொழுது அழுது கொண்டிருப்பது எதற்காகவெனில், முஹம்மது (ஸல்)அவர்கள் இறந்ததன் பின்பு அவர்கள் மூலமாக வானிலிருந்து நமக்காக வந்து கொண்டிருந்த இறைவசனங்களும் நின்று விட்டதே என்று தான் அழுகின்றேன் என்று கூறினார்கள்.

அபூ செய்யிதல் குத்ரி (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள் : சில பெண்கள் முஹம்மது (ஸல்) அவர்களிடம் வந்து, ஆண்கள் மட்டும் அதிகமான நேரத்தை தங்களிடம் எடுத்துக் கொண்டு மார்க்கக் கல்வியைப் பெற்றுக் கொள்கின்றார்கள், எனவே பெண்களாகிய எங்களுக்கென தனியாக ஒரு நாளை ஒதுக்கி மார்க்க விளக்கம் அளித்தலைப் போதிக்குமாறு கேட்டுக் கொண்டார்கள். எனவே, முஹம்மது (ஸல்) அவர்களும் அவர்களுக்கென ஒரு நாளை ஒதுக்கி அன்றைய தினம் பெண்களுக்கு மார்க்கக் கல்வியைப் போதித்து, இஸ்லாமிய மார்க்க சட்டம் மற்றும் கட்டளைகளைப் பற்றியும் விளக்கி வந்தார்கள். (புகாரி).

நாம் நம்முடைய இஸ்லாமிய மார்க்கக் கல்வியை அதிகம் கற்றுக் கொள்வதற்கு அன்றாடம் நம்முடைய முயற்சிகளை அதிகப்படுத்திக் கொண்டே இருக்க வேண்டும். மேலே பாருங்கள்! அந்தப் பெண்கள் இஸ்லாமிய மார்க்கக் கல்வியைக் கற்றுக் கொள்வதில் எவ்வளவு அக்கறை காட்டியவர்களாகவும், அந்த ஏகனான அல்லாஹ்வின் மார்க்கத்தைக் கற்று அவனது நற்பொருத்தத்தைப் பெற்றுக் கொள்வதற்கு எந்தளவு ஆவலாக இருந்துள்ளார்கள். அவர்கள் கல்வியைக் கற்றுக் கொள்ள ஆர்வம் காட்டிய மாணவர்கள், மேதைகள் மற்றும் அதில் ஏற்படும் சங்கடங்களைத் தாங்கி அமைதியாக இருந்து, தங்களது மார்க்கக் கல்வியைக் கற்று அதன்படி நடப்பதில் இன்பங்கண்டவர்கள்.

அதன் மூலம் அவர்கள் அல்லாஹ்வையும், அவனது கட்டளைகளையும் அறிந்து கொண்டார்கள். அல்லாஹ்வுக்கும் அவனது தூதர் (ஸல்) அவர்களுக்கும் கீழ்ப்படிவதைத்தவிர வேறொரு இன்பம் என்பது கிடையாது என்பதையும், அவனது கட்டளைகளையும், அவனது தூதர் (ஸல்) அவர்களது கட்டளைகளை மறுப்பது போல முடிவில்லாத துன்பத்தைப் பெற்றுத் தரக் கூடியது வேறொன்றும் இல்லை என்பதையும் அவர்கள் முழுமையாக உணர்ந்திருந்தார்கள், கீழ்ப்படிவதில் இன்பத்தைக் கண்டார்கள்.

இன்று நம்முடைய வாழ்விலே பல்வேறு அலுவல்களுக்கும் நாம் நேரம் ஒதுக்குகின்றோம். பல்வேறு அலுவல்களும் அந்தளவு நம்மைச் சூழ இருக்க அனுமதிக்கின்றோம். ஆனால் நம்முடைய மார்க்கத்தைக் கற்றுக் கொள்வதற்கு நாம் நேரம் ஒதுக்குவதில்லை. மற்ற அலுவல்களில் இதுவும் ஒரு அலுவலாக நாம் ஏற்றுக் கொண்டு, மற்ற அலுவல்களுக்கு நேரத்தைச் செலவிடுவது போன்று இதற்கும் நேரத்தைச் செலவிடுவதில்லை. இதன் காரணமாக, இறைவன் நம்மைப் படைத்ததன் காரணத்தை, அவன் நம்மைப் படைத்ததன் பின்னணியில் உள்ள அர்த்தங்களை நாம் மறந்து, நாம் படைக்கப்பட்டதன் நோக்கத்தையே நாம் மறந்து விடுகின்றோம். நமக்கும் நம் குடும்பத்தவர்களுக்கும் நம்முடைய கணவர்மார்களுக்கும் இடைப்பட்ட உரிமைகளையும், அவற்றிற்கிடையே இருக்கின்ற வேறுபாடுகளையும் மறந்தவர்களாக இல்லாமல், அதில் இருக்கின்ற தனக்குக் கிடைக்கக் கூடிய சாதகங்களை உணர்ந்து வாழ்வது ஒன்றே, இறைவனின் பிரியத்தை நமக்குப் பெற்றுக் கொடுக்கக் கூடிய வாழ்க்கையாகும்.

அவள் நேர்மையானவளாக இருக்க வேண்டும்

வானங்களிலும், பூமியிலும் உள்ளவற்றை அவன் அறிகிறான,;; நீங்கள் இரகசியமாக்கி வைப்பதையும்; பகிரங்கமாக்கி வைப்பதையும் அவன் அறிகிறான்,;; மேலும், இருதயங்களிலுள்ளவற்றை யெல்லாம் அல்லாஹ் அறிகிறான். (64:04)

நாம் நம்முடைய வாழ்க்கையை நேர்மையானதாக அமைத்துக் கொள்ள வேண்டியது என்பது மிகவும் அவசியமானதொன்றாகும், நாம் பொய்யானவற்றிலிருந்தும், ஏமாற்றுதல், தவறான தகவல்களைப் பெற்றுக் கொள்ளுதல் போன்றவற்றிலிருந்து விலகியே இருக்க வேண்டும். மேலே நாம் பார்த்த இத்தகைய தவறான நடத்தைகள் சில நேரம் சாதகமானவைகளை நமக்கு ஏற்படுத்தித் தரலாம், ஆனால், அதன் பக்கவிளைவுகள் நீங்கள் வாழ்நாள் முழவதும் உங்களையும், உங்களது உறவுகளையும் துண்டித்து விடக் கூடிய அபாயத்தைத் தோற்றுவித்து விடும் என்பதை மறந்து விடாதீர்கள்.

ஈமான் கொண்டவர்களே! நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்; (எந்நிலையிலும்) நேர்மையான சொல்லையே சொல்லுங்கள். (அவ்வாறு செய்வீர்களாயின்) அவன் உங்களுடைய காரியங்களை உங்களுக்குச் சீராக்கி வைப்பான்; உங்கள் பாவங்களை உங்களுக்கு மன்னிப்பான்; அன்றியும் அல்லாஹ்வுக்கும் அவன் தூதருக்கும் எவர் வழிப்படுகிறாரோ, அவர் மகத்தான வெற்றி கொண்டு விட்டார். (33:70-71)

பணிவுள்ளவளாக இருக்க வேண்டும்

முஹம்மது (ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் : தர்மம் என்பது உங்களது சொத்தின் அளவைக் குறைத்து விடாது. அல்லாஹ்வுடைய திருப்பொருத்தத்திற்காக யாரொருவர் மன்னிப்பைக் கைக்கொள்கின்றவராகவும் இருக்கின்றாரோ மற்றும் யாரரொருவர் பணிவையும் கைக்கொள்கின்றாரோ, அல்லாஹ் அவருடைய மதிப்பை உயர்வடையச் செய்கின்றான், அவனது தகுதியையும் உயர்த்தி விடுகின்றான். (முஸ்லிம்).

தன்னடைய சொந்த திறமைகள் மற்றும் சாதனைகள் குறித்து மிகவும் பெருமைப்படக் கூடியவனாக இருக்கின்றான் என்பது, மனிதனிடம் அமைந்திருக்கக் கூடிய ஒரு இயற்கையானதொரு செயலாகும். இந்த உலகத்தில் அல்லாஹ் நமக்கு வழங்கியிருக்கின்ற அருட்கொடைகள் குறித்த அகப் பார்வையை நாம் இழந்தவர்களாக ஆகி விடுகின்றோம். இந்த நமக்கு வாய்க்கப்பெற்ற திறமைகள் மற்றும் சாதனைகள் யாவும் இறைவன் நமக்கு வழங்கியிருக்கின்ற அருட்கொடைகள் என நினைத்து, அவை குறித்துப் பெருமை பாராட்டாமல் நாம் மிகவும் அடக்கத்துடன் பிறருடன் நடந்து கொள்ள வேண்டும். நம்மில் யாரும் முழுமையடைந்தவர்கள் கிடையாது. முற்றும் அனைத்துத் திறமையையும், வாய்ப்புகளையும் பெற்றவர்கள் கிடையாது. எல்லாத் திறமைகளும் நம்மிடம் கிடையாது, நாம் பெற்றிருப்பது மிகச் சிலவே என்பது பற்றி பல்வேறு சூழ்நிலைகளில் அவற்றை நாம் ஒத்துக்கொள்ள மறுத்து வருகின்றோம். யாரொருவர் அல்லாஹ்வுக்கு மிகவும் பணிந்த நிலையில் நடக்கின்றோரோ அத்தகையவர்களுக்கு இறைவன் மிகச் சிறந்த அங்கீகாரத்தை வழங்கி விடுகின்றான் மற்றும் இறைவனைத் திருப்தி கொண்டு, அவனது திருப்பொருத்தத்திற்காகவே வாழும் வாழ்க்கையை விடவும் மிகச் சிறந்த பரிசு இந்த உலகில் வேறு என்னவாக இருக்க முடியும்.

