அர் ரஹீக் அல் மக்தூம் - பகுதி 6

அடுத்து வருபவை:

மதினாவில் முதல் கட்டம் - புதிய சமூகம் அமைத்தல்
அல்மஸ்ஜித் அந்நபவி
சகோதரத்துவ ஒப்பந்தம்
இஸ்லாமிய நட்பு ஒப்பந்தம்
நட்பு ஒப்பந்தத்தின் அம்சங்கள்
ஆன்மீகப் புரட்சிகள்
யூதர்களுடன் ஒப்பந்தம்
ஆயுதமேந்தித் தாக்குதல்
குறைஷியர்களின் அச்சுறுத்துதலும்
அபூஜஹ்லின் அச்சுறுத்தல்
குறைஷிகளின் மிரட்டல்
போர் புரிய அனுமதி
இக்காலத்தில் நபியவர்கள் நிகழ்த்திய போர்களும்
பெரிய பத்ர் போர்
போருக்குரிய காரணம்
இஸ்லாமியப் படையும் அதற்கு தளபதிகள் நியமிக்கப்படுவதும்
இஸ்லாமியப் படை பத்ரை நோக்கி
மக்காவில் எச்சரிப்பவர்
மக்காவாசிகள் போருக்குத் தயார்
மக்கா நகர படையின் அளவு
பக்ர் கிளையினரை அஞ்சுதல்
மக்காவின் படை புறப்படுகிறது
வியாபாரக் கூட்டம் தப்பித்தது
திரும்பிட நினைத்த மக்கா படையில் பிளவு
இக்கட்டான நிலையில் இஸ்லாமிய ராணுவம்
ஆலோசனை சபை
இஸ்லாமியப் படை பயணத்தைத் தொடர்கிறது
கண்காணிக்கும் பணியில் நபியவர்கள்
மக்கா படையின் முக்கிய விஷயங்களை அறிதல்
மழை பொழிதல்
முக்கிய ராணுவத் தளத்தை நோக்கி இஸ்லாமியப் படை
படையை வழி நடத்துவதற்கான இடம்
படையை ஒழுங்குபடுத்துதல் - இரவைக் கழித்தல்
போர்க்களத்தில் மக்கா படையில் பிளவு ஏற்படுதல்
இரு படைகளும் நேருக்கு நேர்
நேரம் நெருங்கியது - சண்டையின் முதல் தீ
ஒண்டிக்கு ஒண்டி
எதிரிகளின் பாய்ச்சல்
நபியவர்கள் அல்லாஹ்விடம் மன்றாடுகிறார்கள்
வானவர்கள் வருகிறார்கள்
எதிர் பாய்ச்சல்
நழுவுகிறான் இப்லீஸ்
பெரும் தோல்வி
அபூஜஹ்லின் வீம்பு
கொல்லப்பட்டான் அபூஜஹ்ல்
இறைநம்பிக்கை நிகழ்த்திய அதிசயங்கள்
இருதரப்பிலும் கொல்லப்பட்டவர்கள்
தோல்வியை மக்கா அறிகிறது
வெற்றியை மதீனா அறிகிறது
இஸ்லாமியப் படை மதீனா புறப்படுகிறது
வாழ்த்த வந்தவர்கள்
கைதிகளின் விவகாரம்
இப்போர் குறித்து குர்ஆன்
பத்ர் மற்றும் உஹுத் போர்களுக்கு மத்தியில்
ஸுலைம் குலத்தவருடன் போர்
நபியவர்களைக் கொல்ல திட்டம்
கைனுகா கிளையினருடன் போர்
யூதர்களின் சூழ்ச்சிக்கு உதாரணம்
கைனுகாவினர் ஒப்பந்தத்தை முறிக்கின்றனர்
முற்றுகையிடுதல் - சரணடைதல் - நாடுகடத்தல்
ஸவீக் போர்
தீ அம்ர் போர்
கயவன் கஅபை கொல்லுதல்
பஹ்ரான் போர்
ஜைதுப்னு ஹாஸா படைப் பிரிவு
உஹுத் போர்
குறைஷிகள் பழிவாங்கத் தயாராகுதல்
குறைஷிப் படையும் அதன் தளபதிகளும்
மக்காவின் படை புறப்படுகிறது
முஸ்லிம்கள் எதிரிகளை உளவு பார்த்தல்
அவசர நிலை
எதிரிகள் மதீனா எல்லையில்
தற்காப்புத் திட்டத்தை ஆலோசித்தல்
படையை திரட்டுதல் - போர்க்களம் புறப்படுதல்
படையைப் பார்வையிடுதல்
உஹுதுக்கும் மதீனாவுக்குமிடையில்
முரண்டுபிடிக்கிறான் இப்னு உபை
மீதமுள்ள இஸ்லாமியப் படை உஹுதை நோக்கி
தற்காப்புத் திட்டம்
நபியவர்கள் படையினருக்கு வீரமூட்டுகிறார்கள்
மக்கா படையின் அமைப்பு
குறைஷிகள் நடத்திய அரசியல் பேரங்கள்
குறைஷிப் பெண்கள் வெறியூட்டுகின்றனர்
போரின் முதல் தீ பிழம்பு
கொடியை சுற்றிக் கடும் போர்
மற்ற பகுதிகளில் சண்டை
அல்லாஹ்வின் சிங்கம் வீர மரணம்
நிலைமையைக் கட்டுப்படுத்துவது
மனைவியைப் பிரிந்து போர்க்களம் நோக்கி
போரில் அம்பெறியும் வீரர்களின் பங்கு
இணைவைப்பவர்களுக்குத் தோல்வி
அம்பெறி வீரர்களின் மாபெரும் தவறு
காலித் முஸ்லிம்களைச் சுற்றி வளைக்கிறார்
நபியவர்களின் நிலை
முஸ்லிம்கள் சிதறுதல்
நபியவர்களைச் சுற்றி கடும் சண்டை
நபியவர்களின் வாழ்க்கையில் மிக இக்கட்டான நேரம்
நபியவர்கள் அருகே தோழர்கள் திரளுதல்
எதிரிகளின் தாக்குதல் வேகமாகுதல்
செயற்கரிய வீரதீரச் செயல்கள்
நபியவர்கள் கொல்லப்பட்ட வதந்தி - அதன் விளைவு!
நபியவர்கள் போரை தொடர்கிறார்கள்
சண்டாளன் உபை கொல்லப்படுதல்
நபியவர்களுக்கு தல்ஹா தோள் கொடுக்கிறார்
இணைவைப்பவர்களின் இறுதித் தாக்குதல்
போரில் உயிர் நீத்த தியாகிகளைச் சிதைத்தல்
இறுதி வரை சண்டையிட முஸ்லிம்கள் துணிதல்
மலைக் கணவாயில்
அபூ ஸுஃப்யானின் மகிழ்ச்சி
பத்ரில் சந்திக்க அழைத்தல்
எதிரிகளின் நிலை அறிதல்
தியாகிகளை கண்டெடுத்தல்
நஜ்து போர்
இரண்டாம் பத்ர் போர்
தூமத்துல் ஜன்தல் போர்
அல்அஹ்ஜாப் போர்
பனூ குரைளா போர்
அடுத்தகட்ட ராணுவ நடவடிக்கை
ஸல்லாம் இப்னு அபுல்ஹுகைக்
முஹம்மது இப்னு மஸ்லமா படைப் பிரிவு
லஹ்யான் போர்
குழுக்களையும் படைப்பிரிவுகளையும் தொடர்ந்து அனுப்புதல்
பனூ முஸ்தலக் (அ) அல்முரைஸீ போர்
நயவஞ்சகர்களின் நடவடிக்கைகள்
முஸ்தலக் போரில் நயவஞ்சகர்கள்
1) நயவஞ்சகர்களின் கூற்று
2) அவதூறு சம்பவம்
குழுக்களும் படைப்பிரிவுகளும்
ஹுதைபிய்யா
உம்ரா
முஸ்லிம்களே புறப்படுங்கள்!
மக்காவை நோக்கி
தடுக்க முயற்சித்தல்
மாற்று நடவடிக்கை
நடுவர் வருகிறார்
குறைஷிகளின் தூதர்கள்
அல்லாஹ்வின் ஏற்பாடு
குறைஷிகளை சந்திக்க முஸ்லிம் தூதர்
கொலை செய்தி பரவுதல், உடன்படிக்கை வாங்குதல்
சமாதான ஒப்பந்தம்
அபூஜந்தல் மீது கொடுமை
உம்ராவை முடித்துக் கொள்வது
பெண்களைத் திரும்ப அனுப்ப மறுத்தல்
ஒப்பந்த அம்சங்களின் விளைவுகள்
முஸ்லிம்களின் துக்கமும், உமரின் தர்க்கமும்
ஒடுக்கப்பட்டோர் துயர் தீர்ந்தது
குறைஷி மாவீரர்கள் இஸ்லாமைத் தழுவுதல்

முதல் கட்டம் - புதிய சமூகம் அமைத்தல்

நபி (ஸல்) மதீனாவில் நஜ்ஜார் கிளையினரின் இல்லத்திற்கு ஹிஜ்ரி 1ல் ரபிய்யுல் அவ்வல் பிறை 12, வெள்ளிக்கிழமை, கி.பி. 622 செப்டம்பர் 27ல் வந்தார்கள். முதலாவதாக அபூ அய்யூப் அன்சாரியின் வீட்டுக்கருகிலுள்ள இடத்தில் இறங்கி ‘‘இன்ஷா அல்லாஹ்! இங்குதான் தங்குமிடம் அமையும்'' என்று கூறிவிட்டு, பின்பு அபூ அய்யூப் அன்சாரியின் வீட்டுக்குச் சென்றார்கள்.

அல்மஸ்ஜித் அந்நபவி

இதற்குப் பின் நபி (ஸல்) அவர்கள் மதீனாவில் எடுத்துக் கொண்ட முதல் முயற்சி பள்ளி வாசல் ஒன்றை அமைப்பதாகும். இந்த பள்ளி வாசலைத்தான் ‘அல்மஸ்ஜித் அந்நபவி' (நபியவர்கள் கட்டிய பள்ளிவாசல்) என்று சிறப்பாக சொல்லப்படும். தங்களது ஒட்டகம் முதன் முதலாக மண்டியிட்ட இடத்தையே நபி (ஸல்) அவர்கள் பள்ளி கட்டுவதற்காகத் தேர்வு செய்தார்கள். அந்த நிலம் இரண்டு அனாதைகளுக்குச் சொந்தமாக இருந்தது. அவர்களிடமிருந்து நபி (ஸல்) அவர்கள் அதை விலைக்கு வாங்கி கட்டிடப் பணியைத் தொடங்கி, அப்பணியில் தாங்களும் பங்கெடுக்கும் முகமாக கல், மண் சுமந்தார்கள். வேலையை உற்சாகப்படுத்தும் வகையில்,
‘‘இறைவா! மறுமை வாழ்வைத் தவிர வேறு வாழ்வு இல்லை.
அன்சாரிகள், முஹாஜிர்களுக்கு நீ மன்னிப்பளி!
இந்த சுமை கைபருடைய சுமையல்ல!
எங்கள் இறைவன் மீது ஆணையாக! இது நன்மை பயக்கக் கூடியது தூய்மையானது.''
என்று கவியாக படிப்பார்கள்.
நபி (ஸல்) அவர்கள் பணியின்போது ஆர்வமூட்டும் சொற்களைக் கூறி வந்தது தோழர்களுக்கு வேலையில் மிகுந்த உற்சாகத்தை அளித்தது. தோழர்களும் உற்சாகம் மிகுந்து,
நபி பணி செய்ய, நாம் அமர்ந்தால்
அது வழிகெட்ட செயலல்லவோ!
என்று கவிபாடிக் கொண்டிருந்தார்கள்.
அந்த இடத்தில் இணைவைப்போரின் கப்ருகள் (அடக்கஸ்தலங்கள்) சில இருந்தன. மற்றும் பல இடிந்த கட்டடங்களும், சில பேரீத்த மரங்களும், ‘கர்கத்' என்ற மரங்களும் இருந்தன. நபி (ஸல்) அவர்களின் கட்டளைக்கிணங்க கப்ருகள் தோண்டி எடுக்கப்பட்டு, மற்றொரு இடத்தில் புதைக்கப்பட்டன. இடிபாடுகள் அகற்றப்பட்டு தரை சமமாக்கப்பட்டது. மரங்கள் அனைத்தும் வெட்டி அப்புறப்படுத்தப்பட்டன. அந்த மரங்கள் கிப்லா" திசையில் வரிசையாக நட்டு வைக்கப்பட்டன. அப்போது கிப்லா பைத்துல் முகத்தஸை" நோக்கியிருந்தது. பள்ளியுடைய வாம்லின் இரு ஓரங்களும் கற்களால் ஆக்கப்பட்டன. அதனுடைய சுவர்கள் கல்லாலும், மண்ணாலும் கட்டப்பட்டன. பேரீத்த மரத்தின் கீற்றுகளால் முகடுகள் அமைக்கப்பட்டன. தூண்கள் பேரீத்த மரங்களால் செய்யப்பட்டன. தரையில் மணலை விரிப்பாக ஆக்கப்பட்டது. பள்ளிக்கு மூன்று வாயில்கள் அமைக்கப்பட்டன. பள்ளியின் நீளம் கிப்லாவிலிருந்து கடைசி வரை நூறு முழங்கள் ஆகும். பள்ளியின் இரண்டு புறங்களும் அதே அளவு அல்லது அதைவிட சற்று குறைவாக இருந்தன. பள்ளியின் அஸ்திவாரம் மூன்று முழத்தில் போடப்பட்டது.
பள்ளியின் ஒரு பக்கத்தில் கல்லாலும், மண்ணாலும் சில அறைகள் கட்டப்பட்டன. பேரீத்த மரங்களாலும், அதன் மட்டைகளாலும் அந்த அறைகளின் முகடுகள் அமைக்கப்பட்டன. இவை நபி (ஸல்) அவர்களின் மனைவிமார்களுக்கென கட்டப்பட்ட அறைகள். இந்த அறைகள் கட்டி முடிக்கப்பட்டபின் நபி (ஸல்) அவர்கள் அபூ அய்யூப் அன்சாரி (ரழி) அவர்களின் வீட்டிலிருந்து அந்த அறைகளுக்கு மாறிவிட்டார்கள். (ஸஹீஹுல் புகாரி)
அந்த பள்ளிவாசல் தொழுகையை நிறைவேற்றுதற்கு உண்டான இடம் மட்டுமல்ல மாறாக, முஸ்லிம்கள் மார்க்கக் கல்வியையும், அதன் போதனைகளையும் கற்றுத் தேர்வதற்குரிய ஒரு பல்கலைக்கழகமாகவும் பள்ளிவாசல் விளங்கியது. சண்டையிட்டு பிளவு பட்டு விரோதம் கொண்டுள்ள பல கோத்திரத்தினர் தங்களது விரோதத்தையும், பகைமையையும் மறந்து அன்புடனும், நேசத்துடனும் ஒன்று சேர்ந்து பழக, தோழமை கொள்ள, நட்புக் கொள்வதற்கேற்ற சங்கமாகவும் அது விளங்கியது. முஸ்லிம்களின் அனைத்துக் காரியங்களையும் நிர்வகிப்பதற்குரிய, செயல்திட்டங்களை அமுல்படுத்துவதற்குரிய மையமாகவும் அது விளங்கியது. ஆலோசனை சபைகளை நடத்துவதற்குரிய மன்றமாகவும் அது விளங்கியது.
அது மட்டுமல்ல வீடு, சொத்து, குடும்பம், பிள்ளைகள் என்று யாரும் இல்லாத ஏழை நபித்தோழர்களில் பலருக்கு தங்கும் விடுதியாகவும் அப்பள்ளி இருந்தது.
ஹிஜ்ராவின் அந்த தொடக்க காலங்களில்தான் இன்று உலகெங்கும் ரீங்காரமிடும் உயர்ந்த, கண்ணியமிக்க அந்த ராகம் ‘அதான்' (பாங்கு) மார்க்கமாக்கப்பட்டது. இந்த ஒலி உலகத்தின் மூலை, முடுக்குகளை உலுக்கியது. ஒவ்வொரு நாளும் ஐந்து முறை ‘‘லாயிலாஹஇல்லல்லாஹ் முஹம்மதுர் ரஸ_லுல்லாஹ் - அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை. அல்லாஹ்வே உயர்ந்தவன், முஹம்மது ரஸ_லுல்லாஹ்வின் மார்க்கத்தைத் தவிர வேறு எந்த மார்க்கமும் இவ்வுலகத்தில் உயர்ந்தது இல்லை'' என்பதை பறைசாற்றுகிறது. இந்த அழைப்பு முறையை சிறந்த நபித்தோழர்களில் ஒருவரான அப்துல்லாஹ் இப்னு ஜைது இப்னு அப்து ரப்பி (ரழி) என்பவர் கனவில் பார்த்து நபி (ஸல்) அவர்களிடம் தெரிவிக்கவே அதை நபி (ஸல்) அவர்களும் ஏற்றுக் கொண்டார்கள். இதே கனவைத்தான் உமர் இப்னு கத்தாஃப் (ரழி) அவர்களும் கண்டார்கள். இதன் முழுச் சத்திரம் ஹதீஸ் நூல்களில் விரிவாகக் கூறப்பட்டுள்ளன. (ஸுனனுத் திர்மிதி)

சகோதரத்துவ ஒப்பந்தம்

ஒற்றுமை மற்றும் அன்பை பகிர்ந்துகொள்ளும் மையமாக விளங்கிய பள்ளியை கட்டி முடிக்கும் பணியுடன், வரலாற்றில் மிகவும் பிரசித்திபெற்ற ஆச்சரியமிக்க மற்றொரு பணியையும் நபி (ஸல்) அவர்கள் மேற்கொண்டார்கள். அதுதான் நாடு துறந்த முஸ்லிம்களையும், மதீனாவில் உள்ள அன்சாரிகளையும் சகோதரர்களாக ஆக்கும் பணி.
இதைப்பற்றி இப்னுல் கய்’‘ (ரஹ்) கூறுகிறார்: நபி (ஸல்) அவர்கள் அனஸ் இப்னு மாலிக்கின் இல்லத்தில் முஹாஜிர்களுக்கும், அன்சாரிகளுக்கும் இடையில் சகோதரத்துவத்தை ஏற்படுத்தினார்கள். அப்படிச் சகோதரர்களாக ஆக்கப்பட்டவர்கள் மொத்தம் தொண்ணூறு நபர்கள். அதில் பாதி முஹாஜிர்களும், பாதி அன்சாரிகளும் இருந்தனர். இவர்களில் ஒருவர் மற்றவருடன் நட்புகொள்ள வேண்டும் அன்பு காட்ட வேண்டும் ஒருவர் மரணித்துவிட்டால் அவன் இரத்த உறவினர்களைவிட இவரே அவன் சொத்துகளுக்கு வாசாவார். ஆனால், பத்ர் போர் நடைபெற்றதற்குப் பின்பு
இனி அல்லாஹ்வுடைய வேதக் கட்டளைப்படி உங்கள் உறவினர்களில் உள்ளவர்களே ஒருவர் மற்றவருக்கு ஏற்றமானவர்கள். நிச்சயமாக அல்லாஹ் அனைத்தையும் நன்கறிந்தவனாக இருக்கின்றான். (அல்குர்ஆன் 8:75)
என்ற வசனம் இறங்கியபின் உடன்பிறவா சகோதர சொத்துமை சட்டம் ரத்து செய்யப்பட்டு சகோதரத்துவ உடன்படிக்கை மட்டும் நிரந்தரமாக்கப்பட்டது.
சிலர், ‘‘நபி (ஸல்) இரண்டாவது முறையாக முஹாஜிர்களுக்கு மத்தியில் மட்டும் சகோதரத்துவத்தை ஏற்படுத்தினார்கள். அதாவது, ஒரு முஹாஜிரை மற்றொரு முஹாஜிருக்கு சகோதரராக ஆக்கினார்கள் என்று கூறுகின்றனர். ஆனால், முதலில் கூறப்பட்ட கருத்துதான் ஏற்றமானதாகும். ஏனெனில், முன்னரே முஹாஜிர்களுக்கிடையில் இஸ்லாமிய சகோதரத்துவம் இருந்தது. குலக் கோத்திர ஒற்றுமையிலும், மக்காவை சேர்ந்தவர்கள் என்பதிலும் சகோதரர்களாக இருந்ததால் அவர்களுக்கு மத்தியில் புதிய ஒரு சகோதரத்துவ உடன்படிக்கையை ஏற்படுத்த வேண்டுமென்ற அவசியம் இல்லை. ஆனால், அன்சாரிகளுடனான முஹாஜிர்களின் நிலைமை அப்படியல்ல. அன்சாரிகளுக்கும், முஹாஜிர்களுக்குமிடையில் இஸ்லாமிய சகோதரத்துவத்துடன் தனிப்பட்ட நெருக்கத்தை ஏற்படுத்த வேண்டுமென்பதற்காக ஒரு சகோதரத்துவ உடன்படிக்கை அவசியமாயிருந்தது.'' (ஜாதுல் மஆது)
நபி (ஸல்) அறிமுகப்படுத்திய சகோதரத்துவத்தின் அடிப்படை நோக்கம் என்னவெனில் அறியாமைக் கால இனவெறியை ஒழிக்க வேண்டும் நிறம், குலம், இனம் ஆகிய பாகுபாடுகள் அனைத்தும் குழி தோண்டிப் புதைக்கப்பட வேண்டும் இஸ்லாமை அடிப்படையாக வைத்தே நட்போ பகையோ ஏற்பட வேண்டும்.
இந்த சகோதரத்துவத்தில் விட்டுக்கொடுத்தல், அன்பு, ஒருவருக்கொருவர் ஆறுதலளித்தல், பிறருக்கு நன்மை புரிதல் என்ற உணர்வுகள் பின்னிப் பிணைந்திருந்தன.
அனஸ் (ரழி) அவர்கள் கூறியதாவது: ‘‘அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப் (ரழி) அவர்கள் நாடு துறந்து எங்களிடம் வந்தபோது அவர்களையும் ஸஅது இப்னு ரபீஆ (ரழி) அவர்களையும் நபி (ஸல்) அவர்கள் சகோதரர்களாக ஆக்கினார்கள்.'' அப்போது அப்துர் ரஹ்மானிடம் ஸஅது இப்னு ரபீஆ கூறினார்:
அன்ஸாரிகளில் நான் வசதி வாய்ப்புள்ள பணக்காரன். என் செல்வங்களை இரண்டு பங்குகளாக்கி (தங்களுக்கு ஒரு பங்கை வழங்கி) விடுகிறேன். எனக்கு இரண்டு மனைவிகள் இருக்கின்றனர். இருவரில் யாரைப் பிடிக்குமோ (உமக்குப் பிடித்த) அப்பெண்ணை நான் மணவிலக்கு (தலாக்கு) தந்துவிடுகிறேன். அவர் ‘இத்தா' காலத்தை முடித்துவிட்டால் நீங்கள் அப்பெண்ணை மணமுடித்துக் கொள்ளுங்கள். அதற்கு ‘‘அல்லாஹ் உங்களுக்கு நலமும் வளமும் வழங்கட்டும்! அது தங்கள் குடும்பத்திலும் பொருளிலும் ஏற்படட்டும்!! எனக்குத் தங்களது கடைத் தெரு எங்கே இருக்கின்றதென்று காட்டுங்கள். அது போதும்'' என்று அப்துர் ரஹ்மான் (ரழி) கூறினார்கள். கைனுகாவினன் கடைத் தெரு அவருக்குக் காட்டப்படவே, அப்துர் ரஹ்மான் (ரழி) கடைத்தெருவுக்குச் சென்று வியாபாரம் செய்து கொஞ்சம் பாலாடைக் கட்டி மற்றும் வெண்ணையை இலாபமாகப் பெற்று வீடு திரும்பினார். மறுநாளும் அவ்வாறே தொடர்ந்து வியாபாரத்திற்குச் சென்று அல்லாஹ்வின் அருளை அதிகமதிகம் சம்பாதித்தார். பின்பு ஒரு நாள் அவர் நபி (ஸல்) அவர்களைச் சந்தித்தபோது அவர்மீது வாசனைப் பொருளின் அடையாளம் பட்டிருந்தது. அவரிடம் நபி (ஸல்) ‘‘என்ன மகிழ்ச்சியான செய்தி?'' என விசாரித்தார்கள். அவர் ‘‘நான் நேற்று ஒரு அன்சாரிப் பெண்ணை திருமணம் செய்தேன்'' என்றார். ‘‘எவ்வளவு மணக் கொடை (மஹர்) அளித்தீர்கள்'' என்று நபி (ஸல்) கேட்க, ‘‘(கால் தீனார் பெறுமானமுள்ள) சிறு துண்டு தங்கம்'' என அப்துர் ரஹ்மான் (ரழி) பதில் கூறினார். (ஸஹீஹுல் புகாரி)
நபி (ஸல்) அவர்களிடம் அன்ஸாரிகள் நமக்கும் நமது சகோதரர்(களான முஹாஜிர்)களுக்கும் (பலன் தரும்) பேரீத்த மரங்களை பங்கு பிரித்துக் கொடுங்கள் என்றனர். நபி (ஸல்) முடியாது என மறுத்து விட்டார்கள். அப்படியென்றால் எங்களுடன் அவர்கள் பாடுபடட்டும். வரும் பலாபலன்களில் நாம் அவர்களைக் கூட்டாகிக் கொள்வோம் என்று அன்ஸாரிகள் கோரினர். அதனை முஹாஜிர்கள் ஒத்துக்கொண்டனர். (ஸஹீஹுல் புகாரி)
இந்நிகழ்ச்சிகள் முஹாஜிர்கள் மீது அன்சாரிகள் கொண்டிருந்த ஆழமான பிரியத்தையும், மனத்தூய்மையையும், தியாகத்தையும், விட்டுக்கொடுத்தலையும் மிகத் தெளிவாக எடுத்துக் காட்டுகின்றன. முஹாஜிர்கள் தங்களது அன்சாரித் தோழர்கள் செய்த உபகாரத்தை எந்த அளவிற்கு மதித்தார்கள் என்பதையும், அந்த உபகாரத்திலிருந்து தங்களின் அவசியமான தேவைக்கு மட்டும் எடுத்து பயனடைந்தார்கள் என்பதையும் அவர்களிடமிருந்து அதை முழுமையாக அபகரித்துக் கொள்ளவில்லை என்பதையும், தெளிவாகத் தெரிந்து கொள்ளலாம்.
முஸ்லிம்கள் சந்தித்த பல பிரச்சனைகளுக்கு நபி (ஸல்) அறிமுகப்படுத்திய இந்த சகோதரத்துவ உடன்படிக்கை மிக அறிவுப்பூர்வமான தீர்வாகவும், நுட்பமான அரசியல் நடவடிக்கையாகவும், இருந்தது.

இஸ்லாமிய நட்பு ஒப்பந்தம்

இறைநம்பிக்கையாளர்களுக்கு மத்தியில் இந்த சகோதரத்துவ உடன்படிக்கையை நபி (ஸல்) உறுதியாக அமைத்தது போன்றே அவர்களுக்கு மத்தியில் அறியாமைக்கால மனக் கசப்புகளையும், குரோதங்களையும் அகற்றும் இஸ்லாமிய நட்பு ஒப்பந்தங்களையும் ஏற்படுத்தினார்கள். அந்த ஒப்பந்தங்களின் மூலம் இனவெறி உணர்வுகளை அழித்தார்கள். ஒருங்கிணைந்த இஸ்லாமிய ஒற்றுமையையும் ஒருமைப்பாட்டையும் நிறுவினார்கள்.

நட்பு ஒப்பந்தத்தின் அம்சங்கள்

நபியாகிய முஹம்மது (ஸல்) சார்பாகக் குறைஷி இனத்தைச் சேர்ந்த மற்றும் மதீனாவைச் சேர்ந்த இன்னும் இவர்களைப் பின்பற்றி இவர்களுடன் சேர்ந்து, இவர்களுக்குத் துணையாகப் போர் புரியும் அனைத்து முஸ்லிம்கள், இறை நம்பிக்கையாளர்களுக்கு மத்தியில் எழுதிக் கொள்ளும் ஒப்பந்தம்:
1) முஸ்லிம்கள் அனைவரும் ஒரே சமுதாயத்தவர்.
2) குறைஷிகளில் ஹிஜ்ரா செய்தவர்கள் (முஹாஜிர்கள்) தங்களுக்குள் ‘தியத்'"தை கொடுத்துக் கொள்ள வேண்டும். அவர்களில் கைது செய்யப்பட்டவருக்கு அவர்கள் அழகிய முறையில் ‘ஃபித்யா'" கொடுத்து உதவி ஒத்தாசை செய்ய வேண்டும். அனைத்து இறைநம்பிக்கையாளர்களுக்கு மத்தியிலும் நீதமாக நடந்துகொள்ள வேண்டும். அன்சாரிகளில் உள்ள ஒவ்வொரு கிளையாரும் தங்களின் பழைய நிலைமைக்கேற்ப தங்களுக்குள் ‘தியத்' கொடுத்துக் கொள்ள வேண்டும். அவர்களில் உள்ள ஒவ்வொரு வகுப்பினரும் தங்களின் கைதிகளை அழகிய முறையில் ‘ஃபித்யா' கொடுத்து விடுவித்துக் கொள்ள வேண்டும். அனைத்து முஸ்லிம்களுக்கு மத்தியில் நீதமாக நடந்துகொள்ள வேண்டும்.
3) பொதுவாக இறைநம்பிக்கையாளர்கள் தங்களுக்கு மத்தியில் சிரமத்தில் இருப்பவர்களுக்கு ‘ஃபித்யா' அல்லது ‘தியத்' விஷயத்தில் அழகிய முறையில் கொடுத்து உதவ வேண்டும்.
4) தங்களில் கிளர்ச்சி செய்பவர்கள், முஃமின்களுக்கு மத்தியில் அநியாயம் செய்பவர்கள், பாவமான காரியம் செய்பவர்கள், வரம்பு மீறுபவர்கள், விஷமத்தனம் செய்பவர்கள் இவர்களை இறையச்சம் உள்ள முஃமின்கள் (இறைநம்பிக்கையாளர்கள்) ஒன்றுகூடி எதிர்க்க வேண்டும்.
5) மேற்கூறப்பட்டவர்களில் (பொதுவாக முஸ்லிம்களில்) வழிதவறிய ஒருவர் தங்களைச் சார்ந்த ஒருவரின் பிள்ளையாக இருப்பினும் சரியே! அவருக்கு எதிராக முஸ்லிம்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும்.
6) ஓர் இறைநம்பிக்கையாளர் ஒரு காஃபிருக்காக மற்றொரு இறைநம்பிக்கையாளரை கொலை செய்யக்கூடாது. அதாவது வாசில்லாத காஃபிர் கொலையுண்டதற்காக அந்த காஃபிருடைய முஸ்லிமான நண்பர், கொலையாளியான முஸ்லிமைக் கொல்லக் கூடாது.
7) ஓர் இறைநம்பிக்கையாளருக்கு எதிராக ஒரு காஃபிருக்கு உதவி செய்யக் கூடாது.
8) அல்லாஹ்வின் பொறுப்பு சமமான ஒன்றே. முஃமின்களில் தாழ்ந்த நிலையில் உள்ள ஒருவர் பிறருக்கு கார்மானம் (பாதுகாப்பு) கொடுக்கலாம். தங்களில் ஒருவர் கொடுக்கும் கார்மானத்தை மற்ற அனைத்து இறைநம்பிக்கையாளர்களும் நிறைவேற்ற வேண்டும். அதில் பங்கம் இழைக்கக்கூடாது.
9) யூதர்களில் யார் நம்மை பின்பற்றுகிறார்களோ அவர்களுக்கு உதவி செய்யப்படும். அவர்களுடன் அழகிய முறையில் நடந்து கொள்ளப்படும். அவர் மீது எவ்வித அநியாயமும் இழைக்கப்படமாட்டாது. அவருக்கு எதிராக பிறருக்கு உதவி செய்யக்கூடாது.
10) சமாதான உடன்படிக்கை செய்துகொள்வது முஃமின்கள் அனைவரின் உரிமையாகும். அல்லாஹ்வின் பாதையில் போர் செய்யும்போது, நீதமின்றி ஓர் இறைநம்பிக்கையாளரை விட்டுவிட்டு அன்னியருடன் சமாதான உடன்படிக்கை செய்து கொள்ளக்கூடாது.
11) இறைநம்பிக்கையாளர்களில் யாரொருவர் அல்லாஹ்வின் பாதையில் போர் செய்யும்போது தவறுதலாக தங்களில் ஒருவரைக் கொன்று விடுவாரோ அவருக்கு அனைத்து இறை நம்பிக்கையாளர்களும் பாதுகாப்புக் கொடுக்க வேண்டும்.
12) நமக்கு இணக்கமான எவரும் குறைஷிகளின் உயிர், பொருளுக்குக் கார்மானம் (பாதுகாப்பு) கொடுக்க முடியாது. மேலும், ஓர் இறைநம்பிக்கையாளருக்கு எதிராக ஒரு இணைவைப்பவரை பாதுகாக்க முடியாது.
13) ஒரு முஃமின் மற்றொரு முஃமினை குற்றமின்றி கொலை செய்து விட்டதற்கு தக்க ஆதாரமிருப்பின் அவரையும் பழிக்குப்பழி கொலை செய்யப்படும். ஆனால். கொலை செய்யப்பட்டவன் உறவினர் மன்னித்துவிட்டால் அவரை விடுவிக்கப்படும்.
14) இறைநம்பிக்கையாளர்கள் அனைவரும் கொலை செய்தவனுக்கு எதிராக ஒன்றுசேர வேண்டும். கொலை செய்தவனுக்கு எவ்வகையிலும் உதவி செய்யக் கூடாது.
15) இறைநம்பிக்கையாளர் ஒரு விஷமக்காரனுக்கு, கலகம் செய்பவனுக்கு உதவி செய்யக் கூடாது, அவனுக்கு அடைக்கலம் கொடுக்கக் கூடாது எவர் ஒருவர் ஒரு விஷமக்காரனுக்கு உதவி செய்கிறாரோ அல்லது அடைக்கலம் கொடுக்கிறாரோ அவருக்கு மறுமையில் அல்லாஹ்வின் சாபமும், கோபமும் உண்டு. அவருடைய கடமையான, உபரியான எந்த வணக்கமும் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது.
16) உங்களுக்கு ஏதாவது ஒரு விஷயத்தில் கருத்து வேறுபாடு ஏற்பட்டால் அதை அல்லாஹ்விடமும் அவனது தூதரிடமும் இறுதித் தீர்ப்புக்காக விட்டுவிட வேண்டும். (இப்னு ஹிஷாம்)

ஆன்மீகப் புரட்சிகள்

இதுபோன்ற நுட்பமிக்க சட்டங்களால் நபி (ஸல்) புதிய சமூகத்தின் அஸ்திவாரங்களை உறுதியுடன் நிறுவினார்கள். அந்த சமூகத்தின் வெளித்தோற்றம் அது கொண்டிருந்த ஆன்மீக சிறப்புகளின் பிரதிபலிப்பாக இருந்தது. இந்த உயர்வான ஆன்மீக சிறப்புகளை அந்த மேன்மக்கள் நபி (ஸல்) அவர்களின் தோழமையால் பெற்றிருந்தனர். மேலும், நபி (ஸல்) அவர்களும் அவ்வப்போது அவர்களுக்கு மார்க்கச் சட்டங்களையும், சமூக உயர்வுக்கு வழிகாட்டும் நல்லொழுக்கங்களையும் போதித்து வந்தார்கள். அவர்களின் உள்ளங்களை ஒவ்வொரு அசுத்தத்திலிருந்தும் தூய்மைப்படுத்தியதுடன் உயர் பண்புகளைக் கடைபிடிக்கவும் அவர்களுக்கு ஆர்வமூட்டினார்கள். அன்பு, சகோதரத்துவம், கண்ணியம், இறைவணக்கம், கீழ்ப்படிதல் போன்ற நல்லொழுக்கப் பயிற்சியும் அளித்தார்கள்.
நபி (ஸல்) அவர்களின் சில ஒழுக்கப் பயிற்சிகளையும், போதனைகளையும் பின்வரும் வரிகளில் நாம் பார்ப்போம்:
ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம் ‘‘இஸ்லாமில் சிறந்த அமல் எது?'' என்று கேட்டதற்கு நபி (ஸல்) அவர்கள் ‘‘உணவளிப்பது, தெரிந்தவருக்கும் தெரியாதவருக்கும் ஸலாம் சொல்வது'' என்று கூறினார்கள். (ஸஹீஹுல் புகாரி)
அப்துல்லாஹ் இப்னு ஸலாம் (ரழி) கூறுகிறார்கள்: நபி (ஸல்) அவர்கள் மதீனாவிற்கு வந்தவுடன் நான் அவர்களைச் சந்திக்கச் சென்றேன். அவர்களது முகத்தை நன்கு உற்று நோக்கியபோது அது பொய்யன் முகம் அல்ல என்பதை மிகத் தெளிவாக அறிந்து கொண்டேன். நபி (ஸல்) அவர்களின் பேச்சில் முதலாவதாக பின்வரும் உபதேசங்களே இடம் பெற்றன. ‘‘மக்களே! ஸலாம் சொல்லும் பழக்கத்தை உங்களுக்குள் பரவலாக்குங்கள் உணவளியுங்கள் உறவினர்களுடன் சேர்ந்து வாழுங்கள் இரவில் மக்கள் உறங்கும்போது நீங்கள் எழுந்து தொழுங்கள் நீங்கள் நிம்மதியாக சுவனம் செல்வீர்கள்.'' (ஸுனனுத் திர்மிதி, இப்னு மாஜா)
மேலும் கூறினார்கள்: யாருடைய தீங்குகளால் ஒருவன் அண்டை வீட்டார் நிம்மதியற்று போவாரோ அவர் சுவனம் செல்லமாட்டார். (ஸஹீஹ் முஸ்லிம்)
நபி (ஸல்) கூறினார்கள்: எவன் நாவு, கையின் தீங்கிலிருந்து முஸ்லிம்கள் பாதுகாப்புப் பெற்றார்களோ அவரே முஸ்லிமாவார். (ஸஹீஹுல் புகாரி)
நபி (ஸல்) கூறினார்கள்: தனக்கு விரும்புவதை தனது சகோதரனுக்கும் விரும்பும் வரை நீங்கள் இறைநம்பிக்கையாளராக மாட்டீர்கள்.
நபி (ஸல்) கூறினார்கள் ‘‘அனைத்து முஃமின்களும் ஒரே மனிதரைப் போலாவர். அவன் கண்ணுக்கு வலி என்றால் அவன் உறுப்புகள் அனைத்தும் வருந்துகின்றன. அவருக்கு தலைவலி ஏற்பட்டால் அனைத்து உறுப்புகளும் அதனால் வேதனை அடைகின்றன.'' (ஸஹீஹ் முஸ்லிம்)
நபி (ஸல்) கூறினார்கள்: ‘‘ஒரு முஃமின் (இறைநம்பிக்கையாளர்) மற்றொரு முஃமினுக்கு ஒரு கட்டடத்தைப் போன்றாவார். கட்டடத்தின் ஒரு பகுதி மற்ற பகுதிக்கு வலு சேர்க்கிறது.'' (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)
மேலும் நபி (ஸல்) கூறினார்கள்: ‘‘பகைமை கொள்ளாதீர்கள் பொறாமை கொள்ளாதீர்கள் புறக்கணிக்காதீர்கள் சகோதரர்களாக, அல்லாஹ்வின் அடிமைகளாக வாழுங்கள் ஒரு முஸ்லிம் தனது சகோதரரை மூன்று நாட்களுக்கு மேல் வெறுத்து ஒதுக்கிட வேண்டாம்.'' (ஸஹீஹுல் புகாரி)
மேலும் கூறினார்கள்: ‘‘ஒரு முஸ்லிம் மற்றொரு முஸ்லிமுக்கு சகோதரராவார். அவருக்கு அநியாயம் செய்யக் கூடாது அவரை எதிரியிடம் ஒப்படைக்கக் கூடாது யாரொருவர் தனது சகோதரன் தேவையை நிறைவேற்ற ஈடுபடுகிறாரோ அல்லாஹ் அவன் தேவையை நிறைவேற்றுகிறான்! யார் ஒருவர் ஒரு முஸ்லிமின் கஷ்டத்தை அகற்றுகிறாரோ அவருக்கு அல்லாஹ் மறுமையின் கஷ்டங்களிலிருந்து ஒரு கஷ்டத்தை அகற்றுகிறான். யார் ஒருவர் முஸ்லிமின் குறையை மறைப்பாரோ அல்லாஹ் அவருடையக் குறையை மறுமையில் மறைத்துவிடுவான்.'' (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)
மேலும் கூறினார்கள்: ‘‘பூமியிலுள்ளவர்களின் மீது கருணை காட்டுங்கள். வானத்தில் உள்ளவன் உங்கள் மீது கருணை காட்டுவான்.'' (ஸுனன் அபூதாவூது, ஸுனனுத் திர்மிதி)
மேலும் கூறினார்கள்: ‘‘தனது அருகிலுள்ள அண்டைவீட்டார் பசியோடு இருக்க வயிறு நிரம்ப சாப்பிடுபவர் முஃமினாக இருக்க மாட்டார்.'' (பைஹகி)
மேலும் கூறினார்கள்: ‘‘இறைநம்பிக்கையாளரை ஏசுவது பெரும் பாவமாகும். அவரிடம் சண்டை செய்வது இறைநிராகரிப்பாகும்.'' (ஸஹீஹுல் புகாரி)
மேலும், ‘‘பாதையில் இடையூறு தருவதை அகற்றுவது தர்மம் என்றும், அதை இறை நம்பிக்கையின் ஒரு பகுதி'' என்றும் கூறினார்கள். (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)
மேலும் கூறினார்கள்: ‘‘தர்மம் பாவங்களை அழித்துவிடுகிறது, தண்ணீர் நெருப்பை அழிப்பது போல!'(முஸ்னது அஹ்மது, ஸுனனுத் திர்மிதி, இப்னு மாஜா)
மேலும் கூறினார்கள்: ‘‘எந்த ஒரு முஸ்லிம் ஆடையின்றி இருக்கும் மற்றொரு முஸ்லிமுக்கு ஆடை அணிவிப்பாரோ அல்லாஹ் அவருக்கு சொர்க்கத்தின் பச்சை பட்டாடைகளிலிருந்து ஓர் ஆடையை அணிவிப்பான். எந்த ஒரு முஸ்லிம் பசியுடன் இருக்கும் மற்றொரு முஸ்லிமுக்கு உணவளிப்பாரோ அவருக்கு அல்லாஹ் மறுமையில் சொர்க்கத்தின் கனிகளிலிருந்து உணவளிப்பான். எந்த ஒரு முஸ்லிம் தாகத்துடன் இருக்கும் மற்றொரு முஸ்லிமுக்கு நீர் புகட்டுவாரோ அல்லாஹ் அவருக்கு மறுமையில் ‘‘முத்திரையிடப்பட்ட சுவன மது''வைக் குடிக்கக் கொடுப்பான்.'' (ஸுனனுத் திர்மிதி)
மேலும் கூறினார்கள்: ‘‘ஒரு பேரீத்தம் பழத்தின் ஒரு பகுதியை தர்மம் செய்தாயினும் நரகத்தைவிட்டு உங்களை பாதுகாத்துக் கொள்ளுங்கள். அதுவும் உங்களுக்கு கிடைக்கவில்லை என்றால் நல்ல வார்த்தைகளை பேசுவதின் மூலமாவது நரகத்திலிருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள்.'' (ஸஹீஹுல் புகாரி)
பிறரிடம் கையேந்துவதிலிருந்தும், யாசகம் கேட்பதிலிருந்தும் தன்னைப் பேணிக் கொள்ள வேண்டுமென்று ஒவ்வொருவருக்கும் ஆர்வமூட்டியதுடன் பொறுமையின் சிறப்புகள், போதுமென்ற மனப்பான்மையின் சிறப்புகள் பற்றி தங்களின் தோழர்களுக்கு அறிவுரைக் கூறினார்கள். நிர்பந்தமின்றி யாசகம் கேட்பவர் நாளை மறுமையில் எழுப்பப்படும்போது முகம் சிதைந்தவராக இருப்பார் என்றும் எச்சரித்தார்கள். (ஸுனன் அபூதாவூது, ஸுனனுத் திர்மிதி, ஸுனன் நஸாம், இப்னு மாஜா)
மேலும், அல்லாஹ்வை வணங்கி வழிப்படுவதில் கிடைக்கும் நன்மைகளையும், உயர்வுகளையும், சிறப்புகளையும் தங்களின் தோழர்களுக்கு விரிவாக விளக்கிக் கூறினார்கள். தங்களின் தோழர்களை அல்லாஹ்வின் புறத்திலிருந்து இறங்கும் குர்ஆனுடன் எப்போதும் தொடர்புடையவர்களாக ஆக்கினார்கள். எந்நேரமும் தங்களின் தோழர்களுக்கு அழைப்புப் பணியின் கடமைகளையும், தூதுத்துவத்தை எடுத்து வைக்கும்போது ஏற்படும் சிரமங்களையும் தெளிவாக உணர்த்துவதற்காக அல்லாஹ்வின் அருள்மறையை அவர்களுக்கு ஓதிக் காண்பிப்பர்கள். தோழர்களும் அனுதினமும் குர்ஆன் ஓதும்படிச் செய்தார்கள். மேலும், குர்ஆனை விளங்க வேண்டும் அதை புரிந்துகொள்ள வேண்டும் அதை ஆராய்ச்சி செய்ய வேண்டும் என்று தங்களது தோழர்களுக்கு வலியுறுத்தினார்கள்.
இவ்வாறே தங்கள் தோழர்களின் சிந்தனையைச் சீர்படுத்தி, அவர்களின் ஆற்றல்களை விழித்தெழச் செய்து அவர்களின் ஆன்மீக நிலையை உயர்த்தி, உயர்ந்த பண்புகளை அவர்களிடம் வளரச் செய்தார்கள். இதன்மூலமே இறைத்தூதர்களுக்கு அடுத்தபடியாக மனித வரலாற்றில் ஒரு முழுமைத்துவம் அடைந்த சமுதாயமாக நபித்தோழர்கள் விளங்கினார்கள்.
அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் (ரழி) கூறுகிறார்கள்: யார் ஒருவர் பிறரின் வழிமுறையை பின்பற்ற நாடுகிறாரோ அவர் இறந்துவிட்டவர்களின் (நபித்தோழர்களின்) வழிமுறையை பின்பற்றட்டும். ஏனெனில், உயிருடன் இருப்பவர் மீது குழப்பங்கள் ஏற்படுவதை அச்சமற்று இருக்க முடியாது. இறந்துவிட்டவர்களில் நீங்கள் பின்பற்ற வேண்டியவர்கள் யாரெனில் முஹம்மது (ஸல்) அவர்களின் தோழர்களாவர். அவர்களே இந்த சமுதாயத்தில் சிறந்தவர்கள் மிக்க நல்லுள்ளம் கொண்டவர்கள் மிக ஆழமான கல்வியறிவு பெற்றவர்கள் பகட்டை விரும்பாதவர்கள். அல்லாஹ் தனது நபியவர்களின் தோழமைக்காகவும், தனது மார்க்கத்தை நிலைநிறுத்துவதற்காகவும் அவர்களைத் தேர்வு செய்தான். அவர்களது சிறப்பை அறிந்து கொள்ளுங்கள். அவர்களது வழியில் அவர்களை நீங்களும் பின்தொடருங்கள். அவர்களது நற்பண்புகளிலும், வாழ்க்கையிலும் உங்களுக்கு முடிந்ததை உறுதியாக பிடித்துக் கொள்ளுங்கள். நிச்சயமாக அவர்கள்தான் முற்றிலும் சரியான நேர்வழியில் இருந்தார்கள். (ரஜீன்-மிஷ்காத்)
மேலும், மகத்தான வழிகாட்டியான அல்லாஹ்வின் தூதர் முஹம்மது (ஸல்) அவர்களும் உள்ரங்கமான, வெளிரங்கமான அனைத்து சிறப்புகளையும் பண்புகளையும் சிறந்த நல்லொழுக்கங்களையும் பெற்றுத் திகழ்ந்தார்கள். அனைத்து உள்ளங்களும் அவர்களை நேசித்தன் அவர்களுக்காக அர்ப்பணமாயின் அவர்கள் எந்த ஒரு வார்த்தையைப் பேசினாலும் அதற்கு அவர்களின் தோழர்கள் முழுமையாகப் பணிந்தார்கள். நபி (ஸல்) அவர்களின் வழிகாட்டுதல், நற்போதனைகள் அனைத்தையும் முழுமையாக ஏற்று நடந்தார்கள்.
இதன் மூலமாகவே வரலாறு காணாத, மிகச் சிறந்த, நேர்த்திமிக்க புதிய சமூகத்தை நபி (ஸல்) மதீனாவில் அமைக்க முடிந்தது. மேலும், பல காலங்களாக வழிகேட்டிலும், அறியாமை என்ற இருள்களிலும் சிக்கித் தவித்து, தீர்வு தெரியாமல் திகைத்திருந்த சமூகத்தின் அனைத்து விஷயங்களுக்கும் நபி (ஸல்) அவர்கள் தீர்வு கண்டார்கள்.
இதுபோன்ற மிக உயர்ந்த உளப்பூர்மான, உள்ரங்கமான பயிற்சிகளின் மூலம் இந்த சமூகத்தின் அனைத்து அடிப்படை அம்சங்களும் முழுமை பெற்றன. மேலும், இந்த சமூகம் காலத்தின் சவால்களைச் சந்தித்து சாதனை கண்டது மட்டுமல்லாமல் வரலாற்றையே மாற்றி அமைத்தது.

