- தபஸ்ஸும் முஸ்லெஹ்
بسم الله الرحمن الرحيم
அளவாக உண்ணுவது உடலுக்கு நலம் தருவது மட்டுமல்லாமல், இஸ்லாத்தில் அதற்கு அதிக அளவு முக்கியத்துவம் கொடுக்கபட்டுள்ளதால், அது ஒரு விசுவாசியின் அடையாளமாகவும் இருக்கிறது. அல்லாஹ் ﷻ குர்’ஆனில் கூறுகிறான்:
ஆதமுடைய மக்களே! ஒவ்வொரு மஸ்ஜிதிலும் தொழுங்காலம் உங்களை ஆடைகளால் அழகாக்கிக் கொள்ளுங்கள்; உண்ணுங்கள், பருகுங்கள்; எனினும் வீண் விரயம் செய்யாதீர்கள். ஏனெனில் அல்லாஹ் அளவு கடந்து (வீண்) விரயம் செய்பவர்களை நேசிப்பதில்லை. [அல் குர்’ஆன் 7:31]
ஆனால், அளவுக்கு அதிகமாக உண்ணுவதன் தீங்கை அறிந்திருந்தாலும், இப்போதெல்லாம், உணவு பற்றாக்குறையால் இறப்பவர்களை விட தேவைக்கு அதிகமாக உண்ணுவதால் இறப்பவர்கள் தான் அதிகம். நம்மைச் சுற்றிலும் பார்க்கும்போது, மிதமிஞ்சிய உணவுப்பொருட்களைக் காண்கிறோம் – அதிகமாக வாங்கப்பட்டு, வீணாகுதல். நம்முடைய உணவைக் கட்டுப்படுத்த எப்படி நாம் ஊக்கம் பெறலாம்? அதிகம் உண்ணுபவர்கள் கட்டாயமாக படிக்க வேண்டிய சில ஹதீஸ்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
அளவுக்கு அதிகமாக உண்ணுவது உங்கள் உடலுக்கு செய்யும் அநீதி.
அதிகப்படியான வணக்க வழிபாடுகளால் களைத்திருக்கும் அபு தர்தா (ரலி) அவர்களிடம் ஸல்மான் (ரலி) கூறினார்கள்: “உம்முடைய அதிபதிக்கு உம் மேல் உரிமை இருக்கிறது; உம்முடைய ஆன்மாவிற்கு உம்மேல் உரிமை இருக்கிறது; உம்முடைய குடும்பத்திற்கு உம்மேல் உரிமை இருக்கிறது; அதனால், உம் மேல் உரிமை உள்ள அனைவருக்கும் நீர் உரிமை தர வேண்டும்.” அதன் பின், அபு தர்தா (ரலி) அவர்கள் நபி (ﷺ) அவர்களை சந்தித்த போது இந்த செய்தியைக் கூறினார்கள். நபி (ﷺ) அவர்கள், “ஸல்மான் உண்மையே கூறினார்.” என்று கூறினார்கள். (புகாரி 6139)
நபி (ﷺ) அவர்கள் பல நாட்கள் பட்டினியில் கழித்தார்கள்.
உமர் பின் அல் கத்தாப் (ரலி) அவர்கள் மக்கள் அடைந்திருந்த உலகச் செல்வங்களைப் பற்றி நீளமாக பேசினார்கள். அதன் பின், “நபி (ﷺ) அவர்கள் பல நாட்கள் பசியுடன் கழிப்பதை நான் பார்த்திருக்கிறேன், அவர்களுடைய வயிற்றை நிரப்புவதற்கு தாழ்ந்த ரக பேரீச்சைப்பழங்களைக் கூட பெற முடியாமல் இருக்கும்.” என்று கூறினார்கள் (முஸ்லிம், ரியாதுஸ்ஸாலிஹீன்)
நபி (ﷺ) அவர்கள் ஏன் பசியுடன் இருந்தார்கள்?
அவர்களுக்கு வேறு வழி இல்லாமல் இல்லை. அவர்கள் விரும்பியிருந்தால், மற்ற எந்த ஆட்சியாளரையும் போல் அவர்கள் தன் ஆட்சியில் மிகப்பெரிய செல்வந்தராக ஆகியிருக்கலாம். ஆனால், அவருக்கு அதில் விருப்பம் இல்லை. அவர் ஏழை மக்களுடன் வாழ்ந்து ஏழை மக்களுடன் மரணமடையவே விரும்பினார்கள். அவர்களுடன் ஒப்பிடும்போது நாம் எங்கே இருக்கிறோம்? நம்முடைய வயிறுகளை அதிகப்படியாக நிரப்பும்போது, பசித்திருக்கும் வெற்று வயிறுகளைப்பற்றி நாம் கவலைப்படுகிறோமா?
சாதாரணமாக ஒருவர் உண்ணும் உணவு இருவருக்குப் போதுமானதாக இருக்கும்.
ஒருவருக்கான உணவுக்கு இருவருக்கு போதுமானதாக இருக்கும், இருவருக்கான உணவு நான்கு பேருக்கு போதுமானதாக இருக்கும், நான்கு பேருக்கான உணவு எட்டு பேருக்கு போதுமானதாக இருக்கும். (திர்மிதி 1820)
சில சமயங்களில் நபி (ﷺ) அவர்களுடைய குடும்பத்தினர் பேரீச்சம்பழங்களையும், தண்ணீரையும் மட்டுமே உண்டு வாழ்ந்தார்கள்.
ஆயிஷா(ரலி) அறிவித்தார்கள்: இரண்டு கறுப்பு நிறப் பொருள்களான பேரீச்சம்பழம் மற்றும் தண்ணீரை அருந்தி நாங்கள் வயிறு நிரம்பி இருந்தபோது நபி(ஸல்) அவர்கள் இறந்தார்கள். (புகாரி 5383)
அவர்கள் மேலும் கூறினார்கள், “மதீனா நகரம் அடைந்த பிறகு, நபி (ﷺ) அவர்களுடைய இறப்பு வரை அவர்களுடைய குடும்பத்தினர், தொடர்ந்து மூன்று இரவுகள் கூட கோதுமை ரொட்டியை வயிராற உண்டதில்லை.” (முஸ்லிம் 2970)
அதிகப்படியாக உண்ணுவது நிராகரிப்பாளர்களின் தன்மையாகும்.
ஒரு முஸ்லிம் ஒரு குடலுக்கு உண்ணுவார் (அதாவது அவரி சிறிது உணவிலேயே திருப்தியடைவார்) ஆனால், ஒரு காஃபிர் (நிராகரிப்பாளர்) ஏழு குடல்களுக்கு உண்ணுவார் (தேவைக்கு அதிகமாக உண்ணுவார்). (புகாரி, முஸ்லிம்)
நீங்கள் உண்ண வேண்டிய அதிகபட்ச அளவு உங்களுடைய வயிற்றின் மூன்றின் ஒரு பாகம் மட்டுமே.
மனிதன் நிரப்புவதிலேயேஅவனுடைய வயிற்றை விட மிகவும் மோசமான பாத்திரம் எதுவும் இல்லை. ஆதமுடைய மகன் அவனுடைய முதுகை நிமிர்த்துவதற்கு தேவையான உணவை உண்டால் போதும். அது முடியவில்லை என்றால், மூன்றில் ஒரு பாகம் உணவும், மூன்றில் ஒரு பாகம் நீருக்கும், மூன்றில் ஒரு பாகம் அவன் மூச்சு விடுவதற்கும் இருக்கட்டும்.’ (திர்மிதி 2380)