அவள் கடமை தவறாதவளாக, நேர்மையுடையவளாக இருக்க வேண்டும்

முஹம்மது (ஸல்) அவர்கள் கூறியதாக முஆத் இப்னு ஜபல் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் : கண்ணியத்திற்கெல்லாம் தலைவனான அல்லாஹ் கூறுகின்றான் : எவர்கள் தன்னுடைய மேன்மையையும் உயர்வையும் பயந்தவர்களாக, ஒருவர் மற்றவரை விரும்பியவர்களாக நடக்கின்றார்களோ, அத்தகையவர்களுக்கு ஒளி மிகுந்த இடங்களில் ஆசனங்கள் அமைக்கப்படும், நபிமார்களும், முஜாஹிதுகளும் பொறாமை கொள்ளும் அவர்கள் (உயர்ந்த தகுதிகளில்) இருப்பார்கள். (திர்மிதி).

இந்த உலகமானது ஒரு சோதனைக்களமாகும், எப்பொழுதும் நம்மை அது எந்த வழியினைத் தேர்ந்தெடுத்துக் கொள்வது என்பது பற்றிய தொடர் போராட்டத்திலும், எதனை நாம் நல்லதென்று தேர்ந்தெடுத்துக் கொள்வது மற்றும் நாம் அறிந்து கொண்டது சரியா என்பது பற்றிய மன ஊசலாட்டங்களிலும் இருந்து கொண்டே இருக்க வேண்டியிருக்கின்றது. சுpல சமயங்களில் நாம் அல்லாஹ் வழக்கியிருக்கின்ற அருட்கொடைகளை வழிகாட்டுதல்களைப் புறக்கணித்து விடுவதன் காரணம்,  அதனைப் பின்பற்றுவது என்பது மிகவும் கடினமானதொரு செயலாக நாம் எண்ணிக் கொள்வது தான் காரணமாகும். நாம் (இறைவனுக்கு மாறு செய்யக் கூடியதொரு செயலை முதன் முதலில் இப்பொழுது செய்யும் பொழுது, அது நமக்கு பாரமானதொரு செயலாக இல்லாமல், இப்பொழுது மட்டும் தானே பின் எப்பொழுதும் நாம் அவற்றை செய்து கொண்டிருக்கப் போவதில்லையே என்று தோன்றும். ஆனால், இறைவனுக்கு எந்தநிலையிலும் கட்டுப்படாத இந்தத் தன்மை காலப் போக்கில் நம்மிடையே மாற்ற முடியாததொரு, நிலையானதொரு பழக்கமாக மாறி விடும் என்பதிலும், அது நம்மை நரக நெருப்பிற்கு இட்டுச் சென்று விடும் என்றும் நாம் கவனமாக இருக்க வேண்டும். மேலும், நாம் செய்கின்ற அனைத்தையும் அல்லாஹ் உற்று நோக்கியவனாக இருக்கின்றான், அவனது பார்வையில் இருந்து எதுவும் மறைந்து விடாது என்ற எண்ணம் எல்லா நேரங்களிலும் நம் இதயங்களை ஆக்கிரமித்துக் கொண்டிருக்க வேண்டும். இறைவனுடைய தண்டனையில் இருந்து தன்னைக் காத்துக் கொள்ள விரும்புகின்ற ஒரு நபர் வழிகேடுகளிலிருந்து முற்றிலுமாக எந்த நிலையிலும் தவிர்ந்து வாழப் பழகிக் கொள்ள வேண்டும். அத்தகைய தண்டனைகளிலிருந்து தவிர்ந்து கொள்வதற்கு குர்ஆன் நெடுகிலும் மனிதனை ஊக்கப்படுத்தக் கூடிய வசனங்கள் நிறைந்து காணப்படுவதைக் காணலாம். தான் மேற்கொண்டிருக்கும் நேர்வழியின் காரணமாக எத்தனை துன்பங்கள் தன்னை வந்து தாக்கினாலும், அதனைப் பொருட்படுத்தாது வாழ்ந்த எத்தனையோ சத்திய சீலர்களை திருமறை நெடுகிலும் உதாரணங்களாக நமக்கு இறைவன் காட்டிக் கொண்டிருப்பதை நாம் பார்க்கின்றோம். அவர்களின் அத்தகைய அந்த நேர்மையான போக்கு இறைவனது திருப்பொருத்தத்தின் காரமாகவே அவ்வாறு அமைந்திருந்தது என்பதையும் நாம் காண முடிகின்றது. அவர்கள் தங்களது ஈமானைப் பாதுகாத்துக் கொள்வதற்காகவே அத்தகைய சத்திய வழியைப் பின்பற்றி சோதனைகளைத் தாங்கினார்கள் என்பதையும் காண முடிகின்றது.

அல்லாஹ்வினுடைய கட்டளைகளை அனுதினமும் நாம் பின்பற்றி நடப்போமானால், அதற்காக இஸ்லாத்தினுடைய ஆழ்ந்த ஞானத்தைக் கற்று அவற்றை அதிகப்படுத்திக் கொள்வதற்கு இடைவிடாது உழைப்போமென்றால், நாம் எதனை விரும்புகின்றோம் அல்லது எதனை வெறுக்கின்றோம் என்ற சுயஆதிக்கத்திற்கு நம்மை இட்டுச்சென்று விடாமல், எதுவொன்றையும் இறைவனது திருப்பொருத்தத்தை மட்டும் பெற்றுக் கொள்வதற்காக நம் வாழ்வின் அனைத்து அலுவல்களையும் அமைத்துக் கொள்வதானது, இறைவனது அருட்கொடைகளை இம்மையிலும், மறுமையிலும் பெற்றுக் கொடுத்து விடுவதாக அமைந்து விடும். இதை விட சிறந்த பாக்கியம் நமக்கு வேறென்ன வேண்டும்.

அவள் திருமணத்தை மதிப்புடையதாக ஆக்குபவளாக இருக்க வேண்டும்

இறைவன் திருமணம் செய்து கொள்வதைக் கண்டிப்பானதொரு கடமையாக ஆக்கி இருக்கின்றான். இத்தகைய திருமண பந்தங்கள் வலுவுள்ளதாக அமைந்து விடுவதற்கு, ஒவ்வொரு ஆணும், பெண்ணும் தங்களுக்குத் தகுந்த துணையைத் தேர்ந்தெடுத்துக் கொள்வதில் கண்ணும் கருத்துமாக இருத்தல் வேண்டும். துரதிருஷ்டவசமாக நம்மில் பலர் திருமணத்தைப் பொருளாதார காரணங்களுக்காகவும், குடும்ப அந்தஸ்துக்காகவும், கல்வி மற்றும் அழகுக்காக ஆகிய காரணங்களை முன்னிறுத்தியே மணமகள் அல்லது மணமகனைத் தேர்வு செய்வதைப் பார்க்கின்றோம். ஆனால் நாம் முக்கியமாக கணவர்களின் தேர்வை ஒரு சந்தர்ப்ப வசமாக வாய்த்தாகக் கருதுகின்றோமே ஒழிய, நமது வருங்காலம் மிகவும் பிரகாசமாக அமைவதற்குத் தகுதியானவர் தானா, மற்றும் நம்முடைய ஈமானைத் தக்கவைத்துக் கொள்வதற்கு ஒத்துழைக்கக் கூடியவர் தானா என்பதைக் கணிக்க மறந்து விடுகின்றோம். பெண்களாகிய நாம் நமக்குரிய துணையை மணமகனைத் தேர்ந்தெடுக்கும் பொழுது, அவர் இறையச்சமுடையவர் தானா என்பதையும், அவருடைய ஒவ்வொரு நாளும் இறையச்சத்துடனேயே கழியக் கூடியது தானா என்பதையும் கவனத்தில் கொண்டு, மணமகனைத் தேர்வு செய்ய வேண்டும். மேலும் அவர் ஒரு இஸ்லாமியனாக வாழ்வதற்கு, அல்லாஹ் விதித்திருக்கும் அத்தனை வரம்புகளையும் பேணி வாழக் கூடியவர் தானா, அதற்கான தகுதிகளைப் பெற்றவர் தானா என்பதையும், தன்னுடைய இஸ்லாமிய பழக்கவழக்கங்களையும் அதற்கான முயற்சிகளையும் அதிகமதிகம் செய்யக் கூடியவர் தானா என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். மேலே கூறிய அத்தனை அடிப்படைகளையும் ஆராயும் நாம், அதுவல்லாத வேறு எதனையும் அவரைத் தேர்ந்தெடுப்பதற்குரிய தகுதிகளாகக் கொள்ளக் கூடாது. இத்தகைய கணவன் தான் ஒரு முஸ்லிம் பெண்ணுக்கு ஏற்புடையவனும் மற்றும் அவன் தான் உங்களுக்கு இறுதி வரை உங்கள் மனங்கவரக் கூடியவனாகவும் உங்களை சந்தோசப்படுத்தக் கூடியவனாகவும் இருப்பான். இத்தகையவன் தான் குடும்பப் பிணைப்பில் கணவன் மனைவி ஆகிய உறவுகளுக்கு இடையே உள்ள நெருக்கத்தைப் பேணி, அதன் அங்கமாகவும், ஒருவருக்கொருவர் உதவி, விட்டுக் கொடுத்து வாழக் கூடியவனாகவும், குடும்பம் எப்பொழுதும் சமநிலையுடன், ஒருவர் மற்றவரிடத்தில் சமமான அன்புடன் வாழும் பாக்கியத்தை; தரக் கூடியவானகவும் அவன் எப்பொழுதும் திகழ்வான்.