யூதர்களுடன் ஒப்பந்தம்

நபி (ஸல்) மதீனாவில் அரசியல் அமைப்பு, சட்ட ஒழுங்கு ஆகிய அனைத்திலும் முதன் முதலாக முஸ்லிம்களுக்கு மத்தியில் நிலைத் தன்மையையும் ஒருமைப்பாட்டையும் நிறுவினார்கள். அதன் மூலம் மதீனாவில் புதிய இஸ்லாமிய சமுதாயத்திற்கும், சமூகத்திற்குமான அடித்தளத்தை மிக ஆழமாக உறுதிப்படுத்தினார்கள்.
இரண்டாம் கட்டமாக, முஸ்லிம் அல்லாதவர்களுடன் தங்களது சமூகத் தொடர்புகளை முறைப்படுத்தத் துவங்கினார்கள். அதற்குக் காரணம், முழு மனித சமுதாயமும் நிம்மதி, பாதுகாப்பு, நற்பயன்கள், நல்லுறவுகள் கிடைக்கப்பெற வேண்டும். ஒரே ஒருமைப்பாட்டுக்குக் கீழ் நாட்டு மக்களை கொண்டுவர வேண்டும் என்பதுதான். ஆகவே சுயநோக்கங்களும், இனவெறியும் நிரம்பி இருந்த அக்காலத்தில் எங்கும் காணப்படாத மன்னித்தல், பெருந்தன்மையுடன் நடத்தல், விட்டுக் கொடுத்தல் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட சட்டங்களை நபி (ஸல்) அமைத்தார்கள்.
மதீனாவிற்கு அருகில் யூதர்கள்தான் முஸ்லிமல்லாதவர்களாக இருந்தார்கள். இவர்கள் முஸ்லிம்களின் மீது உள்ளத்தில் பகைமையை மறைத்து வைத்திருந்தாலும் வெளிப்படையாக முஸ்லிம்களை எதிர்க்கவுமில்லை அவர்களிடத்தில் சண்டை, சச்சரவு செய்யவுமில்லை. எனவே நபி (ஸல்) யூதர்களுடன் நன்மையான நல்ல உடன்படிக்கையை ஏற்படுத்திக் கொண்டார்கள். அவர்களுக்கு அவர்களது செல்வத்திலும், மதத்திலும் முழு சுதந்திரம் அளித்தார்கள். அவர்களை மதீனாவை விட்டு விரட்ட வேண்டுமென்றோ அல்லது அவர்களுடைய சொத்துகளை பறிமுதல் செய்ய வேண்டுமென்றோ அவர்கள் நாடவுமில்லை அதைச் செய்யவுமில்லை.
நபி (ஸல்) யூதர்களுடன் செய்து கொண்ட உடன்படிக்கையின் அம்சங்களை இப்போது நாம் பார்ப்போம்:

1) அவ்ஃப் கிளையினரைச் சேர்ந்த யூதர்கள், முஃமின்களுடன் இணைந்த ஒரே சமுதாயத்தினராக கருதப்படுவர். இந்த யூதர்களுக்கு அவர்களது மார்க்கத்தில் முழு உரிமை உண்டு. முஸ்லிம்களுக்கும் அவர்களுடன் நட்பு கொண்டவர்களுக்கும் அவர்களின் மார்க்கத்தில் முழு சுதந்திரம் உண்டு. இவ்வாறே அவ்ஃப் கிளையினரை சாராத மற்ற யூதர்களுக்கும் அவர்களது மார்க்கத்தில் முழு சுதந்திரம் உண்டு.
2) யூதர்கள் தங்களின் செலவுகளுக்குத் தாங்களே பொறுப்பாளிகளாவர். அவ்வாறே முஸ்லிம்களும் தங்களின் செலவுகளுக்கு தாங்களே பொறுப்பாளிகளாவர்.
3) இந்த உடன்படிக்கை உடையவர்களிடம் யார் போர் தொடுத்தாலும் அவருக்கு எதிராக முஸ்லிம்களும், யூதர்களும் தங்களுக்குள் ஒருவர் மற்றவருக்கு உதவி செய்துகொள்ள வேண்டும்.
4) யூதர்களுக்கும், முஸ்லிம்களுக்கும் இடையிலுள்ள தொடர்பு - நலம் நாடுதல், ஒருவருக்கொருவர் நல்லுபதேசம் செய்தல், உபகாரம் புரிதல் - என்ற அடிப்படையில் அமைந்திருக்க வேண்டும். குற்றம் புரிவதில் துணை போவது கூடாது.
5) தனது நண்பன் குற்றத்திற்காக மற்றவர் குற்றவாளியாக மாட்டார்.
6) அநீதி இழைக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்ய வேண்டும்.
7) பிறருக்கு எதிரானப் போரில் முஸ்லிம்களுடன் யூதர்கள் கலந்துகொள்ளும் போது யூதர்களும் போர் செலவுகளில் பங்கெடுக்க வேண்டும்.
8) இவ்வுடன்படிக்கையில் கலந்து கொள்பவர்கள் மதீனாவில் குழப்பம் விளைவிப்பதோ, விஷமத்தனம் செய்வதோ, இரத்தம் ஓட்டுவதோ முற்றிலும் தடுக்கப்பட்டதாகும்.
9) இந்த உடன்படிக்கையில் கலந்து கொண்டவர்களுக்கு மத்தியில் ஆபத்தான சண்டை, சச்சரவுகள் அல்லது ஏதும் பிரச்னைகள் நிகழ்ந்தால் அதற்குரிய முடிவை அல்லாஹ்வும் அவனது தூதர் முஹம்மது (ஸல்) அவர்களுமே கூறுவார்கள்.
10) குறைஷிகளுக்கும், குறைஷிகளுக்கு உதவி செய்பவர்களுக்கும் பாதுகாப்பு கொடுக்கக் கூடாது.
11) யாராவது மதீனாவின் மீது முற்றுகையிட்டால் அவர்களுக்கெதிராக அனைவரும் போர் புரிய வேண்டும். தங்களுக்குள் உதவி செய்து கொள்ள வேண்டும். ஒவ்வொருவரும் தாங்கள் இருக்கும் பகுதியைப் பாதுகாக்க வேண்டும்.
12) இந்த உடன்படிக்கை, அநியாயக்காரனையும், குற்றவாளியையும் தண்டனையிலிருந்து பாதுகாக்காது.
இந்த உடன்படிக்கையும், ஒப்பந்தமும் உறுதிபெற்றதால் மதீனாவும், மதீனாவைச் சுற்றியுள்ள பகுதிகளும் ஒற்றுமை மிக்க நாடாக மாறி அதற்குத் தலைநகரம் மதீனாவாக விளங்கியது. அந்த நாட்டின் தலைவராக (இவ்வாறு நாம் கூறுவது சரியாக இருப்பின்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) இருந்தார்கள். அந்நாட்டில் முழுமையான அதிகாரமும் பேச்சுமையும் முஸ்லிம்களுக்கே இருந்தன.
அமைதியும், பாதுகாப்புமுடைய சூழலை விரிவுபடுத்துவதற்காகத் தேவைக்கேற்ப மற்ற சமூகத்தவர்களுடனும் நபி (ஸல்) இதற்குப்பின் உடன்படிக்கை செய்து கொண்டார்கள். அதன் சில விவரங்களை அடுத்துவரும் பக்கங்களில் காண்போம்.

ஆயுதமேந்தித் தாக்குதல்

குறைஷியர்களின் அச்சுறுத்துதலும் இப்னு உபையுடன் தொடர்பும்

மக்காவில் முஸ்லிம்களுக்கு நிராகரிப்பாளர்கள் அளவிலா துன்பங்களைக் கொடுத்து வந்தார்கள். முஸ்லிம்கள் மக்காவிலிருந்து மதீனாவிற்குச் செல்ல நாடிய போது அவர்களைப் பல விதத்திலும் தடுத்தார்கள். முஸ்லிம்களுக்குச் சொல்லிலடங்கா கொடுமைகளை அளித்தனர். உண்மையில் அவர்களுடைய குற்றங்களுக்காக அவர்களிடம் போர் செய்வதும், அவர்களுடைய சொத்துகளைச் சூறையாடுவதும் தகும் என்று இதற்கு முன்னுள்ள பக்கங்களில் கூறியிருக்கிறோம். முஸ்லிம்கள் மதீனாவிற்கு வந்த பிறகும் அந்த நிராகரிப்போர் முஸ்லிம்கள் மீது அத்துமீறுவதை நிறுத்திக் கொள்ளவில்லை. தங்களது அடாவடி அழிச்சாட்டியங்களை முடித்துக் கொள்ளவில்லை. முஸ்லிம்கள் தங்களிடமிருந்து தப்பித்து மதீனாவில் நிம்மதியான, பாதுகாப்பான இருப்பிடத்தை அமைத்துக் கொண்டார்களே என்ற கோபத்தால் கொதித்தெழுந்தார்கள். எப்படியாவது முஸ்லிம்களை மதீனாவிலிருந்து வெளியேற்றி விட வேண்டும் என்று தீர்மானமாக இருந்தார்கள். இதற்காக அப்துல்லாஹ் இப்னு உபை இப்னு சலூலுக்குக் கடிதம் எழுதினார்கள். அவன் அந்நேரத்தில் இணைவைப்பவனாக இருந்தான். அவனுடன் மக்காவாசிகள் தொடர்பு கொண்டதன் காரணம் என்னவெனில், நபி (ஸல்) மதீனா வருவதற்கு முன் அவன்தான் மதீனாவாசிகளின் தலைவனாக இருந்தான். மதீனாவாசிகள் அவனையே தங்களது அரசனாக ஏற்றுக் கொள்ளவும் தயாராக இருந்தனர். நபி (ஸல்) அவர்கள் மதீனாவிற்கு வராமல் இருந்திருந்தால் அவனே அவர்களின் அரசனாகியிருப்பான். இதனால் அவனுக்கு நபி (ஸல்) அவர்கள் மீதுள்ள கோபத்தை அறிந்த மக்காவாசிகள், அப்துல்லாஹ் இப்னு உபைக்கும் அவனுடன் இருந்த இணைவைப்போருக்கும் கடிதம் எழுதினர். அதில் அவர்கள் கூறியதாவது:
‘‘நீங்கள் எங்கள் ஊரைச் சார்ந்தவருக்கு அடைக்கலம் கொடுத்துள்ளீர்கள். இது அல்லாஹ்வின் மீது சத்தியம்! நிச்சயமாக நீங்கள் அவரிடம் போர் செய்ய வேண்டும் அல்லது அவரை வெளியாக்கி விட வேண்டும். அல்லது நாங்கள் (மக்காவாசிகள்) அனைவரும் ஒன்று சேர்ந்து உங்கள் மீது போர் தொடுத்து உங்களின் போர் வீரர்களைக் கொன்று குவித்து, உங்கள் பெண்களின் கற்புகளைச் சூறையாடுவோம்''- இவ்வாறு அக்கடிதத்தில் கூறியிருந்தனர். (ஸுனன் அபூதாவூது)
ஏற்கனவே, நபி (ஸல்) தனது ஆட்சியைப் பறித்துக் கொண்டார் என்று அப்துல்லாஹ் இப்னு உபை எண்ணி வந்ததால், நபியவர்களின் மீது கடுமையான வகையில் பகைமை கொண்டிருந்தான். எனவே, மக்கா முஷ்ரிக்குகள் கூறிய வார்த்தையை உடனடியாகச் செயல்படுத்தினான். இது சம்பந்தமாக அப்துர் ரஹ்மான் இப்னு கஅப் (ரழி) கூறுகிறார்கள்:
குறைஷிகளின் செய்தி அப்துல்லாஹ் இப்னு உபைம்க்கும், அவனுடன் இருந்த சிலை வணங்கிகளுக்கும் கிடைத்த போது அவர்கள் அனைவரும் நபி (ஸல்) அவர்களிடம் போர் செய்வதற்கு ஆயத்தமானார்கள். அவர்கள் ஆயத்தமாகும் இந்தச் செய்தி நபி (ஸல்) அவர்களுக்குக் கிடைத்தவுடன் அவர்களை சந்திக்கப் போனார்கள். அப்போது அவர்களிடம், ‘‘குறைஷிகள் உங்களை எச்சரித்ததால் நீங்கள் மிக பயந்துவிட்டீர்களோ! அவர்கள் உங்களுக்கு செய்யும் சூழ்ச்சியை விட நீங்கள் உங்களுக்குச் செய்யும் சூழ்ச்சிதான் மிக மோசமானது. என்ன! அவர்களின் சொல்லுக்கிணங்க உங்களது பிள்ளைகளிடமும், சகோதரர்களிடமும் நீங்கள் போர் புரிய எண்ணுகிறீர்களா?'' என்று சிந்தனையைத் தூண்டும் விதத்தில் நபி (ஸல்) கேட்டதும், கூடி இருந்தவர்கள் மறுப்பின்றி பிரிந்து சென்றனர். (ஸஹீஹுல் புகாரி)
அந்நேரத்தில் தனது தோழர்களிடம் ஏற்பட்ட மாற்றத்தைப் பார்த்து போர் செய்வதிலிருந்து இப்னு உபை விலகிக் கொண்டாலும், சமயமேற்படும் போதெல்லாம் குறைஷிகளுடன் சேர்ந்து கொள்வான். அத்துடன் தனது உதவிக்காக யூதர்களையும் சேர்த்துக் கொள்வான். ஆனால், அல்லாஹ்வின் அருளால் அவர்களது வஞ்சகத் தீ மூழும்போதெல்லாம் நபி (ஸல்) அவர்களின் ஞானமிக்க நடவடிக்கை அதை அணைத்துக் கொண்டே இருந்தது.

அபூஜஹ்லின் அச்சுறுத்தல்

இந்நிகழ்ச்சிக்குப் பின்பு ஸஅது இப்னு முஆத் (ரழி) உம்ரா செய்வதற்காக மக்கா சென்று உமய்யா இப்னு கலஃபிடம் தங்கினார்கள். உமய்யாவிடம் ‘‘நான் கஅபாவை வலம் வருவதற்காக மக்கள் யாருமில்லாத நேரமாகப் பார்த்து அழைத்துச் செல்'' என்று கூறினார்கள். உமய்யா மதிய நேரத்திற்குச் சற்று முன் அவர்களை அழைத்துக் கொண்டு கஅபாவிற்குச் சென்றான்.
அந்த இருவரையும் வழியில் அபூஜஹ்ல் சந்தித்தான். அவன் உமய்யாவிடம் ‘‘அபூ ஸஃப்வானே!" உன்னுடன் இருப்பவர் யார்?'' என்று கேட்டான். அதற்கு உமய்யா ‘‘இவர் ஸஅது'' என்றான். அப்போது அபூஜஹ்ல் ஸஅதிடம் ‘‘நீ மக்காவில் நிம்மதியாக தவாஃப் செய்ய வந்துவிட்டாயா? மதீனாவாசிகளாகிய நீங்கள் மதம் மாறியவர்களுக்கு அடைக்கலம் கொடுத்திருக்கின்றீர்கள். அது மட்டுமல்லாமல் அவர்களுக்கு உதவியும் ஒத்துழைப்பும் செய்வோம் என்றும் கூறுகின்றீர்களா? அறிந்து கொள்! அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நீ அபூ ஸஃப்வானுடன் வந்திருக்கவில்லை என்றால் உனது குடும்பத்திற்கு நீ பாதுகாப்புடன் திரும்ப முடியாது'' என்று கூறினான். இதைக் கேட்ட ஸஅது, அவனது சப்தத்தை விட தனது சப்தத்தை உயர்த்தி ‘‘நீ அறிந்துகொள்! அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நீ தவாஃப் செய்வதிலிருந்து என்னைத் தடுத்தால், இதை விட உமக்கு மிகக் கடினமாக இருக்கும் ஒன்றை நான் தடுத்து நிறுத்துவேன். நீ வியாபாரத்திற்காக மதீனாவின் வழியை பயன்படுத்த விடமாட்டேன்'' என்று எச்சரித்தார். (ஸஹீஹுல் புகாரி)

குறைஷிகளின் மிரட்டல்

உண்மையில், குறைஷிகள் இதைவிட மிகப் பெரிய தீமை ஒன்றைச் செய்ய வேண்டுமென்ற உறுதியில் இருந்தனர். அதாவது, அனைத்து முஸ்லிம்களையும் குறிப்பாக நபி (ஸல்) அவர்களையும் ஒழித்துக்கட்ட வேண்டுமென்று தீவிரமாக ஆலோசித்தனர். இது வெறும் கற்பனையோ அல்லது யூகமோ அல்ல! குறைஷிகளின் இந்த வஞ்சக சூழ்ச்சியினால் நபி (ஸல்) அவர்கள் இரவில் தூக்கமில்லாமல் இருந்தார்கள் அல்லது தங்களின் தோழர்களின் பாதுகாப்பில் இரவைக் கழித்தார்கள்.
இதைப் பற்றி ஆயிஷா (ரழி) கூறுவதாவது: நபி (ஸல்) மதீனாவுக்கு வந்த காலத்தில் ஓரவு விழித்திருந்தார்கள். அப்போது ‘‘எனது தோழர்களில் நல்லவர் ஒருவர் இன்று இரவு என்னை பாதுகாக்க வேண்டுமே'' என்றார்கள். அங்கு ஆயுதத்தின் சப்தத்தை நாங்கள் கேட்டோம். நபி (ஸல்) அவர்கள் ‘‘அது யார்?'' என்று கேட்கவே, வந்தவர் ‘‘நான்தான் ஸஅது இப்னு அபீவக்காஸ்'' என்றார். நபி (ஸல்) அவர்கள் அவரிடம் ‘‘நீர் ஏன் வந்தீர்?'' என்று வினவினார்கள். அதற்கவர் ‘‘நபி (ஸல்) அவர்களுக்கு ஏதும் ஆபத்து நிகழ்ந்து விடுமோ என்ற அச்சத்தால் அவர்களைப் பாதுகாக்க வந்திருக்கிறேன்'' என்றார். அதன் பிறகு, நபி (ஸல்) அவர்கள் ஸஅதுக்காக துஆ (பிரார்த்தனைச்) செய்து விட்டு தூங்கினார்கள். (ஸஹீஹுல் புகாரி)
தோழர்கள் நபி (ஸல்) அவர்களைப் இவ்வாறு பாதுகாத்தது சில இரவுகளில் மட்டுமல்ல மாறாக, மதீனா வந்ததிலிருந்து தொடர்ந்து நபித்தோழர்களில் யாராவது ஒருவர் இரவில் கண் விழித்து நபி (ஸல்) அவர்களைப் பாதுகாத்தார்.
இதைப் பற்றி ஆயிஷா (ரழி) அறிவிக்கிறார்கள்: இரவில் நபி (ஸல்) அவர்களின் தோழர்களில் யாராவது ஒருவர் நபி (ஸல்) அவர்களைப் பாதுகாப்பார்.
(நம்முடைய) தூதரே! உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்கு இறக்கப்பட்டதை (எந்த குறைவுமின்றி மக்களுக்கு) அறிவித்து விடுங்கள். நீங்கள் அவ்வாறு செய்யா விட்டால் அவனுடையத் தூதை நீங்கள் நிறைவேற்றியவராக மாட்டீர்கள். (இதில் எவருக்கும் அஞ்சாதீர்கள்!) மனிதர்(களின் தீங்கு)களில் இருந்து அல்லாஹ் உங்களைக் காப்பாற்றுவான். நிச்சயமாக அல்லாஹ் நிராகரிக்கும் மக்களை நேரான வழியில் செலுத்த மாட்டான். (அல்குர்ஆன் 5:67)
என்ற வசனத்தை அல்லாஹ் இறக்கியவுடன் நபி (ஸல்) தாங்கள் தங்கியிருந்த கூடாரத்திலிருந்து தலையை வெளியே நீட்டி ‘‘மக்களே! என்னிடமிருந்து திரும்பிச் செல்லுங்கள்! அல்லாஹ் என்னை நிச்சயமாகப் பாதுகாத்து விட்டான்'' என்று கூறினார்கள். (ஸுனனுத் திர்மிதி)
ஆபத்து நபி (ஸல்) அவர்களின் உயிருக்கு மட்டுமல்ல அனைத்து முஸ்லிம்களுக்கும் இருந்தது. இதைப் பற்றி உபை இப்னு கஅப் (ரழி) கூறுகிறார்கள்:
நபி (ஸல்) அவர்களும் முஹாஜிர் தோழர்களும் மதீனாவில் அன்சாரிகளின் ஆதரவைப் பெற்றுக் கொண்டதைச் சகித்துக்கொள்ள முடியாமல் குறைஷிகளும், மற்ற அரபுகளும் ஒன்று சேர்ந்து அவர்களை எதிர்த்தனர். இதன் காரணமாக நபித்தோழர்கள் இரவு தூங்கும் போதும் காலையில் விழிக்கும் போதும் தற்காப்புக்காக ஆயுதங்களைத் தங்களுடன் வைத்திருந்தனர்.