கீழ்படிதல் உடையவளாக இருப்பாள்

(ஆண், பெண் இருபாலாரில்) அல்லாஹ் சிலரை சிலரைவிட மேன்மைப்படுத்தி வைத்திருக்கிறான். (ஆண்கள்) தங்கள் சொத்துகளிலிருந்து (பெண் பாலாருக்காகச்) செலவு செய்து வருவதினாலும், ஆண்கள் பெண்களை நிர்வகிக்க வேண்டியவர்களாக இருக்கின்றனர். எனவே நல்லொழுக்கமுடைய பெண்டிர் (தங்கள் கணவன்மார்களிடம்) விசுவாசமாகவும், பணிந்தும் நடப்பார்கள். (தங்கள் கணவன்மார்கள்) இல்லாத சமயத்தில், பாதுகாக்கப்பட வேண்டியவற்றை, அல்லாஹ்வின் பாதுகாவல் கொண்டு, பாதுகாத்துக் கொள்வார்கள்;. (4:34)

அல்லாஹ் தன்னுடைய திருமறைக் குர்ஆனில் குறிப்பிட்டுக் கூறுவதைப் போல, பெண்கள் தங்கள் கணவர்களுக்கு கீழ்படிதல் உள்ளவர்களாக நடந்து கொள்ள வேண்டும். மேலும், இத்தகைய அறிவுரைகள் கொண்ட வசனங்கள் மற்றும் நபிமொழிகள் ஏராளமாக இருக்கக் காண்கின்றோம். ஆனால், துரதிருஷ்டவசமாக, இந்தக் கீழ்படிதல் என்ற அறிவுரை மக்களிடம் ஒரு எதிர்மறையான உணர்வையே ஏற்படுத்தி வருகின்றது. ஆனால் பெண்களுக்குக் கொடுக்கப்பட்ட இந்த அறிவுரையை சில ஆண்கள் மிகத் தவறாகப் பயன்படுத்துவதையும், ஆண்கள் பெண்களை சுதந்திரமாக எல்லா வகையிலும் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கலாம் என்றும், பெண்களை அடிமைகள் போன்றும், பெண்களின் உணர்ச்சிகளை அவர்களது உணர்வுகளை மதிக்காத முறையிலும் நடந்து வருவதைக் காண்கின்றோம். மேலும், இறைமறையின் இந்தக் கட்டளையானது, ஒவ்வொரு சமுதாயத்திலும் உள்ள பழக்கவழக்கத்தைப் போல நம் இஸ்லாமிய சமுதாயத்திலும் உள்ளதொரு சமுதாயப் பழக்கம் என்று எண்ணி விடுகின்றனர். மேலும், இத்தகைய கட்டுப்பெட்டித் தனமான வாழ்க்கை ஒரு பிற்போக்குத் தனமானது, இது இந்தக் காலத்திற்கு உதவாது என்றும் எண்ணி விடுகின்றனர். எனவே, மிகவும் கவனமாகத் துணையைத் தேட வேண்டும்

மனைவிமார்களைப் பொறுத்தவரை, அவர்கள் தங்களது கணவன்மார்களது தேவைகளை அறிந்து, அவற்றை நிறைவேற்றுவதில் கண்ணும் கருத்துமாக இருக்க வேண்டும், அதில் தமது முழு முயற்சியையும் வழங்குவதோடு, இறைவன் தடுக்கப்பட்ட வழிகளில் கணவன்மார்கள் செல்ல விடாமலும் தடுக்கக் கூடியவர்களாகவும் இருக்க வேண்டும். மேலும், நம்முடைய எண்ணத்தில் முதலில் அல்லாஹ்வையும், அவனது மார்க்கத்தையும் மேலாகக் கருதி, நம்முடைய மணவாழ்வை ஒருவருக்கொருவர் சந்தோசத்தைப் பகிர்ந்து கொண்டு வாழக் கூடியதான அனுபவத்தைப் பெற்றுக் கொண்டு விட்டால், மணவாழ்வில் கடினமான தருணங்கள் என்பது ஏன் எழப் போகின்றது, இறைவன் நாடினால்.. மேலும், நம்முடைய கணவன்மார்களின் குணங்கள் மற்றும் புரிந்துணர்வின்மை என்பது திடீரென மாற்றத்தை நோக்கிச் செல்லுமானால், அல்லாஹ்வுடைய திருப்பொருத்தத்திற்காக வேண்டி, அதனைச் சகித்து வாழ்வதன் காரணமாக இறைவனுடைய திருப்பொருத்தம் மட்டுமல்ல, நம்முடைய கணவருக்கு நம்மைப் புரிந்து கொள்வதற்கு ஒரு சந்தர்ப்பத்தையும் நாம் வழங்குகின்றோம். அந்தப் புரிந்துணர்வு ஒரு முறை ஏற்பட்டு விட்டதென்றால், பின்பு எந்நாளும் உங்கள் வாழ்வில் சந்தோசமே!! ஊடலில்லாமல் வாழ்வு ஏது, ஊடலுக்குப் பின் தானே உறவுகள் இறுக்கம் பெறுகின்றன என்பது நடைமுறை உண்மை தானே.

அவள் மன்னிப்பைக் கைக் கொள்கின்றவளாக இருக்க வேண்டும்

நம்மில் யாரும் தூய்மையானவர்கள் இல்லையே, எனவே, நாம் ஒவ்வொருவரும் தவறு செய்யக் கூடியவர்களே என எண்ணி, நாம் தவறு செய்யும் பொழுது எப்படி மன்னிக்கப்படுகின்றோமோ அது போல பிறர் தவறு செய்யும் பொழுதும், நாம் மன்னிப்பை வழங்க வேண்டும். கணவன் மனைவி ஆகியோருக்கிடையே கருத்து வேறுபாடுகள் எழும் பொழுது, ஒருவர் மற்றவர் கருத்தைக் கூறுவதற்கு உரிமை படைத்தவர், சுதந்திரம் பெற்றவர் என்ற கருத்து இருவரிடமும் மேலோங்க வேண்டும். நாம் வாழக் கூடிய இந்த வாழ்க்கையின் பரந்த தருணங்களில், நம்முடைய வாழ்வில் ஏற்படுகின்ற பல்வேறு முரண்பாடுகளை நாம் மீண்டும் சில ஆண்டுகள் கழித்து அவற்றை நினைவுபடுத்திக் கூடப் பார்க்க மாட்டோம். ஓரு குடும்பத்தின் மழலைகளை வளர்த்தெடுப்பதற்காக வேண்டியும், வாழ்வில் ஏற்படும் பல்வேறு சிக்கல்களை எதிர்;த்துப் போராடி அவற்றைத் தீர்ப்பதற்கும் தம்பதிகள் தங்களுக்கிடையே பந்தத்தையும், உறவையும் பிரிக்க முடியாத அளவில் இறுக்கமானதாக ஆக்கிக் கொள்வது அவசியமாகும். ஓரு உன்னதமான உறவின் அடையாளம் எதுவென்றால், தவறு செய்தது நானா அல்லது நீயா என்ற போட்டிகள் இல்லாமல், நாம் ஒருவரை ஒருவர் சார்ந்து வாழக் கூடியவர்கள், நம்முடைய எஞ்சிய வாழ்நாட்களை ஒருவர் மற்றவருடன் தான் கழிக்கப் போகின்றோம் என்ற நினைப்பு மேலோங்கி, தவறு செய்தவர் யார் என்ற ஆராய்ச்சியை நடத்தாமல், தாமே வலிய வந்து ஒருவர் செய்த தவறை மற்றவர் மன்னிக்கும் பழக்கத்தை மேற்கொள்ள வேண்டும். அல்லாஹ் இத்தகைய வாழ்வியல் உதாரணங்கள் பலவற்றை நமக்கு உதாரணங்களாகக் காட்டியே வந்திருக்கின்றான், மன்னிப்பு வழங்கும் தன்மை என்பது அவனது அருட்கொடையில் ஒன்றாகவும் இருக்கின்றது. நீங்கள் விரும்புகின்றவர்களின் மீது மன்னிப்பைக் கைக்கொள்வதற்கு, உங்களது இதயத்தை எப்பொழுதுமே மிருதுவாகவே வைத்திருங்கள், அதுவே சந்தோசமான வாழ்க்கைக்கு அடித்தளமுமாகும்.

அவள் நல்லதொரு புத்திமதிகளை வழங்கக் கூடியவளாக இருக்க வேண்டும்

முஹம்மது (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

இஸ்லாத்தினைப் பின்பற்றக் கூடிய ஒரு மனைவியைப் பெற்றிருக்கின்றவனுடைய மனைவியானவள், தன்னுடைய கணவனுக்கு இந்த உலக வாழ்க்கையைப் பற்றிய விவகாரங்களிலும், மற்றும் அவனுடைய மார்க்கத்தைப் பற்றிய விவகாரங்களிலும் அவள் அவனுக்கு உதவக் கூடியவளாக இருப்பாள், அவன் பெற்றிருக்கின்ற பொருள்களிலேயே மிகச் சிறந்தது, இத்தகைய தன்மையுடைய பெண்ணைப் பெற்றிருப்பதேயாகும். (பைஹகி).

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் இறைவனுடைய சிறப்புத் தூதர் ஜிப்ரீல் (அலை) அவர்களை முதன் முதலில் பார்த்த பொழுது, அவர்கள் நிலைகுலைந்தே போனார்கள். பயத்துடனேயே தன்னுடைய வீட்டை நோக்கி விரைந்தார்கள். வீட்டில் நுழைந்தவுடன், அங்கிருந்தவர்களை அழைத்து என்னைப் போர்த்துங்கள், என்னைப் போர்த்துங்கள் என்று கூவி அழைத்தார்கள். அவர், தான் பாதுகாப்பாக இருக்கின்றோம் என்பதை உணரும் வரை அவரருகே இருந்து, அவருக்குப் போர்வையைப் போர்த்தியும் விட்டார்கள். தன்னுடைய மனைவியாகிய கதீஜா (ரலி) அவர்களிடம், தான் எதனால் இந்த நிலைக்கு ஆளானேன் என்பதை விவரித்துக் கூறினார்கள். அப்பொழுது கதீஜா (ரலி) அவர்கள் இவ்வாறு ஆறதல் கூறினார்கள் : இறைவன் எப்பொழுதும் உங்களைக் கைவிட மாட்டான், நீங்கள் பயப்பட வேண்டாம், நீங்கள் உங்கள் தொப்புள் கொடிச் சொந்தங்களை இணைக்கின்றீர்கள், நீங்கள் பலவீனமானவர்களுடைய சுமையைத் தாங்கிக் கொள்கின்றீர்கள், தேவையுடையவர்களுக்கு உதவுகின்றீர்கள், உங்கள் விருந்தினர்களை உபசரிக்கின்றீர்கள், உண்மையின் வழியில் (அவற்றை நிலைநிறுத்த) நீங்கள் சிரமங்களை மேற்கொள்கின்றீர்கள். (புகாரி)