போர் புரிய அனுமதி

முஸ்லிம்கள் மதீனாவில் கடுமையான ஆபத்துகளைச் சந்திக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. மேலும், குறைஷிகள் தங்களின் வழிகேட்டிலிருந்து விலகிக் கொள்ளாமல் வம்புத்தனத்தையும், அழிச்சாட்டியத்தையும் தொடர்ந்து கொண்டே சென்றனர். இதன் காரணமாக அல்லாஹ் முஸ்லிம்களுக்கு நிராகரிப்பவர்களை எதிர்த்துப் போர் புரியலாம் என்று அனுமதி வழங்கினான். ஆனால், போரைக் கடமையாக்கவில்லை. நிராகரிப்பவர்கள் சண்டையிட்டால், அவர்களை எதிர்த்து போர் புரிய மட்டும் அனுமதிக்கப்பட்டது.
(நிராகரிப்பவர்களால்) அநியாயத்தில் சிக்கி, போருக்கு நிர்பந்திக்கப்பட்ட (நம்பிக்கை கொண்ட)வர்களுக்கு அவர்களை எதிர்த்து போர் புரிய அனுமதி அளிக்கப்பட்டு விட்டது. நிச்சயமாக அல்லாஹ் இவர்களுக்கு உதவி செய்ய பேராற்றலுடையவனாக இருக்கின்றான். (அல்குர்ஆன் 22:39)
மேலும், இவ்வாறு அறப்போர் செய்வது அனுமதிக்கப்பட்டதற்குரிய காரணத்தையும் அடுத்துள்ள வசனங்களில் அல்லாஹ் விவரித்தான். அதாவது, அசத்தியத்தை அழித்து அல்லாஹ்வின் கட்டளைகளை நிலை நிறுத்துவதற்காகத்தான் போர் செய்வது அனுமதிக்கப்பட்டது.
அவர்கள் எத்தகையவரென்றால், நாம் அவர்களுக்குப் பூமியில் ஆட்சியைக் கொடுத்தால் தொழுகையைக் கடைப்பிடித்துத் தொழுவார்கள் ஜகாத்தும் கொடுப்பார்கள் நன்மையானவற்றை ஏவி, பாவமானவற்றைத் தடை செய்வார்கள். எல்லா காரியங்களின் முடிவும் அல்லாஹ்விடமே இருக்கிறது. (அல்குர்ஆன் 22:41)
இந்த அனுமதி குறைஷிகளிடம் போர் செய்வதற்கு மட்டும் வழங்கப்பட்டது. ஆனால், அதற்குப் பின்பு தேவைக்கேற்ப போருக்கான சட்டம் மாற்றப்பட்டு, பொதுவாக போர் செய்வது கட்டாயமாக்கப்பட்டது. குறைஷிகளுடனும் இனணவைக்கும் மற்றவர்களுடனும் போர் செய்வதற்கான கட்டளை பிறப்பிக்கப்பட்டது. இக்கட்டளைக்குப் பிறகு ஏற்பட்ட போர்களில் நடந்த சம்பவங்களைக் கூறுவதற்கு முன் இப்போர்கள் ஏன் கடமையாக்கப்பட்டன என்பதற்கான காரணங்களை இங்கு சுருக்கமாகப் பார்ப்போம்.
1) முதல் காரணம்: இணைவைக்கும் குறைஷிகளை எதிரிகளாகக் கருதியது. ஏனெனில், அவர்கள்தான் முஸ்லிம்களிடம் முதன் முதலாக பகைமையைத் தொடங்கினர். எனவே, முஸ்லிம்கள் குறைஷிகளை எதிர்த்து போர் செய்வது மட்டுமில்லாமல் குறைஷிகளின் சொத்துகளையும் பறிமுதல் செய்ய வேண்டும் என்று எண்ணுவது நியதியே! ஆனால், குறைஷிகளைத் தவிர மற்ற அரபிகள் முஸ்லிம்களுக்கு இடையூறு செய்யாததால் அவர்களை எதிரிகளாகக் கருத வேண்டியதில்லை. எனவே, அவர்களிடம் போர் செய்ய வேண்டிய அவசியமுமில்லை.
2) இரண்டாவது காரணம்: இணைவைக்கும் அரபிகளில் யார் குறைஷிகளுடன் இணைந்து முஸ்லிம்களுக்கு எதிராக செயல்படுகிறார்களோ அவர்களிடமும், வேறு யாராவது முஸ்லிம்களைப் பகைத்தால் அவர்களிடமும் போர் செய்ய வேண்டும்.
3) மூன்றாவது காரணம்: உடன்படிக்கை செய்து கொண்ட யூதர்களில் எவர் உடன்படிக்கைக்கு மோசடி செய்கிறாரோ அல்லது முஸ்லிம்களின் எதிரிகளாகிய இணை வைப்பாளருக்கு ஆதரவு தருகிறாரோ, அத்தகைய யூதர்களின் உடன்படிக்கையை முறித்துக் கொள்வதுடன் அவர்களிடமும் போர் செய்ய வேண்டும்.
4) நான்காவது காரணம்: வேதம் கொடுக்கப்பட்டவர்களில் யார் முஸ்லிம்களைப் பகைப்பார்களோ, முஸ்லிம்களிடம் சண்டையிடுவார்களோ அவர்களிடம் போர் செய்ய வேண்டும். அவர்கள் இழிவுபட்டு வரி செலுத்தும் வரை இந்தப் போர் நீடிக்கும். ‘‘வேதம் கொடுக்கப்பட்டவர்'' என்றால் யூதர்கள் மற்றும் கிறிஸ்தவர்களைப் போன்று.
5) ஐந்தாவது காரணம்: முஷ்ரிக்கு (இணைவைப்பவர்) அல்லது யூதர் அல்லது கிறிஸ்தவர் அல்லது எவராக இருப்பினும் அவர் இஸ்லாமை ஏற்றுக் கொண்டு இஸ்லாமிய சட்ட திட்டங்களுக்கு முரண்படாமல் இருக்கும் வரை அவருடைய உயிர், பொருள், மானம் அனைத்தும் காக்கப்படும். அவருடைய கேள்வி கணக்கு அல்லாஹ்வைச் சார்ந்ததாகும். அதாவது, உள்ரங்கமான அல்லது மறைமுகமான அவரது செயல்களைப் பற்றி அல்லாஹ் விசாரணை செய்து கொள்வான். அதைக் கண்காணிக்க வேண்டியது நமது கடமையல்ல! (இஸ்லாமிய சட்டங்களுக்கு முரண்படுவது என்றால், எடுத்துக்காட்டாக -கொலை செய்வது, கொள்ளை அடிப்பது, கிளர்ச்சி செய்வது- போன்ற செயல்களில் ஈடுபடுவது. அப்படி ஈடுபட்டால், அதற்குரிய தண்டனை உலகிலேயே அவருக்குக் கிடைக்கும்.)
போருக்கான அனுமதி அல்லாஹ்வின் புறத்திலிருந்து கிடைத்தவுடன் குறைஷிகளின் வியாபார வழித்தடமான மக்காவிலிருந்து ஷாம் செல்லும் முக்கிய வழியைத் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர வேண்டுமென்று நபி (ஸல்) விருப்பப்பட்டார்கள். இதற்காக இரண்டு திட்டங்களை வகுத்தார்கள்.
முதலாவது திட்டம்:-
மக்காவாசிகளின் முக்கிய வியாபார வழித்தடத்திற்கு அருகில் வசிக்கும் கோத்திரத்தாருடனும், இந்த வியாபார வழித்தடத்திற்கும் மதீனாவிற்குமிடையில் வசிக்கும் கோத்திரத்தாருடனும் நபி (ஸல்) உடன்படிக்கை செய்து கொள்வது.
அதாவது, அந்தக் கோத்திரத்தார் முஸ்லிம்களுடன் நட்புறவோடு நடந்து கொள்ள வேண்டும். அப்படி நட்புறவோடு நடந்து கொள்ளவில்லை என்றாலும் முஸ்லிம்களுடன் பகைமை காட்டக் கூடாது. இவ்வகையில் போர் சம்பந்தமான ராணுவ நடவடிக்கைகளை எடுப்பதற்கு முன் ஜுஹைனா கிளையினருடனும் ஓர் உடன்படிக்கையை நபி (ஸல்) அவர்கள் செய்து கொண்டார்கள். இந்த ஜுஹைனா கிளையினரின் வீடுகள் மதீனாவைச் சுற்றி மூன்று இடங்களில் இருந்தன. போரின் நடவடிக்கைகளைத் தொடங்கிய பின் இன்னும் பல கோத்திரத்தாருடனும் உடன்படிக்கைகளைச் செய்து கொண்டார்கள். இதனுடைய விவரங்கள் பின்னால் வர உள்ளன.
இரண்டாவது திட்டம்:-
மக்காவாசிகளின் இந்த வியாபாரப் பாதையை நோக்கி ஒன்றுக்குப் பின் ஒன்றாக பல படைப் பிரிவுகளை அனுப்பி வைப்பது.
(நபி (ஸல்) அவர்கள் கலந்துகொண்ட போருக்கு அரபியில் ‘கஸ்வா' என்றும் அவர்கள் கலந்து கொள்ளாமல் தோழர்கள் மட்டும் சென்று வந்த போர்களுக்கு ‘ஸய்யா' என்றும் கூறப்படும். நாம் இந்த தமிழாக்கத்தில் கஸ்வாவை ‘போர்' என்றும் ஸய்யாவை ‘படைப் பிரிவு' என்றும் குறிப்பிடுகிறோம்.)
இக்காலத்தில் நபியவர்கள் நிகழ்த்திய போர்களும் அனுப்பிய படைப் பிரிவுகளும்
போர் செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்ட பின், மேற்கூறப்பட்ட இரண்டு திட்டங்களையும் அமல்படுத்துவதற்காக ராணுவ நடவடிக்கைகளை நபி (ஸல்) தொடங்கினார்கள். அதாவது, இந்த நடவடிக்கைகள் ஒரு கண்காணிப்பு ரோந்துப் பணிகளைப் போன்று அமைந்திருந்தன. இதனுடைய அடிப்படை நோக்கங்கள் என்னவெனில்:
மதீனாவைச் சுற்றியுள்ள அனைத்து தரை மார்க்கங்களையும், பொது வழிகளையும் நன்கு அறிந்து கொள்ளுதல் பழக்கப்படுத்திக் கொள்ளுதல் அவ்வாறே மக்காவை நோக்கி செல்லும் அனைத்து வழிகளையும் அறிந்து கொள்ளுதல்.
இந்த வழிகளில் குடியிருக்கும் அனைத்துக் கோத்திரத்தாருடனும் சமாதான ஒப்பந்தம் செய்துகொள்ளுதல்.
முஸ்லிம்கள் இப்போது பலமடைந்து விட்டார்கள் வலுபெற்றுவிட்டார்கள் பழைய இயலாமையிலிருந்து விடுதலையடைந்து விட்டார்கள் என்று மதீனாவில் உள்ள இணை வைப்பவர்களுக்கும், யூதர்களுக்கும் அதைச் சுற்றியுள்ள கிராம அரபிகளுக்கும் உணர்த்துதல்.
அத்துமீறி நடந்து கொண்டிருந்த குறைஷிகளுக்கு அவர்களின் முடிவு என்னவாகும் என்பதை எச்சரிக்கை செய்தல். ஏனெனில், இந்த எச்சரிக்கையின் விளைவாக தொடர்ந்து தீவிரமாக செயல்படுத்தி வரும் தங்களது அழிச்சாட்டியங்களை விட்டு அவர்கள் விலகிக் கொள்ளலாம். தங்களதுப் பொருளாதார வழிகளும் பொருளாதாரங்களும் வெகு விரைவில் மிகப் பயங்கரமாக பாதிக்கப்படும் என்ற அச்சம் அவர்களுக்கு ஏற்படலாம். மேலும், முஸ்லிம்கள் அவர்களது நாட்டுக்குள் இருக்கும் போது அவர்களுடன் போர் செய்யும் எண்ணத்தை கைவிடலாம். பிறரை அல்லாஹ்வின் மார்க்கத்திலிருந்து தடுக்காமல் இருக்கலாம். மேலும், மக்காவிலுள்ள அப்பாவி முஸ்லிம்களை வேதனை செய்வதிலிருந்து விலகிக் கொள்ளலாம். எல்லாவற்றிற்கும் மேலாக, அரேபிய தீபகற்பத்தில் அல்லாஹ்வின் மார்க்கத்தைச் சுதந்திரமாக எடுத்து வைக்கும் வாய்ப்பை முஸ்லிம்கள் பெறுவார்கள்.
படைப் பிரிவுகளின் விவரங்களைச் சுருக்கமாகக் காண்போம்:"
1) ‘ஸய்ஃபுல் பஹர்'
ஹிஜ்ரி 1, ரமழான் (கி.பி. 623 மார்ச்) மாதம் ஒரு படைப் பிரிவை நபி (ஸல்) அவர்கள் அனுப்பினார்கள். 30 முஹாஜிர்கள் இந்தப் பிரிவில் இடம்பெற்றனர். அவர்களுக்கு ஹம்ஜா (ரழி) அவர்களைத் தலைவராக ஆக்கினார்கள். ஷாமிலிருந்து மக்காவை நோக்கி வந்து கொண்டிருந்த குறைஷிகளின் வியாபாரக் குழுவை வழி மறிப்பதற்காக இவர்கள் சென்றார்கள். இந்த வியாபாரக் கூட்டத்தில் முந்நூறு நபர்களும் அவர்களுக்குத் தலைமையேற்று அபூஜஹ்லும் வந்து கொண்டிருந்தான். ‘ஈஸ்' என்ற நகரத்தின் ஓரத்தில் உள்ள ‘ஸய்ஃபுல் பஹ்ர்' எனும் இடத்தை இரு கூட்டத்தினரும் அடைந்த போது சண்டையிடுவதற்காக அணிவகுத்தனர். ஆனால், இரு கூட்டதினருக்கும் நண்பராக இருந்த மஜ்தி இப்னு அம்ர் அல்ஜுஹனி என்பவர் சமரசப் பேச்சுவார்த்தை நடத்தி போரைத் தவிர்க்கச் செய்தார்.
இப்போல் நபி (ஸல்) ஹம்ஜாவுக்கு வெள்ளை நிறக் கொடியைக் கொடுத்தார்கள். இதுதான் நபி (ஸல்) அவர்கள் நிறுவிய முதல் கொடியாகும். இக்கொடியை அபூ மர்ஸத் கன்னாஸ் இப்னு ஹுஸைன் அல்கனவி (ரழி) ஏந்தியிருந்தார்கள்.
2) ‘ராபிக்'
ஹிஜ்ரி 1, ஷவ்வால் (கி.பி. 623 ஏப்ரல்) மாதம் நபி (ஸல்) அவர்கள் ‘ராபிக்' என்ற இடத்தை நோக்கி ஒரு படைப் பிரிவை அனுப்பினார்கள். இதற்குத் தலைவராக உபைதா இப்னுல் ஹாரிஸ் இப்னுல் முத்தலிப் (ரழி) இருந்தார். இப்படையில் 60 முஹாஜிர்கள் கலந்து கொண்டார்கள். இவர்கள் ‘பத்தன் ராபிக்' என்ற இடத்தில் அபூஸுஃப்யானைச் சந்தித்தார்கள். இரு கூட்டத்தார்களும் ஒருவரை நோக்கி ஒருவர் அம்பெய்து கொண்டனர். மற்றபடி, உக்கிரமான சண்டை ஏதும் நடைபெறவில்லை.
காஃபிர்களின் படையிலிருந்த அல்மிக்தாத் இப்னு அம்ர் அல்பஹ்ரானி, உத்பான் இப்னு கஸ்வான் அல்மாஜினி ஆகிய இருவர் முஸ்லிம்களுடன் இணைந்து கொண்டனர். இவர்கள் முஸ்லிமாகத்தான் இருந்தனர். என்றாலும், ஹிஜ்ராவிற்காக மக்காவிலிருந்து வெளியேற முடியாத காரணத்தால், காஃபிர்களுடன் சேர்ந்திருந்தனர். எப்பொழுதாவது சந்தர்ப்பம் கிடைத்தால் தப்பித்து முஸ்லிம்களிடம் சேர்ந்து கொள்ளலாம் என்ற எண்ணத்தில் இந்த வியாபாரக் கூட்டத்துடன் வந்திருந்தனர்.
இந்தப் படையின் கொடி வெள்ளை நிறமாக இருந்தது. இதை மிஸ்தஹ் இப்னு உஸாஸா இப்னு அல்முத்தலிப் இப்னு அப்து மனாஃப் ஏந்தியிருந்தார்கள்.
3. ‘கர்ரார்'
ஹிஜ்ரி 1, துல்கஅதா (கி.பி. 623 மே) மாதம் ‘கர்ரார்' என்ற இடத்திற்கு ஸஅது இப்னு அபீ வக்காஸ் (ரழி) தலைமையில் படைப் பிரிவு ஒன்றை நபி (ஸல்) அனுப்பினார்கள். குறைஷிகளின் வியாபாரக் கூட்டத்தை இடைமறிப்பதற்காகப் புறப்பட்ட இவர்களிடம் ‘கர்ரார்' என்ற இடத்தை தாண்டிச் செல்லக் கூடாது என நபி (ஸல்) அவர்கள் வலியுறுத்தினார்கள். இந்தப் படை கால்நடையாகவே சென்றது. பகலில் பதுங்குவதும் இரவில் நடப்பதுமாக வியாழன் காலை கர்ராரை அடைந்தது. ஆனால், அந்த வியாபாரக் கூட்டமோ இவர்கள் சென்றடைவதற்கு ஒரு நாள் முன்னதாகவே அந்த இடத்தைக் கடந்து சென்று விட்டிருந்ததால், இவர்கள் சண்டையின்றித் திரும்பினர்.
இந்தப் படையின் கொடி வெள்ளை நிறமாக இருந்தது. இதை மிக்தாத் இப்னு அம்ர் (ரழி) ஏந்தியிருந்தார்கள்.
4) ‘அப்வா' (அ) ‘வத்தான்'
ஹிஜ் 2, ஸஃபர் (கி.பி. 623 ஆகஸ்டு) மாதம் நபி (ஸல்) அவர்கள் 70 முஹாஜிர்களுடன் குறைஷிகளின் வியாபாரக் கூட்டத்தை இடை மறிப்பதற்காக ‘அல்அப்வா' அல்லது ‘வத்தான்' என்ற இடத்தை நோக்கிச் சென்றார்கள். ஆனால், சண்டை ஏதும் நடைபெறவில்லை. இந்தப் போருக்குச் செல்வதற்கு முன் நபி (ஸல்) அவர்கள் ஸஅது இப்னு உபாதாவை மதீனாவில் தனக்குக் கலீஃபாவாக (பிரதிநிதியாக) ஆக்கினார்கள். இந்த போரின் போது ‘ழம்ரா' கிளையினரின் தலைவரான அம்ர் இப்னு மக்ஷி என்பவருடன் நட்பு உடன்படிக்கை செய்தார்கள். அந்த உடன்படிக்கையில் எழுதப்பட்டதாவது:
‘‘இது அல்லாஹ்வின் தூதராகிய முஹம்மது ‘ழம்ரா' கிளையினருடன் செய்யும் ஒப்பந்தம். ழம்ரா கிளையினர் தங்களது உயிர், பொருள் அனைத்திலும் பாதுகாப்புப் பெற்றவர்களே! அவர்களிடம் சண்டை செய்பவர்களை நாங்களும் எதிர்ப்போம். சண்டை செய்பவர்களுக்கு எதிராக அவர்களுக்கு உதவி செய்வோம். இவர்கள் இஸ்லாமிய மார்க்கத்திற்கு எதிராக போரில் ஈடுபடக் கூடாது. அவ்வாறே நபி (ஸல்) உதவிக்காக அழைத்தால் அவர்களும் உதவ வரவேண்டும். கடல் வற்றினாலும் இந்த உடன்படிக்கை நிலைத்திருக்கும்.''
இதுதான் நபி (ஸல்) அவர்கள் கலந்து கொண்ட முதல் போராகும். நபி (ஸல்) அவர்கள் இந்தப் பயணத்தில் பதினைந்து நாட்கள் மதீனாவிற்கு வெளியில் இருந்தார்கள். இந்தப் போரிலும் வெள்ளைக் கொடியே பயன்படுத்தப்பட்டது. அதை ஹம்ஜா இப்னு அப்துல் முத்தலிப் (ரழி) ஏந்தியிருந்தார்.
5) ‘பூவாத்'
ஹிஜ் 2, ரபீவுல் அவ்வல் (கி.பி. 623 செப்டம்பர்) மாதம் நபி (ஸல்) தங்களது 200 தோழர்களுடன் குறைஷிகளின் வியாபாரக் கூட்டத்தை வழிமறிப்பதற்காகச் சென்றார்கள். இந்த வியாபாரக் கூட்டத்தில் உமய்யா இப்னு கலஃபும் நூறு குறைஷிகளும் இருந்தனர். இவர்களுடன் 2500 ஒட்டகங்கள் இருந்தன. நபி (ஸல்) அவர்கள் ‘ரழ்வா' என்ற மலைக்கருகில் உள்ள ‘பூவாத்' என்ற இடம் வரை சென்றார்கள். ஆனால், வியாபாரக் கூட்டம் அந்த இடத்தை முன்கூட்டியே கடந்து விட்டதால் சண்டை ஏதும் நடைபெறவில்லை.
இந்தப் போருக்கு நபி (ஸல்) செல்லும் போது மதீனாவில் ஸஅது இப்னு முஆதை பிரதிநிதியாக நியமித்தார்கள். இப்போரிலும் வெள்ளை நிறக் கொடியே பயன்படுத்தப்பட்டது. அதை ஸஅது இப்னு அபீ வக்காஸ் (ரழி) ஏந்தியிருந்தார்கள்.
6) ‘ஸஃப்வான்'
ஹிஜ் 2, ரபீவுல் அவ்வல் (கி.பி. 623 செப்டம்பர்) மாதம் ‘குருஸ் இப்னு ஜாபிர் அல்ஃபஹ்' என்பவன் சில முஷ்ரிக் வீரர்களுடன் மதீனாவின் மேய்ச்சல் நிலங்கள் மீது தாக்குதல் நடத்தி அங்கிருந்த கால்நடைகளில் சிலவற்றைக் கொள்ளையடித்துச் சென்றான். இதை அறிந்த நபி (ஸல்) அவர்கள் தங்களின் எழுபது தோழர்களை அழைத்துக் கொண்டு அவனை விரட்டிப் பிடிப்பதற்காக விரைந்தார்கள். பத்ருக்கு அருகிலுள்ள ‘ஸஃப்வான்' என்ற இடம் வரை சென்றும் குருஸையும் அவனது ஆட்களையும் பிடிக்க முடியாததால் சண்டையின்றி திரும்பினார்கள். இந்தப் போருக்கு ‘முதல் பத்ர் போர்' என்றும் பெயர் கூறப்படுகிறது.
இந்தப் போருக்கு நபி (ஸல்) செல்லும் போது மதீனாவில் தனது பிரதிநிதியாக ஜைது இப்னு ஹாஸாவை நியமித்தார்கள். இப்போரிலும் வெள்ளை நிறக் கொடியே பயன்படுத்தப்பட்டது. அதை அலீ இப்னு அபூதாலிப் (ரழி) ஏந்தியிருந்தார்.
7) ‘துல் உஷைரா'
ஹிஜ் 2, ஜுமாதா அல்ஊலா அல்லது ஜுமாதா அல் ஆகிரா (கி.பி. 623 நவம்பர் அல்லது டிசம்பர்) மாதம் நபி (ஸல்) அவர்கள் தமது 150 அல்லது 200 முஹாஜிர் தோழர்களுடன் இந்தப் போருக்காக புறப்பட்டர்கள். இப்போல் கலந்து கொள்ளும்படி எவரையும் நிர்பந்திக்கவில்லை. இந்த 150 (அல்லது) 200 தோழர்களும் 30 ஒட்டகங்களில் ஒருவர் மாறி ஒருவராக பயணித்தனர். மக்காவிலிருந்து வியாபாரச் சாமான்களுடன் ஷாம் நோக்கி சென்று கொண்டிருந்த குறைஷிகளின் வியாபாரக் கூட்டத்தினரை வழிமறிப்பதே நபி (ஸல்) அவர்களின் நோக்கமாக இருந்தது. ஆனால், நபி (ஸல்) அவர்கள் ‘துல் உஷைரா' என்ற இடத்தை அடைவதற்குப் பல நாட்களுக்கு முன்னதாகவே அக்கூட்டம் அந்த இடத்தைக் கடந்து விட்டது தெரியவந்தது. இதே வியாபாரக் கூட்டம் ஷாமிலிருந்து திரும்ப வரும்போது அதை வழிமறிப்பதற்காகச் செல்லும் போதுதான் பிரபலமான இரண்டாவது பத்ர் போர் (பத்ர் அல் குப்ரா) நடைபெற்றது.
நபி (ஸல்) ஜுமாதா அல்ஊலா கடைசியில் இப்போருக்காக வெளியேறி ஜுமாதா அல்ஆகிரா தொடக்கத்தில் மதீனாவிற்குத் திரும்பி வந்தார்கள்.
முஸ்லிம்கள் மீது அத்துமீறக் கூடாது என முத்லிஜ், ழம்ரா மற்றும் அவர்களுடைய நட்பு கிளையினருடன் இப்பயணத்தில் நபி (ஸல்) ஒப்பந்தம் செய்தார்கள்.
இப்போருக்கு நபி (ஸல்) சென்ற போது மதீனாவில் அபூஸலமா இப்னு அப்துல் அஸத் அல்மக்ஜூமி (ரழி) என்பவரைப் பிரதிநிதியாக நியமித்தார்கள். இப்போரிலும் வெள்ளை நிறக் கொடியே பயன்படுத்தப்பட்டது. இதை ஹம்ஜா இப்னு அப்துல் முத்தலிப் (ரழி) ஏந்தியிருந்தார்கள்.
8) ‘நக்லா'
ஹிஜ் 2, ரஜப் (கி.பி. 624 ஜனவ) மாதம் நபி (ஸல்) 12 முஹாஜிர்களுடன் அப்துல்லாஹ் இப்னு ஜஹ்ஷ் அல்அஸதி (ரழி) அவர்களை ‘நக்லா' என்ற இடத்திற்கு அனுப்பி வைத்தார்கள். இருவருக்கு ஓர் ஒட்டகம் வீதமாக இவர்கள் ஒருவர் மாறி ஒருவர் பயணம் செய்தனர்.
நபி (ஸல்) ஒரு கடிதத்தை எழுதி இரண்டு நாட்கள் கழிந்த பின்தான் கடிதத்தைப் படித்துப் பார்க்க வேண்டும் என்று கூறி, அதை அப்துல்லாஹ் இப்னு ஜஹ்ஷிடம் கொடுத்தார்கள். அப்துல்லாஹ் (ரழி) அப்படையை அழைத்துக் கொண்டு மதீனாவிலிருந்து புறப்பட்டு இரண்டு நாட்கள் கழித்து, கடிதத்தைப் படித்துப் பார்த்தார்கள்.
அக்கடிதத்தில் ‘‘நீர் எனது இந்தக் கடிதத்தைப் படித்த பிறகு, மக்கா மற்றும் தாம்ஃபிற்கு மத்தியிலுள்ள ‘நக்லா' என்ற இடத்தை அடையும் வரை தொடர்ந்து செல்லுங்கள். அந்த இடத்தை அடைந்து விட்டால் அங்குத் தங்கி குறைஷிகளின் வியாபாரக் கூட்டத்தை எதிர்பார்த்திருங்கள், அவர்களின் வருகையை அறிந்து எனக்கு செய்தி அனுப்புங்கள்'' என்று எழுதப்பட்டிருந்தது. இதைப் படித்த அப்துல்லாஹ் (ரழி) ‘‘செவிமடுத்தோம் வழிப்பட்டோம்!'' என்று கூறியவராக, இச்செய்தியை தங்கள் தோழர்களுக்கு அறிவித்தார்கள்.
‘‘நான் உங்களை நிர்பந்திக்கவில்லை. யார் வீரமரணம் அடைய விரும்புகிறாரோ அவர் என்னுடன் வரலாம். யார் மரணிப்பதை வெறுக்கிறாரோ அவர் திரும்பிவிடலாம். ஆனால், நான் போர் செய்யத் தயாராக இருக்கிறேன்'' என்று அப்துல்லாஹ் (ரழி) தங்கள் தோழர்களிடம் கூறினார். அவர்களது தோழர்கள் ‘‘போருக்கு நாங்களும் தயாராக இருக்கிறோம்'' என்று கூறினார்கள். இவ்வாறு இவர்கள் தங்களதுப் பயணத்தைத் தொடர்ந்து கொண்டிருந்த போது வழியில் ஸஅது இப்னு அபீவக்காஸும், உத்பா இப்னு கஸ்வானும் தாங்கள் வாகனித்த ஒட்டகத்தைத் தவற விட்டதால், அதைத் தேடுவதில் ஈடுபட்டு படையிலிருந்து பின்னடைந்து விட்டனர்.
அப்துல்லாஹ் இப்னு ஜஹ்ஷ் (ரழி) படையுடன் ‘நக்லா' என்ற அந்த இடத்தை வந்தடைந்தார்கள். அங்குக் குறைஷிகளில் அம்ர் இப்னு ஹழ்ரமீ, உஸ்மான் இப்னு அப்துல்லாஹ் இப்னு முகீரா, நவ்ஃபல் இப்னு அப்துல்லாஹ் இப்னு முகீரா மற்றும் முகீரா கிளையினரின் அடிமையான ஹகம் இப்னு கைஸான் ஆகியோருடன் வியாபாரக் குழு ஒன்று உலர்ந்த திராட்சை, பதனிடப்பட்ட தோல் மற்றும் வியாபாரப் பொருட்களுடன் சென்று கொண்டிருந்தது. அப்துல்லாஹ் இப்னு ஜஹ்ஷ் தங்களது தோழர்களுடன் ஆலோசனை செய்தார்கள். ‘‘நாம் சங்கைமிக்க மாதமாகிய ரஜப் மாதத்தின் கடைசித் தேதியில் இருக்கிறோம். இப்போது அவர்களுடன் நாம் சண்டையிட்டால் சங்கைமிக்க மாதத்தின் கண்ணியத்தைப் பாழ்படுத்தியவர்களாகி விடுவோம். ஆனால், போர் செய்யாமல் இன்றிரவு விட்டுவிட்டால் இவர்கள் ஹரம் பகுதிக்குள் நுழைந்து விடுவார்கள்'' - இவ்வாறு விவாதம் நடைபெற்ற பின்பு, அவர்களிடம் சண்டையிடலாம் என்று முடிவானது. அதன் பிறகு முஸ்லிம்களில் ஒருவர் அம்ர் இப்னு ஹழ்ரமியை அம்பெய்துக் கொன்றார்.
அடுத்து, முஸ்லிம்கள் உஸ்மான் மற்றும் ஹகம் ஆகிய இருவரையும் கைது செய்தனர். ஆனால் நவ்ஃபல் தப்பித்துவிட்டார். பின்பு இரண்டு கைதிகள், வியாபாரப் பொருட்கள் அனைத்தையும் எடுத்துக்கொண்டு மதீனா வந்தனர். இந்த கனீமாவில்" அல்லாஹ்விற்கும் அவனது தூதருக்கும் ஐந்தில் ஒரு பங்கை ஒதுக்கினார்கள். இதுதான் இஸ்லாமில் அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் ஒதுக்கப்பட்ட முதல் கனீமா பங்காகும். இப்போரில்தான் முதன் முதலில் ஒரு எதிரி கொலை செய்யப்பட்டான். மேலும், இப்போரில்தான் முதன் முதலாக எதிரிகள் கைது செய்யப்பட்டனர்.
நபி (ஸல்) அவர்கள் முஸ்லிம்களின் இந்த நடவடிக்கையைக் கடுமையாக வெறுத்தார்கள். மேலும், ‘‘சங்கைமிக்க மாதத்தில் போர் செய்ய நான் உங்களுக்குக் கட்டளையிடவில்லையே!'' என்று கண்டித்து விட்டு கைதிகள் மற்றும் வியாபாரப் பொருட்கள் விஷயத்தில் மௌனம் காத்தார்கள்.
இந்நிகழ்ச்சியை முஸ்லிம்கள் மீது பழிசுமத்த நல்லதொரு சந்தர்ப்பமாக இணைவைப்போர் பயன்படுத்தினர். முஸ்லிம்கள் மீது பலவாறு பழி சுமத்தினாலும் அந்த அனைத்துப் பழிகளையும் பொய்யான கூற்றுகளையும் முற்றிலும் தகர்த்தெறியும்படி ஒரு வசனத்தை அல்லாஹ் குர்ஆனில் இறக்கினான். அந்த வசனத்தில் முஸ்லிம்கள் செய்ததை விட இணைவைப்போரின் செயல் மிகப்பெரிய மன்னிக்க முடியாத குற்றம் என்று தெளிவுபடுத்தினான்.
(நபியே! துல்கஅதா, துல்ஹஜ், முஹர்ரம், ரஜப் ஆகிய இச்)சிறப்புற்ற மாதங்களில் போர் செய்வதைப் பற்றி உங்களிடம் அ(ந்நிராகரிப்ப)வர்கள் கேட்கின்றனர். (அதற்கு) நீங்கள் கூறுங்கள்: ‘‘அவற்றில் போர் புரிவது பெரும் பாவம்(தான்.) ஆனால், (மனிதர்கள்) அல்லாஹ்வுடைய மார்க்கத்(தில் சேருவ)தை (நீங்கள்) தடுப்பதும், அல்லாஹ்வை (நீங்கள்) நிராகரிப்பதும், (ஹஜ்ஜுக்கு வருபவர்களை) மஸ்ஜிதுல் ஹராமுக்கு வரவிடாது தடுப்பதும், அதில் வசிப்போ(ல் நம்பிக்கை கொண்டோ)ரை அதிலிருந்து வெளியேற்றுவதும் அல்லாஹ்விடத்தில், (அதை விட) மிகப் பெரும் பாவங்களாக இருக்கின்றன. தவிர (நம்பிக்கையாளர்களுக்கு நீங்கள் செய்துவரும்) விஷமம் கொலையை விட மிகக் கொடியது. (அல்குர்ஆன் 2:217)
அதாவது, முஸ்லிம்கள் விஷயத்தில் இணைவைப்போர் ஏற்படுத்திய இந்தக் குழப்பங்களும் கூச்சல்களும் அடிப்படையற்றவை. ஏனெனில், முஸ்லிம்கள் விஷயத்தில் இவ்வாறு கூறுவதற்கு அந்த இணைவைப்போருக்குத் தகுதியே கிடையாது. இஸ்லாமை எதிர்ப்பதற்கும் முஸ்லிம்கள் மீது அநியாயமிழைப்பதற்கும் இந்த இணைவைப்போர் எவ்விதத்திலும் தயக்கம் காட்டவில்லை. முஸ்லிம்கள் சங்கைமிக்க மக்காவில் தங்கியிருந்த போது அவர்களது பொருட்கள் அபகரிக்கப் பட்டன. நபி (ஸல்) அவர்களைக் கொலை செய்ய வெறியுடன் அலைந்தனர். இன்னும் புனிதமிக்க எத்தனையோ கடமைகளையும் உரிமைகளையும் பாழாக்கிய இவர்களுக்கு புனிதத்தைப் பற்றி பேசுவதற்கு என்ன அருகதை இருக்கிறது? புனிதங்களையே மதிக்காத இவர்களுக்கு இப்பொழுது மட்டும் புனிதத்தைப் பற்றி பேசுவதற்கு தகுதி எங்கிருந்து வந்தது? எனவே, முஸ்லிம்கள் இந்தப் புனிதத்தைப் பாழாக்கியது எந்த வகையிலும் அசிங்கமோ குற்றமோ இல்லை. ஆகவே, இணைவைப்பவர்கள் பரப்பிய இந்த வதந்திகள் முற்றிலும் கேவலமான ஒன்றே!
இவ்வசனம் இறக்கப்பட்டதற்குப் பின்பு நபி (ஸல்) அவர்கள் இரண்டு கைதிகளையும் விடுவித்தார்கள். மேலும், கொலை செய்யப்பட்டோன் குடும்பத்தினருக்கு நஷ்டஈடும் வழங்கினர்கள். (ஜாதுல் மஆது)

மேற்கூறப்பட்ட (கஸ்வா, ஸய்யா) போர்கள் அனைத்தும் பத்ர் போருக்கு முன் நிகழ்ந்தவையாகும். இறுதியில் கூறப்பட்ட போரைத் தவிர வேறெதிலும் பொருட்கள் சூறையாடப்படவுமில்லை உயிர்கள் கொலை செய்யப்படவுமில்லை. ஆனால், குருஸ் இப்னு ஜாபிர் அல்ஃபஹ்யீன் தலைமையின் கீழ் இணைவைப்பவர்கள் முஸ்லிம்களின் பொருட்களை கொள்ளையடித்த பின்பே முஸ்லிம்கள் பதில் நடவடிக்கை எடுத்தனர்.
அப்துல்லாஹ் இப்னு ஜஹ்ஷ் (ரழி) அவர்கள் படையின் மூலம் நிகழ்ந்த சம்பவத்தைப் பார்த்த மக்கா முஷ்ரிக்குகள் பயந்து நடுங்கினர். மிகப்பெரிய ஆபத்து தங்களுக்கு முன் உருவாகி விட்டதை உணர்ந்தனர். முஸ்லிம்கள் மதீனாவில் அடைக்கலம் புகுந்துவிட்டால் எத்தகைய ஆபத்து நிகழும் என்று பயந்தனரோ அந்த ஆபத்தில் இப்போது சிக்கிக் கொண்டனர். மதீனாவாசிகள் மிகுந்த விழிப்புடனும் கண்காணிப்புடனும் இருக்கிறார்கள் தங்களின் வணிகப் பயணங்கள் ஒவ்வொன்றையும் முழுமையாகக் கண்காணிக்கின்றனர் முஸ்லிம்கள் 300 மைல்கள் கூட படையெடுத்து வந்து தங்களைக் கொலை செய்யவோ, சிறைபிடிக்கவோ, தங்களின் செல்வங்களை அள்ளிக்கொண்டு நிம்மதியாக திரும்பவோ முழு ஆற்றல் பெற்றுவிட்டனர் என்பதை இப்போது இந்த இணைவைப்பவர்கள் நன்கு விளங்கிக் கொண்டனர்.
மேலும், தங்களின் ஷாம் தேசத்தை நோக்கிய வியாபார வழித்தடம் மிகுந்த ஆபத்திற்குள்ளாகி இருப்பதையும் நன்கு உணர்ந்து கொண்டனர். இருந்தும் தங்களின் வழிகேட்டிலிருந்து விலகி ஜுஹைனா மற்றும் ழம்ரா கிளையினர் செய்ததைப் போன்று சமாதான வழியைக் கையாள் வதற்குப் பதிலாக மீண்டும் முன்பை விட அதிகமாக பகைமை கொள்ளலானார்கள். இதற்கு முன்னர் முஸ்லிம்களை அவர்களது நாட்டுக்குள் வைத்தே அழித்து விடுவோம் என்று எச்சரிக்கை செய்து கொண்டிருந்ததை இப்போது நிறைவேற்றியே ஆகவேண்டும் என்று உறுதி பூண்டனர். மடத்தனமான இந்த எண்ணம்தான் இவர்களை பத்ர் போருக்கு அழைத்து வந்தது.
அப்துல்லாஹ் இப்னு ஜஹ்ஷ் (ரழி) அவர்களின் இந்த சம்பவத்திற்குப் பின்பு ஹிஜ்ரி 2, ஷஅபான் மாதத்தில் அல்லாஹ் முஸ்லிம்களுக்குப் போர் புரிவதை கடமையாக்கினான். இவ்விஷயத்தில் பல தெளிவான வசனங்களை இறக்கினான்.
உங்களை எதிர்த்துப் போர் புரிய முற்பட்டோரை அல்லாஹ்வுடைய பாதையில் நீங்களும் எதிர்த்துப் போர் புரியுங்கள். ஆனால், நீங்கள் (எல்லை) அத்துமீற வேண்டாம். ஏனென்றால், நிச்சயமாக அல்லாஹ் அத்துமீறுபவர்களை நேசிப்பதில்லை.
ஆகவே (உங்களை எதிர்த்துப் போர் புரிய முற்பட்ட) அவர்களை கண்ட இடமெல்லாம் வெட்டுங்கள். உங்களை (உங்கள் ஊரிலிருந்து) அவர்கள் வெளியேற்றியவாறே நீங்களும் அவர்களை வெளியேற்றி விடுங்கள். (அவர்கள் செய்யும்) கலகம் கொலையை விட மிகக் கொடியது. ஆனால் (அவர்களில்) எவரேனும் அபயம் தேடி மஸ்ஜிதுல் ஹராமில் இருந்தால், அங்கு அவர்கள் உங்களை எதிர்த்து போர் புரிய முற்படும் வரையில் நீங்கள் அவர்களை வெட்டாதீர்கள். (அவ்விடத்திலும்) அவர்கள் உங்களை எதிர்த்துப் போர் புரிந்தால் நீங்களும் அவர்களை வெட்டுங்கள். அந்த நிராகரிப்பவர்களுக்கு (உய) கூலி இதுவே!
(இதன்) பின்னும் அவர்கள் (உங்களை எதிர்த்துப் போர் புரியாது) விலகிக் கொண்டால் (நீங்கள் அவர்களை வெட்டாதீர்கள்.) நிச்சயமாக அல்லாஹ் மிக மன்னிப்பவனாகவும், நிகரற்ற அன்புடையவனாகவும் இருக்கின்றான்.
அன்றி, (இஸ்லாமிற்கு எதிராகச் செய்யப்படும்) கலகம் (முற்றிலும்) நீங்கி, அல்லாஹ்வுடைய மார்க்கம் உறுதியாக நிலைபெறும் வரையில் அவர்களை எதிர்த்துப் போர் புரியுங்கள். ஆனால், அவர்கள் (கலகம் செய்யாது) விலகிக் கொண்டால் (அவர்களுக்கு மன்னிப்பு உண்டு), அநியாயம் செய்பவர்களைத் தவிர (மற்றவர்கள் மீது) அறவே அத்து மீறக்கூடாது. (அல்குர்ஆன் 2:190-193)
மேற்கூறப்பட்ட வசனங்களைத் தொடர்ந்து மேலும் பல வசனங்களை இறக்கினான். அவ்வசனங்களில் போர் முறைகளைக் கற்றுக் கொடுத்து, போருக்கு ஆர்வமூட்டி அதன் சட்டங்களை விவரித்தான்.
(நம்பிக்கையாளர்களே! உங்களை எதிர்த்துப் போர் புரியும்) நிராகரிப்பவர்களை நீங்கள் சந்திப்பீர்களாயின், (தயக்கமின்றி) அவர்களுடைய கழுத்துகளை வெட்டுங்கள். அவர்களை முறியடித்துவிட்டால், (மிஞ்சியவர்களைச் சிறை) பிடித்துக் கட்டுங்கள் அதன் பின்னர், அவர்களுக்குப் பதிலாக யாதொரு ஈடு பெற்றேனும் அல்லது (ஈடின்றி அவர்கள் மீது) கருணையாகவேனும் விட்டுவிடுங்கள்.
இவ்வாறு, (எதிரிகள்) தம் ஆயுதத்தைக் கீழே வைக்கும் வரையில் (போர் செய்யுங்கள்.) இது அல்லாஹ்(வின் கட்டளை. அவன்) நாடியிருந்தால், (அவர்கள் உங்களுடன் போர் புரிய வருவதற்கு முன்னதாகவே) அவர்களைப் பழி வாங்கியிருப்பான். ஆயினும், (போரின் மூலம்) உங்களில் சிலரை, சிலரைக் கொண்டு சோதிக்கின்றான்.
ஆகவே, அல்லாஹ்வுடைய பாதையில் எவர்கள் வெட்டப்பட்டு (இறந்து) விடுகின்றார்களோ, அவர்களுடைய நன்மைகளை அவன் வீணாக்கி விட மாட்டான். (தக்க கூலியையே கொடுப்பான்.) அவர்களை நேரான பாதையில் செலுத்தி அவர்களுடைய நிலைமையையும் சீர்படுத்தி விடுவான்.
அன்றி, அவன் அவர்களுக்கு அறிவித்திருந்த சுவனபதியிலும் அவர்களைப் புகுத்துவான்.
நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வுக்கு உதவி புரிந்தால், அவனும் உங்களுக்கு உதவி புரிந்து உங்களுடைய பாதங்களை உறுதியாக்கிவிடுவான். (அல்குர்ஆன் 47:4-7)
பின்பு, போர் கடமையாக்கப்பட்டதை கேள்விப்பட்டு உள்ளம் நடுங்கியவர்களை மிக வன்மையாக பழித்து குர்ஆன் வசனங்களை இறக்கினான்:
நம்பிக்கை கொண்டவர்களிலும் சிலர், (போரைப் பற்றி) யாதொரு (தனி அத்தியாயம் இறக்கப்பட வேண்டாமா? என்று கூறுகின்றனர். அவ்வாறே (தெளிவான) ஒரு திட்டமான அத்தியாயம் இறக்கப்பட்டு, போர் செய்யுமாறு அதில் கூறப்பட்டிருந்தால், எவர்களுடைய உள்ளங்களில் நோய் இருக்கின்றதோ அவர்கள், மரண அவஸ்தையில் சிக்கி மயங்கிக் கிடப்பவர் பார்ப்பதைப் போல் (நபியே!) உங்களை அவர்கள் நோக்குவார்கள். ஆகவே, அவர்களுக்குக் கேடுதான். (அல்குர்ஆன் 47:20)
போர் கடமையாக்கப்பட்டதும், அதற்கு ஆர்வமூட்டப்பட்டதும், அதற்குரிய தயாரிப்புகளைச் செய்ய வேண்டுமென்று கட்டளையிடப்பட்டதும் அக்காலச் சூழ்நிலையின் தேவையாகவும் கட்டாயமாகவும் இருந்தது. சூழ்நிலைகளை நன்கு அலசிப்பார்க்கும் ஆற்றலுள்ள தலைவர் யாராக இருப்பினும் அக்கால அவசியத்தைக் கருதி திடீர் நிகழ்வுகளை எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டுமென தனது படைகளுக்கு நிச்சயம் கட்டளையிட்டிருப்பார். விஷயம் இவ்வாறிருக்க அனைத்தையும் அறிந்தவனும் மிகைத்தவனுமான அல்லாஹ் இக்கட்டளைகளை முஸ்லிம்களுக்கு பிறப்பிக்காமல் இருப்பானா? அக்கால சூழ்நிலையோ முற்றிலும் சத்தியத்திற்கும் அசத்தியத்திற்கும் மத்தியில் கடும் மோதல்களை ஏற்படுத்திக் கொண்டிருந்தது. அப்துல்லாஹ் இப்னு ஜஹ்ஷுடைய படையின் நிகழ்ச்சி இணைவைப்போரின் ரோஷத்திற்கும் இன பெருமைக்கும் மிகப் பெரிய அடியாக இருந்தது. இந்நிகழ்ச்சி இவர்களுக்கு மிகுந்த நோவினை அளித்தது மட்டுமல்லாமல் நெருப்புக் கங்குகளில் புரள்பவர்களாக இவர்களை ஆக்கி விட்டது.
போர் சம்பந்தமான இறைவசனங்களின் கருத்துக்களை ஆழ்ந்து சிந்திக்கும் போது பெரிய போர் சமீபத்தில் நடக்கப்போகிறது, அதன் முடிவில் அல்லாஹ்வின் உதவியும் வெற்றியும் முஸ்லிம்களுக்கே கிடைக்கும் என்பதை நன்கு தெரிந்து கொள்ளலாம். பாருங்கள்! எவ்வாறு முஸ்லிம்களுக்கு அல்லாஹ் கட்டளையிடுகிறான். ‘‘மக்கா இணைவைப்பாளர்கள் உங்களை உங்கள் ஊரிலிருந்து வெளியேற்றியது போன்று நீங்களும் அவர்களை வெளியேற்றி விடுங்கள்'' என்று அல்லாஹ் முஸ்லிம்களுக்குக் கட்டளை பிறப்பித்தான். (பார்க்க மேற்கூறப்பட்டுள்ள அல்குர்ஆன் 2:191).
மேலும், வெற்றி பெற்ற ராணுவத்தினர் கைதிகளிடம் எந்த முறையில் நடந்துகொள்ள வேண்டுமென்ற சட்டங்களை மேற்கூறப்பட்ட வசனங்களில் அல்லாஹ் எவ்வாறு விவரித்திருக்கின்றான் என்பதைப் பாருங்கள். ஆக, இவை அனைத்தும் முஸ்லிம்களுக்குத்தான் இறுதியில் வெற்றி கிடைக்கும் என்பதைத் தெளிவாகச் சுட்டிக் காட்டுகின்றன. இருப்பினும் முஸ்லிம்களின் ஒவ்வொரு வீரரும் அல்லாஹ்வின் பாதையில் தனது வீரத்தை வெளிப்படுத்திக் காட்டவேண்டும் என்பதற்காக இந்த நற்செய்திகளை அல்லாஹ் (உடனே வெளிப்படுத்தாமல்) சற்று மறைத்தே வைத்தான்.
இந்த நாட்களில்தான் ஹிஜ்ரி 2, ஷஅபான் மாதம் (கி.பி. 624 பிப்ரவயில்) அல்லாஹ் ‘பைதுல் முகத்தஸின்' திசையிலிருந்து கஅபாவின் பக்கம் கிப்லாவை மாற்றிக் கொள்ளுங்கள் என கட்டளையிட்டான். இதன் விளைவு, பிளவுகளை உண்டாக்க வேண்டுமென்பதற்காக முஸ்லிம்களின் அணியிற்குள் புகுந்து கொண்ட நயவஞ்சகர்களும் நம்பிக்கையில் பலவீன மானவர்களும் முஸ்லிம்களை விட்டு விலகி, தங்களது பழைய கொள்கைக்கே திரும்பிச் சென்றனர். மோசடிக்காரர்கள் மற்றும் துரோகம் செய்பவர்களை விட்டும் முஸ்லிம்களின் அணி தூய்மை அடைந்தது.
கிப்லா மாற்றப்பட்டதால் ஏற்பட்ட பெரிய பலன் இதுவே ஆகும். மேலும், கிப்லா மாற்றப்பட்டதில் ஒரு நுட்பமான அறிவிப்பும் இருக்கலாம். அதாவது, முஸ்லிம்கள் தங்களது வாழ்க்கையில் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்க இருக்கிறார்கள். இந்தத் தொடக்கம், முஸ்லிம்கள் தங்களின் கிப்லாவைக் கைப்பற்றுவது கொண்டு முடிவுபெறும் சத்தியத்திலிருக்கும் ஒரு சமுதாயத்தின் கிப்லா எதிரிகளின் கட்டுப்பாட்டில் இருந்தாலும், அந்த சமுதாயம் அந்த கிப்லாவை எதிரிகளின் கட்டுப்பாட்டிலிருந்து ஒரு நாள் விடுவித்தே தீரும் என்பதை உணர்த்தும் ஒரு நுட்பமான சுட்டிக்காட்டலும் கிப்லா மாற்றப்பட்டதில் இருக்கலாம்.
இதுபோன்ற கட்டளைகளினாலும், சங்கைமிகு குர்ஆன் வசனங்களின் சுட்டிக் காட்டுதலினாலும். அல்லாஹ்வின் பாதையில் போர் புரிய வேண்டும் அல்லாஹ்வின் மார்க்கத்தை உயர்த்துவதற்காக தீர்வான ஒரு போரை சந்திக்க வேண்டும் என்ற ஆசையும் உற்சாகமும் அக்கால முஸ்லிம்களிடம் மேலோங்கியிருந்தது.

பெரிய பத்ர் போர் (மாபெரும் இஸ்லாமியப் போர்களில் முதலாவது போர்)

போருக்குரிய காரணம்

'உஷைரா' என்ற போரைப் பற்றி நாம் முன்பு குறிப்பிட்டபோது மக்காவிலிருந்து ஷாமிற்கு சென்று கொண்டிருந்த வியாபாரக் கூட்டம் ஒன்று நபி (ஸல்) அவர்களிடமிருந்து தப்பித்து விட்டது என்று கூறியிருந்தோம். இந்த வியாபாரக் கூட்டம் ஷாமிலிருந்து மக்காவிற்கு திரும்பும் நாள் நெருங்கிய போது இதன் செய்தியை அறிந்து வருவதற்காக தல்ஹா இப்னு உபைதுல்லாஹ், ஸஈது இப்னு ஜைது (ரழி) ஆகிய இருவரை நபி (ஸல்) மதீனாவின் வடக்குத் திசையின் பக்கம் அனுப்பினார்கள். இவ்விருவரும் ‘ஹவ்ரா' என்ற இடத்தை அடைந்து அங்கு தங்கியிருந்தனர். அபூ ஸுஃப்யான் வியாபாரக் கூட்டத்துடன் அவ்விடத்தை அடைந்த போது அவ்விருவரும் மதீனாவிற்குத் திரும்பி, செய்தியை நபி (ஸல்) அவர்களிடம் கூறினார்கள்.
இந்த வியாபாரக் கூட்டம் மிகப்பெரிய அளவில் குறைஷித் தலைவர்களுக்குரிய செல்வங்களுடன் சென்று கொண்டிருந்தது. இவர்களிடம் 50,000 தங்க நாணயங்களுக்குக் குறையாத அளவு வியாபாரப் பொருட்கள் 1,000 ஒட்டகங்களில் வந்து கொண்டிருந்தன. ஆனால், இவ்வளவு பெரிய வியாபாரக் கூட்டத்தைப் பாதுகாப்பதற்கு 40 வீரர்கள் மட்டுமே இருந்தனர்.
மக்காவாசிகளுக்கு பொருளாதார ரீதியாக மிகப்பெரிய சேதத்தை உண்டு பண்ணுவதற்கு இது முஸ்லிம்களுக்கு கிடைத்த பெரும் வாய்ப்பாகும். இந்த சேதத்தை ஏற்படுத்திவிட்டால் காலங்காலமாக காஃபிர்களின் உள்ளங்கள் துடிதுடித்துக் கொண்டேயிருக்கும். இப்போது நபி (ஸல்) முஸ்லிம்களுக்கு அறிவிப்புச் செய்தார்கள். ‘‘இதோ... குறைஷிகளின் வியாபாரக் கூட்டம் அவர்களது பொருட்களுடன் வருகிறது. அக்கூட்டத்தை நோக்கி நீங்கள் புறப்படுங்கள். அல்லாஹ் அந்தப் பொருட்களை உங்களுக்கு அளிக்கக் கூடும்'' என்று நபி (ஸல்) கூறினார்கள்.
இப்போரில் கலந்துகொள்ள வேண்டுமென நபி (ஸல்) எவரையும் வலியுறுத்தவில்லை. காரணம் வியாபாரக் கூட்டத்திற்குப் பதிலாக மக்காவின் படையினருடன் பத்ர் மைதானத்தில் பெரிய அளவில் மூர்க்கமான சண்டையும் மோதலும் நிகழுமென்று அவர்கள் எதிர்பார்க்கவில்லை. அதாவது, செல்வங்களுக்குப் பதில் சண்டை நிகழுமென்று அப்பொழுது நபி (ஸல்) அவர்களுக்குத் தெரியாததால் இப்பயணத்தில் கலந்து கொள்வது அவரவன் விருப்பம் என்று நபி (ஸல்) விட்டு விட்டார்கள். இதற்கு முன்பு தாங்கள் கண்ட சிறிய பெரிய ராணுவப் பயணங்களில் நிகழ்ந்ததைப் போன்றுதான் இந்தப் பயணத்திலும் நிகழும் என்றெண்ணி அதிகமான நபித்தோழர்கள் இப்பயணத்தில் கலந்துகொள்ளாமல் மதீனாவிலேயே தங்கிவிட்டனர். அதை நபி (ஸல்) அவர்களும் குற்றமாகக் கருதவில்லை.