மேலும், இறைத்தூதர் (ஸல்) அவர்கள் மிகத் தேவையுடையவர்களாக இருந்த பொழுது, யார் அவருக்கு முதன் முதலில் உதவினார்கள்? அதே கதீஜா (ரலி) அவர்கள் தான். இத்தகைய பண்புகள், அன்புடனும் மற்றும் வாய்மையுடனும், அவர்கள் தன் கணவர் கொண்டு வந்த தூதுத்துவத்தை ஏற்றுக் கொண்டதும் மட்டுமல்லாது, அந்த தூதுத்துவப் பணியில் அவர் அடைந்து கொண்டிருந்த சொல்லொண்ணா துன்பங்களைத் தாங்கக் கூடிய அளவுக்கு உள வலிமையையும், உறுதியையும் தன்னுடைய அன்பான அரவணைப்பால், அன்னை கதீஜா (ரலி) அவர்கள் தன்னுடைய கணவருக்கு வழங்கினார்கள். அல்லாஹ் தனக்கு அடுத்தபடியாக, அன்னை கதீஜா (ரலி) அவர்களைத் தான் இறைத்தூதர் (ஸல்) அவர்களுக்கு ஆறதல் வழங்கக் கூடிய, அமைதி அளிக்கக் கூடியதொரு ஆத்மாக உருவாக்கி, இறைத்தூதுத்துவப் பணியை முன்னெடுத்துச் செல்வதற்கும், அதில் ஏற்பட்டிருக்கும், ஏற்படப் போகும் விளைவுகளைச் சந்திப்பதற்குரிய தேவையைப் பெற்றுக் கொள்வதற்கும், ஒரு ஆத்மார்த்த உதவியாக அன்னையை இறைவன் திகழச் செய்தான்.

இன்றைக்கு நம்முடைய திருமணங்கள் வெற்றிகரமாக அமைந்து விடுவது என்பது, கணவன் மற்றும் மனைவி குடும்பங்கள் இரண்டும் மிகவும் வசதியான குடும்பங்களாக அமைந்து விடுவதில் இருக்கின்றது என்று நாம் நினைத்துக் கொண்டிருக்கின்றோம். ஆனால் வெற்றிகரமான மணவாழ்க்கை என்பது, ஒரு கணவன் தன்னுடைய பிரச்னைகள், சந்தேகங்கள் மற்றும் ஆலோசனைகளுக்கு எப்பொழுதும் தன்னுடைய மனைவியின் உதவியை, ஆலோசனையை எதிர்பார்க்கக் கூடியவனாகவும், அவளிடமிருந்து அவற்றைப் பெற்றுக் கொள்ளக் கூடியவனாகவும் இருக்க வேண்டும். மனைவியானவள் தான் தன்னுடைய கணவனின் உள்ளத்தையும், அவனது எண்ணத்தையும், சிந்தனை ஓட்டங்களையும் தெளிவாக அறியக் கூடிய மிகச் சிறந்த சந்தர்ப்பத்தைப் பெற்றிருக்கின்றாள், எனவே அவள் தான், தன்னுடைய கணவனுக்கு உதவி தேவைப்படும் நேரத்தில், அவனது நோக்கங்களை அடைந்து கொள்வதற்குத் தகுந்த அறிவுரைகள் தேவைப்படும் நேரத்தில், மிகச் சிறந்த ஆலோசனைகளை வழங்கி, அவனது குறிக்கோளை அடைவதற்கு உதவிகரமாக இருத்தல் வேண்டும். முஹம்மது (ஸல்) அவர்களின் வாழ்வில் ஏற்பட்ட கடுமையான தருணங்களின் பொழுது,  அவர்களது மனைவிமார்கள் இத்தகைய செயல்பாடுகளின் மூலம் தான், முஹம்மது (ஸல்) அவர்களுக்கு பக்கபலமாக இருந்தார்கள் எனும் பொழுது, நாமும் ஏன் இத்தகைய வழிமுறைகளைக் கடைபிடிக்கக் கூடாது.

மேலும், தன்னுடைய கணவன் இறைவனுக்கு மாறுசெய்கின்ற வழிகளில் செல்லும் பொழுது, இஸ்லாத்தின் கொள்கைகளை அவனுக்கு மிகச் சரியாக அடையாளம் காட்டி, அவனை இஸ்லாத்தின் வழியில் தடம்பதித்துச் செல்வதற்கு வழித்துணை போன்றவளாக மனைவி செயல்பட வேண்டும். அதன் மூலம் அவனை மிகச் சிறந்த இறையடியானாக உருமாற்ற வேண்டிய அரும்பணி மனைவியைச் சார்ந்ததே. இவள் அவன் நேர்வழியில் நிலைபெறுவதற்கும், வழி தவறாமல் இருப்பதற்கும் அடிக்கடி அவனுக்காக இறைவனிடம் பிரார்த்தனை புரிந்த வண்ணமாக இருக்கவும் வேண்டும். அதற்காக இறைவனுடைய உதவியை கேட்ட வண்ணமே இவள் இருக்க வேண்டும்.

அவள் கண்ணியமானவளாக இருக்க வேண்டும்

நாம் ஒவ்வொருவரும் நல்லதொரு வேலையைத் தான் செய்து கொண்டிருக்கின்றோம் என்று கூறவே விரும்புகின்றோம். இதை நம்முடைய திருமணத்திலும் கடைபிடிக்க வேண்டும். நம் கணவன் செய்யக் கூடிய வாழ்வின் முன்னேற்றத்திற்கான முயற்சிகளை நாம் மிக சிரத்தையோடு கவனித்துக் கொண்டிருக்கின்றோம் - அதைப் பற்றிய அக்கறை உள்ளவர்களாக, அவற்றைப் பாராட்டுகின்றவர்களாக நாம் இருக்கின்றோம் என்பதை, நம் கணவர்களுக்கு நாம் காண்பிக்க வேண்டும் அல்லது அவர்களுக்கு உணர்த்த வேண்டும். மனைவி செய்யக் கூடிய இந்தப் பணி மிக இலகுவானதல்ல. நம் கணவன்மார்கள் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு புதுப் புது பிரச்னைகளுக்கும் சவால்களுக்கும் முகம் கொடுக்கக் கூடியவர்களாக இருக்கின்றார்கள், அவர்கள் சந்திக்கின்ற ஒவ்வொரு பிரச்னைகளின் போது அவர்கள் எடுக்கக் கூடிய முயற்சிகள், அந்த முயற்சிகள் மூலம் தான் சந்திக்கின்ற சவால்கள் என்பது, நம் குடும்பத்திற்காக அவர் படுகின்ற அர்ப்பணிப்புகள் என்பதை நாம் கவனித்தில் கொண்டு, அவரது முயற்சியை ஊக்கப்படுத்துபவளாக, அவர் மீது அக்கறை கொண்டவளாக தன்னை எப்பொழும் அவனுக்கு அடையாளப்படுத்திக் கொண்டே இருக்க வேண்டும்.

ஆனால் நம்மில் பலர் அவர்கள் சந்திக்கின்ற பிரச்னைகள் பற்றி பாராமுகமாகவே இருக்கின்றோம். ஓவ்வொரு நாளும் அவர்கள் படுகின்ற அவஸ்தைகள் நம் குடும்ப முன்னேற்றத்திற்கு அவர் அளிக்கின்ற அர்ப்பணிப்புகள் என்பதை நாம் உணர்ந்து, அதற்குத் தகுந்தாற்போல் நம் கணவரை நாம் மதித்து, அவரது முயற்சிகளுக்கு ஊக்கம் கொடுப்பவர்களாகத் திகழ வேண்டும். அப்பொழுது தான் அவன் ஒரு மனைவியின் தேவையை  உணருவான்.அப்படி உணர்ந்து விட்டால், நீங்கள் கண்ணியமானவளாக அவனது இதயத்தில் குடி கொண்டு விடுவீர்கள் என்பதை நாம் சொல்ல வேண்டியதில்லை.

அவள் அழகானவளாக இருக்க வேண்டும்.

நாம் திருமணத்தின் பொழுது, நம்முடைய கணவர்களுக்கு விலை மதிக்க முடியாததொரு அன்பளிப்பாக அவர்களிடம் வந்து சேர்கின்றோம். நம்முடைய அழகு அவர்களை வசீகரப்படுத்துவதாகவும், அவர்களை உற்சாகப்படுத்துவதாகவும் இருக்கும் பொழுது தான், அவர்களது எண்ணங்கள் இன்னொருத்தியைத் தேடிப் போகாது. நம்முடைய உடலழகு தான் அவர்களுக்கும் நமக்கும் இடையே ஹலாலான - இஸ்லாத்தினால் அனுமதிக்கப்பட்ட தொடர்புகளை வலுப்படுத்தக் கூடிய குறிப்பிடத்தக்கதொரு அம்சமாக இருக்கின்றது என்பதை நாம் நம்முடைய அனுபவங்கள் மூலம் அறிந்து கொள்ளலாம்.  எனவே, நாம் நம்முடைய அழகை எப்படி திருமணத்தின் பொழுது கொண்டு வந்தோமோ, அதைப் போலவே அதனை ஒரு பரிசுப்பொருளைப் பாதுகாப்பது போல நாம் பாதுகாக்க வேண்டும். நம்முடைய கணவன் வேலை விட்டுத் திரும்பி வரும் பொழுது, நம்மைப் பார்க்க வேண்டும் என்ற ஆவல் கொண்டவனாக நம்மை நோக்கி வர வேண்டும் என்ற உணர்வை அவனுக்குள் நாம் ஏற்படுத்த வேண்டும். நாம் நம்முடைய சிகை அலங்காரம், உடை அலங்காரம் மற்றும் நம்முடைய தோற்றம் ஆகியவற்றை பொடுபோக்குத் தனமாக, அதனைப் பற்றி எந்த அக்கறையும் எடுத்துக் கொள்ளாமல், நம்முடைய தோற்றம் நம் கணவர்களை திருப்தி இழக்கச் செய்யக் கூடியதாக, நம்மைப் பற்றி எந்த அக்கறையும் எடுத்துக் கொள்ள இயலாத நிலைக்கு நாம் தள்ளிவிடக் கூடாது. நம் கணவர்களிடம் நம்மை ஒப்படைப்பதற்கு, நாம் சிரத்தை எடுத்துக் கொள்வதோடு அதற்காக நேரத்தையும் நாம் செலவிட வேண்டும்,  அதன் மூலம் நம்மை நோக்கி அவர்களைக் கவர்வதற்கு சிறப்பு வழிகளையும் நாம் கடைபிடிக்கும் பொழுது, ஒவ்வொரு தடவையும் அவர்களுக்கும் நமக்கும் இருக்கும் அந்த உறவைப் புதுப்பித்துக் கொள்ளக் கூடிய உறவு மலர்கின்றது.