இஸ்லாமியப் படையும் அதற்கு தளபதிகள் நியமிக்கப்படுவதும்

நபி (ஸல்) மதீனாவிலிருந்து வெளியேற ஆயத்தமானார்கள். அவர்களுடன் 310ற்கும் மேற்பட்டவர்கள் (313 அல்லது 314 அல்லது 317) வீரர்கள் வெளியேறினார்கள். அதாவது 82 அல்லது 83 அல்லது 84 முஹாஜிர்களும், அவ்ஸ் கிளையைச் சேர்ந்த 61 அன்ஸாகளும், கஸ்ரஜ் கிளையைச் சேர்ந்த 170 அன்ஸாகளும் இருந்தனர். மதீனாவிலிருந்து வெளியேறும் போது எவ்வித ஆரவாரமும் இல்லாமல் குறைவான தயாரிப்புடன்தான் முஸ்லிம்கள் சென்றார்கள். முஸ்லிம்களிடம் ஒன்று அல்லது இரண்டு குதிரைகளே இருந்தன. ஜுபைர் இப்னு அவ்வாம் (ரழி) அவர்களிடம் ஒரு குதிரையும் மிக்தாது இப்னு அஸ்வத் (ரழி) அவர்களிடம் ஒரு குதிரையும் இருந்தது. மேலும், 70 ஒட்டகங்கள் மட்டும் இருந்தன. அதில் ஓர் ஒட்டகத்திற்கு இருவர் அல்லது மூவராக மாறிமாறி பயணம் செய்தனர். நபி (ஸல்) மற்றும் அலீ, மர்ஸத் இப்னு அபூ மர்ஸத் கனவி (ரழி) ஆகிய மூவரும் ஒரே ஒட்டகத்தில் மாறிமாறி பயணம் செய்தனர்.
இம்முறை மதீனாவிற்கும் அங்கு தொழுகை நடத்துவதற்கும் பிரதிநிதியாக அப்துல்லாஹ் இப்னு உம்மு மக்தூம் (ரழி) அவர்களை நபி (ஸல்) நியமித்தார்கள். நபி (ஸல்) மதீனாவிலிருந்து வெளியேறி ‘ரவ்ஹா' என்ற இடத்தை அடைந்த போது அபூலுபாபா இப்னு அப்துல் முன்திர் (ரழி) அவர்களைப் பிரதிநிதியாக நியமித்து மதீனா அனுப்பி வைத்தார்கள்.
இப்போருக்கான பொதுவான தலைமைத்துவத்தின் வெள்ளைக் கொடியை ‘முஸ்அப் இப்னு உமைர் அல்குறைஷி அல்அப்த' (ரழி) அவர்களிடம் வழங்கினார்கள்.
படையை இரண்டு பிரிவாக ஆக்கினார்கள்.
1) முஹாஜிர்களின் படை: இதற்குரிய கொடியை அலீ இப்னு அபூ தாலிப் (ரழி) அவர்களிடம் கொடுத்தார்கள். இக்கொடிக்கு ‘உகாப்' என்று சொல்லப்பட்டது.
2) அன்ஸாரிகளின் படை: இதற்குரிய கொடியை ஸஅது இப்னு முஆத் (ரழி) அவர்களிடம் கொடுத்தார்கள். இந்த இரு படைகளின் கொடி கருப்பு நிறமுடையதாக இருந்தது.
படையின் வலப் பக்கப் பிரிவிற்கு ஸுபைர் இப்னு அவ்வாம் (ரழி) அவர்களைத் தலைவராக்கினார்கள். இடப் பக்கப் பிரிவிற்கு மிக்தாது இப்னு அம்ர் (ரழி) அவர்களைத் தலைவராக்கினார்கள். நாம் முன்பு கூறியது போன்று இவ்விருவர்தான் குதிரை வீரர்களாக இருந்தார்கள். போரின் கடைசி பிரிவிற்கு கைஸ் இப்னு அபூ ஸஃஸஆ (ரழி) அவர்களைத் தலைவராக்கினார்கள். மற்றபடி பொது தளபதியாகவும், படையை வழி நடத்துபவராவும் நபி (ஸல்) அவர்களே விளங்கினார்கள்.

இஸ்லாமியப் படை பத்ரை நோக்கி

நபி (ஸல்) அவர்கள் சரியான தயாரிப்பு இல்லாத இப்படையுடன் மதீனாவின் வலப் பக்கத்திலிருந்து வெளியேறி மக்காவை நோக்கிச் செல்லும் பிரதான பாதையில் சென்றார்கள். ‘ரவ்ஹா' என்ற கிணற்றை அடைந்து, அங்கு தங்கிவிட்டு மக்காவின் பிரதான பாதையை தனது இடப்பக்கத்தில் விட்டுவிட்டு வலப்பக்கமாக ‘நாஸியா' என்ற இடம் வழியாக வெளியேறி பத்ரை நோக்கி சென்றார்கள். ‘நாஸியா' என்ற இடத்தின் ஓரமாக பயணித்து அங்குள்ள பள்ளத்தாக்கைக் கடந்தார்கள். அந்தப் பள்ளத்தாக்கிற்கு பெயர் ‘ருஹ்கான்' எனப்படும். அது நாஸியா மற்றும் ‘ஸஃப்ரா' என்ற இடத்திற்கு மத்தியிலுள்ள பள்ளத்தாக்காகும்.
பின்பு ஸஃப்ராவின் குறுகலான வழியாகச் சென்று ஸஃப்ராவை அடைந்தார்கள். ஸஃப்ரா என்ற இடத்தில் தங்கி, பஸ்பஸ் இப்னு அம்ர் அல் ஜுஹனி, அதி இப்னு அபூஸக்பா அல் ஜுஹ்னி (ரழி) ஆகிய இருவரையும் பத்ர் பள்ளத்தாக்கிற்கு அனுப்பி குறைஷிகளுடைய வியாபாரக் கூட்டத்தின் செய்தியைத் துப்பறிந்து வருமாறு அனுப்பினார்கள்.

மக்காவில் எச்சரிப்பவர்

வியாபாரக் கூட்டத்திற்குப் பொறுப்பாக இருந்த அபூஸுஃப்யான் மிகுந்த எச்சரிக்கையுடனும் பாதுகாப்புடனும் இருந்தார். மக்காவின் பாதை இப்போது ஆபத்துகள் நிறைந்தது என்பதையும் அறிந்திருந்தார். எனவே, செய்திகளைச் சேகத்தவராகத் தனக்கு எதிர்வரும் வாகனிகளிடம் நிலைமைகளை விசாரித்துக் கொண்டே பயணித்தார். அப்போது முஹம்மது (ஸல்) தங்களது தோழர்களை அழைத்துக் கொண்டு இந்த வியாபாரக் கூட்டத்தை கைப்பற்ற புறப்பட்டு விட்டார்கள் என்ற செய்தி அபூஸுஃப்யானுக்குக் கிடைத்தது. அபூஸுஃப்யான் உடனடியாக ழம்ழம் இப்னு அம்ர் அல்கிஃபா என்பவருக்கு கூலி கொடுத்து, மக்காவிற்குச் சென்று தங்களின் வியாபாரக் கூட்டத்தை காப்பாற்றிக் கொள்ள விரைந்து வருமாறு குறைஷிகளுக்கு அறிவிப்புச் செய்ய அனுப்பி வைத்தார். ழம்ழம் மக்காவிற்கு விரைந்து ‘பத்னுல் வாதி' என்ற இடத்தில் ஒட்டகத்தின் மீது நின்றவராக கூக்குரலிட்டார். மேலும், ஒட்டகத்தின் மூக்கை அறுத்து அதன் மேலுள்ள கஜாவா பெட்டியையும் மாற்றி அமைத்து தனது சட்டையையும் கிழித்துக் கொண்டார். பின்பு ‘‘குறைஷிகளே! வியாபாரக் கூட்டம்! வியாபாரக் கூட்டம்! அபூ ஸுஃப்யானுடன் வந்து கொண்டிருக்கும் செல்வங்களை முஹம்மது தன் தோழர்களுடன் வழிமறிக்கக் கிளம்பிவிட்டார். அது உங்களுக்குக் கிடைக்குமென்று நான் கருதவில்லை. உதவி! உதவி! காப்பாற்றுங்கள்! காப்பாற்றுங்கள்!'' என்று உரக்கக் கத்தினார்.

மக்காவாசிகள் போருக்குத் தயார்

இதைக் கேட்ட மக்காவாசிகள் அங்குமிங்கும் ஓடலானார்கள். ‘‘என்ன! முஹம்மதும் அவரது தோழர்களும் எங்களது வியாபாரக் கூட்டம், இப்னுல் ஹழ்ரமியின் வியாபாரக் கூட்டத்தைப் போன்று ஆகிவிடுமென்று எண்ணுகிறார்களா? ஒருக்காலும் அவ்வாறு ஆகாது. அல்லாஹ்வின் மீது ஆணையாக! அவர் எதிர்பார்க்காதது நடக்கப் போகிறது. அதை அவர் நன்கு அறிந்து கொள்வார்'' என்று பேசிக் கொண்டனர். மக்காவில் உள்ள அனைவரும் வெளியேறத் தயாரானார்கள். அப்படி தன்னால் முடியவில்லையானாலும் தனக்குப் பதிலாக மற்றொருவரை அனுப்பி வைத்தார்கள். மக்காவிலுள்ள பிரசித்திபெற்ற பிரமுகர்கள் அனைவரும் இப்போரில் கலந்து கொண்டனர். ஆனால், அதில் கலந்து கொள்ள முடியாத அபூலஹப் மட்டும் தனக்குக் கடன் தரவேண்டிய ஒருவரை தனக்குப் பகரமாக அனுப்பினான். மேலும், குறைஷிகள் தங்களைச் சுற்றியுள்ள அரபியர்கள் அனைவரையும் ஒன்று சேர்த்தனர். ‘அதீ' கிளையினரைத் தவிர அனைத்துக் கூட்டத்தினரும் அதில் கலந்து கொண்டனர். ‘அதீ' கிளையினலிருந்து ஒருவர்கூட கலந்து கொள்ளவில்லை.

மக்கா நகர படையின் அளவு

மக்கா படை புறப்படும் போது அதில் 1300 வீரர்கள் இருந்தனர். இவர்களிடம் 100 குதிரைகளும் 600 கவச ஆடைகளும் இன்னும் குறிப்பிட்டுச் சொல்ல முடியாத அளவிற்கு அதிகமான ஒட்டகங்களும் இருந்தன. இந்தப் படையின் பொதுத் தலைவனாக அபூ ஜஹ்ல் இப்னு ஹிஷாம் இருந்தான். இப்படைக்கு செலவு செய்வதற்குரிய பொறுப்பைக் குறைஷிகளின் ஒன்பது முக்கியஸ்தர்கள் ஏற்றுக் கொண்டனர். ஒரு நாள் ஒன்பது ஒட்டகம் மற்றொரு நாள் பத்து ஒட்டகம் என அறுத்து உணவளித்தனர்.

பக்ர் கிளையினரை அஞ்சுதல்

மக்காவின் படை புறப்படுவதற்கு ஒன்றுகூடிய போது பக்ர் கிளையினரைப் பற்றிய நினைவு அவர்களுக்கு வந்தது. குறைஷிகளுக்கும் இவர்களுக்குமிடையில் நீண்ட காலமாகப் பகைமை இருந்தது. இவர்கள் பின்புறமாகத் தங்களை தாக்கிவிட்டால் இரு நெருப்புக்கிடையில் சிக்கிக் கொள்வோமே என்று பயந்து பின்வாங்கினர். ஆனால், அந்நேரத்தில் பக்ர் கிளையினரின் முக்கிய பிரிவான கினானாவின் தலைவர் சுராகா இப்னு மாலிக் இப்னு ஜுஃஷுமின் உருவத்தில் ஷைத்தான் தோற்றமளித்து ‘‘கினானா கிளையினர் உங்களுக்குப் பின்புறமாக தாக்குவதிலிருந்து நான் பாதுகாப்பளிக்கிறேன். நீங்கள் துணிந்து செல்லலாம்'' என்று கூறினான்.

மக்காவின் படை புறப்படுகிறது

இப்படை தங்களது இல்லங்களிலிருந்து புறப்பட்ட நிலையை அல்லாஹ் இவ்வாறு விவரிக்கின்றான்:
‘‘பெருமைக்காகவும் மனிதர்களுக்குக் காண்பிப்பதற்காகவும் தங்கள் வீடுகளிலிருந்து (முஸ்லிம்களை எதிர்க்க ‘பத்ர்' போருக்குப்) புறப்பட்டனர். மேலும் மக்களை அல்லாஹ்வுடைய பாதையில் செல்வதைத் தடை செய்கின்றனர்...'' (அல்குர்ஆன் 8:47)
அல்லாஹ்வுடனும் அவனுடைய தூதருடனும் போர் செய்வதற்காக, தங்களது முழு தயாரிப்புடனும் ஆயுதங்களுடனும் புறப்பட்டனர். மேலும், முஸ்லிம்கள் தங்களது வியாபாரக் கூட்டத்தைத் தாக்குவதற்குத் துணிவு கொண்டதைப் பார்த்து மிகுந்த கோபத்துடனும் வெறியுடனும் புறப்பட்டனர்.
மிக விரைவாக பத்ரை நோக்கி மக்காவின் வடப்புற வழியாக பயணித்தனர். ‘உஸ்வான்' பள்ளத்தாக்கு, பிறகு குதைத், பிறகு ஜுஹ்பாவை அடைந்தனர். அது சமயம் அபூ ஸுஃப்யானிடமிருந்து புதிய தகவல் ஒன்று வந்தது. அதாவது, ‘‘நீங்கள் உங்களது வியாபாரக் கூட்டத்தையும், உங்களது செல்வங்களையும், ஆட்களையும் பாதுகாப்பதற்காகத்தான் மக்காவிலிருந்து புறப்பட்டீர்கள். அல்லாஹ் அவை அனைத்தையும் பாதுகாத்து விட்டான். ஆகவே, நீங்கள் திரும்பி விடுங்கள்'' என்று அபூஸுஃப்யான் எழுதியிருந்தார்.

வியாபாரக் கூட்டம் தப்பித்தது

அபூ ஸுஃப்யானின் நிலைமைப் பற்றி சிறிது பார்ப்போம்:
அபூ ஸுஃப்யான் மக்காவை நோக்கிய பிரதான பாதையில் சென்று கொண்டிருந்தாலும் மிகவும் சுதாரிப்புடன் நிலைமைகளை நன்கு அலசி ஆராய்ந்து கொண்டு தன்னுடைய வியாபாரக் கூட்டத்தை வழிநடத்திச் சென்றார். பத்ருக்கு அருகில் மஜ்தீ இப்னு அம்ரை சந்தித்தார். அவரிடம் ‘‘மதீனாவின் படைகளை நீங்கள் பார்த்தீர்களா?'' என்று விசாரித்தார். அதற்கவர் ‘‘நான் இங்கு புதிதாக யாரையும் பார்க்கவில்லை. எனினும், இரு வாகனிகள் இந்த நீர் தடாகத்திற்கு அருகில் தங்களது ஒட்டகங்களைப் படுக்க வைத்தனர். பின்பு, தங்களது தோல் பையில் தண்ணீரை நிரப்பிக் கொண்டனர். சிறிது நேரம் கழித்து அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனர்'' என்று கூறினார்.
இதைக் கேட்டவுடன், அபூ ஸுஃப்யான் அவர்கள் ஒட்டகங்களைப் படுக்க வைத்திருந்த இடத்திற்கு விரைந்தார். அந்த ஒட்டகங்களின் சாணங்களைக் கிளறி அதில் பேரீத்தங்கொட்டைகள் இருப்பதைப் பார்த்தவுடன் அல்லாஹ்வின் மீது ஆணையாக! இது யஸ்ப் (மதீனா) வாசிகளின் ஒட்டக உணவாகும் என்று கூறி தனது வியாபாரக் கூட்டத்திடம் விரைந்து வந்து அதன் பயண திசையை மேற்கே, கடற்கரை பகுதியை நோக்கி மாற்றினார். பத்ர் வழியாக மக்கா நோக்கி செல்லும் பிரதான பாதையை இடது பக்கத்தில் விட்டுவிட்டார். தனது இந்த தந்திரத்தின் மூலம் மதீனாவின் படையிடம் சிக்காமல் தப்பித்துக் கொண்டார். இதற்குப் பின்பே நாம் முன்பு கூறிய கடிதத்தை மக்காவின் படையினருக்கு எழுதியனுப்பினார்.

திரும்பிட நினைத்த மக்கா படையில் பிளவு

அபூஸுஃப்யான் எழுதிய கடிதம் குறைஷிகளுக்கு கிடைத்த போது அவர்கள் அனைவரும் திரும்பிவிடலாம் என்றே எண்ணினர். ஆனால், குறைஷிகளின் அட்டூழியக்காரன் அபூஜஹ்ல் கர்வத்துடன் ‘‘அல்லாஹ்வின் மீது ஆணையாக! நாங்கள் திரும்பமாட்டோம் நாங்கள் பத்ருக்குச் செல்வோம் அங்கு மூன்று நாட்கள் தங்குவோம் ஒட்டகங்களை அறுத்து சமைத்து சாப்பிடுவோம் மது அருந்துவோம் அடிமைப் பெண்கள் இசைப்பாடுவர் எங்களைப் பற்றியும் எங்களது பயணத்தைப் பற்றியும், எங்கள் கூட்டத்தைப் பற்றியும் அரபிகள் கேள்விப்படுவார்கள். அதனால் எங்களை எப்பொழுதும் பயந்தே வாழ்வார்கள்'' என்று கூறினான்.
அபூஜஹ்லுக்கு எதிராக அக்னஸ் இப்னு ஷரீக் திரும்பியே ஆக வேண்டுமென்று ஆலோசனைக் கூறினார். ஆனால், அவரது பேச்சைப் பலர் செவிமடுக்கவில்லை. ஆனால், இவருக்கு நண்பர்களாக இருந்த ஜுஹ்ரா கிளையினர் மட்டும் இவரது பேச்சுக்குக் கட்டுப்பட்டனர். இந்தப் போரில் ஜுஹ்ராவினருக்கு அக்னஸ்தான் தலைவராக இருந்தார். எனவே, ஜுஹ்ரா கிளையினரில் எவரும் போரில் கலந்து கொள்ளாமல் அக்னஸுடன் திரும்பி விட்டனர். இவர்கள் ஏறக்குறைய 300 நபர்கள் இருந்தனர். பத்ர் போர் நடந்து முடிந்தபின் குறைஷிகளுக்கு ஏற்பட்ட தோல்வியையும் நஷ்டத்தையும் பார்த்த ஜுஹ்ரா கிளையினர் அக்னஸின் ஆலோசனையை பெரிதும் மெச்சினர். அதற்குப் பின் அக்னஸ் ஜுஹ்ராவனரிடம் மிகுந்த மதிப்பிற்குரியவராகவும் கண்ணியத்திற்குரியவராகவும் என்றென்றும் இருந்தார்.
ஹாஷிம் கிளையினரும் திரும்பிட நாடவே நாங்கள் திரும்பும் வரை நீங்கள் திரும்பக் கூடாதென அபூஜஹ்ல் அவர்களைப் பலவந்தமாக அழைத்துச் சென்றான்.
இவ்வாறு ஜுஹ்ரா கிளையினர் 300 பேர் போரிடாமல் திரும்பிவிடவே, மீதமுள்ள 1000 பேர் கொண்ட படை பத்ரை நோக்கிக் கிளம்பியது. இவர்கள் தொடர்ந்து சென்று பத்ர் பள்ளத்தாக்கில் ‘அல் உத்வதுல் குஸ்வா' என்ற மேட்டுப் பகுதிக்குப் பின்னால் தங்கினார்கள்.

இக்கட்டான நிலையில் இஸ்லாமிய ராணுவம்

மதீனா படையின் ஒற்றர்கள், நபி (ஸல்) ‘தஃபிரான்' பள்ளத்தாக்கில் இருக்கும் போது அபூஸுஃப்யானின் வியாபாரக் கூட்டம் மற்றும் மக்கா படை ஆகியவற்றின் நிலைமைகளைப் பற்றிய செய்திகளைக் கொண்டு வந்தனர். ஒற்றர்கள் கூறிய செய்திகளை நன்கு ஆராய்ந்த பின் கண்டிப்பாக அபாயகரமான போரைச் சந்திக்காமல் இருக்க வாய்ப்பில்லை. மேலும், முழுமையான வீரத்துடனும் துணிவுடனும் நிராகரிப்பாளர்களை எதிர்த்தே ஆகவேண்டும் என்ற முடிவுக்கு நபி (ஸல்) வந்தார்கள். மக்கா படைகளை எதிர்க்காமல் விட்டுவிட்டால் அந்தப் பகுதியில் அவர்கள் தங்களின் ராணுவ மற்றும் அரசியல் செல்வாக்கை நிலைநிறுத்தி விடுவார்கள். இதனால் முஸ்லிம்களுக்கு அந்தப் பகுதி மக்களிடம் கேவலமும் அவமானமும் ஏற்படலாம். இஸ்லாமிய அழைப்புப் பணி தனது வலிமையை இழந்து விடலாம். இஸ்லாமின் மீது வெறுப்பும் பகைமையும் கொண்ட ஒவ்வொருவரும் முஸ்லிம்களுக்குத் தீங்கு செய்ய துணிவு கொள்ளலாம். இவற்றை கருத்தில் கொண்டு நபி (ஸல்) மக்கா படையினரை எதிர்த்தே ஆகவேண்டுமென்ற உறுதியான முடிவுக்கு வந்தார்கள்.
முஸ்லிம்கள் சண்டையிடாமல் தங்களின் ஊருக்குத் திரும்பி விடுவதால் மக்கா எதிரிகள் மதீனாவரை படையெடுத்து வரமாட்டார்கள் என்பதற்கு எவ்விதமான உத்திரவாதமுமில்லை. ஆகவே, ஒருவேளை முஸ்லிம்கள் மதீனா திரும்பியிருந்தால் அவர்களுக்கு மிகப்பெரிய அவப்பெயரும் மற்றவர்களிடம் அவர்களைப் பற்றிய அச்சமற்றத் தன்மையும், துணிவும் பிறந்திருக்கும்.

ஆலோசனை சபை

திடீரென ஏற்பட்ட அபாயகரமான சூழ்நிலையைக் கருதி நபி (ஸல்) ராணுவத்தின் உயர்மட்ட ஆலோசனை சபையைக் கூட்டினார்கள். அதில், தற்போதுள்ள நிலைமையைச் சுட்டிக்காட்டி தங்களது படையினருடனும் அதன் தளபதிகளுடனும் கருத்துகளைப் பறிமாறிக் கொண்டார்கள். அப்போது சிலருடைய உள்ளங்கள் அச்சத்தால் நடுங்கின. இரத்தம் சிந்தும்படியானப் போரை பயந்தனர். இவர்களைப் பற்றிதான் அல்லாஹ் திருமறையில் இவ்வாறு கூறுகிறான்:
(நபியே!) உங்களது இறைவன் உங்கள் இல்லத்திலிருந்து சத்தியத்தைக் கொண்டு உங்களை வெளியேற்றிய சமயத்தில் நம்பிக்கையாளர்களில் ஒரு கூட்டத்தினர் (உங்களுடன் வர) விரும்பாதவாறே, (போர் செய்வது அவசியம் என) அவர்களுக்குத் தெளிவாகத் தெரிந்த பின்னரும் இந்த உண்மையான விஷயத்தில் அவர்கள் உங்களுடன் தர்க்கிக்கின்றனர். தங்கள் கண்ணால் காணும் மரணத்தின் பக்கமே அவர்கள் ஓட்டிச் செல்லப்படுகின்றனர் போலும்! (அல்குர்ஆன் 8:5, 6)
ஆனால், படையின் தளபதிகளோ மிகத்துணிவுடன் இருந்தார்கள். அபூபக்ர் (ரழி) எழுந்து பேசினார்கள் அழகாகப் பேசி முடித்தார்கள். பின்பு உமர் (ரழி) எழுந்து அவர்களும் அழகாகப் பேசினார்கள். பின்பு மிக்தாத் இப்னு அம்ர் (ரழி) எழுந்து பேசினார்கள். ‘‘அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ் உங்களுக்குக் காட்டிய வழியில் செல்லுங்கள். நாங்கள் உங்களுடன் இருக்கிறோம். அல்லாஹ்வின் மீது சத்தியமாக! சங்கைமிகு குர்ஆனில்,
‘‘மூஸாவே! அவர்கள் அதில் இருக்கும் வரையில் ஒருக்காலும் நாங்கள் அதில் செல்லவே மாட்டோம். நீங்களும், உங்களுடைய இறைவனும் (அங்கு) சென்று (அவர்களுடன்) போர் புரியுங்கள். நிச்சயமாக நாங்கள் இங்கேயே உட்கார்ந்து (கவனித்துக்) கொண்டிருப்போம்.'' (அல்குர்ஆன் 5:24)
என்று இஸ்ரவேலர் நபி மூஸா (அலை) அவர்களிடம் கூறியதைப் போல் நாங்கள் உங்களிடம் கூறமாட்டோம். மாறாக, நீங்களும் உங்களது இறைவனும் போர் புரியுங்கள். நாங்களும் உங்கள் இருவருடன் சேர்ந்து போர் புரிவோம். சத்தியத்தைக் கொண்டு உங்களை அனுப்பியவன் மீதாணையாக! நீங்கள் எங்களை அழைத்துக் கொண்டு ‘பர்குல் ஃகிமாது'" என்ற இடம் வரை சென்றாலும் நாங்களும் உங்களுடன் மிகத்துணிவுடன் வருவோம்.'' இவ்வாறு மிக்தாத் (ரழி) கூறிமுடித்தார்.
அவன் வீர உரையைக் கேட்டு நபி (ஸல்) அவர்கள் அவரைப் பாராட்டி புகழ்ந்து அவருக்காகப் பிரார்த்தனை புரிந்தார்கள்.
இந்த மூன்று தளபதிகளும் முஹாஜிர்களில் உள்ளவர்கள். முஹாஜிர்கள் படையில் மிகக் குறைவானவர்களாக இருந்ததால், நபி (ஸல்) அன்சாரி தளபதிகளின் கருத்துகளை அறிய விரும்பினார்கள். ஏனெனில், இவர்கள்தான் அதிகமாக இருந்தனர். மேலும், போரினால் ஏற்படக்கூடிய விளைவுகளும் அன்சாரிகளையே அதிகம் பாதிக்கக் கூடியதாக இருக்கும். நபி (ஸல்) அகபாவில் செய்து கொண்ட உடன்படிக்கையில் அன்சாரிகள் மதீனாவிற்கு வெளியில் சென்று போர் புரிய வேண்டுமென்ற நிபந்தனை இல்லாமலிருந்தது. ஆகவே தான் நபி (ஸல்) அன்சாரிகளின் கருத்துகளைக் கேட்க விரும்பினார்கள். மூன்று தளபதிகளின் பேச்சைக் கேட்டதற்குப் பின்பு அன்சாரிகளை மனதில் கொண்டு ‘‘மக்களே! எனக்கு ஆலோசனை கூறுங்கள்'' என்று பொதுவாகக் கூறினார்கள். நபி (ஸல்) அவர்களின் நோக்கத்தை விளங்கிக் கொண்ட அன்சாரிகளின் தளபதியாக இருந்த ஸஅது இப்னு முஆது (ரழி), நபி (ஸல்) அவர்களிடம் ‘‘அல்லாஹ்வின் மீது சத்தியமாக! அல்லாஹ்வின் தூதரே! எங்களிடம் கேட்பது போல் தெரிகிறதே'' என்றார். அதற்கு நபி (ஸல்) ‘‘ஆம்!'' என்றார்கள். ஸஅது இப்னு முஆது (ரழி) அவர்கள் எழுந்து பின்வருமாறு பதிலளித்தார்:
‘‘நாங்கள் உங்களை விசுவாசித்தோம் உங்களை உண்மையானவர்கள் என நம்பினோம் நீங்கள் கொண்டு வந்ததுதான் சத்தியமென்று சாட்சி கூறினோம் இதை ஏற்று உங்களின் கட்டளைகளைச் செவிமடுத்தோம், அதற்குக் கட்டுப்படுவோம் என்று உடன்படிக்கையும் ஒப்பந்தமும் செய்து கொடுத்தோம் எனவே, நீங்கள் விரும்பிய வழியில் செல்லுங்கள் உங்களை சத்தியத்தைக் கொண்டு அனுப்பிய இறைவன் மீதாணையாக! நீங்கள் எங்களை அழைத்துக் கொண்டு கடலுக்குள் மூழ்கினால் நாங்களும் மூழ்குவோம் எங்களிலிருந்து ஒருவரும் பின் தங்கிவிட மாட்டார் நாளை எங்களுடன் எதிரிகளை நீங்கள் சந்திப்பதை நாங்கள் வெறுக்கவில்லை நிச்சயமாக போரில் நாங்கள் உறுதியுடன் இருப்போம் எதிரிகளைச் சந்திப்பதில் உண்மை யாளர்களாக இருப்போம் உங்களுக்குக் கண் குளிர்ச்சி தருபவற்றை அல்லாஹ் எங்களால் வழங்கலாம் அல்லாஹ்வுடைய அருளுடன் எங்களை அழைத்துச் செல்லுங்கள்.''
மற்றுமொரு அறிவிப்பில் வந்துள்ளது: ‘‘அல்லாஹ்வின் தூதரே! தங்களின் இல்லங்களில் இருந்து கொண்டு உங்களுக்கு உதவி செய்வது மட்டுமே கடமை என அன்சாரிகள் நினைப்பார்கள் என்று நீங்கள் அஞ்சுகிறீர்களா? அன்சாரிகளின் சார்பாக நான் பேசுகிறேன் அவர்களின் சார்பாக நான் பதிலளிக்கிறேன் நீங்கள் விரும்பிய இடத்திற்குப் பயணித்துச் செல்லுங்கள் நீங்கள் விரும்பியவருடன் உறவு வைத்துக் கொள்ளுங்கள் நீங்கள் விரும்பியவன் உறவை வெட்டிவிடுங்கள் நீங்கள் விரும்பியதை எங்களிடமிருந்து எடுத்துக் கொள்ளுங்கள் நீங்கள் விரும்பியதை எங்களுக்குக் கொடுங்கள் நீங்கள் எங்களிடமிருந்து எடுத்துக் கொண்டது நீங்கள் எங்களுக்காக விட்டுவிட்டதை விட மேலானதாகும் நீங்கள் எங்களுக்கு எவ்விஷயத்திலும் எதைக் கட்டளையிடுகிறீர்களோ அது விஷயத்தில் எங்களின் செயல்கள் உங்களின் கட்டளைக் கிணங்கத்தான் இருக்கும் அல்லாஹ்வின் மீதாணையாக! நீங்கள் எங்களை ‘கிம்தான்' பகுதியில் உள்ள ‘பர்க்' என்ற இடம் வரை அழைத்துச் சென்றாலும் நாங்கள் உங்களுடன் வருவோம் அல்லாஹ்வின் மீதாணையாக! நீங்கள் எங்களைக் கடலுக்குள் அழைத்துச் சென்று மூழ்கினால் நாங்களும் மூழ்குவோம்'' என்று ஸஅது இப்னு முஆது, நபி (ஸல்) அவர்களிடம் கூறினார்கள்.
ஸஅதின் பேச்சையும் அவன் உற்சாகத்தையும் கண்ட நபி (ஸல்) அவர்கள் மிகுந்த ஆனந்தமடைந்தார்கள். பின்பு ‘‘நற்செய்தி அடைந்து கொள்ளுங்கள்! நிச்சயமாக அல்லாஹ் இரண்டு கூட்டங்களில் ஒன்றை எனக்கு வாக்களித்துள்ளான். அல்லாஹ்வின் மீது ஆணையாக! அக்கூட்டத்தினர் வெட்டுண்டு விழும் இடங்களை நான் இப்போது பார்ப்பதைப் போன்று இருக்கின்றது'' என்று கூறினார்கள்.

இஸ்லாமியப் படை பயணத்தைத் தொடர்கிறது

பின்பு நபி (ஸல்) ‘ஃதபிரான்' என்ற இடத்திலிருந்து புறப்பட்டு, அஸாஃபிர் வழியாகச் சென்று, ‘தப்பா' என்ற இடத்தை அடைந்து, பின்பு அங்கிருந்து மலை போன்ற மிகப் பெரிய மணற் குன்றான ஹன்னானை வலப்பக்கம் விட்டுவிட்டு பத்ருக்குச் சமீபமாக வந்திறங்கினார்கள்.

கண்காணிக்கும் பணியில் நபியவர்கள்

அங்கிருந்து நபி (ஸல்) தனது குகைத் தோழர் அபூபக்ருடன் மக்கா படைகளைக் கண்காணிக்கப் புறப்பட்டார்கள். அவ்விருவரும் மக்கா படையினர் எங்கு கூடாரமிட்டுள்ளார்கள் என்பதை தெரிந்து கொள்ள சுற்றிக் கொண்டிருக்கும் போது ஒரு வயது முதிர்ந்தவரைப் பார்த்தார்கள். அவரிடம் ‘‘குறைஷிகளைப் பற்றியும் முஹம்மது மற்றும் அவரது தோழர்களைப் பற்றியும் உமக்குத் தெரியுமா?'' என்று விசாரித்தார்கள். அவர் தங்களை யார் என விளங்கிக் கொள்ளக் கூடாது என்பதற்காக அவர்கள் இரு படைகளைப் பற்றியும் விசாரித்தார்கள். ஆனால், அந்த வயது முதிர்ந்தவரோ ‘‘நீங்கள் எந்தக் கூட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்பதை சொல்லாத வரை நான் உங்களுக்கு எந்த செய்தியையும் கூறமாட்டேன்'' என்றார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் ‘‘நாங்கள் கேட்டதை நீர் கூறினால் நாங்கள் யார் என்பதை உமக்குக் கூறுவோம்'' என்றார்கள். அதற்கு அந்த வயோதிகர் ‘‘அவ்வாறுதானே!'' என்று கேட்க அதற்கு நபி (ஸல்) ‘‘ஆம்!'' என்றார்கள்.
அதற்குப் பின் அந்த வயோதிகர் ‘‘முஹம்மதும் அவன் தோழர்களும் இன்ன நாளில் மதீனாவிலிருந்து வெளியேறினார்கள் என்று எனக்கு செய்தி கிடைத்தது. எனக்கு இந்த செய்தியைக் கூறியவர் உண்மையைக் கூறியிருந்தால் அவர்கள் இன்று இந்த இடத்தில் இருப்பார்கள்'' என்று மதீனாவின் படை இருந்த இடத்தை சரியாகக் கூறினார். மேலும், ‘‘குறைஷிகள் இந்த நாளில் மக்காவிலிருந்து கிளம்பினார்கள் என்று எனக்கு செய்தி கிடைத்தது. எனக்கு இச்செய்தியைக் கூறியவர் உண்மையைக் கூறியிருந்தால் அவர்கள் இன்று இன்ன இடத்தில் இருப்பார்கள்'' என்று மக்கா படை தங்கியிருந்த இடத்தைச் சரியாகக் கூறினார்.
‘‘பின்பு நீங்கள் யார்?'' என்று அவர் கேட்க, நபி (ஸல்) ‘‘நாங்கள் (மாஃ) தண்ணீலிருந்து வந்திருக்கிறோம்'' என்று கூறி, அங்கிருந்து உடனே சென்றுவிட்டார்கள். இதைக் கேட்ட அந்த வயோதிகர் ‘‘என்ன! தண்ணீலிருந்து வந்தவர்களா? எந்தத் தண்ணீலிருந்து...? இராக் நாட்டு தண்ணீலிருந்தா...?'' என்று புரியாமல் புலம்பிக் கொண்டிருந்தார்.

மக்கா படையின் முக்கிய விஷயங்களை அறிதல்

அன்றைய மாலை எதிரிகளைப் பற்றி மேலும் பல புதிய தகவல்களை அறிந்து வருவதற்காக முஹாஜிர்களில் உள்ள மூன்று முக்கிய தளபதிகளை நபி (ஸல்) அனுப்பி வைத்தார்கள். அவர்கள் அலீ இப்னு அபூ தாலிப், ஸுபைர் இப்னு அவ்வாம், ஸஅது இப்னு அபீவக்காஸ் (ரழி) ஆவார்கள். இவர்கள் பத்ரின் தண்ணீர் உள்ள இடத்திற்குச் சென்றபோது அங்கு இருவர் மக்கா படைகளுக்காக தண்ணீர் எடுத்துக் கொண்டிருந்தனர். அவர்களைக் கைது செய்து நபி (ஸல்) அவர்களிடம் கொண்டு வந்தார்கள். அப்போது நபி (ஸல்) தொழுது கொண்டிருந்தார்கள். அவ்விருவரிடமும் இஸ்லாமிய படையினர் விசாரிக்கவே அவர்கள், ‘‘நாங்கள் குறைஷிகளுக்கு தண்ணீர் எடுத்துச் செல்ல வந்திருக்கிறோம்'' என்றனர். இவர்கள் அபூஸுஃப்யானின் கூட்டத்தினராக இருக்கலாம் என்றெண்ணி இவர்களின் பதிலை ஏற்றுக் கொள்ளாமல் கடுமையாக அடித்தனர். அடிக்குப் பயந்த அவ்விருவரும் ‘‘ஆம்! நாங்கள் அபூஸுஃப்யானின் கூட்டத்தைச் சேர்ந்தவர்கள்தான்'' என்றனர். உடனே அவ்விருவரையும் அடிக்காமல் விட்டுவிட்டனர்.
நபி (ஸல்) தொழுது முடித்தவுடன் தங்களது படையினரை கண்டிக்கும் விதமாக ‘‘அவ்விருவரும் உங்களிடம் உண்மை கூறியபோது அடித்தீர்கள். ஆனால் பொய் கூறியபோது அவர்களை விட்டு விட்டீர்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! அவ்விருவரும் உண்மையைத்தான் கூறினார்கள். அவர்கள் குறைஷிகளுக்காக வந்தவர்களே!'' என்று கூறினார்கள்.
பின்பு அவ்விருவரையும் அழைத்து ‘‘குறைஷிகளைப் பற்றி நீங்கள் எனக்கு சொல்லுங்கள்'' என்று நபி (ஸல்) கேட்கவே, ‘‘நீங்கள் பார்க்கும் அந்தப் பெரிய மேட்டிற்குப் பின் குறைஷிகள் இருக்கிறார்கள்'' என்றனர். ‘‘அவர்கள் எத்தனை நபர்?'' என்று நபி (ஸல்) கேட்டார்கள். ‘‘மிக அதிகமாக இருக்கின்றனர்'' என்று அவர்கள் கூறினார்கள். ‘‘அவர்களிடம் எப்படிப்பட்ட தயாரிப்புகள் உள்ளன'' என்று நபி (ஸல்) கேட்கவே, அவர்கள் ‘‘தெரியாது'' என்று கூறினர். நபி (ஸல்) ‘‘அவர்கள் ஒவ்வொரு நாளும் எத்தனை ஒட்டகங்கள் அறுக்கிறார்கள்?'' என்று கேட்க, அதற்கு அவர்கள் ''ஒரு நாள் ஒன்பது. மறுநாள் பத்து ஒட்டகங்கள் அறுக்கிறார்கள்'' என்று கூறினார்கள். அப்போது நபி (ஸல்) ‘‘அவர்கள் தொள்ளாயிரத்திலிருந்து ஆயிரம் நபர்கள் வரை இருக்கலாம்'' என்றார்கள். பின்பு அவர்களிடம் ‘‘குறைஷி பிரமுகர்களில் யார் யார் வந்திருக்கிறார்கள்?'' என்று நபி (ஸல்) கேட்க ‘‘உத்பா இப்னு ரபீஆ, ஷைபா இப்னு ரபீஆ, அபுல் பக்த இப்னு ஹிஷாம், ஹக்கீம் இப்னு ஜாம், நவ்ஃபல் இப்னு குவைலித், ஹாரிஸ் இப்னு ஆமிர், துஅய்மா இப்னு அதி, நழ்ர் இப்னு ஹாரிஸ், ஜம்ஆ இப்னு அஸ்வத், அபூ ஜஹ்ல் இப்னு ஹிஷாம், உமய்யா இப்னு கலஃப் ஆகியோரும் மற்றும் பலரும் வந்திருக்கிறார்கள்'' என அவ்விருவரும் கூறினர்.
நபி (ஸல்) மக்களை நோக்கி ‘‘இதோ! மக்கா தனது ஈரக் குலைகளை உங்களுக்கு முன் கொண்டு வந்திருக்கிறது'' என்றார்கள்.

மழை பொழிதல்

அல்லாஹ் அன்றிரவு மழையை இறக்கினான். அந்த மழை இணைவைப்பவர்களுக்கு அடைமழையாக இருந்தது. அது அவர்களை முன்னேறவிடாமல் தடுத்தது. ஆனால், முஸ்லிம்களுக்கோ அது மென்மையான தூறலாக இருந்தது. அம்மழையினால் அல்லாஹ் முஸ்லிம்களைச் சுத்தப்படுத்தினான். ஷைத்தானின் அசுத்தத்தை அவர்களை விட்டும் அகற்றினான். அங்கிருந்த மணற்பாங்கான பூமியை முஸ்லிம்கள் தங்குவதற்கு வசதியாக இறுக்க மாக்கிக் கொடுத்தான். மேலும், அவர்களது உள்ளங்களையும் பாதங்களையும் உறுதியாக்கினான்.

முக்கிய ராணுவத் தளத்தை நோக்கி இஸ்லாமியப் படை

இணைவைப்பவர்கள் வருவதற்குள் பத்ர் மைதானத்திற்கருகில் உள்ள நீர்நிலைகளுக்கு நாம் சென்றுவிட வேண்டும் என்பதற்காக நபி (ஸல்) தனது படையை அழைத்துக் கொண்டு விரைந்தார்கள். ஏனெனில், அப்போதுதான் அந்த நீர்நிலைகளை எதிரிகள் கைப்பற்ற விடாமல் தடுக்க முடியும். அல்லாஹ்வின் அருளால் இஷா நேரத்தில் பத்ரின் நீர்நிலைகளில் ஒரு நீர்நிலைக்கு அருகில் நபி (ஸல்) வந்திறங்கினார்கள். அப்போது போர் தந்திரங்களை நன்கறிந்த (ராணுவ நிபுணர்) அல் ஹுபாப் இப்னு முன்திர் (ரழி) எழுந்து ‘‘அல்லாஹ்வின் தூதரே! இந்த இடத்தில் நீங்கள் தங்கியதைப் பற்றி எனக்குக் கூறுங்கள். நாம் இவ்விடத்தை விட்டு முந்தவோ அல்லது பிந்தவோ கூடாது என அல்லாஹ் முடிவு செய்த இடமா இது? அல்லது இது உங்கள் சார்பான யோசனையும், போர் தந்திரமுமா?'' என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) ‘‘இல்லை. இது ஒரு யோசனையும் போர் தந்திரமும்தான்'' என்றார்கள்.
அதற்கவர் ‘‘அல்லாஹ்வின் தூதரே! இது தங்குவதற்குரிய இடமல்ல. நீங்கள் மக்களை அழைத்துக் கொண்டு புறப்படுங்கள். நாம் குறைஷிகளுக்கு மிக அருகில் உள்ள நீர்நிலைக்கு சென்று தங்குவோம். பின்பு மற்ற அனைத்து நீர்நிலைகளையும் நாம் அழித்து விடுவோம். மேலும், ஒரு நீர் தடாகத்தை ஏற்படுத்தி அதை தண்ணீரால் நிரப்பி விடுவோம். நாளை போர் நடக்கும் போது நாம் குடிப்பதற்குத் தண்ணீர் இருக்கும். அவர்கள் குடிப்பதற்குத் தண்ணீர் இருக்காது'' என்றார். நபி (ஸல்) அந்த யோசனையை ஏற்றுக்கொண்டு, ‘‘நிச்சயம் நீர் நல்ல யோசனை கூறினீர்'' என்றார்கள்.
உடனே நபி (ஸல்) தங்களது படையை அழைத்துக் கொண்டு எதிரிகளுக்கு சமீபமாக உள்ள நீர்நிலைகளுக்கு அருகில் வந்திறங்கினார்கள். அந்நேரம் இரவின் பெரும் பகுதி கழிந்திருந்தது. பின்பு, தங்களுக்குச் சிறிய சிறிய நீர்த் தடாகங்கள் சிலவற்றை அங்குக் கட்டிக் கொண்டு மற்ற அனைத்து கிணறுகளையும் அழித்துவிட்டார்கள்.