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் :

ஒரு சொர்க்கத்துப் பெண்மணியை நான் உங்களுக்குக் காண்பிக்கட்டுமா? நான் கூறினேன். ஆம்! காட்டுங்கள். அவர் கூறினார் : இந்தக் கறுப்பு நிறப் பெண், இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் வந்து, நான் இழுப்பு நோயால் பாதிக்கப்படுகின்றேன், (அப்பொழுது) என்னுடைய உடம்பில் போர்த்தியிருக்கும் உடைகள் விலகி விடுகின்றன. எனவே, இறைத்தூதர் (ஸல்) அவர்களே, தயவுசெய்து எனக்காக இறைவனிடம் பிரார்த்தனை புரியுங்கள் என்று கூறினாள். இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள், நீ விரும்பினால் பொறுமையாக இரு, நீ சொர்க்கத்தில் நுழையலாம்: மேலும், நீ விரும்பினால், இறைவனிடம் உனக்காகப் பிரார்த்தனையும் செய்கின்றேன். (இதில் நீ எதை விரும்புகின்றாய்) என்று கூறினார்கள். அவள் கூறினாள், நான் பொறுமையாக இருந்து கொள்கின்றேன், ஆனால் உடைகள் விலகுவதனால் என்னுடைய உடம்பு வெளியே தெரிகின்றதே, ஆகையால் அதற்காக இறைவனிடம் பிரார்த்தனை செய்யுங்கள் அதன் மூலம் என்னுடைய உடைகள் விலகாமல் இருக்குமே என்று கூறினாள். எனவே, இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அந்தப் பெண்மணிக்காகப் பிரார்த்தனை செய்தார்கள். (புகாரி)

மேலும், நமக்கு முன் சென்ற அந்த முன்மாதிரிகள், தன்னடக்கமுள்ளவர்களாகவும், மதிப்பும் மரியாதையும் கண்ணியமிக்கவர்களாகவும், சுயமதிப்பு உடையவர்களாவும் இருந்திருக்கின்றார்கள் என்பதை நாம் கவனித்துப் பார்க்க வேண்டும். மேலும், அவர்கள் தங்களது உடலழகுகள் கணவனல்லாத பிற ஆடவர்களுக்கு வெளிப்பட்டு விடக் கூடாது என்பதில் எந்தளவு கவனமும் சிரத்தையும் எடுத்துக் கொண்டார்கள் என்பதையும், தன்னுடைய உடழகுகளை பிற ஆடவர்கள் ரசிப்பதற்கு ஏதுவாக அமைந்து விடக் கூடாது என்பதிலும் அவர்கள் எந்தளவு கவனம் செலுத்தி உள்ளார்கள் என்பதையும் நாம் அறிந்து கொள்ள முடிகின்றது. என்னருமைச் சகோதரிகளே! ஊண்மையிலேயே நீங்கள் இறையச்சமிக்க பெண்மணிகளாகத் திகழ வேண்டும் என்று விரும்பினால், நமக்கு முன் சென்ற அந்த இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் இருந்து நேரடியாகப் பாடம் பயின்ற அந்த நபித்தோழியர்கள் போல நாமும் நம்முடைய உடலழகைப் பேணுவதோடு, அந்த உடலழகு கணவனுக்கு மட்டுமே உரித்தானதாக இருக்க வேண்டுமே ஒழிய, பிற ஆடவர்கள் ரசிக்கத் தக்கதாக இருந்து விடக் கூடாது என்பதில், அவர்கள் செலுத்திய கவனத்தைப் போல நாமும் செலுத்த வேண்டும். கண்ணியம் என்பது ஈமானில் ஒரு பகுதி. இந்தக் கண்ணியம் என்பது நாம் அணிந்திருக்கக் கூடிய ஆடைகளில் ஒட்டிக் கொண்டிருக்கவில்லை, மாறாக, வெளிச் செல்லும் பொழுது நம்முடைய இயற்கைப் பகுதிகளை வெளிப்படுத்தாததாக  நம்முடைய ஆடைகள் அமைந்திருக்க வேண்டும். நாம் உண்மையிலேயே நம்முடைய அழகு நம் கணவர்களுக்கு மட்டுமே உரித்தானது என்ற கொள்கையில் மிகவும் பிடித்தமுள்ளவர்களாக இருக்க வேண்டும். மேலும், நாம் அதிக வெட்கமுள்ளவர்களாக இருப்பதற்கு நமக்கு நாமே பயிற்சியளித்துக் கொள்பவர்களாகவும், கண்ணியம், சுயமரியாதை கொண்டவர்களாகத் திகழ்ந்த நபித்தோழியர்களைப் போல நாமும் நம்மை மாற்றிக் கொள்ள வேண்டும்.

அவள் ஒரு சிறந்த தாய்.

முஹம்மது(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்களில் ஒவ்வொருவரும் உங்களுக்குக் கீழ் உள்ளவர்களுக்குப் பாதுகாவலரும், பொறுப்பாளரும் ஆவீர்கள். அவர்கள் செய்கின்ற செயல்களுக்கு, நீங்கள் விசாரணை செய்யப்படுவீர்கள். ஓரு ஆட்சியாளரும் கூட பொறுப்பாளியாவார். அவர் அவருக்குக் கீழ் உள்ளவர்களின் செயல்களுக்காக விசாரிக்கப்படுவார். ஓரு மனிதன் தன் குடும்பத்திற்குப் பொறுப்பாளியாவார், அவர் அவருக்குக் கீழ் உள்ள குடும்பத்தவர்கள் பற்றி விசாரிக்கப்படுவார். ஓரு மனைவியும் பொறுப்பாளரே! அவளுடைய கணவனின் உடமைகள் பற்றியும், குழந்தைகள் பற்றியும் விசாரிக்கப்படுவாள். சுருக்கமாக, உங்களில் ஒவ்வொருவரும் பொறுப்பாளரே! உங்களின் பொறுப்பில் உள்ளவர்கள் பற்றி விசாரிக்கப்படுவீர்கள் அல்லது கேள்வி கணக்கிற்கு உட்படுத்தப்படுவீர்கள்.

இங்கே மனைவியானவள் தன்னுடைய குடும்பத்தில் கணவனுக்கு அடுத்த நிலையில் பொறுப்புக்களை வகிக்கக் கூடியவளாக இருக்கின்றாள், எனவே அவள் ஏற்றுக் கொண்டிருக்கும் அந்தத் துணைத் தலைமைப் பொறுப்புக்குரிய தகைமையை அவள் பராமரிக்க வேண்டும். அவளது குழந்தைகளின் ஒவ்வொரு செயல்களும் இஸ்லாத்தைப் பிரதிபலிப்பதாக இருக்கும் அதே சமயத்தில், அவர்கள் இஸ்லாத்தை விரும்பிப் பின்பற்றக் கூடியவர்களாக பரிணமிக்க வேண்டும் என்பது, அவளது ஒவ்வொரு நாள் நடவடிக்கையிலும் மிளிர வேண்டும், அதற்கான முன்மாதிரியாக இவள் முதலில் செயல்பட்டு, தன் குழந்தைகளுக்குப் பாடம் புகட்ட வேண்டும். ஓரு தாயின் கடமையை இன்னதென்று ஒரு கட்டுப்பாட்டுக்குள் வரையறுத்து விட முடியாது. அவள் தன்னுடைய குழந்தைகளை அனைத்து வகையிலும் பயிற்றுவிக்க வேண்டும். தொழுகை, பேச்சு வழக்கு, உணவுப் பழக்கம், சமுதாயத்தில் பழக வேண்டிய பழக்க வழக்க முறைகள் உள்ளிட்ட எண்ணற்ற சமுதாய ஒழுக்கங்;களைக் கற்றுக் கொடுத்துக் கொண்டே இருக்க வேண்டும். இங்கே அத்தகைய ஒழுக்கங்களில் சிலவற்றைத் தான் நாம் குறிப்பிட்டிருக்கின்றோம். தன்னுடைய குடும்பத்தில் உள்ள அங்கத்தினர்களுடன் பூரணமாக ஒத்துழைப்பதோடு, அதில் எப்பொழுது இஸ்லாமும், அதன் அடிப்படைகளும் மிளிரும்படிச் செய்ய வேண்டும். உங்களுடைய குழந்தைகள் இஸ்லாத்தைப் பற்றி அறிந்து கொள்வதற்கு பல்வேறு வழிமுறைகள் இருந்தாலும், அதன் முன்மாதிரிகளை தன்னுடைய தாயின் செயல்பாட்டில் அந்தக் குழந்தை காணவில்லை என்றால், அவர்கள் இஸ்லாத்தைப் பற்றி என்னென்ன அறிந்து கொண்டார்களோ அதன்படி அவர்களால் செயலாற்ற முடியாது, ஏனென்றால், தன் தாயைப் போலவே அவர்களும் பலவீனத்திற்கு ஆட்பட்டு விடுவார்கள், தன் தாய் எந்தளவு பின்பற்றுகின்றாளோ அந்தளவு பின்பற்றினால் போதும் என்ற மனநிலையையோ அல்லது தன் தாய் பின்பற்றுவது தான் மார்க்கம் என்ற அடிப்படையிலோ குழந்தை வளருவதற்கு வாய்ப்பாக ஆகி விடும் என்பதை மனதில் கொள்ள வேண்டும்.