படையை வழி நடத்துவதற்கான இடம்

முஸ்லிம்கள் அந்த கிணற்றுக்கருகில் தங்கிய போது, ஸஅது இப்னு முஆது (ரழி) ‘‘படையை வழிநடத்துவதற்காக நாங்கள் தங்களுக்கென பாதுகாப்பான ஒரு தனி இருப்பிடத்தை ஏற்படுத்துகிறோம். அப்போதுதான் அங்கிருந்து அவசர நடவடிக்கைகள் எடுக்க முடியும் வெற்றிக்குப் பதிலாக தோல்வி ஏற்பட்டாலும் அதற்குரிய சரியான திட்டத்தை நீங்கள் தீட்ட முடியும்'' என்று நபி (ஸல்) அவர்களிடம் ஆலோசனைக் கூறினார்கள்.
இதோ அவரது ஆலோசனை! அவர் கூறக் கேட்போம்:
‘‘அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் உங்களுக்காக உயரமான ஒரு பரணி வீட்டை கட்டுகிறோம் அதில் நீங்கள் தங்கிக் கொள்ளுங்கள் உங்களுக்குத் தேவையான வாகனங்களையும் அதற்கருகில் ஏற்பாடு செய்கிறோம் பின்பு நாளை எதிரிகளை நாங்கள் சந்திக்கும்போது அல்லாஹ் நம்மை மிகைக்க வைத்தால், நமக்கு வெற்றி அளித்தால், அது நாம் விரும்பியவாறே நடந்ததாக இருக்கட்டும். இல்லை! அதற்கு மாற்றமாக ஏதாவது நடந்தால் நீங்கள் இந்த வாகனத்தில் அமர்ந்து எங்களுக்குப் பின்னுள்ள எங்களது கூட்டத்தனரிடம் சேர்ந்து கொள்ளலாம். அல்லாஹ்வின் தூதரே! இன்னும் பலர் இங்கு வரவில்லை எங்களை விட அவர்கள் உங்களை அதிகம் நேசிக்கக் கூடியவர்கள் நீங்கள் போரைச் சந்திப்பீர்கள் என்று அவர்களுக்குத் தெரிந்திருந்தால் உங்களை விட்டு ஒருக்காலும் அவர்கள் பின்தங்கியிருக்க மாட்டார்கள். அவர்களிடம் நீங்கள் சென்றால் அவர்கள் மூலம் அல்லாஹ் உங்களைப் பாதுகாப்பான். அவர்கள் உங்களிடம் உண்மையுடன் நடந்து, உங்களுக்கு ஆதரவாக போரும் புரிவார்கள்.'' இவ்வாறு ஸஅது (ரழி) தங்களின் சிறந்த ஆலோசனையை நபி (ஸல்) அவர்கள் முன் வைத்தார்.
ஸஅது (ரழி) அவர்களின் இந்த யோசனையை நபி (ஸல்) அவர்கள் கேட்டு, அவரைப் புகழ்ந்து அவருக்காக பிரார்த்தனையும் செய்தார்கள். முஸ்லிம்கள் போர் மைதானத்திற்கு வடக்கிழக்கில் இருந்த உயரமான ஒரு திட்டின் மீது பரணி வீட்டை, அதில் இருந்து கொண்டு போர் மைதானத்தைப் பார்க்கும்படியாக அமைத்தார்கள்.
மேலும், நபி (ஸல்) அவர்களை சுற்றி பாதுகாப்பிற்காக ஸஅது இப்னு முஆத் (ரழி) தலைமையில் சில அன்சாரி வாலிபர்களின் குழு ஒன்று தேர்வு செய்யப்பட்டது.

படையை ஒழுங்குபடுத்துதல் - இரவைக் கழித்தல்

பின்பு நபி (ஸல்) தனது படையை ஒழுங்குபடுத்தினார்கள். போர் நடக்கக்கூடிய மைதானத்தில் நடந்து சென்று ‘‘இன்ஷா அல்லாஹ்! நாளை இன்னார் கொல்லப்படும் இடம் இது... இன்ஷா அல்லாஹ்! நாளை இன்னார் கொல்லப்படும் இடம் இது... என்று தங்களது விரலால் சுட்டிக் காட்டினார்கள். பின்பு நபி (ஸல்) அங்குள்ள ஒரு மரத்தருகில் தொழுதவர்களாக இரவைக் கழித்தார்கள். முஸ்லிம்களும் மிகுந்த நம்பிக்கையுடனும் மன அமைதியுடனும் காலையில் தங்கள் இறைவனின் நற்செய்திகளைக் கண்கூடாகப் பார்த்துக் கொள்ளலாம் என்ற ஆதரவுடன் இரவைக் கழித்தார்கள். (ஸஹீஹ் முஸ்லிம், ஸுனனுத் திர்மிதி)
(நம்பிக்கையாளர்களே! உங்கள் மனம்) சாந்தியடைந்தவர்களாக, சிறியதொரு நித்திரை உங்களைப் சூழ்ந்து கொள்ளும்படி (இறைவன்) செய்ததை நினைத்துப் பாருங்கள்! அன்றி (அதுசமயம்) உங்கள் தேகத்தை நீங்கள் சுத்தப்படுத்திக் கொள்வதற்காகவும், உங்களை விட்டு ஷைத்தானுடைய அசுத்தத்தைப் போக்கி விடுவதற்காகவும், உங்கள் உள்ளங்களைப் பலப்படுத்தி, உங்கள் பாதங்களை உறுதிப்படுத்துவதற்காகவும் (அவனே) வானத்திலிருந்து மழையைப் பொழியச் செய்தான். (அல்குர்ஆன் 8:11)
அது ஹிஜ்ரி 2, ரமழான் மாதம் பிறை 17 வெள்ளிக்கிழமை இரவாக இருந்தது. இதே மாதம் பிறை 8 அல்லது 12ல் இந்தப் படை மதீனாவிலிருந்து பத்ரை நோக்கி புறப்பட்டது.

போர்க்களத்தில் மக்கா படையில் பிளவு ஏற்படுதல்

குறைஷிகள் பத்ர் பள்ளத்தாக்கின் மேற்பகுதியில் தங்களது கூடாரங்களை அமைத்து இரவைக் கழித்தனர். காலை விடிந்தவுடன் தங்களது படைகளுடன் பத்ர் பள்ளத்தாக்கருகில் உள்ள மணல் முகட்டுக்கருகில் வந்தனர். அவர்களில் சிலர் நபி (ஸல்) ஏற்படுத்தியிருந்த நீர் தடாகத்தில் நீர் அருந்த வந்தனர். அப்போது நபி (ஸல்) தோழர்களிடம் ‘‘அவர்களை விட்டு விடுங்கள்'' என்றார்கள். அவர்களில் யாரெல்லாம் நீர் அருந்தினார்களோ அவர்கள் அனைவரும் போரில் கொல்லப்பட்டனர். ஆனால், ஹக்கீம் இப்னு ஸாமைத் தவிர. இவர் போரில் கொல்லப்பட வில்லை. பிறகு இவர் இஸ்லாமை ஏற்று சிறந்த முஸ்லிமாக விளங்கினார். அவர் சத்தியம் செய்ய அவசியம் ஏற்பட்டால் ‘‘பத்ர் போரில் என்னைக் காப்பாற்றியவன் மீது சத்தியமாக!'' என்று கூறுவார். அதாவது தன்னுடன் நீர் அருந்திய அனைவரும் கொல்லப்பட்டு விட, தான் மட்டும் அல்லாஹ்வின் அருளால் தப்பித்ததை நினைத்து இவ்வாறு கூறுவார்.
குறைஷிகள் சூழ்நிலைகளைப் பார்த்து சற்று நிம்மதியடைந்த பிறகு உமைர் இப்னு வஹ்பு ஜுமயை முஸ்லிம்களின் பலத்தை அறிந்து வர அனுப்பினர். உமைர் தனது குதிரையில் முஸ்லிம் ராணுவத்தை நோட்டமிட்டு குறைஷிகளிடம் திரும்பி, ‘‘அவர்கள் ஏறக்குறைய முன்னூறு நபர்கள் இருக்கலாம் இருப்பினும் எனக்கு அவகாசம் கொடுங்கள் நான் வேறு எங்காவது படை மறைந்திருக்கிறதா அல்லது அவர்களுக்கு உதவிக்காக வேறு படை ஏதும் வருகிறதா எனப் பார்த்து வருகிறேன்'' என்றார்.
பத்ர் பள்ளத்தாக்கில் மிக நீண்ட தூரம் வரை நோட்டமிட்டும் எதையும் பார்க்காததால், குறைஷிகளிடம் திரும்பி ‘‘நான் எதையும் பார்க்கவில்லை. ஆனால், குறைஷிக் கூட்டமே! மரணங்களைச் சுமந்து வரும் சோதனைகள் என் கண் முன் தெரிகின்றன. மதீனாவின் ஒட்டகங்கள் வெறும் மரணத்தைத்தான் சுமந்து வந்திருக்கின்றன. வந்திருக்கும் கூட்டத்திற்கு வாளைத் தவிர வேறெந்த பாதுகாப்பும் இல்லை. அவர்களில் ஒருவர் கொலை செய்யப்படுவதற்கு முன் உங்களில் ஒருவரைக் கொலை செய்யாமல் அவர் இறக்க மாட்டார். உங்களில் அவ்வளவு பெரிய எண்ணிக்கைகளை அவர்கள் கொன்றால், அதற்குப் பிறகு நீங்கள் வாழ்ந்துதான் என்ன பயனிருக்கிறது? எனவே, நன்கு யோசித்துக் கொள்ளுங்கள்'' என்று கூறினார்.
போர் செய்தே ஆகவேண்டும் என்று பிடிவாதம் பிடிக்கும் அபூ ஜஹ்லுக்கு எதிராகக் கிளர்ச்சி ஏற்பட்டது. அதுதான் சண்டை செய்யாமல் திரும்ப வேண்டும் என்பது! ஹக்கீம் இப்னுஹிஸாம் இதற்காக மக்களிடையே முயற்சித்தார். அவர் உத்பா இப்னு ரபீஆவை சந்தித்து ‘‘உத்பாவே! நீர் குறைஷிகளில் பெரியவரும் தலைவருமாவீர். உங்களின் சொல்லுக்குக் குறைஷியர் கட்டுப்படுவர், காலங்காலமாக உமக்கு நற்புகழை தரும் ஒரு விஷயத்தை நான் சொல்லட்டுமா?'' என்றார். அதற்கு உத்பா ‘‘நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள் ஹக்கீமே!'' என்றார். ஹக்கீம் ‘‘நீர் மக்களை அழைத்துக் கொண்டு திரும்பி விடும். (ஸய்யா நக்லாவில் கொல்லப்பட்ட) உமது நண்பர் அம்ர் இப்னு ஹழ்ரமியின் விஷயத்திற்கு நீர் பொறுப்பெடுத்துக் கொள்!'' என்று கூறினார். இதற்கு ‘‘நான் அவ்வாறே செய்கிறேன். எனக்கு நீ ஜாமினாக இரு. அம்ர் என்னுடைய நண்பர்தான். எனவே அவருடைய கொலை குற்றப்பரிகாரத்தையும், அவருக்கு ஏற்பட்ட பொருள் சேதத்தையும் நான் கொடுத்து விடுகிறேன்'' என்று உத்பா கூறினார்.
பின்பு, ‘‘நீர் அபூஜஹ்லிடம் சென்று, இது விஷயமாக பேசி வாரும். ஏனெனில், நிச்சயமாக அவனைத் தவிர வேறெவரும் மக்களுக்கு மத்தியில் பிளவு உண்டாக்க மாட்டார்'' என உத்பா ஹக்கீமிடம் கூறினார்.
பின்பு உத்பா மக்களுக்கு மத்தியில் பிரசங்கம் செய்தார். இதோ... அவரது பிரசங்கம்:
‘‘குறைஷிக் கூட்டத்தினரே! நிச்சயமாக நீங்கள் முஹம்மதிடமும் அவரது தோழர்களிடமும் சண்டையிட்டு என்ன செய்யப் போகிறீர்கள்? அதனால் உங்களுக்கு என்ன லாபம்? நீங்கள் அவர்களுக்கு ஏதாவது தீங்கு செய்தால், நாளை உங்களுக்குள் எவ்வளவு பெரிய வெறுப்பு ஏற்படும்? நம்மில் யாரொருவர் அவர்களில் ஒருவரைக் கொலை செய்கிறாரோ அவர் தனது ஒன்றுவிட்ட சகோதரராகவோ, தாய்மாமன்களின் பிள்ளைகளாகவோ, நெருக்கமான உறவினர் களில் ஒருவராகவோ தான் இருப்பார். எனவே, முஹம்மதை மற்ற அரபியர்களுக்கு மத்தியில் விட்டு விட்டு நீங்கள் திரும்பிச் சென்று விடுங்கள். அவர்கள் முஹம்மதைக் கொலை செய்தால், நீங்கள் நாடியது நடந்து விடும். இல்லை, அதற்கு மாற்றமாக நடந்தால் நீங்கள் விரும்பாதது நடந்ததாக இருக்கட்டும்.''
ஹக்கீம் இப்னுஹிஸாம் அபூஜஹ்லிடம் வந்தார். தன் கவச ஆடையை அவன் சரிசெய்து கொண்டிருந்தான். அவர் ‘‘ஓ அபுல்கமே!" உத்பா என்னை உன்னிடம் இன்னன்ன விஷயங்களைக் கூறி அனுப்பினார்'' என்றார். அதைக் கேட்ட அபூஜஹ்ல் ‘‘அல்லாஹ்வின் மீது ஆணையாக! முஹம்மதையும் அவருடைய தோழர்களையும் பார்த்து உத்பா பயந்ததால், நெஞ்சு ‘திக்...திக்' என்று அடிக்கிறதுபோலும். அல்லாஹ்வின் மீது ஆணையாக! அல்லாஹ் எங்களுக்கும் முஹம்மதுக்கும் மத்தியில் தீர்ப்பளிக்கும் வரை நாங்கள் இவ்விடத்தை விட்டு திரும்ப மாட்டோம். உண்மையில் உத்பா கூறியது அவரது அசல் நோக்கமல்ல. மாறாக, தனது மகன் அபூ ஹுதைஃபாவை முஹம்மதுக்கும் அவரது தோழர்களுக்கும் மத்தியில் பார்த்து விட்டதால் நீங்கள் அவரைக் கொலை செய்து விடுவீர்களோ? என்று பயந்துதான் இவ்விதம் கூறியிருப்பான்'' என்றான்.
'பயத்தில் நெஞ்சு திக்திக்கென்று அடிக்கிறது. (அதாவது தொடை நடுங்கி)' என்ற அபூஜஹ்லின் கூற்று, உத்பாவுக்கு எட்டியபோது ‘‘பயத்தால் காற்றை வெளியிடும் அவனுக்கு நெஞ்சு அடிக்கிறதா? இல்லை எனக்கா? என்பதை அதிவிரைவில் அறிந்து கொள்ளத்தான் போகிறான் என்று உத்பா கூறினான்.'' உடனே அபூஜஹ்ல் எங்கே இந்த எதிர்ப்பு பெரிதாகிவிடுமோ எனப் பயந்து, அப்துல்லாஹ் இப்னு ஜஹ்ஷின் படையினரால் கொல்லப்பட்ட அம்ர் இப்னு ஹழ்ரமியின் சகோதரர் ஆமீர் இப்னு ஹழ்ரமியை அழைத்து வரச் செய்தான். ஆமீடம் ‘‘இதோ உனது நண்பன் உத்பா மக்களை அழைத்துக் கொண்டு திரும்ப விரும்புகிறார். நானோ உனது கண்ணில் பழிவாங்கும் உணர்வைப் பார்க்கிறேன். எனவே, எழுந்து உமது ஒப்பந்தத்தையும், உமது சகோதரனுக்காக பழிவாங்குவதையும் வலியுறுத்து!'' என்றான். தன் பின்பக்க ஆடையை ஆமீர் அவிழ்த்துவிட்டு ‘‘அம்ருக்கு ஏற்பட்ட கைசேதமே! அம்ருக்கு ஏற்பட்ட கைசேதமே!'' என ஆமிர் கூச்சலிட்டான். இவனது கூக்குரலைக் கேட்ட கூட்டத்தினர் ஆவேசம் கொண்டு கொதித்தெழுந்தனர். இதனால் சண்டையிட வேண்டுமென்ற தங்களது தீய எண்ணத்தில் குறைஷிகள் உறுதியாக நின்றனர்.
இவ்வாறு, உத்பா மக்களுக்கு கூறிய நல்ல ஆலோசனையை அபூஜஹ்ல் கெடுத்து விட்டான். ஆம்! அவ்வாறுதான் மடமை ஞானத்தை மிகைத்தது. ஹக்கீமின் இந்த எதிர்ப்பு எவ்வித பலனுமின்றி மறைந்தது.

இரு படைகளும் நேருக்கு நேர்...

குறைஷிகள் மைதானத்திற்கு வந்தனர். குறைஷிப் படையும் இஸ்லாமியப் படையும் ஒன்று மற்றொன்றை நேருக்கு நேர் பார்த்துக் கொண்ட போது, நபி (ஸல்) ‘‘அல்லாஹ்வே! இதோ குறைஷிகள் கர்வத்துடனும் மமதையுடனும் உன்னிடம் போர் செய்பவர்களாக உன்னுடைய தூதரைப் பொய்ப்பிப்பவர்களாக வந்திருக்கின்றனர். அல்லாஹ்வே! நீ எனக்கு வாக்களித்த உனது உதவியைத் தருவாயாக! இக்காலைப் பொழுதில் அவர்களை அழிப்பாயாக!'' என்று பிரார்த்தனை செய்தார்கள்.
சிவப்பு நிற ஒட்டகையின் மீது உத்பா உலாவிக் கொண்டிருந்தார். அவரைப் பார்த்த நபி (ஸல்) ‘‘இந்தக் கூட்டத்திலேயே நலவை விரும்பும் ஒருவர் இவராகத்தான் இருக்க முடியும். இவருக்கு இக்கூட்டம் கட்டுப்பட்டால் அவர்கள் சரியான வழியை அடையக்கூடும்'' என்று கூறினார்கள்.
நபி (ஸல்) முஸ்லிம்களின் அணிகளைச் சரிசெய்து கொண்டிருந்த போது ஓர் அற்புதமான நிகழ்ச்சி நடைபெற்றது. அதாவது நபி (ஸல்) அவர்களின் கையில் ஓர் அம்பு இருந்தது. அதன்மூலம் அணிவகுப்பைச் சரிசெய்து கொண்டிருந்தார்கள். ஸவாது இப்னு கஸிய்யா (ரழி) அணியில் சற்று முன்னால் நிற்கவே நபி (ஸல்) அவரது வயிற்றில் அந்த அம்பால் லேசாக ஒரு குத்து குத்தி ‘‘ஸவாதே! சரியாக நிற்பீராக'' என்றார்கள். உடனே ஸவாது (ரழி), ‘‘அல்லாஹ்வின் தூதரே! எனக்கு வலியை உண்டாக்கி விட்டீர்கள். நான் உங்களிடம் பழிவாங்க வேண்டும்'' என்றார். நபி (ஸல்) தனது வயிற்றை திறந்து காட்டி ‘‘பழி தீர்த்துக் கொள் ஸவாதே!'' என்றார்கள். ஸவாது நபி (ஸல்) அவர்களைக் கட்டியணைத்து வயிற்றில் முத்தமிட்டார். நபி (ஸல்), ‘‘ஸவாதே! ஏன் இப்படி செய்தீர்'' என்று கேட்டதற்கு ‘‘அல்லாஹ்வின் தூதரே! இதோ... என்ன நிலை ஏற்பட்டிருக்கிறது என்பது உங்களுக்குத் தெரியும். இறுதியாக எனது மேனி உங்களுடைய மேனியை தொட்டு விட வேண்டும் என்று பிரியப்பட்டேன்'' என்றார் ஸவாது. அவன் நலவிற்காக நபி (ஸல்) பிரார்தித்தார்கள்.
அணிகளைச் சரிசெய்த பின் தமது படையினருக்குச் சில கட்டளைகளை நபி (ஸல்) பிறப்பித்தார்கள். அதில் கூறியதாவது: ‘‘எனது இறுதிக் கட்டளை வரும் வரை நீங்கள் போரைத் தொடங்காதீர்கள் அவர்கள் உங்களை நெருங்கும் போது அவர்களை நோக்கி அம்பெறியுங்கள் அதே சமயம், அம்புகள் (அனைத்தையும் எறிந்து விடாமல்) கொஞ்சம் மீதமாக வைத்துக் கொள்ளுங்கள் அவர்கள் உங்களைச் சூழ்ந்து கொள்ளும் வரை நீங்கள் வாட்களை உருவாதீர்கள்! (ஸுனன் அபூதாவூது)
அதன் பிறகு நபி (ஸல்) அவர்களும் அபூபக்ர் (ரழி) அவர்களும் பரணி வீட்டிற்கு சென்றார்கள். ஸஅது இப்னு முஆது (ரழி) தனது பாதுகாப்புப் படையுடன் அவ்வீட்டைச் சுற்றிப் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டார்கள்.
இனி எதிரிகளைப் பற்றி சிறிது பார்ப்போம்: அபூஜஹ்லும் அன்று அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்தான். ‘‘அல்லாஹ்வே! எங்களில் உறவுகளை அதிகம் துண்டிப்பவர் நாங்கள் அறியாததை எங்களுக்கு மார்க்கமாகக் கொண்டு வந்தவர் அவரை இன்று அழித்து விடு! அல்லாஹ்வே! எங்களில் உனக்கு யார் மிகவும் விருப்பமானவராகவும் உனது திருப்திக்கு உரியவராகவும் இருக்கிறாரோ அவருக்கு உதவி செய்!''
இது குறித்தே அல்லாஹ் இந்த வசனத்தை இறக்கினான்:
(நிராகரிப்பவர்களே!) நீங்கள் வெற்றியின் மூலம் (முடிவான) தீர்ப்பைத் தேடிக் கொண்டிருந்தீர்கள். நிச்சயமாக அந்த வெற்றி உங்கள் முன் வந்து விட்டது. (எனினும் அது உங்களுக்கல்ல நம்பிக்கையாளர்களுக்கே! அவர்கள்தான் உங்களை வெற்றி கொள்வார்கள். ஆகவே, விஷமம் செய்வதிலிருந்து) இனியேனும் நீங்கள் விலகிக் கொண்டால் அது உங்களுக்கே நன்று. இனியும் நீங்கள் (விஷமம் செய்ய) முன்வரும் பட்சத்தில் நாமும் முன்வருவோம். உங்களுடைய கூட்டம் எவ்வளவு பெரிதாக இருந்தபோதிலும் (அது) உங்களுக்கு எந்த பலனையுமளிக்காது. ஏனென்றால், நிச்சயமாக அல்லாஹ் நம்பிக்கையாளர்களுடன் இருக்கின்றான். (அல்குர்ஆன் 8:19)

நேரம் நெருங்கியது - சண்டையின் முதல் தீ

அஸ்வத் இப்னு அப்துல் அஸது மக்ஜுமி என்பவன் போரின் தீ கங்குகளை முதலில் மூட்டினான் இவன் மிகுந்த கெட்ட குணமுடையவன். ‘‘நான் முஸ்லிம்களின் தடாகத்தில் நீர் அருந்துவேன் இல்லையேல் அதை உடைத்தெறிவேன் அல்லது அங்கேயே நான் செத்து மடிவேன் என அல்லாஹ்விடம் உடன்படிக்கை செய்கிறேன்'' என்று கூறியவனாக படையிலிருந்து வெளியேறினான். அவன் தடாகத்தை நெருங்க, ஹம்ஜா (ரழி) அவனை வாளால் எதிர்கொண்டு அவனது பாதத்தைக் கெண்டைக்கால் வரை வெட்டி வீழ்த்தினார்கள். அவன் காலிலிருந்து ரத்தம் சீறிப் பாய்ந்தது. தடாகத்திற்கு அருகிலிருந்த அவன் தவழ்ந்து வந்து தடாகத்திற்குள் விழுந்தான். அவன் தனது சத்தியத்தை நிறைவேற்றிவிட வேண்டுமென்று எண்ணியதால் தடாகத்திற்குள் விழுவதில் இந்த அளவு பிடிவாதம் காட்டினான். அவன் தடாகத்திற்குள் இருக்கும்போதே ஹம்ஜா (ரழி) அவர்கள் அவன் மீது மற்றொரு முறை பாய்ந்து அவனை வெட்டிச் சாய்த்தார்கள்.

ஒண்டிக்கு ஒண்டி

இந்த முதல் கொலை, போரின் நெருப்பை மூட்டியது. குறைஷிகளின் மிக தேர்ச்சி பெற்ற குதிரை வீரர்களில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் படைக்கு முன்னால் வந்தனர். அவர்கள் உத்பா இப்னு ரபிஆ, ஷைபா இப்னு ரபிஆ, வலீது இப்னு உத்பாவாகும். இவர்களை எதிர்க்க மூன்று அன்சாரி வாலிபர்களான அவ்ஃப் இப்னு ஹாரிஸ், முஅவ்வித் இப்னு ஹாரிஸ், அப்துல்லாஹ் இப்னு ரவாஹா (ரழி) ஆகியோர் களத்தில் குதித்தனர். இம்மூவடரிமும் அந்த எதிரிகள் ‘‘நீங்கள் யார்?'' என்றனர். அதற்கு அவர்கள் ‘‘நாங்கள் மதீனாவாசிகள்'' என்றனர். அதற்கு அந்த எதிரிகள், ‘‘சங்கைக்குரிய நீங்கள் எங்களுக்கு நிகரானவர்கள்தான். ஆனால் உங்களிடம் எங்களுக்கு எந்தத் தேவையும் இல்லை. நாங்கள் நாடி வந்திருப்பதெல்லாம் எங்கள் தந்தையுடைய சகோதரர்களின் மக்களைத்தான் என்றனர். பின்பு அவர்களில் ஒருவன் ‘‘முஹம்மதே! எங்களது இனத்தில் எங்களுக்கு நிகரானவரை எங்களிடம் அனுப்பும்!'' என்று கத்தினான். நபி (ஸல்) அவர்கள். ‘‘உபைதா இப்னு ஹாஸே! எழுந்து செல்லுங்கள்! ஹம்ஜாவே! எழுந்து செல்லுங்கள்! அலீயே! எழுந்து செல்லுங்கள்!'' என்றார்கள்.
இம்மூவரும் அந்த எதிரிகளுக்கருகில் செல்ல, அவர்கள் ‘‘நீங்கள் யார்?'' என்றனர். இவர்கள் தங்களைப் பற்றி சொன்னதும் ‘‘சங்கைமிக்க நீங்கள் எங்களுக்குப் பொருத்தமானவர்களே'' என்றனர். இம்மூவரில் வயதில் மூத்தவரான உபைதா (ரழி) எதிரி உத்பாவுடனும், ஹம்ஜா (ரழி) எதிரி ஷைபாவுடனும், அலீ (ரழி) எதிரி வலீதுடனும் மோதினர். (இப்னு ஹிஷாம்)
ஆனால், ஹம்ஜாவும் அலீயும் தங்களது எதிரிகளுக்கு அவகாசம் கொடுக்காமல் அடுத்த வினாடியே அவ்விருவரையும் கொன்றுவிட்டனர். ஆனால், உபைதாவும் உத்பாவும் சண்டை செய்து கொண்டதில் இருவருக்கும் பலத்த காயமேற்பட்டது. உபைதா (ரழி) அவர்களின் கால் வெட்டுண்டு விழுந்தது. இதைக் கண்ட ஹம்ஜா (ரழி) அவர்களும் அலீ (ரழி) அவர்களும் உத்பா மீது பாய்ந்து அவனை வெட்டிக் கொன்றார்கள். அதற்குப் பிறகு உபைதாவை சுமந்து கொண்டு படைக்குத் திரும்பினர். உபைதா (ரழி) இதனால் நோய்வாய்ப்பட்டு இப்போருக்குப் பின் 4 அல்லது 5 நாட்கள் கழித்து மதீனாவிற்கு செல்லும் வழியில் ‘ஸஃப்ரா' என்ற இடத்தில் இறந்தார்கள்.
(இறைநம்பிக்கையாளர்கள், இறைமறுப்பாளர்கள் ஆகிய) இவ்விரு வகுப்பாரும் தங்கள் இறைவனைப் பற்றி தர்க்கித்தனர். ஆகவே, அவர்களில் எவர் (உண்மையான இறைவனை) நிராகரிக்கிறார்களோ அவர்களுக்கு நெருப்பினால் ஆன ஆடை தயார் செய்யப்பட்டிருக்கிறது. (அக்கினியைப் போல்) கொதித்துக் கொண்டு இருக்கும் தண்ணீர் அவர்களுடைய தலைகளின் மீது ஊற்றப்படும். (அல்குர்ஆன் 22:19)
இந்த வசனம் தங்கள் விஷயத்தில்தான் இறங்கியது என்று அலீ (ரழி) சத்தியமிட்டு கூறுகிறார்கள்.

எதிரிகளின் பாய்ச்சல்

போரின் ஆரம்பமே எதிரிகளைப் பொருத்தவரை கெட்டதாக அமைந்தது. தங்களின் தளபதிகளிலும் குதிரை வீரர்களிலும் மிகச் சிறந்த மூவரை அவர்கள் இழந்தனர். இதனால் ஆத்திரமடைந்து, முஸ்லிம்களின் மீது ஒரே பாய்ச்சலாகப் பாய்ந்தனர். ஆனால், முஸ்லிம்களோ தங்களது இறைவனிடம் உதவியும் பாதுகாப்பும் கோரி, பணிவுடன் தங்களது எண்ணங்களை தூய்மைப்படுத்திக் கொண்டே, எதிரிகளின் தொடர் தாக்குதல்களை சமாளித்தனர். முஸ்லிம்கள் தங்கள் இடங்களிலேயே உறுதியாக நின்று எதிரிகளின் தாக்குதலுக்கு பதிலடிக் கொடுத்தனர். ‘அஹத்! அஹத்!' (அல்லாஹ் ஒருவனே! அல்லாஹ் ஒருவனே!!) என்று கூறிக்கொண்டே இணைவைப்பவர்களுக்குக் கடுமையான சேதங்களை ஏற்படுத்தினர்.

நபியவர்கள் அல்லாஹ்விடம் மன்றாடுகிறார்கள்

முஸ்லிம்களின் அணிகளைச் சரிசெய்து திரும்பிய பின் நபி (ஸல்) தனது இறைவன் தனக்கு வாக்களித்ததை அவனிடம் வேண்டினார்கள்.
அவர்கள் கேட்டதாவது: ‘‘அல்லாஹ்வே! நீ எனக்களித்த வாக்கை நிறைவேற்றுவாயாக! அல்லாஹ்வே! நீ எனக்களித்த உனது வாக்கையும் ஒப்பந்தத்தையும் உன்னிடம் கேட்கிறேன்.''
மோதல்களும் தாக்குதல்களும் கடுமையாகச் சூடுபிடித்து உச்சக்கட்டத்தை அடைந்த போது ‘‘அல்லாஹ்வே! இக்கூட்டத்தை இன்று நீ அழித்து விட்டால் உன்னை வணங்குவதற்கு இப்பூமியில் யாருமே இருக்க மாட்டார்கள். அல்லாஹ்வே! நீ இக்கூட்டத்தை அழிக்க நாடினால் இன்றைய தினத்திற்குப் பின் உன்னை யாரும் வணங்க மாட்டார்கள்'' என்று அல்லாஹ்விடம் கையேந்தினார்கள். கரங்களை உயர்த்தியதால் அவர்களின் புஜத்திலிருந்து போர்வை நழுவி விழுந்தது. அந்தளவு அல்லாஹ்விடம் மன்றாடிக் கேட்டார்கள். நபி (ஸல்) அவர்களின் போர்வையை அபூபக்ர் (ரழி) சரிசெய்து, ‘‘அல்லாஹ்வின் தூதரே! போதும், நீங்கள் உங்கள் இறைவனிடம் அதிகம் வேண்டிவிட்டீர்கள்'' என்றார்கள்.
நபியவர்களின் பிரார்த்தனையை அல்லாஹ் அங்கீகரித்து, வானவர்களுக்குக் கட்டளைப் பிறப்பித்தான்.
(நபியே!) உங்களது இறைவன் வானவர்களை நோக்கி ‘‘நிச்சயமாக நான் உங்களுடன் இருக்கிறேன். ஆகவே, நீங்கள் நம்பிக்கையாளர்களை உறுதிப் படுத்துங்கள் (என்று கட்டளையிட்டு) நிராகரிப்பவர்களுடைய உள்ளங்களில் நாம் திகிலை உண்டு பண்ணுவோம் (என்று கூறி, நம்பிக்கையாளர்களை நோக்கி) நீங்கள் அவர்களுடைய பிடரிகளின் மேல் வெட்டுங்கள். அவர்களைக் கணுக் கணுவாகத் துண்டித்து விடுங்கள்'' என்று அறிவித்ததை நினைத்துப் பாருங்கள். (அல்குர்ஆன் 8:12)
மேலும் தனது தூதருக்கு அறிவித்தான்:
(உங்களைப்) பாதுகாக்குமாறு நீங்கள் உங்கள் இறைவனிடம் வேண்டிய போது ‘‘அணியணியாக உங்களைப் பின்பற்றி வரக்கூடிய ஆயிரம் வானவர்களைக் கொண்டு நிச்சயமாக நான் உங்களுக்கு உதவி செய்வேன்'' என்று அவன் உங்களுக்குப் பதிலளித்தான். (அல்குர்ஆன் 8:9)
அதாவது, அந்த வானவர்கள் உங்களுக்குப் பின்னிருந்து உங்களுக்கு உதவிபுரிவார்கள் என்றோ அல்லது வானவர்கள் ஒரே தடவையில் வராமல் சிலருக்குப் பின் சிலராக வருவார்கள் என்றோ கருத்து கொள்ளலாம்.

வானவர்கள் வருகிறார்கள்

நபி (ஸல்) சற்று தலையைத் தாழ்த்தி, பின்பு உயர்த்தி ‘‘அபூபக்ரே! நற்செய்தி அடைந்து கொள்ளுங்கள். இதோ... ஜிப்ரீல் புழுதிகளுடன் காட்சியளிக்கிறார்'' அல்லது ‘‘அபூபக்ரே! நற்செய்தி அடைந்து கொள்ளுங்கள். அல்லாஹ்வின் உதவி உங்களுக்கு வந்துவிட்டது. இதோ.. ஜிப்ரீல் குதிரையின் கடிவாளத்தை இழுத்து வருகிறார். அவர் உடம்பில் புழுதி படிந்திருக்கிறது'' என்று கூறினார்கள்.
கவச ஆடை அணிந்து நபி (ஸல்) தங்களது கூடாரத்திலிருந்து வெளியேறி,
அதிசீக்கிரத்தில் இக்கூட்டம் தோற்கடிக்கப்படுவார்கள், (பிறகு) புறங்காட்டி ஓடுவார்கள். (அல்குர்ஆன் 54:45)
என்ற வசனத்தைக் கூறியவர்களாக பொடிக்கற்கள் நிறைந்த மண்ணை ‘‘முகங்கள் மாறட்டும்'' என்று கூறி எதிரிகளின் முகத்தை நோக்கி எறிந்தார்கள். அது எதிரிகளின் கண், தொண்டை, வாய் என்று அனைத்தையும் சென்றடைந்தது.
இது குறித்தே,
நீங்கள் எறியும்போது உண்மையில் அதை நீங்கள் எறியவில்லை. எனினும், அதை நிச்சயமாக அல்லாஹ்தான் எறிந்தான். (அல்குர்ஆன் 9:17)
என்ற வசனம் இறங்கியது.

எதிர் பாய்ச்சல்

இந்நேரத்தில்தான், நபி (ஸல்) முஸ்லிம்களுக்கு தனது இறுதிக் கட்டளையை அறிவித்தார்கள். ‘‘எதிரிகள் மீது பாயுங்கள்'' என்று கூறி, போர் புரிய முஸ்லிம்களுக்கு ஆர்வமூட்டினார்கள். மேலும் கூறினார்கள், ‘‘முஹம்மதின் உயிர் எவன் கைவசமுள்ளதோ அவன் மீது ஆணையாக! இன்றைய தினத்தில் போர் புரிந்து சகிப்புடனும், நன்மையை நாடியும், புறமுதுகு காட்டாமல் எதிரிகளை எதிர்த்தவராக யார் கொலை செய்யப்படுகிறாரோ அவரை அல்லாஹ் சொர்க்கத்தில் நுழைவிப்பான். வானங்களையும் பூமிகளையும் அகலமாகக் கொண்ட சொர்க்கத்தின் பக்கம் விரைந்தோடுங்கள்'' என்று கூறி போருக்கு ஆர்வமூட்டினார்கள். உமைர் இப்னு அல்ஹுமாம் (ரழி) ‘‘ஆஹா! ஆஹா!'' என்றார்கள். நபி (ஸல்) ‘‘நீ ஏன் ஆஹா! ஆஹா!'' என்று கூறுகிறாய்? என்று கேட்க, அவர் ‘‘நான் தவறான எண்ணத்தில் கூறவில்லை! அல்லாஹ்வின் மீது ஆணையாக! நான் சொர்க்கவாசிகளில் ஒருவனாக ஆக வேண்டுமென்ற ஆசையில் அவ்வாறு கூறினேன்'' என்றார். நபி (ஸல்) அவர்கள் ‘‘ஆம்! நிச்சயமாக நீர் சொர்க்கவாசிகளில் ஒருவர்தான்'' என்றார்கள். அவர் தன்னிடமிருந்த சில பேரீத்தம் பழங்களை எடுத்து சாப்பிடத் தொடங்கினார். பின்பு, ‘‘இந்தப் பேரீத்தம் பழங்களை சாப்பிடும் வரை நான் உயிர் வாழ்வதை நீண்ட ஒரு காலமாகக் கருதுகிறேன்'' என்று கூறியவராக அந்தப் பேரீத்தம் பழங்களை எறிந்து விட்டு எதிரிகளுடன் போர் புரிந்து வீரமரணம் எய்தினார். (ஸஹீஹ் முஸ்லிம்)
இவ்வாறுதான் அவ்ஃப் இப்னு ஹாரிஸ் (ரழி), நபி (ஸல்) அவர்களிடம் ‘‘அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ் தன் அடியானைப் பார்த்து எப்போது சிரிக்கிறான்?'' என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) ‘‘எந்தவித தற்காப்பு ஆடையும் அணியாமல் எதிரிகளுக்குள் தனது கையை அடியாரின் செலுத்துவதைப் பார்த்து அல்லாஹ் சிரிக்கின்றான்'' என்று கூறினார்கள். இதைக் கேட்டவுடன், தான் அணிந்திருந்த கவச ஆடையைக் கழற்றி எறிந்து விட்டு எதிரிகளிடம் போர் புரிந்து வீரமரணம் எய்தினார்.