பெண்களை சில வரைமுறைகள், சட்ட திட்டங்களின் அடிப்படையில், வீட்டிற்கு வெளியே வேலை செய்வதை இஸ்லாம் அனுமதிக்கின்றது. இருப்பினும் அவளது முதன்மையான கடமையாகவும், அவள் ஏற்றுக் கொள்ளக் கூடிய அம்சமாகவும் இருப்பது மனைவி என்ற அந்தஸ்தேயாகும். அதனை அடுத்த பொறுப்பாக இருப்பது தாய் என்ற அந்தஸ்து, இந்தப் பொறுப்புக்களுக்காகத் தான் ஒரு பெண்ணே படைக்கப்பட்டிருக்கின்றாள் என்பதும், அது தான் அவளுக்கு உகந்ததொரு பொறுப்பாகவும் இருக்கின்றது என்பதும் யாராலும் மறுத்துக் கூற முடியாததொரு கூற்றாக இருக்கின்றது. இந்தப் பொறுப்புகளை அவள் உதாசினம் செய்து விட முடியாது. ஓரு முஸ்லிம் பெண்ணுடைய தன்மை எவ்வாறு இருக்க வேண்டுமெனில், முதலில் தன்னுடைய கணவன் மற்றும் பிள்ளைகளுக்குச் செய்ய வேண்டிய கடமைகளை நாம் பூரணமாக நிறைவேற்றுகின்றோமா என்பதை உறுதி செய்து கொண்ட பின்னரே, மற்ற பணிகளில் அவள் கவனம் செலுத்த வேண்டும். தன்னுடைய மனைவி தன்னைச் சரியாகக் கவனித்துக் கொள்கின்றாளா, தன்னுடைய குடும்பப் பணிகளில் தன்னுடன் பூரணமாக ஒத்துழைக்கின்றாளா என்பதைப் பற்றி மனைவியிடம் கணவன் எதிர்பார்ப்பது என்பது அவனது தார்மீக உரிமையாகும். அதைப் போலவே தன்னுடைய தாய் தனக்குத் தேவையான மார்க்கக் கடமைகளைக் கற்றுத் தருகின்றாளா, அதற்குத் தேவையான அடிப்படைகளை முதலில் தனக்குள் நிறைவேற்றிக் கொண்டிருக்கின்றாளா என்று எதிர்பார்ப்பதும் ஒரு குழந்தையினுடைய தார்மீக உரிமையாகும். எனவே, இத்தகைய கடமைகளுக்கு முன்னுரிமை கொடுப்பதை விட்டு விட்டு, இதுவல்லாத ஒன்றுக்கு ஒருமுஸ்லிம் பெண் முன்னுரிமை கொடுக்க முயற்சிக்கக் கூடாது.

நிச்சயமாக இஸ்லாம் பெண் மருத்துவர்களையும், நர்ஸுகளையும், கல்வியாளர்களையும் இன்னும் பல்வேறு துறைசார்ந்த அறிஞர் பெருமக்களினுடைய தேவைகளையும் எதிர்பார்க்கின்ற அதே வேளை, ஒரு இஸ்லாமியப் பெண்ணினுடைய அழகு, அவளது குடும்பத்தை வளர்த்தெடுப்பதிலும், அவளது கணவனுக்கும், குழந்தைகளுக்கும் உள்ள உரிமைகளை நிறைவேற்றுவதிலும், அவர்களை இஸ்லாத்தின் பால் செலுத்துவதிலும் தான் இருக்கின்றது.

ஏனென்றால், இன்று நாம் அநேகமாக முஸ்லிமல்லாதவர்களின் மத்தியில் தான் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம், நம்முடைய வாழ்விடங்கள் முதல் நாம் பணியாற்றக் கூடிய அத்தனை பகுதிகளிலும் இஸ்லாத்திற்கு முரணானவைகள் தான் மலிந்திருக்கின்றன, எனவே திருமணமான ஒரு பெண் வேலைக்குச் செல்வதை இஸ்லாம் உற்சாகப்படுத்துவதில்லை. அதிலும் அவள் குழந்தைகளைப் பெற்று விட்டாள் என்றால், கணவனின் வருவாய்க்குள் தன்னுடைய குடும்பத்தை அமைத்துக் கொண்டு, அதிலிருந்து தன் குடும்பத்தினுடைய தேவையை நிறைவு செய்து கொண்டு வாழ்வது தான், ஒரு மார்க்க சிந்தனையுள்ள ஒரு முஸ்லிம் பெண்ணினுடைய உயர்ந்த குணநலனாக இருக்க முடியும். இன்னும் அவளது குடும்பம் அவள் வேலைக்குச் செல்வதை வற்புறுத்தவில்லை என்றால், வெளியில் வேலைக்குச் செல்வதைத் தவிர்த்து, தன்னுடைய கணவன், குழந்தைகளைப் பராமரிப்பதே அவளுக்கு மிகச் சிறந்ததாகும்.

இன்று வேலைக்குச் செல்லும் பெண்களின் அவல நிலைகளை தினம் தினம் செய்தித் தாள்களின் வழியாக நாம் அறிந்து வருகின்றோம். வேலைக்குச் செல்லும் பெண்களின் நிலை இவ்வாறு என்றால், தெருவிலே நடமாடும் பெண்களுக்கும் கூட இன்று பாதுகாப்புப் போட வேண்டிய சூழ்நிலைகள் தான் அநேக நாடுகளில் உள்ளன. நம் இந்திய நாட்டில், தமிழகத்தில் பாலியல் வல்லுறவுக்கு சரிகா ஷா என்ற மாணவி பலியானதை நாம் அனைவரும் அறிவோம். வெளிவந்த செய்தி இது என்றால், வெளியே வராத செய்திகள் எத்தனை? பாமரர்கள் மத்தியில் இவ்வாறு என்றால், படித்தவர்களின் நிலை என்ன? முன்னாள் பஞ்சாப் காவல்துறை தலைமை அதிகாரியாகப் பணியாற்றிய கில் என்ற ஐபிஎஸ் அதிகாரி தன்னுடைய சக பெண் அதிகாரியின் பின்புறத்தில் தட்டியதற்காக வழக்கு விசாரணையைக் கூடச் சந்தித்தார் என்பது நாம் அறியாத செய்தி அல்ல. இன்னும்; பாடத்திட்டங்களினால் எத்தனை மாணவிகள் அன்றாடம் பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்படுகின்றார்கள் என்பதும், வெளியில் வேலைக்குச் செல்லும் பெண்களின் அவலம் இந்தியா மட்டுமல்ல உலக நாடுகளிலும் பெரும் பிரச்னையாக ஆகி வருகின்றது என்பதும் அன்றாடம் செய்தி வாசிக்கும் அனைவரும் அறிந்த உண்மையேயாகும்.

ஜிஹாதைக் காட்டிலும் குறைத்து மதிப்பிட முடியாததொரு பணி!

அல்லாஹ் தன்னுடைய திருமறையிலே கூறுகின்றான் :

(நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும், அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும், அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியை விட்டுத் தவறியவர்களையும் (அவன் வழியைச் சார்ந்து) நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான். (முஃமின்களே!) நீங்கள் தண்டிப்பதாக இருந்தால் எந்த அளவிற்கு நீங்கள் தண்டிக்கப்பட்டீர்களோ அது போன்ற அளவுக்கே நீங்களும் தண்டியுங்கள், பொறுத்துக் கொண்டால், நிச்சயமாக அதுவே பொறுமையாளருக்கு மிக்க மேன்மையானதாகும். (நபியே!) இன்னும் நீர் பொறுமையுடன்  இருப்பீராக! எனினும் அல்லாஹ்வின் உதவியில்லாமல் நீர் பொறுமையுடனே இருக்க முடியாது - அவர்களுக்காக நீர் (எது பற்றியும்) கவலைப்பட வேண்டாம் - அவர்கள் செய்யும் சூழ்ச்சிகளைப் பற்றி நீர் (மன) நெருக்கடியில் ஆக்கிவிட வேண்டாம். நிச்சயமாக எவர் பயபக்தியுடையவராக இருக்கிறார்களோ அவர்களுடனும், எவர் நற்செயல் புரிகின்றார்களோ அவர்களுடனும் அல்லாஹ் இருக்கிறான். (16:125-128)

அல்லாஹ் நமக்கு ஏவியுள்ளவற்றை நாம் முழுமையான அளவில் நிறைவேற்றிட முடியாது. இந்த உலக வாழ்க்கையானது பல்வேறு நெருக்கடிகளையும், தடைகளையும், அநீதிகளையும் மற்றும் மனதை அலைக்கழிக்கக் கூடியதாகவும், தீமைகளை நோக்கிச் செலுத்தக் கூடியதாகவும் இருக்கின்றது. ஆனால், முஸ்லிமாக இருக்கின்ற ஆணோ அல்லது பெண்ணோ, இத்தகையவற்றிற்கு தன்னுடைய மனதிற்கு இடம் கொடாமல், அல்லாஹ்வினுடைய பயத்தை,  அவனது தண்டனையைப் பற்றிய அச்சத்தை மனதிலே இருத்திக் கொண்டு, அவற்றைத் தான் எதிர்நோக்கக் கூடிய பிரச்னைகளைத் தீர்ப்பதற்கான கருவியாகப் பயன்படுத்திக் கொண்டு, இறைப் பொருத்தத்திற்காக அன்றி வேறெதற்காகவும் எதனையும் விட்டுக் கொடுக்காத வாழ்க்கையை வாழப் பழக வேண்டும். அறிந்து கொள்ளுங்கள்! நாம் சந்திக்கின்ற அத்தனை அனுபவங்களும் நமக்கு அல்லாஹ் விதித்த சோதனைகள் என்பதை மறந்து விடாதீர்கள்.

உங்கள் பொருள்களும் உங்கள் மக்களும் (உங்களுக்குச்) சோதனைதான்;. ஆனால் அல்லாஹ் - அவனிடம் தான் மகத்தான (நற்) கூலியிருக்கிறது. (64:15)

உங்களது சக்திக்கு மீறிய எதனையும், உங்கள் மீது சுமையாக நாம் சுமத்துவதில்லை என்று இறைவன் நமக்கு இவ்வாறு வாக்களித்திருக்கின்றான்.