எதிர்த்துத் தாக்க வேண்டுமென நபி (ஸல்) கட்டளைப் பிறப்பித்தவுடன் எதிரிகளின் மீது முஸ்லிம்கள் பாய்ந்தனர் அணிகளைப் பிளந்தனர் தலைகளைக் கொய்தனர். அல்லாஹ்வின் பாதையில் போர் புரிய வேண்டும் என்ற தீராத தாகத்தில் இருந்த அவர்கள், எதிரிகளை நிலை தடுமாறச் செய்தனர். இதனால் எதிரிகளின் தாக்கும் வேகமும் குறைந்தது வீரமும் சோர்வுற்றது. எதிரிகளால் முஸ்லிம்களின் வேகத்திற்கு ஈடுகொடுக்க முடியவில்லை.
அதுமட்டுமல்ல! அன்று நபி (ஸல்) கவச ஆடை அணிந்து, யாரும் நெருங்க முடியாத அளவு எதிரிகளுக்கருகில் நெருங்கி நின்று,
அதிசீக்கிரத்தில் இந்த கூட்டம் சிதறடிக்கப்படும். மேலும் (இவர்கள்) புறங்காட்டி ஓடுவார்கள். (அல்குர்ஆன் 54:45)
என்று உறுதியுடன் மிகத் தெளிவாக சொல்லிக் கொண்டிருந்தார்கள். நபி (ஸல்) அவர்களின் இக்காட்சியைப் பார்த்த முஸ்லிம்களுக்கு உற்சாகமும் ஆவேசமும் பன்மடங்கு பெருகின. (ஸஹீஹுல் புகாரி)
ஆகவே, முஸ்லிம்கள் மிகத் துணிவுடன் சண்டையிட்டார்கள். வானவர்களும் அவர்களுக்கு உதவி செய்தார்கள்.
அபூஜஹ்லின் மகன் இக்மா கூறுகிறார்: அன்றைய தினத்தில் ஒருவன் தலை துண்டிக்கப்பட்டு கீழே விழும் ஆனால், அவரை வெட்டியவர் யாரென்று தெரியாது. (இப்னு ஸஅது)
இப்னு அப்பாஸ் (ரழி) கூறுகின்றார்கள்: ஒரு முஸ்லிம் எதிரியைத் தாக்க பின்தொடர்ந்து செல்லும் போது மேலிருந்து ஒரு சாட்டையின் ஒலியையும் ‘ஹைஸ_மே! முன்னேறு' என்று கூறும் ஒரு குதிரை வீரன் அதட்டலையும் கேட்டார். அதன் பிறகு அந்த முஸ்லிம், எதிரியை பார்க்கும் போது அந்த எதிரி மூக்கு அறுக்கப்பட்டு, முகம் பிளக்கப்பட்டு மல்லாந்துக் கிடந்தான். அவனது உயிர் முற்றிலும் பிந்திருந்தது. அந்த அன்சாரி நபி (ஸல்) அவர்களிடம் இச்செய்தியைக் கூறினார். ‘‘ஆம்! நீர் உண்மைதான் கூறுகிறீர். அது மூன்றாவது வானத்திலிருந்து அல்லாஹ் இறக்கிய உதவியாகும்'' என்று நபி (ஸல்) விளக்கமளித்தார்கள். (ஸஹீஹ் முஸ்லிம்)
அபூதாவூது அல் மாஸினி (ரழி) கூறுகிறார்கள்: நான் ஒரு எதிரியை வெட்டுவதற்காக அவனை பின்தொடர்ந்த போது எனது வாள் அவன் மீது படுவதற்கு முன்னதாகவே அவனது தலை கீழே விழுந்தது. எனவே, வேறு யாரோ அவனை வெட்டினார்கள் என்று நான் அறிந்து கொண்டேன்.
அன்சாரிகளில் ஒருவர் அப்பாஸ் இப்னு அப்துல் முத்தலிபை கைது செய்து நபி (ஸல்) அவர்களிடம் அழைத்து வந்தார். அப்பாஸ் ‘‘அல்லாஹ்வின் மீது சத்தியமாக! இவர் என்னை கைது செய்யவில்லை. என்னை கைது செய்தது சிறந்த குதிரையின் மீது அமர்ந்து வந்த மிக அழகிய முகமுடைய ஒருவர்தான். ஆனால், இப்போது அவரை நான் இந்தக் கூட்டத்தில் பார்க்கவில்லையே?'' என்று கூறினார். அதற்கு அன்சாரி ‘‘அல்லாஹ்வின் தூதரே! நான்தான் அவரைக் கைது செய்தேன்'' என்று கூறினார். அதற்கு நபி (ஸல்) ‘‘நீங்கள் அமைதியாக இருங்கள்! அல்லாஹ்தான் சங்கைமிக்க ஒரு வானவரின் மூலம் உங்களுக்கு உதவி செய்தான்'' என்று கூறினார்கள்.
அலீ (ரழி) கூறினார்கள்: பத்ர் போரில் என்னையும் அபூபக்ர் (ரழி) அவர்களையும் பார்த்து நபி (ஸல்) ‘‘உங்கள் இருவரில் ஒருவருடன் ஜிப்ரீலும், மற்றொருவருடன் மீக்காயிலும் இருக்கிறார். பெரிய வானவரான இஸ்ராஃபீலும் போரில் கலந்திருக்கிறார்'' என்று கூறினார்கள். (முஸ்னது அஹ்மது, பஜ்ஜார், முஸ்தத்ரகுல் ஹாகிம்)

நழுவுகிறான் இப்லீஸ்

சுராகா இப்னு மாலிகின் உருவத்தில் போருக்கு வந்திருந்த இப்லீஸ் இணைவைப்பவர்களை வானவர்கள் வெட்டுவதைப் பார்த்தவுடன் போர் களத்திலிருந்து நழுவினான். அவனை உண்மையிலேயே சுராகா என்று எண்ணியிருந்த ஹாரிஸ் இப்னு ஹிஷாம் அவனை தப்ப விடாமல் இருக்க பிடித்துக் கொண்டார். ஹாரிஸின் நெஞ்சில் அடித்து அவரைக் கீழே தள்ளி விட்டு இப்லீஸ் ஓடினான். மற்றவர்கள் ‘‘சுராகாவே! எங்கே ஓடுகிறீர்? எங்களை விட்டுப் பிரியாமல் கடைசி வரை எங்களுடன் துணையாக இருப்பேன் என்று கூறியிருந்தீரே?'' என்றனர். அதற்கு ஷைத்தான்,
‘‘நிச்சயமாக நான் உங்களைவிட்டு விலகிக் கொண்டேன். நீங்கள் பார்க்க முடியாத ஒன்றை நான் பார்க்கின்றேன் நிச்சயமாக நான் அல்லாஹ்வுக்குப் பயப்படுகின்றேன் வேதனை செய்வதில் அல்லாஹ் மிகக் கடுமையானவன்'' (அல்குர்ஆன்:48)
என்று கூறிக் கொண்டே, வெருண்டோடி கடலில் குதித்தான்.

பெரும் தோல்வி

எதிரிகளின் அணியில் சலசலப்பும், தோல்வியின் அடையாளங்களும் வெளிப்பட்டன. முஸ்லிம்களின் கடுமையானத் தாக்குதலுக்கு முன் இணைவைப்போரின் அணி சின்னா பின்னமாகியது போர் முடிவை நெருங்கியது. எதிரிகள் நாலா பக்கங்களிலும் விரைந்தோடித் தப்பிக்க முயன்றனர். முஸ்லிம்கள் அவர்களைப் பின்தொடர்ந்து பணிந்தவரை கைது செய்து பணியாதவரை வெட்டி வீழ்த்தினர். இவ்வாறு இணைவைக்கும் எதிரிகள் போரில் பெரும் தோல்வியடைந்தனர்.

அபூஜஹ்லின் வீம்பு

வம்பன் அபூஜஹ்ல் தனது அணியில் சலசலப்பைப் பார்த்தவுடன் அதைச் சிறிதும் பொருட்படுத்தாமல் படையை உற்சாகப்படுத்த முயன்றான். பெருமையுடனும் திமிருடனும் அவன் தனது படையைப் பார்த்து ‘‘சுராகா உங்களை விட்டுப் பிரிந்து சென்றதால் நீங்கள் தோற்றுவிட வேண்டாம். ஏனெனில், அவன் முஹம்மதுக்கு இவ்வாறுதான் (படையை விட்டுப் பிரிந்து செல்வதாக) வாக்குக் கொடுத்திருந்தான். உத்பா, ஷைபா, வலீத் கொல்லப்பட்டதால் நீங்கள் பயந்துவிட வேண்டாம். அவர்கள் அவசரப்பட்டு விட்டார்கள். லாத், உஜ்ஜாவின் மீது சத்தியமாக! இந்த முஸ்லிம்களை கயிற்றில் பிணைத்துக் கட்டாதவரை நாம் திரும்ப மாட்டோம். நீங்கள் முஸ்லிம்களில் எவரையும் கொன்றுவிட வேண்டாம். மாறாக, அவர்களைப் பிடித்து கைதிகளாக்கிக் கொண்டு வாருங்கள். அவர்கள் செய்த தீய செயலை அவர்களுக்குப் புரிய வைப்போம்.''
இப்படி திமிராகப் பேசிய அபூஜஹ்லுக்குத் தனது அகம்பாவத்தின் எதார்த்தம் புரியத் தொடங்கியது. அவனைச் சுற்றி இணைவைப்போரின் பெரிய கூட்டமொன்று, தங்களது வாட்களாலும் ஈட்டிகளாலும் பாதுகாப்பு அரணை அமைத்திருந்தார்கள். இருந்தாலும் முஸ்லிம்களின் புயலுக்கு முன் அவை இருந்த இடம் தெரியாமல் ஆயின. அப்போது அபூஜஹ்ல் குதிரையின் மீது சுற்றிக் கொண்டிருப்பதைப் முஸ்லிம்கள் பார்த்தார்கள். இரு அன்சாரி சிறுவர்களின் கையினால் மரணம் அவனது இரத்தத்தைக் குடிக்க எதிர்பார்த்துக் கொண்டிருந்தது.

கொல்லப்பட்டான் அபூஜஹ்ல்

அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப் (ரழி) கூறுகிறார்கள்: நான் பத்ர் போர் அன்று அணியில் நின்று கொண்டு, திரும்பிப் பார்த்த போது என் வலப்பக்கமும் இடப்பக்கமும் குறைந்த வயதுடைய இரு வாலிபர்களே இருந்தனர். அவர்கள் இருப்பது எனக்கு ஒரு பாதுகாப்பாக இருக்கும் என்று நான் நினைக்கவில்லை. இந்நிலையில் இருவரில் ஒருவர் மற்றவருக்குத் தெரியாமல் ‘‘என் சிறிய தந்தையே! எனக்கு அபூஜஹ்லை காட்டுங்கள்'' என்றார். ‘‘நீ அவனை என்ன செய்வாய்?'' என்று நான் கேட்டேன். அதற்கவர் ‘‘அவன் நபியை ஏசுவதாக நான் கேள்விப்பட்டேன். அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நான் இன்று அவனைப் பார்த்தால் நான் அல்லது அவன் மரணிக்கும் வரை அவனை விட்டும் பிரியமாட்டேன்'' என்றார். இப்பேச்சு எனக்கு ஆச்சரியத்தை உண்டாக்கியது. இதற்கிடையில் மற்றவரும் இவ்வாறே, என்னைச் சீண்டி முந்தியவர் கூறியதைப் போன்றே கூறினார். அது சமயம் அபூஜஹ்ல் மக்களுக்கு மத்தியில் உலாவுவதைப் பார்த்தேன். அவ்விரு வாலிபர்களிடம் ‘‘நீங்கள் கேட்டவன் இதோ இவன் தான்!'' என்றேன்.. இருவரும் அவனை நோக்கிப் பாய்ந்தனர். சிறிது நேரத்தில் அவன் கதையை முடித்து நபி (ஸல்) அவர்களிடம் திரும்பினர். ‘‘உங்கள் இருவரில் யார் அவனைக் கொன்றது?'' என்று நபி (ஸல்) கேட்க ஒவ்வொருவரும் ‘‘நானே கொன்றேன்'' என்றார். ‘‘உங்கள் வாட்களை துடைத்து விட்டீர்களா?'' என்று நபி (ஸல்) கேட்க இல்லை! எனக் கூறி தங்கள் வாட்களை காண்பிக்கவே ‘‘நீங்கள் இருவருமே அவனைக் கொன்றீர்கள்'' என்று நபி (ஸல்) கூறினார்கள். பிறகு அபூஜஹ்லின் உடைமைகளை அவர்களில் ஒருவரான முஆத் இப்னு அம்ரு இப்னு ஜமூஹ்விற்கு வழங்கினார்கள். அபூஜஹ்லைக் கொன்ற இரண்டாமவர் முஅவ்விது இப்னு அஃப்ரா (ரழி) ஆவார். அவர் இப்போரில் வீரமரணம் எய்தினார். (ஸஹீஹுல் புகாரி)
முஆது இப்னு அம்ர் இப்னு அல் ஜமூஹ் (ரழி) கூறுகிறார்கள்: ‘‘அபூஜஹ்ல் அடர்ந்த மரங்களுக்கு நடுவிலுள்ள ஒரு மரத்தைப் போல் அவனை சென்றடைய முடியாத அளவிற்கு பாதுகாப்பில் இருக்கிறான். அவனிடம் யாரும் செல்ல முடியாது'' என்று மக்கள் கூறுவதை நான் கேட்டேன். எனவே, நானே அவனைக் கொலை செய்ய வேண்டுமென்று முடிவு செய்தேன். நான் அவனைப் பார்த்துவிட்டபோது ஓடிச்சென்று அவனது கரண்டைக் கால்களைத் துண்டித்தேன். திருகையிலிருந்து அரைபடாத கொட்டை நசுங்கினால் பறக்குமே,,, அது போன்று அவனது கால்கள் பறந்து விழுந்தன. இதைப் பார்த்த அவனது மகன் இக்மா எனது தோள் மீது பாய்ந்து வெட்டினார். அதனால் எனது கை வெட்டப்பட்டு உடம்பில் தோலுடன் தொங்கிக் கொண்டிருந்தது. அன்றைய தினம் முழுக்க அதை என் முதுகுக்குப் பின்னால் போட்டுக் கொண்டு போர் செய்தேன். அது எனக்கு மிகவும் நோவினை அளித்த போது அதை என் பாதத்தின் கீழ் வைத்து பிய்த்துத் தூக்கி எறிந்து விட்டேன். பின்பு காயப்பட்டுக் கிடந்த அபூஜஹ்லுக்கு அருகில் சென்ற முஅவ்விது இப்னு அஃப்ரா (ரழி) அவனை வெட்டிச் சாய்த்தார். ஆனால், அபூஜஹ்ல் குற்றுயிராகக் கிடந்தான். இப்போரில் முஅவ்விது (ரழி) இறுதியில் வீரமரணம் எய்தினார்கள்.
போர் முடிந்த போது நபி (ஸல்) ‘‘அபூஜஹ்லுக்கு என்னவானது என யார் பார்த்து வருவீர்கள்?'' என்று கேட்டார்கள். அப்போது அவனைத் தேடிப் பார்ப்பதற்குத் தோழர்கள் பல திசைகளிலும் பிரிந்து சென்றார்கள். அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் (ரழி) அபூஜஹ்லைப் பார்த்து விட்டார்கள். அவன் தனது இறுதி மூச்சை வாங்கிக் கொண்டிருந்தான். இப்னு மஸ்ஊது (ரழி) தனது காலை அவனது கழுத்தின் மீது வைத்து அவன் தலையைத் தனியாக அறுத்தெடுப்பதற்காக அவன் தாடியைப் பிடித்து ‘‘அல்லாஹ்வின் எதியே! அல்லாஹ் உன்னைக் கேவலப்படுத்தி விட்டானா?'' என்று கேட்டார்கள். அதற்கவன் ‘‘என்னை அல்லாஹ் எப்படி கேவலப்படுத்துவான்? நீங்கள் கொன்றிருக்கும் மனிதர்களில் என்னை விட உயர்ந்தவர் யார் இருக்க முடியும்? அல்லது நீங்கள் கொன்றிருக்கும் மனிதர்களில் என்னை விட மேலானவர் யார் இருக்க முடியும்?'' என்று கேட்டுவிட்டு, ‘‘கேவலம்! சாதாரண விவசாயிகளைத் தவிர்த்து வேறு யாராவது (என் இனத்தவர்) என்னை கொன்றிருக்க வேண்டுமே என்று கூறி, சரி இன்றைய தினத்தில் வெற்றி யாருக்கு என்று சொல்?'' என்றான். அதற்கு இப்னு மஸ்ஊது (ரழி) ‘‘அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும்தான் கிடைத்தது'' என்று கூறினார்கள். பின்பு அவனது கழுத்தின் மீது காலை வைத்திருந்த இப்னு மஸ்ஊதிடம் ‘‘ஏ... ஆடு மேய்த்த பொடியனே!" நீ மிகுந்த சிரமமான ஓர் இடத்தின் மேல் நிற்கிறாய் என்பதைத் தெரிந்துகொள்'' என்று கூறினான்.
இதற்குப் பிறகு இப்னு மஸ்ஊது (ரழி) அவர்கள் அபூஜஹ்லின் தலையைத் தனியாக வெட்டியெடுத்து நபி (ஸல்) அவர்களிடம் சென்று ‘‘அல்லாஹ்வின் தூதரே! இதோ அல்லாஹ்வின் எதிரி அபூஜஹ்லின் தலை!'' என்று கூறினார்கள். நபி (ஸல்) ‘‘அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை'' என்று மூன்று முறை கூறிவிட்டு ‘‘அல்லாஹ் மிகப் பெரியவன்! எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே! அவன் தனது வாக்கை உண்மைப்படுத்தினான். தனது அடியாருக்கு உதவி செய்தான். எதிரி படைகள் அனைத்தையும் தோற்கடித்தான்'' என்று கூறி, என்னை அழைத்துச் சென்று அவனை எனக்குக் காட்டு என்றார்கள். அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊது (ரழி) கூறுகிறார்கள்: நாங்கள் அவன் இருந்த இடத்திற்குச் சென்றோம். அவனைக் கண்ட நபி (ஸல்) ‘‘இவன்தான் இந்த சமுதாயத்தின் ஃபிர்அவ்ன்''" என்றார்கள்.

இறைநம்பிக்கை நிகழ்த்திய அதிசயங்கள்

உமைர் இப்னு ஹுமாம் (ரழி) மற்றும் அவ்ஃப் இப்னு ஹாரிஸ் (ரழி) ஆகிய இருவரின் அற்புதமான முன் உதாரணங்களை இதற்கு முன் கூறினோம். அதுமட்டுமல்லாமல், மேலும் பல அதிசயமான நிகழ்ச்சிகள் இப்போரில் நடந்தன. கொள்கையில் அவர்களுக்கிருந்த உறுதியையும் நிலைத்தன்மையையும் அந்நிகழ்ச்சிகள் நமக்கு சுட்டிக் காட்டுகின்றன.
இப்போரில் தந்தை பிள்ளைக்கு எதிராகவும், பிள்ளை தந்தைக்கு எதிராகவும், சகோதரர்கள் சகோதரர்களுக்கு எதிராகவும் போட்டனர். இவர்களுக்கு மத்தியில் கொள்கையில் ஏற்பட்ட மாற்றங்களுக்கு வாட்கள் தீர்ப்பளித்தன. மக்காவில் அடக்குமுறைக்கு ஆளாக்கப்பட்டவர்கள் தம்மைக் கொடுமைப்படுத்தியவர்களைக் கொன்று தங்களுடைய சினத்தை ஆற்றிக் கொண்டனர்.
1) இப்னு அப்பாஸ் (ரழி) கூறுகிறார்கள்: நபி (ஸல்) தங்களது தோழர்களிடம் ‘‘ஹாஷிம் கிளையைச் சேர்ந்த சிலரையும் மற்றும் சிலரையும் நான் அறிவேன். அவர்கள் நிர்பந்தமாக போருக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். நம்மிடம் சண்டை செய்ய வேண்டுமென்று அவர்களுக்கு எவ்வித விருப்பமும் இல்லை. எனவே, ஹாஷிம் கிளையைச் சேர்ந்த எவரையும் நீங்கள் கொன்றுவிட வேண்டாம். மேலும், அபுல் பக்த இப்னு ஷாமையும் கொன்றுவிட வேண்டாம். அப்பாஸ் இப்னு அப்துல் முத்தலிபையும் கொன்றுவிட வேண்டாம். அவர் நிர்ப்பந்தமாகத்தான் அழைத்து வரப்பட்டிருக்கிறார்'' என்று கூறினார்கள். நபி (ஸல்) அவர்களின் இவ்வார்த்தையைக் கேள்விப்பட்ட உத்பாவின் மகன் அபூஹுதைஃபா ‘‘என்ன! எங்களது பெற்றோர், பிள்ளைகள், சகோதரர்கள், உறவினர்கள் அனைவரையும் கொன்றுவிட்டு அப்பாஸை மட்டும் விட்டுவிட வேண்டுமா? அல்லாஹ்வின் மீது ஆணையாக! நான் அவரைச் சந்தித்தால் வாளால் அவருக்கும் கடிவாளமிடுவேன்'' என்றார். இவ்வார்த்தையை நபி (ஸல்) கேள்விப்பட்டபோது உமரிடம் ‘‘அபூஹப்ஸே! அல்லாஹ்வின் தூதருடைய சிறிய தந்தையின் முகத்தை வாளால் வெட்டுவது நியாயமாகுமா?'' என்று வருத்தப்பட்டார்கள். உமர் (ரழி) ‘‘அல்லாஹ்வின் தூதரே! என்னை அனுமதியுங்கள். அபூ ஹுதைஃபாவின் கழுத்தை வாளால் வெட்டி வீசிகிறேன். அல்லாஹ்வின் மீது ஆணையாக! அவர் நயவஞ்சகராகி விட்டார்'' என்றார்கள்.
தான் கூறிய சொல்லை நினைத்து அபூஹுதைஃபா எப்போதும் கவலைப்படுவார். ‘‘இந்த வார்த்தையைக் கூறிய அன்றிலிருந்து நான் நிம்மதியாக இல்லை. இந்த வார்த்தையின் விளைவை எண்ணி பயந்துகொண்டே இருக்கிறேன், அல்லாஹ்வே இறைவன் என்று நான் சாட்சியம் கூறுவதுதான் அந்தக் குற்றம் மன்னிக்கப்படுவதற்கு காரணமாக ஆகலாம்'' என்று அபூஹுதைஃபா (ரழி) ஆதரவு வைப்பார்.
அபூஹுதைஃபா (ரழி) அபூபக்ர் (ரழி) அவர்களின் ஆட்சியின் போது யமாமாவில் நடந்த போரில் வீரமரணம் எய்தினார்.
2) மேலும் நபி (ஸல்), அபுல் பக்தயைக் கொலை செய்யக் கூடாதென்று தடுத்திருந்தார்கள். ஏனெனில், அவர் மக்காவில் நபி (ஸல்) அவர்களுக்கு பாதுகாப்பளித்தவர் அவர் நபி (ஸல்) அவர்களுக்கு நோவினை அளித்ததில்லை நபி (ஸல்) வெறுக்கும்படியான எந்தவொரு காரியத்தையும் அவர் செய்ததில்லை. மேலும் ஹாஷிம், முத்தலிப் கிளையினரை ஒதுக்கி வைக்க வேண்டுமென்று எழுதப்பட்ட ஒப்பந்தப் பத்திரத்தை கிழிப்பதற்கு இவரும் ஒரு காரணமாக இருந்தார்.
இவ்வாறிருந்தும் அபுல் பக்த போரில் கொல்லப்பட்டார். அதற்குக் காரணம், முஜத்தர் இப்னு ஜியாது (ரழி) என்ற நபித்தோழர் அபுல் பக்தயையும் அவன் நண்பரையும் போல் சந்தித்தார். இவ்விருவரும் ஒன்றாக சேர்ந்து முஸ்லிம்களுடன் போர் செய்து கொண்டிருந்தனர். அப்போது முஜத்தர் ‘‘அபுல் பக்தயே! உன்னைக் கொல்லக் கூடாதென அல்லாஹ்வின் தூதர் தடுத்திருக்கிறார்கள், எனவே, நீங்கள் விலகிவிடுங்கள்'' என்றார். அதற்கு ‘‘எனது தோழரையும் கொல்லக் கூடாதென்று அவர் கூறியிருக்கிறாரா?'' என்றார். அதற்கு முஜத்தர் ‘‘இல்லை. உன் நண்பரைக் கொல்லாமல் நாங்கள் விடமாட்டோம்'' என்றார். ‘‘அல்லாஹ்வின் மீது ஆணையாக! நாங்கள் ஒன்றாகவே சாவோம்'' என்று அபுல் பக்த கூறினார். பின்பு முஜத்தருடன் அவர் சண்டையிடவே முஜத்தர் அவரைக் கொல்ல வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு ஆளானார்.
3) அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப் (ரழி) கூறுகிறார்கள்: நானும் உமையா இப்னு கலஃபும் மக்காவில் இஸ்லாம் வருவதற்கு முன்பே நண்பர்களாக இருதோம். பத்ர் போர் அன்று போரில் எனக்குக் கிடைத்த கவச ஆடைகளுடன் உமையாவுக்கு அருகே சென்று கொண்டிருந்தேன். அப்போது உமையா தனது மகன் அலீ இப்னு உமையாவின் கையை பிடித்தவனாக சரணடைவதற்காக நின்று கொண்டிருந்தான். என்னைப் பார்த்த உமையா ‘‘என்னை நீ கைதியாக்கிக் கொள்ள வேண்டாமா? உன்னிடமுள்ள இந்த கவச ஆடைகளைவிட நான் சிறந்தவனல்லவா? இன்றைய தினத்தைப் போல் ஒரு நாளை நான் பார்த்ததில்லை. உங்களுக்கு பால் கொடுக்கும் ஒட்டகங்கள் வேண்டாமா? என்னை யாராவது சிறைப் பிடித்தால் நிறைய பால் கொடுக்கும் ஒட்டகங்களை பிணையாக நான் தருவேன்'' என்று கூறினான். இந்த வார்த்தையைக் கேட்டவுடன் உருக்குச் சட்டைகளைக் கீழே போட்டுவிட்டு அவ்விருவரையும் இரு கைகளில் பிடித்துக் கொண்டேன். அப்போது உமையா, ‘‘தீக்கோழியின் இறகை தன் நெஞ்சில் சொருகியிருக்கும் அந்த மனிதர் யார்?'' என்று கேட்டான். ‘‘அவர்தான் ஹம்ஜா'' என்றேன். அதைக் கேட்ட உமய்யா ‘‘அவர்தான் எங்களுக்கு இப்போரில் நிறைய அழிவுகளை ஏற்படுத்தியவர்'' என்றான்.
அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப் (ரழி) தொடர்ந்து கூறுகிறார்கள்: நான் உமையாவையும் அவனது மகனையும் இழுத்துச் சென்ற போது உமையா என்னுடன் இருப்பதை பிலால் (ரழி) பார்த்து விட்டார். (இந்த உமையாதான் மக்காவில் பிலால் (ரழி) அவர்களுக்கு அதிகம் வேதனை தந்தவன்.) அவனைப் பார்த்த பிலால் (ரழி) ‘‘இதோ... இறைநிராகரிப்பாளர்களின் தலைவன் உமையா! இவன் இன்று தப்பித்தால் என்னால் இனி தப்பிக்க முடியாது'' என்று சப்தமிட்டார். அதற்கு நான் ‘‘பிலாலே சும்மா இரும். இவன் இப்போது எனது கைதி'' என்று கூறினேன். மீண்டும் பிலால் (ரழி) ‘‘இவன் தப்பித்தால் நான் தப்பிக்க முடியாது'' என்று அலறினார். அதற்கு நான் ‘‘ஓ கருப்பியின் மகனே! நான் சொல்வது உனக்குக் கேட்கவில்லையா?'' என்றேன். அதற்கு மீண்டும் பிலால் (ரழி) ‘‘இவன் தப்பித்தால் நான் இனி தப்பிக்கவே முடியாது'' என்று கூறிவிட்டு, மிக உயர்ந்த சப்தத்தில் ‘‘அல்லாஹ்வின் உதவியாளர்களே! இதோ இறைநிராகரிப்பாளர்களின் தலைவன் உமையா இப்னு கலஃப்! இவன் தப்பித்தால் என்னால் தப்பிக்க முடியாது'' என்று கூறினார். முஸ்லிம்கள் இதைக் கேட்டவுடன் வளையத்தைப் போன்று எங்களைச் சூழ்ந்துகொண்டனர். நான் உமையாவைக் காப்பாற்ற முயன்றேன். அப்போது ஒருவர் உமையாவின் மகனை பின்புறத்திலிருந்து வெட்டவே அவன் தரையில் விழுந்தான். இதைப் பார்த்த உமையா உரத்த குரலில் கத்தினான். அதுபோன்ற சப்தத்தை நான் கேட்டதே இல்லை. உடனே நான் ‘‘உமையாவே உன்னை நீயே காப்பாற்றிக்கொள்! இன்று என்னால் உன்னைக் காப்பாற்ற முடியாது. உனக்கு எந்தப் பாதுகாப்பும் கொடுக்க முடியாது. உனக்கு எந்தப் பலனையும் என்னால் செய்ய முடியாது'' என்றேன். அதற்குப் பின் முஸ்லிம்கள் அவ்விருவரையும் தங்கள் வாட்களால் வெட்டி அவர்கள் கதையை முடித்தனர். இதற்குப் பின் அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப் (ரழி) ‘‘அல்லாஹ் பிலாலின் மீது கருணை காட்டட்டும்! போரில் எனக்குக் கிடைத்த கவச ஆடைகளும் போயின் அவர் எனது கைதிகளையும் கொன்றார்'' என்று கூறுவார்கள். (ஸஹீஹுல் புகாரி)
4) இப்போரில் உமர் இப்னு கத்தாப் (ரழி) தனது நெருங்கிய உறவினர் என்றும் பார்க்காமல் தனது தாய்மாமன் ‘ஆஸ் இப்னு ஹிஷாம் இப்னு முகீரா'வைக் கொன்றார்கள். போர் முடிந்து மதீனாவிற்குத் திரும்பிக் கொண்டிருக்கும் வழியில் கைதிகளில் ஒருவராக இருந்த அப்பாஸிடம் ‘‘அப்பாஸே! நீங்கள் இஸ்லாமை ஏற்றுக்கொள்ளுங்கள். அல்லாஹ்வின் மீது ஆணையாக! எனது தந்தை கத்தாப் முஸ்லிமாகுதைவிட நீங்கள் முஸ்லிமாவதுதான் எனக்கு விருப்பமானது. அதற்குக் காரணம் நீங்கள் முஸ்லிமாவது நபி (ஸல்) அவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியாகும்'' என்று கூறினார்கள்.
5) அபூபக்ர் (ரழி), இணைவைப்போருடன் வந்திருந்த தமது மகன் அப்துர்ரஹ்மானைக் கூவி அழைத்தார்கள். ‘‘ஏ... கெட்டவனே! எனது செல்வங்கள் எங்கே?'' என்றார்கள். அதற்கு அப்துர் ரஹ்மான்,
ஆயுதமும் வேகமாக ஓடும் குதிரையும்...
வழிகெட்ட வயோதிகர்களைக் கொல்லும் வாளும்...
இவற்றைத் தவிர வேறொன்றும் என்னிடம் இல்லை என பதிலளித்தார்.
6) நபி (ஸல்) தங்களது கூடாரத்திலிருந்து நிலைமைகளைக் கவனித்தார்கள். முஸ்லிம்கள் எதிரிகளைக் கைது செய்வதில் ஈடுபட்டிருந்தார்கள். நபி (ஸல்) அவர்களுக்கு வாசலில் வாளேந்தி காவல் புரிந்த ஸஅது இப்னு முஆது (ரழி) முஸ்லிம்களின் இச்செயலைப் பார்த்து வெறுப்படைந்தார். ஸஅதின் முகத்தில் வெறுப்பைப் கண்ட நபி (ஸல்) ‘‘ஸஅதே! இம்மக்கள் செய்வதை நீர் வெறுக்கிறீர் போலும்'' என்றார்கள். அதற்கு ஸஅது (ரழி) ‘‘ஆம்! அல்லாஹ்வின் தூதரே! இது அல்லாஹ் இணைவைப்பவர்களுக்குக் கொடுத்த முதல் சேதமாகும். எனவே, அவர்களிலுள்ள ஆண்களை உயிரோடு விடுவதைவிட அதிகமாக அவர்களைக் கொன்று குவிப்பதே எனக்கு மிக விருப்பமானது'' என்றார்.
7) இப்போரில் உக்காஷா இப்னு மிஹ்ஸன் அல்அஸதி (ரழி) அவர்களின் வாள் ஒடிந்து விடவே, அவருக்கு நபி (ஸல்) மரக்கிளை ஒன்றைக் கொடுத்து ‘‘உக்காஷாவே! இதன் மூலம் நீர் போரிடுவீராக'' என்றார்கள். உக்காஷா நபி (ஸல்) அவர்களிடமிருந்து தனது கையில் வாளை வாங்கியவுடன் அந்த மரக்கிளை உறுதிமிக்க நீண்ட ஒரு வாளாக மாறியது. அல்லாஹ் முஸ்லிம்களுக்கு வெற்றி கொடுக்கும் வரை அவ்வாளால் உக்காஷா போட்டார். அவ்வாளுக்கு ‘அல்அவ்ன்' (உதவி) என்று பெயர் கூறப்பட்டது. இந்த வாளை மற்றும் பல போர்களில் உக்காஷா (ரழி) பயன்படுத்தினார்கள். இறுதியாக அபூபக்ர் (ரழி) அவர்களுடைய ஆட்சிக் காலத்தில் முஸைலமாவுடன் நடந்த போரில் உக்காஷா வீரமரணம் எய்தினார்கள்.
8) போர் முடிந்ததற்குப் பின்பு முஸ்அப் இப்னு உமைர் (ரழி) தனது சகோதரர் அபூஅஜீஸ் இப்னு உமைரைப் பார்த்தார்கள். இவர் முஸ்லிம்களுக்கு எதிராகப் போர்க்களத்தில் கலந்திருந்தார். மதீனாவாசிகளில் ஒருவர் அவரது இரு கைகளையும் கட்டிக் கொண்டிருந்தார். அதைப் பார்த்த முஸ்அப் அவரிடம் ‘‘நீங்கள் அவரை நன்றாகப் பிடித்துக்கொள்ளுங்கள். இவரது தாய் மிகுந்த செல்வமுடையவர். உங்களிடமிருந்து இவரை அதிக கிரயம் கொடுத்து விடுவிப்பார்'' என்றார்கள். இதைக் கேட்ட அவரது சகோதரர் ‘‘எனது சகோதரனே! இதுதான் நீ எனக்காக செய்யும் பரிந்துரையா?'' என்றார். அதற்கு முஸ்அப் ‘‘இவர்தான் எனது சகோதரர் நீ அல்ல!'' என்றார்கள்.
9) இணைவைப்பவர்களின் பிணங்கள் கிணற்றில் போடப்பட்டன. உத்பா இப்னு ரபீஆவின் பிணத்தைக் கிணற்றில் போடுவதற்காக இழுத்து வரும்போது, அதைப் பார்த்த அவனது மகனார் அபூஹுதைஃபா (ரழி) மிகுந்த கவலையடைந்தார். அதனால் அவரது முகமே மாறியது. அதை கவனித்த நபி (ஸல்), ‘‘உமது தகப்பனுக்காக நீ கவலைக் கொள்கிறாயா?'' என்று கேட்டார்கள். அதற்கவர் ‘‘அல்லாஹ்வின் மீது சத்தியமாக! அப்படி இல்லை. அல்லாஹ்வின் தூதரே! எனது தகப்பனின் விஷயத்திலும் அவர் கொலை செய்யப்பட்டதிலும் எனக்கு எந்தக் கவலையும் இல்லை. ஆனால், எனது தந்தை நல்ல அறிவும், புத்தியும், சிறப்பும் உடையவர். அவருக்கு இஸ்லாமின் நேர்வழி கிடைத்துவிடும் என்று ஆதரவு வைத்திருந்தேன். ஆனால், அப்படி கிடைக்கவில்லை. எனது இந்த ஆதரவுக்குப் பின் அவர் நிராகரிப்பில் மரணித்ததை நினைத்தே நான் கவலை அடைந்தேன்'' என்றார். நபி (ஸல்) அபூ ஹுதைஃபவை உயர்வாக பேசி, அவருக்காக பிரார்த்தனையும் செய்தார்கள்.