முஹம்மது(ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள் :

மறுமைநாளிலே உயர்ந்தோனாகிய அல்லாஹ், இவ்வாறு கூறுவான் : என்னுடைய திருப்பொருத்தத்திற்காகவே ஒருவரை ஒருவர் நேசித்தவர்கள் எங்கே? இன்றைய தினம் என்னுடைய நிழலில் அவர்களுக்கு நான் புகலிடம் அளிக்கப் போகின்றேன். இன்றைய தினம் என்னுடைய நிழலை அன்றி வேறு நிழல் கிடையாது. (முஸ்லிம்).

பிரச்சினைகளைத் தீர்க்கக் கூடிய வழிமுறைகள்

உதவியாளர்களின் குழுவை வைத்திருங்கள் :

நாம் ஒன்றைச் செய்து முடித்திருக்கின்றோம் என்று சொன்னால், இப்பொழுது நமக்கு அதைப் பற்றி என்ன அறிந்து வைத்திருக்கின்றோமோ அதை விட மாற்றமான ஒன்றைத் தான் நாம் முன்பு செய்திருக்கக் கூடும். எனவே கடந்த காலத்தில் நாம்  செய்து விட்ட அந்தத் தவறுகளைப் பற்றி இப்பொழுது கவலைப்பட்டு என்ன பலன்? ஏனவே எதைப் பற்றி நாம் அறியவில்லையோ அதைப் பற்றிய அறிவு ஞானம் உள்ளவர்களிடம் அது பற்றிக் கருத்துக் கேட்டுச்  செய்திருந்தால் இப்பொழுது கைபிசைந்து கொண்டிருக்க வேண்டிய அவசியமில்லையே! நாம் நம்முடன் வாழ்ந்து கொண்டிருக்கின்ற, வெற்றிகரமான மணவாழ்க்கையை நடத்திக் கொண்டிருக்கின்றவர்களின் பட்டியலை வைத்துக் கொண்டு, நமக்கேற்பட்ட இக்கட்டான சூழ்நிலைகளின் போது, அவர்கள் அவற்றை எவ்வாறு சமாளித்திருப்பார்கள் என்பது பற்றி அவர்களுடன் கலந்தாலோசனை செய்தால், அவர்கள் தங்களது அனுபவங்கள் வாயிலாக உங்களுக்குச் சிறந்த அறிவுரைகளை வழங்குவார்கள். அந்தத் தருணங்களில் நீங்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பது பற்றிய ஆலோசனைகளை வழங்குவார்கள். இப்படிப்பட்டதொரு குழவை நீங்கள் வைத்திருந்தீர்கள் என்றால், நட்பு ரீதியாக அவர்கள் உங்களுக்கு பல்வேறு சந்தர்ப்பங்களில் தங்களது மேலான ஆலோசனைகளை உங்களுக்கு வழங்கி, உங்களது பிரச்சினைகளுக்கு அவர்கள் வடிகால் தேடிக் கொடுப்பார்கள். உங்கள் மனச்சுமையையும், பின்னால் வருந்தக் கூடிய நிலையையும் அவர்கள் திவிர்த்து விடுவார்கள்.

மன்னிக்கும் மனப்பான்மையை வளர்த்துக் கொள்ளுங்கள்

இன்னும் நீங்கள் உங்கள் இறைவனின் மன்னிப்பைப் பெறுவதற்கும், சுவனபதியின் பக்கமும் விரைந்து செல்லுங்கள்;. அதன் (சுவனபதியின்) அகலம் வானங்கள், பூமியைப் போலுள்ளது. அது பயபக்தியுடையோருக்காகவே தயார் செய்து வைக்கப்பட்டுள்ளது. (பயபக்தியுடையோர் எத்தகையோர் என்றால்,) அவர்கள் இன்பமான (செல்வ) நிலையிலும், துன்பமான (ஏழ்மை) நிலையிலும் (இறைவனின் பாதையில்) செலவிடுவார்கள்; மனிதர்(கள் செய்யும் பிழை)களை மன்னிப்போராய் இருப்பார்கள்;. (இவ்வாறு அழகாக) நன்மை செய்வோரையே அல்லாஹ் நேசிக்கின்றான். (3:133-134)

சற்று நினைத்துப் பாருங்கள்! யாருடைய மனதையும் புண்படுத்தி விட முடியாத, மக்கள் அவரவர் எல்லைகளில் வாழக் கூடிய, எந்தவித இடையூறுகளுமற்றதொரு வாழ்க்கையை எண்ணிப் பாருங்கள்! அப்படிப்பட்டதொரு வாழ்க்கை இங்கே இருக்கின்றதா என்பதைப் பற்றியும் சற்று எண்ணிப்பாருங்கள்! இல்லை! அப்படிப்பட்டதொரு வாழ்க்கை இந்த உலகில் இல்லை! இந்த உலக வாழ்க்கையில் ஒரு முக்கிய அம்சமாக இருப்பது என்னவென்றால், பிறருடைய குறைகளையே தோண்டித் துருவி ஆராய்ந்து கொண்டிருப்பது, எந்தளவு நாம் பிறருடைய குறைகளைத் தோண்டித் துருவி ஆராய்ந்து கொண்டிருக்கின்றோமோ அந்தளவு பிறர் நம்முடைய குறைகளை ஆராய்ந்து கொண்டிருப்பார்கள் என்பதைப் பற்றி நாம் எண்ண மறந்து விடுகின்றோம். தான் சரியாக நடந்திருக்கின்ற பொழுது, தன்னை வலிந்து வந்து துன்புறுத்தியவர்களை மனிதர்கள் என்று மறக்காமல் நினைவிலேயே வைத்திருப்பார்கள். நாம் ஒவ்வொருவரும் பிறரது தவறுகளை வலிந்து சென்று, தாங்களாகவே முன்வந்து பிறரது தவறுகளை மன்னிக்கக் கூடியவர்களாகவும், நமக்கிடையே ஏற்படும் கருத்து வேறுபாடுகளின் பொழுது விட்டுக் கொடுத்து வாழவும் பழகிக் கொள்ள வேண்டும். மேலும் நம் அனைவரிடமும் ஆற்றல் இருக்கின்றது, அதைப் போலவே பலவீனங்களும் இருக்கின்றன மற்றும் அதன் காரணமாக நம் அனைவரிடமும் தவறுகளும் ஏற்படுகின்றன. எனவே நாம் ஒவ்வொருவரும் ஏதோ ஒரு வகையில் தவறு செய்யக் கூடியவர்களாகத் தான் இருக்கின்றோம். எனவே, நாம் அனைவரும் பிறரை மன்னித்து வாழக் கூடிய வாழ்க்கையைக் கைக்கொள்வதன் மூலம், சமுதாய ஒற்றுமையைக் காண முடியும். குறிப்பாக குடும்பத்தில் இதைக் கடைபிடிப்பதன் மூலம் அமைதியான குடும்ப வாழ்வைக் காண முடியும்.

அமைதி அல்லது பொறுமை

இன்னும் அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் கீழ்படியுங்கள் - நீங்கள் கருத்து வேறுபாடு கொள்ளாதீர்கள்; (அவ்வாறு கொண்டால்) கோழைகளாகி விடுவீர்கள்,; உங்கள் பலம் குன்றிவிடும்; (துன்பங்களைச் சகித்துக் கொண்டு) நீங்கள் பொறுமையாக இருங்கள் - நிச்சயமாக அல்லாஹ் பொறுமையுடையவர்களுடன் இருக்கின்றான். (8:46)

குடும்ப வாழ்க்கையில் நடந்து வருகின்ற ஒரு நிலை என்னவென்றால், குழந்தைகள் செய்கின்ற தவறுகள் மற்றும் அவர்கள் தங்களிடம் ஏற்படுத்திக் கொள்கின்ற பழக்கவழக்கங்களைப் பார்த்து விடுகின்ற பெற்றோர்கள், இப்படிப்பட்டதொரு குடும்பத்தில் வாழ்வதை விட சாவதே மேல் என்ற எண்ணம் வளர்வதைக் காணலாம், ஆனால் அந்த எண்ணம் அடுத்த நாளே காணமால் போய் விடுவதையும் நாம் காணலாம். மேலும், நம்மிடைய காணப்படுகின்ற மிக நீண்ட நாள் பழக்க வழக்கங்களை மாற்ற முயற்சிக்கின்ற பொழுது, அதில் நாம் பொறுமையையும் கடைப்பிடிக்க வேண்டும். இதனால் ஏற்படுகின்ற பிரச்னைகள் நாம் பொறுமையைக் கடைப்பிடிக்கின்ற பொழுது, மிக விரைவிலேயே வந்த வழியே அது போய் விடும்.

பல சந்தர்ப்பங்களில் நாம் தவறு செய்து வருகின்றோம் என்பதைப் பற்றியதொரு விழிப்புணர்வை தாமாகவே ஏற்படுத்திக் கொள்ளும் அளவுக்கு, அந்தத் தவறை உணர்ந்து கொள்ளும் அளவுக்கு நம்மை நாமே பக்குவப்டுத்திக் கொள்ள வேண்டும். மேலும், பிறர் நமக்கு துன்பம் விளைவிக்கின்ற பொழுது நாம் பொறுமையைக் கைக்கொள்வதன் மூலம், அவருக்கு அவருடைய செயலின் பாரதூரங்களைப் பற்றி அறிந்து கொள்ள ஒரு சந்தர்ப்பத்தை வழங்கி, வருங்காலத்தில் அதைப் பற்றி அவர் நினைத்து வருந்தக் கூடியதொரு சந்தர்ப்பத்தையும் அவருக்கு நம்முடைய பொறுமையின் மூலம் வழங்க வேண்டும். மேலும், சூழ்நிலைகள் கடினமாகும் நிலையை நாம் தவிர்த்துக் கொள்ள வேண்டும். அல்லாஹ் தான் அனைத்தையும் கண்காணித்துக் கொண்டு, தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்திருக்கின்றான். எனினும் நாம் பாரதூரமான அந்த சந்தர்ப்பங்களில் ஒருவருக்கொருவர் அறிவுரைகளை வழங்கிக் கொண்டு, அந்தப் பிரச்னைகளைத் தீர்ப்பதற்கு முயற்சிப்பதோடு, அதில் பொறுமையையும் கடைப்பிடிப்பது மிகவும் சிறந்ததாகும்.