இருதரப்பிலும் கொல்லப்பட்டவர்கள்

இப்போர் இறைநிராகரிப்பாளர்களுக்கு பெரிய தோல்வியாகவும் இறைநம்பிக்கையாளர்களுக்கு பெரிய வெற்றியாகவும் முடிந்தது. இப்போரில் முஸ்லிம்களில் முஹாஜிர்கள் (மக்காவாசிகள்) ஆறு நபர்களும், அன்சாரிகள் (மதீனாவாசிகள்) எட்டு நபர்களுமாக மொத்தம் பதினான்கு நபர்கள் வீரமரணம் எய்தினர்.
இணைவைப்பவர்களுக்கு மிகப்பெரிய சேதங்கள் ஏற்பட்டன. அவர்களில் எழுபது நபர்கள் கொல்லப்பட்டனர். எழுபது நபர்கள் சிறைபிடிக்கப்பட்டனர். கொல்லப்பட்டவர்களில் பெரும் பாலானவர்கள் மூத்த தலைவர்களாகவும் தளபதிகளாவும் இருந்தனர்.
போர் முடிந்து புறப்படும் முன் எதிரிகளில் கொல்லப்பட்டவர்களுக்கு அருகில் நின்று ‘‘நீங்கள் உங்களது இறைத்தூதருக்கு மிகக் கெட்ட உறவினராக இருந்தீர்கள். நீங்கள் என்னைப் பொய்ப்பித்தீர்கள் மற்றவர்கள் என்னை மெய்ப்படுத்தினார்கள். நீங்கள் எனக்கு துரோகம் செய்தீர்கள் மற்றவர்கள் எனக்கு உதவி செய்தார்கள். நீங்கள் என்னை ஊரைவிட்டு வெளியேற்றினீர்கள் மற்றவர்கள் எனக்கு அடைக்கலம் கொடுத்தார்கள்'' என்று நபி (ஸல்) கூறினார்கள். பின்பு நபி (ஸல்) அவர்களின் கட்டளைக்கிணங்க அவர்கள் அனைவரும் பத்ரின் கிணறுகளில் ஒரு கிணற்றில் போடப்பட்டனர்.
அபூதல்ஹா (ரழி) கூறுகிறார்கள்: பத்ர் போரன்று நபி (ஸல்) 24 குறைஷித் தலைவர்களின் சடலங்களை நாற்றம் பிடித்த கிணற்றில் வீசி எறியும்படி கட்டளையிட்டார்கள். நபி (ஸல்) போரில் வெற்றி பெற்றால் அந்த இடத்தில் மூன்று நாட்கள் தங்குவார்கள். அவ்வாறே பத்ர் போர் முடிந்தப் பின் அவ்விடத்தில் மூன்று நாட்கள் தங்கினார்கள். மூன்றாவது நாள் தனது வாகனத்தை தயார் செய்யக் கூறினார்கள். தனது தோழர்களுடன் எதிரிகளின் சடலங்கள் போடப்பட்ட கிணற்றுக்கு அருகில் நின்று அவர்களை அவர்களது தகப்பனாருடைய பெயருடன் அழைத்து ‘‘இன்னாரின் மகன் இன்னாரே! இன்னாரின் மகன் இன்னாரே! முன்பே அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் கட்டுப்பட்டிருந்தால் இப்போது நீங்கள் மகிழ்ச்சியாக இருந்திருக்கலாமே! நிச்சயமாக எங்களது இறைவன் எங்களுக்கு வாக்களித்ததை நாங்கள் உண்மையாக பெற்றோம். உங்களது இறைவன் உங்களுக்கு வாக்களித்ததை உண்மையாக நீங்கள் பெற்றீர்களா?'' என்றார்கள். அப்போது உமர் (ரழி) ‘‘அல்லாஹ்வின் தூதரே! உயிரற்ற சடலங்களிடம் என்ன பேசுகிறீர்கள்!'' என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) ‘‘முஹம்மதின் உயிர் எவன் கைவசம் இருக்கிறதோ! அவன் மீது ஆணையாக! நான் கூறுவதை அவர்களைவிட நீங்கள் அதிகம் கேட்கும் திறன் உள்ளவர்களாக இல்லை'' என்றார்கள்.
மற்றொரு அறிவிப்பில்: ‘‘அவர்களைவிட நீங்கள் கேட்கும் திறன் அதிகமுடையவர்களாக இல்லை. ஆனால் அவர்களால் பதில் தர முடியாது'' என வந்துள்ளது. (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)
தோல்வியை மக்கா அறிகிறது
பத்ர் மைதானத்திலிருந்து இணைவைப்பவர்கள் விரண்டோடினர் பள்ளத்தாக்குகளிலும் மலைக்கணவாய்களிலும் சிதறினர் மக்காவின் பாதையைப் பயத்துடனே முன்னோக்கினர் வெட்கத்தால் மக்காவிற்குள் நுழைவதற்கே யோசித்தனர்.
இப்னு இஸ்ஹாக் (ரஹ்) கூறுகிறார்: குறைஷிகளுக்கு ஏற்பட்ட நிலையை முதன் முதலில் மக்காவாசிகளுக்குச் சொல்லியவர் ஹைசுமான் இப்னு அப்துல்லாஹ் குஜாம் என்பவர்தான். இவரிடம் மக்காவாசிகள் ‘‘என்ன செய்தியுடன் வந்திருக்கிறாய்?'' என்றனர். அதற்கவர் ‘‘உத்பா இப்னு ரபீஆ, ஷைபா இப்னு ரபீஆ, அபுல்கம் இப்னு ஹிஷாம், உமையா இப்னு கலஃப் இன்னும் பல குறைஷித் தலைவர்களும் கொல்லப்பட்டனர்'' என்று பல குறைஷித் தலைவர்களின் பெயர்களை வரிசையாக குறிப்பிட்டார். கஅபாவில் ஹஜருல் அஸ்வதுக்கு அருகில் அமர்ந்திருந்த ஸஃப்வான் இப்னு உமையா ‘‘அல்லாஹ்வின் மீது ஆணையாக! இவனுக்கு புத்தி சரியில்லை. இவனைச் சோதித்துப் பார்ப்போம், இவனிடம் நான் இப்போது எங்கே இருக்கிறேன் என்று கேளுங்கள்! சரியாகக் கூறுகிறானா என பார்ப்போம்'' என்றார். அதேபோல் மக்கள் ‘‘ஸஃப்வான் இப்னு உமைய்யா எங்கே இருக்கிறார்'' என்று ஹைசுமானிடம் வினவினர். அதற்கவர் ‘‘இதோ! ஸஃப்வான் ஹஜருல் அஸ்வதிற்கு அருகில் அமர்ந்திருக்கிறார். அல்லாஹ்வின் மீது ஆணையாக! இவரது தந்தையும், இவரது சகோதரரும் கொல்லப்படுவதை நான் பார்த்தேன்'' என்றார்.
நபி (ஸல்) அவர்களின் அடிமை அபூராபிஃ (ரழி) கூறுகிறார்கள்: நான் ஆரம்பத்தில் அப்பாஸ் (ரழி) அவர்களின் அடிமையாக இருந்தேன். அப்பாஸ் (ரழி) அவர்கள் வீட்டில் அனைவரும் இஸ்லாமை ஏற்றிருந்தனர். அதாவது அப்பாஸ் (ரழி), உம்முல் ஃபழ்ல் (ரழி) மற்றும் நான் ஆக அனைவரும் இஸ்லாமை ஏற்றிருந்தோம். ஆனால், அப்பாஸ் (ரழி) தான் முஸ்லிமானதை மறைத்திருந்தார். அபூலஹப் பத்ரில் கலந்துகொள்ளாமல் மக்காவில் தங்கியிருந்தான். பத்ருடைய செய்தியினால் அல்லாஹ் அவனது அகம்பாவத்தை அழித்து அவனை அவமானப்படுத்தினான். அச்செய்தியினால் எங்கள் உள்ளத்தில் துணிவும் வலிமையும் பிறந்தது. ஆனால், நானோ ஒரு பலவீனமானவன். ஜம்ஜம் கிணற்றுக்கு அருகிலுள்ள அறையில் அமர்ந்து அம்புகள் செய்வது எனது தொழிலாக இருந்தது. ஒரு நாள் நான் அம்புகள் செய்வதில் ஈடுபட்டிருந்தேன். உம்முல் ஃபழ்லு எனக்கருகில் அமர்ந்திருந்தார். பத்லிருந்து வந்த செய்தியால் நாங்கள் மகிழ்ச்சி அடைந்திருந்தோம். அதுசமயம் அபூலஹப் தனது கால்களை மிக மோசமாக பூமியில் தேய்த்தவனாக வந்து எங்களது அறையின் ஓரத்தில் அமர்ந்தான். அவனது முதுகு எனது முதுகைப் பார்த்தவாறு இருந்தது.
அப்போது ‘‘இதோ! அபூஸுஃப்யான் இப்னு ஹாரிஸ் இப்னு அப்துல் முத்தலிப் வருகிறார்'' என்று மக்கள் கூறினர். அபூலஹப் அபூஸுஃப்யானிடம் ‘‘எனக்கருகில் வா! உன்னிடம் உண்மையான செய்திகள் இருக்கலாம்'' என்று கூறினான். அபூஸுஃப்யான் இப்னு ஹாரிஸ் அபூலஹபுக்கு அருகில் வந்து அமர்ந்தார். மக்கள் அவரை சுற்றி நின்றுகொண்டனர். அபூஸுஃப்யானிடம் அபூலஹப் ‘‘எனது சகோதரன் மகனே! மக்களின் செய்தி என்னவானது?'' என்றான். அதற்கு அபூஸுஃப்யான் ‘‘முஸ்லிம்களை நாங்கள் சந்தித்த போது அவர்களுக்கு எங்களது புஜங்களைத் தந்தோம். முஸ்லிம்கள் நாடியவாறு எங்களைக் கொன்றனர் நாடியவாறு சிறைபிடித்தனர். அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நமது மக்கள் இந்தளவு பலம் இழந்ததற்கு நான் அவர்களைக் குறை கூறவில்லை. வானத்திற்கும், பூமிக்கும் மத்தியில் சிறந்த குதிரைகளின் மீது வீற்றிருந்த வெள்ளை நிறத்தில் பலரை நாங்கள் பார்த்தோம். அவர்கள் எதையும் விட்டு வைக்கவில்லை. எங்களால் அவர்களை எதிர்க்கவும் முடியவில்லை'' என்று கூறினார்.
அபூராஃபிஃ (ரழி) தொடர்ந்து கூறுகிறார்: நான் அறையின் ஓரத்தை விலக்கி, ‘‘அல்லாஹ்வின் மீது சத்தியமாக! அவர்கள் வானவர்கள்'' என்றேன். இதைக் கேட்ட அபூலஹப், தன் கையை உயர்த்தி எனது கன்னத்தில் கடுமையாக அறைந்தான். நானும் அவன் மீது பாய்ந்தேன், அவனை எதிர்த்தேன். அவன் என்னை தூக்கி பூமியில் வீசினான். பின்பு என் மீது அமர்ந்து என்னை அடித்தான். என்னால் ஒன்றும் செய்ய முடியாத வகையில் நான் வலுவிழந்தவனாக இருந்தேன். எனது நிலையைப் பார்த்த உம்முல் ஃபழ்ல் கூடாரத்தின் ஒரு தடியை உருவி பயங்கரமாக அவனது தலையில் அடித்தார். தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. ‘‘ஏண்டா! இவரது எஜமானன் இல்லாததால் இவரை ஆதரவற்றவர் என்று நீ கருதிவிட்டாயா?'' என்று கேட்டார். அதற்குப் பிறகு அங்கிருந்து கேவலப்பட்டு அபூலஹப் எழுந்து சென்றான். இந்நிகழ்ச்சிக்குப் பின் ஏழு நாட்கள் கழித்து அல்லாஹ் அவனது உடலில் அம்மையைப் போன்ற ஒரு நோயை ஏற்படுத்தினான். அந்நோய் அவனைக் கொன்றது. அதாவது, இந்நோயை அரபியர்கள் மிக துர்க்குறியாக கருதியதால் அவனது பிள்ளைகள் யாரும் அவனுக்கருகில் நெருங்கவில்லை. அவன் செத்த பிறகும் அவனைப் புதைப்பதற்கு எந்த முயற்சியும் செய்யவில்லை. மக்கள் தங்களை பழிப்பார்கள் என்று பயந்தவுடன் ஒரு பெரும் குழியைத் தோண்டி, ஒரு குச்சியால் அவனை அக்குழியில் தள்ளினர். பின்பு தூரத்தில் இருந்து கற்களை எறிந்து அக்குழியை மூடினர்.
இவ்வாறுதான் பத்ர் மைதானத்தில் ஏற்பட்ட மாபெரும் தோல்வியின் செய்திகளை மக்கா பெற்றது. இச்செய்தி அவர்களுக்கு மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தியது. முஸ்லிம்கள் ஆனந்தமடையக் கூடாது என்பதற்காக கொல்லப்பட்டவர்கள் மீது ஒப்பாரி வைப்பதையும் மக்காவாசிகள் தடை செய்தனர்.
நகைச்சுவை செய்தி ஒன்றைப் பார்ப்போம்: அஸ்வத் இப்னு முத்தலிபின் மூன்று ஆண் பிள்ளைகளும் பத்ர் போரில் கொல்லப்பட்டனர். எனவே, அவர்களுக்காக அழ வேண்டுமென்று அவர் அதிகம் ஆர்வம் கொண்டிருந்தார். அவருக்கு கண் தெரியாது. ஒரு நாள் ஒப்பாரி வைக்கும் ஒரு பெண்ணின் சப்தத்தைக் கேட்ட அவர் தனது அடிமையை அனுப்பி ‘‘என்ன! ஒப்பாயிடுவதற்கு அனுமதி கிடைத்து விட்டதா? போரில் கொல்லப்பட்டவர்களுக்காக குறைஷிகள் அழுகிறார்களா? என்று பார்த்து வாரும். நான் எனது மகன் அபூ ஹகீமாவிற்காக அழவேண்டும். அவனது மரணத்தால் எனது உள்ளம் எரிந்துவிட்டது'' என்று கூறினார். அவரது அடிமை அவரிடம் திரும்பி வந்து ‘‘அது தனது ஒட்டகத்தை தொலைத்துவிட்ட ஒரு பெண்ணின் அழுகை'' என்றார். இதனைக் கேட்ட அஸ்வத் தன்னை அடக்கிக் கொள்ள முடியாமல் இக்கவிதைகளைப் படித்தார்.
அவள் ஒட்டகம் காணவில்லை என அழுகிறாளா?
அதற்காக கண்விழித்து தூக்கத்தைத் துறந்து விட்டாளா?
ஒட்டகத்திற்காக அழாதே! விதிகள் ஏமாற்றிய பத்ர் போருக்காக அழு!
ஆம்! பத்ரின் மீது அழு! ஹுசைஸ், மஃக்ஜும் கூட்டத்தினர் மீது அழு!
அழ வேண்டுமானால் அக்கீல் மீது அழு!
சிங்கங்களின் சிங்கம் ஹாரிஸின் மீது அழு!
ஆம்! இவர்களுக்காக நீ அழத்தான் வேண்டும்!
அனைவரையும் நீ பெயர் குறிப்பிடத் தேவையில்லை.
அபூ ஹகீமுக்கு நிகர் எவருமில்லையே!
என்ன கேடு? அவர்களுக்குப் பிறகு சிலர் தலைவராகி விட்டனர்!
பத்ர் என்றொரு தினம் இல்லையென்றால்...
அவர்கள் ஒருக்காலும் தலைவர்களாக ஆகியிருக்க முடியாது!!
வெற்றியை மதீனா அறிகிறது
முஸ்லிம்களுக்கு முழு வெற்றி கிடைத்தது. இந்த நற்செய்தி மதீனாவாசிகளுக்கு விரைவாக கிடைக்க வேண்டும் என்பதற்காக அப்துல்லாஹ் இப்னு ரவாஹா (ரழி) அவர்களை மதீனாவின் மேட்டுப்பகுதியில் வசிப்பவர்களுக்கும், ஜைத் இப்னு ஹாஸா (ரழி) அவர்களை மதீனாவின் கீழ்ப்பகுதியில் வசிப்பவர்களுக்கும் நபி (ஸல்) அனுப்பி வைத்தார்கள்.
யூதர்களும், நயவஞ்சகர்களும் மதீனாவில் பல பொய்யான வதந்திகளைப் பரப்பினர். ‘‘நபி (ஸல்) கொல்லப்பட்டார்கள்'' என்று பொய் பிரச்சாரம் செய்தனர். நயவஞ்சகர்களில் ஒருவன் நபி (ஸல்) அவர்களின் ஒட்டகமான ‘கஸ்வா'வில் ஜைது இப்னு ஹாஸா வருவதைப் பார்த்து ‘‘நிச்சயமாக முஹம்மது கொல்லப்பட்டார். அதற்கு ஆதாரம், இதோ... முஹம்மதின் ஒட்டகம். நாங்கள் இதை நன்கு அறிவோம். பயத்தால் என்ன கூறுவது என்றே ஜைதுக்கு தெரியவில்லை. இவர் போரில் தோற்று வருகிறார்'' என்று உளறினான்.
இரண்டு தூதர்களும் மதீனாவிற்கு வந்தவுடன் முஸ்லிம்கள் அவர்களைச் சூழ்ந்து அவர்கள் கூறும் செய்திகளைக் கேட்டனர். முஸ்லிம்கள் வெற்றி அடைந்தார்கள் என்ற செய்தி அவர்களுக்கு உறுதியானவுடன் மகிழ்ச்சி மிகுதியால் தக்பீர் (அல்லாஹு அக்பர்) முழங்கினர். மதீனாவில் இருந்த முஸ்லிம் தலைவர்கள் நபி (ஸல்) அவர்களுக்கு இம்மகத்தான வெற்றிக்காக வாழ்த்துக் கூற பத்ரின் பாதையை நோக்கி விரைந்தனர்.
உஸாமா இப்னு ஜைது (ரழி) கூறுகிறார்: நபி (ஸல்) தங்களது மகள் ருகையாவை கவனித்துக் கொள்வதற்காக அவரது கணவராகிய உஸ்மான் (ரழி) அவர்களுடன் என்னையும் விட்டுச் சென்றிருந்தார்கள். ருகையா (ரழி) இறந்துவிடவே அவர்களை அடக்கம் செய்து மண்ணைச் சமப்படுத்துகையில் ‘‘பத்ர் போரில் முஸ்லிம்கள் வெற்றி பெற்றார்கள்'' என்ற செய்தி எங்களுக்குக் கிடைத்தது.

இஸ்லாமியப் படை மதீனா புறப்படுகிறது

நபி (ஸல்) போர் முடிந்த பிறகு பத்ர் மைதானத்தில் மூன்று நாட்கள் தங்கினார்கள். அங்கிருந்து புறப்படுவதற்கு முன்பு போரில் கிடைத்த பொருட்கள் விஷயத்தில் கருத்து வேற்றுமைகள் எழுந்தன. கருத்து வேற்றுமை பலமாகவே, அனைவரும் தங்களிடம் இருக்கும் அனைத்தையும் ஒப்படைக்க வேண்டுமென நபி (ஸல்) கட்டளையிட்டார்கள். அதற்கிணங்க அனைவரும் தங்கள் வசம் இருந்த அனைத்தையும் நபியவர்களிடம் ஒப்படைத்தனர். பின்பு இப்பிரச்சனைக்குத் தீர்வை அல்லாஹ் குர்ஆனில் கூறினான்.
இந்நிகழ்ச்சி பற்றி விரிவாக உபாதா இப்னு ஸாமித் (ரழி) கூறுவதைக் கேட்போம். அவர்கள் கூறுவதாவது:
‘‘நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் பத்ர் போருக்குச் சென்றோம். போரில் அல்லாஹ் எதிரிகளைத் தோற்கடித்து முஸ்லிம்களுக்கு வெற்றியளித்தான். முஸ்லிம்களில் ஒரு சாரார் எதிரிகளை விரட்டி அடிப்பதிலும் அவர்களுடன் எதிர்த்துப் போரிட்டு அவர்களைக் கொல்வதிலும் மும்முரமாக இருந்தனர். இன்னொரு சாரார் எதிரிகளின் பொருட்களை ஒன்று திரட்டினர். மற்றுறொரு சாரார் நபி (ஸல்) அவர்களை எதிரிகள் தாக்காமல் இருக்க அவர்களைச் சுற்றி பாதுகாத்தனர்.
இரவில் போர் முடிந்து மக்கள் ஒன்று சேர்ந்த போது பொருட்களை சேகரித்தவர்கள் ‘‘நாங்கள்தான் பொருட்களை ஒன்று சேர்த்தோம். எனவே, அதில் வேறு யாருக்கும் எவ்வித பங்கும் கிடையாது'' என்றனர்.
எதிரிகளை விரட்டியவர்கள், ‘‘எங்களைப் பார்க்கிலும் அதிகமாக உங்களுக்கு அதில் உரிமை இல்லை, நாங்கள்தான் எதிரிகளை துரத்தினோம், தோற்கடித்தோம். எனவே, எங்களுக்கே அது உரிமையானது. எங்களைவிட நீங்கள் அதற்கு உரிமையுடையவர்களாக இருக்க முடியாது'' என்றனர்.
நபியவர்களை பாதுகாக்கும் பணியில் இருந்தவர்கள், ‘‘நபி (ஸல்) அவர்களை எதிரிகள் தாக்கிடுவர் என்ற பயத்தாhல் நாங்கள் அவர்களை பாதுகாப்பதில் இருந்தோம். எனவேதான் உங்களுடன் எங்களால் செயல்படமுடியவில்லை. ஆகவே எங்களுக்கும் அதில் பங்கு வேண்டும்'' என்றனர்.
இந்த சர்ச்சைக்குரிய தீர்வை அல்லாஹ் குர்ஆனில் கூறினான்:
(நபியே!) ‘அன்ஃபால்' (என்னும் போரில் கிடைத்த பொருட்களைப்) பற்றி அவர்கள் உங்களிடம் கேட்கின்றனர். (அதற்கு) நீங்கள் கூறுங்கள்: ‘அன்ஃபால்' அல்லாஹ்வுக்கும், (அல்லாஹ்வுடைய) தூதருக்கும் சொந்தமானது. ஆகவே, நீங்கள் அல்லாஹ்வுக்குப் பயந்து (அதில் எதையும் மறைத்துக் கொள்ளாது) உங்களுக்கிடையில் ஒழுங்காக நடந்து கொள்ளுங்கள். உண்மையாகவே நீங்கள் உண்மை நம்பிக்கையாளர்களாக இருந்தால் அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் கீழ்படிந்து நடங்கள். (அல்குர்ஆன் 8:1)
நபி (ஸல்), இந்த வசனத்திற்கேற்ப முஸ்லிம்கள் அனைவருக்கும் பொருட்களை பங்கு வைத்தார்கள். (முஸ்னது அஹ்மது, முஸ்தத்ரகுல் ஹாகிம்)
பொருட்களை பத்ர் மைதானத்திலேயே பங்கு வைக்கவில்லை. மாறாக, அனைத்து பொருட்களையும் ஒன்றுசேர்த்து அதற்கு அப்துல்லாஹ் இப்னு கஅபை பொறுப்பாக நியமித்தார்கள். பிறகு பொருட்களுடன் அனைவரையும் அழைத்துக் கொண்டு புறப்பட்டார்கள். செல்லும் வழியில் ‘மழீக்' மற்றும் ‘நாஜியா' என்ற இடங்களுக்கு மத்தியிலுள்ள மணல் மேட்டுக்கருகில் தங்கினார்கள். அங்குதான் போரில் கிடைத்த பொருட்களைப் பங்கிட்டார்கள். ஐந்தில் ஒரு பகுதியை அல்லாஹ்விற்காக ஒதுக்கினார்கள். மீதமிருந்த அனைத்தையும் போரில் கலந்த அனைத்து வீரர்களுக்கும் சட்டப்படி பங்கு வைத்தார்கள்.
பிறகு புறப்பட்டு ‘ஸஃப்ரா' என்ற இடத்தை அடைந்தார்கள். அங்கு நழ்ர் இப்னு ஹாஸைக் கொன்றுவிடுமாறு அலீ இப்னு அபூதாலிப் (ரழி) அவர்களுக்குக் கட்டளையிட்டார்கள். காரணம், இவன் பத்ர் போரில் எதிரிகளின் கொடியை ஏந்தியவன். இவன் குறைஷி குற்றவாளிகளில் ஒரு பெரும் குற்றவாளி! இஸ்லாமுக்கு எதிராகப் பெரும் சூழ்ச்சிகள் செய்தவன். நபி (ஸல்) அவர்களுக்கு கடும் நோவினை செய்தவன்.
பிறகு ‘இர்க்குல் ளுபியா' என்ற இடத்தை அடைந்த போது உக்பா இப்னு அபூ முயீத்தையும் கொன்றுவிட ஆஸிம் இப்னு ஸாபித் அல் அன்சாரி (ரழி) அவர்களுக்கு கட்டளையிட்டார்கள். சிலர் அலீ (ரழி) என்றும் கூறுகின்றனர். நபி (ஸல்) அவர்களுக்கு உக்பா செய்த தீங்கைப் பற்றி நாம் முன்பே கூறியிருக்கின்றோம். இவன்தான் நபி (ஸல்) தொழுகையில் இருந்த சமயம் அவர்களின் முதுகில் ஒட்டகத்தின் குடலைப் போட்டவன். நபி (ஸல்) அவர்களைக் கொலை செய்வதற்காக அவர்களின் கழுத்தைப் போர்வையால் இறுக்கியவன். அது சமயம் அபூபக்ர் (ரழி) அவர்கள் குறுக்கிட்டு நபி (ஸல்) அவர்களைப் பாதுகாத்தார்கள். அவனைக் கொல்ல வேண்டும் என்று நபி (ஸல்) கட்டளையிட்ட பின்பு அவன் நபியவர்களிடம் ‘‘முஹம்மதே! எனது பிள்ளைகள் என்ன ஆவார்கள்?'' என்று கேட்டான். அதற்கு நபி (ஸல்) ‘‘அவர்களுக்கு நெருப்புதான்'' என்றார்கள்.(ஸுனன் அபூதாவூது)
இவ்விருவரும் இதற்குமுன் செய்த குற்றங்கள் மிக மோசமானவை; மறக்க முடியாதவை. அதுமட்டுமல்ல இவர்கள் தங்களின் குற்றங்களுக்காக வருந்தவுமில்லை. இவர்களை விடுதலை செய்தால் மீண்டும் இஸ்லாமிற்குக் கெடுதிகள் பல செய்வர். எனவே, இவர்களைக் கொல்வது அவசியமான ஒன்றே! கைதிகளில் இவ்விருவரைத் தவிர வேறு எவரையும் நபி (ஸல்) கொலை செய்யவில்லை.

வாழ்த்த வந்தவர்கள்

இரண்டு தூதர்களின் மூலமாக வெற்றியின் நற்செய்தியை அறிந்தவுடன் முஸ்லிம்களும் அவர்களது தலைவர்களும் நபி (ஸல்) அவர்களுக்கு வாழ்த்து சொல்வதற்காக மதீனாவிலிருந்து புறப்பட்டனர். இவர்களின் சந்திப்பு ‘ரவ்ஹா' என்ற இடத்தில் நபி (ஸல்) அவர்களுடன் நிகழ்ந்தது. அப்போது அவர்களிடம் மதீனாவைச் சேர்ந்த ஸலமா இப்னு ஸலாமா (ரழி) ‘‘நீங்கள் எங்களுக்கு எதற்கு வாழ்த்து சொல்கிறீர்கள்.? கட்டப்பட்ட ஒட்டகத்தைப் போன்றிருந்த சொட்டைத் தலை கிழவர்களைத்தான் நாங்கள் போரில் எதிர்கொண்டோம். எனவே, எளிதில் அவர்களது கழுத்துகளை அறுத்தோம்'' என்று கூறினார். நபி (ஸல்) புன்முறுவல் பூத்து ‘‘எனது சகோதரன் மகனே! நீ யாரை அப்படி கூறுகிறாயோ அவர்கள்தான் (குறைஷிகளின்) தலைவர்கள்'' என்றார்கள்.
மதீனாவின் தலைவர்களில் ஒருவரான உஸைத் இப்னு ஹுழைர் (ரழி) வாழ்த்து கூறும்போது: ‘‘அல்லாஹ்வின் தூதரே! உங்களுக்கு வெற்றியளித்து உங்கள் கண்ணை குளிரச் செய்த அல்லாஹ்விற்கே எல்லாப் புகழும்! நீங்கள் எதிரிகளுடன் போர் புரிய நேரிடும் என்று நினைத்து பத்ருக்கு வருவதிலிருந்து நான் பின்வாங்கவில்லை. மாறாக, வியாபாரக் கூட்டத்தைத்தான் நீங்கள் சந்திக்கச் செல்கிறீர்கள் என்று எண்ணினேன். ஆகையால்தான் உங்களுடன் புறப்படவில்லை. நீங்கள் எதிரிகளை சந்திக்க நேரிடும் என்று எனக்குத் தெரிந்திருந்தால் நான் ஒருக்காலும் பின்வாங்கியிருக்க மாட்டேன்'' என்று கூறினார்கள். அதற்கு நபி (ஸல்) ‘‘நீர் உண்மை கூறுகிறீர்'' என்றார்கள்.
இவ்வாறு பல தலைவர்களின் வாழ்த்துகளைக் கேட்டு, பதிலளித்தப் பிறகு நபி (ஸல்) மதீனாவிற்குள் நுழைந்தார்கள். பெரும் வெற்றி பெற்று வரும் அவர்களை மதீனாவிலிருந்த எதிரிகளும், மதீனாவை சுற்றியிருந்த எதிரிகளும் அஞ்சினர். இஸ்லாமின் வெற்றியைக் கண்டு அதை உண்மை மார்க்கம் என அறிந்த பலர் மனமுவந்து இஸ்லாமைத் தழுவினர். மற்றொருபுறம் சில விஷமிகள் வேறு வழியின்றி தாங்களும் இஸ்லாமைத் தழுவுகிறோம் என்றனர். ஆனால் மனதுக்குள் இஸ்லாமையும் முஸ்லிம்களையும் வெறுத்தனர். அத்தகையோர்தான் அப்துல்லாஹ் இப்னு உபையும் அவனது நண்பர்களும் ஆவர். இந்த நயவஞ்சகர்கள் இஸ்லாமிற்குச் செய்த துரோகங்களை இந்நூலில் அவசியமான இடங்களில் நாம் கூறுவோம்.
நபி (ஸல்) மதீனாவிற்கு வந்த ஒரு நாள் கழித்து கைதிகள் மதீனாவிற்கு அழைத்து வரப்பட்டனர். அவர்களைத் தங்களது தோழர்களுக்குப் பங்கிட்டுக் கொடுத்து, அவர்களுடன் நல்ல முறையில் நடந்து கொள்ள வேண்டுமென உபதேசித்தார்கள். நபி (ஸல்) அவர்களின் இந்த உபதேசத்தை செயல்படுத்தும் விதமாக, கைதிகளுக்கு ரொட்டிகளை உண்ணக் கொடுத்து, நபித்தோழர்கள் பேரீத்தம் பழங்களைப் புசித்தார்கள்.

கைதிகளின் விவகாரம்

நபி (ஸல்) தங்களது தோழர்களுடன் கைதிகளைப் பற்றி ஆலோசித்தார்கள். அப்போது அபூபக்ர் (ரழி) ‘‘அல்லாஹ்வின் தூதரே! இவர்கள் நமது தந்தை வழி உறவினர்கள். நமது சகோதரர்கள் மற்றும் நெருக்கமான குடும்பத்தார்கள். எனவே, (இவர்களை கொலை செய்யாமல்) இவர்களிடம் (ஃபித்யா) ஈட்டுத்தொகை பெற்றுக் கொண்டு இவர்களை விடுதலை செய்வோம். நாம் வாங்கும் ஈட்டுத்தொகை இறைநிராகரிப்பாளர்களை எதிர்ப்பதற்கு நமக்கு உதவியாக இருக்கும். அதிவிரைவில் அல்லாஹ் இவர்களுக்கு நேர்வழி காட்டக் கூடும். அப்போது இவர்களும் நமக்கு உதவியாளர்களாக மாறுவர்'' என்று கூறினார்கள்.
பின்பு நபி (ஸல்) உமர் (ரழி) அவர்களிடம் ‘‘கத்தாபின் மகனே! நீங்கள் என்ன யோசனை கூறுகிறீர்கள்?'' எனக் கேட்டார்கள். ‘‘அல்லாஹ்வின் மீது ஆணையாக! அபூபக்ர் (ரழி) அவர்கள் கூறிய ஆலோசனையை நான் விரும்பவில்லை. மாறாக, இவர்களைக் கொலை செய்வதே எனது யோசனை. எனது இன்ன உறவினரை என்னிடம் கொடுங்கள். அவர் கழுத்தை நான் வெட்டுகிறேன். அக்கீல் இப்னு அபூதாலிபை அலீ (ரழி) அவர்களிடம் கொடுங்கள். அலீ (ரழி) அவர் கழுத்தை வெட்டட்டும். ஹம்ஜா (ரழி) அவர்களிடம் அவரது இன்ன சகோதரரை கொடுங்கள். ஹம்ஜா (ரழி) அவரது கழுத்தை வெட்டட்டும். இதன்மூலம் இணைவைப்பவர்கள் மீது எங்களது உள்ளத்தில் எந்தப் பிரியமும் இல்லை என்று அல்லாஹ் தெரிந்து கொள்வான். அது மட்டுமா! இப்போது கைது செய்யப்பட்டிருப்பவர்கள் குறைஷிகளின் தலைவர்களும் அவர்களை வழி நடத்தும் கொடுங்கோலர்களும் ஆவார்கள்'' என்று உமர் (ரழி) கூறினார்கள்.
அபூபக்ர் (ரழி) கூறியதையே நபி (ஸல்) ஏற்று கைதிகளிடம் ஈட்டுத்தொகைப் பெற்று உரிமையிட்டார்கள். ஈட்டுத் தொகை ஆயிரம் வெள்ளி நாணயங்களிருந்து நான்காயிரம் வெள்ளி நாணயங்கள் வரை நிர்ணயிக்கப்பட்டது. மக்காவாசிகள் எழுதப் படிக்கத் தெரிந்தவர்கள். மதீனாவாசிகளுக்கு எழுத, படிக்கத் தெரியாது. எனவே, ஈட்டுத் தொகை கொடுக்க இயலாத மக்கா கைதிகள் மதீனாவை சேர்ந்த பத்து சிறுவர்களுக்கு எழுத, படிக்கக் கற்றுக் கொடுக்க வேண்டும் என்று பணிக்கப்பட்டனர். அவ்வாறு சிறுவர்களுக்கு நன்கு எழுத, படிக்கக் கற்றுக் கொடுத்தவுடன் அவர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.
உமர் (ரழி) கூறுகிறார்கள்: அபூபக்ர் (ரழி) கூறியதையே நபி (ஸல்) விரும்பினார்கள். நான் கூறியதை விரும்பவில்லை. எனவே கைதிகளிடம் ஈட்டுத்தொகைப் பெற்று உரிமையிட்டார்கள். அதற்கு அடுத்த நாள் நான் நபி (ஸல்) அவர்களிடம் வந்தேன். நபி (ஸல்) அவர்களும், அபூபக்ர் (ரழி) அவர்களும் அழுதவர்களாக இருந்தார்கள். நான் ‘‘அல்லாஹ்வின் தூதரே! நீங்களும் உங்களது தோழரும் ஏன் அழுகிறீர்கள்? அழுகைக்குரிய செய்தி எதுவும் இருப்பின், முடிந்தால் நானும் அழுகிறேன். முடியவில்லையென்றால் நீங்கள் அழுவதற்காக நானும் அழ முயல்கிறேன்'' என்றேன். அதற்கு நபி (ஸல்) ‘‘ஈட்டுத்தொகை வாங்கியதின் காரணமாக உமது தோழர்களுக்கு ஏற்பட்டதை எண்ணி நான் அழுகிறேன். அருகில் உள்ள ஒரு மரத்தை சுட்டிக் காண்பித்து இம்மரத்தை விட நெருக்கமாக அவர்களுக்குரிய வேதனை எனக்குக் காண்பிக்கப்பட்டது'' என்றார்கள்.
இது தொடர்பாகவே அல்லாஹ் இந்த வசனத்தை இறக்கினான்:
(இஸ்லாமையும் முஸ்லிம்களையும் அழித்தொழிக்க வந்த) எதிரிகளைக் கொன்று குவிக்கும் வரை அவர்களை கைதியாக்குவது இறைத்தூதருக்கு ஆகுமானதல்ல. நீங்கள் இவ்வுலகப் பொருளை விரும்புகிறீர்கள். அல்லாஹ்வோ (உங்களுக்கு) மறுமை வாழ்வை விரும்புகிறான். அல்லாஹ் மிகைத்தவனும் ஞானமுடைய வனாகவும் இருக்கின்றான். அல்லாஹ்விடம் (பத்ர் போரில் கலந்த முஸ்லிம்களுக்கு மன்னிப்பு உண்டு என்ற) விதி ஏற்கனவே உறுதி செய்யப்படாமலிருப்பின் நீங்கள் (பத்ர் போரில் கைதிகளிடமிருந்து ஈட்டுத் தொகையை) வாங்கியதில் மகத்தானதொரு வேதனை உங்களைப் பிடித்திருக்கும். (அல்குர்ஆன் 8:67, 68)
பல கைதிகளை நபி (ஸல்) ஈட்டுத் தொகை இல்லாமலே உரிமையிட்டார்கள். அவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் முத்தலிப் இப்னு ஹன்தப், ஸைஃபி இப்னு அபூ ஃபாஆ, அபூ இஜ்ஜா ஜும ஆவர். இந்த அபூ இஜ்ஜா உஹதுப் போரிலும் முஸ்லிம்களுக்கு எதிராக சண்டையிட்டான். போரின் இறுதியில் கைதியாகப் பிடிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டான். இதன் விவரம் இன்ஷா அல்லாஹ் பின்னர் வர இருக்கிறது.
நபி (ஸல்) அவர்களுடைய மருமகன் அபுல் ஆஸும் கைதிகளில் இருந்தார். அவரை விடுவிப்பதற்காக நபியவர்களின் மகளார் ஜைனப் (ரழி) தனது தாய் கதீஜா (ரழி) தனக்களித்த மாலையை ஈட்டுத் தொகையாக அனுப்பினார்கள். ஜைனப் (ரழி) அவர்களின் மாலையைப் பார்த்த நபி (ஸல்) அவர்களது உள்ளம் இரங்கியது. தங்களது தோழர்களிடம் அபுல் ஆஸை ஈட்டுத் தொகையின்றி விடுதலையிட அனுமதி கேட்டார்கள். தோழர்களும் அனுமதி தர ‘‘மகள் ஜைனப் (ரழி) அவர்களை மதீனாவிற்கு வர அனுமதிக்க வேண்டும்'' என்ற நிபந்தனையுடன் அவரை விடுதலை செய்தார்கள். அவர் மக்கா சென்ற பிறகு ஜைனப் (ரழி) அவர்களை மதீனா அனுப்பினார். ஜைனப் (ரழி) அவர்களை அழைத்து வர ஜைது இப்னு ஹாஸாவையும் மற்றும் ஒரு அன்சாரி தோழரையும் நபி (ஸல்) அனுப்பினார்கள். அவர்களிடம் நீங்கள் ‘‘பத்தன் யஃஜஜ் என்ற இடத்தில் தங்கியிருங்கள். ஜைனப் அந்த இடத்தை அடைந்தவுடன் அங்கிருந்து அவரை அழைத்து வாருங்கள்'' என்று கூறினார்கள். அந்த இருவரும் அவ்வாறே சென்று ஜைனப் (ரழி) அவர்களை அழைத்து வந்தார்கள். ஜைனப் (ரழி) அவர்கள் மக்காவிலிருந்து மதீனா சென்ற வரலாறு மிக துயரமான நிகழ்ச்சியாகும். இப்பயணத்தில் அவர்களுக்கு ஏற்பட்ட இன்னல் கேட்போரின் உள்ளங்களை உருக்கிவிடும்.
கைதிகளில் சுஹைல் இப்னு அம்ர் என்பவரும் இருந்தார். இவர் இலக்கிய நயத்துடன் பேசும் புகழ் பெற்ற பேச்சாளர். சில சமயங்களில் இஸ்லாமிற்கெதிராக பிரச்சாரம் செய்வார். எனவே, ‘‘அல்லாஹ்வின் தூதரே! இவனது இரண்டு முன்பற்களைக் கழற்றி விடுங்கள். இவன் அதிகம் பேசுகிறான். இனிமேல் உங்களுக்கு எதிராக இவன் எந்தப் பிரசங்கமும் செய்யக் கூடாது'' என்று நபி (ஸல்) அவர்களிடம் உமர் (ரழி) அவர்கள் கூறினார்கள். உறுப்புகளைச் சிதைப்பது இஸ்லாமிய மார்க்கத்தில் கூடாது என்பதற்காகவும், மறுமையில் அல்லாஹ்வின் தண்டனையை பயந்தும் நபி (ஸல்) உமரின் இக்கோரிக்கையை நிராகரித்தார்கள்.
இப்போருக்குப் பின், உம்ரா செய்வதற்காகச் சென்ற ஸஅது இப்னு நுஃமான் (ரழி) அவர்களை அபூ ஸுஃப்யான் மக்காவில் சிறைபிடித்துக் கொண்டார். அபூ ஸுஃப்யானின் மகன் அம்ர் இப்னு அபூஸுஃப்யான் பத்ர் போரில் கைது செய்யப்பட்டு முஸ்லிம்கள் வசம் இருந்தார். ஸஅதை விடுவிப்பதற்காக அம்ரை அபூ ஸுஃப்யானிடம் சில முஸ்லிம்களுடன் நபி (ஸல்) அவர்கள் அனுப்பினார்கள். அபூஸுஃப்யானும் தனது மகன் அம்ர் கிடைத்தவுடன் ஸஅதை விடுதலை செய்தார்.

இப்போர் குறித்து குர்ஆன்...

இப்போரை விவரித்து குர்ஆனில் ‘அல் அன்ஃபால்' என்ற அத்தியாயம் இறக்கப்பட்டது. நாம் கூறுவது சரியானால் ‘‘இந்த அத்தியாயம் இப்போரைப் பற்றிய இறைவிமர்சனம்'' என்று கூறலாம். வெற்றி பெற்ற பிறகு அரசர்களும் தளபதிகளும் போரைப் பற்றி கூறும் விமர்சனங்களிலிருந்து இந்த இறைவிமர்சனம் முற்றிலும் மாறுபட்டதாக அமைந்துள்ளது.
முதலாவதாக, முஸ்லிம்களுக்கு அவர்களிடம் இருந்த சில ஒழுக்கக் குறைவுகளை அல்லாஹ் சுட்டிக் காட்டுகிறான். அதற்குக் காரணம், முஸ்லிம்கள் தங்கள் ஆன்மாக்களை உயர் பண்புகளால் முழுமைபெற செய்ய வேண்டும் குறைகளிலிருந்து தூய்மைப்படுத்த வேண்டும் மிக உயர்ந்த நிலைக்கு இட்டுச் செல்ல வேண்டும் என்பதே!
இரண்டாவதாக, முஸ்லிம்கள் தங்களது வீரம் மற்றும் துணிவைப் பார்த்து தற்பெருமைக்கு ஆளாகிவிடக் கூடாது. மாறாக, அல்லாஹ்வின் மீதே நம்பிக்கை வைக்க வேண்டும் தனக்கும் தனது தூதருக்கும் கட்டுப்பட வேண்டும் என்பதற்காகவேதான் முஸ்லிம்களுக்கு மறைவிலிருந்து செய்த உதவியை அல்லாஹ் சுட்டிக் காட்டுகிறான்.
மூன்றாவதாக, இந்த ஆபத்தானப் போரை நபி (ஸல்) அவர்கள் எந்த இலட்சியங்களையும், நோக்கங்களையும் முன்னிட்டு சந்தித்தார்களோ அவற்றை விரிவாக அல்லாஹ் கூறுகிறான். அதன் பிறகு போர்களில் வெற்றி பெறக் காரணமாக அமையும் தன்மைகளையும், குணங்களையும் முஸ்லிம்களுக்குக் குறிப்பிடுகிறான்.
நான்காவதாக, இணைவைப்பவர்கள், நயவஞ்சகர்கள், யூதர்கள், போரில் கைது செய்யப் பட்டவர்கள் ஆகியோருக்கு அல்லாஹ் அறிவுரை கூறுகிறான். சத்தியத்திற்குப் பணிந்து அதை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதே அந்த அறிவுரை.
ஐந்தவதாக, போரில் கிடைக்கும் வெற்றிப் பொருட்கள் தொடர்பான சட்டங்களை முஸ்லிம்களுக்கு விவரிக்கின்றான்.
ஆறாவதாக, போரிடுவது அல்லது சமாதானம் செய்து கொள்வது ஆகிய இவ்விரண்டின் அடிப்படைகள் மற்றும் சட்டங்களை முஸ்லிம்களுக்கு விவரிக்கின்றான். அத்தகைய ஒரு காலக் கட்டத்தை அப்போது இஸ்லாமிய அழைப்புப்பணி அடைந்துவிட்டது என்பதே அதற்குக் காரணம். அதன் மூலமே முஸ்லிம்கள் புரியும் போருக்கும் அறியாமைக்கால மக்கள் செய்த போருக்கும் வேறுபாடு ஏற்படும் முஸ்லிம்கள் பிறரைப் பார்க்கிலும் தனித்தன்மை பெற்று, குணத்திலும் பண்பிலும் மேலோங்கி விளங்குவார்கள். மேலும், உலக மக்கள் இஸ்லாமை ஒரு தத்துவ சிந்தனையாக (சித்தாந்தமாக) மட்டும் பார்க்காமல், தான் அழைக்கும் அடிப்படைகளை கொண்டு தன்னைச் சார்ந்தோரைப் பண்பட செய்யும் ஒரு வாழ்க்கை நெறியாக இஸ்லாமைப் பார்ப்பார்கள்.
ஏழாவதாக, இஸ்லாமிய நாட்டுக்குரிய அடிப்படை சட்டங்களை அல்லாஹ் நிர்ணயிக்கின்றான். அதாவது, இஸ்லாமிய அரசாங்கத்திற்குள் வாழும் முஸ்லிம்களுக்கும் அதற்கு வெளியில் வாழும் முஸ்லிம்களுக்குமிடையில் சட்ட வித்தியாசங்கள் உள்ளன என்பதே அது.
ஹிஜ் இரண்டாம் ஆண்டு, ரமழான் மாதத்தில் நோன்பு கடமையாக்கப்பட்டது. ‘ஜகாத்துல் ஃபித்ர்' எனப்படும் நோன்புப் பெருநாள் கொடையும் அந்த ஆண்டுதான் கடமையாக்கப்பட்டது, இதர பொருட்களுக்குரிய ‘ஜகாத்' எனப்படும் மார்க்க வரிகளின் அளவுகளும் இந்த ஆண்டுதான் விவரிக்கப்பட்டன. இது பூமியில் பயணித்து, பொருள் ஈட்ட முடியாமல் சிரமத்தில் வாடி வதங்கிய பெரும்பாலான ஏழை முஹாஜிர்களின் (மதீனாவில் வாழும் மக்கா முஸ்லிம்களின்) பொருளாதாரச் சுமையை எளிதாக்கியது.
பத்ர் போரில் கிடைத்த மாபெரும் வெற்றிக்குப் பின் ஹிஜ்ரி 2, ஷவ்வால் மாதத்தில் கொண்டாடிய நோன்புப் பெருநாளே முஸ்லிம்களுக்கு தங்கள் வாழ்நாளில் கிடைத்த பெருநாட்களில் முந்தியதும் மிகச் சிறந்ததுமாகும். அல்லாஹ் முஸ்லிம்களுக்கு வெற்றி எனும் கிரீடத்தை அணிவித்த பின்பு, அவர்களுக்கு அவன் வழங்கிய இந்தப் பெருநாள் எவ்வளவு அதிசயத்தக்கது! தங்களது இல்லங்களிலிருந்து வெளியேறி ‘‘அல்லாஹு அக்பர் (அல்லாஹ் மிகப் பெரியவன்), லாயிலாஹஇல்லல்லாஹ் (அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை), அல்ஹம்துலில்லாஹ் (எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே)'' என்று சப்தமிட்டுக் கூறியவர்களாக வந்து, நபி (ஸல்) அவர்களுக்குப் பின் தொழுத அந்த தொழுகையின் காட்சிதான் எவ்வளவு அற்புதமானது! அல்லாஹ்வின் உதவியையும் அளவிலா அருளையும் பெற்ற முஸ்லிம்களின் உள்ளங்கள் அல்லாஹ்வின் மீது அன்பு கொண்டன. அவனது நேசத்தையும் பொருத்தத்தையும் பெற்றுக் கொள்ள துடியாய்த் துடித்தன.
இதைத்தான் முஸ்லிம்களுக்கு அல்லாஹ் இந்த வசனத்தில் நினைவூட்டுகிறான்:
நீங்கள் பூமியில் (மக்காவில்) வலுவிழந்த வெகு குறைந்த தொகையினராக இருந்து, உங்களை எந்த மனிதரும் (எந்நேரத்திலும் பலவந்தமாக) திடீரென தாக்கி விடுவார்களோ என்று நீங்கள் அஞ்சி (நடுங்கி)க் கொண்டிருந்த சமயத்தில் அவன் உங்களுக்கு (மதீனாவில்) இடமளித்துத் தன் உதவியைக் கொண்டு உங்களைப் பலப்படுத்தினான். மேலும், நல்ல உணவுகளை உங்களுக்கு அளித்ததையும் நினைத்துப் பாருங்கள். (இதற்கு) நீங்கள் நன்றி செலுத்துவீர்களாக! (அல்குர்ஆன் 8:26)
பத்ர் மற்றும் உஹுத் போர்களுக்கு மத்தியில் நிகழ்ந்த ராணுவ நடவடிக்கைகள்
சற்று முன் நாம் கூறிய பத்ர் போரில்தான் முதன் முதலாக முஸ்லிம்களும் இணை வைப்பவர்களும் ஆயுதமேந்தி கடும் சண்டையிட்டுக் கொண்டனர். இப்போர் முஸ்லிம்களுக்கு உறுதியான வெற்றியைக் கொடுத்தது. இதை அனைத்து அரபுலகமும் அறிந்தனர். இப்போனால் கடுமையாக பாதிக்கப்பட்டவர்களில் முதன்மையானவர்கள் இதில் நேரடியாக சேதமடைந்த மக்காவாசிகள். அதாவது, இணைவைப்பவர்கள். அதற்கு அடுத்தபடியாக பாதிக்கப்பட்டவர்கள் யூதர்கள். இவர்கள் முஸ்லிம்களின் வெற்றியையும் அவர்கள் மிகைத்து விடுவதையும் தங்களது மார்க்கத்திற்கும், பொருளாதாரத்திற்கும் மிகப் பெரிய அடியாகவும் வீழ்ச்சியாகவும் கருதினர். ஆக, பத்ர் போரில் முஸ்லிம்களுக்கு வெற்றி கிடைத்ததிலிருந்து இணைவைப்பவர்களும், யூதர்களும் முஸ்லிம்கள் மீது கோபத்தாலும் ஆத்திரத்தாலும் கொந்தளித்தனர்.
(நபியே!) யூதர்களும், இணைவைத்து வணங்குபவர்களும் நம்பிக்கையாளர்களுக்கு மனிதர்கள் அனைவலும் கொடிய எதிரிகளாக இருப்பதை நிச்சயமாக நீங்கள் காண்பீர்கள்! (அல்குர்ஆன் 5:82)
இந்த இருசாராருக்கும் மதீனாவிற்குள் சில இரகசிய நண்பர்கள் இருந்தனர். அவர்கள் தங்களுக்கு இஸ்லாமைத் தவிர வேறு எங்கும் கண்ணியம் கிடைக்காது என்று உறுதியாக தெரிந்த பிறகு, தங்களைப் பெயரளவில் ‘முஸ்லிம்கள்' என்று அறிமுகப்படுத்தினர். உண்மையில் யூதர்களையும், இணைவைப்பவர்களையும் விட அவர்கள் முஸ்லிம்கள் மீது குரோதத்தால் குறைந்தவர்கள் அல்லர். அவர்கள் அப்துல்லாஹ் இப்னு உபையும் அவனது நண்பர்களும் ஆவர்.
மேற்கூறப்பட்ட மூன்று பிரிவினரைத் தவிர அங்கு நான்காவது ஒரு பிரிவினரும் இருந்தனர். அவர்கள் மதீனாவைச் சுற்றி வாழ்ந்த கிராம அரபிகள். இவர்களுக்கு குஃப்ர் (இறைநிராகரிப்பு), ஈமான் (இறைநம்பிக்கை) என்பதெல்லாம் ஒரு முக்கியமான பிரச்சனையல்ல. இவர்கள் மக்களின் செல்வங்களைச் சூறையாடுவதையும், கொள்ளையடிப்பதையும் தொழிலாகக் கொண்டவர்கள். இவர்கள் முஸ்லிம்களுக்கு ஏற்பட்ட வெற்றியால் கவலைக்குள்ளாகினர். மதீனாவில் முஸ்லிம்களின் வலிமையான அரசாங்கம் அமைந்துவிட்டால் தங்களால் கொள்ளைத் தொழிலைத் தொடர முடியாது என்று பயந்தனர். இதனால் முஸ்லிம்கள் மீது குரோதம் கொண்டனர் அவர்களுக்கு எதிரிகளாக மாறினர்.
பத்ரில் ஏற்பட்ட வெற்றி முஸ்லிம்களின் கண்ணியத்திற்கும், வலிமைக்கும் காரணமாக அமைந்தது போன்றே, பல வகைகளில் முஸ்லிம்களை மற்றவர்கள் பகைத்துக் கொள்வதற்கும் காரணமாக அமைந்தது. ஆகவே, ஒவ்வொரு கூட்டத்தினரும் தமது நோக்கத்தை நிறைவேற்று வதற்குத் தேவையான வழிகளைக் கையாள ஆரம்பித்தனர்.
மதீனாவிலும், மதீனாவைச் சுற்றிலும் மக்களில் சிலர் இஸ்லாமை வெளிப்படுத்தினாலும் உள்ளுக்குள் முஸ்லிம்களுக்கு எதிராக இரகசிய ஆலோசனைகளையும், சதித்திட்டங்களையும் தீட்டினர். ஆனால், யூதர்களில் ஒரு கூட்டமோ முஸ்லிம்களுக்கு எதிராக தங்கள் குரோதத்தையும், பகைமையையும் வெளிப்படையாகவே காட்டினர். மற்றொரு பக்கம் மக்காவாசிகளோ, தங்களுக்கு ஏற்பட்ட இழப்புக்கு பழிவாங்கியே தீருவோம் முஸ்லிம்கள் மீது படையெடுத்து அவர்களை அழித்தே தீருவோம் என்று எச்சரித்தது மட்டுமல்லாமல், அதற்கான முழு தயாப்பையும் பகிரங்கமாகச் செய்தனர்.

அவர்களின் செயல்பாடுகள் இப்படித்தான் இருந்தது.
ஒளி பொருந்திய ஒரு நாள் வந்தே தீரும்!
அதன் பிறகு ஒப்பாயிடும் பெண்களின்
அழுகையை நான் நீண்ட நாட்கள் கேட்பேன்!
ஆம்! அப்படித்தான். மக்காவாசிகள் மதீனாவின் மீது மிக மூர்க்கமான போர் ஒன்றை தொடுத்தனர். இதை வரலாற்றில் ‘‘உஹுத் போர்'' என்று அழைக்கப்படுகிறது. இப்போரில் முஸ்லிம்களுக்கு மிகப்பெரிய இழப்பு ஏற்பட்டதால் அவர்கள்மீது மக்களுக்கு இருந்த பயம் குறைந்தது.
இந்த ஆபத்துகளைப் முறியடிப்பதில் முஸ்லிம்கள் மிக முக்கிய பங்காற்றினார்கள். நபி (ஸல்) இந்த ஆபத்துகளைப் பற்றி எந்தளவு விழிப்புணர்வுடன் இருந்தார்கள் என்பதையும், அவற்றை முறியடிப்பதற்கு எந்தளவு முறையான திட்டங்களைத் தீட்டினார்கள் என்பதையும், அது விஷயத்தில் அவர்களின் வழி நடத்தும் மகத்தான திறமை எவ்வாறு இருந்தது என்பதையும் அவர்கள் மேற்கொண்ட செயல்திட்டங்கள் மூலமாக நன்றாகத் தெரிய வருகிறது.
பின்வரும் வரிகளில் அந்த செயல்திட்டங்களைப் பற்றிய விவரங்களைப் பார்ப்போம்.

ஸுலைம் குலத்தவருடன் போர்

பத்ர் போருக்குப்பின் நபி (ஸல்) அவர்களுக்கு கிடைத்த முதல் செய்தி ‘‘ஸுலைம் மற்றும் கத்ஃபான் கிளையினர் மதீனாவின் மீது போர் தொடுக்க தங்களது படைகளைத் திரட்டுகின்றனர்'' என்பதாகும். உடனே நபி (ஸல்) 200 வீரர்களுடன் அவர்களது பகுதிக்குள் திடீரெனப் புகுந்து ‘குதுர்' என்ற இடம் வரை சென்றார்கள். ஆனால், ஸுலைம் கிளையினர் தப்பிவிட்டனர். 500 ஒட்டகங்கள் அவர்கள் ஊரில் இருந்தன. அவற்றை முஸ்லிம்கள் கைப்பற்றினர். அதிலிருந்து ஐந்தில் ஒன்றை ஒதுக்கிவிட்டு எஞ்சிய 400 ஒட்டகங்களை, ஒவ்வொரு வீரருக்கும் இரண்டு ஒட்டகங்கள் வீதம் நபி (ஸல்) வழங்கினார்கள். மேலும் ‘யஸார்' என்ற ஓர் அடிமையும் கிடைத்தார். அவரை உரிமையிட்டார்கள். அவர்களது ஊரில் மூன்று நாட்கள் தங்கிய பின்னர் நபி (ஸல்) மதீனா திரும்பினார்கள்.
பத்லிருந்து திரும்பி, ஏழு நாட்கள் கழித்து ஹிஜ்ரி 2, ஷவ்வால் மாதத்தில் இந்தப் போர் ஏற்பட்டது. ஆனால், சிலர் முஹர்ரம் மாதத்தின் நடுவில் ஏற்பட்டதென்று கூறுகின்றனர். இப்போருக்குச் செல்லும் போது நபி (ஸல்) அவர்கள் மதீனாவில் ஸிபாஉ இப்னு உர்ஃபுதா என்ற தோழரை தனது பிரதிநிதியாக ஆக்கினார்கள். சிலர் அப்துல்லாஹ் இப்னு உம்மு மக்தூமைப் பிரதிநிதியாக ஆக்கினார்கள் என்றும் கூறுகின்றனர். (இப்னு ஹிஷாம், ஜாதுல் மஆது)

நபியவர்களைக் கொல்ல திட்டம்

பத்ர் போரில் தோற்றதால் நபி (ஸல்) அவர்களுக்கு எதிராக மக்காவாசிகள் கோபத்தால் கொதித்தனர். தங்களின் வீழ்ச்சிக்கும் இழிவுக்கும் அடிப்படைக் காரணமாக இருக்கும் அந்த முஹம்மதைக் கொன்று விடுவதுதான் அனைத்திற்கும் சரியான தீர்வு என முடிவு செய்தனர். இதற்காக மக்கா நகர வீரர்களில் இருவர் ஒன்றுகூடி ஆலோசனை செய்தனர்.
உமைர் இப்னு வஹப் அல் ஜும மற்றும் ஸஃப்வான் இப்னு உமைய்யா ஆகிய இருவரும் கஅபாவிற்கருகில் அமர்ந்தனர். இது பத்ர் போர் முடிந்து, சில நாட்கள் கழித்து நடந்ததாகும். இந்த உமைர், குறைஷி ஷைத்தான்களில் மிகப் பெரிய ஷைத்தானாவான். நபி (ஸல்) அவர்களையும் நபித்தோழர்களையும் மக்காவில் அதிகம் நோவினை செய்தவர்களில் இவனும் குறிப்பிடத்தக்கவன். இவனது மகன் வஹப் இப்னு உமைரை முஸ்லிம்கள் பத்ர் போரில் சிறைப்பிடித்தனர். பத்ரில் கொலை செய்யப்பட்டவர்களையும், முஸ்லிம்களால் தங்களுக்கு ஏற்பட்ட சோதனைகளையும் ஸஃப்வானுக்கு உமைர் நினைவூட்டினான். அதற்கு ஸஃப்வான் ‘‘அல்லாஹ்வின் மீது ஆணையாக! அவர்களுக்குப் பின் வாழ்ந்து ஒரு பலனும் இல்லை'' என்றான்.
அதற்கு, ‘‘அல்லாஹ்வின் மீது ஆணையாக! நீ உண்மையே கூறினாய். அறிந்துகொள்! அல்லாஹ்வின் மீது ஆணையாக! என்னால் நிறைவேற்ற முடியாத அளவுக்கு கடன் சுமையும் எனக்குப் பின் சீரழிந்து விடுவார்கள் என்று நான் பயப்படும் குடும்பமும் எனக்கு இல்லையெனில் நேரில் சென்று முஹம்மதை நானே கொல்வேன். எனது மகன் அவர்களிடம் கைதியாக இருப்பதால் நான் அவர்களிடம் செல்வதற்கு அது ஒரு காரணமாகவும் இருக்கிறது'' என்றான் உமைர்.
ஸஃப்வான் இதை நல்ல சந்தர்ப்பமாகக் கருதி, ‘‘உனது கடனை நான் நிறைவேற்றுகிறேன். உனது குடும்பத்தை எனது குடும்பத்துடன் நான் சேர்த்துக் கொள்கிறேன். அவர்கள் வாழும் காலமெல்லாம் நான் அவர்களுக்கு உதவி செய்வேன். என்னிடம் இருக்கும் எதையும் அவர்களுக்கு நான் கொடுக்காமல் இருக்க மாட்டேன்'' என நயமாகப் பேசி, உமைரை இத்தீய செயலுக்குத் தூண்டினான்.
சரி! ‘‘நமது பேச்சை மறைத்துவிடு. யாரிடமும் சொல்லாதே'' என்று உமைர் கூற, ‘‘அப்படியே செய்கிறேன்'' என்றான் ஸஃப்வான்.
உமைர் தனது வாளைக் கூர்மைப்படுத்தி அதில் நன்கு விஷம் ஏற்றினான். அந்த வாளுடன் மதீனா புறப்பட்டான். கொலை வெறியுடன் அதிவிரைவில் மதீனா சென்றடைந்தான். நபி (ஸல்) அவர்களின் பள்ளிக்கு அருகில் தனது ஒட்டகத்தைப் படுக்க வைத்தான். அப்போது உமர் (ரழி) பள்ளிக்குள் முஸ்லிம்களுடன் பத்ர் போரில் அல்லாஹ் தங்களுக்கு செய்த உதவியைப் பற்றிய பேச்சில் ஈடுபட்டிருந்தார்கள். சரியாக உமர் (ரழி) அவர்களின் பார்வை உமைர் மீது பட்டது. ‘‘இதோ நாய்! அல்லாஹ்வின் எதி! தனது வாளைத் தொங்கவிட்டவனாக வந்துள்ளான். இவன் ஒரு கெட்ட நோக்கத்திற்காகத்தான் வருகிறான்'' என்று சப்தமிட்டவராக நபி (ஸல்) அவர்களிடம் சென்று ‘‘அல்லாஹ்வின் தூதரே! இதோ அல்லாஹ்வின் எதிரி உமைர், தனது வாளை அணிந்தவனாக இங்கு வருகிறான்'' என்று கூறினார்கள். அதற்கு நபி (ஸல்) ‘‘என்னிடம் அவரை அழைத்து வாருங்கள்'' என்றார்கள். உமர் (ரழி) அன்சாரிகளில் சிலரிடம் ‘‘நீங்கள் சென்று நபி (ஸல்) அவர்களுக்கு அருகில் அமருங்கள். இந்த கெட்டவனின் தீங்கிலிருந்து நபி (ஸல்) அவர்களைக் காத்துக் கொள்ளுங்கள். ஏனென்றால் இவனை நம்ப முடியாது'' என்று கூறியபின் உமைன் வாளுறையை அவரது பிடரியுடன் இழுத்துப் பிடித்தவராக நபி (ஸல்) அவர்களிடம் அழைத்து வந்தார்கள். இக்காட்சியைப் பார்த்த நபி (ஸல்) ‘‘உமரே! அவரை விட்டு விடுங்கள்'' என்று கூறி, ‘‘உமைரே! இங்கு வாரும்'' என்றார்கள். அப்போது உமைர் ‘‘உங்களின் காலைப் பொழுது பாக்கிய மாகட்டும்'' என்று முகமன் கூறினார். அதற்கு நபி (ஸல்) ‘‘உமைரே! உமது இந்த முகமனை விட சிறந்த முகமனாகிய சுவனவாசிகளின் ‘ஸலாம்' என்ற முகமனைக் கொண்டு அல்லாஹ் எங்களை சங்கைப்படுத்தி இருக்கிறான்'' என்றார்கள்.
பின்பு ‘‘உமைரே! நீர் எதற்காக இங்கு வந்தீர்'' என்று கேட்டார்கள். அதற்கு, ‘‘உங்களிடம் இருக்கும் இந்த கைதிக்காக வந்திருக்கிறேன். அவருடன் நல்லமுறையில் நடந்து கொள்ளுங்கள்'' என்றார் உமைர்.
அதற்கு நபி (ஸல்) ‘‘உமது கழுத்தில் ஏன் வாள் தொங்குகிறது'' என்று கேட்டார்கள். அவர் ‘‘இந்த வாள் நாசமாகட்டும். இது எங்களுக்கு என்ன பலனை அளித்தது'' என்று கூறினார்.
நபி (ஸல்), ‘‘என்னிடம் உண்மையை சொல். நீர் வந்ததன் நோக்கம் என்ன?'' என்று கேட்டார்கள். அதற்கவர் ‘‘நான் அந்த நோக்கத்தில்தான் வந்தேன்'' என்றார்.
அதற்கு நபி (ஸல்) ‘‘இல்லை. நீயும் ஸஃப்வானும் கஅபாவிற்கு அருகில் அமர்ந்து பத்ரில் கொல்லப்பட்ட குறைஷிகளைப் பற்றி பேசினீர்கள். பின்பு நீ ‘‘தன் மீது கடனும் தனது குடும்பத்தார்களின் பொறுப்பும் இல்லையெனில், தான் முஹம்மதை கொலை செய்து வருவேன் என்று கூறினீர்! நீ என்னைக் கொல்ல வேண்டுமென்பதற்காக உனது கடன் மற்றும் உனது குடும்ப பொறுப்பை ஸஃப்வான் ஏற்றுக்கொண்டான். ஆனால், இப்போது உனக்கும் உனது அந்த நோக்கத்திற்குமிடையில் அல்லாஹ் தடையாக இருக்கிறான்'' என்று கூறினார்கள்.
இதைக் கேட்ட உமைர் ‘‘நீங்கள் நிச்சயமாக அல்லாஹ்வின் தூதர் என்று நான் சாட்சி கூறுகிறேன். வானத்தின் செய்திகளையும், உங்களுக்கு இறங்கும் இறைஅறிவிப்பையும் நீங்கள் எங்களுக்கு கூறியபோது உங்களை நாங்கள் பொய்யர் என்று கூறினோம். ஆனால் உங்களை கொலை செய்ய வேண்டும் என முடிவு செய்த போது என்னையும் ஸஃப்வானையும் தவிர வேறு யாரும் அங்கு இருக்கவில்லை. அல்லாஹ்வின் மீது ஆணையாக! அல்லாஹ்தான் இந்த செய்தியை உங்களுக்கு அறிவித்தான் என்று நான் நன்கறிகிறேன். எனக்கு இஸ்லாமின் பக்கம் நேர்வழி காட்டிய அல்லாஹ்விற்கே எல்லாப் புகழும்! அவனே இங்கு என்னை அனுப்பினான்'' என்று கூறி, இஸ்லாமின் ஏகத்துவத்தை மனமாற மொழிந்தார்கள். அதற்குப் பின், நபி (ஸல்) அவர்கள் ‘‘உங்களின் சகோதரருக்கு மார்க்கச் சட்டங்களையும் குர்ஆனையும் கற்றுக் கொடுங்கள். அவரது கைதியை விடுதலைச் செய்யுங்கள்'' என்று கூறினார்கள்.
‘‘பத்ரினால் ஏற்பட்ட பாதிப்பை நீங்கள் மறக்கும்படியான ஒரு நற்செய்தி வெகு விரைவில் உங்களுக்குக் கிடைக்கும்'' என்று ஸஃப்வான் மக்காவாசிகளிடம் கூறுவான். மேலும் மதீனாவிலிருந்து வரும் வழிப்போக்கர்களிடமும் உமைரைப் பற்றி விசாரிப்பான். இறுதியாக ஒருவர் உமைர் முஸ்லிமாகிவிட்டார் என்ற செய்தியை ஸஃப்வானுக்கு அறிவிக்க, அவன் அதிர்ச்சியால் உறைந்தான். ‘‘அவருடன் பேச மாட்டேன், அவருக்கு ஒருபோதும் எந்த உதவியும் செய்ய மாட்டேன்'' என்று சத்தியம் செய்தான்.
உமைர் மதீனாவில் இஸ்லாமியக் கல்வியைக் கற்று, மக்கா திரும்பி அங்கு மக்களை இஸ்லாமின் பக்கம் அழைத்தார். அவரது கரத்தில் பலர் இஸ்லாமைத் தழுவினர். (இப்னு ஹிஷாம்)

கைனுகா கிளையினருடன் போர்

யூதர்களுடன் நபி (ஸல்) செய்த ஒப்பந்தங்களைப் பற்றி இதற்கு முன் நாம் கூறியிருக்கிறோம். அந்த ஒப்பந்தங்களை நிறைவேற்றுவதில் நபி (ஸல்) அவர்கள் மிகுந்த ஆர்வம் காட்டினார்கள். முஸ்லிம்களில் எவரும் அந்த ஒப்பந்தத்தின் ஒரு எழுத்திற்குக் கூட மாறு செய்யாமல் நடந்தனர். ஆனால் மோசடி, ஒப்பந்தத்தை முறித்தல் மற்றும் துரோகம் செய்தல் ஆகியவற்றுக்கு வரலாற்றில் பெயர்போன யூதர்களோ தங்களின் இயல்புக்குத் தக்கவாறே நடந்தனர். குறுகிய காலத்திலேயே முஸ்லிம்களுக்கு எதிரான சூழ்ச்சியை ஆரம்பித்ததுடன் அவர்களுக்குள் பழைய பகைமையையும் சலசலப்பையும் கிளப்பினர். மேலும், முஸ்லிம்களுக்கு மத்தியில் பிளவுகளை ஏற்படுத்த முயன்றனர். இதற்கு சில உதாரணங்களைப் பார்ப்போம்:

யூதர்களின் சூழ்ச்சிக்கு உதாரணம்

இப்னு இஸ்ஹாக் (ரஹ்) கூறுகிறார்: 'ஷாஸ் இப்னு கைஸ்' என்ற வயது முதிர்ந்த யூதன் ஒருவன் இருந்தான். அவன் முஸ்லிம்கள் மீது கடினமான பொறாமையும் குரோதமும் கொண்டிருந்தான். அன்சாரிகளில் அவ்ஸ், கஸ்ரஜ் ஆகிய இரு கிளையினரும் ஒற்றுமையாக ஒன்றுகூடி ஓரிடத்தில் பேசியதைப் பார்த்தான்.. இவ்வளவு ஒற்றுமையாகவும் அன்பாகவும் இஸ்லாமின் அடிப்படையில் இவர்கள் ஒன்றுகூடி இருந்ததை அவனால் பொறுக்க முடியவில்லை. ‘‘இவ்வூல் கைலா கூட்டத்தினர் அதாவது அவ்ஸ் மற்றும் கஸ்ரஜ் கிளையினர் ஒற்றுமையாகி விட்டனர். இவர்கள் ஒற்றுமையுடன் இருந்தால் நம்மால் இங்கு தங்க முடியாது'' என்று கூறி தன்னுடன் இருந்த யூத வாலிபனிடம் ‘‘நீ சென்று அவர்களுடன் உட்கார்ந்து கொள். பிறகு புஆஸ் போரைப் பற்றியும் அதற்கு முன் நிகழ்ந்த நிகழ்ச்சியையும் அவர்களுக்கு நினைவூட்டு, போர் சமயத்தில் அவர்கள் தங்களுக்குள் கூறிய கவிதைகளை அவர்களுக்குப் பாடிக்காட்டு'' என்று கூறினான்.
ஷாஸ் கூறியவாறே அவனும் செய்தான். நல்ல பலன் கிடைத்தது. இரு கூட்டத்தினரும் தத்தம் பெருமையைப் பற்றி பேச ஆரம்பித்தனர். இரு கூட்டத்திலிருந்தும் இருவர் மண்டியிட்டு வாய்ச் சண்டை போட, அதில் ஒருவர் நீங்கள் நாடினால் அந்தப் போரை இப்போதும் நாம் அப்படியே தொடங்கலாம் என்றார். மற்றவன் கூட்டத்தினர் ‘‘வாருங்கள்! மதீனாவிற்கு வெளியில் ஹர்ராவில் சென்று நாம் சண்டையிடுவோம். ஆயுதங்களை எடுத்துக் கொள்ளுங்கள்'' என்று கூறியவாறு ஹர்ராவை நோக்கிக் கிளம்பினர். இரு கூட்டத்தினரும் கோபத்தால் பொங்கி எழுந்தனர். அவர்களுக்குள் கடுமையான சண்டை நடக்க நெருங்கி விட்டது.
இச்செய்தி நபி (ஸல்) அவர்களுக்குக் கிடைத்தவுடன் தங்களுடன் இருந்த முஹாஜிர் தோழர்களை அழைத்துக் கொண்டு அன்சாரிகளிடம் விரைந்தார்கள். அவர்களை நோக்கி முஸ்லிம்களே! அல்லாஹ்வை பயந்து கொள்ளுங்கள்! அல்லாஹ்வை பயந்து கொள்ளுங்கள்! நான் உங்களுக்கு மத்தியில் இருக்கும்போதே அறியாமைக் கால வாதங்களை நீங்கள் செய்து கொள்கிறீர்களா? அல்லாஹ் உங்களுக்கு இஸ்லாமின் பக்கம் நேர்வழி காட்டினான் அதன் மூலம் உங்களைக் கண்ணியப்படுத்தினான் உங்களை விட்டு அறியாமைக்கால விஷயங்களை அகற்றி இருக்கின்றான் இறைநிராகரிப்பிலிருந்து உங்களைப் பாதுகாத்து இருக்கின்றான் உள்ளங்களுக்கு மத்தியில் அன்பை ஏற்படுத்தி இருக்கின்றான். இதற்கு பின்புமா நீங்கள் சண்டை செய்து கொள்கிறீர்கள்?'' என்று அறிவுரை கூறினார்கள்.
நபி (ஸல்) அவர்களின் உருக்கமான உரையைக் கேட்ட அம்மக்கள் தங்களின் இச்செயலை ஷைத்தானின் ஊசலாட்டமே எனவும் தங்கள் எதிரியின் சூழ்ச்சியுமே எனவும் புரிந்து கொண்டு அழுதனர். அவ்ஸ், கஸ்ரஜ் கிளையினர் ஒருவர் மற்றவரைக் கட்டித் தழுவினார். பின்பு நபி (ஸல்) அவர்களுடன் தங்கள் இல்லங்களுக்குத் திரும்பிச் சென்றனர். அல்லாஹ்வின் எதிரி ‘ஷாஸ் இப்னு கைஸ்'' உடைய சூழ்ச்சியிலிருந்து முஸ்லிம்களை அல்லாஹ் இவ்வாறு பாதுகாத்தான். (இப்னு ஹிஷாம்)
யூதர்கள் முஸ்லிம்களுக்கு மத்தியில் செய்த குழப்பங்களுக்கும் சூழ்ச்சிகளுக்கும் இது ஓர் உதாரணமாகும். இவ்வாறு இஸ்லாமிய அழைப்புப் பணிக்கும் தடைகளை ஏற்படுத்த பல வழிகளைக் கையாண்டனர். பல பொய் பிரச்சாரங்களைச் செய்தனர். காலையில் இஸ்லாமை ஏற்று, அன்று மாலையில் நிராகரித்து விடுவார்கள். இதனால் புதிய, பலவீனமான முஸ்லிம்களுடைய உள்ளங்களில் இஸ்லாமைப் பற்றிய சந்தேகங்களை ஏற்படுத்தினர். மேலும், தங்களுடன் வியாபாரத் தொடர்பு வைத்திருக்கும் முஸ்லிம்களுக்கு நெருக்கடி தந்தனர். முஸ்லிம்கள் தங்களுக்குக் கடன் கொடுக்க வேண்டியிருந்தால் காலையிலும் மாலையிலும் சென்று அந்த கடனைக் கேட்டுத் துன்புறுத்துவர். முஸ்லிம்களுக்கு இவர்கள் ஏதும் கொடுக்க வேண்டியிருந்தால் அதைக் கொடுக்காமல் மறுப்பார்கள். தங்களிடமுள்ள முஸ்லிம்களின் சொத்துகளை அநியாயமாகத் தின்று வந்தனர். முஸ்லிம்களுக்குக் கொடுக்க வேண்டிய கடன்களைக் கொடுக்காமல் ‘‘நீ உமது மூதாதையரின் மார்க்கத்தில் இருந்த போதுதான் இந்த கடன் எங்கள் மீது இருந்தது. நீ மதம் மாறியதால் இப்போது நாங்கள் அதனைக் கொடுக்க வேண்டியதில்லை'' என்று கூறுவார்கள்.
நாம் மேற்கூறிய நிகழ்வுகள் பத்ர் போருக்கு முன் நடந்தவைகள். இந்த யூதர்கள் நபி (ஸல்) அவர்களுடன் உடன்படிக்கை செய்திருந்தும் அதை மதிக்காமல் நடந்தனர். இவர்கள் நேர்வழி பெறுவார்கள் என்பதற்காகவும், நாட்டில் அமைதி நிலவ வேண்டும் என்பதற்காகவும் இவர்களின் அக்கிரமங்களை நபி (ஸல்) அவர்களும் முஸ்லிம்களும் சகித்து வந்தார்கள்.

கைனுகாவினர் ஒப்பந்தத்தை முறிக்கின்றனர்

பத்ர் மைதானத்தில் முஸ்லிம்களுக்கு அல்லாஹ் மாபெரும் உதவி செய்தான். அதனால் முஸ்லிம்களைப் பற்றிய மதிப்பு, மரியாதை மற்றும் பயம், உள்;ர்வாசிகள் - வெளியூர்வாசிகள் என அனைவரின் உள்ளத்திலும் ஏற்பட்டன. இது யூதர்களுக்கு வெறுப்பை ஊட்டியது. அவர்களது கோபத்தைக் கிளறியது இதனால் வெளிப்படையாகவே முஸ்லிம்களை எதிர்த்தனர் அவர்களுக்குத் தீங்கு செய்தனர்.
யூதர்களில் ‘கஅப் இப்னு அஷ்ரஃப்' என்பவன் முஸ்லிம்களுக்கு பெரிய எதிரியாக விளங்கினான். அவ்வாறே யூதர்களில் இருந்த மூன்று பிரிவினர்களில் கைனுகா கிளையினரே மிகக் கெட்டவர்களாக இருந்தனர். இவர்கள் மதீனாவினுள் வசித்தனர். சாயமிடுதல், இரும்பு பட்டறை, பாத்திரங்கள் செய்வது என்று பல தொழில்கள் இவர்கள் வசம் இருந்தன. இதுபோன்ற தொழில்களில் இவர்கள் இருந்ததால் இவர்களிடம் பெருமளவில் போர் சாதனங்கள் இருந்தன. மதீனாவிலிருந்த யூதர்களில் இவர்களே வீரமுடையவர்களாக விளங்கினர். யூதர்களில் முதன் முதலாக நபி (ஸல்) அவர்களுடன் செய்த உடன்படிக்கையை முறித்தவர்கள் இவர்களே.
அல்லாஹ் முஸ்லிம்களுக்கு பத்ரில் கொடுத்த வெற்றிக்குப் பிறகு இவர்களது அத்துமீறல் கடுமையானது அராஜகம் அதிகரித்தது இவர்கள் மதீனாவில் குழப்பங்களை ஏற்படுத்தினர் முஸ்லிம்களைப் பரிகாசம் செய்தனர் தங்களது கடைவீதிகளுக்கு வரும் முஸ்லிம்களுக்கு, குறிப்பாகப் பெண்களுக்கு இடையூறு அளித்தனர்.
இவர்களை ஓர் இடத்தில் ஒன்றிணைத்து நபி (ஸல்) அறிவுரை வழங்கினார்கள். நேர்வழிக்கும் நன்னெறிக்கும் அழைத்தார்கள். அத்து மீறல், பகைமை கொள்ளல், தீங்கு விளைவித்தல் ஆகியவற்றின் பின்விளைவைப் பற்றி எச்சரித்தார்கள். ஆனால், நபி (ஸல்) எச்சரித்தும் தங்களின் வழிகேட்டிலிருந்து விலகாமல் அதிலேயே நிலைத்திருந்தனர்.
இதுபற்றி இப்னு அப்பாஸ் (ரழி) கூறுவதை கேட்போம்: நபி (ஸல்) பத்ர் போரில் குறைஷிகளைத் தோற்கடித்து மதீனா திரும்பிய பிறகு, கைனுகாவினன் கடைவீதியில் அங்குள்ள யூதர்களை ஒன்று சேர்த்தார்கள். அவர்களிடம் ‘‘யூதர்களே! குறைஷிகளுக்கு ஏற்பட்ட நிலை உங்களுக்கு ஏற்படுவதற்கு முன் நீங்கள் இஸ்லாமை ஏற்றுக்கொள்ளுங்கள்'' என்றார்கள். அதற்கு அவர்கள், ‘‘முஹம்மதே! போர் செய்யத் தெரியாத அனுபவமற்ற குறைஷிகளில் சிலரை போரில் கொன்று விட்டதால் நீர் மயங்கிவிட வேண்டாம்! நீர் எங்களிடம் போர் தொடுத்தால் நாங்கள் வலிமைமிக்க மனிதர்கள் என்பதையும், எங்களைப் போன்றவர்களை நீர் இதுவரை சந்தித்ததில்லை என்பதையும் அறிந்து கொள்வீர்!!'' என்று பதிலளித்தனர். அப்போது அல்லாஹ் பின்வரும் வசனத்தை இறக்கினான். அதை நபி (ஸல்) அவர்கள் அம்மக்களுக்கு ஓதிக் காண்பித்தார்கள்.
எவர்கள் இவ்வேதத்தை நிராகரிக்கின்றார்களோ அவர்களுக்கு (நபியே!) நீங்கள் கூறுங்கள்: ‘‘அதிசீக்கிரத்தில் நீங்கள் வெற்றி கொள்ளப்படுவீர்கள். அன்றி (மறுமையில்) நரகத்தில் சேர்க்கப்படுவீர்கள். அது மிகக்கெட்ட தங்குமிடம். (பத்ர் போர்க்களத்தில்) சந்தித்த இரு சேனைகளில் நிச்சயமாக உங்களுக்கொரு அத்தாட்சி இருந்தது. (ஒன்று) அல்லாஹ்வின் பாதையில் போர்புரியும் கூட்டம், மற்றொரு கூட்டத்தினர் நிராகரிப்பவர்கள். (நிராகரிப்பவர்கள் ஆகிய) இவர்கள் அல்லாஹ்வின் பாதையில் போர் புரிபவர்களைத் தங்களைவிட இரு மடங்காக(த் தங்கள்) கண்ணால் கண்டனர். அல்லாஹ், தான் விரும்பியவர்களைத் தன் உதவியைக் கொண்டு (இவ்வாறு) பலப்படுத்துகின்றான். (படிப்பினை பெறும்) பார்வையுடையவர்களுக்கு நிச்சயமாக இதில் ஒரு (நல்ல) படிப்பினை இருக்கின்றது.''(அல்குர்ஆன் 3:12 , 13) (ஸுனன் அபூதாவூது)
கைனுகாவினன் இந்த பதில் பகிரங்கமாகப் போருக்கு விடுத்த அழைப்பாகவே இருந்தது. இருப்பினும் நபி (ஸல்) தங்களது கோபத்தை அடக்கினார்கள். முஸ்லிம்களும் சகிப்புடன் நடந்தார்கள். இறுதி நிலை எப்படி முடிகிறது என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக இருந்தது.
கைனுகாவினன் துணிவு அதிகரித்தது. அவர்கள் பல வழிகளில் மதீனாவில் குழப்பம் விளைவித்து, தங்களுக்குத் தாங்களே அழிவைத் தேடினர்.
இதுபற்றி இப்னு ஹிஷாம் (ரஹ்) அறிவிக்கிறார்: ஒரு அரபிப் பெண் தனக்கு சொந்தமான, ஒட்டகத்தின் மேல் விக்கப்படும் தோல் ஒன்றை விற்பதற்காக கைனுகாவினன் கடைத் தெருவிற்கு வந்தார். விற்ற பிறகு அதன் கிரயத்தை எதிர்பார்த்து அங்கிருந்த பொற் கொல்லன் ஒருவன் கடைக்கருகில் அமர்ந்தான். அங்கிருந்த யூதர்கள் அப்பெண் தனது முகத்திலிருந்து பர்தாவை அகற்ற வேண்டும் என்றனர். ஆனால், அதை அவள் மறுத்துவிட்டாள். அந்த பொற் கொல்லன் அப்பெண்ணின் ஆடையை அவரது முதுகுப்புறத்தில் அவருக்குத் தெரியாமல் கட்டினான்.
சிறிது நேரத்திற்குப் பின்பு அவர் அங்கிருந்து எழுந்தபோது அவரது ஆடை அகன்று அவரது மறைவிடம் தெரியவே குழுமியிருந்த யூதர்கள் சப்தமிட்டுச் சிரித்தனர். இதனால் அவர் வெட்கித் தலைக் குனிந்து கூச்சலிட்டார். இதை அறிந்த முஸ்லிம்களில் ஒருவர் பொற் கொல்லன் மீது பாய்ந்து அவனைக் கொன்றுவிட்டார். பொற் கொல்லன் யூதனாக இருந்ததால் யூதர்கள் அனைவரும் இந்த முஸ்லிமின் மீது பாய்ந்து அவரைக் கொன்று விட்டார்கள். அப்போது அந்த முஸ்லிமின் உறவினர்கள் மற்ற முஸ்லிம்களிடம் யூதர்களுக்கு எதிராகத் தங்களுக்கு உதவி செய்யுங்கள் என்றனர். இதிலிருந்தே முஸ்லிம்களுக்கும் கைனுகாவினருக்குமிடையில் சண்டை மூண்டது. (இப்னு ஹிஷாம்)

முற்றுகையிடுதல் - சரணடைதல் - நாடுகடத்தல்

இனியும் பொறுமைகாப்பது உசிதமல்ல என்பதால் நபி (ஸல்) அவர்கள் கைனுகாவினர் மீது போர் தொடுக்க முடிவு செய்தார்கள். மதீனாவில் அபூ லுபாபா இப்னு அப்துல் முன்திர் (ரழி) அவர்களைத் தனது பிரதிநிதியாக நியமித்து விட்டு கைனுகாவனரிடம் புறப்பட்டார்கள். முஸ்லிம்களுக்குரிய கொடியை ஹம்ஜா (ரழி) அவர்களிடம் வழங்கினார்கள். கைனுகா கூட்டத்தார் நபி (ஸல்) அவர்களை பார்த்தவுடன் கோட்டைகளுக்குள் சென்று தங்களைப் பாதுகாத்துக் கொண்டனர். அவர்களை நபி (ஸல்) முற்றுகையிட்டார்கள். இந்த முற்றுகை ஹிஜ்ரி 2, ஷவ்வால் 15 சனிக்கிழமை தொடங்கி 15 இரவுகள் (துல்கஅதா முதல் பிறை வரை) தொடர்ந்தது. அல்லாஹ் அந்த யூதர்களின் உள்ளத்தில் பயத்தை ஏற்படுத்தினான். அவர்கள் அனைவரும் தங்கள் விஷயத்திலும் தங்களின் சொத்து, பெண்கள், பிள்ளைகள் விஷயத்திலும் நபி (ஸல்) அவர்களின் கட்டளைக்கு இணங்குவதாய் கூறி, கோட்டைகளை விட்டு வெளியே வந்தனர். நபி (ஸல்) அம்மக்களின் கரங்களைக் கட்ட உத்தரவிட்டார்கள்.
இந்நேரத்தில் அப்துல்லாஹ் இப்னு உபை தனது நயவஞ்சகத் தன்மைக்கேற்ப செயல்பட்டான். நபி (ஸல்) அவர்களிடம் யூதர்களை மன்னிக்க வேண்டுமென்று வற்புறுத்தினான். ‘‘முஹம்மதே! என்னுடன் நட்பு உடன்படிக்கை செய்து கொண்ட இவர்களிடம் நல்ல முறையில் நடந்து கொள்ளுங்கள்'' என்று கூறினான். (பனூ கைனுகா, கஸ்ரஜ் இனத்தவன் நண்பர்களாக இருந்தார்கள்.) இப்னு உபை தனது இக்கூற்றை பலமுறை திரும்பக் கூறியும் நபி (ஸல்) அதைப் புறக்கணித்தார்கள். அவன் நபி (ஸல்) அவர்களின் சட்டைப் பைக்குள் கையை நுழைத்துக் கொண்டு, அவர்களை வற்புறுத்தினான். நபி (ஸல்) அவர்கள் அவனிடம் ‘‘என்னை விட்டுவிடு'' என்று கூறினார்கள். நபி (ஸல்) அவர்களின் முகத்தில் ஏற்பட்ட கோபத்தின் மாறுதலை நபித் தோழர்கள் உணர்ந்தார்கள். மீண்டும் ‘‘உனக்கென்ன நேர்ந்தது! என்னை விட்டுவிடு'' என்று நபி (ஸல்) கூறினார்கள். ஆனால், அந்நயவஞ்சகன் தனது பிடிவாதத்தைத் தொடர்ந்தவனாக ‘‘இவர்களில் கவச ஆடை அணியாத நானூறு நபர்கள், கவச ஆடை அணிந்த முந்நூறு நபர்கள் இவர்களெல்லாம் என்னைப் பாதுகாத்தவர்கள். இந்த அனைவரையும் ஒரே பொழுதில் நீர் வெட்டி சாய்த்து விடுவீரோ! எனது நண்பர்கள் விஷயத்தில் நீர் அழகிய முறையில் நடந்து கொள்ளாதவரை நான் உம்மை விடமாட்டேன். பின்னால் பிரச்சனைகள் ஏற்படுவது பற்றி இப்போதே நான் அஞ்சுகிறேன்'' என்று கூறினான்.
இப்னு உபை தன்னை முஸ்லிம் என்று கூறி ஒரு மாதம்தான் ஆகியிருந்தும் அவனிடம் நபி (ஸல்) மிக அழகிய முறையில் நடந்து, அவன் கேட்டக் கோரிக்கைக்கிணங்க யூதர்கள் அனைவரையும் விடுதலை செய்து மதீனாவிலிருந்து வெளியேறும்படி உத்தரவிட்டார்கள். அனைத்து யூதர்களும் ஷாமுக்குச் சென்றனர். அங்கு சென்ற சிறிது காலத்திலேயே அவர்களில் அதிகமானவர்கள் இறந்துவிட்டனர். அவர்கள் விட்டுச் சென்ற பொருட்களை ஒன்று சேர்க்கும் பொறுப்பை முஹம்மது இப்னு மஸ்லாமாவிடம் வழங்கினார்கள். அவர்களுடைய பொருட்களில் இருந்து மூன்று வில்களையும், இரண்டு கவச ஆடைகளையும், மூன்று வாட்களையும், மூன்று ஈட்டிகளையும் தனக்கென எடுத்த பிறகு, ஐந்தில் ஒன்றை அல்லாஹ்விற்காக ஒதுக்கினார்கள். மற்ற அனைத்தையும் முஸ்லிம்களுக்குப் பங்கிட்டார்கள். (ஜாதுல் மஆது, இப்னு ஹிஷாம்)


Previous Post Next Post