சுயபரிசோதனை

உங்களது நிலை என்னவென்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள் :

கணவனைத் திருப்தி செய்வதில் நான் என்னுடைய மிகச் சிறந்த பங்களிப்பை வழங்குகின்றேன்

என்னுடைய குடும்பத்திற்கு இஸ்லாமிய வழிமுறைகளைக் கொண்டு வழி நடத்துகின்றேன்.

குர்ஆனையும், நபிமொழிகள் (ஹதீஸ்களை)யும் நான் விரும்பி வாசிக்கின்றேன்

என்னுடைய குழந்தைகளுக்கு இஸ்லாத்தைப் பற்றிப் போதிக்கின்றேன்.

என்னுடைய கணவனுக்காக என் அழகைப் பராமரித்து வருகின்றேன்.

இஸ்லாத்தைப் பற்றிய கேள்விகளுக்குரிய விடைகளை வழங்குவதில் என்னுடைய குழந்தைகளுக்கு உதவுகின்றேன்

இஸ்லாத்தைப் பற்றி அறிந்து கொள்ள இடைவிடாது முயற்சித்துக் கொண்டிருக்கின்ற அதே வேளையில், நான் கற்றவற்றை என்னுடைய வாழ்க்கையில் செயல்படுத்துவதில் முனைப்புக் காட்டுகின்றேன்.

என்னுடைய தொழுகைகளை அதற்குரிய நேரத்தில் நிறைவேற்றுகின்றேன்.

நான் என்னுடைய கணவனை அதிகம் நேசிப்பதாகக் கூறுகின்றேன்

தேவைப்படும்பொழுது என்னுடைய கணவருக்கு அறிவுரைகளை வழங்குகின்றேன்

என்னுடைய கணவருடைய குறிக்கோள்களை அடைவதற்கு உற்சாகத்தையும், ஒத்துழைப்பையும் வழங்குகின்றேன்.

என் கணவரது முயற்சிகளை நான் மதிக்கின்றேன், பாராட்டுகின்றேன் என்பதை அவருக்கு நான் உணர்த்தி வருகின்றேன்.

என்னுடைய நாணத்தை பொது மக்கள் மத்தியில் பாதுகாத்து வருகின்றேன்.

சுன்னத்தான தொழுகைகளைப் பேணி வருகின்றேன்.

ரமளான் மாதத்து நோன்புகளை நோற்று வருகின்றேன். அதில் தவறிய நோன்புகளையும் நான் பின்பு 'களா"வாக நோற்கின்றேன்.

ரமளான் தவிர்த்து, விரும்பத்தகுந்த நோன்புகளையும் (சுன்னத்தான, நபிலான) நோற்று வருகின்றேன்.

பிறர் தூங்கக் கூடிய நேரத்தில் நான் எழுந்து தொழுகின்றேன்.

நபித்தோழியர் - நமக்கவர்கள் முன்மாதிரிகள்

உங்களில் யாராவது இறையச்சமிக்க மனைவியாக வாழ விரும்புகின்றீர்கள் என்றால், அதற்கு உதாரணமாக இறைத்தூதர் (ஸல்) அவர்களுடைய தோழியரை மிகச் சிறந்த உதாரணங்களாக எடுத்துக் கொள்ளுங்கள். அந்த நபித்தோழியரது நடைமுறைகள் மற்றும் அவர்கள் அடைந்த சாதனைகளைப் பற்றி கற்றுணர்ந்து, அவர்கள் தங்களது வாழ்க்கையில் நடந்து காட்டிய பண்புநலன்கள், மிகச் சிறந்த நன்மக்களாகப் பரிணமித்துக் கொள்வதற்காக அவர்கள் எடுத்துக் கொண்ட முயற்சிகள் பற்றி ஆய்வு செய்து பார்த்து, அதனைப் பின்பற்றுதவற்கு உச்சபட்ச முயற்சிகளைக் காட்ட வேண்டும். இறைவனுக்கு தன்னை அர்ப்பணித்து, கீழ்படிந்த வாழ்க்கையை வாழ்வதற்கு – அமைதி, தான தர்மங்கள், சுய அர்ப்பணிப்பு இவை போன்றவற்றின் மூலம் இறைவனுக்கு உகந்த நல்லடியாளாக மாறுவதற்கு முயல வேண்டும் .

குறிப்பாக : அலி (ரலி) அவர்களுக்குப் பக்கபலமாக ஃபாத்திமா (ரலி) அவர்களும், ஜுபைர் (ரலி) அவர்களுக்குப் பக்கபலமாக அஸ்மா பின்த் அபுபக்கர் (ரலி) அவர்களும், அபு தல்ஹா (ரலி) அவர்களுக்குப் பின்புலமாக உம்மு சுலைம் (ரலி) அவர்களும் இருந்த வரலாற்றை நாம் அறிந்து கொள்ள வேண்டும். மேலும், ஃபிர்அவ்னுடைய மனைவி அஸியா அவர்களையும், ஈஸா (அலை) அவர்களது தாயார் மர்யம் (அலை) அவர்களைப் பற்றியும் நாம் அறிந்து கொள்ள வேண்டும். மேலும், நபித்தோழியரில் இவர்களைக் காட்டிலும் மிகச் சிறப்பான நபித்தோழியர்; வேறு எவரும் இல்லை: கதீஜா பின்த் குவைலித் (ரலி), ஆயிஷா சித்தீக்கா (ரலி), மற்றும் உம்மு ஸலமா (ரலி).. இவர்களில் சிலரது பெயரைத் தான் நாம் இங்கே தந்திருக்கின்றோம். அல்லாஹ் தன்னுடைய திருமறையிலே தந்திருக்கும் வாக்குமூலத்திற்கு உரித்தானவர்களாக இவர்கள் இருந்தார்கள் :

மனிதர்களுக்காக தோற்றுவிக்கப்பட்ட (சமுதாயத்தில்) சிறந்த சமுதாயமாக நீங்கள் இருக்கிறீர்கள்; (ஏனெனில்) நீங்கள் நல்லதைச் செய்ய ஏவுகிறீர்கள்; தீயதை விட்டும் விலக்குகிறீர்கள்; இன்னும் அல்லாஹ்வின்மேல் (திடமாக) நம்பிக்கை கொள்கிறீர்கள்;. (3:110)

இன்னும் மற்றுமொரு வசனத்தில் இறைத்தூதரை முதன் முதலாகப் பின்பற்றிய அந்த ஆண்களையும், பெண்களையும் குறித்தும், அவர்கள் தன்னுடைய இறைத்தூதர் (ஸல்) அவர்களை மிகச் சரியாகவும், முழுமையாகவும் பின்பற்றியது குறித்தும் இவ்வாறு கூறுகின்றான் :

இன்னும் முஹாஜிர்களிலும், அன்ஸார்களிலும், முதலாவதாக (ஈமான் கொள்வதில்) முந்திக்கொண்டவர்களிலும் பின் தொடர்ந்தவர்களும் இருக்கின்றார்களே அவர்கள் மீது அல்லாஹ் திருப்தி அடைகிறான்; அவர்களும் அவனிடம் திருப்தியடைகின்றார்கள்; அன்றியும் அவர்களுக்காக, சுவனபதிகளைச் சித்தப்படுத்தியிருக்கின்றான், அவற்றின் கீNழு ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும், அவர்கள் அங்கே என்றென்றும் தங்கியிருப்பார்கள் - இதுவே மகத்தான வெற்றியாகும். (9:100)

நபித்தோழியர்களின் பண்புகள், பழக்க வழக்கங்கள், செயல்பாடுகள் ஆகிய அனைத்தும் இறைவனால் சாட்சியமளிக்கப்பட்டிருக்கின்றது மற்றும் இறைவன் அவர்களை மிகச் சிறந்த சமுதாயமாக ஒப்புக் கொண்டிருக்கின்றான். மேலும் அவர்களுக்காக சுவனத்தை அலங்கரித்துத் தயார் செய்து வைத்திருப்பதாகவும் தன்னுடைய திருமறையிலே வாக்குறுதியும் அளித்துள்ளான், மேலும் இவர்களை யார் யாரெல்லாம் பின்பற்றுகின்றார்களோ அவர்களுக்கும் அந்த சுவனபதிகள் உண்டு என்பதையும் நமக்கு சுட்டிக்  காட்டியிருக்கின்றான். நம்மில் யாருமே நம்முடைய பணிகள் விழலுக்கு இறைத்த நீராக மாற ஆசைப்படுவோமா? இறைவன் நம்மை எவ்வாறு அவனை வணங்க வேண்டும் என்று பணித்திருக்கின்றானோ அவ்வாறு அவனை வணங்கி, அந்த மறுமை நாளிலே அவனைச் சந்திக்கின்ற பொழுது அவனது நல்லடியார்களாக நாம் அவனது திருமுன் நிற்பது குறித்தும், அவனால் ஒப்புக் கொள்ளப்பட்ட சமுதாயமாக அவன் முன் நிற்பது குறித்தும் யாராவது விருப்பம் கொள்ளாமல் இருப்போமா? உண்மையிலேயே நீங்கள் இறைவனால் விரும்பப்படக் கூடிய மக்களாக மாற வேண்டுமெனில், நமக்கு முன் சென்று விட்ட உதாரணங்களாகத் திகழக் கூடிய அந்த நபித்தோழியர்;, நபித்தோழர்களுடைய வாழ்வை நாம் முன்மாதிரியாகக் கொண்டு நம்முடைய வாழ்க்கையை அமைத்துக் கொள்ள வேண்டும். இறைவன் தன்னுடைய திருமறையிலே கூறுகின்றான் அல்லவா : அவர்கள் மீது அல்லாஹ் திருப்தி அடைகிறான்; அவர்களும் அவனிடம் திருப்தியடைகின்றார்கள் ..

Previous Post Next Post